Monday, April 29, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-18

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-18

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

—-

இயற்றியவர்:  பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 19

திணை:  மருதம்

————-

எவ்விழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்

றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்

தெல்லுறு மௌவனாறும்

பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, மனைப்படப்பையிலுள்ள மரத்தின் மீது படர்ந்த, ஒளியையுடைய முல்லை மலர்கள், மணம் வீசுதற்கிடமாகிய, பலவாகிய கரிய கூந்தலையுடைய இவள், நம் திறத்தில் எத்தகைய உறவினை உடையவளோ!. ஆதலால் எவ்வியென்னும் உபகாரியை இழத்தலால் உண்டாகிய வறுமையையுடைய யாழ்ப்பாணரது பொற்பூ இல்லாத வறிய தலையானது பொலிவிழந்திருத்தல் போல பொலிவிழந்து வருந்துவாயாக.

———-

வாசிப்பு

—-

இழப்பு, துரோகம், எஞ்சியிருக்கும் நினைவு

————

‘யாரளோ நமக்கே’ என்ற கவிதையின் இறுதிச் சொற்களில் தலைவன் தன்னிடமிருந்து தலைவி மிகவும் அந்நியப்பட்டு போய் யாரோ ஆகிவிட்டதை தன் நெஞ்சிடம்  சொல்கிறான். குறுந்தொகைப் பாடல்களில் இப்படி தன் நெஞ்சோடு பேசும் கவிதைகள் அனைத்துமே மிகுந்த நாடகீயமானவை. யாரளோ என்று தலைவி ஆனதற்கு கவிதையில் காரணங்கள் நேரடியாகச் சொல்லப்படவில்லை.  ‘மனை மரத்து’ என்றது வீட்டு முற்றத்திலுள்ள மரத்தின் மேல் படர்ந்த , ‘எல் உறு மெளவல்’ என்றது ஒளியையுடைய முல்லை மலர்களை. உ.வே.சா மகளிர் முல்லையை வளர்த்தலும் சூடுதலும் கற்புடைமை என்பதைச் சுட்டுகிறார். ‘மௌவல் நாறும் கூந்தல்’ என்றது முல்லையை அணிந்ததால் உண்டாகக்கூடிய நறுமணத்தை சொல்லியதாகும். கற்புடைய தலைவி என்பதால் உறவுக்குத் துரோகம் செய்தவன் தலைவனே. அதனாலேயேதான் அவன் தன் நெஞ்சிடம் பேசுகிறான். ஒருவன் தன் நெஞ்சிடம் எப்படிப் பொய்யுரைக்க முடியும்?  துரோகத்தினால் ஏற்பட்ட குற்ற உணர்வோடு நினைவுகளின் துன்புறுத்துதலுக்கும் அவன் ஆளாகிறான்.

——-

புலனுணர்வுகளின் துய்ப்பால் செழுமையடைந்த உலகும் நினைவும்

——————-

இந்தக் கவிதை புலனுணர்வுகளின் துய்ப்பால் நினைவில் படிந்து செழுமைப்படுத்திய பெண்ணைக் கொண்டாடுகிறது. தலைவன் சூடாமலேயே முல்லை மலர்களின் நறுமணம் அடர்ந்த தலைவியின் கூந்தலைப் பற்றி பேசுகிறது. இரா. இராகவையங்கார் மனைமரத்து இரவிலுற்ற முல்லை மலர்கள் ஒருவருஞ் சூடாமலே மணம் வீசுதல் போல இவள் கூந்தலும் நாம் அணையாமலே மணம் வீசும என்பது குறிப்பு என எழுதுகிறார். கூந்தலை முடிவதற்கு ஐந்து வகைகள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. கூந்தலை உச்சியில் வைத்து முடிவது முடி; கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது கொண்டை; கூந்தலை மலர்ச்சரங்களோடு  செருகினால் அது சுருள்; கூந்தலை அள்ளி முடிவது குழல்; கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொள்வது பனிச்சை. உ.வே.சா. பனிச்சை முதலிய ஐந்து பகுதிகளை உடையது ஆதலால் தலைவியின் கூந்தலை பல் கூந்தலென்றான் என்று எழுதுகிறார். ‘பல்லிருங் கூந்தல்’ நினைவாக, வலியாக, தலைவனை ஆக்கிரமிக்கிறது, கூடவே மல்லிகை மணமும், மனையில் நிற்கிற முல்லை படர்ந்த மரமும்.

——————

இழப்பும் அதன் எதிரொலிகளும்

———-

கவிதை தன் நினைவின் செழுமைகளைலிருந்து சடாரென மாறி சமூகத் தளத்தில் எவ்வி என்னும் புரவல மன்னனின் இறப்பால் பொற்பூக்களை இழந்த பாணர்களின் தலைகள் வெறுமையானதைப் பேசுகிறது. எவ்வி என்னும் மிழலை நாட்டின் மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் போரில் கொல்லப்பட்டான் என புறநானூறு 115  கூறுகிறது . எவ்வி பாணர்களுக்குப் பெரும் புரவலனாய் இருந்தவன், அவனுடைய இறப்பினால் பாணர் ‘பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனை’ ஆயினர். இனை என்பதற்கு திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  இன்னை என்பதன் இடைக்குறை,  அதற்கு வருந்தினை என்பது பொருள் என உரை எழுதுகிறார். பாணர்களின் பொற்பூ இன்றி வறுமையடைந்த தலை, தலைவியின் முல்லையும் மல்லிகையும் மணக்கும் செழுமையான கூந்தலுக்கு எதிராகிறது.

——-

வலியும், சிதைவும்

———-

இக்கவிதை இரு வேறு துண்டுகளை இணைத்து உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் காட்டும் வடிவத்தைக்கொண்டிருக்கிறது.  நெஞ்சே, கூந்தல் நமக்கு யாரளோ ஆதலின் பாணர் தலை போலப் புல்லென்று இனைமதி; இவள் இப்போது வேறுபாடுடையவளானாள்- என்ற அளவில் சிதறுண்டதாக, சிறியதாக, வலியைச் சொல்வதாக இருக்கிறது. சிதறுண்ட வெளிப்பாடுகள் வலியைச் சொல்பவை. அதன் குறுகிய வடிவத்தில் இக்கவிதை மாறும் குறியீடுகளின் வழி, புலனுணர்வின் படிமத்தின் வழி தான் துரோகம் செய்ததை ஒருவன் தனக்குத் தானே சொல்வதை அழகாக வடிவமாக்குகிறது. ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வலியிலும் நினைவிலும் இழப்பிலும் தோய்ந்திருக்கிறது.


Sunday, April 28, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-17

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-17

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

—-

இயற்றியவர்:  கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 18

திணை:  குறிஞ்சி

————-

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சார னாட செவ்வியை யாகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கியவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

சிறு மூங்கிலாகிய வாழ்வேலியையுடைய, வேரிலே பலாக்குலைகளையுடைய பலாமரங்கள் செறிந்த பக்கத்தையுடைய மலைநாடனே, பக்க மலையில், பலாமரத்தின் சிறிய கொம்பில், பெரும் பழம் தொங்கியது போல இத் தலைவியினது உயிரானது மிகச் சிறுமையையுடையது; காம நோய் மிகப் பெரிது, அந்நிலையை அறிந்தவர் யார்? ஒருவருமில்லை; அவளை வரைந்துகொள்ளும் பருவத்தை உடையை ஆகுக.

