Tuesday, August 30, 2011

ஒரு முக்கிய அறிவிப்பு

என் வலிக்கு நன்றி கெட்ட வேட்டை நாயென்று பெயர். காலம், செயலின்மை, பைத்திய தருணங்கள் என எல்லாவற்றையும் இரையாகக் கொடுத்த பின்னும் எதிர்பாராத சமயத்தில் என் ஈரக்குலையைக் கடித்துக் குதற காத்திருக்கும். கண்கள் ரத்த வெறியில் மின்னும். குழைவாக என் முகத்தை நக்கும்போதும் குதறலின் எதிர்பார்ப்பில் அது உன்மத்தம் அடைவதை நான் அறிவேன். என்னை விட்டுவிடேன் என்று கால்பிடித்து இறைஞ்சும்போதெல்லாம் அதன் உடல் இன்பத்தில் சிலிர்ப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஐயன்மீர், தேவரீர், பரிசுத்த பிதாவே, நான் என்ன செய்தேன், நான் என்ன செய்தேன் நீ என்னையே காத்திருக்கும்படி நான் என்ன செய்தேன் என்றெல்லாம் தண்டலிட்டு அரற்றியிருக்கிறேன். குழந்தமை மீண்ட அபூர்வ தருணம் சமீபத்தில்தான் அருட்கொடையாய் வாய்த்தது. அந்த நாய் என்னை ஆசையாய் நக்கியபோது ஒரு மென் புன்னகையோடு நிதானமாய் அருவாள்மணையால் அதன் வாலை ஒட்ட நறுக்கிவிட்டேன். குருதி வழியும் புட்டத்தை உருட்டியபடி தூர விலகி ஓடியபோது அது எழுப்பிய ஓலம் என்னை இனிதே நிறைத்திருக்கிறது.

Friday, August 26, 2011

கோமாளித்தொப்பியை அணிவது எப்படி?


கோமாளித்தொப்பி எல்லோருக்கும் உரியது அல்ல. கோமாளித்தொப்பியை வெளிப்படையாக அணிந்திருப்பவர்கள் மறைமுகமாக அணிந்திருப்பவர்கள் என எல்லொருமே அதன் மகத்துவத்தைக் குறைக்கவே செய்கிறார்கள். உடனடியாக விக்கிப்பீடியாவைப் பார்த்து தொப்பி என்றால் குல்லா அதை வழுக்கையை மறைப்பதற்கும் தட்பவெட்பச் சூழல்களில் இருந்து தலையை பாதுகாத்துக்கொள்வதற்கும் என்று அர்த்தப்படுத்திக்கொண்டீர்களென்றால் அது உங்கள் விருப்பம் சீக்கிரம் நரையேற்றும் கிழப்பருவம் எய்து காலம் கெட்டுப்போய்விட்டது என்று தாலுகா ஆபீஸ் தாழ்வாரங்களில் புலம்பித் திரிவீர்கள். இந்த செயல்முறை விளக்கக்குறிப்பினை வாசித்தீர்களென்றால் உங்கள் வாழ்க்கை மாறினாலும் மாறக் கூடும்.

கோமாளி என்றவுடனேயே அரசன் - விதூஷக இரட்டைகளான அக்பர் - பீர்பால், கிருஷ்ணதேவராயர் - தெனாலிராமன், ஷேக்ஸ்பியரின் அரசன் - முட்டாள் நினைவுக்கு வரலாம். அதிகாரத்தின் முட்டாள்த்தனம் - அதிகாரமின்மையின் மேதமை என்ற எதிர்நிலைகளில் கட்டப்படும் இந்த இணைவு கோமாளித்தொப்பியை அணிவதற்கான யத்தனத்தை எளிதில் திசை திருப்பிவிட்டு கேவல முடிவுகளை உருவாக்கிவிடும், இந்த இருமையை முதலிலேயே புறங்கையால் ஒதுக்கிவிட்டுவிட வேண்டும். 

மௌனி விரித்த மெய்யியல் வலையான ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்ற வாசகத்தின் பிடியிலிருந்து எவன் புத்திபூர்வமாகவும் தந்திரமாகவும் தப்பி உக்கிரம் பெறுகிறானோ அவனே கோமாளித்தொப்பியை அணிவதற்கான முதல் தகுதியை பெறுகிறான். இது ஒரு முதல் நிலைத் தகுதி மட்டுமே. இதர ஒப்பனைகள் பூர்த்தியாகாமல் கோமாளித்தொப்பியை ஒருவன் அணியமுடியாது.

கண்களுக்கு அஞ்சனம் தீட்டி பார்வையை கூர்மையாக்கவேண்டும். இந்தப் படிநிலையில் நீட்ஷேயின் ‘ஆனந்த அறிவியலை’ வாசிப்பது உதவிகரமாக இருக்கும். இந்த புத்தகத்தை வாசித்து வருகையில் கண்ணாடியில் அடிக்கடி முகத்தைப் பார்க்கவேண்டும். இதழ்களில் லேசாக உள்ளடக்கிய நமுட்டுச் சிரிப்பு தோன்ற ஆரம்பிக்கும். இதழ்களின் கடைக்கோடியில் பைத்திய ரேகை தோற்றமளிக்கும்.

பைத்திய ரேகை விரிந்து விரிந்து கன்னக்கதுப்புகளை தொட யத்தனிக்கையில் பாரதி, பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், காகபுசுண்டர் ஆகியோரின் பிரதியாக்கங்களையும், கூடவே முத்து காமிக்ஸையும் கூர்மையாக வாசித்து வரவேண்டும். உங்களுடைய கண்களின் பிரகாசத்தில் குறும்பு கொப்பளிக்க ஆரம்பிக்கும். சிலருக்கு கோரைப்பற்கள் தோன்றுவதும் சகஜமே. அதற்காகப் பயந்துவிட வேண்டாம். களி வெறி கொண்டு ஆடவேண்டும் என்று தோன்றும்போது கோட்டைவிட்டுவிடக்கூடாது ஆடித்தீர்த்துவிட வேண்டும். வாழ்க்கையிலே கிடைக்கும் ஒரே சந்தர்ப்பம் அது. உங்களைப் பார்த்து எல்லோரும் இவ்வமயம் சிரிக்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் மயிரே ஆச்சு என்றிருங்கள். 

