Sunday, November 24, 2013

மிஷெல் ஃபூக்கோவின் முக்கிய உரைகள்








ஃபேஸ்புக்கில் சமணர் கழுவேற்றம் குறித்து நடந்தவரும் விவாதத்தைத் தொடர்ந்து வாசித்துவரும்  சேதுராமன் ஃபூக்கோவின் புத்தகங்களுக்கு அல்லது உரைகளுக்கு சுட்டிகள் தர முடியுமா என்று கேட்டு எழுதியிருந்தார். அவர் பொருட்டு ஃபூக்கோவின் உரைகளுக்கான இந்த சுட்டிகளைத் தருகிறேன். பயனுள்ளதாக இருக்கின்றனவா என்று கேட்டுப்பாருங்கள். 

சமணர் கழுவேற்றம் பற்றிய விவாதத்திற்கான ஃபேஸ்புக் சுட்டி https://www.facebook.com/mdmuthukumaraswamy/posts/10151810604068995?notif_t=like 



Wednesday, November 13, 2013

கோவை ஞானியின் வலைத்தளம்

ஃபேஸ்புக்கில் மனோமோகன் கோவை ஞானியின் வலைத்தளத்தைப் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து உடனே போய் பார்த்தேன். கோவை ஞானியின் வலைத்தளம் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்களின் பட்டியல் தரப்பட்டிருக்கின்றன. மேலும் கோவை ஞானி எழுதிய நாற்பது நூல்கள் இலவசமாகத் தரவிறக்கக் கிடைக்கின்றன. தமிழின் முக்கியமான மார்க்சீய சிந்தனையாளர்களுள் ஒருவரான கோவை ஞானியின் பங்களிப்புகளை அறிந்துகொள்ள, மதிப்பிட, விவாதிக்க இந்த வலைத்தளம் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.



கோவை ஞானி

கோவை ஞானியின் வலைத்தள முகவரி http://kovaignani.org 

Wednesday, November 6, 2013

“அழாதே, மச்சக்கன்னி” குறு நாவலுக்கான சில பின்னணி குறிப்புகள்













ஸிட்கிம்-குட் நிகழ்த்துதலின் ஒரு பகுதி- ஜிண்டோ தீவு -தென் கொரியா 


‘ஸில்வியா’ என்ற புனைபெயர் என்னுள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கவிதாயினி ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கையும் தற்கொலையும் கவிதைகளும் உருவாக்கிய அமானுஷ்ய ஈர்ப்பினால் 1984-இல் நான் எழுதிய முதல் கதைக்கு ஆசிரிய அடையாளமாக அந்தப் பெயரை வைத்துக்கொண்டேன். 1996 ஆம் ஆண்டில் இனி  ஸில்வியா என்ற பெயரை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தேன். துயரமும் துரதிருஷ்டமும் என்னை இனி அணுகாது என்று என் மனதிற்குள் ஒரு பிரத்யேக நம்பிக்கை. அதை எப்படி நான் பிறருக்கு விளக்குவேன்? அந்தப் பெயரில் சுமார் -பிரசுரிக்காததையும் சேர்த்து- இருநூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்; அவற்றில் முப்பது சிறுகதைகள் மட்டுமே பிரசுரம் கண்டிருக்கின்றன. அந்த முப்பது சிறுகதைகளையும் கூட நான் சேகரம் செய்து வைத்திருக்கவில்லை. பிரசுரமான கதைகளை மட்டுமாவது மீண்டும் சேகரித்து இந்தத் தளத்தில் வெளியிடலாமென்று முயற்சி செய்தவண்ணம் இருக்கிறேன். இன்னும் வெற்றி பெறவில்லை. போகட்டும். ஆனால் அடையாளங்களைத் துறப்பது அவ்வளவு எளிதான காரியமல்லவே? யாரவது ஒருவர் நான் எதிர்பார்க்காத சமயத்தில் என்னை ஸில்வியா என்றழைப்பார்; மீண்டும் ஸில்வியாவாக நீங்கள் எழுத வேண்டும் என்று சொல்வார். என்னுள் இறந்துவிட்டதாக நான் கருதிக்கொண்டிருக்கும் அந்தப் பெயரின் அதிர்வலைகள் என்னை நிலைகுலைய வைக்கும். ஈஸ்வரா சர்வேஸ்வரா என்று மனம் அரற்றும். 