————

வாசிப்பு

—————-

அர்த்தத்திற்கான போராட்டம்

———-

இந்தக்கவிதை இரண்டுவகையான குறிபீட்டாக்கங்களுக்கிடையிலான (modes of signification), நம் அனுபவத்தில் நிகழும் அர்த்தத்திற்கான போராட்டத்தை விவரிக்கிறது. ஒரு புறம் இயற்கை உலகம்; அது மலைச்சரிவுகளின் மனிதன், மூங்கிலாகிய வேலி, வேரிலே பலாப்பழங்கள் செறிந்த மலைப்பகுதி, பலாமரத்தின் சிறிய கொம்பில் பெரும் பழம் தொங்கியது போன்ற இத்தலைவியின் உயிர் ஆகியன அடங்கியதாக இருக்கிறது. மலைச்சாரலில் இயல்பாக வளர்ந்த சிறு மூங்கிலே பலாமரங்களுக்கு வேலியாகிறது. இதை உயிர்வேலி என்றது சிறப்பு. இந்த இயற்கையுலகு மொழிக்கு முந்தையது,  உந்துணர்வால் பார்ப்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது. இவ்வுலகில் தலைவி தன்னந்தனியாய் இருக்கிறாள். ‘யார் அஃது அறிந்திசினோரே’   என்றது தலைவியின் தனிமையை இயற்கை உலகிற்கும் பண்பாட்டு உலகிற்கும் இடையிலான பாலமாக வைக்கிறது. இயற்கை உலகு குறியியல் தளமெனின் (semiotic plane) பண்பாட்டு உலகு சட்டம், சமூக நியதிகள் நிறைந்த குறியீட்டுத்தளம் (symbolic plane). தோழி தலைவனை இயற்கை உலகிலிருந்து பண்பாட்டுத்தளத்திற்கு  தலைவியை மணம்புரிந்து கூட்டிச் செல்லச் சொல்கிறாள்.

—————

உயிர் தவம் சிறிது காமம் பெரிது எனும் கவித்துவ உச்சம்

———

இந்தக் கவிதையின்  உச்சமாக நான் கருதுவது  “உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” என்ற வரியினை. என்ன மாதிரியான வரி அது! உயிரின் தவம் இவ்வுலகில் சிறிது ஆனால் காமமோ அதனினும் பெரிது எனில் உயிரின் தவத்துக்கு அடிப்படை சக்தியான காமமே அதற்கு எதிராகவும் அதை விடப் பெரியதாகவும்  இருக்கிறது என இவ்வுலக வாழ்வின் அடிப்படை முரணை கவித்துவ உச்சமாக இக்கவிதை சொல்லிவிடுகிறது.  இதன் காட்சிப்படிமமாக சிறு கொம்பில் தொங்கும் பெரிய பலாப்பழம் இருக்கிறது. இந்தப்படிமம், தலைவியின், பெண்ணின் வலுவற்றமென்நிலையைச் சொல்கிறது. பொ. வே. சோமசுந்தரனார் சிறு கொம்பில் பலாக்கனி பின்னும் பருத்து முதிருமாயின் அக்கொம்பினை முறித்துக்கொண்டு வீழ்ந்து சிதறுமாறு போலத் தலைவியின் காமம் பின்னும் முதிருங்கால் அவள் உயிருக்கு இடையூறு செய்து தானும் கெடும் என்பது உவமையாற் போந்தமை உணர்க என்று எழுதுகிறார். இரா. இராகவையங்கார் சிறு கோடு என்பதனால் தலைவியினது இளமையும் மென்மையும் தெரிய வந்ததைக் கவனிக்கச் சொல்கிறார். 

———-

வேர்கோள் பலவின் சாரல் நாட

————

வேரிலே பழக்குலைகளையுடைய பலாமரங்கள்  செறிந்த பக்கங்களையுடைய மலைநாடனே என்றது தலைவனின் மனத்தை ஒரு மலைச்சரிவெனும் நிலப்பகுதியாக்கியதாகும்; அந்நிலப்பகுதியில் ஒரு பழம் கனிந்து கிளை ஒடியத் தயார் நிலையில் இருப்பவளாக தலைவி சுட்டப்படுதல் அபாரமான கவிதையின் உள்ளடுக்காகும். நிலப்பகுதியின் செழுமையும் அதனுள் ஒரு  வலுவற்றமென்நிலையையும் ஒரே சமயத்தில் கவிதை நம்மை கவனம்கொள்ளச் செய்கிறது. 

—————-

தோழி வரைவு கடாயது (தலைவியை மணம் முடிக்கக்கோரியது)

—————

உ.வே.சா முதற்கொண்டு நான் வாசித்த அத்தனை உரையாசிரியர்களும் தலைவியின் நிலையைக் கருத்தில்கொண்டு தலைவன் அவளை மணம் புரியவேண்டும் என்று கூறுவதாகவே விளக்கமளித்துள்ளனர். உ.வே.சா. ‘நாட இவள் உயிர் தவச் சிறிது; காமம் தவப் பெரிது; அஃது அறிந்திசினோர் யார்? ‘ என்பதன் கருத்து ‘தலைவியை நீ விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டும்” என எழுதுகிறார். ஆனால் கவிதை மூங்கில் வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட வேரில் பழுத்த பலாமரங்களின் நடுவே மெல்லிய கிளையொன்றில் எந்நேரமும் ஒடிந்து விழுந்துவிடலாம் என்பது போல அதிக எடையுடைய கனிந்த பலா தொங்கிக்கொண்டிருக்கிறது; அது உயிரின் தவம் சிறிது காமம் அதனினும் பெரிது என்பதைப் போல இருக்கிறது என்பதைச் சொல்வதோடு நின்றுவிடுகிறது.  அது காட்சிப்படிமமாய் நிலைத்து கவிதையில் இருப்பதே அதன் அழகு!

———



Saturday, April 27, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-16

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-16

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  பேரெயில் முறுவலார்

குறுந்தொகையில் பாடல் எண்; 17

திணை:  குறிஞ்சி

————-

மாவென மடலுமூர்ப பூவெனக்

குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப

மறுகி னார்க்கவும் படுப

பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே.

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

காம நோயானது முதிர்வுற்றால் பனை மடலையும் குதிரையெனக்கொண்டு ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அருமப் உடைய எருக்கம் பூமாலையையும் அடையாள மாலை போல தலையில் அணிந்துகொள்வர். வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவரிக்கவும்படுவர்; தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறு செயலையுடையவரும் ஆவர்.

———

வாசிப்பு

——-

காதல் நோயும் மடலேறுதலின் காட்சியும்

————

தான் மடலேற எண்ணியுள்ளதாகத் தலைவன் தோழியிடம் சொல்வதாக அமைந்துள்ள இக்கவிதை காதல் நோய் முற்றிய நிலையில் அது என்ன மாதிரியான கேலிக்குரிய நடத்தையை ஆண்மகனின் மேல் சுமத்தும் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. காதலன் தலைவியால் நிராகரிக்கப்பட்டவனாக  இருக்கும்பட்சத்தில் மடலேறுதல் தலைவியின் மனதை உருக்க, அல்லது சமூக அழுத்தத்தைக் காதலனின் பொருட்டு, காதலியின் மேல் உண்டாக்குதல் மடலேறுதலின் சமூகச்செயற்பாடாக இருந்திருக்க வேண்டும். பனைமடலால் குதிரையைப் போல ஒருருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையிலேந்தி அதன் மேல் ஊர்ந்துவருதல் மடலேறுதலாகும். இக்கவிதையில் தலைவன் மடலேறவில்லை; தன் காமம் முற்றியிருப்பதால் மடலேறிட இருப்பதாகச் சொல்கிறான். பனை மடலில் ஏறுதல், எருக்கம்பூ அணிதல் ஆகியவற்றை விவரித்து தன்னைத்தானே வெட்கமுறும் நடத்தைக்கு உட்படுத்திக்கொள்வதைக் காமம் காழ்கொளின் மடலும் ஊர்வேன், கண்ணியுஞ் சூடுவேன், ஆர்க்கவும் படுப்பேன், பிறவும் செய்வேன் என மடலேறுதலைக் காட்சிப்படுத்துகிறான்.  இதைத் தோழியிடம் தலைவன் கூறுவதை ஒரு அச்சுறுத்தலாக வாசிக்கலாம். இன்னொரு வகையில் காதல் என்பதையே ஒரு சமூக நியதிகளுக்கு எதிரான காட்சிப்படுத்துதலாக இக்கவிதை பொதுமைப்படுத்துவதாகவும் வாசிக்கலாம்.