இனிமேல்தான் நெருக்கடியான கட்டம். இது ஒரு மணி நேரமும் நீடிக்கலாம். பல ஆண்டுகளும் நீடிக்கலாம். உங்களைப்பார்த்து சிரித்தவர்கள் எல்லோரும் வெற்றிபெற்றவர்களாக மாறி விடுவார்கள். நீங்கள் உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் இருப்பீர்கள். சாதாரண காரியங்களைக்கூட உங்களால் செய்யமுடியாமல் போகும். எதிலாவது முட்டாமல் சாலைகளைக் கடக்க முடியாது. தலைகீழாக நின்றாலும் உங்கள் கணிணி மட்டும் இணையத்தோடு தொடர்புகொள்ளாது. சிந்தாமல் சிதறாமல் எதையும் சாப்பிட முடியாது. கனவெது கற்பனையெது யதார்த்தமெது என்று தெரியாமல் குழம்புவீர்கள். இவையெல்லாம் நல்ல அறிகுறிகளே. உங்கள் திக்கற்ற நிலையைக் கண்டு பேரழகிகள் உதவுவார்கள். ஆண்கள் கைகொட்டிச் சிரித்துவிட்டு போய்கொண்டேயிருப்பார்கள். இந்த சமிக்ஞைகள் காண ஆரம்பித்துவிட்டால் கோமாளித்தொப்பியை கையில் எடுத்துக்கொள்ளலாம். 

ஆந்தோனின் ஆர்த்தோவின் வாழ்க்கை வரலாறை உன்னிப்பாக படியுங்கள். அவன் மன நல விடுதியிலிருந்து பாரீஸ் நகர ரயில் நிலையத்தில் வந்திறங்கிய காட்சியை மனதிற்குள் பல முறை நடித்துப் பாருங்கள். துக்கம் தொண்டையை அடைப்பதால் உங்களுக்கு மன நடிப்பு சித்தியாகாது. வெர்னெர் ஹெர்சாக் இயக்கத்தில் கின்ஸ்கி நடித்த திரைப்படங்களை பல முறை பாருங்கள்.  கின்ஸ்கி போலவே நடையுடை பாவனை பழகுங்கள்.

இந்த வழிகாட்டும் குறிப்பை சுத்தமாக மறுதளித்துவிட்டு அந்த கோமாளித்தொப்பியை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்.

பிறகுதான் மவனே வேடிக்கை ஆரம்பம்.  மாயாஜாலவித்தையான உங்கள் வாழ்வை இதர மடிசஞ்சிகள், தயிர்வடைகள் போல மதமாக மாற்றாமல் அறிவியலாக மாற்றிவிட்டீர்கள். உங்கள் கடவுளர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். 

புகைப்படத்திற்கு போஸ் கொடுங்கள், ப்ளீஸ்!

Wednesday, August 24, 2011

நீலத் திமிங்கலங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குழும விவாதத்திலிருந்து:

நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று அறிந்தே இருக்கிறேன். நான் உட்கார்ந்திருக்கும் இருக்கை அப்படி.  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யோசனை உங்களுக்கு பெரிதும் சிரமமான காரியம் என்றாலும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும் இல்ல்லையா? பின் நவீன சிந்தனைகளை தமிழில் அறிமுகப்படுத்தியவர்களே நீலத்திமிங்கலங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். திமிங்கலங்களை பற்றி உருப்படியாக ஒரு கட்டுரையைக்கூட விட்டுச் செல்லாமல் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். சிலக் கலைச்சொற்களை மட்டுமே அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நான் மட்டுமே பயன்படுத்திகொண்டிருக்கிறேன்.

இரண்டாயிரம் வருட தமிழ் இலக்கிய வரலாற்றில் உச்சங்களைத் தொட்ட பல படைப்புகளை நான் எழுதியிருக்கிறேன் என்பது நீங்கள் அறிந்ததுதான். உச்சங்களைத் தொட்டேனே தவிர ஆழங்களைத் தொடவில்லை. திமிங்கலங்கள் ஆழங்களில்தான் வசிக்கின்றன என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நம் காலத்தில் வாழும் மகத்துவமான கவிஞர் தூத்துக்குடியில், கடலுள்ள ஊரில்தான் வசிக்கிறார். ஏதேனும் ஒரு கவிதையிலாவது ஒரு உபதேசமாவது நீலத்திமிங்கலங்களைப் பற்றி செய்திருக்கிறாரா? சாதாரண ஆசிரியர் அவர். தன் வீடு, தன் தோட்டத்தைத் தவிர அவர் எங்கேயுமே வெளியிலேயே சென்றதில்லை. கடற்கரையைப் போய் கூட பார்த்ததில்லை. கடலாழத்தைப் போய் பார்ப்பதற்கான வாய்ப்பே அவருக்கு இல்லை. நீலத்திமிங்கலங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் எவ்வளவு கர்வியாய் அவர் இருக்கிறார் என்பதைப் பாருங்கள். ஆம், அவருடைய படைப்பு அவருக்குத் தரும் ஊக்கம் அது.

என் குருவின் குரு நீலத்திமிங்கலங்களை நாம் அன்போடு நம் மண் சார்ந்த அணுகுமுறையோடு கட்டித் தழுவ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்; திமிங்கலங்கள் நீரில்வசிப்பப்பவை என்பதை அவர் அறிந்தே இருந்தாலும் கூட. அவர் அதையே கீழத்தேய சிந்தனை என்றும் அவர் நேர்பேச்சில் கூறியிருக்கிறார். அவர் நேர்பேச்சில் மட்டுமே எல்லாவற்றையும் கூறுவார். எதையுமே எழுதமாட்டார். ஆம், அதனால்தான் அவரை நான் முதல் சிந்தனையாளர் என்கிறேன்.

