Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, August 23, 2013

சிறுகதைகளை வாசிக்கக் கேட்பது

சிறுகதைகளை வாசிக்கக் கேட்பது என்பது அலாதியான அனுபவம். நியுயார்க்கர் பத்திரிக்கை மாதந்தோறும் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகளை எழுத்தாளர்களைக்கொண்டு வாசிக்க வைத்து podcast ஆக வெளியிடுகிறது. கதைகளைப் பற்றிய சிறிய உரையாடல்கள்,  அறிமுகங்களுக்குப் பிறகு கதைகளை எழுத்தாளர்கள் வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் எழுதப்படும் விதவிதமான சிறுகதைகளைப் பற்றி அறிந்துகொள்ள நியுயார்க்கர் பத்திரிக்கையின் மாதாந்திர சிறுகதை podcast நல்ல வழியாக இருப்பது மட்டுமல்ல சிறுகதைக்கு எத்தனை சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்பதும் உடனடியாகத் தெரிய வருகிறது. காலை நடைப்பயிற்சியின் போது, அலுவலகத்திற்கு பயணம் மேற்கொள்ளும்போது, அறையை ஒழுங்கு பண்ணும்போது, புத்த்கங்களை அடுக்கி வைக்கும்போது, சமைக்கும்போது என பல சந்தர்ப்பங்களில் சிறுகதைகளைக் கேட்கிறேன். இந்தக் கதைகள்தான் என் தினசரி அனுபவத்தையும் பகற்கனவுகளையும் எவ்வளவு வளம் மிக்கதாக மாற்றுகின்றன! கண்களால் சிறுகதைகளை வாசித்துக்கொண்டே அதே வரிகள் வாசிக்கப்படுவதைக் கேட்பது வாசிப்பினை மிகவும் ஆழமானதாகவும், கவனம் மிக்கதாகவும், நுட்பமானதாகவும் மாற்றுவதை நான் உடனடியாக உணர்ந்தேன். அதை விட வேறென்ன வேண்டும் எனக்கு?

நியுயார்க்கர் சிறுகதை podcastஐ நீங்கள் http://www.newyorker.com/online/blogs/books/podcast/ என்ற சுட்டியில் கேட்கலாம்.

இந்தக் கதைகளில்

6/4/2013 அன்று ராபர்ட் கூவர் வாசித்த இடாலோ கால்வினோவின் 'The daughters of the moon'

4/2/2013 அன்று மார்கரெட் அட்வுட் வாசித்த மேவிஸ் காலண்ட்டின் ''Voices Lost in snow'

12/4/2012 அனறு ஹிஷாம் மாடர் வாசித்த போர்ஹெசின் 'Shakespeare's memory'

8/19/2011 அன்று சால்மான் ருஷ்டி வாசித்த டொனால்ட் பார்த்தல்மேயின் கதை 'Concerning the bodyguard'

9/21/2011 அன்று பென் மார்கஸ் வாசித்த இஷிகுரோவின் கதை 'A village after dark'

10/15/2010 அன்று டேவிட் மீன்ஸ் வாசித்த ரேமண்ட் கார்வரின் 'Chef's house'

8/12/2010 அன்று கிறிஸ் அட்ரியன் வாசித்த டொனால்ட் பார்த்தல்மேயின் 'Indian uprising'

10/13/2009 அனறு பாமுக் வாசித்த விளாடிமிர் நபகோவின்  சுய சரிதை 'Speak memory' புத்தகத்திலிருந்து 'My Russian education' அத்தியாயம்

4/10/2009 அன்று நாதன் இங்கிலாண்ட் வாசித்த பால்விஷஸ் சிங்கரின் கதை ' Disguised'

ஆகியன எனக்கு மிகவும் பிடித்தவை. நான் இந்தக் கதைகளை- நபகோவின் சுய சரிதை அத்தியாயம் உட்பட- மீண்டும் மீண்டும் கேட்டேன். சிறுகதை என்ற வடிவம்தான் எத்தனை சாத்தியப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது! நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன். தேதிகளையும் இதர விபரங்களையும் நீங்கள் எளிதாகத் தேடிப்பார்ப்பதற்காகத் தந்திருக்கிறேன்.


Wednesday, July 31, 2013

பழைய சிறுகதைகள் ஏழு- தரவிறக்க

1988 ஆம் ஆண்டு என்னுடைய சிறுகதைகள் ஏழு 'பிரம்மனைத் தேடி' என்ற சிறு தொகுப்பாக பாளையங்கோட்டையிலிருக்கும் 'இலக்கியத் தேடல்' என்ற பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. இந்தக் கதைகளில் ஆறு 'ராகம்' இலக்கிய இதழில் 1984 -1985 பிரசுரமானவை. ஒரு கதை 'இனி' இதழில் 1987இல் பிரசுரமானது. ஸில்வியா என்ற புனைபெயரில் நான் அப்போது எழுதிய கதைகளோடு எந்த உறவும் இப்போது  எனக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பதின் பருவத்தின் பழைய காதலியை திடீரென்று சந்திக்க நேரிட்டது போல இருக்கிறது இந்தக் கதைகளை புரட்டிப் பார்க்கும்போது. 'குங்குமம்' இதழின் பொறுப்பாசிரியர், நண்பர் என்.கதிர்வேலன் இந்த சிறு தொகுப்பினைத் தேடிக் கண்டுபிடித்து என்னிடம் கொடுத்தார். அதை அப்படியே ஸ்கேன் செய்து பதிவேற்றியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நண்பர் கதிருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'புதிய பார்வை' இதழில் வெளியான இன்னும் சில கதைகளையும் கதிர் தேடிக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நான் நன்றி தெரிவிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் மேலும் ஏற்படட்டும்.  நான் எழுதி சேமிக்காமல் விட்டு விட்ட எல்லா கதைகளும் என்னிடம் சிறுகச் சிறுக திரும்ப வந்து சேர்ந்துவிடட்டும்.  நான் எந்தப் பாதைகளிலெல்லாம் பயணம் செய்திருக்கிறேன் என்று நானும் தெரிந்து கொள்கிறேன்.

சிறுகதைத் தொகுப்பினை தரவிறக்குவதற்கான சுட்டி:

https://docs.google.com/file/d/0BzHCwqQ3UxT7RlZMR1gtSTE4UDQ/edit?usp=sharing


இப்படிப்பட்ட அறிமுகக்குறிப்புகள் இல்லாமல் இந்த தளத்தில் நான் பிரசுரம் செய்யும் கதைகள் புதியவை என்று அறிக.




Tuesday, July 16, 2013

நாங்கள் கோபியை மிரட்டினோம் | சிறுகதை


நாங்கள் கோபியை மிரட்டினோம் | சிறுகதை

நாங்கள் கோபியை அடித்துப் பிடித்து இழுத்து வந்தபோது அவன் எங்கள் கண்ணுக்குப் புலப்படாத முள்ளம்பன்றிகளை கவனித்துக்கொண்டிருந்தான்.  பிரபாதான் அவன் மண்டையில் ஒன்று போட்டான் “என்னலே அங்க முறச்சு முறச்சு பாக்க?” கோபி திகைத்து வேறு உலகிலிருந்து இறங்கி வந்தவன் போல  “பன்னி, முள்ளம் பன்னி” என்றான். மோகன் ஜிப்பை அவிழ்த்து “இதாலே முள்ளம் பன்னி” அப்படின்னு கேட்டபோது கோபி “இதுக்கு முள் இல்லைலா” என்றான். அப்போதே எங்களுக்கு பொறி தட்டியிருக்கவேண்டும் சரியான வட்டு கேசிடம் மாட்டிக்கொண்டோமென்று. பிரபா இன்னொரு அறை விட்டதில் கோபி சுருண்டு விழுந்துவிட்டான். அவனை எழுப்பி தோளோடு தோளாக சாய்த்து நிறுத்தி நடத்தி ஐந்தாவது மாடியிலிருந்த எங்கள் அபார்ட்மெண்டுக்கு மெதுவாகத் தள்ளிக்கொண்டு வந்தபோது நான்காவது மாடி ஸ்டேட்பேங்க் நரசிம்மன் எதிரில் வந்தார். அவருக்கு படிக்கட்டில் வழி விட்டு ஓரமாய் ஒதுங்கும்போது கோபி ‘பன்னி, முள்ளம் பன்னி” என்று முனகினான். நரசிம்மன் எங்களை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே கீழே போனார். அவர் குடித்து மயங்கிவிட்ட நண்பனை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வருகிறோம் என்று நினைத்திருக்க வேண்டும்.  பிரபா எரிச்சலோடு தன் தலை முடியை கோதிக்கொண்டான்.

எங்கள் நண்பர் குழாத்தினை ஒரு நீர்த்தொட்டியில் வசிக்கும் மீன்கள் என்று கொண்டோமானால் கோபி அதன் அடியாழத்தில் நீந்தும் தங்க மீன். சீட்டைக் கலைத்து போட்டோமென்றால் செலவாணியாகமல்  தங்கி மீந்துவிடுகிற இஸ்பேடு ராஜா. கோபி எப்போதும் தன்னை ‘நான்’ என்று விளித்து பேசுவதில்லை; தன்னைத்தானே கோபி என்றுதான் அழைத்துக்கொள்வான். கோபிக்கு அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது, கோபிக்கு இப்போ பசிக்கிறது, கோபிக்கு மனசு சரியில்ல என்றெல்லாம் அவன் பேசுவதை கேட்க அலாதியாக இருக்கும். ஆரம்பத்தில் எங்களுக்கு சில குழந்தைகளின் விளையாட்டு போல அவனுடைய பேச்சு பட்டதால் நாங்களும் அவனை அப்படியே பேச ஊக்குவித்தோம் என்பது உண்மைதான். ஆனால் சில தருணங்களில் கோபியின் பேச்சு முறை கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரபா “ங்கோத்தா ஒளுங்கா பேசித் தொலையேண்டா” என்று கோபியை பல முறை திட்டியிருக்கிறான். மோகன் கோபியை ஏதாவது டாக்டரிடம் காட்டலாமா என்று ஒரு முறை கேட்டபோது கோபி அவனை அடிக்க போய்விட்டான். அவனை அவ்வளவு கோபமாக நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அவன் முகம் பொதுவாக எந்த உணர்ச்சியையும் காட்டாத ஜடம் போலத்தான் இருக்கும். “கோபி இப்ப சந்தோசமா இருக்கான்” அப்படின்னு அவன் சொன்னால் நாங்கள் அவன் சந்தோசமா இருக்கான் என்று புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஆனால் அவன் மோகனை அடிக்க போனபோது அவனுக்கு வலிப்பு வந்தது போல கையும் காலும் இழுத்துக்கொண்டன. முகம் கோணிவிட்டது. பற்களை நறநறத்துக் கடித்தான். நாங்கள் பயந்து போனோம். மோகன் வெலவெலத்து போய் “ வேண்டாம் கோபி எந்த டாக்டரிடமும் போக வேண்டாம்” என்று திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்தான். கோபி அமைதியடைய அரை மணி நேரத்திற்கும் மேலானது.

கோபிக்கு அவன் வேலை பார்த்த ஐ.டி. கம்பெனியில் நல்ல மரியாதை இருந்தது. அவன் கோட் எழுதுவதில் கில்லாடி. யாருடனும் அதிகம் பேசமாட்டான். கணிணி முன்னால் உட்கார்ந்தானென்றால் வேலையை முடிக்காமல் எழுந்திருக்க மாட்டான். ப்ராஜக்ட் மானேஜராக பல முறை பதவி உயர்வு அளிக்க அவன் கம்பெனி முன் வந்தபோதெல்லாம் அவன் தீர்மானமாக “கோபி ஒரு புரோகிராமர். கோட் எழுதுவதுதான் அவனுக்கு சாகசம், நிர்வாகம் அவன் துறையல்ல” என்று மூன்று வரி கடிதம் எழுதி பதவி உயர்வுகளை மறுத்துவிட்டான். ஒரு கலைஞனைப் போல அவன் கோட் எழுதுகிறான் என்று அவன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் கிறங்கியது. அலுவலகத்தில் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. ஸ்வேதாவை கோபிக்கு பிடிக்கும் என்று ஒரு முறை சொன்னான். நாங்கள் கேட்டுக்கொண்டோம். கோபியை ஸ்வேதா விசித்திரமான பிராணிகளிடம் பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் வாஞ்சையுடன் நடத்தியிருக்கவேண்டும். கோபி ஸ்வேதாவை இன்னும் கோட் எழுதி முடிக்கப்படாத ப்ரோக்ராம் என்று நினைத்திருக்கவேண்டும். அவன் அவ்வபோது ஸ்வேதாவைப்பற்றி எங்களிடம் சொன்னவற்றிலிருந்து நாங்கள் புரிந்துகொண்டது அவ்வளவுதான். கோபி எங்கள் அபார்ட்மெண்டில் வைத்திருந்த கணிணியில் ஸ்கிரீன் சேவராய் ஸ்வேதா புகைப்படத்தை வைத்திருந்தான். அந்த புகைப்படத்தில் ஸ்வேதா நடிகை பிரியா மணியின் ஒல்லியான பிம்ப வடிவு போல இருந்தாள். சிவப்பு நிற ஃப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தாள். இமைகள் கனத்திருந்தன. அவளுடைய கண்களுக்கு அடியில் கருவளையங்கள் இருப்பது கோபிக்கு பிடிக்கும் என்று கோபி சொல்லுவான். அரையளவுதான் படம் என்பதால் ஸ்வேதாவின் இடுப்பு தெரியவில்லை. பிரபா கோபியிடம் ஸ்வேதாவின் இடுப்பு இந்த அளவு இருக்குமா என்று காற்றில் கைகளால் வரைந்துகாட்டி  கேட்டான். கோபி கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு அளவை டேப்பை எடுத்து கையில் பிடித்து ஸ்வேதாவின் இடுப்பு இவ்வளவு அகலம் என்று பிராபாவிடம் காட்டினான். பிரபாவுக்கு உற்சாகமாகிவிட்டது. " நீ சொள்ளமாடன் இல்லலே" என்று சிரித்தான். "நீ அவளுக்க இடுப்ப பிடிச்சயா இல்ல இன்னும் கீழ பிடிச்சயா?" "கோபி இன்னும் கீழதான் பிடிச்சான்" என்றான் கோபி. மோகனும் இப்போது கோபியை சீண்டுவதில் சேர்ந்துகொண்டான். மோகன்தான் முதலில் ஸ்வேதாவை பிரியா மணி பிம்பத்தோடு ஒப்பிட்டவன். அலுவலகத்தில் மேலே கப்போர்டில் இருந்த ஒரு ஃபைலை எடுக்க மேஜை மேல் ஸ்வேதா ஏறியிருக்கிறாள் அப்போது கோபி அவள் கீழே விழாமல் பிடித்து இறக்கிவிட்டிருக்கிறான்.