——

எருக்கங் கண்ணியுஞ் சூடுதல்

——-

எருக்கங் கண்ணியும் சூடுவேன் என்பதிலுள்ள உம்மை விகுதி எருக்கம்பூ சாதாரணமாக அணியத்தக்கதல்ல என்பதைச் சொல்கிறது; அதையும் அணிவேன் என்றது அந்த அளவுக்குக் கீழிறங்கிச் செல்லத் தலைவன் தயாராக இருப்பதைச் சொல்வதாக அமைகிறது. உ.வே.சா., மடலேறும் தலைவன் நீறு, எருக்கமாலை, ஆவிரம்பூமாலை முதலிவற்றை அணிந்து வருதல் வழக்கமெனவும், மடலேற்றைக் குறித்த வேறு பலச் செய்திகளை திவ்யபிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல், சிறிய திருமடலென்பவற்றின் வியாக்கியானங்களால் உணரலாம் எனத் தெரிவிக்கிறார். காமம் முற்றும்போது சமூக நியதிகள் மீறப்படுவதற்கு மடலேறுதலைப் போலவே எருக்கம்பூ அணிதலும் குறியீடாகிறது. 

——-

காதல் எனும் சமூக மீறல் (Love as transgression)

————

குறுந்தொகைக் காதற்பாடல்களில் காதல் என்பதே சமூக மீறல் என்ற கருத்து அடியோட்டமாக இருப்பதை அவதானிக்கலாம். இந்தக் கவிதையிலும் அது அறுதியிடப்படுகிறது.  தலைவன் காமம் முற்றி அவனைப் பீடிப்பதால் அவன் எதற்கும், எந்த அவமானத்தை ஏற்கவும் தயராக இருப்பதை வெளிப்படையாகச் சொல்கிறான். இழிபு சிறப்பாகிறது. 

———————-

வலுவற்றமென்நிலையின் ஆளுமைத் திறம் (The Power of Vulnerability)

————

கேலிக்கும் அவமானத்துக்கும் உட்படத் தயாராக இருக்கும் தலைவனின் வலுவற்றமென்நிலை (vulnerability) காதலின் புனிதத்தின் வழி அவனுக்கு ஆளுமைத் திறத்தை அளிப்பதை இந்தக் கவிதையில் நாம் பார்க்கிறோம். எந்தவொரு வலுவற்றமென்நிலையும் ஆளுமைத் திறத்தினை நல்காது; அதற்கு ஒரு அற அடிப்படை இருக்கவேண்டும். அந்த அற அடிப்படை காதலின் வழி முற்றிய காமமாகத தலைவனை வந்தடைகிறது. இதைத் தமிழன்ணல் வைரம் பாய்ந்து முற்றுதல் எனவும்,  பொ. வே. சோமசுந்தரனார் நனி முதிர்ந்தல் எனவும், இரா. இராகவையங்கார்  முற்றிய பரலாகிய விதையைத் தம் முட்கொள்ளின் எனவும் உரை எழுதுகின்றனர். 


Friday, April 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-15

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-15

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  பாலை பாடிய பெருங்கடுங்கோ

குறுந்தொகையில் பாடல் எண்; 16

திணை:  பாலை

————-

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்

பொன்புனை பகழி செப்பங் கொண்மார்

உகிர்நுதி புரட்டு மோசைப் போலச்

செங்காற் பல்லி நன்றுணைப் பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந்தோரே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

ஆறலைக் கள்வர், செப்பம் செய்யும்பொருட்டு, இரும்பினாற் செய்யப்பட்ட தம் அம்பை, நகனுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல செம்மையான காலையுடைய ஆண்பல்லியானது தன் பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய அழகிய அடியையுடைய கள்ளிகளையுடைய பாலையைக் கடந்து பொருள்வயிற் சென்ற தலைவன் நம்மை நினையானோ?

——-

வாசிப்பு

—-

ஏக்கத்தின் நிலப்பகுதி

————

பிரிவின் ஏக்கத்தையும் அதனால் உண்டாகும் நிச்சயமற்றதன்மையையும் இதயம் பிளக்கும் விதத்தில் சொல்லும் இக்கவிதை பல தள அலசலைக் கோருகிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து கள்ளிச்செடிகளையுடைய பாலைக்குச் சென்றுவிட்டான்.  அப் பாலை நிலம் ஒரு உருவகவெளி; அது பிரிவு உணர்ச்சியால் இன்னும் தூரமாகியிருக்கிறது; கூடவே அது உணர்ச்சியின் நெடுந்தொலைவுக்குக் காட்சியாகிறது. ‘கள்ளியங் காடிறந்தோரே’ என்ற பதச்சேர்க்கை, கள்ளிகளையுடைய பாலையைக் கடந்து சென்ற தலைவன், அந்த பிரிவுணர்ச்சியின் நெடுந்தொலைவைக் கடந்து செல்வதால் அவன் தலைவியை நினைத்தானா என்ற நிச்சயமற்றதன்மையைச் சொல்கிறது; ஆசை பலசமயங்களில் அதனுடைய வழியின் அபாயங்களை மறைக்கிறது.  ‘உள்ளார் கொல்லோ தோழி’  என்ற வரியில்   ‘கொல்’ என்பது ஐயப்பாட்டினை வெளிப்படுத்தும் இடைச்சொல்; அதை அவன் உன்னை நினைக்காமலா போய்விடுவான் என்றும், நினைப்பானா என்றும் சிறு பொருள்மயக்க வேறுபாட்டோடு  விளங்கிக்கொள்ளலாம். 

——-

பொன்னென்றது இரும்பை, செப்பமென்றது கூர்மையை

——-

‘தம் பொன் புனை பகழி’ என்பது இரும்பினால் செய்யப்பட்ட அம்பு; அதை ‘உகிர்நுதிப் புரட்டும் ஓசை போல’ என்றது அந்த அம்பினை நகங்களினால் புரட்டும் போது ஏற்படும் ஓசை எனப் பொருள்படும். ’செப்பம் கொண்மார்’ என்றது நகத்தினால் புரட்டுவது  அம்பினைக் கூர்மைப்படுத்துவதற்காக. அம்பினைக் கூர்மைப்படுத்துவர் கள்வர் என்பதால் அந்தப் பாலையின் அபாயமும் சுட்டப்படுகிறது. இந்த ஒலி எந்த மற்ற ஒலியோடு ஒப்பிடப்படுக்கிறது என்பதில்தான் இந்தக் கவிதை இன்னும் நுட்பமடைகிறது. அம்பைத் தீட்டும் ஒலி ஆண் பல்லி பெண்பல்லியை அழைக்கும் ஒலியோடு ஒப்பிடப்படுகிறது.