நாஞ்சில் நாட்டு மகாத்மியத்தில் நீலத்திமிங்கலங்களுக்கு இடமே இல்லை. திமிங்கலங்களைப் பற்றி ஒரே ஒரு பிள்ளைதான் எழுதிருக்கிறார். அவர் நாஞ்சில் நாட்டுப் பிள்ளை இல்லை சைவப்பிள்ளை!

அவர் பெயர் டி.ஏ.சோமசுந்தரம் பிள்ளை. அவருக்கு ஆங்கிலமும் நன்றாகத் தெரியும். சிவபெருமான் ஆலகால விஷத்தை விழுங்கியதையும் பார்வதி தேவி அவர் கழுத்தை எட்டிப்பிடித்தையும் அப்போது அவர் கண்டம் நீலம் பாரித்ததையும் நீலத்திமிங்கலங்களையும் அவர் குறியீட்டு முறையில் ஒப்பிட்டு போன  நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர் எழுதியிருக்கிறார்.  டி.ஏ.சோமசுந்தரம் பிள்ளையின் நூலைப்பற்றி சென்னைக்கு ஃபோன் போட்டு பலரிடம் விசாரித்தேன். யாருக்குமே எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பேச்சிழந்து நின்றேன்.
அன்றைக்கு மிகவும் பெரிய பதவி வகித்த காங்கிரஸின் மூத்த தலைவரிடம் ஃபோன் போட்டு திமிங்கலங்களைப் பற்றி விசாரித்தேன். ‘எழுத்தாளர் தம்பி! திமிங்கலங்கள் எங்கேயெல்லாம் இருக்கின்றன தெரியுமா?’ என்று அவர்  சொன்ன விஷயங்களைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அப்படியே கால் தளர்ந்து உட்கார்ந்து விட்டேன்.

திமிங்கலங்களைப் பற்றி என்னுடைய சிந்தனை எல்லாவற்றையுமே இந்துத்துவா என்று குருவி மண்டை ஆதரவாளர்களும், அயோக்கியர்களும், இடதுசாரிகளும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். நானும் இளமைத் துடிப்பில் தொடர்ந்து அவர்களுக்கு பதில் சொல்லி வருகிறேன். நீலத்திமிங்கலங்களைப் பார்த்தால் உப்புக் கண்டம் போட்டு பல நாட்களுக்கு உண்ணலாமென்று இப்பொழுதெல்லாம் என் வாயில் எச்சில் ஊறுவதேயில்லை. இந்தப் பார்வையை நான் பெறுவதற்கு இந்திய ஞான மரபின் பௌத்தமும் தாந்த்ரீகமும் மட்டுமே காரணம். இந்த மொழிபு எப்படி இந்துத்துவா சிந்தனை ஆகும் என்று எனக்குப் புரியவேயில்லை. இதை இதையும் விட எளிமையாக  எப்படி எழுதுவது என்றும் தெரியவில்லை.

எல்லொருமே ஒரு ஜென் தருணத்திற்காக காத்திருக்க வேண்டியதுதான் போலும். பூனையோடு எனக்கு ஏற்பட்ட ஜென் தருணத்தைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பூனையும் நானும்  ஒரு மூலையில் மாட்டிக்கொண்டோம். பூனையும் ‘புர்ர்’ என்றது நானும் ‘புர்ர்’ என்றேனே அதே கணம்தான்.

அதே கணம் நீலத்திமிங்கலத்தை உற்று நோக்கினாலும் நிகழலாம் என்று நண்பர்கள் கடற்கரை ஊரொன்றுக்கு பயணம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சாதாரண இரவு பஸ்ஸில் சாதாரண நோக்கியா கைபேசியோடு பயணம் செய்தேன். பக்கத்து இருக்கையில் ஒரு குடிகாரன். தூங்கவிடாமல் தொடர்ந்து நான் என்ன கொடுக்கல் வாங்கல் வியாபாரம் செய்கிறேன் என்று கேட்டுக்கொண்டே   வந்தான். அவனிடமிருந்து தப்பித்து தூங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இரண்டு மணிக்கு தூங்கி நான்கு மணிக்கு விழிப்பு தட்டியபோது பக்கத்து இருக்கை குடிகாரன் என் சட்டை முழுக்க வாந்தி எடுத்திருந்தான்.

ஊர் போய் இறங்கியதும் ஹோட்டலில் காத்திருந்த நண்பர்களை சட்டைசெய்யாமல் நேரடியாக கணிணி முன் உட்கார்ந்து குடிக்கு எதிரான என் கட்டுரையை எழுதினேன். ஆவேசமாக டைப் செய்ததில் வழமை போலவே டிவிஸ் கீபோர்ட் உடைந்துவிட்டது. அந்தக் கட்டுரையின் முன் வடிவம் என் தளத்தில் பிரசுரமானபோது அந்தக் குடிகாரக் கவிஞர் என்னை மக்கு மண்டூகம் என்று திட்டினாராம். அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. அவர் வெறும் குடிகாரர் மட்டுமே. தமிழில் அவர் இடம் அதுதான்.

