Tuesday, July 9, 2013

ஹெமிங்வேயின் சிறுகதை "Hills like white elephants" | மொழிபெயர்ப்பு


எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ் பெற்ற சிறுகதை ‘வெள்ளையானைகளைப் போன்ற மலைகள்”. மூன்றே பக்கங்களிலான இந்த சி றுகதையைப் பற்றி விமர்சகர்கள் ஆயிரக்கணக்காண பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள். சொற்சிக்கனத்துக்குப் பேர் போன ஹெமிங்வே இந்தக் கதையில் எதையும் வெளிப்ப்டையாகச் சொல்வதில்லை. மைய கதாபாத்திரங்களான ஆணும் பெண்ணும் அமெரிக்கன் என்றும், இளம்பெண் என்றும் மட்டுமே குறிக்கப்படுகின்றனர். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அந்த ஆண் அந்தப் பெண்ணை கருக்கலைப்பு செய்யச்சொல்கிறான் என்பது சூசகமாகக் கதையில் சுட்டப்படுகிறது. வரிக்கு வரி அலங்காரமில்லை, உவமைகளில்லை. ஆனால் வெள்ளையானைகள் போன்ற மலைகள் பல அர்த்தங்களைச் சொல்லும் குறியீடுகளாகிவிடுகின்றன. 


--------------------------------------------------

வெள்ளையானைகளைப் போன்ற மலைகள்

எப்ரோ சமவெளியில் மலைகள் நீளமாகவும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப் பக்கத்தில் நிழலோ மரங்களோ ஏதுமில்லை; ரயில்நிலையம் சூரிய வெளிச்சத்திலிருந்த இரண்டு ரயில்களுக்கு நடுவே இருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகே பக்கத்தில் கட்டிடத்தின் இளம் சூட்டுடன் கூடிய நிழலில் கதவைத் திறந்தால் ஒரு மதுபானக் கடையும் அதன் கதவில் பூச்சிகளை உள்ளே விடாதிருக்க மூங்கில் மணிகளால் ஆன திரையும் இருந்தன. அந்த அமெரிக்கனும் இளம் பெண்ணும் கட்டிடத்திற்கு வெளியில் படிந்த நிழலில் இருந்த மேஜையில் அமர்ந்திருந்தனர். மிகவும் வெப்பமாக இருந்த அந்த இடத்திற்கு பார்சலோனா விரைவு வண்டி  நாற்பது நிமிடங்களுக்கு ஒரு முறை வரும்; அந்த சந்திப்பில்  இரண்டு நிமிடங்கள் நின்றுவிட்டு மாட்ரிட் நகருக்கு செல்லும்.

“நாம் என்ன குடிக்கலாம்?” அந்த இளம் பெண் கேட்டாள். அவள் தன் தொப்பியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்திருந்தாள்.

“மிகவும் வெப்பமாக இருக்கிறது” என்று அந்த மனிதன் சொன்னான்.

“பியர் குடிக்கலாம்”

“டோஸ் செர்வெசாஸ்” என்று அந்த மனிதன் திரையை நோக்கி சொன்னான்.

“பெரிய கோப்பைகளா” ஒரு பெண்மணி வாயிலில் இருந்து கேட்டாள்.

“ஆமா, இரண்டு பெரிய கோப்பைகள்”

அந்தப் பெண்மணி இரண்டு கண்ணாடிக்கோப்பை பியர்களும் அவற்றிற்கு அடியில் வைக்கக்கூடிய உறிஞ்சு பட்டைகளையும் கொண்டுவந்து வைத்துவிட்டு அந்த மனிதனையும் இளம் பெண்ணையும் பார்த்தாள். அந்த இளம்பெண் மலைகளின் வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சூரிய வெளிச்சத்தில் அவை வெள்ளையாக இருந்தன. அந்த நாட்டுப்புறம் பழுப்பாகவும் வறண்டும் இருந்தது.

“அவை வெள்ளை யானைகளைப் போல இருக்கின்றன” என்றாள் அவள்.

“நான் அப்படியொன்றைப் பார்த்ததேயில்லை” அந்த மனிதன் பியரைக் குடித்தான்.

“இல்லை, நீ பார்த்திருக்க மாட்டாய்”

“நான் பார்த்திருக்கக்கூடும்” என்றான் அவன். “ நான் பார்த்திருக்க மாட்டேன் என்று நீ சொல்வதால் மட்டும் எதுவும் நிரூபணம் ஆவதில்லை”

இளம்பெண் மணிகளால் ஆன திரையைப் பார்த்தாள். “ அவர்கள் எதையோ அதில் வண்ணம் தீட்டி எழுதியிருக்கிறார்கள். என்ன சொல்கிறது அது?”

“அனிஸ் டெல் டொரொ. அது ஒரு மதுபானம்”

“அதைக் குடிக்கலாமா?” 