கோபியாய் இருந்தவன் 'நாங்களாய்' 'நாமாய்' மாறியபோது இதே சம்பவத்தை கோபி விவரித்த முறைதான் எங்களுக்கு கலவரத்தை ஏற்படுத்திய  சம்பவமாய் அமைந்தது. "ஸ்வேதா மேஜ மேல ஸ்டூல் போட்டு ஏறினாளா, ஸ்டூலுக்கு கால் சரியில்லையா, கிடு கிடுன்னு ஆடுச்சா நாம அவள ஓடிப்போய் பிடிச்சமா, அவ கீழ விழாம தப்பிச்சா" என்ற கோபியைப் பார்த்து "லேய் அவ குண்டிய நாங்க எங்கலெ பிடிச்சோம்? நீதாம்ல பிடிச்ச" என்று பிரபா கத்தினான். மோகன் 'விடுரா இப்பத்தான் இவன் நாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கான். சீக்கிரமே நான்னு சொல்லிருவான். இல்லையா கோபி" என்று நைச்சியம் பேசினான். "நாளைக்கே இவன் ஏதாவது ஒரு கொலய கிலைய பண்ணிட்டு வந்து, நாங்க அன்னிக்கு கொல பண்ணினமான்னு ஆரம்பிக்கப் போரான் பாரு அப்பத் தெரியும் இந்த அர வட்டு நமபள என்ன பிரச்சனையில மாட்டிவிடுதான்னு" அப்படின்னு பிரபா சொன்னது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது. நல்லவேளையாக கோபி கொலை எதுவும் செய்யவில்லை ஆனால் அவன் முள்ளம் பன்றிகளை பார்த்துவிட்டான். அவன் நாங்கள் மூவருமே முள்ளம் பன்றிகளைப் பார்த்ததாய்ப் பேச ஆரம்பித்தான்.

நாங்கள் முள்ளம் பன்றிகளை தண்டவாளத்துக்கு அருகே பார்த்தபோது இரவு மணி எட்டு இருக்கும். அந்த முள்ளம்பன்றிகள் கூட்டமாக ஆணுரு ஒன்றை துரத்திக்கொண்டு வந்தன. ஆணுரு ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தது. பன்றிகள் சிலிர்க்கும்போதெல்லாம் அவற்றின் முட்கள் விர்விர் என்று கூரிய ஈட்டிகள் போல வெளி வந்தன. ஒவ்வொரு பன்றியாய் துள்ளிக் குதித்து காற்றில் பறந்து வந்து ஆணுருவைக் குத்திக் கிழித்துவிட்டு முட்பந்தாய் சுருண்டு விழுந்தது. பறந்து குத்திக் கிழிக்கத் தயாராய் இருக்கும் பன்றிகள் தங்கள் நாக்குகளை சப்புக்கொட்டின. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு... நாங்கள் பன்றிகளை எண்ண எண்ண அவை எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே இருந்தன. சமூகம் மொத்தமுமே முள்ளம்பன்றிகளாய் மாறிவிட்டது போல அவற்றின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. நாங்கள் எங்கே திரும்பினாலும் நாங்கள் முள்ளம் பன்றிகளைக் கண்டோம். தூரத்தில் ரயில் வரும் ஓசை கேட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் ரயில் நிறைய பன்றிகள் வரப்போவதாய் சொல்லிக்கொண்டோம். ரயிலில் பன்றிகள் வந்து சேர்ந்தனவா இல்லையா என்று தெரியாது ஆனால் மறு நாள் செய்தித்தாள்களில் தண்டவாளத்திற்கு அருகே பன்றித் தாக்குதலில் இறந்த மனிதனின் உடல் கிடப்பது தலைப்பு செய்தியாக வந்தது.  நாங்கள் கோபி ஒரு கொலையைப் பார்த்திருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தோம்.

பிரபா கெட்டவார்த்தைகளோடுதான் எப்போதும் பேசுவான். அதை கோபி ரசிக்கிற மாதிரி நடிக்கிறான் என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டு. மோகன் கெட்டவார்த்தைகளே பேசமாட்டான் ஆனால் அவன் பிரபாவைவிட வக்கிரமானவன் என்று கோபிக்கு ஒரு நினைப்பு உண்டு. கோபி இது போல எங்கள் மூவரைப் பற்றியுமே மோசமான அபிப்பிராயங்கள் கொண்டவனாக இருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான் தண்டவாளத்துக்கு அருகே நடந்த கொலையை நாங்களும் பார்த்தோம் என்று அவன் சொல்லி வருகிறானோ?

பிணம் கண்டுபிடிக்கப்பட்ட தண்டவாளத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர்களிடம் கோபி பேச முயற்சி செய்தபோது நாங்கள் அவனை அடித்து இழுத்து வரவேண்டியதாயிற்று. நாங்கள் அவனை எங்கள் அபார்ட்மெண்ட்டுக்குள் கொண்டுவந்து தரையில் தள்ளினோம். தரையில் தள்ளியதுதான் தாமதம் கோபி துள்ளிக் குதித்து கத்தலானான். “இங்க வந்திருச்சு இங்க வந்திருச்சு ரூம் முழுக்க இருக்கு ஆமா ரூம் முழுக்க இருக்கு” மோகன் தன் தலையில் அடித்துக்கொண்டான். பிரபா “ஒனக்கு ஒன்னும் இல்லடா; அமைதியா இருடா எதுவும் இங்க இல்லடா”

பன்றிகள் அபார்ட்மெண்ட் முழுக்க நிறைந்திருந்தன. அவற்றிலேயே மிகவும் பெரிய பன்றியை கோபிக்கு நன்றாகத் தெரியும். அதுதான் தண்டவாளத்துக்கு அருகே ஆணுருவை பாய்ந்து பாய்ந்து தாக்கியது. அதன் முட்களில் ரத்தம் இன்னும் காயமலிருக்கிறது. சாக்கடையில் படுத்து உருண்டிருந்த அந்த பன்றிகளின்  உடலில் இருந்து எழும் துர்நாற்றம் எங்கள் அபார்ட்மெண்ட் முழுக்க நிறைக்கிறது.  நிணவாடையும் கூவத்தின் சாக்கடை நாற்றமும் அறையை நிறைக்க கோபிக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. கோபி பெரும் சத்தத்துடன் வாந்தி எடுத்தான். மோகன் ஓடிப்போய் சமயலறையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கோபியின் முகத்தை கழுவி துடைத்துவிட்டான். மோகனும் பிரபாவும் கோபியைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு கூடத்தைக் கழுவி விடத் தலைப்பட்டனர்.

பிரபா கோபியின் கணிணியை எழுப்பினான். ஸ்க்ரீன் சேவரில் சிரித்த ஸ்வேதாவை கட்டிலில் படுத்திருக்கும் கோபி பார்க்கும்படிக்கு கணிணியைத் திருப்பி வைத்தான். நாங்கள் அந்தக் கணிணியின் கொண்டையில் எலி போல உட்கார்ந்திருந்த சிறு முள்ளம் பன்றியை கவனிக்கத் தவறிவிட்டோம். கோபிக்கு அந்த சிறு பன்றியையும் தெரியும். அது ஆணுருவின் குறியை எட்டிப்பிடிக்க தீவிர முயற்சி செய்தது கோபியின் கண்களுக்குள் காட்சியாய் விரிந்தது. அது கணிணியின் கொண்டையிலிருந்து மேலே சட்டகத்தின் மேல் ஏறி தன் நீண்ட நாக்கை நீட்டியது. ஸ்வேதாவின் புகைப்படத்தில் அவளுடைய முலைகளின் மேல் முள்ளம் பன்றியின் நாக்கு அருவருப்பாய் அலைந்து துழாவியது.

வாயில் அழைப்பு மணி ஒலித்தது. மோகன் கதவைத் திறந்தபோது நான்காவது மாடி ஸ்டேட்பாங்க் நரசிம்மன் நின்றிருந்தார். மோகன் அவரை உள்ளே கூப்பிட்டு உட்காரவைத்தான். பிரபா “கெழ்ட்டு கூதியான் வண்ட்டான்” என்று முணு முணுத்தான். “பேச்சிலர்ஸுக்கு இந்த காம்ப்ளெக்ஸில் இடமே தரமாட்டா. நீங்கல்லாம் வேலை பாக்கறவா. ஸ்டூடண்ட்ஸ் இல்ல” என்று ஆரம்பித்த நரசிம்மனை மோகன் இடைமறித்து “நீங்க நெனைக்க மாரியெல்லாம் எதுவும் இல்ல சார். கோபிக்கு ஒடம்பு சரியில்ல” என்றான். “அப்பா அம்மா, சொந்தகாரா இருக்காளோ இல்லியோ” “இருக்கா சார். துபாய்ல. பிரபா இன்னைக்கு ஃபோன்ல கூப்பிடப்போறான்” “என்ன ஒடம்புக்கு?” “எதயோ பாத்து பயந்திருக்கான்.” “பேயா? நம்ம காம்ப்ளெக்ஸ்ல பேயெல்லாம் கெடையாதே” “பேயில்லை சார். பன்னி. முள்ளம் பன்னி” சிறு முள்ளம் பன்றியின் நாக்கு ஸ்வேதா புகைப்படத்தில் அவள் முலைகளுக்குக் கீழே நீண்டது. “முள்ளம் பன்னியா!” நரசிம்மன் ஹாலில் இருந்து இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் கோபி படுத்திருந்த அறைக்குள் எட்டிப்பார்த்தார். “தல வேதன சார். ரெண்டு அடி கூட கொடுத்துப் பாத்துட்டேன். ஒன்னுக்கும் மசியாம ‘பன்னி பன்னி’ங்கிறான்” பிரபாவுக்கு சொல்லும்போதே தொண்டை அடைத்தது. நரசிம்மன் பார்த்திருக்கவே பிரபா கோபியை அணுகி, அவன் நெற்றியைத் தடவி, தலையைக் கோதிவிட்டு “ஒன்னும் பயப்படாதடே. ஒன்னும் ஆகாது கேட்டியா? லேய் கேட்டியா?” என்றான். கோபி கணிணியை நோக்கி கையை நீட்டி சிறு முள்ளம் பன்றியைக் காண்பித்தான். அறை  முழுக்க சிறிதும் பெரிதுமாய் பன்றிகள் நிறைத்துக்கொண்டிருந்தன. நரசிம்மன் கிளம்பத் தலைப்பட்டார். போகிற போக்கில் “ஏதோ இண்டெர்கேஸ்ட் லவ் அஃபேராம். கொன்னு ரயில் தண்டவாளத்துக்கிட்ட போட்டுட்டா. நம்ம காம்ப்ளெக்ஸுக்கு பக்கத்துல. நியுஸ் பேப்பர்ல எல்லாம் வந்திருந்தது. பாத்தேளோ? தம்பிக்கு லவ் அஃபேரெல்லாம் ஒன்னும் இல்லியே” “இல்ல சார்” “பேர் என்ன சொன்னேள்?” “கோபி. ஜி.ஆர்.கோபாலகிருஷ்ணன்” “ கோபி, வரட்டா” என்றவர் “கோபி என் பெயரில்ல சார்" என்று மோகன் சொல்வதைக் காதில் வாங்காமல் இறங்கிப் போனார்.

“முள்ளம் பன்னி உண்மைல  பன்னி இல்ல. அது ஒரு வகை எலி. தெர்யுமா ஒனக்கு” என்றான்பிரபா. கோபியின் கண்கள் அகல விரிந்தன. கிட்டத்தட்ட மயக்கமானவன் போல படுத்திருந்தவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். "பிரபா நீயும் முள்ளம் பன்னிகளைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்ட இல்ல. அது பன்னி இல்ல எலி வகதான் நீ சொன்னது கரெக்டு. அது பெருச்சாளி வக" பிரபா என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவன் போல ஒரு விநாடி நின்று மீண்டான். "பிரபா எல்லா எடமும் முள்ளம் பன்னி நிக்கி. அதான் நீ கூட எப்பப்பாரு கெட்ட வார்த்தயா பேசர. மோகனுக்கு மனசு பூரா விசமா இருக்கு"

நாங்கள் கோபியை ஒரு வழியாய் தூங்க வைத்துவிட்டு துபாயிலிருக்கும் அவன் அப்பாவை தொலைபேசியில் அழைத்து பேசினோம். கோபியின் ரயில் தண்டவாளத்துக்கு அருகே நடைபெற்ற வன்கொலையொன்றைப் பார்த்து சித்தம் கலங்கிவிட்டது போல பேசுகிறான் செயல்படுகிறான் அவன் கண்களுக்கு எங்கே பார்த்தாலும் முள்ளம் பன்றிகளாய் தெரிகின்றன என்று மோகனும் பிரபாவும் மாறி மாறி சொன்னபோது ராமநாதன் ஃபோனில் கடகடவென்று சிரித்தார். நீங்கள் இரண்டு பேரும் கூட அவனுக்கு முள்ளம் பன்றிகளாய் தெரிகிறீர்களா என்று கேட்டு பெரிய ஜோக்கை சொன்னவர் போல வெடித்துச் சிரித்தார். எங்களுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டோம். ஒரு வேளை கோபி நார்மலாய் இருக்க எங்களுக்குத்தான் தண்டவாளத்துக் கொலையைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து புத்தி பேதலித்துவிட்டதோ? ராமநாதன் என் பையன் ஒரு ஜீனியஸ். மேதைகளுக்கே உரிய கிறுக்குத்தனம் அவனுக்கும் உண்டு. நீங்கள்தான் அவன் சொல்வதை கவனிக்கவேண்டும் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார்.

அன்றிரவு நாங்கள் சரியாகத் தூங்கவில்லை. கோபி மட்டும் நன்றாக உறங்கினான். அரைகுறைத் தூக்கத்தில் மோகன் எழுந்து தொலைக்காட்சியை முடுக்கி மிட் நைட் மசாலா பார்க்க யத்தனித்தான். தொலைக்காட்சி திரையெங்கும் முள்ளம் பன்றிகள் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தன. மோகன் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திவிட்டு படுக்கக் கிளம்பியபோது பிரபா கட்டிலுக்கடியில் எதையோ தேடிக்கொண்டிருந்தான். "என்னவாக்கும் தேடுத?" என்று கேட்டான் மோகன். "கொளுத்த ஆட்டுக்குட்டி போல ஒரு.." "ஒரு?" "பன்னி ஓடிச்சு பாத்துக்க"

மாறுநாள் நாங்கள் யாரும் ஆஃபீசுக்கு போகவில்லை. எல்லோரும் சிக் லீவ் சொல்லிவிட்டோம். மோகன் காலையிலிருந்து யார் யாருக்கோ ஃபோன் பண்ணி பேசிக்கொண்டே இருந்தான். பிரபாவுக்கு நல்ல காய்ச்சல் வந்துவிட்டது. கோபி தன் முள்ளம் பன்றிகளுடன் ஒத்திசைந்து போய்விட்டது போல இருந்தது; அந்த பன்றிகள் அவன் தோள் கை கால் என்று மேலே ஏறி விளையாடுவதும் அவன் அவற்றை இயல்பானதாக எடுத்துக்கொள்வதுமாய் ஆகிவிட்டிருந்தது. ஒரே இரவில் ஏற்பட்ட அன்னியோன்யம் என்பதாலோ என்னவோ உறவு சீராக இருக்கவில்லை. பன்றிகளின் முட்கள் கிழித்து கோபியின் உடலில் ஆங்காங்கே ரத்தக் கோரைகள் ஏற்பட்டன. என்றாலும் கோபி சிவனே என்றிருந்தான்.