மாலையில் நண்பர்களும் நானும் கடற்கரைக்குச் சென்று ஓரமாக முட்டளவு தண்ணீரில் நின்று குளித்தோம். திமிங்கலங்கள்  கரையோரமெல்லாம் வருவதில்லையென்று மீனவர்கள் சொன்னார்கள். அறைக்குத் திரும்பி விடிய விடிய பேசினோம். நண்பர் ஒருவர் ‘நீலத்திமிங்கலங்கள் கண்டிட்டில்லோ’ என்ற மலையாளத் திரைப்பாடலை பெருங்குரலில் பாடினார். மற்றொருவர் நீலத்திமிங்கலங்களைப் பற்றிய நீலக் கதையொன்றை நான் எழுதவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மறு நாளே அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டோம். யாரோ பழைய எழுத்தாள நண்பர் என்று  நினைக்கிறேன் காஃகாவின் குட்டிக்கதைகளை பரிசாக அனுப்பி வைத்திருந்தார். நீலத்திமிங்கலங்களைப் பற்றி இனிமேல்தான் விக்கிப்பீடியாவில் தேட வேண்டும்.

Tuesday, August 23, 2011

ராஜேஷ்: ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம்


குட்டிக் கதை
ராஜேஷை உங்களுக்குத் தெரியாதுதானே? நான் அதை எதிர்பார்த்ததுதான்.  இன்றைய இணைய தலைமுறை வாசகர்களுக்கு பழைய ஆட்களைத் தெரிந்திருப்பதில்லை. பல இணைய ஆவணக்காப்பகங்கள் இன்றைக்கு செயல்பட்டு வந்தாலும் பழையஆட்களை மீண்டும் மீண்டும் புது ஆட்களைப்போலவே அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த பழைய ஆள் எழுதுபவராக இருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம் இறந்தவன் எப்படி உயிர் பெற்று வரலாம் என்று துண்டறிக்கைகள் பறக்கும். ஆனால் ராஜேஷ் என்ற பெயரை வைத்தே நீங்கள் முடிவு செய்து விடலாம் அவர் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதுகளில் பிறந்தவர் என்று. அறுபதுகளில்தான் தமிழ் நாட்டுத் தாய்மார்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் குழந்தைகளை சுரேஷ், ராஜேஷ், மகேஷ், சதீஷ் என்று பெயர் வைப்பது வழக்கமாக இருந்தது. தாய்மார்களின் மாமியார்கள் தஙகள் பேரப்பயல்களை கூப்பிட ‘ஷ’ வாயில் நுழையாமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். பயல்கள் வளர்ந்து கல்லூரி செல்லும்போது தூய தமிழில் தங்கள் பெயரை ராசேசு, சந்தோசு என்றவாறே எழுத நேரிட்டது. இது பிடிக்காமல்தான் ராஜேஷ் உஸ்ருளா நுஃருன்னிஸா என்ற புனை பெயரைத் தேர்ந்தெடுத்தான் என்று நினைக்கிறேன். உஸ்ருளா நுஃருன்னிஸா என்ற பெயரில் ராஜேஷ் பல வரலாற்று கட்டுரைகளை எழுதியிருக்கிறான். அவன் தமிழகத்தில் நடந்த கிறித்தவ மத மாற்றங்களைப் பற்றி, ‘கட்டுவிரியன் குட்டி பாம்புகளே, மனம் திருந்துங்கள்’ என்ற கட்டுரையை எழுதிய கையோடு என்னை எண்பதுகளின் மத்தியில் சந்தித்தான்.
கவனிக்க: நான் இந்தக் குட்டிக்கதையில் ஒரு கதாபாத்திரம் மட்டுமே. மற்றதெல்லாம் உள்ளது உள்ளபடி.
வரலாறென்றால் வெகுஜன இயக்கங்கள், பெரும் தேசியத் தலைவர்கள், போராட்டங்கள், அரசர்கள், அரசிகள், சதி வேலைகள், கூட்டங்கள், ஆவேசப் பேச்சுகள் என்று மட்டுமே நினைத்திருந்த ராஜேஷுக்கு நான் எழுதியிருந்த ‘’தமிழ் மறமகளிருக்கு அசரீரீ சொன்ன கதை’ வெகுவாக பாதித்தது. அந்தக் கதையில் நான் தமிழகத்தில் எப்படி பரோட்டா என்ற வடக்கத்திய உணவு எப்படி அறுபதுகளின் இறுதியில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பரவலாயிற்று என்று ஒரு பத்தி எழுதியிருந்தேன். ராஜேஷ் மைதா மாவு பரோட்டாவால் சிறு வயதில் மிகுந்த மன பாதிப்புக்கு ஆளானவன். தன் பெற்றோரிடத்து குழந்தையாயிருக்கையில் ‘ஒரு ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு ஒரே ஒரு ராணியாம். அவர்களுக்கு ஒரே ஒரு பையனாம். அவர்கள் வீட்டில் பரோட்டாவே கிடையாதாம் எப்பொழுதுமே இட்லி, தோசை, அரிசிச் சோறுதானாம்’ என்று கதை சொல்ல அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கண் கலங்கிவிட்டதாம். என் கதையில் பரோட்டாவின் வரலாற்றை படித்ததும் தானும் ஒரு வரலாற்று நாயகன், தன் வரலாறும் வரலாறுதான் என்று அவனுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. நாம் பங்கு பெறாத வரலாற்றைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்டது வேறு அவனுக்கு என் மேல் அபிமானத்தை அதிகப்படுத்திவிட்டது.
நான் அந்தக் காலகட்டத்தில் ஊர் ஊராகச் சென்று அமைப்பியல் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்தேன். இனையம், மின்னஞ்சல், கைபேசி எதும் இல்லாத அந்த கற்காலத்திலேயே நான் எங்கே பேசினாலும் அதைத் தெரிந்து அங்கே அவன் வந்துவிடுவான். இலக்கியத்தைப் படைப்பதற்கும் வாசிப்பதற்கும், தரிசனம், உள்ளொளி, ஞான மரபு, மெய்யியல், ரசனை, குலம், ஆத்ம பலம் போன்ற பத்தாம் பசலி கருத்துருக்கள் எல்லாம் பீலா என்பதில் கொள்கைப்பிடிப்புள்ளவனாக இருந்தான். ‘முனியாண்டி விலாஸ்’ ‘மிளகுத்தண்ணியும் காலனீயமும்’ ஆகிய படைப்புகள் அவன் எழுதியவற்றுள் மிகவும் முக்கியமானவை. எப்பொழுது பார்த்தாலும் சாப்பாட்டு பதார்த்தங்களைப் பற்றிதான் வரலாற்று ஆசிரியர்கள் கவலைப்படுகிறார்கள், பரோட்டாவைப் பற்றியெல்லாம் கதைகளில் எழுதும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லையென்றால் எந்தக் குழந்தை என்ன வயதில் நம்மிடத்தில் வந்து கண் கலங்குமோ என்றெல்லாம் உரைகளின் போது இடையிடையே நான் சொன்னதெல்லாம் அவனை மறைமுகமாக இடிக்கத்தான் என அவன் என்னிடத்தில் வருத்தமடைந்தது நியாயமானதுதான். அதற்காக சொல்லாமல் கொள்ளாமல் என்னுடன் உறவை முறித்துக்கொள்வான் என்று என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை.
என்னுடைய வெற்று அகந்தையினாலும் சமயத்திற்குப் பொருந்தா நகைச்சுவை உணர்வினாலும் ராஜேஷ் என்கிற உஸ்ருளா நுஃருன்னிஸாவின் நட்பை இழந்தேன். 
அது சரி குட்டிக்கதை எங்கே என்கிறீர்களா? குட்டி சொன்ன கதைதான் குட்டிக் கதை.

