Wednesday, January 22, 2014

நீலோத்பலம்


நீலோத்பலத்தினை 
புகைப்படமாக
ஓவியமாக
வார்த்தையாக
மட்டுமே தெரியுமெனக்கு
என்று ஆரம்பிக்கும் 
நவீன வியாதி அறிக்கை ஒன்று
விண்ணூஞ்சல் ஏறி
உன் விழிநுதல் நாடி 
வருகிறதே யசோதரா
என் செய்வாய் நீ
இந்நாளின்
வாசனை அறியா
சித்தார்த்தனை?
மோப்பத்தடத்தில் கடக்காதோ
இந்த
பித்துரு
பின்னொரு ஜென்மத்தில்
உன் முலைகளில்
முகம் புதைத்து

புத்தனாவதற்கு 

Monday, January 20, 2014

சாரல் விருது 2014: பெறுபவர் கவிஞர் விக்கிரமாதித்யன்

எனது பிரியத்திற்குரிய நண்பர் கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு 2014 ஆம் ஆண்டின் சாரல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய கவிதைகளைப் பற்றி விரிவாக எழுதி சாரல் விருது அறிவிக்கப்பட்டிருப்பதை கொண்டாடலாமென்றிருந்தேன். ஆனால் அதற்கான நேரம் எனக்கு இப்பொழுது இல்லை. முன்பொருமுறை விக்கிரமாதித்யனின் கவிதை குறித்து இந்தத் தளத்தில் எழுதிய சிறு கட்டுரை ஒன்றிற்கான இணைப்பினை கீழே தந்திருக்கிறேன்.

http://mdmuthukumaraswamy.blogspot.in/search/label/கற்றது%20கவிதைகளினால்%20மனதிலாகும்%20உலகு?updated-max=2013-01-21T18:08:00%2B05:30&max-results=20&start=2&by-date=false 

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு என் அன்பும் மரியாதையும். நண்பர்கள் ஜேடி, ஜெர்ரிக்கு என் வாழ்த்து.




Sunday, January 19, 2014

அழாதே மச்சக்கன்னி! | நாவல் | அத்தியாயம் 4

சியோல் பெருநகரில் யோசனையில் ஆழ்ந்திருந்த போதிசத்துவர்:

Pensive Bhidisattva- Picture courtesy National Museum of Korea 's website http://www.museum.go.kr/site/main/index002




இண்ட்சியோன் விமானநிலையத்தில் சஞ்சயும், சின்னச்சாமியும்  அதிகாலையில் இறங்கியபோது குளிர் காற்று காதுகளைத் துளைத்தது. சியோல் நகரிலிருந்த ஹோட்டலுக்கு அவனையும் சின்னச்சாமியையும் அழைத்துச் செல்ல கம்பெனியிலிருந்து ஷி வூ வந்திருந்தார். பெரும்பான்மையான கொரியர்களுக்கு இல்லாத உப்பிய கன்னத்துடன் கனத்த இமைகளுடனும் இருந்தார். பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசினார். இங்கிலாந்தில் படித்தாராம். ஷி வூவின் ஆங்கிலப் புலமையைக் கருத்தில் கொண்டே அவரை கம்பெனி இந்தியர்களை வரவேற்க அனுப்பியிருந்தது. சின்னச்சாமி கலகலப்பாக பேசக்கூடியவனாக இருந்தது சஞ்சய்க்கு ஆறுதலாக இருந்தது. அவன் காரின் கண்ணாடி வழியே ஒரே மாதிரியாக நெடுதுயர்ந்த கட்டிடங்களையும் சுத்தமான சாலைகளையும் பார்த்துக்கொண்டே இருந்தான். ஷி வூ அவன் தனிமையின் குமிழுக்குள் அடைபட்டிருக்கும் பிராணி என்பதினை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டவராக அவர் சின்னச்சாமியிடமே பேசிக்கொண்டிருந்தார். விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போய்ச் சேர நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்; ஹோட்டல் சியோல் நகரின் மையப்பகுதியில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டார்கள். 

“சேஜூ தீவு சியோலிலிருந்து எவ்வவளவு தூரம்?” என்று திடீரெனக் கேட்டான் சஞ்சய்.

காரை ஓட்டிக்கொண்டிருந்த ஷி வூ சட்டென்று பின் சீட்டில் உட்கார்ந்திருந்த சஞ்சையைத் திரும்பிப் பார்த்துவிட்டு “சேஜூ தீவு முத்துக்குளித்தலுக்கு பிரசித்தம். இயற்கையான முத்துக்கள் வாங்க அங்கே போகலாம் என்றிருக்கிறீர்களா? சியோலிலிருந்து எட்டு மணி நேர பஸ் பயணம். ஆனால் நீங்கள் இங்கே தங்கியிருக்கும் நாட்களில் நாம் ஜிண்டோ தீவிற்கு செல்லத்தான் நாம் திட்டமிட்டிருக்கிறோம்.” என்றார்.

சஞ்சய் தன் தந்தையின் மரணம் சேஜூ தீவினருகே நடந்ததை சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்துவிட்டு அவரிடம் முதல் அறிமுகத்திலேயே சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தான். 

“நான் கண்டிப்பாக ஒரு நாள் அங்கே போய் வரவேண்டும் சார் “ என்றான் பொதுவாக. ஷி வூ ஆனால் தொடர்ந்து சேஜூ தீவினைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார். 

“சேஜூ தீவில் முத்துக்குளிப்பவர்கள் பெண்கள் அவர்களால் கடலாழத்தில் நீண்ட நேரம் மற்றவர்களை விட மூச்சடக்கி இருக்க முடியும். இப்போது நவீன வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. மரபான முத்துக்குளித்தலில் முன்பெல்லாம் ஈடுப்பட சேஜோ தீவின் பெண்கள் ஆக்சிஜன் சிலிண்டர் எதுவும் இல்லாமலே கடலாழத்தில் நீண்ட நேரம் இருப்பார்கள். அவர்கள் நீந்தி மேலெழும்பி வரும்போது விசித்திரமான சீழ்கை ஒலியெழுப்பி மூச்சினை உள்வாங்குவார்கள். அவர்களை நாங்கள் மச்சக்கன்னிகள் என்று அழைப்போம் தெரியுமா?”

சஞ்சய்க்கு ‘மச்சக்கன்னிகள்’ என்ற பெயரைக் கேட்டவுடனேயே முகம் மலர்ந்துவிட்டது. சின்னச்சாமிக்கு கொரிய உணவை சாப்பிட்டு எப்படி காலம் தள்ளப்போகிறோம் என்பதே கவலையாக இருந்தது. அவன் ஷி வூவிடம் தொடர்ந்து உணவு பற்றியே கேட்டுக்கோண்டிருந்தான். சியோல் நகரில் அம்பிகா அப்பளம் கிடைக்குமா என்று மட்டும்தான் சின்னச்சாமி இன்னும் கேட்கவில்லை என்று சஞ்சய் நினைத்தபோது ஹோட்டல் வந்துவிட்டது. அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு ஷி வூ போய்விட்டார். மதிய உணவுக்குப் பிறகு கொரிய நேஷனல் மியுசியத்திற்கு செல்வதாக ஏற்பாடு.

சஞ்சயின் அறை ஹோட்டலின் பதினோராவது மாடியில் இருந்தது. ஹோட்டலுக்கு மொத்தம் இருபத்தி ஏழு மாடிகள். அறைக்குள் நுழைந்தவுடன் தன் மடிக்கணினியை எடுத்து அம்மாவுக்கு ‘நலம். நல்லபடியாக சியோலுக்கு வந்து சேர்ந்து விட்டேன். எங்களை வரவேற்க வந்த ஷி வூவிடம் சேஜூ (ஜேஜூ அல்ல) தீவு பற்றி விசாரித்தேன். நிச்சயம் ஒரு நாள் போய் வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். அங்கே போவதற்கு முன் மீண்டும் தெரிவிக்கிறேன். நீ நல்லபடியாகத் தூங்கு. சின்னச்சாமி என்னை நன்றாக கவனித்துக்கொள்வான். நீ கவலைப்படாதே. அன்புடன்” என்று மின்னஞ்சல் அனுப்பினான். ஜன்னல் திரைச்சீலையை விலக்கி பார்த்தபோது சியோல் நகரம் காலையிலேயே சுறுசுறுப்பாய் இயங்குவதாகத் தோன்றியது. தூரத்தில் ஹன்ஸ் நதியின் மேல் கட்டப்பட்ட பாலம் தெரிந்தது. கொரியமொழியில் எழுதப்பட்ட நியான் பலகைகளில் விளக்குகள் அணைந்திருக்க நகரத் தெருவே கொரிய மொழி புத்தகம் ஒன்றின் திறந்த பக்கம் போல விரிந்திருந்தது. கட்டிலுக்கு அருகே அடுக்களை மேடையொன்றும் சமைத்துக்கொள்வதற்கான உபகரணங்களும் இருந்தன.

சின்னச்சாமி ஃபோனில் கூப்பிட்டான். 

“மச்சி, சாப்டியா இல்லையா?” 

“எனக்கு எதுவும் வேண்டாம்டா, நீ சாப்டு. நா தூங்கப் போரென்”

“ஒழிஞ்சு போ. ஆனா விசாலாட்சியம்மா நாளைக்கு எம் பையன இப்டி பட்டினி போட்டு கொரியாவுலேர்ந்து கூட்டி வந்திருக்கேயேன்னு கேட்டா நா என்ன சொல்றது?”

