Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts
Friday, July 14, 2017
Tuesday, April 11, 2017
Gerhard Richter, Painting (2011)
"One of the world’s greatest living painters, the German artist Gerhard Richter has spent over half a century experimenting with a tremendous range of techniques and ideas, addressing historical crises and mass media representation alongside explorations of chance procedures. Infamously media-shy, he agreed to appear on camera for the first time in 15 years for a 2007 short by filmmaker Corinna Belz called Gerhard Richter’s Window.
Her follow-up, Gerhard Richter Painting, is exactly that: a thrilling document of Richter’s creative process, juxtaposed with intimate conversations (with his critics, his collaborators, and his American gallerist Marian Goodman) and rare archive material. From our fly-on-the-wall perspective, we watch the 79-year-old create a series of large-scale abstract canvasses, using fat brushes and a massive squeegee to apply (and then scrape off) layer after layer of brightly colored paint. This mesmerizing footage, of a highly charged process of creation and destruction, turns Belz’s portrait of an artist into a work of art itself."
Thursday, January 19, 2017
Artist Michael Irudhayaraj| Times of India
Article on Michael Irudhyaraj's exhibition can be read online at http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=Artist-ready-to-unlearn-skills-and-flow-freely-19012017008025
Friday, February 12, 2016
Artist C.Douglas | The Times of India
My article on the works of artist
Sunday, January 5, 2014
பேரழிவிற்கான சங்கல்பம்: நடேஷின் ஓவியங்களில் காணப்படும் பதற்றம்
![]() |
ஓவியர் மு.நடேஷ் |
நடேஷின் ஓவியங்கள் என்னை எப்பொழுதுமே திகைப்பில் ஆழ்த்துபவை; ஏனெனில் நடேஷின் ஓவியங்கள் பதற்றம் நிறைந்தவை; அவற்றின் கோடுகளும் நிறங்களும் நமது மென் உணர்ச்சிகளை கீறிக் காயப்படுத்துபவை. நடேஷின் ஓவியங்கள் கச்சாவாக, முழுமையாக்கப்படாமலேயே கைவிடப்பட்டவை என்ற தோற்றங்களைக் கொண்டவை; அந்தத் தோற்றங்களே அவற்றின் நோக்கங்கள் என்பது நமக்கு உடனடியாகப் புரிவதில்லை என்பது நடேஷின் குறைபாடல்ல. நடேஷின் ஓவியக்கண்காட்சிகளின் போதோ, அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை வைத்தோ, அவருடைய ஃபேஸ்புக் பதிவுகளைப் படித்தோ அல்லது நேர்பேச்சிலோ அவருடைய ஓவியங்களுக்கான விளக்கங்களை முழுமையாகப் பெறமுடியாது; ஏனெனில் அவை அவருடைய ஓவியங்களின் பதற்றத்திற்கு தொடர்புற்ற வேறு தளங்களைப் பற்றி சொல்வதாக இருக்கும். நடேஷின் ஓவியங்கள் மற்றும் கோட்டுச் சித்திரங்களின் வசீகரம் அவை பார்வையாளர்களை நான் உங்களைப் புண்படுத்துகிறேன் பார் என்று சொல்லி புண்படுத்துவதால் ஏற்படக்கூடியவை. அவை பலமுறை நம்மிடையே மெல்லிய நகைச்சுவையுணர்ச்சியைத் தூண்டும் , நம்முடைய புத்திசாலித்தனத்தினை குறைத்து மதிப்பிடும், வெகுஜனப் பண்பாட்டின் தேய் வழக்குகளை நம் மேல் திணிக்கும், அந்தத் தேய் வழக்குகளை வைத்தே நமக்குப் புதிதாக ஒன்றையும் சொல்ல முற்படும். நடேஷையும் அவருடைய ஓவியங்களையும் எளிதில் வகைப்படுத்த முடியாது.