Sunday, August 21, 2011

நாட்டுக்கோழி பிரியாணி


'நாட்டுக்கோழி பிரியாணி' என்ற நாடகத்தை நான் 1999இல் எழுதினேன். நான் எழுதிய பிற நாடகங்களைப் போலவே இந்த நாடகத்தையும் மங்கோலிய சர்கஸ்காரிகளே நிகழ்த்த முடியும் என்ற காரணத்தால் 'நாட்டுக் கோழி பிரியாணி' இன்றும் அரங்கேற்றப்படாமலே இருக்கிறது. இன்றைக்கு இருப்பது போல இணையம் அன்று வளர்ச்சி அடைந்திருக்குமானால் மங்கோலியாவிலேயே அந்த நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.

தலைப்புதான் நாட்டுக்கோழி பிரியாணி என்றிருக்கிறதே தவிர அந்த நாடகம் உருவான சூழலும் அதன் உள்ளீடும் மிகவும் சீரிய வினைத்திட்பமுடையனவாகும்.

முதலில் நாடகம் உருவான சூழல் குறித்து: 1999இல் நானும் இன்று பிரபலமாக இருக்கும் ஹிந்தி நடிகை ஒருவரும் பௌத்த தியான முறையான விபாசனா செல்வழியை கற்றுகொள்ளத் துணிந்தோம். ஹிந்தி நடிகைக்கு அப்போது காதல் முறிவு நானோ தீர்க்கவியலா துக்கத்திலிருந்தேன். என் பெரும் தொந்தியை வைத்துக்கொண்டு நௌலி, திரிமடங்காசனம் என்றெல்லாம் செய்யச்சொல்லமாட்டார்கள் என்பது விபாசனா செல்வழியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்தது. பதினைந்து நாளா என்று முதலில் பயந்தாலும் வேறு போக்கிடம் இல்லாததால் சேர்ந்து தொலைவோம் என்று முடிவு செய்தோம். சென்னை புற நகர் பகுதியில் புறவுலகுத் தொடர்பில்லாத தென்னஞ்சோலையில் அந்த ஆஸ்ரமம் அமைந்திருந்தது. சிங்கள புத்த பிக்கு ஒருவர்தான் எங்கள் செல்வழியின் குரு. அவர் சிங்களவர் என்று தெரிந்த நிமிடமே என் தமிழ் உள் மனம் அவரை குருவாக ஏற்க மறுத்துவிட்டது. அவருடைய நெறிமுறை கட்டளை ஒவ்வொன்றிற்கும் என் மனம் ஏட்டிக்கு போட்டியாய் இயங்கிக்கொண்டிருந்தது. அவர் மனதிற்குள் இலவம் பஞ்சுப்பொதியினை கற்பனை செய்து அதில் தண்ணீரை ஊற வைத்து அதை நன்றாகப் பிழியுங்கள் என்றால் நான் அவருடைய சங்கை நெறித்துக்கொண்டிருப்பேன். வைர சூத்திரம் உரையின் போது அவரைக் காமக்கொடூர களியாட்டங்களில் ஈடுபடுபவராக மனம் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு, செல்வழியின் தினசரி ஒழுங்கு முறை சுத்தமாக எனக்கு ஒத்து வரவில்லை. அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிட வேண்டும். நெறிமுறை கட்டளை உரையின்போதன்றி பிறகு எப்போதும் பதினைந்து நாளும் மௌன விரதம் காக்க வேண்டும். மதியம் ஒரு வேளை சாத்வீக கஞ்சி மட்டும்தான் உணவு. தரையில் கோரைப்பாயில்தான் படுக்க வேண்டும். இரண்டாம் நாளே பசியிலும் கோபத்திலும் நாக்கு தள்ளிவிட்டது. உலகமே களித்து கும்மாளமிடும்போது நான் மட்டும் துயரத்தின் அதள பாதாளத்தில் விழுந்துகொண்டிருப்பதான எண்ணம் என் உடல், மனம் எங்கும் வியாபித்தது. ஹிந்தி நடிகையோ மணி தோறும் இளைத்து மேலும் மேலும் கவர்ச்சியாகிக்கொண்டிருந்தாள். நான்காம் நாள் இரவு அவள்தான் எனக்கு அந்த அபூர்வ யோசனையை சொன்னாள். இரவு எட்டு ஒன்பது மணிக்கு பிக்குகள் எல்லோரும் நன்றாகத் தூங்கியபின் மதிலெட்டி சாடி பழைய மகாபலிபுரம் சாலைக்குப் போய் வயிறு புடைக்க சாப்பிட்டு வந்துவிடுவோம் என்றாள். ஐந்தாம் நாள் காலையிலிருந்தே மதிலெட்டி சாடுவதன் குதூகலம் என்னை ஆட்கொண்டிருந்தது. பௌத்த புனித மந்திரமான ‘ஓம் மணி பத்மே ஹும்’ ஓதும்போது பரோட்டாவும் சால்னாவும் நினைவுக்கு வந்து வாயில் உமிழ் ஊறியது. அன்றிரவு ஹிந்தி நடிகை என்னை விட லகுவாகவும் வேகமாகவும் மதிலெட்டி குதித்தாள். பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு ஓமடைஞ்ச சிறு உணவகம்தான் திறந்திருந்தது. நாட்டுக்கோழி பிரியாணி மட்டும்தான் இருந்தது. நீ சைவமாச்சே என்றாள் நடிகை. நான் மண்ணாங்கட்டி என்றேன். மூன்று நான்கு கவளம் அந்த காரசாரமான பிரியாணி உள்ளிறங்கியபோது கண்களில் ஆனந்தத்தில் நீர் கட்டியது. வெடித்து சிரித்தோம். திரும்பி ஆஸ்ரமத்திற்கு வரும்போது இயல்பாக கைகளைக் கோர்த்துக்கொண்டோம். மெலிதாக முத்தமிட்டுக் கொண்டோம். அந்த சிறிய தூரத்தை இணைந்து கடந்ததில் எங்களிடையே மிக ஆழமான நட்பு உருவாகியிருந்தது. விபாசன செல்வழியின் இதர நாட்களை நாட்டுக்கோழி பிரியாணியின் நினைவிலேயே தட்டுத்தடுமாறி கழித்து விட்டோம். 