“ மத்யானம் சாப்டரேண்டா. நல்லா தூங்கிட்டன்னா ஒரு மணிக்கு எளுப்பு. சரியா”

“நானும் சாப்ட்டு அலாரம் வச்சுட்டுத்தான் தூங்கப் போரென். அசந்து தூங்கிட்டன்னா நீ என்னை எளுப்பு. ஒனக்கும் என்னப் பாத்துக்கிற பொறுப்பு இருக்கு மாமூ”

“சரிடா சரி”

சின்னச்சாமிக்கு குழந்தை முகம். மீசை சரியாக வளராமால் அரும்பு மீசையாகவே தேங்கிவிட்டதால் அப்படி தோன்றுவதாக இருக்கலாம். கலகலப்பாக பேசுகிற பேர்வழி என்பதால் எல்லோரும் உடனடியாகப் பழகிவிடுவார்கள். சஞ்சயை ஏனோ பொதுவாக குறும்பும் விஷமமும் முகத்தில் தாண்டவமாடுகிறவனாகப் பார்ப்பார்கள். அவன் உள்ச்சுருங்கி தனித்து இருப்பதால் அவனை வில்லனாக முதல்ப்பார்வையில் அறுதியிடுபவர்களும் உண்டு. விசாலாட்சிக்கு இது தெரிந்திருந்தது. சின்னச்சாமி சஞ்சையை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நேற்று வீட்டுக்கு வந்தபோது அவனிடம் வெளிப்படையாகவே விசாலாட்சி சொன்னாள். “ எப்ப பாரு எதாவது பொத்தகத்தப் படிச்சுட்டே இருக்கானா, ஒலகமே அவன் கண்ணில பட மாட்டேங்கு போ. கொரியால போயி நீதாம்பா ஒளுங்கா சாப்டானா தூங்குனான்னு பாத்துகிடனும். அவன் மொகத்தப்பாத்து எல்லாம் சரியான வில்லன்னு நினைப்பாங்க உள்ளபடிக்கு  அவனுக்கு கல்மிஷமே கிடையாது”. சின்னச்சாமி முகத்தை இறுக்கிக்கொண்டு “ ஆமா ஆமா அவன் போதிசத்துவருல்லா” என்றான். சஞ்சய் சத்தமாக சிரிக்க விசாலாட்சியும் அவனுடன் சேர்ந்துகொண்டாள். சஞ்சய் கொரிய பௌத்தம் பற்றி தான் படித்ததை அவனிடம் கூறியிருந்தான். கொரியாவுக்கு செல்வதற்கான பயண ஏற்பாடாக பலவற்றையும் படித்தது போல கொரிய பௌத்தத்தையும் அவன் படித்துக்கொண்டிருந்தான்.

சின்னச்சாமிக்கு சஞ்சயின் வாசிப்புகளைப் பற்றி இளக்காரமே இருந்தது. கொரியாவில் இட்லியும், தயிர்சாதமும் கிடைக்குமா கிடைக்காதா என்பது மட்டுமேதான் அவன் அக்கறைகொண்ட விஷயங்களாயிருந்தன. அவன் மனைவி சந்திரிகாவும் அவனுக்கு வித விதமாய் உறுகாய் பாட்டில்களும், பருப்பு பொடிகளும் அவன் பயணப்பெட்டியில் பொதிந்து வைத்திருந்தாள். “அரிசிச்சோறு கிடைச்சா போதும் மாமே நா கொரியா என்ன சைபீரியால கூட வாழ்ந்திருவேன்” என்று சவடால் விட்டுக்கொண்டிருந்தான் சின்னச்சாமி. சஞ்சய்க்கு விசாலாட்சி அப்படி உணவுப்பொருள்கள் எதுவுமே தயார் செய்து கொடுக்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  தன் பக்கத்திலேயே இருக்கும், தன் கூடவே வேலை செய்யும் சின்னச்சாமிக்கும் தனக்கும் எவ்வளவு பெரிய நிரப்ப முடியாத இடைவெளி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் சஞ்சய்.

பயணச்சோர்வின் மிகுதியில் அவன் கட்டிலில் விழுந்தபோது மூடிய கண்களுக்குள் சியோலின் தெருவில் ஆக்கிரமித்திருந்த கொரியமொழி பலகைகள் சித்திரங்களாய் ஓடின . என்ன சொல்கின்றன அவை? சித்திர எழுத்துக்களில் என்ன மாயம் இருக்கிறது? செய்பவனும் செய்யப்படுபவையும் இல்லாமல் தூய வினையாக, தூய செயலாக, சித்திரமாக அந்தரத்தில் மிதக்கும் தியான வடிவங்களாக  காற்றில் அலைகின்றன அவை.

தொலைபேசி மணி ஒலித்தபோது சஞ்சய் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து பதறி எழுந்தான். கைக்கடிகாரம் காலை மணி பத்து நாற்பது என்று காட்டியது. தொலைபேசியில் சின்னச்சாமி “மணி ஒன்னாச்சுடா கீழே இறங்கி வா. லாபியில் வெய்ட் பண்ரேன்” என்றான். சஞ்சய்க்கு தான் தன் கைக்கடிகாரத்தை இன்னும் கொரிய நேரத்துக்கு ஏற்ப மூன்று மணி இருபது நிமிடங்கள் கூட்டி வைக்கவில்லை என்பது உறைத்தது. அவசர அவசரமாக குளித்துவிட்டு ஹோட்டலின் வரவேற்புத் தளத்திற்கு இறங்கிச் சென்றபோது சின்னச்சாமி ஏற்கனவே சாப்பிட்டிருந்தான். காஃபி ஷாப்பில் சாப்பிட்டுவிட்டு வா நான் வரவேற்பறையில் காத்திருக்கிறேன் ஷி வூ எந்த நேரமும் வந்து விடுவார் என்ற சின்னச்சாமியின் முகத்தில் சுரத்தில்லை; கொரிய சாப்பாடு அவனுக்குப் பிடிக்கவில்லை போலும் என்று சஞ்சய் நினைத்துக்கொண்டான்.

சாப்பாட்டு மேஜையின் மையத்தில் அடுப்பு இருந்தது. சஞ்சய் மேஜையில் அமர்ந்தவுடன் அடுப்பைப் பற்றவைத்து வாணலியை மேலை வைத்து சுற்றிலும் சிறு சிறு தட்டுகளில் மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, கீரை, கடற்பாசிச் சருகு, வினிகரில் ஊறி மிளகாய்த்தூள் தூவப்பட்ட முட்டைகோஸ், சீவிய முள்ளாங்கித் துண்டுகள், மீன்கறி, ஒரு கோப்பை அரிசிச்சோறு, என்று மேஜையை நிரப்பினாள் ஹோட்டல் பணியாள். ரொட்டி இருக்கிறதா என்று சஞ்சய் தேடினான். எவர்சில்வர் சாப்ஸ்டிக்குகள் இருந்தன. ரொட்டி இல்லை. சாப்பாடு மேஜையின் அடுப்பின் மேல் புகைபோக்கி மேலே கூரையிலிருந்து இறக்கப்பட்டிருந்தது. அதன் குழாய் மேலே செல்லும் பெரும் குழாயில் இணைவதையும் ஒவ்வொரு மேஜையிலிருந்தும் இப்படி புகைபோக்கிகள் மேலே செல்வதாய் அமைக்கப்பட்டிருப்பதால் சாப்பாட்டுக்கூடம் தரையோடு இணையாத தூண்கள் நிரம்பிய மண்டபம் போல் இருப்பதை கவனித்தான். ஹோட்டல் பரிசாரகர்கள் அந்த மண்டப கூடத்தினை திறமையாக சுத்தமாக வைத்திருப்பதாய் நினைத்தான். சஞ்சய் பச்சையாக இருந்த மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் வாணலியில் வைத்து சிறிது வெண்ணெயைப் போட்டு வறுபட வைத்து விட்டு அரிசிச் சோற்றினை எடுத்துப் பார்த்தான். இப்படி மாட்டுக்கறியும், பன்றிக்கறியும், மீனும் சாப்பிடுகிற கொரியர்கள் எப்படி இவ்வளவு ஒல்லியாக சதைப்பற்றில்லாமல் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான். சோறு பிசுக்பிசுக் என்று ஒட்டிக்கொண்டு பாதி காய்ந்த கஞ்சியை உருட்டி வைத்தது போல இருந்தது. சிறு இஞ்சித் துண்டுகள், பச்சைமிளகாய்காய்கள், பச்சைக்கறித்துண்டுகள் என கொரிய சாப்பாட்டு மேஜை ஒரு ஓவியனின் வண்ணப்பலகை போல இருப்பதாக சஞ்சய் நினைத்தான். 

மியுசியத்திற்கு செல்லும் வழியில் ஷி வூவிடம் கொரிய சாப்பாட்டு மேஜை ஒவியனின் அழகான வண்ணப்பலகை என்று தான் நினைத்ததைச் சொன்னான் சஞ்சய். “வாயில வைக்கத்தான் ஒன்னும் விளங்காது” என்று தமிழில் சொல்லிய சின்னச்சாமியை அவர்களிருவரும் கண்டுகொள்ளவில்லை. “நீங்கள் artistic type போலிருக்கிறது; இன்று மியுசியத்தில் நான் உங்களுக்கு கொரிய மொழியின் நவீன கவி ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கப்போகிறேன். அவர்தான் உங்களை ஜிண்டோ தீவிற்கு அழைத்துச் செல்லப்போகிறார். சஞ்சய், அதிகம் புத்தகம் வாசிக்கின்ற நீங்கள் அவரிடம் சீக்கிரம் நண்பராகிவிடுவீர்கள். அவர் பெயர் கிம் கி வோன் “ என்றார் ஷி வூ. அவர்களுடைய கார்  சயாங்க்யேங்குங் அரண்மனை வெளி வாயிலைத் தாண்டி விரைந்துகொண்டிருந்தது. அந்த வெளிவாயிலின் அலங்காரத் தோரணம் ஜப்பானியர்களோடு நிகழ்ந்த போரில் அடியோடு அழிக்கப்பட்டதாகவும் நவீன கொரியா இப்படி அழிக்கப்பட்ட எல்லாவற்றையும் மறுநிர்மாணம் செய்துவிட்டதாகவும் ஷி வூ கூறினார்.