——-

செங்காற் பல்லி 

———

அம்பைக் கூர் தீட்டுகிற ஒலி தலைவனுக்கு ‘செங்காற் பல்லி’ தன் இணையைக் கூப்பிடும் ஒலியை நினைவுபடுத்தத் தலைவன் தன் தலைவியை நினைப்பானோ என்கிறாள் தலைவியின் தோழி. அம்பைக் கூர் தீட்டுகிற ஒலி வன்முறையையும் போரையும் குறிக்கிறதென்றால் அதற்கு நேரெதிராகப் பல்லி எழுப்புகிற ஒலி இயற்கையையும் இணைவதற்கான ஏக்கத்தையும் குறிக்கிறது. இந்த வன்முறையின் சித்திரம் காதல் ஏக்கத்தில் உள்ள விரக்தியை பிரதிபலிக்கிறது, காதல் எப்படி காயப்படுத்தக்கூடும் என்ற பயத்தையும்  கூடவே. பல்லியின் முதன்மையான ஏக்கத்திற்கும் கள்வரின் கொள்ளைக்கான தயார் நிலைக்கும் இடையே உள்ள அப்பட்டமான வேறுபாடு, இணைப்புக்கான இயற்கையான ஏக்கத்திற்கும் அந்த ஆசைக்குள் இருக்கும் ஆபத்துகளுக்கும் இடையிலான பதற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. வில்லைக் கூர்மைப்படுத்தும்,  ‘விரல் நகங்களில்’,  பதுங்கியிருக்கும் காமக்குறிப்பு அச்சுறுத்தலுக்கு நெருக்கத்தின் ஒரு அடுக்கை சேர்க்கிறது. இந்த நெருக்கமான ஆபத்து அன்பே மென்மையாகவும் அழிவுகரமானதாகவும் இருக்கும் விதத்தைக் குறிக்கலாம்.

———-

நிச்சயமற்ற தீர்மானங்கள்

———-

திட்டவட்டமான தீர்மானம் இல்லாததால் ஒரு தெளிவின்மை கவிதையின் முடிவிலும் நீடிக்கிறது. தலைவனின் மறுபிரவேசம் பற்றிய தோழியின்  நன்னன்பிக்கைக் கூற்று  நிச்சயமற்றதாக இருக்கிறது.  அது  உண்மையானதா அல்லது தலைவியின் பொருட்டு அன்பால் கூறப்பட்ட பொய்மொழியா?  இந்த திறந்த முடிவு காதலின் ஆசையின் சிக்கலான தன்மையை பிரதிபலிக்கிறது, தலைவியின்  சொந்த கையறு நிலையை எடுத்துச்சொல்கிறது. அச்சமும் ஏக்கமும் நம்பிக்கையும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடும் ஒரு அக நிலப்பரப்பு இங்கே கவிதையாகியிருக்கிறது. 

——-

பல்லியின் அழைப்பு எனும் இறைச்சி

——-

உ.வே.சா. இக்கவிதை நிச்சய்மற்ற தீர்மானத்தோடு முடிவதாக எழுதவில்லை. அவர் ‘பல்லி தன் துணையை அழைக்கும் பாலைநிலத்திற் செல்பவர் அது கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்; ஆதலின் நீ ஆற்றியிருப்பாயாக வென்பது குறிப்பு’ என கவிதைக்கு தலைவிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஒரு நல் முடிவை அளிக்கிறார். இக்கவிதைக்கு  தமிழண்ணல் , சிற்றுயிர்களாகிய கார்ப்பொருளின் காதலைக்கூறி, மானிட உரிப்பொருளுக்குத் துணையுமாக வரும் இதுவே ‘இறைச்சி’ எனப்படும்’ என்று எழுதுகிறார். அந்த வாசிப்பும் அருமையானதே. 


Thursday, April 25, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-14

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-14

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 15

திணை:  பாலை

————-

பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர்க் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி யாய்கழற்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

———- 

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அழகிய வீரக்கழலையும், செம்மையாகிய இலையையிடைய வெள்ளிய வேலையும்கொண்ட தலைவனோடு பலவாகத்தொக்க வளைகளைப் பூண்ட முன்கைகளையுடைய நின் மகள், வெள்ளிய வேலைக் கொண்ட தலைவனோடு செய்த நட்பானது, மிகப்பழைய ஆலமரத்தடியின்கண் உள்ள  பொதுவிடத்தில் தங்குதலைக் கொண்டு தோன்றிய, நான்கு ஊர்களிலுள்ள கோசரது நன்மையையுடைய மொழி உண்மையானவதைப் போல, முரசு முழங்கவும், சங்கு ஒலிக்கவும் மணம் செய்தததால் உண்மை ஆகியது.

———

வாசிப்பு

——- 

செவிப்புல குறிப்பான்களும் (auditory signs) தலைவியின் சமூக நிலை மாற்றமும்

————

‘பறைபட’ என்ற ஆரம்பச் சொற்களுக்கு உ.வே.சா. பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்குவன என உரை எழுதுகிறார். பொ. வே. சோமசுந்தரனார் மணப் பறைகள் ஆரவாரிப்பவும் என அந்த மங்கல நிகழ்ச்சி என்ன என்று சொல்கிறார்.  மணவிழாவின் கொண்டாட்ட சப்தங்களை செவிப்புல குறிப்பான்கள் என (auditory signs)  அழைக்கலாம்; இவற்றைக் கவனப்படுத்தி ஆராயும் அறிஞர்கள் ஓசைகளும் இசையும் சமூக யதார்த்தத்தை க் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று எழுதுகிறார்கள். (பார்க்க: Drobnick, Jim, ed. The Smell Culture Reader. Oxford: Berg, 2006.). மங்கல இசைக்கு அடுத்தபடியாக கவிதையில் சுட்டப்படும் அணிகலணான முன்கை வளையல் அவள் மணமகளாக சமூக நிலையில் உயர்ந்த மாற்றத்தைப் பெற்றுவிட்டாள் என்பதைக் குறிக்கிறது. வான் கென்னப் (Van Gennep) எனும் ஃபெரெஞ்சு மானிடவியலாளர் எழுதிய Rites of passage  எனும் நூல் மணவினை போன்ற வாழக்கைவட்ட சடங்குகள் ஒருவரின் வாழ்க்கையில் சமூக அந்தஸ்த்தின் நிலை மாற்றத்தை எப்படிக் கொண்டுவருகின்றன என்பதை விளக்குகிறது. உடன்போக்கில் முன்பு தலைவனோடு ‘தொன் மூது ஆலத்து’ (தொன்மையான ஆலமரத்தடியில்) இருந்த தலைவி, அதாவது முன்பு சமூக ஒப்புக்கொள்ளாத உடன்போக்கு உறவில் இருந்த தலைவி இப்போது மண உறவில் நுழைந்து சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டாள் எனக் கவிதை சொல்கிறது. சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கு முன்பான ஆலமரத்தடி நிலையை வான் கென்னப் liminal stage - சமூக இடைநிலை - என வகைப்படுத்துவார். கவிதையில் வெள்ளிய வேல்தாங்கிய தலைவன் என்றது தலைவி தலைவனோடு சென்றது அபாயங்கள் நிறைந்தது என்பதைக்குறிப்பால் உணர்த்தியது.

——-

காதல் சமூகத்தில் வேர்கொண்டது

——

உடன்போக்கின் பின் இருவரும் மணம் புரிந்து கொள்வதானால் மடந்தையின் நட்பானது உலகறிய உண்மையாகும் என செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொல்வதாய் இக்கவிதை அமைந்துள்ளது.  பலர் கூடியிருத்தற்கேற்ற கிளைபரப்பும் நிழலுடய ஆலமரத்தினடியும், ‘நாலூர்க் கோசர் நன்மொழி போல’ என்றதும் சமூகம் என்பதன் விளக்கங்கள் ஆயின. இந்தக் கவிதை  தனிப்பட்ட இணையரின் பிணைப்பை சமூக வழக்கத்தின் வலு, அதன்  நீண்ட ஆயுளுடன் இணைக்கிறது;  இது அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை மீறிய சொந்தம், ஆதரவு ஆகியவை தரும் பாதுக்காப்பு உணர்வையும் குறிக்கிறது.