பல வருடங்களுக்கு பிறகு ஃபிலிம்ஃபேர் விழா ஒன்றில் அந்த ஹிந்தி நடிகையை சந்தித்தேன். மும்பய் அருகே ஒரு மாத கால தியான செல்வழி ஒன்று இருக்கிறது போலாமா என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தாள்.

‘நாட்டுக்கோழி பிரியாணி’ நாடகத்தின் உள்ளீடு என்ன என்று உங்களுக்கு இப்பொழுதே தெரிந்திருக்குமே! பல ஜென் தருணங்கள் நிரம்பியது என்பதற்கு நான் உத்தரவாதம். என்ன, பல மதில்கள் எட்டி சாட வேண்டியிருப்பதால் மங்கோலிய சர்கஸ்காரிகள்தான் அதை நிகழ்த்த முடியும்.

Saturday, August 20, 2011

தூங்கும் அழகி

John Henry Fuseli's painting,'The nightmare'

















தூங்கும் அழகி என்றவுடன் உங்களுக்கு காவபட்டாவின் நாவல்
நினைவுக்கு வரலாம்
வராமலும் போகலாம்
தூங்கும்போது எல்லா பெண்களுமே அழகிகள்தானே 
என்று ஒரு கணம் நினைத்தீர்கள்தானே
அப்பொழுதே நீங்கள் ஒரு கோர அரக்கனாகிவிட்டீர்கள்
என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியாதேயென 
நீங்கள் தோள் குலுக்கி கை விரிப்பீர்கள்
அதனால்தான் மேலே அந்த ஓவியத்தை சூடாக
இணைத்திருக்கிறேன்
உங்கள் மார்பின் மேல் 
மயிரடர்ந்த கோர உரு
உட்கார்ந்திருப்பதான
பிரேமை தட்டுகிறதா
உங்கள் கிளர்ச்சி 
நீங்கள் ஒரு பெண் என்கிறது
அந்த ஜென் தருணத்தில்
கோர அரக்கனை
இறுகத் தழுவி
முத்தமிடுகிறீர்கள்