கிம் கி வோனுக்காக மியுசியம் வாயிலில் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு அவன் வரத் தாமதமானதால் ஷி வூ அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். சின்னச்சாமிக்கு மியுசியம் செல்வது சுத்தமாக பிடிக்கவில்லை. ‘சிங்கநடைபோட்டு சிகரத்தில் ஏறு’ என்ற பாட்டை செஃல்போன் ஹெட்ஃபோனில் கேட்டுக்கொண்டே கடனே என்று இவர்களுடன் வந்தான்.  ஷி வூ அவர்களை நிரந்தர கண்காட்சிக்கூடத்தில் விட்டுவிட்டு இதோ வருகிறேன் என்று வெளியே போனார்.

கால்போன போக்கில் நடந்துகொண்டிருந்த சஞ்சய் அந்த போதிசத்துவரின் சிலை முன்னால் அதன் அழகில் மயங்கி ஒரு கணம் தன்னை மறந்து நின்றான். இளவரசன் சித்தார்த்தன் ஒரு காலினை ஒரு கால் மேல் போட்டு ஆழ்ந்த தியானத்தில் உட்கார்ந்திருக்கும் யோகாசன வடிவில் இருந்தது போதிசத்துவரின் அந்தத் தங்கச் சிலை. கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரம் இருந்த போதிசத்துவரின் சிலையில் கைவிரல்கள் அவர் கன்னத்தை நோக்கி உயர்ந்திருந்தன. மும்முடி உடைய தாமரை கிரீடத்தை அவர் அணிந்திருந்தார். சற்றே கீழ் நோக்கி தாழ்ந்திருந்த அவர் முகத்தில் அந்த வசீகரமும் மர்மமும் நிறைந்த புன்னகை. சஞ்சய் உடனடியாக அந்தப் புன்னகையில் தன் மனதினைப் பறிகொடுத்தான். சஞ்சய் சின்னச்சாமியை கூப்பிட்டு இந்தச் சிலையை பார் பார் என்று பரவசமாகக் காட்டினான்.  கொரியாவின் தேசீய பொக்கிஷங்களுள் ஒன்று அந்த போதிசத்துவர் சிலை என்று அந்த சிலையின் விளக்கக்குறிப்பு தெரிவித்தது. சின்னச்சாமி இவரும் பன்றிக்கறியும் மாட்டுக்கறியும்தான் சாப்பிட்டாரா என்றான். சஞ்சை பதில் சொல்வதற்குள் ‘ஹா இதோ இருக்கிறார்கள்’ என்று ஷி வூ சொல்வது கேட்டது. ஷி வூ வெளியே சென்று தாமதமாக வந்த கிம் கி வோனை அழைத்து வந்திருந்தார். அவர் கிம் கி வோனை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே ஆர்வ மிகுதியில் “என்ன அழகான தெய்வீகப் புன்சிரிப்பு இந்த போதிசத்துவருக்கு!” என்றான் சஞ்சய். 

கிம் கி வோன் “அவர் இந்த பெருநகர் சியோலில் என்ன யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் தெரியுமா? ஜப்பானியரிடமிருந்து நாங்கள் கடன் பெற்றுச் செய்த இந்த போதிசத்துவரின் புன்னகையை இன்றைக்கு பல போர்களுக்கும் அப்புறம் ஜப்பானியர்களை நோக்கி கொரியர்களால் மீண்டும் அதே போல புன்னகைக்க முடியுமா என்றுதான் அவர் இந்தப் பெருநகர் சியோலில் யோசித்துக்கொண்டிருக்கிறார்” என்றான். ஷி வூவுக்கு அவன் அப்படிச் சொன்னது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. “ஷ்ஷ் முதலில் அறிமுகம்” என்று அவனை அடக்கினார். கிம் கி வோன் “நான் பலருக்கும் பிடிக்காத சங்கடப்படுத்துகிற விஷயங்களைப் பேசுபவன்” என்றவாறே அவர்களுடன் கைகுலுக்கினான். “நீதான் சொல்லேன் எதற்கு புன்னகைக்கிறார் இந்த போதிசத்துவர்” என்று சஞ்சயைச் சீண்டினான். 

“மறு பிறவிகளிலும் தொடரும் முன்பிறவிகளின் வாசனைகளை நினைத்து அவர் புன்னகைக்கிறார்”   

“ஷி வூ நீங்கள் சொன்னது சரிதான் போல. சஞ்சய், ஷி வூ உன்னைப்பற்றி என்ன சொன்னார் தெரியுமா? கொரிய சாப்பாட்டு மேஜை ஓவியனின் வண்ணத்தட்டு என்று நீ சொன்னாயாமே- அதை வைத்து அவர் என்ன சொன்னார் தெரியுமா நீ என்னுடைய இந்திய இரட்டை என்று சொன்னார்.” என்று சொல்லி கிம் கி வோன் கடகடவென்று சிரித்தான். ஷி வூவும் சின்னச்சாமியும் கூட அவனோடு சேர்ந்து சிரித்தார்கள். 







Friday, January 17, 2014

Lecture: The Art and Joy of Folk Games



The collective joy of playing folk games is amplified by the  social consequences the games impose on the world views of the players. In his talk M.D.Muthukumaraswamy argues to establish that folk games affect growing up, social behaviour, cultivation of taste and values, development  of  social mechanisms of decision making, and understanding of beauty and justice.   Illustrating his talk with an ample number of folk games of chance and folk games of skills in their actual ethnographic contexts he further presents that the artistic experience of folk games is layered in encountering chance and its unjustifiable ways of distributing successes and failures where the players, especially children, start looking for inner mental resources to challenge them. 

Thursday, January 16, 2014

அழாதே மச்சக்கன்னி!| நாவல் | அத்தியாயம் 3

கடிகாரங்களாலான வனமனமிருகம் உறுமியது:


Jacek Yerka's painting. Courtesy website http://mayhemandmuse.com/jacek-yerkas-surrealist-paintings-suspend-belief/ 

கடிகாரங்களாலான வனமனமிருகம் உறுமியது:

சூனியம் நிரம்பிய வரி என்பது ஷேக்ஸ்பியரின் லியர் அரசன் கேட்கும் “How much do you love me?” என்பதே என்று சஞ்சய் தான் சொன்னதை கண்ணுக்குப் புலப்படாத மனக்கடிகாரம் ஒன்று தீர்மானித்ததாக நினைத்தான். எல்லோருடைய கடிகாரத்தின் முட்களும் டிக், டிக், டிக் என்று சீராக நகரும் என்றால் சஞ்சயின் மனக்கடிகாரம் மட்டும் டி-டாக்-டிக் என்று உயர்ந்து தாழ்ந்து ஒடும். அதன் சீரொலி டிக்குக்கு பதிலாக அது டாக் என்ற உயர்ந்து ஒலித்தபோது அவன் வேறொரு அகத்தூண்டலை அடைவதாக நினைத்தான். ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளாகவும் சிறிதும் பெரிதுமாக பல கடிகாரங்கள் ஓடுவதாகவும் அவையனைத்தும் சேர்ந்து வன்முறையான வனவிலங்காக இருப்பதாகவும் அவன் கற்பிதம் செய்து வைத்திருந்தான். பல கடிகாரங்களின் பல நேரக்கோடுகள் சந்திக்கும் மனித வாழ்க்கையின் சம்பவங்களை ஒரே நேர்கோட்டின் புள்ளிகளாக்கி அறிய முடியாது என்று அவன் உறுதியாக நம்பினான்.  சிறுவனாக இருந்தபோதிலிருந்தே தனிமை அவனை பலிகொண்டுவிட்டது; வயதாக வயதாக பகற்கனவுகளில் ஆழ்ந்திருக்கும் பழக்கம்  அதிகரிக்க கடிகாரங்களால் ஆன தன் மன வன மிருகமே தன் துணை என்று அவன் நம்பத் தலைப்பட்டான். 

சஞ்சய்க்கு ஏழு வயதாக இருக்கும்போது அவனுடைய அம்மா விசாலாட்சி அவனை சென்னை பொருட்காட்சித் திடலில் நடந்த கண்காட்சிக்குக் கூட்டிச்சென்றாள். ‘கடற்கன்னி காட்சி’ என்று தட்டி எழுதி அறிவிக்கப்பட்ட கூடமொன்றில்  பச்சை நிற மீன் செதில்களாலான இடுப்பும் வாலும் அசைத்து கண்ணாடித் தொட்டி நீரினுள் கிடந்த மச்சக்கன்னி சஞ்சயை வெகுவாக கவர்ந்தாள். கடற்கன்னி கூடத்தில் கோமாளி வேடமணிந்த காவலாளி ஒருவன் குழந்தைகள் கடற்கன்னி படுத்திருந்த கண்ணாடித் தொட்டியினருகே வராமலிருக்க கையிலிருந்த கம்பினால் தரையில் அடித்துக்கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும், குட்டிக்கரணங்கள் போட்டுக்கொண்டும் இருந்தான். கோமாளி பாடிய

“தட்டாமாலை தாமரைப்பூ
சுற்றிச் சுற்றி சுண்ணாம்பு
கிட்ட வந்தால் குட்டுவேன்
எட்டப்போனால் துப்புவேன்”

என்ற பாடலுக்கு கூடியிருந்த குழந்தைகள் கும்மாளமிட்டுச் சிரித்தார்கள். சஞ்சயின் மனதில் அப்போது உருவாகிக்கொண்டிருந்த கடிகார வன மிருகத்தில் புதிய அங்கமாய் ஒரு கடிகாரம் சேர்ந்தது; அது டி-டிக்-டாக்-டிக் என்பதினையே ‘கிட்டவந்தால் குட்டுவேன், எட்டப்போனால் துப்புவேன்’ என்ற பாடலின் லயம் போல ஒலித்தது. 