மோகன் ஃபோன் பேசிய நண்பர்களிலொருவர் ஜோதிடர் ஒருவரின் முகவரியைக் கொடுத்து போய்ப் பார்த்துவிட்டுவரச் சொன்னார். அவர் பிரசன்னம் பார்த்து பரிகாரம் சொல்லுவாராம்.

மோகன் ஃபோனிலேயே ஜோதிடரிடம் எங்களின் சமீபத்திய முள்ளம் பன்றி பிரச்சனையைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னான். அவர் எங்களை உடனடியாகக் கிளம்பி வரச் சொன்னார், நாங்கள் அவரை நேரில் சென்று பார்த்தபோது ஜோதிடர் ஆயிரத்து ஒரு ரூபாய் தட்சிணை கேட்டார். மோகன் எந்த சலனமும் இல்லாமல் அவர் கேட்டதை எடுத்துக்கொடுத்தான். பிரபா யாருக்கும் கேட்காவண்ணம் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தான். கோபிக்கு பிரபா தன் மனசுக்குள் என்ன கெட்ட வார்த்தை போட்டான் என்று அறிய ஆவலாயிருந்தது.

"ஒங்கள்ள யாருக்கும் பன்னிமாடசாமி குல தெய்வமா?"

மோகனும் பிரபாவும் கோபியைப்பார்த்தார்கள். கோபி அப்போதுதான் தன் தோளிலிருந்து ஒரு முள்ளம் பன்றியை தரையில் இறக்கிவிட்டான்.

"முள்ளம் பன்னி பன்னி இல்ல. எலி. பெருச்சாளி இனம். இல்லடா பிரபா?"

ஜோதிடர் "தம்பி என்ன சொல்லுதாரு" என்றார்.

"ஜோசியர் சார் கோபி என்ன சொல்லுதாருன்னா, நீங்க நெனைக்க மாரி எங்களுக்கு பன்னி மாட சாமி குல தெய்வமாட்டு இருந்து அத நாங்க கவனிக்காம வுட்டு அதனால இப்ப முள்ளம் பன்னியா கோபிக்கு முன்னால மாடசாமி சுத்துதுன்னு இல்ல. முள்ளம் பன்னி ஒரு எலி. பெருச்சாளி வகயறா. அதனால எலி மாடசாமி குல தெய்வமான்னுதான் கோபிகிட்ட கேட்கனும்"

"கோபி யாரு?"

"அவனேதான் சார், தன்னைத் தானே அவன் பேர் சொல்லி கூப்ட்டுக்குவான்"

ஜோதிடர் எங்களை விநோதமாகப் பார்த்தார். கோபியைக் கூப்பிட்டு சோவிகளைக் குலுக்கிப் போடச் சொன்னார். கோபி சோவிகளை முள்ளம்பன்றிகளிடம் காட்டி அவைகளிடம் அனுமதி வாங்கிவிட்டு குலுக்கிப் போட்டான். ஒற்றைச் சோவி மட்டும் மேல் நோக்கி திறந்து விழுந்தது.

"மாகாளில்லா தம்பிய கண் தொறந்து பாக்கா!" முள்ளம் பன்றிகள் சுற்றும் முற்றும் கும்மாளமிட்டு குட்டிக்கரணம் போட்டன.

"திருப்பதிக்கு போங்க. கீழ அடிவாரத்துலேயே வராகமூர்த்தி இருக்கார். அவருக்கு ஒரு சகஸ்ரநாமம் பன்னிட்டு வந்துருங்க. எல்லாம் சரியாப் போவும். இல்லய இங்க பக்கத்துல திருவிடந்தைக்குப் போங்க வராக மூர்த்திக்கு தொளசி மால வாங்கி சாத்திட்டு மூனு தடவ சுத்திட்டு வந்துருங்க"

"கோபிதான் அப்பவே சொன்னானே முள்ளம் பன்னி பன்னி இல்லன்னுட்டு. பன்னி தொந்தரவு தருது அதனால வராகம், பன்னி அவதாரத்த கும்புடு அப்டின்னு பரிகாரம் சொல்றீங்க. கோபி சொல்றான் பிரபா சொல்றான் முள்ளம் பன்னி பன்னி இல்ல பெர்ச்சாளி"

"தம்பி, சாதிய வச்சு ஆளா, ஆள வச்சு சாதியா? சாதிய வச்சுதான ஆளு. அது மாதிரிதான் இதுவும். பெருச்சாளி வகயறாக்கு எதுக்கு பெரியவங்க பன்னின்னு பேர் வச்சாங்க? குலத்தளவே ஆகுமாம் குணம். பன்னியால தொந்திரவுன்னா பன்னி அவதாரத்துக்குத்தான் பிரீதி செய்யனும். போய்ட்டு வாங்க, நல்லா இருங்க"

நாங்கள் சோர்வாக எங்கள் அபார்ட்மெண்டுக்குத் திரும்பினோம். வழியெல்லாம் பிரபாவும் மோகனும் கோபியைத் திட்டிக்கொண்டே வந்தனர். "எல்லாத்தையும் கெடுக்கிறாம்பா இவன்" என்றார்கள், கோபி தன் முள்ளம் பன்றிகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே கோபி போய் தன் கணிணியில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். "என்ன வேலயா?" "இல்ல கத" "கதயா! என்ன தலப்பு?" "நாங்கள் கோபியை மிரட்டினோம்".















Wednesday, July 3, 2013

ஒரு துண்டு வானம் | சிறுகதை




இன்று கரெண்டு கொடுக்க என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்களாம். தவறு. தவறு. தூய தமிழில் மட்டுமே நான் பேசவேண்டும். இன்று மின்சார அதிர்ச்சி தர என்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார்களாம். இன்று எனக்கான பொறுப்பில் இருக்கும் அந்தக் குட்டிப்பெண தாதி இல்லை இல்லை செவிலி வரவில்லையாம். என் கனவின் திரைகளை கிழித்து எட்டிப்பார்த்திருப்பாளோ? எண்ணங்களின் புதைபடிவுகள் அங்கே பாளம் பாளமாக உறைந்திருப்பதைக் கண்டு பயந்து போயிருப்பாளோ? தாள முடியாத வலியின் கீறல் என் உடலின் வழி என் இருப்பின் வழி கோணல்மாணலான கோடாக ஓடுவதைக் கண்டு துடித்துப் போயிருப்பாளோ? அவளின் கள்ளமற்ற விழிப்படலங்களில் நான் சொல்வதைக் கேட்டு கண்ணீர் அடர்ந்ததே அப்போது என் நரம்புகள் கூழ்கூழாக நொறுங்கிய சப்தம் அவலின் சின்னஞ்சிறிய இருதயத்தைத் தகர்த்திருக்குமோ? இளம் செவிலி எண் 1731 (இ.எ.செ1731) என்றழைக்கப்படும் அருட்பெரும்ஜோதியாகிய அந்தப் பெண் நான் ஒரு தத்துவப் பேராசிரியர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டாளோ?

எல்லாம் அந்த ஒரு துண்டு வானம் செய்த வேலை. என் அறையின் உச்சியில் இருக்கும் அந்த சிறிய ஜன்னலின் வழி தெரியும் ஒரு துண்டு நீல வானம் செய்த வேலை. நேற்றைக்கு முந்திய நாள் மாலை ரோஜா நிற மேகம் ஒன்று துள்ளித் துள்ளி ஓடுவதைப் பார்த்து பரவசம் அடைந்த நான் நேற்று அங்கே தெரிந்த பெண் பூவரச மரத்தின் இளம் பச்சைத் துளிர் இலைகளைக் கண்டு நெக்குருகி அ.பெ.ஜோ 1731-இடம் என் நிலை மறந்து எல்லாவற்றையும் உளறிக்கொட்டிவிட்டேன். உண்மையைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை ஐயா வேறெதுவும் சொல்லவில்லை. சத்தியமாக.

அந்தத் துளிர் இலைகளைக் கண்டவுடன் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு 1994 அல்லது 1996இல் திருநெல்வேலியில் காணாமல் போன சிட்டுக்குருவிகள் என் மனவெளியில் உயிர்பெற்றுத் தங்கள் சிறிய அலகுகளைத் திறந்து அறியா இன்பப்பாடலை கிறீச்சிட்டு இசைப்பதாகச் சொன்னேன். என்னுடைய வலியின் கீறலின் வழி தங்கள் அலகுகளை வெளியுலகுக்குக் காட்டிய அவை மர இலைகளுக்குத் தாவத் துடிப்பதாக அவளிடம் சொன்னேன். கைகளில் முகத்தைப் புதைத்து விரல்களூடே கள்ள இடைவெளி விட்டு அதன் வழி அவள் முகத்தைப் பார்த்தவாறே, அந்த அலகுகள் எவ்வளவுதான் கோபமாகத் தங்களின் சிவந்த உட்புறங்களைக் காட்டினாலும் அவைகளுக்கும் மர இலைகளுக்கும் இடையிலுள்ள தூரம் எப்படி குறைவு படாமல் இருக்கிறதோ அது போலவே, எனக்கும் அவளுக்கும் இடையிலுள்ள தூரம் கனத்துக்கிடப்பதாகச் சொன்னேன். அவளை ஜோதி என்றழைக்கலாமா என்று கேட்டேன். எண்களால் அன்றி வார்த்தைகளாலும் ஆட்களைப் பெயரிடலாம் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை 1997இல் பிறந்திருப்பாளோ? வயது பத்தொன்பதுதான் இருக்குமோ?

1997இல்தான் பிறப்பு பதிவு எண்ணையேதான் பெயராகவும், வாக்காளர் எண்ணாகவும், சமூக பாதுகாப்பு எண்ணாகவும் கருத வேண்டுமென்று ஒருங்கிணைந்த குடியரசுகளின் சட்டம் சொன்னது. ஐநூறுக்கும் மேற்பட்ட பெயர்களுடனும் அடையாளங்களுடனும் வாழ்ந்த என்னை ஒரே இலக்கத்தால் அழைக்க முடிந்தபோதுதான் அமுக்கிப் பிடித்தார்கள் அபாயகரமான சிந்தனையாளன் என்று. இருபது வருட சிறைவாசத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மின்சார அதிர்ச்சி, மனநல மருந்துகள், நடத்தை நெறிமுறைகள் ஆகியவற்றின் மூலம் அபாயகரமான நோயாளி என்று அழைக்குமளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார்கள். மடையர்கள்! முட்டாள் இலக்கங்கள்! அந்த ஒரு துண்டு வானம் என் கண்களின் வீச்சுக்குள் இருக்கும் வரை நான் நானாகத்தான் இருப்பேனென்பது அவர்கள் அறியாதது.

இ.செ.எண் 1731 என் கைவிரல்களைப் பற்றியிழுத்து, என் மோவாயைத் தன் கைகளில் தாங்கி, என் தாடியை நீவிவிட்டாள். இரக்கமற்ற அந்த கண்களீல் கனிவு என்பது நான் என்றுமே அறியாத ஒன்று. காதலா? சேச்சே தப்புப்பண்ணாதே அதியமான் தப்புப்பண்ணாதே. கடந்த நூற்றாண்டிலேயே காதல் என்ற கருத்தும், செயலும், வார்த்தையும் வழக்கொழிந்துவிட்டன. திருமண பங்குச் சந்தையில் இ.செ.எண் 1731 தன்னை என்ன விலைக்கு, எத்தனை காலத்திற்குத் தருகிறாள் என்று விசாரிக்கவேண்டும். கடந்த இருபது ஆண்டுகளாக என்னுடைய நன்னடத்தையின் காரணமாக இந்தத் தனியார் சிறைச்சாலையின் பங்குகள் சந்தையில் நல்ல விலைக்கு விற்பதாகக் கேள்வி. காவலதிகாரி தனக்கு ஊக்கத்தொகை கிடைத்தபோது சொன்னான். என்ன நன்னடத்தையோ தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த தனியார் சிறைச்சாலைக்கும் நான் தத்துவம் போதித்த கல்லூரிக்குமிடையில் எந்த வித்தியாசமுமில்லை. கல்லூரியில் சிந்தித்தால் குற்றவாளி என்கிறார்கள் சிறைச்சாலையில் சிந்தித்தால் நன்னடத்தை என்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் என்னால்தானே இவர்களுடைய பங்குகளுக்கு விலை கூடியிருக்கிறது? எனவே அதில் ஒரு சிறிய விகிதாச்சாரத்தை எனக்குத் தரவேண்டும் என்று உயர் காவலதிகாரியிடம் வாதிட்டுப்பார்க்கலாம். கொஞ்சம் செலவாணிப்புள்ளிகள் என் கடனட்டையில் ஏறினாலும் போதும் உடனடியாக இ.செ.எண் 1731ஐ ஒரு சில நாட்களுக்காவது மணப்பெண்ணாய் வாங்கிவிடுவேன். செலவாணிப்புள்ளிகள் தர மாட்டேன் என்று சொல்ல முயற்சித்தால் கூட போதும் திரும்ப புதிதாய் சிந்திக்கப்போகிறேன் என்று சொன்னால் பயந்துவிடமாட்டார்களா, என்ன? என் சிந்தனையின் ஒரு இழை கூட இவர்களுடைய சிறைச்சாலைகளை தவிடுபொடியாக்கிவிடும் என்பது அவர்கள் அறியாததா?

“உங்களைப் பார்த்தால் மிகவும் மென்மையானவராகவும் நல்லவராகவும் இருக்கிறீர்கள் அப்படி இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும்படி அப்படி என்னதான் அபாயகரமாக சிந்தித்தீர்கள்?” அவளின் கள்ளமற்ற மாசு மருவற்ற முகம், படபடத்த இமைகள், வியப்பின் விகசிப்பில் ஒளி ஏறியிருந்த கண்கள், இளமைச் செழிப்பில் விம்மியிருந்த மார்பகங்கள் அவளின் கேள்வி என்னிடத்தில் இனம் புரியாத நெகிழ்ச்சியை உண்டாக்கியது. மென்மையாகத் தோளில் கை போட்டு நெகிழ்ச்சியின் இதத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசையாக இருந்தது. மெல்லிய குரலில் “உனக்கு எப்படிச் சொன்னால் புரியும்?” என்றேன். அவள் அலட்சியமாக “ஓரு வாக்கியத்தில் சொல்லுங்களேன்” என்றாள். 

“இவ்வுலகும் உயிரும் அழகியல் நிகழ்வாக அன்றி வேறு எதுவாகவும் ஜீவித நியாயம் பெறுவதில்லை”

“இவ்வளவுதானா?”

“இவ்வளவேதான்” சபாஷ்டா அதியமான்.

“இதிலென்ன அபாயம் இருக்கிறது?”

“அதை நீ உன் அமைப்பிடம்தான் கேடக் வேண்டும்”

அமைப்பு என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே அவள் ஈண்டும் இ.செ.எண்1731 ஆனாள். தப்பு. உரையாடலை சரியானபடி கொண்டு செல்வதில் எனக்குப் பரிச்சயம் விட்டுப் போயிற்று. என்ன செய்ய? அவள் போய்விட்டாள்.