முகக்குறிப்பு


இந்த வலைத்தளத்தை சுமார் இரண்டாயிரம் பேர் வாசிக்கிறார்கள் என எனக்குத் தெரிய வந்திருக்கிறது; எராளமாய் மின்னஞ்சல்கள் வேறு வந்த வண்ணமிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் பதிலெழுத தயாராக இருக்கிறேனா என்று தெரியவில்லை. பலருக்கு என்னைப் பற்றி என்னை விட அதிகமாக தெரிந்திருக்கிறது. அதனால் சில விபரங்களைச் சொன்னால் நல்லது என்று இந்த இடுகையை எழுதுகிறேன்.
1993 ஆம் ஆண்டு நியூயார்க் நகரிலுள்ள கிழக்கு கிராமத்தில், side walk என்ற இரவு விடுதியில் டோனி ப்ரெட்டை சந்தித்தேன். டோனி ஆப்பிரிக்க அமெரிக்கன்; கிடாரும் சாக்ஸஃபோனும் வாசிப்பான், நல்ல பாடகன், நன்றாக நடனமும் ஆடுவான். வீதிகளிலும் இரவு விடுதிகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவான்; நிகழ்ச்சி முடியும்போது இரவு விடுதியென்றால் கிடாரையோ தொப்பியையோ சுற்றுக்கு அனுப்பி வசூலிப்பான். வீதியென்றால் தன் முன் விரித்துள்ள துண்டில் என்ன விழுகிறதோ அதை சேகரிப்பான். இவ்வாறுதான், இவ்வளவுதான் அவன் வருமானம். என்ன கிடைக்கிறதோ அதை உடனடியாக கொண்டாடி செலவழித்து விட்டால்தான் அவனுக்கு நிம்மதி. அவனுடைய சாக்ஸஃபோன் இசைக்கு நான் என்றென்றும் அடிமை. டோனி experimental jazz இசையில் ஒரு மேதை. அவன் எங்கெல்லாம் வாசிக்கிறேனோ அங்கெல்லாம் தேடி தேடிப் போய் அவன் இசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சீக்கிரமாகவே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். ஒரு இரவு விடுதியில் நான் ஏதாவது ஒரு பாடலை உடனடியாக எழுதித் தந்தால்தான் ஆயிற்று என்று அவன் வற்புறுத்தினான். சரியென்று கையில் கிடைத்த பேப்பர் நாப்கினில் ‘ஓ மம்மா ஓ பப்பா’ என்று நர்சரி ரைம் போல ஒன்றை எழுதிக் கொடுத்தேன். ஆனால் அதை டோனி பாடிய முறையிலும் சாக்ஸஃபோன் அதனோடு இழைந்த விதத்தினாலும் சொக்கவைக்கும் தருணங்களைத் தந்தது. அந்தப் பாடலைக் கேட்டு ஒரு பொன்னிற கூந்தல் அழகி இயல்பாக ஆடிய பெல்லி டான்ஸ் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. 
அதன் பிறகு டோனியோடு தொடர்பு அறுந்து விட்டது. மீண்டும் 2004 இல் வாஷிங்டன் நகரில் நேஷனல் பார்க் ரயில் நிலையத்தின் அருகாமையில் அவன் சாக்ஸஃபோன் வாசித்துக்கொண்டிருந்தபோது பார்த்தேன். நீண்ட பொடிச்சடை போட்டுக்கொண்டு எதிர்காலம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாதவனாக வழக்கம் போலவே மகிழ்ச்சியாக இருந்தான். டோனியின் மூலமாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று சகல இடங்களிலுமுள்ள பல இசைக் கலைஞர்களும் இசைக்குழுக்களும் எனக்கு அறிமுகமாயின. லண்டன், பாரீஸ் முதல் அடிஸ் அபாபா வரை பல இடங்களுக்கு நான் பயணம் செய்தபோதெல்லாம் டோனியின் தொடர்பினால் வித விதமான இசைக் கலைஞர்ளின் நட்பு கிடைத்தது. அவ்வபோது குழுக்களுக்கு பாடல்கள் எழுதுவதும் தொடர்ந்தது. அவனுக்கு நான் ஒரு பெரிய புதிரான ஆளாகவே இருந்தேன். சைவ உணவு மட்டுமே உட்கொள்வது, அதிகாலையில் சிவ பூஜை செய்யாமல் ஒரு கவளம் உணவு கூட சாப்பிடாதது, இட்லி, தோசை, தயிர் சாதம் கிடைத்துவிட்டால் வெகுவாக திருப்தி அடைந்து விடுவது என என்னுடைய எல்லா பழக்கங்களுமே அவனுக்கு என் மேல் ஒரு வித பரிதாபத்தையும் பாசத்தையும் ஏற்படுத்தின. ஒரு முறை என்னை அவனுடைய தங்கையிடம் அறிமுகப்படுத்தியபோது இவனை மாதிரி உனக்கு நல்ல மாப்பிள்ளை அகிலத்திலும் கிடைக்கமாட்டான் ஆனால் என்ன இழவு புல் பூண்டுதான்  சாப்பிடுவான் என்றான். ஒரே ஒரு முறை நுகூகி வா தியோங் ஓவின் புகழ் பெற்ற ‘Decolonising the mind’ புத்தகத்தைப் பற்றி பேச்சு வந்தபோதுதான் அவன் எவ்வளவு பெரிய படிப்பாளி என்று எனக்குத் தெரிய வந்தது. நான் இந்தியா முழுவதும் ஆதிவாசி பண்பாடுகளையும் கலைகளையும் சேகரிப்பதையும் ஆராய்ச்சி செய்வதையும் அவன் ஆர்வமாகத் தெரிந்து கொள்வான். இந்தியா முழுவதும் பல கதை சொல்லிகள் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான காப்பியங்களை வாய்மொழியாகவே கற்று வாய்மொழியாகவே நிகழ்த்தி வருகிறார்கள் என்பது டோனிக்கு பெரிய மரியாதையை இந்தியா மேல் ஏற்படுத்தியது. 
டோனிதான் மறைந்த தோல்பாவைக் கூத்து கலைஞர் சிவாஜி ராவைப் போலவே என் கலை இலக்கிய பார்வையை தீர்மானித்தவர்களில் முக்கியமானவன். தத்துவ நோக்குகளின், மதங்களின், அரசியல் பார்வைகளின் சுமை இல்லாமல் அதி சுதந்திரனாக வாழ்வையும், கலையையும், இலக்கியத்தையும், எதிர் காலத்தையும் பார்க்க அவன் எனக்குச் சொல்லித்தந்தான். அதீத எளிமையை நோக்கிச் சென்ற அவன் வாழ்வு முழுச்சுதந்திரமான கணங்களின் தொகுப்பான இசையைப் படைக்க அவனுக்கு உத்வேகமளித்தது. அதே பாக்கியம் எனக்கும் வாய்க்கட்டும். 
2010ஆம் ஆண்டிலிருந்து டோனியோடு தொடர்பு அறுந்துவிட்டது. எந்த ஊர்த் தெருவில் எப்போது இனி அவனை சந்திப்பேனோ?

Friday, August 19, 2011

கள்ளக்கவிதை

மின்னஞ்சலில் வந்தது:

வெள்ளிக்கிழமை இரவு நடனத்தில்
காதில் கிசுகிசுக்க
கவிதையொன்று
வேண்டும்
நாற்பதே வார்த்தைகளில்.