சஞ்சய் கடற்கன்னிகளைப் பற்றியே பொருட்காட்சிக்கு சென்று வந்ததிலிருந்து பேசிக்கொண்டிருந்ததால் விசாலாட்சி அவனுக்கு ஒரு வீடியோ விளையாட்டு வாங்கித் தந்தாள். கூந்தலை அவிழ்த்துவிட்டு தண்ணீருக்குள் வீடியோ திரையில் நீந்தும் மச்சக்கன்னிகளை  கூம்பு வடிவ வலைக்குள் பிடிக்க வேண்டும் என்பது விளையாட்டு. மச்சக்கன்னிகளை வலையில் பிடிக்கும்போது வலை பாறைகளிலோ, நீந்தும் முள் மீன்களின் மேலோ உரசிவிடக்கூடாது. கொரிய மச்சக்கன்னி என்று பிரிக்கப்பட்ட பிம்பங்கள் வீடியோ திரையின் அடியாழத்தில் நீந்துபவையாக இருந்தன; அவை சஞ்சயின் வலையில் சிக்குவதாக இல்லை. விசாலாட்சி சஞ்சயைத் தன் மடியில் தூக்கி வைத்து அந்த மச்சக்கனியை பிடிப்பதற்கு அவன் கூட சேர்ந்து விளையாடினாள்.

கொரிய மச்சக்கன்னியை வலையுடன் துரத்தி கடலின் ஆழத்துக்குள் செல்லச் செல்ல புதிது புதிதாய் உயிரினங்கள் பல வண்ணம் காட்டி ஓடின. தன் சித்திரக்கண்களைச் சிமிட்டி வா வா என்றழைத்து வாலாட்டிய அவள் ஆக்டோபசின் பின்னே மறைந்தாள். ரத்த வேட்கை கொண்ட கோரைப் பற்களை வாய் பிளந்து காட்டிய சுறா மீன்கள் வலையைக் கடித்துக் கிழிக்க சீறி வந்தன. சஞ்சயின் கையைப் பிடித்து வலையை அவற்றின் பற்களிடமிருந்து லாவகமாக சுழற்றி தப்பித்தபோது வனமிருக கடிகாரம் டிக்-டாக்-டிக் என்றது.  அடுத்து வந்த காட்சி விசாலாட்சிக்கு அதிர்ச்சியளித்தது. மச்சக்கன்னி இன்னும் கடலின் அடியாழத்துக்குச் செல்ல பல கடற்பசுக்கள் கூட்டமாய் வந்தன. அந்தக் கடற்பசுக்கள் தங்கள் மீன் வால் துடுப்பினை மேல் நோக்கி அசைத்து தங்களின் மனித யோனிக்களை விரித்துக் காட்டி பரிகாசம் செய்தன. விசாலாட்சி என்ன விளையாட்டை வாங்கிக்கொடுத்திருக்கிறோம் என்று தன்னைத் தானே நொந்துகொண்டாள். சஞ்சய் அறிந்தும் அறியாமலும் கடற்பசுக்களைப் பார்த்து கைகொட்டி சிரித்தான். எங்கோ ஒரு கடிகாரக்குருவி குக்கூ குக்கூ என்று ஒன்பது முறை கூவ அதைத் தொடர்ந்து ஆலயமணி ஒன்பது முறை நிதானமாக அடித்து ஓய்ந்தது. விசாலாட்சி சஞ்சயின் கை வழி வலையை வேகமாக வீசி கொரிய மச்சக்கன்னியைப் பிடித்தாள். “கிட்டப்போனால் குட்டுவேன், எட்டப்போனால் துப்புவேன்” என்று பாடியபடியே குழந்தை சஞ்சய் கொரிய மச்சக்கன்னியை கடலின் மேற்பரப்புக்கு கொண்டுவர அவள் தன் மீன் உடுப்பினை அவிழ்த்து எறிந்து மனித யோனி காட்டி, வுய் என்று நீண்ட விசிலடித்து, கைவிரல்களை உதட்டில் வைத்து காற்றில் முத்தமொன்றை பறக்கவிட்டு, முத்துமாலையொன்றினை சஞ்சயை நோக்கி வீசி எறிந்துவிட்டு மாயமாய் மறைந்துபோனாள்.

விசாலாட்சி அவனை அந்த விளையாட்டினை அதற்கப்புறம் விளையாட அனுமதிக்கவேயில்லை. சஞ்சய் பெரியவனாகி கல்லூரியில் படிக்கும்போது தற்செயலாய் அறிவியல் கலைக்களஞ்சியத்தைப் புரட்டிக்கொண்டிருந்தபோது கடற்பசுக்களுக்கு மனித யோனியைப் போன்றே தோற்றமுடைய பிறப்புறுப்புகள் உண்டு என வாசித்தான். கடற்பசுக்களை அதனால் மச்சக்கன்னிகள் என்று நினைத்து அவற்றுடன் உடல் உறவில் ஈடுப்பட்ட மாலுமிகளே மச்சக்கன்னி என்ற புராதன தொன்மம் உலகெங்கும் உருவாகக் காரணமாயிருந்தவர்கள் என்றும் அவன் வாசித்துத் தெரிந்து கொண்டான். தான் சிறு வயதில் விளையாடிய வீடியோ விளையாட்டின் ஆபாசம் என தன் தாய் கருதியது உண்மையில் சில அறிவியல் உண்மைகள் சார்ந்தது என்ற விபரம் அவனுக்கு ஆச்சரியமளிப்பதாய் இருந்தது.

விசாலாட்சி சஞ்சய்க்கு அவனுடைய தந்தையைப் பற்றி எதுவுமே சொல்லாமல் வளர்த்தாள். சஞ்சய் கர்ப்பத்தில் இருந்தபோது விமான விபத்தொன்றில் தென் கொரியாவைச் சேர்ந்த சேஜோ தீவின் அருகே இறந்துவிட்டதாக மட்டுமே அவன் அறிந்திருந்தான். தந்தை நஞ்சுண்டன் அவனுக்கு ஒரு மங்கலான புகைப்படமும் பெயரும் மாத்திரமே. கொரிய மச்சக்கன்னிகள், கடற்பசுக்கள் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் வழக்காறுகளை வாசித்துத் தெரிந்து கொண்டபோது நஞ்சுண்டன் சேஜோ தீவருகே மரண்மடைந்தார் என்ற செய்திக்கும் மச்சக்கன்னிகளுக்கும் இடையே ஏதோ ஒரு அறிய இயலாத உறவு இருப்பதாக சஞ்சய் நினைக்க ஆரம்பித்தான். விசாலாட்சியுடன் தன் தந்தையைப் பற்றி அவன் அதிகமும் தெரிந்து கொள்ளவிரும்பிய கல்லூரி நாட்களில் அவன் தொடர்ந்து கடல் வாழ் உயிரினங்களைப் பற்றியும் அவன் மேலும் மேலும் வாசித்தான். 

விசாலாட்சிக்கு நஞ்சுண்டனைப் பற்றியும் அவன் மரணத்தையும் பற்றி பேசுவது வேதனை நிரம்பிய நினைவுகளைத் தூண்டுவதாயிருந்தது. விதவையாய் தான் இறந்த கணவனின் குழந்தையினைப் பெற்றெடுக்க வைராக்கியமாய் இருந்ததை அவள் கொடுங்கனவெனவே மறக்க விரும்பினாள். நஞ்சுண்டன் ஒரு விமான ஓட்டி அவன் விமான விபத்தில் இறந்தபின் அவன் உடல் கூட கிடைக்கவில்லை என்பதைத் தவிர அவள் சஞ்சய்க்கு வேறெதுவும் சொல்லவில்லை; சொல்ல விரும்பவும் இல்லை. வீடியோ விளையாட்டுக்களிலும், புத்தகங்களிலுமே சஞ்சயின் குழந்தைபருவம் கழிந்துவிட்டதாக இருந்தால் விசாலாட்சியின் தனிமை அவளுடைய வங்கி வேலையிலேயே கழிந்துவிட்டது. 

சஞ்சயை அவன் வேலை பார்த்த கம்பெனி கொரியாவுக்கு அனுப்பப்போகிறது என்று தெரியவந்தபோது நினைவுகளின் கடிகாரங்கள் அவர்கள் நனவுகளில் துடிப்புடன் இயங்க ஆரம்பித்தன. மார்கழிமாதத்தின் குளிர் உடலில் உறைக்கும் முன்னிரவில் சாப்பாட்டுத் தட்டின் முன் உட்கார்ந்திருக்கையில் விசாலாட்சியிடம் ஏதோ சட்டினியில் உப்பு போதவில்லை என்பதைச் சொல்வது போல “அம்மா, கொரியாவுக்கு போகிறேன்” என்றான் சஞ்சய். விசாலாட்சி நீர்த்தொட்டியின் அடையிலிருந்து மேலெழும்பி வரும் மீன் போல மெதுவே வெளியே வந்து “என்ன?” என்றாள். சஞ்சய் ஒருகையில் கை பேசியில் குறுஞ்செய்திகளைப் பார்த்துக்கொண்டே, மறுகையால் தோசை விள்ளலை வாயில் போட்டவாறு இருந்தான். விசாலாட்சிக்கு இப்போதுதான் சற்று முன்புதான் தன் முலைகளில் முட்டமுட்ட பாலருந்திய குழவி இது  அதற்குள்ளாகவா இப்படி வாலிபனாய், அந்நியனாய் வளர்ந்து நிற்கிறது  என்று தோன்றியது.

“கொரியா போரேன்மா. ஒரு மாசம். அங்கே டிரைய்னிங். நானும் சின்னச்சாமியும் போறோம்”

விசாலாட்சியின் வலது இமை தன்னிச்சையாய் துடிக்க ஆரம்பித்தது. இமைத்துடிப்புகளை அளக்கும் கடிகாரங்கள் இருக்கின்றனவா என்று அவள் தனக்குள் கேட்டுக்கொண்டாள். 