———-

பகிர்ந்துகொண்ட நம்பிக்கை

——

தலைவிக்கும் தலைவனுக்கும்  திருமணம் நிகழும்போது உடன்போக்கு சென்ற மகளின் நிலை சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவிடும் என செவிலி தலைவியின் தாய்க்கு ஆறுதல் கூறுவதாக இந்தக் கவிதை அமைந்துள்ளது. அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்ப்டாத தாய்மார்கள் எந்தக் காலத்திலாவது இருந்திருக்கிறார்களா, என்ன? இக்கவிதையை ஒளவையார் எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. உடன்போகிய மகளை செவிலியோ, தாயோ கண்டிக்கவில்லை என்பதையும் செவிலி மகளை ‘வளை முன் கை மடந்தை’ என அழைப்பதை அன்பின் விளி என்றும் எடுத்துக்கொண்டால் செவிலியும் தாயும் மகளின் உடன்போக்கு திருமணம் மூலம் சமூக அங்கீகாரம் பெற வேண்டும் என்று விழைகிறார்களே தவிர மகள் செய்தது தவறென நினைக்கவில்லை என்றும் வாசிக்கலாம். 

——-


Wednesday, April 24, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-13

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-13

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழி கேட்கும்படி சொன்னது

—-

இயற்றியவர்: தொல்கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 14

திணை:  குறிஞ்சி

————

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த

வார்ந்திலங்கு வையிற்றுச் சின்மொழி யரிவை

பெறுகதைல் லம்ம யானே பெற்றாங்

கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்

நல்லோள் கணவ னிவனெனப்

பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அமுதத்தின் இனிமை நிரம்பிய செவ்விய நாவானது, அஞ்சும்படி முளைத்த நேராகி விளங்குகின்ற கூர்மையான பற்களையும் சிலவாகிய சொற்களையும் உடைய தலைவியை நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக, பெற்ற பின்பு, இந்த ஊரிலுல்ளோர் அறிவாராக, பலர் வீதியில் நல்லோள் கணவன் இவன் எனக் கூற நாம் சிறிது நாணுவேம்!

————

வாசிப்பு

——

செவ்விய நாவும், கூர் பற்களும்

———

தலைவியின் செவ்விய நாவை ‘அமிழ்தென்றது எயிற்றில் ஊறிய நீரை, அமிழ்து பொதி எயிறு எனக் கூட்டுக” என்று எழுதுகிறார் உ.வே.சா. தலைவியைப் பற்றிய  இந்த விவரணை காமத்தின் உணர்ச்சிகரத்தில் தோய்ந்தது. அவளுடைய நாக்கு சிவப்பு, இனிப்பு, அமுதம் நிறைந்தது என்றது, பழுத்த காமத்தையும் துடிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்துவது. ஆயினும்கூட, அது ஒரு பொய்யான பயத்தின் தொடுதலால் உன்மத்தம் அடைகிறது. அவளுடைய நேரான, பிரகாசமான பற்களுக்கு பயம் என்று சொல்லப்பட்ட  மாறுபாடு ஒரு முரண்பாடு அல்ல, மாறாக அது முற்றிலும் காம இன்பத்தைப் பற்றிய ஒரு  முழுஈர்ப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சிகரமான அச்சத்தின் குறிப்பு. இந்தக் கலவை கவிதையின் உணர்வுச் செழுமையை (sensuousness) அதிகரிக்கிறது.  இப்படியான எதிரெதிரான காமக்கவர்ச்சியும் அச்சமும் நிறைந்த உணர்ச்சிகர படிமத்தை தலைவன் சொல்வது, அவனுடைய இப்போதைய நிலைமையின் போதாமையையும் (lack) அதற்காகத் தன் நிலைமையை மீறிய நிறைவை அடைய விரும்புவதையும் சொல்வதாக வாசிக்கலாம் (A desire to have a transcendental fulfillment). 


சிமோன் தி பூவா (Simone De Beauvoir) தன்னுடைய இரண்டாம் பாலினம் (Second Sex) நூலில் இப்படி உள்ளடுக்குகள் கொண்ட விருப்பத்தின் வெளிப்பாடுகள் ஒரு முழுமையான தன்னிலைக்கான தேடல்  என்றும் அது இன்னொரு நபரால் முழுமையடைகிறது எனவும் எழுதுகிறார்.

  

இந்தக் கவிதையிலும்  தலைவனின் விருப்பமானது தன்னை தலைவியோடு சேர்ந்து தன்னை முழுமைப்படுத்திக்கொள்வதில் இருக்கிறது என வாசிக்கலாம். அந்தத் தன்னிலையின் முழுமைக்காக அவன் மடலேறவும் தயாராக இருக்கிறான். 

உ.வே,சா. தன் பொழிப்புரையின்  மேற்கோளாட்சி பிரிவுகளில் மடலேறுதல் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தின் 16 பாடல்களில் வருவதாக எழுதுகிறார்.  தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியினது உருவத்தையும் எழுதியமைத்த படத்தைக் கையேந்தி பனைமடல் குதிரையின் மேல் செல்வது மடல் ஏறுதல் என்றழைக்கப்படுகிறது. 


மடல் ஏறுதலை காதல் விரக்தியின் உச்ச கட்ட செயல்பாடாகக் காணலாம். An act of extreme despair. 

———-

ஊரார் பார்வை

———-

மடலேறித் தலைவியை அடைந்த பின் ஊர் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய தலைவனின் சொற்கள் சுவாரஸ்யமானவை. 

"நான் அவளை அடைந்தவுடன், இந்த ஊரின தெருக்களில் பலர், ‘அவன் ஒரு நல்ல பெண்ணின் கணவன்' என்று கூறுவார்கள்,” என்று தலைவன் கூறுவது அவனது  ஆசை அவனது காதலியை சொந்தமாக்குவதில் மட்டும் இல்லை; அவளுக்குத் தகுதியானவளாக ஊராரால்  கருதப்பட வேண்டும் என்ற சமூக அங்கீகாரத்திற்கான ஏக்கமாகவும் இருக்கிறது.  அப்போது “நான் கொஞ்சம் வெட்கப்படுவேன்" என்ற இறுதி வரி, வெற்றியின் நுட்பமான இன்பத்தைச் சொல்கிறது. 

————

கவிதையில் கண்ணில்படாமல் கேட்கும் தோழி

———

‘தலைவன் தோழி கேட்கும்படி சொன்னது’ என்ற கவிதையின் கூற்று வடிவத்தை நாம் மறந்துவிடக் கூடாது;  கூற்றினைக் கவிதையில் கண்ணில் படாமல் கேட்கும் தோழி  கவிதைக்கு ஒரு  சுவையான அர்த்த அடுக்கினை சேர்க்கிறாள்.  தோழி தலைவனின் மௌன சாட்சியாக மாறுகிறாள், ஒருவேளை அவள் தலைவனின் கூட்டு சதிகாரியாகவும்  இருக்கலாம். அவளுடைய இருப்பு தலைவனின்  பிரகடனத்தின் ஆழமாக்குகிறது. மடலேறிவிடுவேன் என்ற அச்சுறுத்தலை தலைவிக்குக் கொண்டு சேர்க்கும் தூதுவராகவும் தலைவன் தோழியைப் பயன்படுத்தலாம். இந்தக் கவிதை ஒரு பெண்ணின் மீதான ஆணின் ஆசை பற்றியது மட்டுமல்ல. இது காதல் நாட்டத்தில் காணப்படும் பாதிப்பு, விளையாட்டுத்தனம்,  காமத்தின் உணர்ச்சிகரத்தில் தோய்தல், அதில்  கிளர்ச்சியடைதல் ஆகியவற்றையும் பற்றியது.  