அரசாங்க கணிணிகளிடம் 1731 கேட்பாளோ? ரகசிய கோப்புகளை அவளுக்குக் காட்டுவார்களா? அந்தக் கோப்புகள் ‘தத்துவமும் அரசியல் கைதிகளும்’ என்று தலைப்பிடப்பட்டிருந்ததாக நினைவு. இளம் செவிலியை பக்கத்திலேயே விட மாட்டார்கள். இவள் நான் சொன்ன வாக்கியத்தை யாரிடமாவது உளறித் தொலைகாமல் இருக்கவேண்டும். சாதாரண குற்றவாளிகளை மிருகத்தனமாக அடிப்பததைப் பார்த்திருக்கிறேன். என்னை மின் அதிர்ச்சி தவிர உடல் ரீதியாக அடித்து இதுவரை துன்புறுத்தவில்லை. சாக்கைக் காலில் கட்டி முக்கிய எலும்பு நொறுங்கும்படி கடப்பாரையால் ‘ணங்’ என்று ஒரு போடு போடுவார்களோ. போன நூற்றாண்டு தமிழ்ப்படங்களில் இந்த மாதிரி காட்சிகள் சகஜமாய் வந்து போகும். இப்போதெல்லாம் லேசர் துப்பாக்கிகளும் நிர்வாணகாட்சிகளும்தானாம். எனக்கு பேனா, காகிதம், இசை, புத்தகம், சினிமா எதுவுமே கிடையாது, என் கிருத்துருவமான மூளை சிந்திப்பதை நிறுத்தினால்தான் அதெல்லாம் தருவார்களாம். கடப்பாரையை நினைத்து முதுகுத்தண்டு சில்லிடுகிறது. நகங்களைக் கடிக்க ஆரம்பிக்கிறேன், நகக்கண் சதையில் ரத்தம் வரும் வரையில் கடித்துவிடுவேன். ரில்கேதானே எழுதினான் ஆமாம் ரில்கேதான் ‘நான் கதறி அழுதால் தேவதைகளில் யார் கேட்பார்கள்?’ நான் நகம் கடிப்பதையும் கண் கலங்குவதையும் பார்த்து யாரும் சிந்திக்கிறேன் என்று நினைத்துவிடுவார்களோ? யாரது என் சிந்தனையை வேவு பார்ப்பது? யாரது என் நிழல் சிடுக்குகளில் என் மூளையைத் தேடுவது? யாரங்கே?

சிலுவைப்பாதையில் ஏசு கிறிஸ்துவை இழுத்துச் சென்றபோது, வலியும் துக்கமும் தாள முடியாமல், ஒரு பலகீன தருணத்தில் அந்த மகான் “தேவனே, தேவனே, தந்தையே தந்தையே என்னை ஏன் கைவிட்டீர் ?” என்று கதறினாரே, அந்தக் கணம் ஒவ்வொரு மனித இருதயத்துக்குமான கட்டாய கல்வி. தேவகுமாரனுக்கே இந்த கதியென்றால் என்னைபோனற சாதாரண மனிதர்களின் கதி என்ன? இவ்வளவு வலியும் துக்கமும் பயங்கரமும் நிறைந்த இவ்வுலகு இருப்பதற்கான நியாயம் என்ன இருக்கிறது? ஏன் இவ்வுலகு இருக்கிறது என்ர கேள்விக்கு தத்துவத்தில் பதில் இல்லை. இளம் செவிலுக்குச் சொன்ன அதே வாக்கியத்தை இப்போது சொல்கிறேன் இவ்வளவு அழுக்குகளோடும் அசிங்கங்களோடும் வலிகளோடும் துக்கங்களோடும் இவ்வுலகு அழகியல் நிகழ்வாகவே ஜீவித நியாயம் பெறுகிறது. We, human beings need to create the sublime for the conquest of this horrible world. மனிதன் கலைஞனாகவே உயர்மனிதனாகிறான். ஐயோ ஐயோ இடையில் வேற்று மொழி வந்துவிட்டதே நான் என்ன செய்வேன்! ஒருங்கிணைந்த குடியரசுகளின் தற்போதைய சட்டத்தின்படி தாய்மொழி தவிர்த்த அந்நிய மொழியில் சிந்திப்பது பேசுவது எல்லாமே குற்றமாயிற்றே! தேசபக்தர்கள் யாரேனும் வேவு பார்த்திருப்பார்களோ?

இந்த மாதிரியான நிலைமைகளெல்லாம் ஏற்படும் என்று தெரிந்துதான் 1996 ஆம் ஆண்டே இந்தியப்பொருளாதாரம் உலகமயமாக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தேன். என்னுடைய அப்போதைய விமர்சகர்கள் உலகமயமாக்கல் பணக்காரர்களை மேலும் அதிக பணக்காரர்களாகவும் ஏழைகளை இன்னும் அதிக ஏழைகளாகவும் உருவாக்கும் என்றும் அதனால் வர்க்கப்போராட்டம் வலுப்பெற்று புரட்சி வெடிக்க சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்றும் வாதிட்டார்கள். என்னுடைய எதிர்ப்போ முழுமையாக அழகியல் சிந்தனையிலிருந்து உருவானது. எல்லாமே- வாழ்வு முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், உடை வாழுமிடம் என்பன மட்டுமில்லாமல் நமது உணர்ச்சிகள், அழகுகள், ஏன் புணர்ச்சி உட்பட அனைத்துமே தரப்படுத்துதலுக்கு ஒற்றைத் தரப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆகையால் பலவகை வாழ்க்கை முறைகள், உணர்ச்சிகள், அழகுகள் அழிக்கப்படுகின்றன. இது உலகின் ஜீவித நியாயத்திற்கே எதிரானதாகும் என்று வாதிட்டேன். ஜோஸப் கார்னீலியஸ் குமரப்பா என்ற பெரை நாம் மறந்துவிட்டோம் என்று கூச்சலிட்டேன். என்ன செய்தார்கள்? மேற்கத்திய தரப்படுத்துதல் ஆதிக்க வாழ்வு முறை ஆனதென்றால் தூய தமிழை பயன்படுத்துதல் மொழித்தரப்படுத்துதல் ஆயிற்று. அவர்கள் தமிழ் வாழ்வு முறையினை இப்படிக்காப்பாற்றி விட்டார்களாம். நான் தரப்படுத்துதலுக்கான எல்லா முயற்சிகளையும் எதிர்த்தேன்.  அதிலொரு உத்திதான் கட்டுரை போல கதை எழுதுவதும் கதை போல தத்துவக் கட்டுரை எழுதுவதும். ராட்சசத்தனமான இயக்கத்தோடு சந்தைபொருளாதாரம் நகர ஆரம்பித்தபோது என்னுடையது மாதிரியான சிறு எதிர்ப்புகள் பலகீனமானவையே. ஆனால் அவற்றைக்கூட  அடக்குமுறை எந்திரங்கள் விட்டுவைக்கத் தயாராக இல்லை. தரப்படுத்தப்பட்ட ஒற்றை சிந்தனை இல்லாதவன் என்பதினாலேயே தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டேன். நானோ சளைக்கவில்லை. இதர எதிர்ப்புகளில் கவனம் செலுத்தலானேன். உழைப்புக்கேற்ற கூலி என்பது முதலில் நமது சினிமா நடிகர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவேண்டுமென்று துண்டுப்பிரசுரம் எழுதி விநியோகித்தேன். ஒற்றை விரலால் சொடக்கு போடுவதையும் துண்டைத்தூக்கி தோளில் போடுவதையும் நடிப்பு என்று அழைத்து அதற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை (போன நூற்றாண்டின் காகித செலவாணிப்புள்ளி) அள்ளிக்கொடுப்பது அயோக்கியத்தனம் என்று கூப்பாடு போட்டேன். இதையெல்லாம் விட பெரிய கொடுமை இந்த நடிகர்கள் நம் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது என்று எடுத்துச் சொன்னேன். எனது பலகீனமான கீச்சுக்குரல் யாரையும் எட்டவில்லை. என்ன நடந்தது? பணக்காரர்கள் அதி பணக்காரர்கள் ஆனார்கள் ஏழைகள் அதி ஏழைகள் ஆனார்கள். வர்க்கப்பிளவு அதிகரித்து புரட்சி தோன்றுவதற்கு பதிலாக குற்றங்கள் அதிகரித்தன. என்ன மாதிரியான குற்றங்கள்? ஏழைகளின் வாழ்க்கை வட்டச் சடங்குகளான பிறப்பு, காதுகுத்து, சடங்கு, திருமணம், சீமந்தம், வளைகாப்பு, சாவு ஆகியவற்றில் அடங்கியுள்ள பொருளாதார பரிமாற்றங்கள் அனைத்துமே குற்றங்களாக அறிவிக்கப்பட்டன. சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன என்றாலும் சிறைகளின் லாபங்களை அதிகரிக்க மேலும் மேலும் சிறைவாசிகள் வேண்டும் என்று அரசாங்கம் காவல்துறையை வற்புறுத்தியது. சிறைவாசிகளோ உணவு, உடை, உறைவிடம் மட்டுமே தரப்பட்ட விவசாய் இன்னபிற கூலிகளாக மாற்றப்பட்டனர். சிறைச்சாலை ஒரு வியாபாரமாக அதன் பங்குகள் சந்தையில் கூவிக்கூவி விற்கப்பட்டன. போன நூற்றாண்டில் பல்கலைக்கழகங்கள் செய்த வேலையை இப்போது சிறைச்சாலைகள் செய்து வருகின்றன. என்னைப் போன்றவர்களை பலவீனமாக்கி செயலிழக்கச் செய்வதை தங்களுடைய மிகப்பெரிய பலமாக இந்த சிறைச்சாலை விளம்பரப்படுத்தியிருக்கிறது. ‘அதியமானை நோயாளியாக்கினோம்’ என்று விளம்பரப்படுத்துவார்களோ என்னவோ யார் கண்டது. விளம்பரப்பொருள் என்பதால் எனக்கு உடலுழைப்பு நிர்ப்பந்தம் கிடையாது.

மேற்சொன்னவர்றின் நீட்சியாகவே அபாயகரமான சிந்தனையாளன் என்ற பட்டம் எனக்குக் கிடைத்திருக்க வேண்டுமென்றாலும் அந்த கௌரவம் இரண்டு காரியங்களினாலேயே என்னைத் தேடி  வந்தடைந்தது. ஒன்று  நமது நாட்டிற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று வாதாடியது. அதில் ஒன்றும் பெரிய விஷயமில்லை. இப்போது ஒருங்கிணைந்த குடியரசுகளின் சட்டமே அணு ஆயுதங்கள் தேவையில்லை என்பதுதான். இரண்டாவது ‘உணர்வுப் பிரவாகமும் நிரந்தர உச்சகட்ட பரவசமும்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டது. யாரோ வருவது போல இருக்கிறது. யோசிக்காதே. கருவிகளை வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள். மற. மனமே வெற்றிடமாகு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு….

“இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே!”

“அப்படி உங்களுக்குத் தெரிகிறதா ஐயா”

“இன்று மின் அதிர்ச்சி தரப்படவில்லையென்று சொன்னார்கள்”

“தராதது எனக்கும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது”

ஏன் தரவில்லை என்று தெரியுமா?”

“கருத்து ஏதுமில்லை”

“இளம் செவிலி 1731 இன்று ஏன்  வரவில்லை என்ற காரணம் உங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதானே” 


“மறதி அதிகமாகிக்கொண்டிருக்கிறது.”

“இளம் செவிலி ஏன் வரவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது”

“உங்களிடம் பரிவு காட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வேலை நாட்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்”

“என்னிடம் என்ன பரிவு காட்டினார்?”

“உங்கள் மோவாயை கைகளில் தாங்கியது. தாடியை நீவி விட்டது. உங்கள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தது”

“-------------”

“என்ன பதிலையே காணோம்?”

“பாவம் குழந்தை”

“குழந்தையா அவள்! திருமணச் சந்தையில் ஒரு வருட ஒப்பந்தத்திற்கு ஒரு லட்சம் செலவாணிப்புள்ளி கேட்டிருக்கிறாள்”

“ என்னால் இந்த நிறுவனத்திற்கு ஏதேனும் விளம்பரம் சேர்க்க முடியுமென்றால் அதைச் செய்து கொடுத்து அதனால் கிடைக்கும் செலவாணிப்புள்ளிகளைக் கொண்டு இளம் செவிலியை எட்டுமணி நேரமாவது ஒப்பந்தம் செய்து கொள்ள ஆசை”

“அடடே நல்ல திட்டமாக இருக்கிறதே. ஆனால் இந்தக் கிழட்டு வயதில் உமக்கு இப்படி ஒரு ஆசையா?”

“இந்த வயதிலும் என்னால் ஒரு இளம் பெண்ணிடம் பேரானந்த உணர்வுப் பிரவாகத்தையும் நிரந்தர உச்சகட்ட பரவசத்தையும் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்”

“சற்றே பொறுங்கள் ஐயா சற்றே பொறுங்கள். இது உங்களுடைய தடை செய்யப்பட்ட புத்தகத்தின் தலைப்பு அல்லவா?”

“என்னுடைய இந்தக் கண வார்த்தை கோர்ப்பு இறந்த காலத்திலும் இயங்கியிருக்கிறதா? ஆச்சரியம் ஆச்சரியம்”

“பொய் சொல்லாதீர்கள். இளம் செவிலியிடம் தடை செய்யப்பட்ட புத்தகத்தின் சாரம்சத்தைத் தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள்”

“என்னவாகும் அது?”

“எது?”

“சாராம்சம்”

“இவ்வுலகு அழகியல் நிகழ்வாக அன்றி வேறெதுவாகவும் ஜீவித நியாயம் பெறுவதில்லை”

“காவலதிகாரி அவர்களே, அப்படியென்றால் தடை செய்யப்பட்ட புத்தகத்தை வாசித்த குற்றத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்”

“தடை செய்யப்பட்ட புத்த்கங்கள்தானே அதிகம் வாசிக்கப்படுகின்றன. உலகக் கணிணி வலையமைப்பில் உங்கள் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன”

“அப்புறம் எதற்காக என்னை இன்னும் அடைத்து வைத்திருக்கிறீர்கள்?”

“ஒருவேளை உங்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு இருக்கலாம்”

“ நிஜமாகவா?”

“ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. முதலில் இவ்வளவு சித்திரவதைகளுக்குப் பிறகும் உங்கள் மூளை பழையபடியே செயல்படும் விந்தை எப்படி என்று விரிவாக விளக்க வேண்டும். அதைத் தெரிந்தபின்னரே இந்தச் சிறைச்சாலையில் மீண்டும் அந்த தப்பு நடக்காதவாறு துல்லியமாக கண்காணிப்பையும், மனதைச் சிதைக்கும் முறைகளையும் உருவாக்க முடியும்.”

“அவ்வளவுதானா?”

“முதலில் நகத்தைக் கடிப்பதை நிறுத்துங்கள். உடல் முழுக்க உள்ள நடுக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள். அலைபாயும் கண்களைக் குவித்து என்னை என் கண்களை நேராகப் பாருங்கள்”

“சரி”

“இன்னும் ஏன் உடல் பதறிப் பதறி நடுங்குகிறது?”

“அது என் கட்டுப்பாட்டில் இல்லை”

“அப்படியென்றால் எங்கள் சிறைச்சாலை அப்படியொன்றும் மோசமில்லைதான்”

“மோசமில்லைதான்”

“இருந்தாலும் பாருங்கள். பங்குச் சந்தையில் எங்கள் சிறையின் விலை விழுந்துகொண்டே போகிறது. நீங்கள் சொன்ன இளம் செவிலித் திட்டம் எனக்கு மிகவும் உவப்பானதாயிருக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டுமென்பதே இரண்டாம் நிபந்தனை”

“கரும்பு தின்னக் கூலியா என்பது போன நூற்றாண்டின் நல்ல பழமொழிகளுள் ஒன்று”

“இளம் செவிலியோடு எட்டுமணி நேரம் ஒப்பந்தம் செய்துகொள்ள உளவுத்துறை மூலமாக அரசாங்கத்திடமிருந்து உத்தரவு பெறவேண்டியது என் பொறுப்பு. இதை நாம் உத்தேசமாக ‘பரிசோதனை’ என்றழைப்போம். நீங்களிருவரும் அறியாதபடி உங்கள் தனிமையை முழுமையாய் பதிவு செய்வோம். நீங்கள் பரிசோதனையின் முடிவில் உளற வேண்டும். அதாவது உங்களது சிந்தனைகள் எல்லாம் தோற்றுட்டதாக உளறவேண்டும்”

“இதனால் உங்களுக்கு என்ன லாபம்?”

“தேவையில்லாத கேள்வி. இருந்தாலும் பதில் சொல்கிறேன். தத்துவம் மற்றும் அரசியல் கைதிகளை வலுவிழக்கச் செய்வதில் வல்லவர்கள் என்று நாங்கள் இதன் மூலம் நிரூபித்துவிட்டால் அரசாங்க மூலதனம் ஏராளமாய் எங்கள் நிறுவனத்திற்குக் கிடைக்கும். கிடைத்தால் இப்போதைய பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டுவிடுவோம்”

“பொதுவாக இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் என்னுடைய சிந்த்னையையே பல போலிகளை விட்டு உளறச் செய்தால் என்னை வலுவிழக்கச் செய்துவிடலாமே!”

“பொதுவான வழக்கம் அதுதான். ஆனால் உங்கள் சிந்தனைகளை போலிகளை விட்டு உளறச் செய்தால் கூட ஆபத்து”

“அழகியல் அவ்வளவு ஆபத்தானதா?”

“பன்மையை, தரப்படுத்துதலின்னமையை, உணர்வுகளின் புதுவித சேர்க்கையை, பயங்கரங்களை அடித்து நொறுக்கும் துன்பியல் உன்னதத்தை, உணர்வுப் பிரவாகத்தைக் கொண்டாடும் அழகியல் ஆபத்தானதுதான்”

“ஒரு புனிதமான தொனியில் நீங்கள் பேசுகிறீர்கள்”

“பரிசோதனைக்கு ஒப்புக்கொள்கிறீர்களா?”

“பங்கேற்பாளர் இளம் செவிலி 1731 எனும் பட்சத்தில் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்”

“இல்லையென்றால் மாட்டீர்கள்?”

“மாட்டேன்”

“இளம் செவிலி 1731 மேல் காதலா?”

“வழக்கொழிந்த சொல்லை பயன்படுத்துகிறீர்கள்”

“உங்களோடு மோத வேண்டிய அதிகாரியாயிற்றே நான்”

“காதலில்லை, நெக்குருகும் மென்மை”

“இளம் செவிலி 1731ஐ பரிசோதனைக்கு பலிகடா ஆக்குவது பற்றி உங்களுக்கு வருத்தமாக இல்லையா”

“சமூக வழக்கப்படிதானே செய்கிறேன்”

“சமூக வழக்கங்களை ஏற்றுக்கொள்ளாததுதானே உங்கள் சிந்தனைப் பாங்கு!”

“என்னை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதுதானே உங்கள் நிறுவனத்தின் குறிக்கோள்”

“நன்று. பரிசோதனை நாளை ஆரம்பிக்கும்”

“ ஒரு விஷயம். செவிலி 1731 மேல் உங்களுக்கு என்ன கோபம்?”

“அவள்பால் எனக்கு ஏற்பட்ட நெக்குருகும் மென்மையை காண்பிக்க வருடத்திற்கு ஒரு லட்சம் செலாவணிப்புள்ளி கேட்கிறாளே என்பதுதான்”

“ஒருவேளை அந்தப் புள்ளிகளை நான் உங்களுக்குத் தர முடியுமென்றால் நீங்கள் அவளோடு ஒப்பந்தம் செய்து கொள்வீர்களா?”

“நீங்கள் அவளை உண்மையிலேயே காதலிக்கிறீர்கள். அவள் உங்களோடு ஒப்பந்தம் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.”

“இந்தப் பரிசோதனைப் பணத்தை இந்த நிமிடமே உங்களுக்குத் தர சம்மதிக்கிறேன்”

“ நன்றி. ஆனால் வேண்டாம்.”

“ஏன்?”

“ஒருவகையில் நான் அவளை தண்டிக்க நினைக்கலாம்”

“ அவளை நிர்ப்பந்தம் செய்வீர்கள் இல்லையா?

“செய்யலாம். செய்யாமலேயே சம்மதிக்கவும் வைக்கலாம்”

“தேசப்பற்று என்ற பெயரிலா?”

“உங்களுடைய கவலைகள் அனாவசியமானவை”

“அவளை தயவு செய்து துன்புறுத்தாதீர்கள்”

“ஹாஹா.. நமது பேட்டி முடிந்தது. ஒருங்கிணைந்த குடியரசுகள் வாழ்க”

“--------”

“நீங்கள் ஒழிக என்று சொல்லலாம்”

“போடா மயிரே”

----------------------------------

அடி பின்னி எடுத்துவிட்டார்கள். உடலெல்லாம் பிரம்படி போட்டதில் ரத்தம் கன்றி கன்றி நிற்கிறது. ஐயோ இதைக் கேட்பதற்கு யாருமே இல்லையா? நான் என்ன தவறு செய்தேன்? இந்தக் கிழட்டு உடலைப் போட்டு இப்படி வதைக்கிறார்களே இன்னும் என்னிடமிருந்து என்ன எதிர்பார்கிறார்கள்? ஜன்னலை எட்டிப்பார்க்க முயற்சி செய்து தோற்கிறேன். பூவரச தளிர்கள் வாடியிருக்கின்றன. வெகு தொலைவில் வானத்தில் பறவைகள் பறப்பதான தோற்றம் இருக்கிறது. என்னது அது என்று தெரியவில்லை வலியில் என்னுடல் இழை இழையாகப் பிரிந்து கழன்று பறக்கிறது. அதிகாலையில் காணும் மென் சிறகுகள் எல்லாம் பறக்கும் தேள்களாக மாறி உள் அவயங்களைக் கொட்டுவதான பிரேமை. சமூகத்தின் மொத்த தவறுகளுக்காகவும் என்னை தண்டிப்பது என்ன நியாயம்? என்னைக் கேவலப்படுத்தி இவர்கள் எப்படி வாழந்துவிடமுடியும்? நான் அலறமாட்டேன். சிரிப்பேன். வாய்விட்டு, வெறி கொண்டு சிரிப்பேன். என் சிரிப்பின் அலையில் என் உயிரின் இச்சை கலந்து மிதமான சீதோஷ்ணம் போல பரவும். அணு, அணுவாய், துகள்த் துகளாய் கரைந்து இப்பிரபஞ்சம் முழுமையும் நிறைப்பேன். என் வெறிகொண்ட சிரிப்பின் ஆர்ப்பரிக்கும் விகசிப்பில் என் உணர்வுப் பிரவாகத்தினால் என்னை வாழவிடாத இப்பிரபஞ்ச ஒருமையை முற்றிலுமாக சிதைப்பேன். அதன் முதல் கட்டமேயென என்னுடல் இழை இழையாய் பிரிந்து துகள்த் துகளாய் சிதறி உருகி உருகி கரைகிறது...Hyper Sensual Being உருவாகும் கட்டம் வந்துவிட்டது….


“யாரது இந்நேரத்தில்?”

“இளம் செவிலி எண் 1731”

“ என் கண்கள் என்னை ஏமாற்றுகின்றனவா? கனவா? பிரம்மையா?”

“நிஜம்தான். பரிசோதனை தொடங்கிவிட்டது. இப்போதிலிருந்து இன்னும் எட்டு மணி நேரத்திற்கு நீங்களும் நானும் தம்பதிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறோம். அரசாங்கம் இதற்காக மிகப் பெரிய விலை கொடுத்திருக்கிறது”

“இப்போதா? என்னுடைய இந்த நிலைமையிலா? என்னையோ சக்கையாக அடித்து துவைத்துப் போட்டிருக்கிறார்கள்.”

“நீங்கள் தோற்று  உளற வேண்டும் என்பதுதானே நிபந்தனை”

“உளறச் சம்மதித்த பின்னும் அடித்துப் போட்டிருப்பது நியாயமில்லை”

“உங்கள் Theory of hyper sensuous தாந்தரீக சித்தினை இப்போது செயல்படுத்துங்கள் பார்க்கலாமென்பதே சவால்”

“நீ ஏன் இந்தப் பரிசோத்னைக்கு சம்மதித்தாய்? பணத்திற்காகவா?”

“இல்லை”

“என் மேல் பரிவா? காதலா? நட்பா?”

“முதலில் உங்களால் என்ன செய்யமுடியும் என்ற தைரியத்தில் சம்மதித்தேன். ஆனால் அரசாங்கம் வழங்கிய தண்டனையால் சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது நான் உங்கள் சக பயணி. சிறைக்கு வெளியே இருந்து சிந்திக்க இருப்பவள்”

“சபாஷ். ஆனால் இந்தப் பரிசோதனையில் நான் தோற்று உளற உத்தேசமில்லை”

“நீங்கள் ஜெயிக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பமும்”

“நான் ஜெயித்தால் உன்னையும் சேர்த்து தண்டிப்பார்கள்”

“தப்பும் வழி எனக்குத் தெரியும். உங்களைப் போல நான் முட்டாளில்லை”

“பிரமாதம். அப்படியென்றால் ஆரம்பிக்கலாமா? குரலும் வார்த்தைகளுமே என் உடலாகவும் ஆகட்டும்”

“இதோ இருளில் இயங்கும் அல்ட்றா வயலட் காமிராக்கள் இயங்க ஆரம்பித்துவிட்டன. நமது நடவடிக்கைகள் உடனடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன என்ற நினைவிருக்கட்டும்”

“நன்று. சிறு தீபம் ஒன்று ஏற்றி விடு. உனது கூந்தலை அவிழ்த்துவிடு. ஆடைகளைக் களைந்துவிடு. நான் இருளில் நிர்வாணமாகவே இருக்கிறேன்”

“இதோ”

“கடவுளே கடவுளே இந்தப் பேரழகு எனக்கா? எனக்கே எனக்கேவா? இந்த நிலைமையிலா? யாரிடம் போய்ச்சொல்வேன் இந்த வசீகரத்தை? இந்த சௌந்தர்யத்தை ஜோதி என்றழைக்கவா நான்? ஒளியின் கதிர்கள் சர்வ திசைகளிலும் தாபத்துடன் வியாபிப்பது போல வா என்னிடத்தில். நீலம் பாரித்துக் கிடக்கும் இந்த கிழட்டு உடல் உன்னிடத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? உயிரின் இச்சையால் பிறக்கும் வேட்கை அசிங்கங்களோ அச்சங்களோ அறியாதது. உன் மென்மையான கால் கட்டை விரலால் என் முதுகுத் தண்டின் கீழ் நுனியை மிதி. மூலாதாரத்தின் ஜீவ சக்தி ஊற்றுக்கண் திறக்கட்டும். படைப்பியக்கம் அசிங்கங்களை அறியாதது என்பதை நினைவில் கொள். நான் உன் முதுகுத்தண்டின் கீழ் நுனியையும் உன் உந்திச் சுழியின் கீழ் விரியும் பூனை ரோமங்களையும் என் விரல் நகங்களால் மென்மையாக வருட, உன் பிருஷ்டங்கள் ஆனந்தத்தில் சிலிர்த்து அதிர்கின்றன. அடேயப்பா இளமையின் கசிவிற்குத்தான் என்ன வேகம்! பொறு. பொறு. காமவேட்கையில் கண்கள் அதற்குள்ளாக சிவந்துவிட்டனவே! நானோ பெரிய அன்னப்பறவையின் மூர்க்க வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கசிந்து துவண்ட லீடா போல கண்களின் வெள்ளைப்படலம் வெளியே தெரிய உதவியற்றுக் குழைகிறேன். மரப்பட்டை உரித்த பச்சை மரத்தின் ஈரப்பதமும் மென்மையும் நறுமணமும் நம்மைச் சுற்றிக் கமழ்கின்றன. அவசரப்படாதே. பெருமூச்செறியாதே. நானும் தயாராகிக்கொண்டிருக்கிறேன். உன் நீண்ட இமைகளினால் என் அதரங்களை வருடுகிறாய். நான் என் தாடி நுனியினால் உன் கட்கங்களை வருடுகிறேன். உன் முலைக்காம்புகளால் என் வலி நிரம்பிய பகுதிகளுக்கு ஒத்தடம் தருகிறாய்.  நான் இதற்கு எப்படி கைமாறு செய்வேன்? எப்படி என்னை உனக்காக தகுதிப்படுத்திக்கொள்வேன்? தெய்வமே தெய்வமே இந்த கணத்திற்கான நன்றியறிதல் பிரார்த்தனை ஏதும் உளதா? உந்தன் கூந்தலின் மென்மையான சாமர வீச்சில் என் பலவீனங்கள் அனைத்தையும் மீறி ஆவேசமாகிறேன். ஹேய் ஹேய் ஹேய் அதெல்லாம் வேண்டாம். கள்ளமற்ற உன் முகத்தில் குறும்பும் தீர்மானமும் ஏற என்னை பரிகசிக்கிறாய். உன் திண்மையான தசைநார்கள் இறுக்கமாகி வெப்பம் தகிக்கின்றன. நான் முழந்தாளிட்டு உன்னை கைகூப்பி வணங்க நீயோ உன் வலது காலைத் தூக்கி என் தோள் மேல் போடுகிறாய். உன் பின்னந்தொடையின் சூடு என் தோளில் பரவ என் மனமோ முடிவற்று மலரும் மலர்களில் லயிக்கிறது. ஓ இதுதான் இதுதான் இந்த மனோநிலைதான் நமக்கு நினைத்த மாத்திரத்தில் எந்த சமயத்திலும் கைவரப்பெற வேண்டும். நமது இருவருடைய உடல்களும் மற்றவற்றிற்காகத் தாளவொணா தாபத்துடன், காத்து நிற்கும் இம்மனோநிலை, காய்ந்த சருகாலோ, புழுதியாலோ, மலத்தாலோ, மூத்திரத்தலோ, செடியாலோ, கொடியாலோ, காற்றாலோ, கடலாலோ, வானத்தாலோ, நிலாவாலோ, நடசத்திரத்திலாலோ, இதுவாலோ, அதுவாலோ, எதுவாலோ சதா சர்வ காலமும் நமக்கு வாய்க்கப்பெறவேண்டும். Hyper sensuousness. உயிர்ச்சத்து இப்பிரபஞ்சத்திற்கு உணர்ச்சிகரமான ஒருமையை அளிக்கிறது என உணரும்போது, அதில் சதா பங்கேற்கும்போது மனிதன் சுதந்திரவானாகிறான். அவனை யாராலும் தண்டிக்க முடியாது. எதுவாலும் அடக்க முடியாது. ஜோதி! இப்போது ஜீவ சக்தி உன் நாடி நரம்புகளிலெல்லாம் குமிழியிட்டுப் பொங்குகிறது. நான் மல்லாக்க படுத்துக்கொள்கிறேன். என்னை நடுவில் கிடத்தி இருபுறங்களிலும் உன் கால்களை வைத்து நின்று கொள். மெதுவாக முதுகுப்புறமாக பின்னோக்கி வளைந்து உன் கைகளை என் தோள்களில் ஊன்றிகொள். இந்நிலையில் உன்னால் என் பின் சுவரிலுள்ள ஜன்னலையும் அதில் தெரியும் வானத்தையும் பார்க்க முடியும். இரவின் கும்மிருட்டில் ஒளிரும் அந்த ஒற்றை நட்சத்திரத்தின் மேல் கவனத்தைக் குவி. நான் உன்னை நோக்கி மேலே வேகமாய் வரும்போதெல்லாம் நீ நட்சத்திர ஒளியோடு உன்னை அடையாளம் கண்டுகொள். இதோ இந்த நிமிடத்தில் நீயும் நானும் மேகங்களைக் கடந்து அண்டசராசரத்தில் எல்லையின்மை நோக்கி அநாதியாய் ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே, ஜோதியாய் அலைவோமே ஜோதியாய்…”