“கொரியாவா?”

“யெஸ்மா. அங்கதான எங்க ஹெட்குவார்ட்டர்ஸ் இருக்கு?”

“அப்பவோட தெவசம் வருதேடா, அடுத்த மாசம்”

“ஹேங் ஆன். அம்மா நீ கொரியாலதான அப்பா போனதா நீ சொல்லுவ? அங்கயே திதி பண்ணிடவா”

விசாலாட்சியின் இரு இமைகளும் கடகடவென்று துடித்தன. பெரும் வலியில் ஒரு உடல் வானில் வெடித்து சிதறுவதாய் அவள் கண்ட கொடுங்கனவு மீண்டும் ஒரு முறை மனத் திரையில் ஓடி மறைந்தது. டிக்-டாக்-டிக்.

“அப்பா திதிக்கு வருவாரில்லையா அந்த குருக்கள்கிட்ட கேட்டுச் சொல்றேன்”

அவர்கள் அதற்குப் பின் அமைதியாய் சாப்பிட்டு முடித்தார்கள். சீக்கிரமே அவர்கள் தத்தம் அறைகளுக்கு உறங்கச் சென்றார்கள். தூக்கம் பிடிக்காமல் சஞ்சய் கொரியா, கடற்பசுக்கள், ஆழ்கடல் உயிரினங்கள் என்று இணையத்தில் வாசித்திருந்து விட்டு, கட்டிலில் விழுந்து கிடந்தான். ஏதேதோ கொடுங்கனவுகளைக் கண்டு அம்மா பக்கத்து அறையில் விசும்பும் சப்தம் இரவு முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது.

எப்போது உறங்கினான் என்று சஞ்சய்க்கு ஓர்மையில்லை; ஆனால் அவனும் மனித யோனியை தன் பிறப்புறுப்பாய் தூக்கிக்காட்டிவிட்டு கடலாழத்தில் நீந்தி மறையும் கடற்பசுவைக் கனவில் கண்டு மெலிதாய் விசும்பல் போலொரு ஒலியெழுப்பினான். அறியப்படாத தாபங்களோடு உறுமியது கடிகாரங்களாலான மனவனமிருகம்.






   

Tuesday, January 14, 2014

அழாதே மச்சக்கன்னி! | நாவல் | அத்தியாயம் 2

கைமுகக்கண்ணாடி கண்டதும் குமுறியதும்:




கைமுகக்கண்ணாடி கண்டதும் குமுறியதும்:

மேற்புறங்களின், தோற்றங்களின் விஞ்ஞானி கண்ணாடி என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. கண்ணுக்குப் புலனாகாதவை அல்ல கண்ணுக்குப் புலனாகுபவையே ரகசியங்கள் நிறைந்தவை. தோற்றங்களின் ரகசியங்களை எளிதில் அவிழ்த்துவிட முடியாது என்பதையே கண்ணாடிகள் உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதிலும் வெண் மெழுகுப்பதுமை போன்ற அழகுப்பதுமைகளான கொரியப் பெண்களின் முகங்களில் என்ன ரகசியங்கள் இருக்கின்றன என்று யாரால் சொல்ல முடியும்? கைமுகக்கண்ணாடிக்கு நினைவுகளும் கிடையாது. இன்று இப்போது இங்கே இந்த கணத்தில் தன் அளவுக்கு உட்பட்டு தெரிவதே உச்சபட்ச உண்மை; அதில் அழிந்த முந்தைய கணமும் இல்லை அறியப்படாத அடுத்த கணமும் இல்லை. அழகின் தர்க்கமும் அதுதான். அந்த அழகின் தர்க்கத்தில் கரையாத பெண் முகமும் உண்டோ?

ஒளியின் பேராழத்தில் மறைந்திருக்கும் உதரக்கோது என பெண் முகத்தில் மறைந்திருக்கும் வேட்கையின் ரகசிய சமிக்ஞையினை கணமேனும் பிடித்து விசிறுவதற்காகப் படைக்கப்பட்டது கை முகக் கண்ணாடி; தானற்றது எனவே அதுவானது.

கள்ள இந்தியன் யுங் மின்னுக்குக் கொடுத்த கைமுகக்கண்ணாடி போகிற போக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. விரைத்த வளப்பமான ஆண்குறியின் மரச்சிற்பம் அதன் கைப்பிடி. செந்தேக்கு மரத்தில் வேலைப்பாடுகளுடன் ஆனது. அந்த மரச்சிற்பத்தின் கைக்கொள்ளலில் விநாடியேனும் முகம் சிவக்கும் பெண்முகம் காட்டும் கண்ணாடி.  யுங் மின்னுக்கு அந்தக் கண்ணாடி இந்தியனின் பரிசாய்ப் போய் சேர்வதற்கு முன் அதன் பழைய பொதியிலிருந்து விடுவிக்கப்படாமலேயே இருந்தது. இந்தியனின் முகத்தினை பிடிப்பதற்கான சந்தர்ப்பம் அதற்கு கிடைக்காமலேயே அது வரை இருந்தது.  புதியப் பரிசுப்பொதியில் அதை வைப்பதற்காக அவன் இசையரங்கில் வெளியில் எடுத்தபோதே பெண் முகங்களுக்கான ஏக்கத்துடன் வெளியுலகம் கண்டது அது. பட்டுச்சிட்டு அப்போது அறிவித்து பாடியது “ பார் பார் பாரங்கே நட்சத்திரங்களின் சிற்றலைகளை சுந்தரவதனங்களில் பிடிக்கக்காத்திருக்கும் காலத்தின் ஆடி” என்று.

இந்தியனின் முழ நீளப் பெயரினை சொல்வதேயில்லை பட்டுச்சிட்டு. இசையரங்கத்தின் மேற்கூரையில் இறந்தோர் பாடலிலிருந்து நிகழ்காலத்திற்குள் தப்பி வந்து வால் சிலுப்பி அமர்ந்தபோது கதை சொல்வதில் தன் போட்டியாளர் இந்தக் கண்ணாடிதான் என்றும் சொன்னது பட்டுச்சிட்டு. விருட் விருட் என கிம் கி வோனும் இந்தியனும் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு மேல் இரு முறை பறந்து கைமுகக்கண்ணாடிக்கு நல்வரவு முகமன் கூறியபோது பொறாமையில் சமைந்தது கண்ணாடி. பட்டுச்சிட்டின் பருத்த சிறு  வயிற்றினையும் அதன் சிலுப்பு கொண்டையினையும் வாலினையும் கணங்களில் அழியும் சித்திரங்களாய் பிடித்ததால் உண்டானதல்ல கண்ணாடியின் பொறாமை. தான் ஓரிடத்தில் உறைந்திருந்து தன்னில் பதியும் காட்சிகளை மட்டும் கதையாய் சொல்ல, பட்டுச்சிட்டோ பறந்து பறந்து எவ்வளவு பார்க்கும் எவ்வளவு கதை சொல்லும் எனக் குமுறியது கண்ணாடி. அந்த சமயத்தில்தான் நீல நிறப் பாவாடைப் பெண்கள் கூட்டாக ஏதோ உச்சாடனம் ஒன்றை கொரிய மொழியில் ஓதினார்கள். என்ன பாடுகிறார்கள் என்று கேட்டான் இந்தியன் தன் கையிலிருந்த கண்ணாடியை சிறிது மேலே தூக்கிப்பிடித்தவாறு. இந்தியனுக்கு விஷமம் சொட்டும் அகண்ட ஆழமான விழிகள், மெல்லிய உதடுகள், கனத்த கரிய மீசை, தனித்த குணங்களற்ற மூக்கு. கவி கிம் கி வோன் “மொழிபெயர்ப்பது கடினம் ஆனால் மேக்பத் நாடகத்தில் சூனியக்காரிகள் பாடுவார்களே “fair is foul, foul is fair” என்று, அதற்கு நிகரான வரிகள் இவை” என்றான். இந்தியனின் கண்களில் விஷமம் மேலும் ஏறியது. “மேக்பத்தில் சூனியக்காரிகள் பாடுவது நடைமுறை; சூனியத்தின் அடர்த்தி ஏறிய வரியினை லியர் அரசனே சொல்கிறான்” என்று சொன்ன இந்தியன் மேலும் கண்ணாடியை உயர்த்திப் பிடித்தான். எந்த வரி அது என்று கேட்ட கிம் கி வோன் பெண்களைப் போல நீண்ட கூந்தல் வளர்த்திருந்தான்; ஒடுங்கிய கன்னம், இடுங்கிய கண்கள். ஆனால் அந்தக் கண்களில் வானில் அனாதையாய் விரைந்தழியும் எரிகல்லின் தீவிரம் இருந்தது. “கவியல்லவா நீ உனக்குத் தெரியாததா” என்ற இந்தியன் கண்ணாடியை உயர்த்தி மேடையில் இருந்த யுங் மின்னை நோக்கி காட்டியவாறே “How much do you love me?” என்றான்.    

யுங் மின் தற்செயலாய் நிமிர்ந்து பார்த்தாள். காயக்வத்தை வாசிப்பதிலும் பாடுவதிலும் ஆழ்ந்திருந்த அவள் பார்வை விலகிச் செல்லும் படகுகளைப் பார்க்கும் கரைவாசிகளின் அலட்சியத்தை ஒத்திருந்தது. ஆனால் கண்ணாடியிலோ யுங் மின்னின் பார்வை, ஒளி ஊற்று ஒன்றின் இமை திறந்த அமிழ்தாயிற்று. “என் ஆத்மாவைக் கரைத்து நான் உன் கண்களுக்கு அஞ்சன மை தீட்டவா” என்று தமிழ்க் கவியொருவனின் வரியொன்றினை தன்னிச்சையாய் சொல்லியபடியே கண்ணாடியை பரிசுப்பொதியினுள் வைத்தான் இந்தியன். 