இந்த போதையான கலவையை அறிந்த இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் சிலிர்ப்பும் கவிதையை அழகாக்குகிறது. 

——


Tuesday, April 23, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-12

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-12

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 13

திணை:  குறிஞ்சி

————

மாசறக் கழீஇய யானை போலப்

பெரும்மெயலுழந்த விரும்பிணர்த் துறுகல்

பைதலொருதலைச் சேக்கு நாடன்

நோயதந் தனனே தோழி

பசலை யார்ந்தன குவளையங் கண்ணே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

மேலையுள்ள புழுதி முற்ற நீங்கும்படி பாகனாற் கழுவப்பட்ட யானையைப் போல பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற பெரிய  துறு கல்லானது, பசுமையையுடைய ஓரிடத்தில், தங்குகின்ற மலைநாட்டையுடைய தலைவன், காம நோயைத் தந்தான்; அதனால் முன்பு குவளை மலரைப் போன்றிருந்த என்னுடைய அழகிய கண்கள், இப்போது பசலை நிறம் நிரம்பப் பெற்றன. 

———-

வாசிப்பு

————

மாசு, மாசின்மை, இரண்டையும் இழத்தல்

——-

‘நோய தந்தனனே தோழி’ என்ற வரி தன்னுடைய நோயற்ற உடலும் மாசற்ற மனமும் மீறப்பட்டதை, தான் பீடிக்கப்பட்டதை தலைவி சொல்வதாக அமைந்திருக்கிறது. இங்கே தலைவனுக்கு உவமையாகச் சொல்லப்படுகிற யானை போன்ற உறுகல் தன்னுடைய மாசினை முழுமையாக மழையினால் கழுவப்பட, தன் இயல்பில் இல்லாத தூய்மையை  உறுகல்லாகிய தலைவன் அடைகிறான். மாசின்மையை தலைவி இழக்கிறாள், தூய்மையைத் தலைவன் பெறுகிறான். இந்த இரட்டைக் குறிப்பான்களின் (double signifiers) குறியீட்டுப் பரிமாற்றத்தில் ( symbolic exchange) தலைவி நோய் பீடித்தவள் ஆகிறாள். உ.வே.சா. இதையே  ‘துறுகல் மாசு நீங்கப் பெற்ற நாடன் அவவியற்புக்கு மாறாக என் கண்ணின் இயல்பை மறைக்கும் பசலையை வளரச் செய்தானென்பது குறிப்பு” என்று எழுதுகிறார். நோய் என்பது உருவகம்; அது தலைவி தன் மாசின்மையை, கள்ளமின்மையை இழந்துவிட்டதை சொல்கிறது. 

———-

பெரும் மழை, யானை, உறுகல்

———

‘பெரும் பெயல் உழந்த’ என்ற வரி பெரு மழையால் யானை போன்ற கல் சுத்தமாகக் கழுவப்பட்டததைச் சொல்கிறது. பெருமழை ஒரு பேரனுபவத்தின் குறியீடாக இக்கவிதையிலிருக்கிறது; அந்த பேரனுபவத்திறகு ஆட்பட்ட தலைவன் தலைவி இருவருமே இயல்பு திரிந்தனர். இதை இறைச்சி என திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில் குறிக்கிறார். இறைச்சி என்ற கருத்தாக்கத்தை தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. கூறவந்த பொருள் வெளிப்படாமல் மறைவாக இருக்க, அதை உணர்த்த, வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சி என்றழைக்கப்படுகிறது. யானையையும் பாறையையும் ஒப்பிடுதல் அகநானூற்றுப் பாடல்களிலும் குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றிலும் வாசிக்கக் கிடைக்கிறது. யானை பலம், விவேகம், தெய்வீகம் என பல குறியீட்டு அர்த்தங்கள்  கொண்டதாக அகப்பாடல்களில் வருகின்றன. இந்தக் கவிதையில் தலைவன் இக்குணங்களைக் கொண்டவனாக மறைமுகமாக சுட்டப்படுகிறான்.

——

இல்லாத தலைவன் (absent hero)

————

இந்தக் கவிதையில் தலைவன் நேரடியாக இல்லை; அவன்  தலைவி அவனை சந்தித்து தன் மாசின்மையை இழந்து நோய் பெற்ற இடத்தின் தன்மையாலேயே சுட்டப்படுகிறான். ‘பெருமழையால், கழுவப்பட்ட யானை போன்ற பாறை’ தலைவனுக்குப் பெயராகிறது (metonomy); அதே நிலையிலேயே தலைவன் நீடித்திருப்பானா என்பது நிச்சயமில்லை. அதுவே தலைவிக்கு இனிமையின் நினைவையும் எதிர்காலத்தைப் பற்றிய வேதனையையும் (anguish) தருகிறது. 

———-

தலைவியின் உருமாற்றம்

——

‘பசலை யார்ந்தன குவளையங் கண்ணே’ என்ற வரி அழகான குவளை மலர்கள் போன்ற தலைவியின் கண்கள் பசலை படர்ந்து வெளிறிவிட்டதைச் சொல்கின்றன. 

—-

அணுக்கத் தோழி

———

இக்கவிதையில் தலைவி தோழியை நேரடியாக விளிப்பது அவர்களுக்கிடையேயான அணுக்கத்தையும் (intimacy) அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழலையும் குறிக்கிறது. ஜூலியா கிறிஸ்தவா இம்மாதிரியான பெண்களுக்களுக்கிடையிலான அணுக்கத்தருணங்கள் முக்கியமானவை என்றும் அவை கவனித்து ஆராயத்தக்கன என்றும் சொல்கிறார். ( பார்க்க :Kristeva, Julia. Desire in Language: A Semiotic Approach to Literature and Art. Translated by Thomas Gora, Alice Jardine, and Leon S. Roudiez. New York: Columbia University Press, 1980.) 


Monday, April 22, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-11

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-11

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: ஓதலாந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 12

திணை:  பாலை

————

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய

உலைக்க லன்ன பாறை யேறிக்

கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்

கவலைத் தென்பவவர் சென்ற வாறே

அதுமற்ற றவங் கொள்ளாது

நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் போன வழியானது, எறும்பின் வளைகளைப் போல, குறுமையையுடைய பலவாகிய சுனையை உடைய, கொல்லனது உளைக்களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்மையையுடைய, பாறையின் மேல் ஏறி வளைந்த வில்லையுடைய எயினச் சாதியினர் தம் அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய கவர்த்த வழிகளை உடையது என்று கண்டோர் கூறுவர். இந்த ஆரவாரத்தையுடைய ஊரானது அவ்வழியின் கொடுமையைபபற்றித் துயரத்தை உட்கொள்ளாமல், அயற்றன்மையுடைய சொற்களைக் கூறி இடித்துரைக்கும். 

——-

வாசிப்பு

———

சுனைகளும், வெம்பாறைகளும், கொடுவில் எயினரும் நிறைந்த சுழற்பாதை

—————

தலைவன் பிரிந்து சென்ற பாதையை எறும்பின் வளைகளால் நிரம்பியது என தலைவி தன் தோழியிடம் முதல் வரியில் சொல்கிறாள். எறும்பை எறும்பி என அழைக்கும் மரபு திருவெறும்பியூரென்னும் சிவத்தலத்தின் பெயராலும் அறியப்படுமென உ.வே.சா தன் பொழிப்புரையில் குறிப்பிடுகிறார். இரா. இராகவையங்கார் தன் உரையில் தலைவன் சென்ற பாதையில் உணவளிப்பது எறும்பியளை, நீர் தருவது அறுநீர்ச்சுனை, உறைவிடம் உலைக்கலன்ன பாறை, வாழ்வோர் பகழி மாய்க்கும் கொடுவில் எயினர் என அவன் சென்ற வழியின் இடையூறெல்லாம் தெரியக் கூறினாள் என்று எழுதுகிறார். 