அந்த மனிதன் “இங்கே கவனியுங்கள்” என்று திரையின் வழி கத்தினான். அந்தப் பெண்மணி பாரிலிருந்து வெளியே வந்தாள்.

“ நான்கு கோப்பைகள். எங்களுக்கு அனிஸ் டெல் டொரோ வேண்டும்”

“தண்ணீருடனா?’

“உனக்கு தண்ணீருடன் வேண்டுமா?”

“எனக்குத் தெரியலியே” என்றாள் இளம்பெண் “ தண்ணீருடன் நன்றாக இருக்குமா?”

“அது சரி”

“தண்ணீருடன் உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்டாள் பெண்மணி.

“ ஆமா தன்ணீருடன் தாங்க”

“இது அதிமதுரம் போல ருசிக்கிறது” என்ற இளம் பெண் தன் கண்ணாடிக் கோப்பையை கீழே வைத்தாள்.

“எல்லாவற்றின் வழியும் அப்படித்தான்”

“ஆமாம். எல்லாமே அதிமதுரம் போலத்தான் ருசிக்கிறது. அதிலும் எதற்கெல்லாம் நீ ரொம்ப நாள் காத்திருந்தாயோ அதுவெல்லாமே அப்படித்தான் ருசிக்கிறது”

“ஓ நிறுத்து அதை”

“நீதான் ஆரம்பித்தாய்” என்றாள் இளம்பெண். “நான் சந்தோஷமா, சந்தோஷப்படுத்தப்பட்டுதான் இருக்கேன். என் நேரமும் நன்றாகத்தான் கழிந்தது”

“ நாம மகிழ்ச்சியா நேரத்த கழிக்கலாமே”

“ சரி. நான் முயற்சி செய்யத்தான் செய்தேன். அந்த மலைகள் வெள்ளையானைகளைப் போல இருக்குன்னு சொன்னேன். அது கெட்டிகாரத்தனமா இல்லையா?”

“ அது கெட்டிகாரத்தனம்தான்”

“இந்து புது வகை மதுவை குடித்துப் பார்க்க விரும்பினேன். அவ்வளவுதானே நாம செய்வது- பொருட்களைப் பார்ப்பதும் புதிய பானங்களை குடித்துப் பார்ப்பதும்?”

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்”

அந்த இளம்பெண் தூரத்திலிருந்த மலைகளைப் பார்த்தாள்.

“ அவை ரொம்ப அழகான மலைகள்” என்றாள் இளம்பெண் “ அவை வெள்ளை யானைகளைப் போல இல்லை. நான் மரங்களின் வழி தெரியும் அவற்றின் மேற்புறத்தினை மட்டுமே நான் சொன்னேன்”

“இன்னும் கொஞ்சம் நாம் குடிக்க வேண்டுமா?”

“சரி”

இளம் சூடான காற்று மணிகளாலான திரையை மேஜையை நோக்கித் தள்ளியது.

“பியர் குளிர்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கிறது” என்றான் அந்த மனிதன்

“நன்றாக இருக்கிறது” என்றாள் இளம்பெண்

“ அது உண்மையில் ரொம்ப எளிமையான அறுவை சிகிக்சை, ஜிக்.” என்றான் அவன். “உண்மையில் அது அறுவை சிகிக்சை கூட இல்லை”

மேஜையின் கால்கள் அழுத்தியிருந்த தரையை அந்த இளம் பெண் பார்த்தாள்.

“நீ ஒன்றும் சொல்ல மாட்டாய் என்று எனக்குத் தெரியும் ஜிக். உண்மையில் அது எதுவுமேயில்லை. காற்றை லேசாய் உள்ளே விடுவதுதான்”

இளம்பெண் எதுவும் சொல்லவில்லை.

“நான் உன் கூட வருவேன். உன் கூடவே எல்லா நேரமும் இருப்பேன். அவர்கள் கொஞ்சம் காற்றை உள்ளே விடுவார்கள் அவ்வளவுதான். அதன் பிறகு எல்லாமே சுத்தமாய் இயற்கையாக மாறிவிடும்”

“ அதற்கப்புறம் நாம என்ன செய்வோம்?”

“அதற்கப்புறம் நாம ரொம்ப நல்லா இருப்போம். முன்பு நாம எப்படி இருந்தோமோ அது போலவே இருப்போம்”

“எதுனால அப்படி சொல்ற?”

“அது ஒன்னுதான் நம்மை படுத்துகிறது. அது மட்டும்தான் நம் சந்தோஷத்தைக் கெடுத்தது”

இளம்பெண் மணியாலான திரையைப் பார்த்தாள் கையை நீட்டி திரையிலிருந்த இரண்டு மணிகளை எடுத்தாள்.