பட்டுச்சிட்டு “அந்தரத்தில் பறக்கிறது பார், அதிசயத்தைப் பார்” என்று காயக்வம் காற்றில் மேலெழும்பி பறந்ததை அண்டரண்ட பட்சி போல கூவி கூப்பாடு போட்டு உலகுக்கு அறிவித்தபோது இருள் அடர்ந்த பரிசுப்பொதிக்குள் அசைவற்றிருந்தது கண்ணாடி. “ஒரு கதையைச் சொல்வதால் ஏற்படும் மனப்பதிவு போன்றதே உலகம்” என்ற யோகவசிஷ்டத்தின் வாக்கியத்தை முணுமுணுத்துக் கிடந்தது அது.

யுங் மின் பரிசுப்பொதியைத் திறந்து அதன் கைப்பிடியைப் பற்றியபோது அவள் விரல்களின் மெலிதான நடுக்கத்தை குஷாலாக ஏற்றபடியே இருளிலிருந்து வெளிவந்தது கண்ணாடி. யுங் மின் முந்தைய நாள் மேடை நிகழ்ச்சியின் ஒப்பனைகள் ஏதுமற்று துடைத்த வெண்பளிங்கென இருந்தாள். அவள் முகம் மட்டுமே பிம்பமாய் கண்ணாடியின் சட்டகத்தினுள் அடங்கியபோது இந்தியனும் கிம் கி வோனும் பேசுவது வேறொரு உலகத்திலிருந்து வரும் சப்தங்கள் போல கேட்டுக்கொண்டிருந்தன. தன் முகத்தின் மோகன பிம்பத்தை வேறெந்த கண்ணாடியும் இவ்வளவு துல்லியமாகக் காட்டியதில்லை என்று நினைத்த யுங் மின் தன் பிம்பத்தின் மேல் மையல் கொண்டாள். தன் போட்டி கதை சொல்லியான பட்டுச்சிட்டு இந்த கணத்தை என்றுமே அறியமுடியாது என்று கண்ணாடி பெருமிதம் அடைந்தது.

தன் நீண்ட கூந்தலை அவிழ்த்துவிட்டு தன் முகத்தை மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள் யுங் மின். கண்ணாடியின் சட்டகத்திற்குள் அவள் முகம் பழமையான தைல ஓவியம் போல் இருப்பதாகச் சொன்னான் அவள் பின்னால் நின்ற இந்தியன். ஆதி குகைகளில் முதலில் வரைந்த அப்சரசின் வண்ண தைல ஓவியம் போலத்தான் உண்மையில் இருந்தது கண்ணாடியில் தெரிந்த யுங் மின்னின் முகம். ஒளியின் ஊற்று போன்று ஆழம் பெற்ற கண்கள்; நேர்கோட்டில் விழுந்து நீளும் கூந்தல். அவள் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்று யாராலுமே அறிய முடியாது.

இந்தியாவின் மிகச் சிறந்த ஆசாரிகளால் தேக்கு மரத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன; பேரழகிகளும் அரசிகளும் பயன்படுத்திய கலைப் பொருள் இந்த கண்ணாடி என்று தொடர்ந்தான் இந்தியன்.

“உங்கள் பெயரை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள்” என்ற யுங் மின்னின் உதடுகளில் செவ்வரிகள் ஓடின; வெண்பளிங்கு கழுத்து மெலிதாக நடுங்கியது. 

“சஞ்சய்”

“சஞ்சய்” என்று மீண்டுமொருமுறை அவள் உச்சரிப்பதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான் கிம் கி வோன்.

யுங் மின் இயல்பாகத் தன் கைமுகக்கண்ணாடியை இடுப்பின் பின் கச்சையில் சொருகிக்கொண்டாள். யுங் மின்னின் பின்பாகத்தில் பளிங்கின் வழவழப்பினை எதிர்பார்த்து இடுப்பு கச்சையின் வழி இறங்கிய கண்ணாடியின் கைப்பிடிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. மீனின் சிறு சிறு சொர சொரப்பான செதில்களால் நிறைந்திருந்தது யுங் மின்னின் பிருஷ்டங்கள்.  அவளுடைய கீழ் முதுகில் முகம் பதித்த கண்ணாடி பெருவெளியின் எல்லையின்மையை ரோமக்கால்களற்ற பெண் சருமமாகக் கண்டது.

யுங் மின்னின் பிருஷ்டங்களின் சிறு சிறு செதில்கள் லேசான பிசுபிசுப்புடைய கடற்பாசி போல அடர்ந்திருந்தன. கடலாழத்தின் நினைவுகளை அவை சுமந்திருக்குமா என்பதை அறியமுடியாமல் தவித்தது கைப்பிடி. கடலா பாலையா என அறிய முடியாதவாறு விரிந்திருக்கிறதே எனக் குமுறியது கண்ணாடி. பரிசுப்பொதியின் அந்தகார இருளின் எல்லையின்மை ஒரு ரகம் என்றால் இந்த சரும வெண் கடல் இன்னொரு வகை எல்லையின்மை என்று சொல்லிக்கொண்டது கண்ணாடி.

யுங் மின்னின் பின்பாக மீனின் செதில்கள் வெல்வெட்டின் மென்மையைக் கொண்டிருந்தன. அவள் நடக்கும்போது அவற்றின் விசித்திர சலனம் அபூர்வ கிளர்ச்சியை உண்டாக்குவதாயிருந்தது. ஆண் விரல்களின் தாபத்துடன் யுங் மின்னின் இடுப்புக் கச்சையில் அலைவுற்ற கண்ணாடியின் கைப்பிடி  பட்டுச்சிட்டு இவ்வனுபவத்தை எப்படிச் சொல்வாள் என்று நினைக்காமலில்லை.

கண்ணாடிக்கு அன்றிரவு இவையெல்லாவற்றையும் விட பெரிய அனுபவம் காத்திருப்பதை அது அறிந்திருக்கவில்லை. ஜிண்டோவின் கடற்கரையில் யுங் மின்னை துரத்திய கிம் அவளுடைய நீலப்பாவாடையைக் கிழித்தபோது கண்ணாடி தவறி கீழே விழுந்ததில்லையா அப்போது அது கொரிய மண்ணின் மேல் விரிந்திருந்த வானத்தைக் கண்டது. ஒரே நாளில் யுங் மின்னின் முகம், சருமம், வானம் என மூன்று வகை எல்லையின்மைகளைக் கண்டு திகைத்து சம்பவங்களற்று உறைந்திருக்கையில் கண்ணாடியின் மேற்பரப்பில் விழுந்தது ஒற்றை ரத்தத்துளி.

மேற்புறங்களின் எல்லையின்மைகளில் நாம் தொலைந்துவிடாமல் காப்பாற்றுவது ரத்தத்துளிகளின்றி வேறென்ன? 









Monday, January 13, 2014

அழாதே மச்சக்கன்னி! | நாவல் | அத்தியாயம் 1

Reference photo of a musician playing Gayageum. Thanks to http://en.wikipedia.org/wiki/Gayageum  Disclaimer:படம் நாவலின் இந்த அத்தியாயத்தில்  குறிப்பிடப்படும் 'காயாக்வம்' என்ற இசைக்கருவி எது என காண்பிப்பதற்கு மட்டுமே மேற்கண்ட விக்கிப்பீடியா புகைப்படம் தரப்பட்டுள்ளது. மற்றபடி புகைப்படத்திற்கும் நாவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை  
------------------------------------------------------------------------------------------------------------

பட்டுச் சிட்டு பாடியதாவது:

கிம் கி வோன்! என்ன செய்கிறாய் அவளை! பதினேழாவது குப்பி வோட்காவில் நீ நிலை தடுமாறிவிட்டாயா? அல்லது பூரண சந்திரனின் கிரணங்கள் உன் மனதினை சிதைத்துவிட்டனவா? கொண்டையாட்டி குருவி போல அவள் தன் வாரி முடிந்த கூந்தலில் செருகிய மரச் சீப்பினை சிலுப்பிக்கொண்டு தன் நீல நிறப் பாவாடையை தன் நுனி விரல்களால் பிடித்துக்கொண்டு மிதந்து பறந்து ஓடியது உண்மைதான் எனினும் உண்மைதான் எனினும் அவளைத் துரத்திப் பிடித்தது சரியல்ல கிம் கி வோன். உன் மூர்க்கப் பிடியினால் அவளுடைய நீலப்பாவாடை கிழிந்து அவளுடைய பிஞ்சு வெண் பின்னந்தொடைகள் வெளித்தெரிகின்றன. அவளுடைய குறு முலைகள் விம்முகின்றன; அவள் கழுத்தில் ஓடும் பச்சை நரம்பு துடிக்கிறது; அவள் அந்த இந்தியனிடம் பரிசாகப் பெற்ற கைமுகக் கண்ணாடி அவள் இடுப்புக் கச்சையிலிருந்து நழுவி விழுந்து தான் காட்டுவது எது என்று தெரியாமல் திகைத்துக் கீழே கிடக்கிறது

அவள் தன் வலது கையால் தன் கூந்தலில் செருகியிருக்கும் மரச்சீப்பினை விரைந்து எடுக்க பட்டுத் துணியெனவே அவிழ்ந்து சரிகிறது அவள் கூந்தல். திருத்தப்பட்டு வரையப்பட்ட புருவங்களுக்குக் கீழே அடி பட்ட நாகமென மின்னுகின்றன அவள் கண்கள். ஜாக்கிரதை கிம் கி வோன்அந்த மரச்சீப்பின் பற்கள் ஓவ்வொன்றும் கூரிய அம்பினைப் போன்றது. மொத்தம் பதினேழு பற்கள். நீ கவிழ்த்த ஒவ்வொரு குப்பி வோட்காவுக்கும் ஒரு பல் என உன் குரல்வளையில் குருதி குமிழியிட இறங்கும் அந்த சீப்பு

கிம், கிம், கிம்கி வோன், ஏனிப்படி ஆகிவிட்டாய் நீ? அவளுடைய அவிழ்ந்த கூந்தலும், மென் முலைகளும் உன்னை ஏன் இப்படி உன்மத்தமடையச் செய்கின்றன? ஜிண்டோ தீவின் ரோஜா நிற வோட்காவின் மேல் பழியைப் போடாதே; ஜிண்டோவின் புகழ் பெற்ற மதுவல்லவா அது? ஜிண்டோவின் சகதிக்கடற்கரை பீப்பாய் பீப்பாயாய் ரோஜா நிற வோட்காவைக் கண்டிருக்கிறது. எண்ணற்ற கொரிய தசைநார்களை அது வலுப்படுத்தியிருக்கிறது. 