நடேஷின் சமீபத்திய ஓவியங்களின் வரிசையொன்றைப் (நடேஷ் இந்த வரிசையை 'கஜினி சீரீஸ்' என்று அழைக்கிறார்) பார்க்கும் வாய்க்கும் எனக்குக் கிடைத்தது. வெகுஜன பண்பாட்டின் தேய் வழக்கின் சைகை ஒன்றினை எடுத்துக்கொண்டு நடேஷ் வரைந்த ஓவியங்கள் அவை. இரு கைவிரல்களையும் இணைத்து கோர்த்து வைத்துக்கொள்ளக்கூடிய சைகை அது. தியான மரபுகளில் சங்கல்பத்திற்கான முத்திரைகளுள் ஒன்றாகக் குறிக்கப்படுவது. இரு கைவிரல்கள் இணைந்த முத்திரையினை நடேஷ் கஜினி திரைப்பட போஸ்டர் ஒன்றிலிருந்து எடுத்திருக்கிறார்; அதே படத்திலிருந்து சதைநார்கள் இறுகி உடல் வலிமை காட்டும் சூர்யா கதாநாயக பிம்பத்தினையும் references ஆகக் கொண்டு நடேஷின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வெகுஜனப் பண்பாட்டின் விமர்சனமாகவும் நடேஷின் ஆன்மீகப்பயணமாகவும் இந்த ஓவிய வரிசை அமைந்திருக்கிறது.
இங்கே ஆன்மீகம் என்பதினை விளக்கிச் சொல்லவேண்டும். நம்மூரில் ஆன்மிகம் என்பது பூஜை புனஸ்காரம் என்று இருப்பது, பட்டையும் கொட்டையுமாய் அலைவது, மதவாதங்களை முன்வைப்பது என கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கிறது. மதங்கள் சார்ந்தோ சாராமலோ ஆன்மிகம் எனப்படுவதன் முக்கிய அம்சங்களில் ஒன்று மனித குலத்தின் பேரழிவு மற்றும் முழுமுற்றிலுமான அழிவு பற்றிய கவலை, பயம், பதற்றம் நம் படைப்பியக்கத்தின் வழி செயல்பட அனுமதிப்பது; முழுமுற்றிலுமான மனித குல அழிவு பற்றிய பதற்றத்தினை ஊற்றுக்கண்ணாகக் கொண்டு மனிதனின் சிறு சிறு செயல்களிலும் இதர வெளிப்பாடுகளிலும் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் கூறுகளை அடையாளம் காண்பது. இந்த ஆன்மீகம் மத நம்பிக்கை உடையோரிடத்தே apolocalyptic visionஆக வெளிப்படுமென்றால் எந்த மதங்களையும் சாராதவர்களிடம் பெண்ணிய சுற்றுச்சூழலியலாக (feminist environmentalism) வெளிப்பாடு அடைகிறது. நடேஷின் ஓவியங்களில் பெண்ணிய சுற்றுச்சூழலியலே ஆன்மீகமாக அதுவே கண்ணால் பார்த்து தரிசிக்கக்கூடிய பதற்றங்களாக வெளிப்பாடு பெறுகின்றன.
நடேஷின் பெண்ணிய சுற்றுச்சூழலிய ஆன்மீகத்தில் பெண்ணே ஆணின் ஒற்றை உண்மையாக உணரவைக்கப்படுகிறாள். சங்கல்பத்தின் முத்திரை ஒரு visual motif ஆக ஒவ்வொரு ஓவியத்திலும் வெவ்வேறு காட்சிப்பிம்பங்களோடு இணைக்கப்படும்போது ஒவ்வொரு ஓவியமும் ஒரு புது வகை visual syntaxஐ உருவாக்குகிறது. அந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரு வரிசையாக்கப்படும்போது நமக்கு பெண்ணிய சுற்றுச்சூழலிய ஆன்மீகம் கலை அனுபவமாகிறது. ஆணின் தசைநார் முறுக்குதல்களை அழகாகக் கொண்டாடுவதற்கான உறுதிப்பாடு (சங்கல்பம்) நடேஷின் ஓவிய வரிசையில் மிருகரூபம் அடைகிறது; இயற்கையின் அங்கமான பெண்ணுடலினை வசீகரிக்க, அடக்க, அழிக்க, ஆள்கையின் கீழ் வைக்கும் எந்திரமாகிறது. பேரழிவின் சங்கல்பத்திற்கான முத்திரைகளை நடேஷ் எந்தச் சூழல்களிலெல்லாம் வைக்கிறார் என்று அவருடைய ஓவியங்களின் வழி பார்த்தோமென்றால் துருவக் கரடிகளின் அழிவு, எகிப்திய பாரோக்களின்கொடுங்கோன்மை முதல் தமிழ் சினிமாவின் அன்றாட அனுபவம் வரை அவை விரிந்திருக்கின்றன. மனித குல பேரழிவுக்கான யத்தனங்களாக அவை பெரும் பதற்றங்களைத் தொற்றவைக்கின்றன. வாடாமல்லி நிறமாக, நீலமாக, சிகப்பாக, ஆங்காங்கே வழியும் சாயங்களாக நடேஷின் ஓவியங்களின் வழி பதற்றங்கள் நம்மை ஆக்கிரமிக்கின்றன, கவனிக்க வைக்கின்றன, சுயபரிசோதனைக்கு அழைப்பிதழ் விடுக்கின்றன. நடேஷ் நம் காலத்தின் அதி முக்கிய பெண்ணிய சூழலியல்சார் ஆன்மீகக் கலைஞன்.