என் அந்தரங்க அக வெளியின் பலவீனமான புள்ளியினை நண்பர் கே.என்.சிவராமன் மேற்சொன்னவாறே தீண்டினார். இந்த வருடம் தீபாவளி வாரத்தின்போது  நான் தெற்கு கொரியாவில் நடந்த யுனெஸ்கோ கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. தீபாவளியின் போது நான் இதுவரை வீட்டிலில்லாமல் இருந்ததில்லை. இந்த முறை தீபாவளிக்கு வெளிநாட்டில் இருக்கப் போகிறேன் என்பது என்னை தவிக்க வைத்தது. என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெளிச்சொல்லாத கோபம். அவர்களை நான் பயணம் மேற்கொள்ள இருக்கும் கடைசி தருணம் வரை விதவிதமாக சமாதானம் செய்துகொண்டிருந்தேன். எனக்கும் அந்த சமாதானம் தேவையாய் இருந்தது. ஃபேஸ்புக் வந்தததிலிருந்து ஒரு உபயோகம் என்னவென்றால் நான் பயணங்கள் செல்லும்போதெல்லாம் எங்கெங்கு இருக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் check in செய்வேன். என் மனைவியும் குழந்தைகளும் அந்த இடங்களைப் பார்த்து வைத்துக்கொள்வார்கள். நான் வீடு திரும்பியதும் அந்த இடங்களை பற்றி என் மகன்களுக்கு ஏராளமான கேள்விகள் இருக்கும். இன்னொரு உபயோகம் நண்பர்களும் நானும் சந்திக்க வேண்டிய இடங்களை பகிர்ந்து கொள்வது. கொரியாவுக்கு கோலாலம்பூர் வழி பறந்து சென்றால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்திக்கலாம் என்றிருந்தார் என்னுடைய ஃப்ரெஞ்சு தோழி. அவர் பாரிசிலிருந்து லாவோசுக்கு கோலாலம்பூர் வழி செல்வதாய் இருந்தார். இணையத் தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் நான் எங்கிருக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் அறிவித்த வண்ணம் இருந்தேன். என்னை கே.என். சிவராமன் தொடர்ந்து கொண்டிருந்தார். பயணம் கிளம்பியபோது கொரிய பயண அனுபவத்தை வைத்து ஸில்வியா கதை எழுதுமாறு தூண்டிய அவர் ஊர் திரும்பிய உடன் ‘மச்சக்கன்னி’ என்னுடன்  வந்திருக்கிறாளா என்று கேட்கத் தவறவில்லை. 