யுங் மின் நீ ஜிண்டோவின் நாய்களை அழைத்தது தப்புதான். கிம் கி வோன் உன்னைத் துரத்தி துரத்தி ஓடி வந்தபோது அவன் வாயில் வழிந்த எச்சிலை கண்டு ஏன் பயந்தாய் நீ? அந்த இந்தியன் தந்த முகக்கண்ணாடியை எடுத்து அவன் முகத்திற்கு நேராக நீட்டியிருக்க வேண்டும் நீ. தன் எச்சில் வழியும் மோவாயையும் போதையில் சிவந்த இல்லிக்கண்களையும் காமத்தில் துடிக்கும் கன்னக்கதுப்புகளையும் கண்டு பதறி நானா இவன் நானா இவன் என்று கிம் கி வோன் தெளிந்திருப்பான்; அவன் ஒரு கவி என அறியாதவளா நீ. 

“மீட்டலுக்கு காத்திருக்கும் கயாக்வம்,
 கடற்பாசி மணக்கும் உன் கழுத்தின் பச்சை நரம்பு” 

என்ற கிம் கி வோனின் கவிதை வரியை எப்படி மறக்கலாம் நீ? உன் மென் கழுத்தின் நரம்பினை கயாக்வத்தின் பட்டு நூலுடன் ஒப்பிட்ட கின் கி வோனா உன் நீலப்பாவாடையை வேண்டுமென்றே கிழித்திருப்பான்? நினைத்துப்பார் யுங் மின் நீ நேற்றிரவு கயாக்வம் வாசிக்க மேடையில் அமர்ந்திருந்தாய். உன் செந்நிற நீள்பாவாடை மூடிய தாமரை மொட்டென உன்னைச் சூழ்ந்திருக்க அந்த மொட்டில் முகிழ்த்த வெண் தேவதையென நீ நடுவில் இருந்தாய். அரங்கத்தின் முன் வரிசையில் கிம் கி வோனும் அந்த இந்தியனும் அமர்ந்திருந்தனர். இந்தியனின் உதடுகளில் நெளிந்த அந்த துஷ்டச் சிரிப்பினை நீ கண்டுகொண்டாய். அந்த சிரிப்பு ஒரு அழைப்பு, உன் இதயத்தின் ரகசியங்களை மொழி தாண்டி, கடல் தாண்டி, நான் அறிவேன் எனச் சொல்லும் சிரிப்பு. பெண்ணே யுங் மின்! உன் அதிகாலைக் கனவுகளை கறுப்பு சதையின் வசீகரம் ஆக்கிரமித்திருப்பதை எப்படி அறிவான் இந்த இந்தியன்? அவன் உனக்கு பரிசளிக்கப் போகும் கைமுகக்கண்ணாடியை பரிசுப் பொதியில் உள்வைப்பதற்கு முன் அதை எடுத்து கிம் கி வோனிடம் காட்டினான் இல்லையா அதே கணத்தில்தான் உன் ஓரக்கண் பார்வையை அந்தக் கண்ணாடி வழியே சந்தித்தான். நாடகீய கவிகளைப் போல எல்லாவற்றையும் பெரிதுபடுத்திக் காட்டும் கண்ணாடி அல்லவா அது? யுங் மின் உனக்கு எப்படி தெரிந்தது அவன் உன் கண்களை கண்ணாடி வழி சந்தித்தான் என்று? அப்படித் தெரிந்ததால்தானே உன் கால்கள் நீ அது வரை அறியாத பலகீனத்தில் துவண்டன; உன் கைகள் தளர்ந்து கயாக்வத்தின் பட்டு நூல் நரம்புகளில் விழ லயமற்று அதிர்ந்தது கயாக்வம். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

கண்ணே யுங் மின் அதிர்ந்த கயாக்வம் அந்தரத்தில் காற்றில் ஏறி மிதந்த அதிசயத்தை  அந்த கறுப்பு இந்தியனின் அகண்ட விழிகள் உன் கண்களைச் சந்தித்த தருணம் என்று நினைக்கிறாயே அது தவறு. கை முகக்கண்ணாடியில் உன் ஓரக்கண் பார்வையினை இகழ்ச்சியின் முறுவலோடு எதிர்கொண்டானே அந்தக் கறுப்பன் அதை கிம் கி வோன் பார்த்ததால் நிகழ்ந்தது அந்த அதிசயம். காற்றில் காமத்தின் வெப்பம் ஏறியிருக்கிறது என்று அவன் மனதினுள் முனகியதை இன்னும் கரையேறாத ஆத்மாக்கள் கேட்டுவிட்டன. கரையேறாத ஆத்மாக்களின் காமத்திற்கு ஏங்கிய பெருமூச்சல்லவா காற்றில் மிதந்த கயாக்வத்தின் அதிர்வு?

நேற்றே கைமுகக்கண்ணாடியினை பரிசாகப் பெற்றிருக்க வேண்டும் நீ. நிகழ்ச்சி முடிந்தபின் கிம் கி வோனும் கறுப்பனும் உன்னை சந்திக்க மேடைக்கு பின்புறம் வந்தார்களே அப்போதே நீ அவனுடைய பரிசினை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஏன் நாளை வா என்று சொல்லி அனுப்பினாய்? அவன் இரவு முழுவதும் கைமுகக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து உன் முகத்தை கற்பிதம் செய்துகொள்ளட்டும் என்றுதானே? கிம் கி வோன் நேற்றிரவெல்லாம் எப்படித் துடித்தான் தெரியுமா? கறுப்பனின் உதடுகள் உன் மெலிந்த கழுத்து எலும்புகளில் தாபத்துடன் அலைந்து அலைந்து சிறு சிறு பற்கடிப்புகளோடு முத்தமிடுவதாக அவன் கற்பனை செய்தான். அவனுடைய அறையில் வோட்கா தேடி இல்லாததால் ஏமாந்து அரிசிக்கள்ளை போத்தல் ஒன்றினை  அப்படியே வாயில் கவிழ்த்தான். அவன் உன்னை இன்று துரத்தியபோது அவன் வாயில் வழிந்தது எச்சிலல்ல அரிசிக்கள்.

கறுப்பு இந்தியன் இன்று உனக்கு பரிசளிப்பதற்கு வந்தபோது அவன் ஏன் கிம் கி வோனை தன்னுடன் கூட்டிவரவில்லை என்று கேட்டாயா? நீ ஏன் கேட்கப்போகிறாய். அதிசயம் அளித்த புகழ், கரையேறாத ஆத்மாக்களின் தொடர்பு, மினுமினுக்கும் கறுப்பு சதையின் கவர்ச்சி என்று மயங்கிக் கிடந்தாய். 

கிம் கி வோன் நீ கனவில் கண்ட காட்சியினை அப்படியே செயல்படுத்துகிறாயே, நாய்களோடு நாயாகிவிட்டாயா நீ? யுங் மின்னின் வெள்ளை ரவிக்கையை கிழித்து அவளின் கழுத்தெழும்புகளில் சிறு பற்கடிப்புகளோடு முத்தமிடுகிறாய். கிம் கி வோன் நிறுத்திவிடு உடனடியாக நிறுத்திவிடு. அலைகளற்று இருக்கிறது ஜிண்டோவின் கடற்கரை. அதன் சாம்பல் நிற சகதியில் ஆங்காங்கே பட்டுத் தெறிக்கிறது தூரத்து வெளிச்சம். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறது கை முகக்கண்ணாடி. பூரணச் சந்திரனின் ஒளியில் வெளிறி நீண்டிருக்கிறது கடற்கரை. ஓ நாய்களை மறந்துவிட்டேனே யுங் மின் அழைத்த நாய்கள் அனைத்தும், ஆம் அவற்றை எண்ணிவிட்டேன், சரியாக பதினோரு நாய்கள் உங்களைச் சுற்றி நிற்கின்றன. நிறுத்திவிடு கிம் நிறுத்திவிடு. கரையேறாத ஆத்மாக்களின் கூட்டத்தில் சேர்ந்துவிடாதே. உன் பாவத்திற்கான வரிகளை என்னை இறந்தோர் பாடலில் இசைக்க வைத்துவிடாதே.  நாளை அதிகாலையில் வானில் வட்டமிடும் செம்போத்துகள் கிம் கி வோனின் பாவங்களை சொல்லி உம் கொட்டி பறக்கச் செய்துவிடாதே. எப்படித் துடிக்கிறாள் பார் யுங் மின். அவள் உன்னிடமிருந்து தப்பிக்க சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல துடிப்பதை பார். கரையேறாத ஆத்மாக்களின் முன் நிகழ்த்த வேண்டிய அவல நாடகமா இது? 

யாரங்கே, யாரது அங்கே பட்டுச்சிட்டு வார்த்தைகளின் அழகுக்கு நிகழ்வின் உண்மையினைக் காவு கொடுப்பவள் என்று சொல்லியது? கரையேறாத ஆத்மாக்களின் கூட்டத்தினை நான் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்றா நினைக்கிறீர்கள். ஜிண்டோவின் நாய்களை விட நான் உங்களை நன்றாகவேப் பார்க்கிறேன் நன்றாகவே கேட்கிறேன். 