 தலைவியின் துயரம் தோய்ந்த சொற்கள் அவளுடைய உள்ளுலகும் வெளியுலகும் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதைச் சொல்கின்றன. தலைவன் பிரிந்து சென்ற பாதையின் கொடுமைகளையெல்லாம் அறியாத, புரிந்துகொள்ளாத ஊர் அவள் பிரிவாற்றமையினால் துயருற்று இருக்கிறாள் என்று சொல்கிறது; உண்மையில் அவளோ அவன் சென்ற பாதையிலிருக்கிற இடையூறுகளை நினைத்து கவலையுற்றிருக்கிறாள்.


சுனைகள் வாழ்வளிப்பவை ஆனால் கவிதையில் அவை சிறியனவாக எறும்பின் வளைகளைப் போல இருக்கின்றன; அவை வெம்பாறைகளும் கொடு வில் ஏந்தியவருக்கும் நடுவில் இருக்கின்றன. தலைவியின் உள்ளுலகு இவ்வாறாக தலைவன் சென்ற பாதையின் கொடுமைகளை நினைத்து உருகுகிறது.


———-


ஊர் எனும் வெளியுலகின் வன்கொடுமை

——

ஊர் என்றைக்கு தனி நபர்களின் துயரங்களை அனுதாபத்துடன் அணுகியிருக்கிறது? இந்தக் கவிதையில் ஊர் எனப்படுவது இந்தக் கவிதையைக் கேட்கும் தோழியினால் பிரதிநிதித்துவப்படுத்தபடுகிறது. ஆகவே கவிதையை வாசிக்கும் நாமே இந்தக் கவிதையின் சொல்லாடலின்படி (discourse) ஊராகிறோம். ‘நொதுமற்கழறென்றது’ வழியின் கொடுமையை அறிந்து வருந்துதை உணராமல் பிரிவினால் ஆற்றாதிருந்தாளென தோழியின் மேல் தலைவி குறைப்பட்டுக்கொள்கிறாள். தலைவி கூற்று இக்கவிதையில் தோழியை நோக்கியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உ.வே.சா. தோழியை ஊரென்று சொல்வது மரபு எனக் கற்பிக்கிறார். “இமைப்பிற் கரப்பாக் கறிவனைத்திற்கே ஏதில ரென்னு மிவ்வூர் “ என்ற குறளுக்கு ( எண் 1129) பரிமேலழகர் தன் உரையில் ‘ தன் கருத்துதறியாமையைப் புலந்து சொல்லுகின்றாளாதலின் தோழியை வேறுபடுத்தி இவ்வூரென்றாள்”  என்று எழுதுகிறார். 


நொதுமல் என்ற சொல்லுக்கு அயல் என்ற பொருளாகையால் அது அந்நியமானது,  தன்னிலைக்கு (self) மற்றவையானது (other), எதிராகிறது. மற்றவையின் கரிசனமின்மையும், முன் தீர்மானமும் தலைவியின் துயரத்தில் இன்னொரு அடுக்காகிறது. Other is not hell here, but other is hostile.

இந்தக் கவிதையின் உலகம் இரண்டு எதிரெதிர் உலகங்களை வண்ணந்தீட்டுகிறது; வெளியுலக கரிசனமின்மை X உள்ளுலகத் தனிமை. தலைவன் எதிர்கொள்ளும் சிரமங்கள் X அவற்றிலுள்ள நேர்மறையான சாத்தியப்பாடுகள்.

—————

குறியீடுகளை செயல்களாக அறிதல்

——-

இந்தக் கவிதையில் தலைவி பொதுவாக குறியீடுகளாக அறிப்படுபவற்ற செயல்களாக அறிகிறாள்; அவ்வாறகவே தன் தோழியிடத்து சொல்கிறாள். தலைவன் செல்லும் வழியின் எறும்பு வளைகள் போன்ற சுனைகள்,  சுடுகின்ற வெம்பாறை, வில்லேந்தியவர் என இயற்கை, மனிதச் சூழல் ஆகியவற்றின் பகுதியாக தலைவன் எதிர்கொள்வதாக அவள் நினைப்பவை அவளுடைய  அக உலகின் ஒடுக்குதலைச் செய்யக்கூடியனவாக மாறுகின்றன. 

தலைவியின் துயரம் காமப் பிரிவாற்றமையினால் அல்ல மாறாக தலைவன் எதிர்கொள்ளும் சிரமங்களை நினைத்து வருந்துவதால் வருவது என்ற நுண் வேறுபாட்டினை விளக்க அவள்தான் எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது! அவள் எதிர்கொள்ளும் ‘ஊர்’ என்பது லேசுப்பட்டதா, என்ன? 

————


Saturday, April 20, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-10

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-10

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக

—-

இயற்றியவர்: மாமூலனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 11

திணை:  பாலை

————

கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்

பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி

ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே

எழுவினி வாழியென்னெஞ்சே முனாது

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

மொழிபெயர் தேஎத்த ராயினும்

வழிபடல் சூழ்ந்திசி நவருடை நாட்டே.

————————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளை உடல் மெலிவினால்  நெகிழாநிற்ப,  நாள் தோறும் இமைபொருந்துதல் இல்லாதனவாகிக் கலங்கியழும் கண்ணோடு இங்கு தனித்து வருந்தி, இப்படி இங்கே தங்குதலின்றும் தப்புவேனாக. ஆங்கு தலைவன் இருக்கும் இடத்திற்கு செல்ல இப்பொழுது எழுவாயாக. முன்னே உள்ள கஞ்சங்குல்லையாகிய கண்ணியை அணிந்த, வடுகருக்குரிய இடத்தினதாகிய பலவேலையுடைய கட்டியென்பவனுடைய நல்ல நாட்டுக்கு அப்புறத்தில் உள்ள, மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவரேனும் அவருடைய நாட்டினிடத்து செல்லுதலை எண்ணினேன்.

———

துயருறும் நெஞ்சின் பாடல்

——

‘வாழியென்னெஞ்சே’ என்ற தலைவியின் அகவாழ்த்து ஒரு கத்தித்திருகலைப் போன்ற பிரிவாற்றமையின் துயரத்தை உள்ளடக்கியிருக்கிறது என்றாலும் அது விரக்தியில் எழுந்த  துணிச்சலைப் தனக்குத் தானே பாராட்டி வாழ்த்திக்கொள்கிறது; அதில் விரக்தியில் எழும் அங்கதம் தொனியாகிறது. சங்கு வளையல்கள்  இன்னும் மெலியும் உடலில் இருந்து நழுவவில்லை, இமை பொருந்தா விழிகள் இன்னும் தூக்கத்தைக் காணவில்லை, புலம்புதலும் அழுகையும் இன்னும் நிற்கவில்லை என்ற வரிகளுக்குப் பின் வரும் வாழ்த்து ஒரு பிளவுண்ட தன்னிலையையும் (fractured self) நமக்கு அறிவிக்கிறது. கட்டி எனும் கருங்குலையாகிய கண்ணியை அணிந்த வடுகர் தலைவனின் நாட்டைத் தாண்டி அறியாத மொழி பேசும் நிலத்துக்கு தலைவனைத் தேடிச்செல்லத் துணிகிறது அவள் மனது. அந்தத் துணிச்சல் பாராட்டத்தக்கது என்றாலும் மொழி அறியா நிலத்தின் அபாயங்களும் அறியப்பட்டாதவையே. வாழ்த்துக்குரிய துணிச்சலையும் அறியப்படா அபாயங்களையும்  ஒருங்கே இரட்டைத் தன்மையோடு இக்கவிதை அறிவிப்பதால் அதன் வசீகரம் கூடுகிறது.