எம்.டி.முத்துக்குமாரசாமியாக எழுதிய சிறுகதைகளின் தலைப்புகளில் எனக்குப் பிடித்த கதைத் தலைப்பு ‘மீனாள் அழுகிறாள், ரகுநந்த’. அந்தத் தலைப்பு கொரிய பயணம் போல இன்னொரு விமான பயணத்தின்போது தூக்கமின்மையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது திடீரென நானே எனக்குள் ‘மீனாள் அழுகிறாள், ரகுநந்த’ என்று சொல்லிக்கொண்டேன். அந்த வாக்கியத்தின் வசீகரத்தினால் மேலும் மேலும் உள்வாங்கப்பட்டு ஸ்டானிஸ்லவ்ஸ்கியின் நாடக நடிகனைப் போல பல தொனிகளில் சொல்லிப்பார்த்தேன். கடைசியில் எழுதப்பட்ட கதையிலும் கூட பல தொனிகளில் ‘மீனாள் அழுகிறாள், ரகு நந்த’ என்ற வரி வருகிறது. என் அனுபவங்களுக்கும் கதைகளுக்கும் உள்ள உறவு இந்த மாதிரியானதுதான். கோலாலம்பூர் விமான நிலையத்தில்  என் ஃப்ரெஞ்சுத் தோழியினை சந்தித்தபோது அவர் நான் எதற்காக கொரியா செல்கிறேன் என்று கேட்டார். சட்டென்று ‘மச்சக்கன்னிகளை சந்தித்து கதை எழுத’ என்றேன். கூடவே ‘என் மச்சக்கன்னிகளுக்கு மீனுடலும் வாலும் இடுப்பிலிருந்து வளர்ந்திருக்காது; சாதாரண பெண்கள்தான் அவர்கள் ஆனால் அவர்கள் தரையில் நடந்து செல்லும்போது நீந்துவதுபோல அவர்களின் கைககளை கொரிய விசிறிகளைப் போல விசிறிக்கொண்டே மிதந்து செல்வார்கள்’ என்றேன். ‘நீ இன்னும் மாறவே இல்லை’ என்று என் தொந்தியில் குத்தி சிரித்தார் என் தோழி. எழுதப் போகும் கதையில் யாரும் அழமாட்டார்கள் என்று தோன்றியது. ஆனால் அழுகையும், கேவலும், ஒப்பாரியும் இல்லாமல் கலை இலக்கியம் இல்லையே என்றும் தோன்றியது. ஆகச் சிறந்த ஒப்பாரியை எப்படி கலாபூர்வமாக வைப்பது என்பதுதானே இலக்கியம்? மரணங்களை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் கண்ணீரையும் கம்பலையையும் வார்த்தைகளுக்குள் ஒளித்து வைக்கவேண்டும். அந்த அழுகை வாசக வாசகியரைத் தொற்றவேண்டும். அவர்கள் கண்ணீரின் கறை எப்போதுமே உலர்ந்துவிடலாகாது. அதுதானே இலக்கியம். நான் இந்தக் கதையில் அதைச் செய்யமாட்டேன் இந்தக் கதையில் யாரும் அழமாட்டார்கள் அப்படி அழுதாலும் ‘அழாதே மச்சக்கன்னி’ என்று நான் அழுபவர்களைத் தேற்றிவிடுவேன் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். கூடவே நானும் என் அகத்தின் தீராத அழுகையிலிருந்து விடுபட்டுவிடுவேன். ‘அழாதே மச்சக்கன்னி’ என்பதுதான் தற்காலிக கதைத் தலைப்பு என்று டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குறித்தேன்.

தென்கொரியாவில் நடந்த யுனெஸ்கோ கருத்தரங்கு ஒரு வகையில் வித்தியாசமானது; ஆசிய சாமியாடிகளின் மாந்தரீகங்களின் (Shamans and shamanistic heritage of Asia)  பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கான செயல்முறைக் கருத்தரங்கு. நான் பல ஆதிவாசி சாமியாடிகளைய்ம் மாந்தரீகர்களையும் பற்றி ஆராய்ச்சி செய்திருப்பதால் என்னை இந்திய அரசு பொறுப்பதிகாரியின் சிபாரிசின் பேரில் என்னை அழைத்திருந்தார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைக்களுக்கு எதிராக போராடிய டாக்டர் நரேந்திர டாபோல்கரின் கொலைக்குப் பிறகு மகாராஷ்டிர  மாநிலம் இயற்றிய மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் இந்தியா முழுக்க அமல்படுத்தப்படுமானால் எத்தனை உண்மையான சாமியாடி மரபுகள் மூடநம்பிக்கை என்று ஒழித்துக்கட்டப்படும் என்பதும், அதேசமயம் ஆசாராம் போன்ற சாமியார்கள் இந்திய மரபுகள் பலவற்றினையும் கீழ்மைப்படுத்தி வருவதும் என்ன மாதிரியான சிக்கல்களை உண்டாக்கியிருக்கின்றன என்பதைச் சொல்வதாகவும் என் கட்டுரையை எழுதியிருந்தேன். மனித மனத்தின் நோய்களைக் குணப்படுத்த கிராமத்து சாமியாடிகள், ஆதிவாசி மாந்தரீகர்கள் ஆகியோர் கையாளும் உத்திகள் நிஜமாகவே குணப்படுத்துகின்றன என்பதினை சுதிர் காக்கர் எழுதியிருப்பதை ஆதாரம் காட்டி என்னுடைய ஆராய்ச்சிகளிலிருந்து உதாரணங்கள் காட்டி விளக்குவதாக என் கட்டுரை அமைந்திருந்தது. அந்தக் கட்டுரைக்காக மனித மனத்தின் விசித்திரங்கள் பற்றியும் என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. 