“அதுக்குப் பிறகு எல்லாம் சரியாகிடும் நாம இரண்டு பேரும் சந்தஷோமா இருப்போம் அப்டிங்கிறியா?”

‘நாம சந்தோஷமா இருப்போம்னு எனக்குத் தெரியும். நீ பயப்படாதே. அதை செய்து முடித்த நிறைய பேரை எனக்குத் தெரியும்”

“எனக்கும்தான் நிறையபேரைத் தெரியும்.” என்றாள் இளம்பெண் “அதற்கப்புறம் அவர்கள் அவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க”

“சரி. உனக்கு பிடிக்கலைன்னா நீ செய்ய வேண்டாம். உனக்கு இஷ்டமில்லாம நான் அத உன்னை செய்ய வைக்கமாட்டேன். ஆனா அது ரொம்ப எளிமையானதுன்னு எனக்கு நல்லா தெரியும்”

“நீ உண்மையிலேயே நா அதச் செய்யனும்னு விரும்புறியா?”

“செய்யக்கூடிய சிறந்த காரியம் அதுதான்னு நான் நினைக்கேன். ஆனா உனக்கு அதுல இஷ்டம் இல்லைனா நீ செய்ய வேண்டாம்” 

“நா அதச் செஞ்சேன்னா நீ சந்தோஷமா இருப்பியா, எல்லாமே முன்னே மாதிரி ஆயிருமா நீ என்னை காதலிப்பியா?”

“இப்பவுமே நான் உன்னை காதலிக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியும்”

“ எனக்குத் தெரியும். ஆனா நான் அதச் செஞ்சுட்டேன்னா, எல்லாமே பழையபடி நல்லா ஆயிருமா நா அந்தப் பொருளெல்லாம் வெள்ளை யானைங்க போல இருக்குன்னு சொன்னா உனக்குப் பிடிக்குமா?”

“எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்பவுமே எனக்கு அது ரொம்ப பிடிக்குது. ஆனா என்னால் அதப் பத்தி நினைக்க முடியல. எனக்கு கவலை வந்துட்டுன்னா நான் எப்டி ஆயிர்றேன்னு உனக்குத் தெரியும்தானே”

“ நா செஞ்சுட்டேன்னா நீ அப்புறம் கவலையே படமாட்டியா?”

“நா அதப் பத்தி கவலப் படமாட்டேன். ஏன்னா அது ரொம்ப எளிமையானது”

“அப்டின்னா நா அத செஞ்சுக்கிறேன். ஏன்னா நான் என்னைப் பத்தி கவலைப்படல”

“என்ன சொல்ற நீ?”

“ நான் என்னப் பத்தி கவலப்படல”

“நான் உன்னைப் பத்தி கவலைப் படறேன். அக்கறையோட இருக்கேன்”

“ஓ ஆமா. ஆனா நான் என்னப் பத்திக் கவலப்படல. நா அதச் செஞ்சுடறேன். எல்லாமே அப்புறம் நல்லா ஆயிடும்”

“ நீ அப்டி நினைச்சேன்னா நீ அதச் செய்ய வேண்டாம்” 

இளம்பெண் எழுந்து ரயில் நிலையத்தின் கடைசி முனை வரை நடந்து சென்றாள். மறுபக்கத்தில் தானிய வயல்களும் எப்ரோ நதிக்கரையில் மரங்களும் இருந்தன. தூரத்தில் நதிக்கரையைத் தாண்டி மலைகள் இருந்தன. மேகத்தின் நிழல் ஒன்று தானிய வயலின் வெளியில் நகர்ந்து சென்றது. அவள் நதியினை மரங்களூடே பார்த்தாள்.

“இது எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம். எல்லாத்தையும் நாம வச்சுக்கலாம். ஒவ்வொரு நாளையும் நாம இன்னும் இன்னும் முடியாததா நாம பண்ணிரலாம்"

“என்ன சொன்ன?”

“எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம்னு நான் சொன்னேன்”

“எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம்”

“இல்ல முடியாது”

“மொத்த உலகத்தையும் நாம வச்சுக்கலாம்”

“இல்ல நம்மளால முடியாது" 

“நாம எங்க வேணாலும் போலாம்”

“இல்ல முடியாது. அதுக்கப்புறம் அது நம்மளோடது இல்ல”

“நம்மளோடதுதான்”

“இல்ல. அது நம்மளோடது இல்ல. ஒரு தடவ நம்மகிட்டேர்ந்து அவங்க எடுத்துட்டாங்கன்னா அத திரும்பப் பெறவே முடியாது”

“ ஆனா அவங்க அத இன்னும் எடுக்கவேயில்லையே”

“பாக்கலாம். பொறுத்திருந்து பாக்கலாம்”

“நா எந்த மாதிரியும் நினைக்கல. எனக்கு நல்லா தெரியும்”

“உனக்கு இஷ்டமில்லாத எதையும் நா செய்யச் சொல்ல மாட்டேன்”

“அது என்னோட நல்லதுக்கும் இல்லதான். நாம இன்னொரு பியர் குடிக்கலாமா?” 