நடேஷின் ஓவியங்கள்:
ஓவியங்களைத் தந்து உதவிய நடேஷுக்கு நன்றி.
Wednesday, March 13, 2013
புது சரஸ்வதி வந்தனம் : கவிதையும் கவிமூலமும் பலாபலனும்
பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியம் |
கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு தல யாத்திரை போய் வந்ததைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா அதில் நண்பர் பாலாஜி ஶ்ரீனிவாசன் எனக்கு இன்னும் சரஸ்வதி ஓவியத்தைத் தரவில்லை என்று புலம்பியிருந்தேனல்லவா பாலாஜிக்கு மனம் நெகிழ்ந்துவிட்டது. முந்தா நாள் இரவு நண்பர் காந்தியுடன் பாலாஜி ஶ்ரீனிவாசன் என் வீட்டிற்கு வந்து சரஸ்வதி ஓவியத்தைத் தந்தார். மேலே புகைப்படமாய் தந்திருப்பது பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியம்; இரண்டரை அடிக்கு மேல் உயரம். புகைப்படமெடுக்கும்போது இடது பக்கத்தில் என் மேஜை விளக்கின் ஒளி பிரதிபலிக்கிறது. அதை சரி செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன். என் வீட்டு படிப்பறை-நூலகத்தின் களையே லஷ்மிகரமாக இந்த ஓவியத்தை என் எழுது மேஜையில் வைத்தவுடன் மாறிவிட்டது. என்னுடைய சரஸ்வதி பிரேமை கட்டுக்குள் வந்துவிட்டதான கற்பிதத்தில் மனம் அமைதியாகிவிட்டது. ஆராய்ச்சி நோக்கம் தவிர பெரிதாக கடவுள் நம்பிக்கை, மத ஈடுபாடு ஏதுமற்ற எனக்கு வழிபாட்டு முறைகள், மதம் சார் படிமங்கள், கோவில் குள தல யாத்திரைகள், பாராயணங்கள், என் மனதினை எப்படி நெறியாளுகின்றன என்பதை உற்று கவனிப்பதிலும் அவற்றை பாரபட்சமற்று பதிவு செய்வதிலும் ஆர்வம் மிகுந்திருக்கிறது.
கிட்டத்தட்ட என்னைப் போன்றே மனப்பான்மையுடையவர்கள் நண்பர்கள் பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் என்பது என் எண்ணம். பாலாஜி ஶ்ரீனிவாசன் NFSC (National Folklore Support Centre) நடத்திய இந்திய மரபு ஓவிய பயிலரங்குகளில் கலந்து கொண்டபோது எனக்கு அறிமுகமானார். NFSC 14 இந்திய ஓவிய மரபு பயிலரங்குகளை இது வரை நடத்தியுள்ளது. ஒவ்வொரு மரபு ஓவிய பயிலரங்கிலும் மரபு ஓவியர்கள் கலந்து கொள்வபர்களுக்கு தங்கள் ஓவிய மரபின் நுட்பங்களை பயிற்றுவிக்க, கூடவே ஆராய்ச்சி உரைகளும் வழங்கப்பட்டன. நான் எல்லா மரபுஓவிய பயிலரங்குகளிலும் ஆராய்ச்சி உரைகளாற்றியிருக்கிறேன். எல்லா பயிலரங்குகளிலும் பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் கலந்து கொண்டிருக்கின்றனர். பயிலரங்குகளின் போதும் அவற்றைத் தொடர்ந்தும் என் உரைகளை ஒட்டி நடந்த உரையாடல்களில் பாலாஜி ஶ்ரீனிவாசனுக்கும் எனக்குமான நட்பு பலப்பட்டது. பாலாஜி ஶ்ரீனிவாசனை ஒரு ஓவியராக, பயணியாக, கோவில் கட்டிடக்கலை, புராணங்கள், ஆகியவற்றைப் பற்றிய சிறந்த அறிவுடைய படிப்பாளியாக நான் கொஞ்சம் கொஞ்சமாக அறியலானேன். NFSC இந்தியா முழுக்க மேற்கொண்ட வாய்மொழி நிகழ்த்துகலைகள் ஆய்வுத் திட்டமொன்றில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்ட ‘பிரகலாத சரித்திரம்’ நாடக நிகழ்த்துதல்களை ஆய்வுக்கும் ஆவணப்படுத்துதலுக்கும் உட்படுத்தும் பணியினை பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் செய்து தந்தனர். அவர்கள் இருவரும் 2002 இல் NFSC நடத்திய நாட்டுப்புற கலைகளின் விழாவிற்காக மகாராஷ்டிர மாநிலத்தின் சித்ரகதி ஓவிய மற்றும் கதை சொல்லல் மரபு கலைஞர்களைப் பற்றிய களப்பணியும் மேற்கொண்டனர்.
