வானம் நிறைக்கும் வெட்டுக்கிளிகள், கிழக்கு ஆப்பிரிக்காவில் பயிர்களைத் தாக்கித் தின்று அழிக்கும் வீடியோவைப் பார்த்தேன். கிழக்கு ஆப்பிரிக்கா இதனால் கடும் பஞ்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதே போல் ஒரு நிலைமை சிட்டுக்குருவிகளால் மாவோவின் சீனத்தில் ஏற்பட்டதாக முன்பு படித்திருக்கிறேன். மாவோவின் சீனம் உடனடியாக சிட்டுக்குருவிகளை ஏகத்துக்கும் அழித்துவிட்டது. சிட்டுக்குருவிகள் பயிர்களை மட்டும் அழிக்கவில்லை அவை வெட்டுக்கிளிகளையும் சாப்பிட்டு வந்தன என்பது வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு ஆபத்து வந்தபோது தெரியவர சீனா பழைய சோவியத் யூனியனில் இருந்து இரண்டரை லட்சம் சிட்டுக்குருவிகளை இறக்குமதி செய்து சூழலியல் ஒருமையை மறு நிர்மாணம் செய்தது. நிற்க.
--
சூழலியல் ஒருமை மனிதர்களுக்கும் பொருந்தும். இப்போது லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் நகரங்கள் நீங்கி தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விடும்போது மனித சூழலியல் ஒருமை உடனடியாகக் குலைவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. கட்டிடத் தொழில், சுத்தம் சுகாதாரம், வீட்டு வேலை, சாலைப் பணிகள், இன்னும் கணக்கிலடங்கா பணிகள் வேலைக்கு ஆட்கள் இல்லாததால் நின்று போவதற்கும் நிர்மூலம் ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இனி ஊருக்கு சென்றவர்கள் திரும்ப நகரங்களுக்கு வருவார்களா என்பதும் கேள்விக்குரியதே. இது கிராமப்பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான அரிய சந்தர்ப்பமாகக்கூட அமையக்கூடும். அதே சமயத்தில் நகரங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்து வேறு வகை பொருளாதார ஒழுங்கு உருவாவதற்கான வாய்ப்பும் உண்டாகலாம். அந்த புதிய ஒழுங்கில் கிராமம்/நகரம் வேறுபாடற்ற டிஜிட்டல் பரவல், உயர்கல்வி வாய்ப்புகள், தொழில் நுட்பப்பரவல், universal minimum wage, அனைவருக்குமான மருத்துவம் மற்றும் சுகாதார வசதி ஆகியவற்றுக்கான முன்னுரிமை முக்கியமானதாக மாறலாம்
--
கோவிட் பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர்கள் சாரை சாரையாக தமிழ்நாடு நீங்கிச் சென்றபோது எழுதியது
No comments:
Post a Comment