“சரி. ஆனா நீ எதப் புரிஞ்சிக்கிடனும்னா..”

“எனக்குப் புரியுது. நாம ஒரு வேள கொஞ்ச நேரம் பேசாம இருப்போமா?” 

அவர்கள் மேஜையில் வந்து அமர்ந்தார்கள். அந்த இளம்பெண் மலைகளையும் வறண்ட சமவெளியையும்  பார்த்துக்கொண்டிருக்க அவன் அவளையும் மேஜையையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ நீ எதப் புரிஞ்சிக்கிடனும்னா” அவன் சொன்னான் “ உனக்கு இஷ்டமில்லைன்னா நீ அத செய்யவேண்டாம்னுதான் நா சொல்லுவேன். உனக்கு அது ஏதேனும் அர்த்தமுள்ளதுன்னா நா அதன் போக்கிலேயே போகத் தயாரா இருக்கேன்”

“அது உனக்கு அர்த்தமுள்ளதா? நாம ஒத்துப் போகலாம்” 

“ ஓ நிச்சயமா. ஆனா எனக்கு உன்னத் தவிர வேறு யாரும் வேண்டாம். வேறு யாருமே எனக்கு வேண்டாம். எனக்கு அது ரொம்ப எளிமையானதுன்னு தெரியும்”

“ஆமா உனக்கு அது ரொம்ப எளிமையானதுன்னு தெரியும்.” 

“நீ அதச் சொல்றது சரிதான். ஆனா எனக்கு நிச்சயமா தெரியும்”

“எனக்காக நீ ஒரு காரியம் செய்வியா?

“உனக்காக நா என்ன வேணும்னாலும் செய்வேன்” 

“நீ தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, பேச்சை நிறுத்திறியா?” 

அவன் எதுவும் சொல்லாமல் ரயில் நிலையத்தின் சுவரின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த அவர்களுடைய பைகளைப் பார்த்தான்.  அவர்கள் இரவுகளைக் கழித்த விடுதிகளின் வில்லைகள் அவற்றில் ஓட்டப்பட்டிருந்தன. 

“ஆனா உனக்கு அதச் செய்ய இஷ்டமில்ல. நா எதப்பத்தியும் கவலப்படல”

“நா கத்தப் போறேன்”  

அந்தப் பெண்மணி திரையை விலக்கிவிட்டு வந்து இரண்டு கன்ணாடிக்கோப்பைகளில் பியரையும் அவற்றுக்கான உறிஞ்சு பட்டைகளையும் வைத்துவிட்டுப் போனாள். “இன்னும் ஐந்து நிமிடத்தில் ரயில் வந்துவிடும்” என்றாள் அவள். 

“அவள் என்ன சொன்னாள்” என்று கேட்டாள் இளம்பெண்

“இன்னும் ஐந்து நிமிடத்தில் ரயில் வந்துவிடும்னு சொன்னாள்”

அந்த இளம்பெண் அந்தப் பெண்மணியைப் பார்த்து நன்றி தெரிவிக்கும் முகமாக புன்னகை புரிந்தாள்.
“ நான் நம்ம பைகளையெல்லாம் இப்பவே எதிர்த்த பகுதில வச்சுட்டு வந்துர்றேன்” என்றான் அவன். அவள் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள். 

“சரி. வச்சுட்டு வா. நாம பியர குடிச்சு முடிச்சிரலாம்”

அவன் அந்த இரண்டு கனத்த பைகளையும் தூக்கிக்கொண்டு நிலையத்தின் அடுத்த பக்கத்தில் இருந்த பகுதிக்குச் சென்றான். தண்டவாளத்தில் அவன் பார்த்தபோது அங்கே ரயில் வந்திருக்கவில்லை. திரும்பி வந்தவன் பார் அறைக்குச் சென்றான். அங்கே ரயில்லுக்காகக் காத்துக்கொண்டிருந்த பலரும் குடித்துக்கொண்டிருந்தனர். பாரில் அவர் ஒரு அனிஸ் குடித்தான்; சுற்றியிருந்தவர்களையெல்லாம் பார்த்தான்.  அவர்களெல்லோரும் ரயிலுக்காகக் காத்திருந்தனர். அவன் மணியாலான திரையைக் கடந்து வந்தான். அவள் மேஜையில் உட்கார்ந்திருந்தாள். அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள். 

“நீ இப்போது நன்றாக உணர்கிறாயா?”

“நான் நன்றாக இருக்கிறேன்” என்றாள் அவள் “ என்னிடத்தில் எந்தக் கோளாறும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்”

No comments: