Sunday, February 26, 2012

மக்கா! இருக்கியா?

மு வுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே ஊரிலிருந்து ஃபோன் வந்து விட்டது.
“ மக்கா! இருக்கியா?!”
“இருக்கேங்”
“என்ன அணக்கத்தையே காணோம், நானும் நாலஞ்சி வாட்டி கூப்டேன் பீப் பீப்புன்னு சத்தந்தானடே வருகு?”
“வேல ஜாஸ்தி. ஃபோனுக்கு டாப் அப் பண்ணல”
“கனெக்சன் புடுங்கிட்டானா? புக்கு என்ன ஆச்சு?”
“எந்த புக்கு?”
“வோ அதுவா, சவத்து மூதிய விட்டுத் தள்ளுங்க”
“ஹே நல்ல டைட்டில்லா இப்டி விட்லாமா? ஆரோ ஒரு பியூனு காசு புடுங்கப் பாக்கான்னியே அதனாலியா?”
“எந்தப் பியூனு?”
“அதாம்பா அந்த எட்டாங்கிளாஸ் தோத்த பய”
“வோ, அவனா? நாந் தப்பா சொல்லிட்டேன் அவன் பழைய எஸ்ஸெஸ்ஸி பாசாம். சர்டிஃபிகேட்லாம் இருக்காம்”
“பொய் பொய்யாட்டு சொல்லி குண்டில கரண்டு கம்பிய வச்ச மாரில்லா துள்ளுகான் அப்டின்ன”
“இன்னும் துள்ளிகிட்டுதான் கிடக்காங்”
“ என்ன சொல்லுகாங்?”
“ முன்னால என் கோமணம் துவைச்சான்னு சொன்னானில்லையா”
“சொன்னானா! அப்டியா! நீ இன்னும் கோமணமாடே கட்டுக?”
“அவன் கட்டுகாங் போலுக்கு அதனால நானுங் கட்டுகேங்கான்”
“ சரி, நல்லா கசக்கி பிழிஞ்சு துவைச்சானா?”
“அப்டிதாங் சொன்னாங்”
“ நல்லா துவைக்க தொழிலு பாப்பானோ?”
‘இல்ல இலக்கிய விமர்சனமாம்”
“எது?’
“கோமணங் கசக்ககு”
“வோ”
“இப்போ ஆர் ஆரு ஒளுங்கா கழுகுதான்னு பாக்கானாம்”
“அய்யே! இது என்னவாம்?”
“இது சமூக விமர்சனமாம்”
“எது? ஒவ்வொருத்தனயா மோந்து மோந்து பாக்கதா?”
“அப்டிதாங் சொல்லுகாங்”
“ஒரு பாடு கஷ்டம் உண்டும்”
“ஆருக்கு?’
“அவன் மூக்குக்குத்தாந்”
“வோ”
“கிடக்காங் மயிராண்டின்னு விடுடே. சோலியப் பாப்பியா”
“அப்டிதான் எல்லாருஞ் சொல்லுதாக. ஆனா நாந்தான்
“வேப்பில அடிச்சு பாக்கியாக்கும்? இதெல்லாம் தேறாத கேசுடே. நம்ம பண்டாரவிளை நாடார்கிட்ட கூட்டுப்போவோமா?”
“எதுக்கு?”
“சில சமயம் சுளுக்கெடுத்துவிட்டா மெண்டெலு சரியாகிடும் பாத்துக்க”
“சொன்னா ஒருபாடு கூப்பாடு போடுவானே. கூடவே கும்மியடிக்கக் குட்டிப் பிசாசுக் கூட்டம் வேற இருக்கு பாத்துகிடுங்க”
“ நம்ம தெக்கூட்டுப் பயல் கிடந்தானில்லையா, அவனெ இப்படித்தான் கெட்ட ஆவி பிடிச்சு ஆட்டிச்சு பாத்துக்க. ஓன் ஆளு மாரியே நாக்க துருத்துகான், கண்ண உருட்டுகான், காஞ்சனா பட ராகவேந்திரா லாரண்ஸ் கணக்கா பல்ல கடகடன்னு நெறிக்கான், கடிக்கான்.  துண்ணூரு போட்டு பாத்தது, உடுக்கடிச்சு பாத்துச்சு
“ம்ஹ்ம், அப்றம்”
“உடுக்கடிக்கு டிரம்முன்னா டிரம்மு எம்ட்டி டிரம்முன்னு பதிலுக்கு ஆடுகான் பாத்துக்க”
‘ம்ஹ்ம்”
“அற்புத ஆவி எளுப்புதல் கூட்டத்துக்குபோய்தான் சரியாச்சு”
“வோ”
“ஒன் ஆளும் வார்த்த பேசுகானில்லையா”
“பின்னெ, அதில் அவன் ஸ்பெஷலிஸ்டாக்கும்”
“கட்டு விரியன் பாம்புகளே மனந்திரும்புங்கள் சுவிசேஷ ஜெபம் இருக்கில்லா அத ஓதிப் பாரேன்”
“ப்ச்சு. சும்மாவே காண்ட்டுன்னா கண்ட்டுங்கான், தெரிதான்னா தெர்தாங்கான், இதுல சுவிசேஷம் வேறயா”
“வலுத்த கேசாட்டுல்லா இருக்கு. வேற வழியேஇல்ல. பேய பேயேதான் சொஸ்தப்படுத்தும் பாத்துக்க. காஞ்சனா படமிருக்கில்லா அதயே பத்து தடவ பாத்து அது மாரியே ஆடச் சொல்லு. எல்லாஞ் செரியாயிடும். சேசுவுக்குத் தோத்திரம். வைக்கட்டா”
“சரி”




Friday, February 24, 2012

வேளச்சேரி சம்பவம் 8

நாங்கள் வசிக்கின்ற வேளச்சேரியில் வங்கிக்கொள்ளையர் என்று கருதப்பட்ட இளைஞர்களை⁠1 நேற்று போலீஸ்காரர்கள் சுட்டுக்கொன்ற செய்தியினை தொலைக்காட்சியில் இன்று காலை பார்த்த என் மனைவி பயமும் தாளவொணா சோகமும் அடைந்திருந்தாள். ஆதிவாசி சமூகத்தைச் சார்ந்த அவளுக்கு அவளறிந்த பகுதிகளில் ராணுவமும் போலீசும் நுழைந்து சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளும் சம்பவங்களின் ஞாபகங்களை இது கிளர்த்தியிருக்க வேண்டும். சென்னையும் இந்தியாவின் அடர்கானகப் பகுதியாகிவிட்டதா என்பது மட்டும் அவள் கேள்வியாய் இருக்கவில்லை; கொல்லப்பட்ட இளைஞர்களின் அப்பா அம்மா எங்கே, அதில் ஒருவர் மாணவராமே, வேளச்சேரி மக்கள் எல்லோரும் ஏன் சம்பவ இடத்தில் குழுமவில்லை, ஏன் எதற்காக இப்படி நடந்தது என்று ஏன் போலீசார் ஜீப்பில் மெகாஃபோனோடு வந்து வேளச்சேரி வாழ் மக்களுக்கு விளக்கம் சொல்லவில்லை, வங்கி கேமராவில் பதிவாகியிருந்த யாராய் இருந்தாலும் சுட்டுக் கொன்று விடலாமா என்று அவளுக்கு பல கேள்விகள்.

செய்தியைப் பார்த்து ஒரு விதப் பதற்றத்திற்கு ஆளாகியிருந்த எனக்கு அவளின் தொடர் கேள்விகள் என் மனக் கலக்கத்தினை அதிகப்படுத்தின. சில பல வருடங்களுக்கு முன்பும் வெள்ளத்தில் வேளச்சேரி மூழ்கியபோது நிவாரண உதவியைப் பெற பக்கத்து பள்ளிக்கூடத்திற்கு சென்ற பலர் நெரிசலில் சிக்கி இறந்தபோதும் இப்படித்தான் கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்டுத் துளைத்தெடுத்தாள்.

அக்கம்பக்கம் சம்பவம் பற்றி எதுவுமே கவலைப்படாதது போல நான் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தது வேறு அவளை வெகுவாக உறுத்தியிருக்க வேண்டும். சதா கணிணி முன்னாலோ, தண்டி தண்டி புத்தகங்களைத் தூக்கி வைத்துக் கொண்டோ உட்கார்ந்திருக்கிறாயே அந்தப் புத்தகங்கள் எல்லாம் இந்த மாதிரியான சமயத்தில் நீ என்ன செய்யவேண்டும் சொல்லவில்லையா என்றாள்.

நான் படித்த தத்துவமும் இலக்கியமும் ஏன் என் மனசாட்சியுமே இந்த மாதிரியான சம்பவம் நடைபெற்றதற்கு அழவேண்டும், துக்கப்படவேண்டும், தெருவில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என்றுதான் சொல்கின்றன என்றேன் அவள் கண்களைப் பார்த்து. ஆனால் நான் அலுவலகத்திற்கு போய் வேலையை மட்டுமே பார்ப்பேன்; அவ்வளவுதான் என்னால் முடியும் என்றேன். எதிர்ப்பு என்றால் யாருக்கு என்றாள் அவள் விடாமல். போலீசுக்குத்தான், அரசுக்குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்; தெருவில் இறங்கி துண்டறிக்கை விநியோகிக்கலாம், மனித உரிமை அமைப்புகளின் போராட்டத்திற்கு ஆதரவு தரலாம், blogpost ஒன்று எழுதலாம் என்றேன். தெருவில் இறங்கி போராடி எதிர்ப்பு தெரிவிப்பது தவிர மற்றவை அனைத்தும் அவளுக்கு பெரிய விஷயமாகப் படவில்லை.

பதற்றமான மனதுடனே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன். கல்லூரி நாட்களில் சார்த்தரின் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு அலைந்ததும் சார்த்தர் ஃபிரான்ஸ்-அல்ஜீரியா போருக்கு எதிராக தெருவில் இறங்கி ஃபிரான்சுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்ததை சிலாகித்துப் பேசித் திரிந்ததும் நினைவுக்கு வந்தது. சார்த்தர் அரசுக்கு எதிராகப் பேசுகிறார் அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோஷம் எழுந்தபோது ஃபிரான்சின் ஜனாதிபதி டிகால் "Nobody arrests Voltaire" என்று சொல்லி அவரை கைது செய்ய உத்தரவிட மறுத்துவிட்டதும் நினைவுக்கு வந்தது. சார்த்தர் அளவுக்கு உயர் ஆளுமை ஒருவருக்கு ஃபிரான்ஸ் போன்ற தேசத்தில் இது சாத்தியமாகலாம் என்னைப் போன்ற தம்மாத்துண்டு மனிதன் என்ன செய்யமுடியும் டிராஃபிக் போலீஸ்காரன் லைசன்ஸ் கேட்டு மிரட்டினாலே மனலும் உடலும் பதறிவிடுகிறது. காலையில் தொலைக்காட்சியில் பார்த்திருந்த இளைஞர்களின் உடல்கள் மனத்திரையில் தோன்றி மறைந்தன.

மதியம் அலுவலகத்திலிருந்து என் மனைவிக்கு ஃபோன் போட்டு என்ன செய்கிறாள் என்று கேட்டேன். பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து 'உள்ளூர்' துயர சம்பவத்தைப் பற்றி மருகி மருகி பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். நான் வேளச்சேரியில் குடியேறி பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன இருந்தாலும் உள்ளூர், என்னூர் என்றால் அது என் கற்பனையிலிருக்கும் நாகர்கோவிலோ, திருநெல்வேலியோதான். ஆனால் என் மனைவி எவ்வளவு சீக்கிரம் வேளச்சேரியை தன்னூராக சுவீகரித்துக்கொண்டாள்!

ஒரு வேளை ஒரு இடத்தோடு என்னை இன்னும் முழுமையாகப் பொருத்திக்கொள்ளத் தெரியாததினால்தான் வேளச்சேரி சம்பவம் என்னை என் மனைவியை பாதித்த அளவு பாதிக்கவில்லையோ? எனக்கு வேளச்சேரி, கருணாம்பிகை தண்டீஸ்வரர் கோவில், யோக நரசிம்மர் கோவில் , அங்காள பரமேஸ்வரி கோவில், அப்பா கொடுத்த வீடு என்று மட்டுமே முதலில் மனசிலாகியிருந்தது. முன்பெல்லாம் காலை நடந்து போகும்போது எழுத்தாளர் ஜெயந்தனைப் பார்த்திருக்கிறேன். அவர் அசோகமித்திரனும், வெங்கட் சாமிநாதனும் கூட இங்கே அருகில்தான் வசிக்கிறார்கள் என்று சொன்னதாக நினைவு. குழந்தைகள் வந்தபின் அவர்களை விளையாடக் கூட்டிக் கொண்டு போகும் குரு நானக் கல்லூரி மைதானம், ..டி வளாகக்காடு என்று வேளச்சேரி என் அனுபவத்தில் விஸ்தீரணம் கண்டது. சென்னையின் புராதன கிராமங்களில் வேளச்சேரியும் ஒன்று என்பது ஆறுதலான உணர்வைத் தந்திருக்கிறது. வெளியூரிலோ, வெளி நாட்டிலோ பயணம் செய்துகொண்டிருக்கையில் வீடு திரும்பலுக்கான ஏக்கம் வேளச்சேரியும் நாகர்கோவிலும் கலந்த கலவைக் காட்சியாக கனவில் வருவதை கவனித்திருக்கிறேன். தாய்மையின் அரவணைப்புள்ள மறைமுகமான காடொன்றும் வேளச்சேரியில் இருப்பதாகவே உள்ளுணர்வு சொல்லும்.

வேறெப்படி ஒருவன் இடத்தோடு உறவு ஏற்படுத்திக்கொள்ள முடியும்?

நாள் பூராவும் வேலையில் மூழ்கியிருந்தேன். காலையில் ஏற்பட்ட மனக்கலக்கம் தெளிந்துவிட்டிருந்தது. கி..சச்சிதானந்தன் அலுவலகத்திற்கு வந்தார். ஹைடெக்கர் இடமும் காலமும் இல்லாமல் ஒரு தன்னிருப்பு எப்படி உருத்திரள்வதில்லை என்று சொல்கிறார் என்றும் வேளச்சேரி என்பது எனக்கும் என் மனைவிக்கும் என்னவாக இருக்கிறது என்றும் சச்சியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

காலையில் வேளச்சேரியில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்களைப் பற்றி சச்சியிடம் பேசிக்கொண்டிருந்தபோது .மார்க்சின் வலைத்தளத்தில் படித்த வேளச்சேரி என்கவுண்டர் தொடர்பான அவருடைய இரு பதிவுகளை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டது நினைவு வந்தது.⁠2 "என்கவுண்டர் கொலைகள் சட்டம் என்ன சொல்கிறது?என்ற அவர் பதிவை நான் ஏன் பகிர்ந்துகொண்டேன்? என் எதிர்ப்பும் கூட சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ளவா? சட்டத்திற்கு, அரசியலமைப்பிற்கு எனவே அரசியலுக்கு உட்பட்டதா அறம்? காண்ட்டின் அறக்கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய தெரிதா கேட்ட கேள்வியல்லவா இது?

வீடு திரும்புகையில் கார் வண்டிக்காரன் தெரு செக்போஸ்டைத் தாண்டி வந்துகொண்டிருக்கும்போது மனம் ஒரு முறை அதிர்ந்து மீண்டது.. வேளச்சேரி வேறொன்றாக மாறிவிட்டிருக்கிறது.




அடிக்குறிப்புகள்


1 பார்க்க செய்தி http://www.thehindu.com/todays-paper/article2926184.ece
2 என்கவுண்டர் கொலைகள் சட்டம் என்ன சொல்கிறது?http://amarx.org/?p=390

Thursday, February 23, 2012

கை நீட்டம்மா கை நீட்டு தொடர்கிறது

Rajan copy
Mama
ஒவ்வொரு துறையைப் பற்றியும், நிறுவன வகைகளைப் பற்றியும் விமர்சனங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. கலால் வரித் துறை ஊழல்கள் பற்றி corruption monitor  என்ற வெப்சைட்டில் விரிவான அறிக்கை வெளியாகியிருக்கிறது. பார்க்க: http://corruptionmonitor.com/indiataxcorruption.html இந்த அறிக்கை தன்னுடைய இந்திய ஆங்கிலத்தில்
"It was experienced that it is very difficult to be honest and forthright in a revenue Department like ours because the system itself corrupt persons with the well balanced mentality as it will be very difficult to refuse repeatedly offer of money just for the existence in the Department as Officers indirectly which are not to perform duties."
என்று எழுதியிருக்கிறது. இந்த வெப்சைட்டில் கலால் வரித்துறையில் வேலை பார்ப்பவர்கள் யாருமே நேர்மையாக இருக்கமுடியாது என்று எழுதியிருப்பதால் இப்போது கலால் வரித் துறையில் வேலை பார்க்கும் விமலாதித்த மாமல்லன் ஆகிய நரசிம்மனும் நேர்மையற்றவர், ஊழல் பெருச்சாளி என்று கூறமுடியுமா? அப்படி சொல்வது போன்றதுதான் NGO நிறுவனங்கள் பற்றி விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காக அத்தனை நிறுவனங்களையும் அவற்றில் வேலை பார்ப்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த பார்வைக்கு மாமல்லன் உட்படுத்துவதாக சூசகம் எழுதுவதும்.

அப்படியெல்லாம் இல்லை சமூக் கடமையினால் (!)  விமர்சிக்கிறேன் என்றால் பாபா ஆம்தேயின் தொண்டு நிறுவனத்திற்கு மாமல்லன் கொடுத்திருக்கும் சுட்டியிலுள்ள NGO  பற்றிய ஆய்வுரை எப்படிப்பொருந்தும் என்று மாமல்லன் விளக்கிச் சொல்லலாம்.

மாணவ மாணவியரின் நரிக்குறவர் குழந்தைகள் விளையாட்டு Documentation உண்மையில்லை என்று சொல்லும் மாமல்லன் எந்த ஆதாரத்தில் சொல்கிறார்? மாணவர்களின் களப்பணிக்கு NFSC எந்தவகையிலும் பணம் செலவழிக்கவில்லை. பின் எப்படி டாடாவுக்கு கணக்கு கொடுத்ததாய் எழுதுகிறார்?

மாமல்லனின் நோக்கம் அவதூறு செய்வதும் அதன் மூலம் ஆதாயம் தேடுவதும்தான்.



Wednesday, February 22, 2012

கை நீட்டம்மா கை நீட்டு: மாமல்லனின் அவதூறும் உள்நோக்கமும்


நான் வேலைபார்க்கும் தேசிய நாட்டுப்புறவியல் மையம் 1997ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக டாடா அறக்கட்டளை நிதி நிறுவனத்தின் உதவியோடு செயல்படுத்திவரும் பல திட்டங்களில் ஒன்று நரிக்குறவர்களுக்கான பண்பாட்டு ஆவணக்காப்பகம் அமைப்பது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் போன ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு நிறைவு பெற்றுவிட்டன. 
என் மேலுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக விமலாதித்த மாமல்லன் என்ற நரசிம்மன் என்ற கலால் வரித்துறை இன்ஸ்பெக்டர் தொடர்ந்து பொய் பொய்யாய் எழுதி, என்னை மிரட்டியும், நான் வேலை பார்க்கும் நிறுவனத்தைப் பற்றி அவதூறும் செய்து வருகிறார். அவருடைய சமீபத்திய அவதூறு அவருடைய வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. 
இந்தப் பதிவினை அவதூறு என்று நான் சொல்வதற்கான காரனங்கள் மூன்று:
  1. மாமல்லன் ஏதோ  குழந்தை விளையாட்டுக்களை ஆவணப்படுத்த  மாணவ மாணவிகள் ஒரு முறை சென்று வந்தது போலவும் அதற்காகவே டாடாவின் நிதி முழுக்க பயன்படுத்தப்பட்டது போலவும்  எழுதியிருக்கிறார். எங்கள் நிறுவனம் நரிக்குறவர் -வாக்ரி சமூகத்தினர் ஆராய்ச்சி தொடர்பாக இதுவரை நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தவிர முழுமையான audio visual ஆவணக் காப்பகம் உருவாகியிருக்கிறது. புத்தகங்களின் அட்டைகளை கீழே தருகிறேன். இந்தப் புத்தகங்களில் நரிக்குறவர்- வாக்ரி சமூகத்தினருக்கான வாக்ரி மொழி அகராதி வெளிவந்திருப்பது மாமல்லனுக்கு நன்றாகத் தெரியும். இந்த அகராதியினால் என்ன பயன் என்று அவர் கேட்டு இதே போல ஒரு அவதூறு பதிவு எழுதியதும் அதற்கு நான் ஏற்கனவே பதில் எழுதியதும் இங்கே காணலாம்: http://mdmuthukumaraswamy.blogspot.in/#!http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/12/blog-post_24.html இருப்பினும் ஏதோ மாணவ மாணவியரின் களப்பணி slide show மட்டுமேதான் நடந்த வேலை என்று எழுதியிருப்பது  என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற அவரது உள் நோக்கத்தினையே வெளிப்படுத்துகிறது.







  1. மாமல்லன் சொல்வது போல நரிக்குறவர் திட்டம் மட்டும் டாடா நிதியினால் செயல்படுத்தப்படவில்லை; ஜேனுகுறுபர், செரைக்கெலா சாவ் நடனம், ஆகியனவுக்கும் ஆவணக் காப்பகங்கள் அமைக்கவும், வடகிழக்கு மாநிலங்களுக்கான ஸ்காலர்ஷிப் வழங்கவும்  செலவழிக்கப்பட்டது. இதுவும் மாமல்லனுக்குத் தெரியும். இருந்தும் அவர் இவ்வாறு ஜோடிப்பதற்குக் காரணம் என்ன? 
  1. தேசிய நாட்டுப்புறவியல் மையத்தின் திட்டங்கள் வல்லுனர்களாலும், துறை அறிஞர்களாலும், நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளாலும் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் யுனெஸ்கோ தேசிய நாட்டுப்புறவியல் மையத்தின் ஆவணக்காப்பக அமைப்புத் திட்டங்கள் உலகின் தலைசிறந்த கலாச்சார பாதுகாப்பு முறைகளுள் கவனிக்கத்தக்கவை என்று பிரசுரம் (பக்கம் 110) வெளியிட்டுள்ளது. இந்த உண்மையும் மாமல்லனுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் இப்படி பதிவு எழுதுவதன் அவசியம் என்ன?
தொடர்ந்து நான் வேலை பார்க்கும் நிறுவனத்தினைப் பற்றி பொய்யும் அவதூறும் எழுதி அதன் மூலம் என்னை சிறுமைப்படுத்தி, அவமானப்படுத்தி, முடிந்தால் என் வேலையை விட்டு என்னை தூக்கி, முடியாவிட்டால் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி என்னிடமிருந்து பணம் பறிக்க விமலாதித்த மாமல்லன் என்ற நரசிம்மன் ஆகிய கலால் வரித் துறை இன்ஸ்பெக்டர் முயற்சிக்கிறார் என்று சந்தேகிக்கிறேன். 










நீளும் முதல் முத்தம் 7

"It is necessary to deduce a politics and a law from ethics."
-Jaques Derrida in Adieu to Emmanuel Levinas

முதல் முத்தமாய் காதல் பற்றி நான் எழுதிய ஏழு ஒன்றோடொன்று தொடர்புடைய உத்தேச கருத்துரைகளுக்கு எனக்கு வழக்கமாகக் கடிதம் எழுதுபவர்களிடமிருந்து  மீண்டும் பல எதிர்வினைகள் வந்திருக்கின்றன. அவற்றையும் ஏற்கனவே பதிலளிப்பதற்காக வைத்திருந்த பதினோரு கடிதங்களையும் மொத்தமாய்ப் படித்துப் பார்க்கையில் கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தெரிதாவின் பிற்கால சிந்தனைகளில் அறிமுகம் இல்லை என்று அறிய வருகிறேன். எனவே இந்தப் பதிவினைத் தொடர்ந்து  தெரிதா காண்ட்டிய சிந்தனையை விமர்சித்ததையும் நுட்பப்படுத்தியதையும் மையப்படுத்தி எழுத விரும்புகிறேன்.


நான் நானாகுதலை பயணம் என்ற உருவகத்தை வைத்தோ அல்லது (அனுபவ சேகர) கிடங்கு என்ற உருவகத்தை வைத்தோ தத்துவம் எழுதுவதே வழமை. பெருவாரியான மத நூல்களும் நானாகுதலின் இலக்கினை நிர்ணயித்து, இந்த உருவகங்களை விவரிப்பதன் மூலமே தங்களின் மெய்யியல் கோட்பாடுகளை முன் வைக்கின்றன;  நானாகுதலை தொடர் செயல்பாடாக, திடீர் மாற்றமாக, புத்துயிர்ப்பாக என பலவகைகளில் விளக்கவும் அவை தலைப்படுகின்றன.⁠2 அவற்றைப் பின்பற்றி சாகாமல் தற்செயலாய் பிழைத்துக் கிடப்பதால் மட்டுமே நானாகியிருக்கும் இருத்தலியல் நிலையிலிருந்து நானாகுதலை பிரயாணம் என்றோ அனுபவ சேகரம் என்றோ விளக்குவதிலுள்ள சிரமங்களையும், பொருத்தமின்மைகளையும், இடைவெளிகளையும் மாற்று சாத்தியப்பாடுகளுக்கான வழிமுறைகளையும் நான் இதுவரை எழுதிய பதிவுகளில் சுட்டி வந்திருக்கிறேன்.


இந்த உருவகங்களை விடுத்து காதலை தன்னளவிலேயே முழுமையான, நானாகுதலுக்கு சத்தேற்றுகிற அறக் கருத்தாக்கமாக எடுத்தாள்வது பல வகைகளிலும் சிறப்பானதாகும். காதலை நானகுதலின் சுதந்திரத்தினை கூர்மைப்படுத்துகிற கருத்தாக்கமாக நான் அடையாளம் கண்டது தற்செயலானதுதான்; ஆனால் இதன் அடிப்படை,  விருந்தோம்பல் (hospitality), மன்னித்தல், நட்பு பேணுதல் ஆகிய கருத்தாக்கங்களை  தன்னளவிலேயே அறத்தின் தர்க்கத்தினைக் கொண்டதாகவும் மனித விடுதலையின் மாண்பினை வலுவாக்குவதாகவும் தெரிதா நிகழ்த்திக்காட்டியதிலிருந்தே பெறப்பட்டது. தன்னுடைய பிற்கால சிந்தனையில் காண்ட்டிய லட்சியவாதத்தின் தார்மீகம்  தாண்டிய இன்னும் நுட்பமான  முன்மாதிரியான அறப்பார்வையினை இந்தக் கருத்தாக்கங்களைக் கொண்டு தெரிதா உருவாக்கியுள்ளார்.


தெரிதாவின் இந்தக் கடைசி கால சிந்தனையை முதலில் என்னால் இயன்ற அளவு விளக்க முயற்சி செய்கிறேன்.





அடிக்குறிப்புகள்


1 http://www.mediafire.com/?kgke4wbz3hm இந்தத் தளத்தில் தெரிதாவின் முழுப்புத்தகமும் pdf ஆக தரவிறக்கக் கிடைக்கிறது.
2 பார்க்க Shulman, David, and Guy G. Stroumsa, eds. Self and Self-Transformation in the History of Religions. New York: Oxford University Press, 2002.

Friday, February 17, 2012

காதல் FAQ: முதல் முத்தம் 6


"The first kiss…. is the principle of philosophy- the origin of a new world- the beginning of an absolute era- the act that accomplishes an alliance with self that grows endlessly. Who would not like a philosophy whose kernel is a first kiss? " (Novalis quoted in Derrida 1993: 140)
தார்க்கோவ்ஸ்கியின் இவானின் குழந்தைப்பருவம் படக்காட்சி


இன்று காதல் FAQ கட்டுரைக்காக சில propositional statements எழுதினேன். அவற்றை ஒட்டியும் வெட்டியும் விரிவாக இந்தத் தொடரில் எழுதுவேன். Propositions என்ற மட்டிலேயே பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. பிறரும்தான் உரைகளும், ஏன், என்னை விட நன்றாகவே விரிவாக்கங்களும் எழுதலாம்தானே என்றும் தோன்றியது.  தவிர இணையத்தில் இவ்வகைக்கட்டுரைகளை எழுதுவது என்பது ஆதி கிரேக்கத்தின் முச்சந்தி விவாதங்களை நினைவுறுத்துவதாகவும் இருக்கிறது.
இந்த propositions ஐ எழுதியபோது இந்தக் கட்டுரைத் தொடரில் (சாகாமல் பிழைத்துக்கிடப்பதால் நான் நானாகியதும், பராக்கு பார்த்ததும்) காதல், நட்பு, சமூக ஒப்பந்தம் ஆகினவற்றுக்குள்ள உறவை விவாதிப்பது இடைச்செருகலாய் இருக்காது, தொடர் கண்ணியாகவே இருக்கும் என்று கண்டுணர்ந்தேன்.

இதோ முதல் முத்தமாக  ஒன்றோடொன்று தொடர்புடைய ஏழு propositions:
கர்த்தாவற்றது காதல் எனவே யாரும் காதலுக்கு மூல ஆசிரியனாக முடியாது; அதனை  நீங்கள் மொழிபெயர்க்க மட்டுமே முடியும்.
காதலின் மொழி பெயர்ப்புகள் எண்ணற்றவை, தவறுகள் மலிந்தவை, இலக்கணங்களையும் சூழல்களையும் பொருட்படுத்தாதவை, இலக்கு தவறி பொருள் பெறுபவை.


என்றாலும் காதலின் மொழி பெயர்ப்புக்கான தவிப்பிலும் பதற்றத்திலும் சப்தம் மொழியாவதும் தற்செயலாய் நடப்பதுண்டு. இத்தகையத் தற்செயல்களின் தொகுதி மனித புலன் அனுபவத்தை ஒழுங்கு செய்வதால் காதலின் அத்தனை மொழிபெயர்ப்புகளுக்கும் ஒற்றை மூலப் பனுவல் இருப்பதான மாயையும் கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் மானுட வரலாறெங்கும் நிறைந்திருக்கின்றன. இல்லாத கர்த்தாவைத் தேடுவதாலும், இல்லாத மூல லட்சிய பனுவலின் ஒற்றை உற்பத்தி ஸ்தானத்தை கற்பிதம் கொள்வதாலும் காதலர்களின் மரணமே வாழ்வைவிட மானுட பண்பாடுகளில் அமரத்துவம் பெறுகிறது.


காதல் என்பது தன்னுடல் மீறிய கவனம், அக்கறை, உற்று நோக்கல், தன்னிருப்பின் பிளவினால் ஏற்படும் மொழியின் தோற்றுவாய். ஒரு தன்னிலை மற்றொரு தன்னிலையோடு உடலன்றி வேறெப்படியும் இணைய இயலாது என்பதால் ஏற்படும் காத்திருத்தல்.


காதலில் காத்திருத்தல் பேசுமொழியாவதைவிட இசையாவது ஓவியமாவது பழங்குடித்தன்மை கொண்டது.


காதலில் காத்திருக்கும் கணங்களே தனியுடலின் அநாதைத் தன்மையினையும் இயற்கையின் பேசும்தன்மையினையும் பிரக்ஞைக்கு உணர்த்துகின்றன. காதலின் பேச்சு தனக்குத்தானே பேசி பிறன்மையை உள்ளிளுக்கிறது.


காதலின் புராணங்களில் முதன்மையானது உடல் போலவே மனமும் இணையும் வாய்ப்புள்ளதென்பது. இரு மனங்கள் இணையலாமென்றால் பல மனங்கள் இணையலாம், பல மனங்கள் இணையலாமென்றால் அவற்றிற்கு ஒற்றை ஆதார உற்பத்தி ஸ்தானம் இருக்கக்கூடும் என்பது புராண நீட்சி.







Wednesday, February 15, 2012

பராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 5


இரண்டு நாட்களாக மென்னியை முறிக்கும் வேலை. உடனடியாக சில குறிப்புகளை பதிவு செய்ய இயலவில்லை.

  முந்தைய பதிவில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானிய தத்துவக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற யூத தத்துவ அறிஞரின் பெயர் மறந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா? அவருடைய பெயர் மோசஸ் மெண்டெல்சொஹ்ன் என்று நாகார்ஜுனன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 டிவிட்டரில் கல்யாணராமன், முந்தைய பதிவின் கடைசி பத்தியில் நீங்கள் எழுதியிருப்பது நாஜிகளின் காலத்தில் மெண்டெல்சொஹ்னின் பதவி பறிக்கப்பட்டு அது ஹைடெக்கருக்கு வழங்கப்பட்டது என்று பொருள்படுகிறதே நாஜிகளின் காலத்தில் ஹுஸ்ரலின் பதவி அல்லவா பறிக்கப்பட்டு ஹைடெக்கருக்கு  அளிக்கப்பட்டது என்று விளக்கம் கோரியிருந்தார். நான் அவர் கேட்பதை, முதல் பரிசு பெற்ற அறிஞர் ஹுஸ்ரலா என்று கேட்கிறார் என்று தவறாகப் புரிந்துகொண்டு 'ஹுஸ்ரல் இல்லை' என்று டிவீட் எழுதிவிட்டேன். நாகர்ஜுனன் கடிதத்தில் ஹுஸ்ரலின் இடத்திற்கு ஹைடெக்கர் வந்ததை குறிப்பிட்டு எழுதியிருந்ததை படித்தபோதுதான் அடடா நான் கல்யாணராமனின் கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டேனே என்று நினைப்பு வந்தது. அவரும் இதற்கிடையில் ஹைடக்கர் விக்கிப்பீடியா கட்டுரை இணைப்பொன்றை டிவிட்டரில் அனுப்பியிருந்தார். அவரிடம் உடனடியாக மன்னிப்பு கோரினேன். வாசகர்களும் முந்தைய பதிவினில் உள்ள பிழையினை களைந்து, ஹுஸ்ரலின் இடத்திற்கே ஹைடெக்கர் வந்தார் என்று படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 என்னுடைய இந்தக் கட்டுரைத் தொடருக்குத் தொடர்ந்து உரை எழுதுவதாக ஆரம்பித்த நட்பாஸ் அம்பேல் பதிவொன்று எழுதி விடுபட்டு விட்டார். சரி, அது அவர் விருப்பம். மின்னஞ்சல் பெட்டியில் பதினோரு கடிதங்கள் சீரிய தத்துவ விவாதங்களை முன் வைப்பதாக இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஒரே பதிவில் பதிலளிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

 நேற்றைய சுவாரசியம் என்னவென்றால் இதுவரை என்னைத் தன் கேள்விக் கடிதங்களால் துன்புறுத்தி வந்த 'சித்திரக்குள்ளன்' ஒரு பெண் என்று தெரிய வந்ததுதான். 'சித்திரக்குள்ளி(?)யும் அவர் தோழிகளுமாய் நேற்று என் வீட்டிற்கு படையெடுத்து வந்திருந்தனர். நானும் என் மனைவியும் கொஞ்சம் திகைத்துதான் போய்விட்டோம். சுதாரித்தபின் உரையாடல் காதலர் தினக் கொண்டாட்டங்களைப் பற்றியே சுற்றி சுற்றி வந்தது. காதலைப் பற்றி ஒரு தத்துவக்கட்டுரை எழுத முடியுமா இந்தத் தொடரிலேயே என்று அந்த இளம் பெண்கள் வம்புக்கு இழுக்க என் மனைவியும் அவர்களோடு சேர்ந்துகொண்டாள். நதியின் சுழிப்போடு ஓடுவதுதானே மிதவைக்கு விவேகம்? சரி, 'காதல் FAQ' என்றொரு கட்டுரை இடைச்செருகலாக இந்தத் தொடரிலேயே எழுதிவிடுவதாக வாக்களித்திருக்கிறேன்.


Sunday, February 12, 2012

பராக்கு பார்த்தது: அழகுக் குறிப்புகள் 4

கள்ளிப்பெட்டி வலைத்தளத்தில் என்னுடைய 'சூத்திரங்களுக்கு' மேலும் பாஷ்யம் எழுதியிருக்கிறார் நட்பாஸ். பார்க்க: பராக்கு பார்ப்பது எப்படி? இந்த முறை 'சூத்திரங்களுக்கு' 'பாஷ்யம்' எங்கெங்கோ சென்று விட்டது. நான் எல்லா வகையான பராக்கு பார்த்தல்களைப் பற்றியும் எழுதவில்லை. எல்லா பராக்கு பார்த்தல்களையும் பற்றி எழுதினால் உலகில் சாட்சியாக இருப்பது எப்படி என்ற ஆன்மீக உபன்யாசத்திற்கும் குரு வழி உபதேசத்திற்கும் எளிதாகச் சென்றடைந்து விடலாம். அதுவல்ல நான் உத்தேசித்ததும் எழுதியதும். சாகாமல் தப்பிக் கிடப்பதால் நான் நானாகியதும் பராக்குப் பார்த்ததும் என்ற தலைப்பு பராக்கு பார்க்கும் சூழலைத் தெளிவாகத்தானே சொல்கிறது? i survived therefore I am என்ற நிலையில் உள்ளவன் வீட்டின் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தா சாவகாசமாகப் பராக்குப் பார்த்துக்கொண்டிருப்பான்? ஊழிக்கு, பேரழிவுக்கு, இனப்படுகொலைக்கு சாகாமல் தப்பிவிட்டவனின் பராக்கு பார்த்தல் புத்தம் புதிதாக உலகை அணுகுவதாக அல்லவா இருக்கும்? மொழியும் அர்த்தமும் தொலைந்து மீண்டும் ஆவி சேர்த்துக் கட்டி அணைத்து அல்லவா எழுப்பி நிற்க வேண்டும்? அர்த்தங்களின் உருவாக்கத்திற்கு முந்தைய ஜுலியா கிறிஸ்தவா குறிப்பிடும் chora அல்லவா அந்த நிலை? அந்த பராக்கு பார்த்தலில் காண்ட்டின் உலகளாவிய லட்சியங்களா அகத்தில் எழும் என்பதல்லவா விசாரிக்க புறப்பட்டது?

From http://geniscarreras.com/philosophy.html


 பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானிய பல்கலைக் கழகம் அறிவித்த What is enlightenment? என்ற கட்டுரைப் போட்டியில் இமானுவேல் காண்ட்டிற்குக் கிடைத்தது இரண்டாம் பரிசு. முதல் பரிசு பெற்றக் கட்டுரையை எழுதியவர் ஒரு யூத தத்துவ அறிஞர் என்று மட்டுமே இப்போது நினைவு இருக்கிறது. பெயர் மறந்துவிட்டது மன்னிக்கவும். அந்த முதல் பரிசுக் கட்டுரை ஒரு பண்பாட்டிற்குள் தன்னை இருத்திகொள்வதைப் பற்றியும், நட்பு, உறவுகள், குறிப்பிட்ட கால இட இணைவு இவைகளிலிருந்து உலகளாவிய லட்சியங்களை நோக்கி நகர்வது குறித்தும் பேசியது. 1929 இல் (ஆண்டெல்லாம் கூட நினைவு இருக்கிறது ஆனால் அவர் பெயர் மறந்துவிட்டது) நாஜி ஜெர்மனியில் அந்த யூத தத்துவ அறிஞர் யூதர் என்பதால் விலக்கப்பட்டபோது அவருடைய இடத்திற்கு வந்தவர்தான் ஹைடெக்கர். ஹைடெக்கரை ஒரு முனையிலும், காண்ட்டை எதிர் முனையிலும் வைத்து தெரிதாவின் வழி எழுதிப்பார்ப்பதுதானே என் உத்தேசம்? உரைகாரர் நட்பாஸ் ஹைடெக்கர் பற்றிய குறிப்பினால் என்ன புதிதாய் சேர்த்திருக்கிறார்?