பாலாஜி ஶ்ரீனிவாசன் NFSC பயிலரங்குகளின் வழி அறிந்த மதுபனி ஓவியங்களின் கலாமரபினைப் பின்பற்றி மகாபலிபுரம் சிற்பங்களை வரைந்து ஒரு தனி நபர் கண்காட்சி நடத்தியுள்ளார். போன வருடம் தன் ஒன்பது மாணவர்களை வழி நடத்தி சித்ரகதி பாணியில் பாரதக்கூத்தினை வரைய வைத்து கண்காட்சி நடத்தியுள்ளார்.
மரபான ஓவியக்கலையின் எல்லைகளுக்குள்ளாகவே ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும், புதுமைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவைகள் பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியங்கள். பாலாஜி ஶ்ரீனிவாசன் எனக்குக் கொடுத்துள்ள தஞ்சாவூர் பாணியிலான சரஸ்வதி ஓவியம் அந்த மரபின் நீட்சியில் ஒரு முக்கிய கண்ணி என்பதினை தஞ்சாவூர் ஓவிய மரபினை அறிந்த எவருக்குமே பார்த்தவுடனேயே தெரியவரும். இம்மாதிரியான படைப்புகளை உருவாக்குகிற கலைஞர்களே நம் மரபுக் கலைகள் உயிர்ப்புடன் நீடித்திருப்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றனர். என் தினசரி வாழ்வின் பகுதியான என் படிப்பறையின் ecology-ஐயே மாற்றிவிட்ட பாலாஜி ஶ்ரீனிவாசனுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.
நேற்றைக்கு முன் தினம் அமாவாசை. மாசி மாத அமாவசையன்று அங்காளபரமேஸ்வரி ஆலயங்களில் மயானக் கொள்ளை அல்லது மயான சூறை என்றழைக்கப்படும் திருவிழா நடைபெறும். நான் வேளச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் நடைபெறும் மயானக் கொள்ளையை வருடா வருடம் பார்த்து வருகிறேன். இரண்டு வருடங்களாகத் தப்பிவிட்டது. மயானக்கொள்ளை மகாசிவராத்திரிக்கு மறு நாள் வரும். மகாசிவராத்திரிக்குக் கண்முழிப்பதால் மறு நாள் நடு நிசியில் நடைபெறும் மயானக் கொள்ளை பார்ப்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாகக் கண் முழிக்க இயலவில்லை. இந்த வருடம் சிவராத்திரிக்கு இரவு இரண்டு மணிக்கே தூங்கிவிட்டேன். அதனால் மறு நாள் மயானக் கொள்ளை பார்க்க சக்தியிருந்தது. சரஸ்வதி படம் வீட்டுக்கு வந்த உற்சாகம் வேறு. பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் திருவல்லிக்கேணி அங்காளபரமேஸ்வரி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டினை சூறையாடுவதைப் பார்க்கப் போய்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் வேளச்சேரியையும் சேர்த்துப் பார்க்கலாம் என்றேன். இரவு பத்தரை மணிக்கு வேளச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு போனபோது ஒன்பது மணிக்கே மயானத்துக்கு தேவி போய் வந்துவிட்டதாகக் கூறினார்கள். அங்கிருந்து திருவல்லிக்கேணிக்கு போனோம். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி அங்காளபரமேஸ்வரி ஆலயங்களிலும் மயான சூறை முடிந்து விட்டிருந்தது. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. காந்தியும் பாலாஜியும் என்னை வீட்டில் விடும்போது மணி ஒன்று இருக்கும். சரஸ்வதி படத்தையே பார்த்துகொண்டு உட்கார்ந்திருந்தேன். தூக்கம் கண்ணைக் கட்டுகையில் இந்தக் கவிதையை எழுதினேன்.