யுங் மின் தன் தலையில் செருகியிருந்த சீப்பினை எடுப்பது கண்டு நாய்கள் குரைக்கின்றன. அமானுஷ்யமான குரைப்பு அது, வரப்போவதை அறிவிக்கும் குரைப்பு அது. போதையில் உனக்கு எதுவும் கேட்கவில்லையா கிம் என்ன வகையான போதை இது? எத்தனை தடவை யுங் மின்னின் மென்மையை நினைத்து ஏங்கியிருக்கிறாய். நாய்கள் ஏன் உன் மேல் பாயாமல் ஏதோ மந்திர வளையத்திற்கு அப்பால் நிற்பவை போலவே நிற்கின்றன. கரையேறாத ஆத்மாக்களுக்கு இந்த வன் கொடுமையை பார்ப்பதிலுள்ள ஆர்வமா. யாரிந்த உதவிக்கு வந்த நாய்களின் கண்களைக் கட்டியது? 

நாய்கள் மேற்நோக்கி ஊளையிடுகின்றன; முன் கால்களைத் தூக்கி தூக்கி கண்ணுக்குப் புலப்படாத சுவரைப் பிராண்டுகின்றன. நட்சத்திரங்கள் கவலையற்று மினுங்குகின்றன. நிலவொளிக்குத் தெரியுமா வன்கொடுமைக்கும் இசை நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசம்?

வேண்டாம் கிம் கி வோன் அவளுடைய நீலப்பாவாடையை கிழிப்பதை நிறுத்து. யுங் மின்னின் கைகளை இறுக்கிப்பிடித்து சகதியில் அமுக்குகிறானே இந்தக் கிராதகன், கேட்பாரில்லையா. 

அதோ தன் பதினேழு பற்கள் கொண்ட மரச்சீப்பினை ஓங்கிவிட்டாள் யுங் மின். 


Sunday, January 5, 2014

பேரழிவிற்கான சங்கல்பம்: நடேஷின் ஓவியங்களில் காணப்படும் பதற்றம்

ஓவியர் மு.நடேஷ்

நடேஷின் ஓவியங்கள் என்னை எப்பொழுதுமே திகைப்பில் ஆழ்த்துபவை; ஏனெனில் நடேஷின் ஓவியங்கள் பதற்றம் நிறைந்தவை; அவற்றின் கோடுகளும் நிறங்களும் நமது மென் உணர்ச்சிகளை கீறிக் காயப்படுத்துபவை. நடேஷின் ஓவியங்கள் கச்சாவாக, முழுமையாக்கப்படாமலேயே கைவிடப்பட்டவை என்ற தோற்றங்களைக் கொண்டவை; அந்தத் தோற்றங்களே அவற்றின் நோக்கங்கள் என்பது நமக்கு உடனடியாகப் புரிவதில்லை என்பது நடேஷின் குறைபாடல்ல. நடேஷின் ஓவியக்கண்காட்சிகளின் போதோ, அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை வைத்தோ, அவருடைய ஃபேஸ்புக் பதிவுகளைப் படித்தோ அல்லது நேர்பேச்சிலோ அவருடைய ஓவியங்களுக்கான விளக்கங்களை முழுமையாகப் பெறமுடியாது; ஏனெனில் அவை அவருடைய ஓவியங்களின் பதற்றத்திற்கு தொடர்புற்ற  வேறு தளங்களைப் பற்றி சொல்வதாக இருக்கும்.  நடேஷின் ஓவியங்கள் மற்றும் கோட்டுச் சித்திரங்களின் வசீகரம் அவை பார்வையாளர்களை நான் உங்களைப் புண்படுத்துகிறேன் பார் என்று சொல்லி புண்படுத்துவதால் ஏற்படக்கூடியவை. அவை பலமுறை  நம்மிடையே மெல்லிய நகைச்சுவையுணர்ச்சியைத் தூண்டும் , நம்முடைய புத்திசாலித்தனத்தினை குறைத்து மதிப்பிடும், வெகுஜனப் பண்பாட்டின் தேய் வழக்குகளை நம் மேல் திணிக்கும், அந்தத் தேய் வழக்குகளை வைத்தே நமக்குப் புதிதாக ஒன்றையும் சொல்ல முற்படும். நடேஷையும் அவருடைய ஓவியங்களையும் எளிதில் வகைப்படுத்த முடியாது. 

நடேஷின் சமீபத்திய ஓவியங்களின் வரிசையொன்றைப் (நடேஷ் இந்த வரிசையை 'கஜினி சீரீஸ்' என்று அழைக்கிறார்) பார்க்கும் வாய்க்கும் எனக்குக் கிடைத்தது. வெகுஜன பண்பாட்டின் தேய் வழக்கின் சைகை ஒன்றினை எடுத்துக்கொண்டு நடேஷ் வரைந்த ஓவியங்கள் அவை. இரு கைவிரல்களையும் இணைத்து  கோர்த்து வைத்துக்கொள்ளக்கூடிய சைகை அது. தியான மரபுகளில் சங்கல்பத்திற்கான முத்திரைகளுள் ஒன்றாகக் குறிக்கப்படுவது. இரு கைவிரல்கள் இணைந்த முத்திரையினை நடேஷ் கஜினி திரைப்பட போஸ்டர் ஒன்றிலிருந்து எடுத்திருக்கிறார்; அதே படத்திலிருந்து சதைநார்கள் இறுகி உடல் வலிமை காட்டும் சூர்யா கதாநாயக பிம்பத்தினையும் references ஆகக் கொண்டு நடேஷின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வெகுஜனப் பண்பாட்டின் விமர்சனமாகவும் நடேஷின் ஆன்மீகப்பயணமாகவும் இந்த ஓவிய வரிசை அமைந்திருக்கிறது.

இங்கே ஆன்மீகம் என்பதினை விளக்கிச் சொல்லவேண்டும். நம்மூரில் ஆன்மிகம் என்பது பூஜை புனஸ்காரம் என்று இருப்பது, பட்டையும் கொட்டையுமாய் அலைவது, மதவாதங்களை முன்வைப்பது என கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கிறது. மதங்கள் சார்ந்தோ சாராமலோ ஆன்மிகம் எனப்படுவதன் முக்கிய அம்சங்களில் ஒன்று மனித குலத்தின் பேரழிவு மற்றும் முழுமுற்றிலுமான அழிவு பற்றிய கவலை, பயம், பதற்றம் நம் படைப்பியக்கத்தின் வழி செயல்பட அனுமதிப்பது; முழுமுற்றிலுமான மனித குல அழிவு  பற்றிய பதற்றத்தினை ஊற்றுக்கண்ணாகக் கொண்டு மனிதனின் சிறு சிறு செயல்களிலும் இதர வெளிப்பாடுகளிலும் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் கூறுகளை அடையாளம் காண்பது. இந்த ஆன்மீகம் மத நம்பிக்கை உடையோரிடத்தே apolocalyptic visionஆக வெளிப்படுமென்றால் எந்த மதங்களையும் சாராதவர்களிடம் பெண்ணிய சுற்றுச்சூழலியலாக (feminist environmentalism) வெளிப்பாடு அடைகிறது. நடேஷின் ஓவியங்களில் பெண்ணிய சுற்றுச்சூழலியலே ஆன்மீகமாக அதுவே கண்ணால் பார்த்து தரிசிக்கக்கூடிய பதற்றங்களாக வெளிப்பாடு பெறுகின்றன.  

நடேஷின் பெண்ணிய சுற்றுச்சூழலிய ஆன்மீகத்தில் பெண்ணே ஆணின் ஒற்றை உண்மையாக உணரவைக்கப்படுகிறாள். சங்கல்பத்தின் முத்திரை ஒரு visual motif ஆக ஒவ்வொரு ஓவியத்திலும் வெவ்வேறு காட்சிப்பிம்பங்களோடு இணைக்கப்படும்போது ஒவ்வொரு ஓவியமும் ஒரு புது வகை visual syntaxஐ உருவாக்குகிறது. அந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரு வரிசையாக்கப்படும்போது நமக்கு பெண்ணிய சுற்றுச்சூழலிய ஆன்மீகம் கலை அனுபவமாகிறது. ஆணின் தசைநார் முறுக்குதல்களை அழகாகக் கொண்டாடுவதற்கான உறுதிப்பாடு (சங்கல்பம்) நடேஷின் ஓவிய வரிசையில் மிருகரூபம் அடைகிறது; இயற்கையின் அங்கமான பெண்ணுடலினை வசீகரிக்க, அடக்க, அழிக்க, ஆள்கையின் கீழ் வைக்கும் எந்திரமாகிறது. பேரழிவின் சங்கல்பத்திற்கான முத்திரைகளை நடேஷ் எந்தச் சூழல்களிலெல்லாம் வைக்கிறார் என்று அவருடைய ஓவியங்களின் வழி பார்த்தோமென்றால் துருவக் கரடிகளின் அழிவு, எகிப்திய பாரோக்களின்கொடுங்கோன்மை முதல் தமிழ் சினிமாவின் அன்றாட அனுபவம் வரை அவை விரிந்திருக்கின்றன. மனித குல பேரழிவுக்கான யத்தனங்களாக அவை பெரும் பதற்றங்களைத் தொற்றவைக்கின்றன.  வாடாமல்லி நிறமாக,  நீலமாக, சிகப்பாக, ஆங்காங்கே வழியும் சாயங்களாக நடேஷின் ஓவியங்களின் வழி பதற்றங்கள் நம்மை ஆக்கிரமிக்கின்றன, கவனிக்க வைக்கின்றன, சுயபரிசோதனைக்கு அழைப்பிதழ் விடுக்கின்றன. நடேஷ் நம் காலத்தின் அதி முக்கிய பெண்ணிய சூழலியல்சார் ஆன்மீகக் கலைஞன். 

நடேஷின் ஓவியங்கள்: 
























ஓவியங்களைத் தந்து உதவிய நடேஷுக்கு நன்றி.