கொரியாவின் இந்தோசென் விமானநிலையத்தில் நான் இறங்கியபோது தூக்கமின்மையாலும். கால இட குழப்பங்களினாலும் வெகுவாக சோர்ந்திருந்தேன். என்னை வரவேற்க விமானநிலையத்திற்கு வந்திருந்த கொரிய இளம் பெண் அதிகாரிகள் சித்திரப்பாவைகள் போல இருந்தனர்; அவர்கள் இரு உள்ளங்கைகளையும் விரல்களையும் விரித்து விசிறிகளைப் போல ஆட்டியது நான் கனவில் கண்ணீர் துடைத்த மச்சக்கன்னியின் கை அசைவுகளாகவே இருந்தன. என்னை விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஏழுமணி நேர பயணமாக தென்கொரியாவில் தெற்கு மூலையில் இருக்கும் இருக்கும் ஜிண்டோ தீவுக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றார்கள். பஸ்ஸில் வியட்நாம், மியன்மார், ஜப்பான், மங்கோலியா, கொரியா தேசங்களைச் சேர்ந்த நிகழ்த்துகலைஞர்களும், பூட்டான், துருக்கி, லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் என்னுடன் பயணம் செய்தனர். 

தென்கொரியா சிறு சிறு மலைகளாலும் இடைப்பட்ட சமவெளிப்பிரதேசங்களாலும் ஆனது; சகதிக்கடற்கரைகளைக் கொண்ட கடற்பரப்புகளால் சூழப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியா படு ஏழ்மையான ஒரு நாடு. பல போர்களினால் சீரழிக்கப்பட்டது. இன்று அந்த நாட்டில் பயணம் செய்யும் எவருக்கும் அந்த நாடு எப்படி செல்வந்த நாடாகியது என்ற ஆச்சரியமே பிரமிக்க வைக்கும். பிரமாதமான அகண்ட சாலைகள், வானளாவிய கட்டிடங்கள், மலைகளைத் துளைத்து இடப்பட்ட பாதைகள், செவ்வனே காப்பாற்றப்பட்ட விவசாயம், சாம்சங், ஹியுண்டாய் என்று பிரம்மாண்டமான தொழிற்சாலைகள், துறைமுகங்கள், கப்பல்கள் என்று  எங்கள் பயணம் கொரியாவின் சாதனைகளை எங்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தத்து. என் அருகே அமர்ந்திருந்த கொரிய இளம்பெண் அதிகாரி கொரிய தாய்மொழி வழிக் கல்வியே கொரியாவின் அதிவேக முன்னேற்றத்திற்குக் காரணம் என்று சொல்லிக்கொண்டு வந்தார். கேட்பதற்கே இதமாக இருந்தது.

ஒரு பயணக்கட்டுரையை எழுதுவது என் நோக்கமல்ல என்பதாலும் என் குறு நாவலுக்கான பின்னணி விபரங்களைத் தருவதே என் நோக்கம் என்பதினாலும் சுற்றுலா விபரக்குறிப்புகளை நான் இங்கே மேலும் தரப்போவதில்லை. 