----------------

பரிசோதனை முடிந்த மறுநாள் இளம் செவிலி 1731இன் அறிக்கைபடி என் ஜன்னலை அடைத்துவிட்டார்கள். நான் என் ஒரு துண்டு வானத்தையும் இழந்துவிட்டேன். ஆனால் கண்களை மூடும்போதெல்லாம் ஜோதியின் மேனி முழு ஆகாயமாய் முடிவற்று விரிகிறது.




















------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: ஸில்வியா என்ற புனைபெயரில் நான் எழுதிய இந்த Futuristic கதை 1995இல் ‘புதிய பார்வை’ இதழில் வெளியானது. இந்தக் கதையைத் தேடிப்பிடித்து எனக்கு அனுப்பித் தந்த ‘குங்குமம்’ இதழ் பொறுப்பாசிரியர் நண்பர் என்.கதிர்வேலனுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  






Tuesday, May 7, 2013

இரவு மணி 11.59 | சிறுகதை








“எனக்குள்ளும் இந்த கதைக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் வகையினமோ அல்ல” என்ற அறிவிப்பு சம்பந்தனை வெகுவாக கவர்ந்தது. அவன்  ‘ஆக்டோபஸ்’ என்ற மெய்நிகர் இரவு விடுதியில்  ஒரு இணைய அவதாரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். ‘ஹாய்! உனக்கு இந்த வாயிலில் பேரதிர்ஷ்டமும் பெருந்துய்ப்பும் காத்திருக்கிறது’ என்று சொல்லி கூடத்தில் தூணுக்குப் பின் மறைந்திருந்த பச்சை வர்ண ஒளித் திரையின் முன் சம்பந்தனை கூட்டிக்கொண்டு வந்து விட்டு விட்டு ஊர்சுளா மேகரேகையாய் குமிழியிட்டு மறைந்து போனாள்.

சம்பந்தன் அன்றுதான் முதன் முறையாக இரண்டரை லட்ச ரூபாய் பந்தயத்தில் வென்றிருந்தான். கடந்த ஒன்றரை வருடமாக சூதாட்டத்தில் இழந்ததோ எட்டு  லட்சம். அவன் வென்று ஒரு நொடி கூட இருக்காது அவன் வென்ற பணத்தை செலவழிக்க ஆலோசனை சொல்ல எட்டு ஒளிமங்கைகள் தோன்றினார்கள். அந்த அஷ்ட மங்கைகளில் பட்டுப்புடவை கட்டி தொப்புளிலும் புருவத்திலும் வளையங்கள் அணிந்திருந்த ஊர்சுளா அவனை வெகுவாகக் கவர்ந்தாள். ஊர்சுளாவின் புருவ வளையத்தில் பல வர்ணக்கோடுகள் சுழலும்போதே சம்பந்தனின்  பார்வை தன் ஒளியுடலில் எங்கெல்லாம் மேய்கிறது என்பதை அனுமானிக்கின்றன என்ற விபரத்தை சம்பந்தன் அறிந்திருக்கவில்லை. ஊர்சுளாவின் தொப்புள் வளையத்தில் சம்பந்தனின் கண்கள் நிலைத்தபோது அவள் விரல்கள் சேலையினை மேலும் அபாயகரமாக கீழே இழுக்க அவளின் கவட்டை எலும்புகளின் மேல் இரு பக்கங்களிலும் இரு வைரக்கற்கள் பளிச்சிட்டன. அஷ்ட ஓளிமங்கைகளில் ஊர்சுளாவைத் தேர்ந்தெடுக்க சம்பந்தனுக்கு அதிக நேரம் ஆகவில்லை.  

உடலின் எந்த பாகத்தில்தான் நகை அணிவது என்று விவஸ்தை இல்லையா என்று தோன்றியபோதே அந்தக் கோணல் வசீகரமுடையது என்றும் சம்பந்தன் நினைத்துக்கொண்டான். ஊர்சுளா தன் இடுப்பு ஒசிய ஒசிய நடந்து வந்தாள். நன்றாக இழுத்துக்கட்டின வயலின் தந்தி போன்று புடவையுள் விறுவிறுத்து நின்ற அவள் உடலும் அவள் மார்புகளின் மேல் படர்ந்த மெல்லிய மேலாக்குக்கு அடியில் ரவிக்கை முடிச்சில் இருந்த சிவப்புக்கல் பத்மத்தின் கர்வமும் அவனை சொக்க வைத்தன. ஊர்சுளாவிடம் சம்பந்தன் கிறங்கிவிட்டதைக் கண்ட இதர சப்த கன்னிகள் ஐய்யோ என்று வாய் பொத்தி ஓவியப் பதுமைகள் போல கரைந்து, எல்லாம் அறிந்த சிரிப்பினை வெளிப்படுத்தியவர்களாய்  ஒளிக்கோடுகளாய் சிதறி, பச்சைப்புள்ளிகளாய் குறுகி, திரையின் எல்லையின்மையில் ஓடி மறைந்தனர். 

வா என் பின்னால் என்று சைகை காட்டிவிட்டு ஊர்சுளா நடக்கத் தொடங்கினாள். அவள் புடவையை கீழிழுத்திருந்ததால் வெளித்தெரிந்த பிருஷ்ட வளைவில் ஆகாய நீல வர்ணத்தில் ஆபரணம் ஒன்று மின்னியது; நீலத்தின் நடுவில் இரவு விடுதிக் கூடத்து விளக்குகளின் பொன் ரேகைகள் ஊடுருவி, விட்டு விட்டு ஒளிர்ந்து, அந்த வளைவின் வாத்சல்யத்தை அதிகப்படுத்தின.  பின் தொடரும் சம்பந்தனைத் திரும்பி ஊர்சுளா பார்த்தபோது அவள் புருவ வளையங்கள் அவனை மேலும் கணித்தன. ஊர்சுளா தன் நாக்கை நீட்டி, கண் சிமிட்டினாள். நாக்கின் நுனியில் ஒரு சிறு முத்து வளையமும், சிமிட்டும்போது மூடிய கண் இமையின் மேல் மீன் ஒன்றும் தோன்றி மறைந்தன. சம்பந்தனின் மனம் ஒரு துள்ளு துள்ளி அடங்கியது. ஊர்சுளாவின் பின்பாகம் அவன் மனத்தின் அடியாழ ஆசைக்கேற்ப மேலும் சிறிது உப்பி அந்த ஆகாய நீல ஆபரணத்தின் அசைவின் போதையை அதிகமாக்கியிருந்தது.

மெய்நிகர் இரவு விடுதி சூதாட்டத்தில் சம்பந்தன் பணம் ஜெயித்தது, ஒளிமங்கைகளில் ஊர்சுளாவிடம் மயங்கியது, அவள் அவனை கடவுசொல்லால் திறக்கும் வாயிலருகே நிறுத்திவிட்டு மறைந்தது எல்லாவற்றுக்குமே மொத்தமாக ஆறு நிமிடம் கூட ஆகியிருக்காது. ஆனால் அதற்குள் கணிணித் திரைகள் அவனைப் பற்றிய அனைத்து விபரங்களையும் சேகரித்துவிட்டன.  
------------------------------

‘ஆக்டோபஸ்’ தகவல் அறிக்கை

பெயர்: சம்பந்தன், முழுப்பெயர்: வெ.திருஞானசம்பந்தன், மெய்நிகர் அவதாரப் பெயர்: சூச்சா, வயது: 27, அசையாச் சொத்து மதிப்பு : 200 கோடி ரூபாய், வங்கியிருப்பு: 88 லட்ச ரூபாய், வங்கி கணக்கு  எண்: 5527643866, கடன் அட்டை எண்: 7766921903464 கடைசியாக கடன் அட்டை பயன்படுத்தி வாங்கிய ஐந்து பொருள்கள்: பால்வெனி ஸ்காட்ச் விஸ்கி, அப்பல்லோ மருந்துக்கடையில் மன அழுத்தம் குறைக்கும் மாத்திரைகள், கலர் பிளஸ் கடையில் ஒரு லினன் சட்டை, நியு ரெசிடென்ஸி ஹோட்டலில் டின்னர், இணைய தள கடையிலிருந்து ‘பாம்பின் விஷம்’. தொழில்: விபரம் சேகரிக்கப்படவில்லை. நோய்கள்: அதீத தனிமை, இணைய அடிமைத்தனம் Internet Addiction Disorder. சமூக வலைத்தளங்களில் பங்கேற்பு: அதிகமில்லை; ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் பிளஸ், லின்க்டின் வலைத்தளங்களில் கணக்கு உள்ளது. ‘ஆக்டோபஸ்’ அங்கத்தினர் விபரம்: இரண்டு ஆண்டுகளாக அங்கத்தினர். பழியாய் இரவு விடுதியிலேயே கிடக்கிறான்.  உடலில் துளையிட்டு அணியப்படும் நகைகள், பச்சை குத்துதல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். நடத்தை: introverted and impulsive. சூதாடித் தோற்றது எட்டு லட்ச ரூபாய். வென்றது இரண்டரை லட்ச ரூபாய். ஆக்டோபஸுக்கு நிகர லாபம்: ஐந்தரை லட்ச ரூபாய். Emotional Intelligence: வெகு குறைவு. காதல் வயப்படக்கூடியன். ஊர்சுளா பிம்பத்திற்கு படியக்கூடிய சாத்தியப்பாடு: 100%

-----------------------------------------

ஆக்டோபஸ் மெய்நிகர் இரவு விடுதி FAQ

ஆக்டோபஸ் மெய்நிகர் இரவு விடுதி ஒரு கலை நிறுவனம்: உங்களால் அதிகப்படியும் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆக்டோபஸ் ஒரு ரகசிய சங்கமா?

ஆமாம். ஆக்டோபஸின் வெளிமுகப்பினை அனைவரும் அடையலாம் என்றாலும் அதன் உள்க்கதவுகள் வெற்றி பெற்றவர்களுக்கே திறக்கும். தோல்வியுற்றவர்களை ஆக்டோபஸ் மன்னிப்பதில்லை; மென்று சக்கையாக வெளித் துப்பிவிடும்.  வெற்றிக்கு பரிசுகளும் அங்கீகாரமும் போலவே தோல்விக்கு தண்டனைகளும் நிராகரிப்பும் உண்டு.

ஆக்டோபஸ் ரகசிய சங்க உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மெய்யுலகில் அறியலாமா?

ஆக்டோபஸ் ரகசிய சங்க உறுப்பினர்கள் தங்களை மெய்யுலகில் அறிந்துகொள்வது அவரவர் அடையும் வெற்றிகளின் உச்சங்களைப் பொறுத்தது. மெய்யுலகின் வெற்றிப்பரிசுகளில் ஆக்டோபஸ் சங்க உறுப்பினர்களை நேரடியாக அறிவதும் ஒன்று. 

ஆக்டோபஸின் நோக்கங்கள் என்ன?

செக்ஸ், மதம், உலகம் முழுவதையும் தன் ஆளுகையில் வைத்திருப்பது- மூன்றையும் கூட்டினால் கிடைக்கும் இன்பத்தினை விட அதிகமான இன்பத்தினை உறுப்பினர்களுக்கு வழங்குவது ஆக்டோபஸின் தலையாய நோக்கமாகும். சூதாட்டத்தை கலையாக வளர்த்தெடுப்பது, கட்டற்ற கற்பனையின் சுதந்திரத்தினை உறுப்பினர்களை அனுபவிக்க செய்தல் ஆகியவை துணை நோக்கங்கள்.

ஆக்டோபஸின் நிறுவன அமைப்பு எத்தகையது?

ஆக்டோபஸ் டிரில்லியன் ரூபாய் கம்பெனி. உச்ச பட்ச இன்பத்தினை அனுபவித்த கலைஞர்களால் நடத்தப்படுவது. ஆக்டோபஸ் என்ற கடல்வாழ் உயிரினத்தின் உடல்கூறுகளுக்கு நிகரான நிறுவன அமைப்பினை உடையது. ஆக்டோபஸிற்கு, உதாரணமாக, பல இதயங்கள். அது போலவே கம்பெனிக்கும் பல நிர்வாக மையங்கள். மைய இதய நிர்வாக அமைப்பு கொடுக்கும் கட்டளைகளை  துணை இதய நிர்வாக அமைப்புகள் நிறைவேற்றுகின்றனவா என்ற அறிக்கையைப் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை. ஆக்டோபஸ் வகைகளில் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று பிற கடல் வாழ் உயிரினங்களைப் போல தன் உருவத்தை போன்மை செய்ய வல்லது; அது எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப கடல்பாம்பாக, சிங்கமீனாக உருவெடுக்குமோ அது போல ஆக்டோபஸ் பன்னாட்டு நிறுவனமாக, அரசு நிறுவனமாக, தொண்டு நிறுவனமாக, மத நிறுவனமாக, அரசியல், அறவியல் அல்லது அறிவியல் செயல்பாட்டு நிறுவனமாக என சூழலுக்கு ஏற்ப நிறுவன வடிவங்களை போன்மை செய்ய வல்லது. ஆக்டோபஸிற்கு பல கால்கள், தோலில் பல நிறங்கள், பல ஒளிர்வுகள்.