சொன்னவுடன் காது சூடேறி
முகம் சிவந்து
இருள் மூலை தேட
இறுக்கமான ஜீன்ஸ் எளிதாக தளர

மின் உரையாடலில் மயக்க
அலுவலக ராத்தங்கல்களில் பாட
எளிதாக குறுஞ்செய்தி அனுப்ப


சனிக் கிழமை பிற்பகலில்
நீ யாரென்று கேட்காதிருக்க 

Wednesday, August 17, 2011

வெண் புரவி


முன் தீர்மானங்கள் ஏதுமில்லை 
என் கவிதைக்குள் நுழைந்துவிட்ட அந்த வெண் புரவியை என்ன செய்வதென்று;
குளம்பொலியை கனவில் கேட்டு விழிப்பதற்கு முன்பே
என் வாசலில் வந்து நின்று விட்டது
ஷாம்பூ மணக்கும் பிடரி மயிரையும் வாலையும் 
சுழற்றிக்கொண்டு.
தாவி ஏறி 
நடை பழக்கி 
இனிய புன்முறுவலோடு
பிரளயம் தள்ளிப்போய்விட்டது
என அறிவிக்கலாமா
கொம்பொன்று சமைத்து
புதுப் புராணமெனலாமா
என்பதற்குள்
விறைக்கிறது அதன் குறி
கரும் புரவி கண்டு.

Monday, August 15, 2011

காப்புரிமை நோட்டீஸ்


இந்தத் தளத்தில் வெளியாகும் பதிவுகள் எல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு (மேலே பெயர் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறது) சொந்தமானவை. இப்பதிவுகளை காப்பியடித்தாலோ, காப்பியடிக்க திட்டம் தீட்டினாலோ, காப்பியடிக்க நினைத்தாலோ சொற்களுக்குள் பொதிந்து வைத்துள்ள மந்திரங்கள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்பதை இதைப் படிப்பவர்கள் அறிவார்களாக. சொற்களின் சக்தி அவரவர் ஜாதக பலன் பொறுத்தும், படிக்கின்ற நாள், கிழமை, திதி பொறுத்தும் மாறுபடும். முழு பலன் தருமிடத்து ரத்த வாந்தி காணும்; பேதி புடுங்கும். வாயில் நுழையாத பெயருள்ள புதுப் புது மன நோய்களும், உடல் உபாதைகளும் ஆட்டுவிக்கும். பிராயசித்தம் கிடையாது. இந்த காப்புரிமை நோட்டீஸை வேருள்ள சிந்தனையாகக் காண்பது அவரவர் குலம், தரிசனம், உள்ளொளி, ரசனை, ஆத்ம பலம், ஞான மரபு  சார்ந்தது என்று அறிவீர்களாக. 

கரும் பூனைகள்


அவள் விட்டுச் சென்ற கரும்பூனை
பல முறை ஈன்றது
சிறிதும் பெரிதுமாய் 
படை படையாய் வீடு முழுக்க
சோபாவில், படுக்கையறையில், சமயலறையில்,
குளியலறையில், மேஜைக்கடியில்
ஆவேசமாய் உன்னைப் பிராண்ட
காத்திருக்கின்றன
உன் கண்களை பூனைகளின் கண்கள்
சந்திக்கத் தவறுவதேயில்லை
ரௌத்திர குட்டி ஒன்றின் பட்டுக் காதினை
அவளெனவே தடவி
மென்மையாய் முத்தமிடுகிறாய்
கதறிக் கிழிக்கிறது அது உன் கண்ணை
பாய்ந்து தாக்குகிறது
பூனைப் பட்டாளம்
உன் உடல் முழுக்க குருதி வழிய வழிய
கிறீச்சிட்டு கெக்கலித்து
கூரிய நகங்களால்
புணர்ச்சியின் வேகத்தோடு உன் உடல் முழுக்கக்
கிழிக்கின்றன
ஒப்புக் கொடுக்கிறாய் நீ
ஆனந்தமாய்

Saturday, August 13, 2011

ஓராயிரம் நிலவுகள்


ஓராயிரம் நிலவுகளை
ஓரு திருடி விட்டுச் சென்றாள்
வனம் போல் விகசித்திருந்த 
என் நினைவில்.
குருதி தோயாத
ஒரு நிலவு மட்டுமே உண்டென்றது 
திருடியின் குறிப்பு.
எல்லோருக்குமாய்
காய்கிறது
ஒரு நிலவு.

பெறுவாரே அச்சச்சோ


பெரும் முலைகள் அறுத்து
வழியும் தாய்க்குருதியை
நக்க நீளும்
மயிர் முளைத்த நாவு
தென்னி எடுத்த 
சல்லிக் காசுக்கு
மூளும் கலகம்

அஞ்சலி









From http://50watts.com/#2068768/Harry-Clarke-s-Fairy-Tales














































தோழி கூறியது:
கூரையற்ற
தோட்டத்து குளியலறைத் தரையில்
ஜப்பானிய ஓவியமெனவே கிடந்தாள்
அவள் நிர்வாணத்தை மறைத்த கரும் பச்சை இலைகள்
உன் பெயரை எழுதியிருந்தன 
அவளுடைய பொன்னிறக் கூந்தல் தோட்டம் முழுக்க விரிந்திருந்தது
ஒரு கையில் அணைந்த சிகரெட்டும்
மறு கையில் உன் குரலில் பேசும் கிளியும்.
அவள் சுவாசிக்க வேண்டுமேயென்று பதைபதைத்து
இலைகளை அவள் முகத்திலிருந்து விலக்குகிறாய்
அவள் உதடுகளையும் மென் முலைகளையும் சருகுகள் குத்துமோ என்று கவலையுறுகிறாய்
அவளின் நிலைத்த கண்களில் உன் உருவைத் தேடுகிறாய்
மெதுவாக விசிலடித்தபடியே 
முட்டுக்களை கட்டிக்கொண்டு
அவள் எழுந்து உன் பெயரைச் சொல்லி அழைப்பாளென
காத்திருக்கிறாய்
கிளி தத்தி தத்தி ஏதோ உளறியபடி
தோட்டம் முழுக்க
அலைகிறது