சரஸ்வதி வந்தனம்
நீர்க்கர்ப்பத்தின்
சுழுமுனை
இமை திறக்க
செவி குளிர
முதுமொழிக்காவிய தெளி பாடல்
வீணையின் மீட்டலுடன்
நாளொன்று எழ
முக்குணக் கடல் தாண்டி
முகிழ்க்கும் கமலப்பூ
உன் கால் விரல் தீண்டலால்
வெண்மைப் பேரொளி பரப்ப
புவியும் நீ
மறிபுனலும் நீ
கனலும் நீ
வளியும் நீ
வெளியும் நீ
மனமும் நீ
நீ நீயென
தானழிப்பாய் மாதோ
யாதோ உன்
நித்திய கிருபையென
உன் பிணை விழியால்
கலை பல அமுதத்தாரையாய்
அகிலம் நிறைக்க
மங்கல போகம் நகை வீச
பிராவகம்
இடுகாடு தாண்டியோட
மேனி முயங்கு தொறும்
தடுத்தாட்கொள்வாய்
என்
சாரதே
(சூட்சுமம்: 45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட கவிதையை அர்த்தம் புரிந்து 1000 தடவை ஜபித்து வந்தால் செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி ஏற்படும்; ராஜவசியமும், ஜன வசியமும், பெண் வசியமும், பொன், பொருள், மனைவி, மக்கள், வீடு, நோயற்ற வாழ்வு, வாகனம், ஐபேட், ஐஃபோன், பெரும் பதவி, ஆறிலக்க மாத வருமானம், மன நிம்மதி மற்றும் இந்தப் பட்டியலில் விட்டுப்போன சகலதும் கிடைக்கும். தமிழ் எழுத்தாளனாய் இருந்து தொலைக்காட்சி பேட்டிக்கும் சினிமா கதை விவாதத்திற்கும் போனால் ஆட்டோ கட்டணமும் சன்மானமும் கிடைக்கும். உபரிகளாய் கிடைப்பதைப் பற்றி எனக்கு கடிதமெழுதத் தேவையில்லை. உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எண்ணிக்கையையோ சொதப்பிவிட்டு பலன் கிடைக்கவில்லையென்றால் என்னைக் குற்றம் சொல்ல இயலாது; சொதப்பியது எது என்று தானே சுய பரிசோதனை செய்து பார்த்துகொள்ள வேண்டியதுதான்)
Friday, January 18, 2013
ஓவியர் ஆதிமூலம் நினைவு சொற்பொழிவு : எழுத்தாளர் சா.கந்தசாமி
ஓவியர் கே.எம்.ஆதிமூலம் அவர்களின் நினைவு சொற்பொழிவினை எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள் ஜனவரி 20, 2013 மாலை ஆறு மணிக்கு வழங்க இருப்பது தமிழ் நவீனத்துவத்தின் அடித்தளம் என்ன என்பதினை அறிவதற்கான அரிய சந்தர்ப்பமாகும்.
க்ரியா பதிப்பக வெளியீடாக வந்த சுந்தரராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ அட்டையில்தான் ஆதிமூலம் அவர்களின் ஓவியத்தை நான் முதன் முதலில் பார்த்தேன். திருச்சியில் அன்னம்-அகரம் புத்தகக்கடையில் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலை அட்டையிலிருந்த ஆதிமூலம் ஓவியத்திற்காகத்தான் வாங்கினேன்; அப்போது நான் ஆங்கில இலக்கியம் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். சிற்றிதழ் இலக்கிய சூழலுக்கோ எழுத்தாளர்களுக்கோ எந்தவித அறிமுகமும் இருக்கவில்லை. அன்னம்-அகரம் கடையின் அந்த விற்பனை அலமாரியில் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ அட்டை தனியாக ஒரு வித்தியாசமான அழகோடு இருந்தது. அன்னம்-அகரம் கடையிலிருந்த விற்பனையாளர் அந்த அட்டை ஓவியத்தை வரைந்த ஆதிமூலம் முக்கியமான நவீன ஓவியர் என்று கூறினார். நவீன ஓவியர் புத்தக அட்டைக்கெல்லாமா ஓவியம் தருவார் என்று எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. இரண்டொரு மாதங்கள் சென்ற பின் சென்னையில் க்ரியா பதிப்பகத்தின் அலுவலகத்திற்கு வந்தபோதே நவீன ஓவியர்களுக்கும் நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே அபூர்வமான நட்புறவு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் உருவாகியிருப்பது தெரிய வந்தது.
ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் நமக்கு அணுக்கமான நேரடியாக அனுபவபூர்வமாகக் கண்ட தமிழ் நிலப்பகுதியின் அம்சங்களைக் கொண்டிருந்தன ஆனால் அவை நவீனமாகவும் இருந்தன. ஆதிமூலம் தமிழ் எழுத்துக்களையே பல புத்தக அட்டைப்படங்களில் ஓவியம் போல எழுதியிருப்பார். நவீனமாகும் மனோ நிலையின் காட்சிப்படுத்தல்களாக அந்த ஆதிமூலத்தின் புத்தக அட்டைகள் இருந்தன. ஆதிமூலத்தின் ஓவியம்தான் என் புத்தக அட்டைக்கு வேண்டும் என பிடிவாதம் செய்யக்கூடிய எழுத்தாளர்களும் பதிப்பகத்தினரும் உருவானார்கள். உண்மையில் நல்ல வளமான கலை பண்பாட்டுச் சூழல் என்று ஒன்று இருக்குமானால் அங்கே சகல கலைத் துறையினரும் ஒருவரோடு பழகக்கூடியவர்களாகவும் ஒருவரையொருவர் தங்கள் கலைகளினால் பாதிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழல் தமிழில் உருவாகவில்லையென்றாலும் எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் இடையில் மட்டுமாவது அப்படி ஒரு நட்புறவு ஏற்பட்டது தமிழின் நவீனத்துவத்தும் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.
சிற்றிதழ் இலக்கிய சூழலைச் சார்ந்த எழுத்தாளர்கள் சுமார் முன்னூறு பேர் தமிழகம் முழுவதும் இருந்தார்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் எழுத்தாளர்கள் என்று அவர்கள் வசிக்கும் தெருவில் கூட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் குடும்ப உறுப்பினர்களுக்கே அவர்கள் எழுத்தாளர்கள் என்று பல சமயங்களில் தெரிந்திருப்பதில்லை. தமிழ் சிற்றிதழ் இலக்கிய எழுத்தாளர்கள் ஒரு ரகசிய சங்கத்தினர் போலவே செயல்பட்டார்கள். கிட்டத்தட்ட நவீன ஓவியர்களின் நிலையும் அதுதான். சோழமண்டலமும், கலை கைவினைக் கல்லூரியையும் தாண்டி நவீன ஓவியர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பதே பரவலாக அறியப்படாமல் இருந்தது. இந்தக் காரணமே கூட ஓவியர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே பரஸ்பர நட்புறவுகளை உருவாக்கியிருக்கலாம்.
ஆதிமூலம் வரைந்த ஓவியங்களே அவற்றைப் பெருமையுடன் தாங்கிய புத்தக அட்டைகளே நவீன ஓவியத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் முக விலாசங்கள் தந்தன.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இவ்வாறாக நெல்லின் இமை திறந்து பூமி பிளந்து உயிர் தளிர்த்ததுபோல எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் இடையில் உண்டான உறவு எத்தகையது என்பதினை ஆதிமூலம் பங்களிப்புகள் பற்றிய எழுத்தாளர் சா.கந்தசாமியின் உரையின் மூலம் நாம் அறியலாம். தவிர, தமிழின் நவீனத்துவம் எனப்படுவது ஓவியர்களாலும் உருவாக்கப்பட்டதே. ஆதிமூலத்தின் ஓவியங்களை அறிவது தமிழின் இதர ஓவியர்களையும் அவர்கள் தமிழ் சமூகமும் கலையும் நவீனமடைய ஆற்றியிருக்கும் பங்களிப்புகளையும் அறிவதற்கான வாசல்களைத் திறப்பதாக அமையும்.
மறைந்த ஓவியர் ஆதிமூலம் அவர்களை நான் நன்கு அறிவேன். அன்னாரின் நினைவுச் சொற்பொழிவினை முன்னிட்டு அவரை நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கிறது. ஆதிமூலம் அவர்களின் மகன் ஓவியர் அபராஜிதன் என் நண்பர். அவர் சார்பாகவும் நண்பர்கள் அனைவரையும் எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் சொற்பொழிவுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)