உறுப்பினர்களின் அந்தரங்க விபரங்களை ஆக்டோபஸ் பாதுகாப்பாக வைத்திருக்குமா?

நிச்சயமாக வைத்திருக்காது ஏனெனில் ஆக்டோபஸ் தன் உறுப்பினர்களின் அந்தரங்க விபரங்களை சேகரிப்பதேயில்லை. 

ஆக்டோபஸ் செக்ஸ் உள்ளடக்கங்களை வெளிப்படையாகத் தருவது பற்றி…

ஆக்டோபஸ் இன்பத் தொழிற்சாலையின் எதிர்காலம். செக்ஸிற்கு கற்பனையும் கலையும் அவசியம். அம்மாஞ்சிகள், மடிசஞ்சிகள், தொடைநடுங்கிகள், போதகர்கள் ஆகியோருக்கு ஆக்டோபஸ் ஒரு சீர்திருத்தப்பள்ளி.

‘ஆக்டோபஸின் தீய விழுதுக்கரங்கள்’ என்ற உருவகம்  பற்றி……

‘ஆக்டோபஸின் தீய விழுதுக்கரங்கள்’ என்ற உருவகம் புழக்கத்தினால் நைந்து துவண்டு போன உருவகம். அது இப்போதைய ஆக்டோபஸின் சமகாலத்திய செயல்பாடுகளுக்குப் பொருந்தாது. ஆக்டோபஸினை அறிய புதிய கற்பனையும் அதி சுதந்திரமும் வேண்டும். உங்கள் காதலனுக்கு அல்லது காதலிக்கு எட்டு கைகள் இருந்தால் கலவி இன்பம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இன்பமும் ஆசையுமே முதலாளித்துவ ஆக்டோபஸின் திறவுகோல்கள். 2010 உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டுக்களின் போது பால் என்ற சாதரண ஆக்டோபஸ் வரப்போகும் போட்டியில் எந்த அணி ஜெயிக்குமோ அந்த அணியின் நாட்டுக்கொடியை நோக்கி நகர்ந்து வெற்றிபெறபோவது யார் என்று முன்கூட்டியே குறி சொல்லி உலகப்புகழ் பெற்றது நினைவிருக்கட்டும். அந்த ஆண்டு பால் என்கிற ஆக்டோபஸ் குறிசொல்லிக்கு அரசு பாதுகாப்பு தரப்போவதாக ஸ்பானிஷ் பிரதமர் அறிவித்தார். இரானின் அதிபர் அதை மேற்குலகச் சீரழிவின் குறியீடு என்றார். உங்கள் தெரிவு உங்கள் அதிர்ஷ்டம்.

ஆக்டோபஸின் மதிக்கத் தகுந்த பண்பு?

கலவிக்குப் பின் ஆண் ஆக்டோபஸ் இறந்துவிடுகிறது; முட்டையிட்டபின் பெண் ஆக்டோபஸ் இறந்துவிடுகிறது.

இன்றுவரை ஆக்டோபஸ் கட்டிக்காக்கும் ரகசியம்?

இரவு மணி 11.59.

---------------------------------------------------

சூச்சாவை அப்படியே ஊர்சுளா காட்டிய பச்சை வர்ண ஒளித்திரையின் முன் விட்டுவிட்டு திரும்ப யத்தனிக்கையில்தான் சம்பந்தன் அந்தத் திரையின் மேல் எழுதப்பட்டிருந்த ‘மூன்றாவது கண்’ என்ற பெயரைப் படித்தான். மன அழுத்த எதிர்ப்பு சக்தி மாத்திரை ஒன்றை எடுத்து விழுங்கிவிட்டு தண்ணீருக்கு பதிலாய் ஸ்காட்ச் ஊற்றி இரண்டு மிடறு முழுங்கினான். என் அவதாரமாகிய சூச்சா வென்ற இரண்டரை லட்சத்தையும் இழந்தாலும் சம்பந்தனாகிய எனக்கு இனி பாதிக்காது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். ஸ்காட்ச் சம்பந்தனின் தொண்டையில் இறங்குகையில் சூச்சா தள்ளாடுவதை ஆச்சரியத்துடன் கவனித்தான். அவர்கள் என்னைக் கண்காணிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டான். மீண்டும் மீண்டும் அவர்கள் என்னை கண்காணிக்கிறார்கள் என்று சொல்லி சூச்சாவிடம் அது என்ன மாறுதலை உண்டாக்குகிறது என்று பார்த்தான். ஸ்காட்சின் பாதிப்பு நிகழ்த்திய எதிர்வினை போல கண்காணிக்கிறார்கள் என்ற செய்திக்கு எந்த எதிர்வினையும் இல்லை. ‘பாம்பின் விஷ’த்தினை உறையிலிருந்து எடுத்து குறுந்தகடு போடும் பெட்டியில் இருத்திவிட்டு ஆக்டோபஸில் இசை என் கணிணியிலிருந்து என்ற பொத்தானை அழுத்தி தெரிவு செய்தான். ஃப்ரெஞ்சு ஜாஸ் இசையில் ஊகூங் ஊகூங் ஊகூங் என்று விசித்திர கருவி ஒலியெழுப்ப தொடர்ந்து பெரிய அண்டாவின் அடியிலிருந்து வெளியேறும் நீர்க்குமிழிகள் என சப்தங்கள் ஒலித்தன.

ஆக்டோபஸின் அரங்கு ஜாஸ் இசைக்கேற்ப அதிர்ந்தது. மூன்றாம் கண்ணின் திரையிலிருந்து நீர்க்குமிழிகள் வெளிப்பட்டு இசைக்கேற்ப ஐய்யோடா என்று வெளிப்பட்டு ஓடின. நீர்க்குமிழிகளுக்குள் ஊர்சுளா மாட்டிக்கொண்டு ஓடி ஓடி மறைந்தாள். ஒரு குமிழி சூச்சாவின் நெற்றியில் மோதி உடைய இரிராரோவ் என்று பெண்ணின் குரலொன்று பலமைல்களுக்கு அப்பால் ஒலித்தது.

சம்பந்தன் அம்மாவின் கால்களில் கைக்குழந்தையாய் குப்புறக்கிடந்தான். எண்ணெய்ப் பிசுக்கு போக அம்மா அவனைத் துடைத்துகொண்டிருந்தாள். குழந்தை பொக்கை வாயைக் காட்டி கன்னங்கள்  குழிய சிரித்துக்கொண்டிருந்தது.  திடீரென்று வாணம் ஒன்று மேல் நோக்கி சீறிச்சென்று ஆகாயத்தில்  வெடிக்க அதிலிருந்து நாலைந்து வகை நிறப் பொறிகள் மலர்களாய் மிதந்து, குடை கவிழ்ந்து, அவிந்தன. 

கணிணித் திரையை சம்பந்தன் இரண்டாய் பிரித்து வைத்துக்கொண்டான். வலது பகுதியில் ஆக்டோபஸ் ஜன்னலை நிறுத்தினான். இன்னொரு உலவியை இடது பகுதியில் திறந்து அதில் கூகுளில் ‘பாம்பும் பல்லியும் அல்லாத ஊர்வன’ என்று தேடினான். மூன்றாம் கண் ‘ஏதோ தவறு ஏதோ தவறு’ என்று அலறல் செய்தியை வெளியிட்டது. சூச்சா வெளியே தூக்கி வீசப்பட்டான். இசை நிறுத்தப்பட்டது. ஆக்டோபஸ் அறிக்கை சம்பந்தனின் வெற்றிப் பணத்தில் 25000 ரூபாய் விளையாட்டு விதிகளை மீறியதற்கு அபராதமாய் விதிக்கப்பட்டிருப்பதாய் தெரிவித்தது. 

“ நான் என்ன விதியை மீறினேன்?’

“மூன்றாம் கண் கடவுச்சொல்லை அறிய கூகுளில் ‘பாம்பும் பல்லியும் அல்லாத ஊர்வன என்று தேடினாய்”

அவர்கள் கண்காணிக்கவில்லை என்று நினைத்தோமே என்று சம்பந்தன் தன்னைத் தானே நொந்துகொண்டான். ஆக்டோபஸ் Foul Card ஒன்றினைத் தூக்கிக் காண்பித்தது.

“ஆக்டோபஸிற்கு விளையாடுதலின் புனிதம் முக்கியமானது. ஆக்டோபஸின் மூளை பாலூட்டிகளின் மூளையைவிட அதிக சக்தியும் திறனும் வாய்ந்தது. மெய்நிகர் உலக யதார்த்தத்தின் பிதாமகர்களுள் ஒருவரான ஜரோன் லானியர் ஆக்டோபஸ்கள் விளையாட, மனிதர்கள் செல்லப்பிராணிகள் என்று ஆக்டோபஸ்களின் மூளைத் திறனை வர்ணித்திருக்கிறார்”

“சரி. மூன்றாம் கண்ணின் திரை வாயிலுக்கு மீண்டும் செல்ல நான் என்ன செய்யவேண்டும்?”

“அதற்கு ரூபாய் 25,000 கட்டணம்”

“சரி, எனக்கு ஊர்சுளாவின் மெய்யுலகத் தொடர்பு வேண்டும்”

“அதற்கு ஆக்டோபஸிற்கு கட்டணம் ரூபாய் 50,000 ஊர்சுளாவிற்கு ரூபாய் 50,000”

“சரி. ஆனால் நான் இப்போது விளையாட்டைத் தொடர விரும்பவில்லை”

“அது உங்கள் இஷ்டம். மீண்டும் உறுதிப்படுத்துங்கள். நீங்கள் வென்ற தொகை இரண்டரை லட்சம் அதில் அபராதம் 25000, மீண்டும் மூன்றாம் கண் திரைக்குச் செல்ல அனுமதிக் கட்டணம் 25,000, ஊர்சுளாவின் மெய்யுலக தொடர்பு விபரத்திற்கு ஆக்டோபஸிற்கு 50,000, ஊர்சுளாவுக்கு 50,000. போக உங்களிடம் விளையாட தற்போது உள்ள தொகை ஒரு லட்சம். சரியா?”

“சரிதான். உறுதிப்படுத்துகிறேன்.”

“ஒரு லட்சத்திற்கு மேலும் பணம் கட்ட விரும்புகிறீர்களா?”

“இப்போது இல்லை. இது தீர்ந்தால் பார்க்கலாம்”

“உங்களுக்கு பேரதிர்ஷ்டமும் பெருந்துய்ப்பும் வாய்க்க வாழ்த்துகள். ஆக்டோபஸைப் பயன்படுத்தியதற்கு நன்றி”

கணிணித் திரை வெறுமையானது.

------------------------

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடும் மையத்தில் சம்பந்தன் ஊர்சுளாவுக்காகக் காத்திருந்தான். அதிக இரைச்சலும் கூட்டமும் இருக்கும் இடத்தில் தன்னைக் கண்காணிப்பவர்கள் குறைவாக இருப்பார்கள் என்பது அவன் எண்ணம். ஃபேப் இண்டியா பருத்தி குர்தாவும் பாட்டியாலா பைஜாமாவும் அணிந்து நகைகள் எதுவும் இல்லாமல் நவீன நடனக்கலைஞர் போல மெதுவாக நடந்து வந்த ஊர்சுளாவுக்கு மஞ்சள் லினன் சட்டை அணிந்து ஓரமாக குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்த சம்பந்தனை அடையாளம் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகவில்லை. எதுவும் பேசாமல் ஊர்சுளா கையிலிருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து காகிதத்தைக் கிழித்து அதில் “உங்கள் ஃபோன், ஐபேட் வேறு ஏதேனும் கருவிகள் இருந்தால் அனைத்தையும் மின்சாரத்தைத் துண்டித்து அணைத்துவிடவும்” என்று எழுதிக்காண்பித்தாள். சம்பந்தன் தன்னுடைய ஃபோனையும் ஐபேடினையும் அணைத்தான்.

“ஹாய் சூச்சா!”

“நான் சம்பந்தன். ஹாய் ஊர்சுளா!”
“நான் அம்முலு. நீங்கள் வியாபார நிமித்தம் பார்க்கவேண்டும் என்று சொன்னதினால்தான் உடனே வந்தேன். என்ன வியாபாரம்?”

மாநிறத்தில் எந்த அலங்காரமும் நகையும் இல்லாமல் அம்முலு பளிச்சென்று இருந்தாள். 

“நீங்கள் ஆக்டோபஸ் ஊழியரா?”

அம்முலு சில விநாடிகள் யோசித்தாள். 

“உங்கள் ப்ரொஃபைலை முழுமையாக ஆய்வு செய்துவிட்டதால் தைரியமாகச் சொல்கிறேன். ஆமாம் நான் ஆக்டோபஸ் ஊழியர்தான்”

“ம்ஹ்ம், நான் அப்படித்தான் யூகித்திருந்தேன். நான் எட்டு லட்சம் இழந்துவிட்டேன். ஜெயித்த இரண்டரை லட்சத்தில் மீண்டும் ஒன்றரை போய்விட்டது. விட்டதை பிடிக்க வேண்டும். மேலும் கொஞ்சம் ஜெயிக்கவேண்டும். அப்புறம் ஆக்டோபஸை விட்டு ஓடியே போய்விடுவேன். இதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்”

“இங்கே ஒரே இரைச்சலாக இருக்கிறது. பேசிக்கொண்டே நடக்கலாம்”

அம்முலுவுக்கு சம்பந்தன் தன்னை வேறு காம நோக்கங்களுக்காக அழைக்கவில்லை என்பது ஆறுதலாகவும் ஆச்சரியமாகவும் ஏன் ஏமாற்றமாகவும் கூட இருந்தது. அவன் தன் மேல் நூறு சதவீதம் காதல் வயப்படக்கூடிய சாத்தியம் உள்ளவன் என்ற ஆக்டோபஸ் ஆய்வறிக்கை அவளுடைய உள் மனதில் குறுகுறுப்பாக இருந்தது. அவர்கள் ஃபீனீக்ஸ் மார்க்கெட் சிட்டியின் உணவுக்கூடத்தில் ஒதுக்குப்புறமான பால்கனி மேஜையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தார்கள். வெளியில் கோடையின் வெப்பம் இரவு ஏழு மணிக்கும் கடுமையாக இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் வியாபாரத்தையே பேசிக்கொண்டிருந்தது அவர்களை சீக்கிரமே நல்ல நண்பர்களாக மாற்றியது. ஆக்டோபஸில் எழுபது லட்சத்தை எப்படி சூதாடி வெல்வது என்றும் அதை எப்படி ஆளுக்குப் பாதியாக ரகசியமாகப் பிரித்துக்கொள்வது என்றும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அம்முலு தான் இணையத் தொடர்பில்லாமல் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்க இயலாது என்றும், இணையத் தொடர்பில் வந்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் சொல்லிவிட்டு சீக்கிரமே பிரிந்து போய்விட்டாள். இரண்டாம் சந்திப்பில் அம்முலு சம்பந்தனை ஆக்டோபஸ் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யச் சொன்னாள். 