ஜிண்டோ தீவு நம்ம ஊர் ராஜபாளையம் நாய்கள் போல தோற்றத்தில் இருக்கும் ஒரு வகை நாய்களுக்காக கொரியா முழுக்க பிரசித்தி பெற்றது. ஜிண்டோ நாய்களுக்கான ஒரு அருங்காடசியகம் இங்கே இருக்கிறது. மலைக்குன்றின் உச்சியில் இருந்த ஜிண்டோ ஹோட்டலின் நான்காவது மாடியில் இருந்த என் அறையிலிருந்த பால்கனி நோக்கிய சுவரளவு ஜன்னலின் திரைகளை விலக்கியபோது கடலும் வானமும் என் கண் எதிரே விரிந்தன. “இதுதான் இதுதான் இதே இடம்தான் என் கதை நிகழும் கடற்கரை” என்று என் மனம் கும்மாளமிட்டது. பெயர் தெரியாத பறவைகள் உம் கொட்டிப் பறந்தன. டாலியின் ஓவியம் ஒன்றின் பின்னணி போல சாம்பல் நிறத்தில் கடலும் வானும் சகதிக்கடற்கரையும் இணைந்து கிடந்தன. குளிர் நடுக்க நடுக்க பால்கனியின் கண்ணாடிக் கதவுகளை திறந்து வைத்தேன். நட்சத்திரங்களின் கோட்டுருவமாய் அவளின் முகம் வானத்தில் தோன்றியது. அழாதே மச்சக் கன்னி என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டே எழுதினேன். அவள் தன்  இரு உள்ளங்கைகளையும் விரல்களையும் விரித்து  விசிறி போல ஆட்டி வா வா என்றழைத்தாள். நான் பால்கனியை நோக்கி ஓடினேன். எது என்னை பால்கனியிலிருந்து கீழே குதிக்க விடாமல் தடுத்தது என்று எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை. மறு நாள் குளிர் நடுக்க பால்கனி கதவுகளை மூடாமலேயே தூங்கியிருக்கிறேன் என்று தெரியவர கண் முழித்தேன். வேறொரு அமானுஷ்ய உலகில் நுழைந்து மீண்டதாகத் தோன்றியது. 

இரண்டு நாட்கள் கழித்து ஜிண்டோ தீவின் புகழ் பெற்ற நிகழ்த்து கலையான ‘ஸிட்கிம்-குட்டினை’ பார்ப்பதற்காக திறந்த வெளி அரங்கில் அமர்ந்திருந்தேன். நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த கொரிய பெண் சாமியாடி என்னருகே வந்தார்.  அவர் கூடவே மொழிபெயர்ப்பாளரும் வந்தார். “வந்தவுடனேயே பார்த்துவிட்டாய் போலிருக்கிறதே” என்று கூறி சிரித்தார் சாமியாடிப் பெண். நான் ஆமாம் ஆமாம் என்பதுபோல மண்டையை உருட்டி வைத்தேன். “கவலைப்படாதே இன்று அந்த ஆத்மாக்கள் தூய்மையாகிவிடும் ‘ என்று சொல்லிவிட்டுப் போனார். ஸிட்கிம்-குட் ஒரு வகையான தெவசச் சடங்கு நிகழ்த்துதல். என்னுடன் பேசியவர் அந்த சடங்கினை நிகழ்த்தும் முக்கிய பாடகி. ஏழு எட்டு மணி நேரம் நீடிக்கும் அந்த நிகழ்த்துதலில் அவர் ஒரு காகித சாமரத்தை விசிறிக்கொண்டே பாடி இறந்த ஆத்மாக்களை தூய்மைப்படுத்தி சொர்க்கத்திற்கு அனுப்புவார். அன்று அந்த நிகழ்த்துதலைப் பார்த்து சுமார் இருபத்தைந்து பக்கங்களுக்கு குறிப்புகள் எடுத்தேன். அந்தக் குறிப்புகளின் விரிவாக்கத்தையே நான் இந்தக் குறு நாவலாக எழுத விழைகிறேன். பதினைந்து இருபது அத்தியாயங்கள் வரலாம். கதை எப்படிப் போக வேண்டும் என்று எந்தத் திட்டங்களும் என்னிடத்தில் இல்லை.  

சென்னை திரும்பியதும் ஃபேஸ்புக்கில் check in செய்தேன். கே.என்.சிவராமன் மச்சக்கன்னி வந்து விட்டாளா என்று கேட்டு பின்னூட்டமிட்டார். உற்சாகமாக இருந்தது. அவருக்கு என் நன்றிகள்.  மங்கோலிய சாமியாடி எனக்கு சில நெல்மணிகளைக் கொடுத்தார், வியட்நாமிய சாமியாடி இனிப்பு, 2000 கொரிய வோன்கள், சிறிய சாவிக்கொத்தை ஆகியன தந்தார், கேரளத்து கல்லுருட்டி பூதம் மல்லிகையும் செவ்வந்தியும் தந்தார், கொரிய சாமியாடி அரிசிக்கள்ளும் இனிப்பும் தந்தார் என்று நான் பட்டியலிடும்போதே அந்த அமானுஷ்ய கதை என்னுள் விரிய ஆரம்பிக்கிறது. மச்சக்கன்னீ அழாதே!