-----------------------------

“மரணத்திற்கு நிகரான அனுபவங்களே உச்ச பட்ச துய்ப்பு அனுபவங்கள்” என்று சம்பந்தன் ஆக்டோபஸ் பற்றிய ஆராய்ச்சி குறிப்பில் எழுதினான். அவன் அம்முலுவின் வருகைக்காக வேளச்சேரி ‘காஃபி டே’யில் காத்திருந்தான். இன்று பதினோரு மணிக்குள் மூன்றாம் கண் திரை வாயிலுக்கு வராவிட்டால் அவன் கட்டணம் காலாவதி ஆகிவிடும் என்று அவனுக்கு அன்று காலை செய்தி வந்திருந்தது. அதன் நிமித்தமாகவே அம்முலுவை அவன் சந்திக்க விரும்பினான். வீட்டில் இருந்த கணிணி, மற்ற கருவிகள் எல்லாவற்றையும் இணைய தொடர்பில் வைத்துவிட்டு வந்திருந்தான். ஆக்டோபஸ் அவன் இணையத்தில் உலவிக்கொண்டிருப்பதாகவே கண்காணித்துக்கொண்டிருக்கும் என்று அவன் நினைத்துக்கொண்டான். அம்முலு அவனுக்கு ஆக்டோபஸின் கண்காணிப்பினை திசை திருப்புவதற்கு பல துப்புகள் கொடுத்திருந்தாள். இணையத் தொடர்புள்ள கருவிகளை வெளியே எடுத்து வராமலிருப்பது, தான் உண்மையில் பயன்படுத்தும் பொருட்களை கடன் அட்டையில் வாங்காமல் பேப்பர் பணத்தைக் கொடுத்து வாங்குவது, தன் அந்தரங்க விவகாரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருப்பது, தவறான தகவல்களை வெளியிட்டு தன்னைப் பற்றி யதார்த்தத்திற்கு சம்பந்தமில்லாத பிம்பத்தைக் கட்டமைப்பது என்று அம்முலு கொடுத்த அத்தனை குறிப்புகளையும் செயல்படுத்தியிருந்தான். இருந்தாலும் அம்முலுவை சம்பந்தனும், சம்பந்தனை அம்முலுவும் முழுமையாக நம்பினார்கள் என்று சொல்ல முடியாது. 

அம்முலு வந்ததும் வராததுமாக சம்பந்தன் “மூன்றான் கண்ணுக்கு பாஸ்வேர்ட் என்ன?” என்று கேட்டான். அம்முலு புதியதாய் ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தாள். தலமுடியை பாந்தமாய் உயர பூங்கொண்டை போட்டு கட்டியிருந்தாள். அவளைப் பார்ப்பவர்கள் எவருமே அவள் ஒரு சூதாட்டக்கம்பெனியின் போன்மையுரு ஊழியர் என்று சொல்லவே முடியாது என்று சம்பந்தன் தனக்குள் நினைத்துக்கொண்டான். கண்ணாடி வழியே அவனைத் தீர்க்கமாகப் பார்த்த அம்முலு “Tuatara” என்றாள்.

“வாட்?”

“ Tuatara என்பது நியுசிலாந்தில் வாழும் பல்லி போன்ற உயிரினம்”

“ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன். ஆக்டோபஸ் ஒரு கேளிக்கை சூதாட்ட கம்பெனியா இல்லை ஒரு மிருகக்காட்சி சாலையா?

“மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்போதெல்லாம்? டுவாடாராவுக்கு மூன்றாவது கண் உண்டு. அதனால் மூன்றாம் கண் கொண்டு ஓளியையும் நிழலையும் கண்டறிய முடியும். மூன்றாம் கண்ணுக்குள் நுழைந்த பின் உன்னாலும் ஒளியெது, நிழலெது என்று உன்னால் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் நீ விளையாட்டில் ஜெயித்துவிடலாம்.”

“இவ்வளவுதானா?”

“டுவாடாராவுக்கு நிழலும் ஒளியும் என்றால் மனிதர்களுக்கு நினைவும் நிகழ் காலமும்” 

“வாவ். அது நல்ல விளையாட்டுத்தான். ஆனால் ‘இரவு மணி 11.59’ என்பதன் ரகசியம் என்ன?”

அம்முலு ஐஸ் தேநீரை சத்தமாக உறிஞ்சினாள். “ நினைவும் நிகழ்காலமும் தொடர்ந்து விளையாடும்போது மனித மனத்திற்கு மரணத்திற்கு நிகரான இன்ப அனுபவம் கிடைக்கிறது. அந்தத் தருணத்தை ஆக்டோபஸ் ‘இரவு மணி 11.59’ என்று அழைக்கிறது.”

சம்பந்தன் ஒரு சில விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தான். 

“ஆக்டோபஸ் சூதாட்டத்தில் இறந்து போனவர்களும் உண்டா?”

“அதிலென்ன சந்தேகம்? ஆனால் அவர்கள் அதீத இன்பத்தின் உச்சம் தாங்க முடியாமல் இறந்து போகிறவர்கள். கலவியில் ஈடுபடும் ஆக்டோபஸ் போல.”

சம்பந்தனுக்கு தான் கைக்குழந்தையாய் அம்மா முழங்காலில் கிடந்தது போன தடவை ஆக்டோபஸ் விளையாட்டின் போது காட்சியாய் தோன்றியது நினைவுக்கு வந்தது. 

“அது சரி போட்டியில் ஜெயித்த பிறகு என் பங்கு பணத்தை எப்படி கொடுப்பாய்?”

சம்பந்தன் தான் கொண்டுவந்திருந்த பிராமிசரி நோட்டு பத்திரங்களை அவளிடம் காட்டினான். 
“விளையாட்டு முடிந்த பின் நான் உயிரோடு இருந்தால் இவை செல்லுபடியாகும்”

அம்முலுவின் முகத்தில் இளநகை அரும்பியது. “எவ்வளவு பந்தயம் கட்டப் போகிறாய்?

“எண்பது லட்சம்”

‘உன்னுடைய வங்கியிருப்பு மொத்தத்தையுமா?”

“ஹா ஆக்டோபஸ் அந்தரங்க விபரங்களை சேகரிப்பதில்லை என்று நினைத்தேனே!”

“பதினோரு மணிக்கு இன்னும் இரண்டு மணி நேரங்களே இருக்கிறது”

“கடைசி ஆலோசனை என்ன?

“ நீ வேறு உன் போன்மையுரு சூச்சா வேறு என்று எப்போதும் நினைவில் வை”

அம்முலு இடுப்பு ஒசிய ஒசிய நடந்து செல்வதை சம்பந்தன் பார்த்திருந்தான்.

-------------------------

“ நல்வரவு சூச்சா. இதோ நீங்கள் விரும்பிய மூன்றாவது கண்ணின் திரை வாயில். உள்ளே நுழைந்து விளையாடுவது உங்கள் சாமர்த்தியம்”

“நல்வரவு சூச்சா. எனக்குள்ளும் இந்தக் கதைவிளையாட்டுக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் இனமோ அல்ல.”

சம்பந்தன் “Tuatara” என்று தட்டச்சு செய்தான். மெய்நிகர் இரவு விடுதி ஆக்டோபஸ் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. மூன்றாம் கண்ணின் இமை வாசலாய் சட்டென்று திறந்து புது உலகம் காட்டத் தயாரானது. யாரோ இரவு மணி பதினொன்று என்று சொன்னார்கள்.

“எவ்வளவு பந்தயம் கட்டப் போகிறீர்கள்?”

“விளையாட்டு என்ன?”

“ உங்களுக்குப் பிடித்த போன்மையுருவின் உடல் ஆபரணங்களை அகற்றி காப்பாற்றவேண்டும்”

“ஃபூ இவ்வளவுதானா. பந்தயம் எண்பது லட்ச ரூபாய்”

“மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திவிட்டு பணத்தைக் கட்டுங்கள்”

சம்பந்தன் ஒற்றைக் கிளிக் முறையில் தன் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கட்டினான்.

-----------------------------------------

மூன்றாவது கண்ணின் திரைக் காட்சிகள் மாறின. சூச்சா சம்பந்தன் கலர் ப்ளஸில் வாங்கிய லினன் சட்டையைப் போட்டுக்கொண்டு தானியங்கிப்படியில் மேலேறிக்கொண்டிருந்தான். பெண் போன்மையுருக்கள் கீழ் நோக்கிச் செல்லும் படியில் சென்றுகொண்டிருந்தன. நட்சத்திரக்குவியல்களுக்கிடையே நிலவு போல ஊர்சுளாவின் முகம் தென்பட்டதுதான் தாமதம் சூச்சா அவளைக் கையைப் பிடித்து சட்டென்று தூக்கி மேலேறும் படிக்கட்டில் தன்னோடு சேர்த்து நிறுத்துகிறான். அவள் ‘மெதுவாக, மெதுவாக, இந்த முரட்டுத்தனம்தானே வேண்டாம் என்கிறது” என்று சிணுங்கியபடியே அவனுடன் வருகிறாள். படிக்கட்டுகள் மேலேறிப் போய்ச் சேர்ந்த இடத்தைப் பார்த்தவுடன் சம்பந்தன் பெரும் அதிர்ச்சி அடைந்தான். அந்த இடம் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள பால்கனி. எந்த இடத்திற்கு அம்முலுவோடு ஆக்டோபஸிற்குத் தெரியாமல் தாங்கள் ரகசியமாய் வந்ததாய் சம்பந்தன் நினைத்துக்கொண்டிருந்தானோ அந்த இடம்! சூச்சா ஊர்சுளாவை நோக்கி ஆங்காரத்துடன் கத்தினான் “ நாம் சந்தித்தது எப்படித் தெரியும் இவர்களுக்கு?” ஊர்சுளாவின் உடல் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் மூக்கில் அணிந்திருந்த புல்லாக்கில் அஸ்தமன சூரியனின் கதிர்கள் ஜாலம் காட்டின. யாரோ ‘காதோடுதான் நான் பேசுவேன்” என்ற சினிமாப் பாடலை குழைந்து குழைந்து பாடிக்கொண்டிருந்தார்கள். சூச்சா ஆவேசமாய் ஊர்சுளாவின் புல்லாக்கினை பிடிக்கப்போக அவன் கைககளில் பல்லியொன்றின் அடிப்பாகத்தைத் தொட்டது போல பிசுபிசுத்தது. அருவருப்பில் சம்பந்தனுக்கு நினைவு தப்பியது. அம்மா அவனை ஒரு இருட்டு கொட்டடியில் போட்டு பூட்டிவிட்டு வெளியே நின்று  “மாப்பு மன்னிப்பு சொல்லு மாப்பு மன்னிப்பு சொல்லு” என்று கத்திக்கொண்டிருந்தாள். சம்பந்தனின் காலடியில் பாச்சாக்களும் பல்லிகளும் ஊர்ந்துகொண்டிருந்தன. உதட்டைப் பிதுக்கி அழுகையை அடக்கியவாறு சம்பந்தன் நின்றுகொண்டிருந்தான். இருட்டுக்கொட்டடி கொஞ்சம் கொஞ்சமாய் பயத்தை அதிகமாக்க சம்பந்தன் மெதுவாக ‘மாப்பு மன்னிப்பு’ என்கிறான். அம்மா அவனை வெளியே இழுத்து தலையில் நறுக்கென்று குட்டி ‘போய்த்தொலை’ என்கிறாள்.

சூச்சா சுதாரித்தபோது அவனும் ஊர்சுளாவும் சௌகரியமாய் ஃபீனிக்ஸ் சிட்டி பால்கனியில் உட்கார்த்திருந்தார்கள். ஊர்சுளா பால்வெனி ஸ்காட்ச் விஸ்கியை ஒரு கண்ணாடி டம்பளரில் ஊற்றி அவன் கையில் கொடுத்து ‘ரிலாக்ஸ்’ என்று கூறி புன்னகைத்தாள். அவள் மூக்கிலிருந்த புல்லாக்கைக் காணோமே என்று சம்பந்தன் நினைத்திருக்கையில் ஊர்சுளா அம்முலு அணிந்திருந்த அதே பாட்டியாலா பைஜாமாவையும் ஃபேப் இண்டியா குர்தாவையும் அணிந்திருப்பதை கவனித்தான். சூச்சா ‘அடி கிராதகி’ என்று தன் கையில் இருந்த ஸ்காட்சை அவள் மேல் விசிறியடித்தான். ஸ்காட்ச் ஊர்சுளாவின் குர்தாவை நனைக்க அவள் கோபமாகத் தன் குர்தாவைக் கழற்றி வீசி எறிந்தாள். அவளுடைய பொன்னிற முலைக்காம்புகளில் இரு வைடூரிய ஆபரணங்கள் மின்னின. ஊர்சுளா சூச்சாவை இறுகத் தழுவி இதழோடு இதழ் பொருத்தி அவன் கைகளைப் பிடித்து தன் மார்புகளில் தவழவிட்டாள். அவன் காதுகளில் ‘எண்பது லட்சமும் எனக்குத்தான்’ என்றாள். சூச்சாவின் விரல்கள் அவளுடைய முலைக்காம்பு ஆபரணங்களை கழற்றியபோது அவன் கைவிரல்களில் கம்பளிப்பூச்சிகள் ஊர்ந்தன. சம்பந்தன் அந்தப் பெரியவரின் மீசை கம்பளிப்பூச்சி போல இருப்பதாக நினைத்தான். அந்த கம்பளிப்பூச்சி மீசைக்குள் கோணலாய் அவர் புன்னைகைத்துக்கொண்டே “உங்கள் அப்பா பெரிய அரசியல் தலைவர்தான் தம்பி. ஆனால் உங்களுடையது அவ்வளவும் ஊழல் பணம். ஊரை, நாட்டைக் கொள்ளையடித்தது” என்கிறார். ஓரு பெரிய உறையூர் சுருட்டைப் பற்ற வைத்துக்கொள்கிறார். வட்ட வட்டமாய் அறை முழுக்க புகை விடுகிறார். 

“நீ ரொம்ப ஆயாசமாய் இருக்கிறாய். கொஞ்சம் ஐஸ் தேநீர் குடி, இந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்”  என்று ஊர்சுளா சம்பந்தன் வழக்கமாய் எடுத்துக்கொள்ளும் மன அழுத்தத்திற்கான மாத்திரையை சூச்சாவிடம் நீட்டினாள். சூச்சா மாத்திரையினை நீட்டிய கையில் ஒரு ஆக்டோபஸ் பச்சை குத்தப்பட்டிருப்பதைப் பார்த்தான். அவன் மனதை கடுமையான கசப்புணர்வும் அழுகையும் தோற்றுவிட்ட அவமானமும் பீடித்தன. ஊர்சுளாவின் நீட்டிய கையை சூச்சா அப்படியே பிடித்து முறுக்கி   “பாவி பாவி” என்று கதறினான். ஆக்டோபஸின் விழுதுக்கரங்களுள் ஒன்று சூச்சாவின் குரல்வளையை இறுக்கி அவன் தலையை அறுத்து எறிந்தது. சூச்சாவின் அறுக்கப்பட்ட தலை ரத்தம் பீறிட, கண்கள் சொருக, நாக்கு வெளித்தள்ள தரையில் உருண்டு சென்றது. அப்போது இரவு மணி 11.59.