——-

தேஎத்தர் எனும் இன்னிசை அளபெடை

——-

இக்கவிதையில்  வரும் வடுகர் எங்கே வாழ்ந்தார்கள், எந்த நிலப்பகுதி கட்டி எனும் வடுகர் தலைவனால் ஆளப்பட்டது, எந்த நிலப்பகுதியைத் தாண்டிச் செல்ல  தலைவி விரும்பினால் என்பதற்கான விளக்கத்தை நாம் பிற உரைகளைலிருந்தே பெற முடிகிறது. புற நானுற்றிற்கு 278 ஆவது பாடலுக்கு உரை எழுதுகிற ஒளவை துரைசாமிப்பிள்ளை தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் அவர்கள் வடுகர் என்றழைக்கப்பட்டனர் என்று எழுதுகிறார். முன்னிலை என்பதற்கு முன்னே உள்ளதாகிய (நிலம்) என்று மட்டுமே உ.வே.சா பதவுரை தருகையில், தமிழண்ணல் அதை எல்லையென வகுக்க, பொ. வே. சோமசுந்தரனாரும், இரா. இராகவையங்காரும் அதைப் பகைப்புலம் என விளக்குகின்றனர்.   தேஎத்தர் இன்னிசை அளபெடை ஆகையால் அது அந்த நாட்டின் மக்கள் என்று மட்டுமே பொருள்படும். அம்மக்களுக்கு எந்த எதிர்மறை குணத்தையும் கற்பிக்காது. 

——-

வழிபடலுக்கான ஏக்கமும், தப்பித்தலின் அபாயமும்

——-

இங்கே புலம்பிக்கொண்டும் அழுதுகொண்டும் இருப்பதற்குப் பதிலாகத் துணிந்து வடுகர் தலைவன் ஆளும் நிலம் தாண்டித் தப்பிச் செல்லாம் என, ‘வழிபடல் சூழ்ந்திசி’ என தலைவி நினைக்கிறாள். வழிபடல் என்பது பிரயாணம். தலைவனைப் பிரிந்து தனித்திருத்தலை இனி ஆற்றேன் என்ற துணியும் மனம் உடனடியாக  மொழி அறியாததை அந்நிலத்தின் அபாயமாகவும் உடனடியாக அடையாளம் காண்கிறது. துணிந்த எண்ணம் செயலாகுமா என்பதற்கான குறிப்பு கவிதையில் இல்லை. துணிந்ததற்கு மட்டுமேதான் ‘வாழியென்னெஞ்சே’ என்ற வாழ்த்து. வடுகர் தலைவன் கட்டி, கஞ்சங்குல்லையாகிய கண்ணியை (துளசியின் ஒரு வகை) அணிந்தவன் என்ற விவரிப்பினாலும், நல் நாடு என்றதாலும் வடுகர் நிலைத்தைக் கண்டு தலைவி அஞ்சவில்லை எனப் பொருள் கொள்ளலாம். அதற்கு அப்பால், ‘உம்பர்’ இருக்கக்கூடிய நிலமே அபாயகரமானது, மொழி அறியாததால். மொழி தரும் பாதுகாப்புக்கு அப்பாலான ‘வழிபடல்’ இப்போது தலைவி அனுபவிக்கும் துயரத்தை விட அதிகமான மொழியற்ற அர்த்தமின்மைக்கும், பெரிதும் ஒழுங்கற்ற நிலைக்கும் (chaos) இட்டுச்செல்லும். 


வழிபடலுக்கான ஏக்கம் துயரம். 


Friday, April 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-9

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-9

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

பரத்தையிடமிருந்து மீண்ட தலைவனுக்குத் தோழி கூறியது

—-

இயற்றியவர்: ஓரம்போகியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 10

திணை:  மருதம் 

————

யாயா கியளே விழவுமுத லாட்டி

பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி யூரன் கொடுமை

கரந்தன ளாகலி னாணிய வருமே.

——————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவியானவள், தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவுதற்குசக் காரணமாக உள்ளாள்; பயற்றின் கொத்தைப் போன்ற

பூங்கொத்திலுள்ளனவாகிய பசிய பூந்தாதுக்கள் தங்கள் மேலே படும்படி, உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களை உடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட, காஞ்சிமரத்தையுடைய ஊரனது, கொடுமையை நாம் தெரிந்துகொள்ளாதபடி மறைத்தாளாதலின், அவன் நாணும்படி எதிர்கொள்ள வருகிறாள்.

———

வாசிப்பு

————-

ஆசையின் உள்மயக்கம் -நனவிலியின் பூந்தாது 

——-

இந்தக் கவிதையில் பயற்றின் (பயத்தம் பருப்பு)  கொத்தைப் போன்ற பசிய பூந்தாதுக்களும், ( மகரந்தங்கள்), உழவர்கள் வளைக்கின்ற காஞ்சி மரத்தில் கமழ்கின்ற பூக்களும் மையமான படிமங்களாயிருக்கின்றன. தலைவியானவள், தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட துயரத்தை மீறி , அவன் பரத்தையரிடம் சென்றதால் அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மீறி, அவள் அவற்றை மறைத்துக்கொண்டு வருவது பசிய பூந்தாதுக்களுக்கு உவமையாக சொல்லப்படுகிறது. ‘யாயாகியவளே’ என்ற முதற்சொல், போன கயமனாரின் கவிதையைப் போலவே  அவளைத் தாயின் இயல்புக்கும் கனிவுக்கும் உயர்த்துக்கிறது. மகரந்தங்கள் இயற்கையிலே உயிர்விருத்தியின் சேர்க்கையைத் தங்கள் இயல்பாகக்கொண்டவை; ‘பசிய’  என்ற பூந்தாதுக்களின் பெயரடையும்,  அவள் ஏற்கனவே தலைவன் செல்வம் பெற்று உயர காரணமாக இருந்தவள், ‘விழவு முதலாட்டி’ என்றதும் தலைவியை வளமையின் உயிர்ப்பாக, அந்த ஆசையின் உயிர் விசையாக  அர்த்தப்டுத்துகின்றன.  வள்மையின் மூலாதாரம், பசிய பூந்தாது, தனக்கு நேர்ந்த கொடுமையை மறக்கின்ற காரணத்தினால் தூய ஆசையின் விசை அனைத்தையும் மீறி பரிமாணம் பெறுவதைச் சொல்கிறது. ஆசையின் உள்மயக்கம் நனவிலியின் பூந்தாது. 


ஆசையின் நனவு- வளைக்கப்பட்ட பூங்கிளை

——

இதற்கு மாறானதாக இருக்கிறது ‘உழவர் வளைத்த காஞ்சி மரத்தை உடைய ஊரனான தலைவன்’. காஞ்சி மரம் (பூவரசு மரம்) மருதத்தின் கருப்பொருள். பூந்தாதெனும் நனவிலி போல உள்ளடங்கி இருப்பதல்ல, நனவாய் வெளியில் நீட்டிக்கொண்டுருக்கும், நன்றாகத் தெரியும் நனவின் காட்சி.    திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை  பூங்கொத்து உண்டாதனாலே உழவர் வளைத்த காஞ்சி மரத்தையுடைய ஊரன் என்றதனானே, தம்மிடத்து வேட்கை கொண்டமை உணர்ந்ததனானே பரத்தையரால் வளைக்கப்படும் இயல்பினன் என்று விளக்கமளிக்கிறது. ஆசையின் உள்மயக்கம் நனவிலியின் பூந்தாதாய் இருக்கையில் ஆசையின் நனவோ வளைக்கப்பட்ட பூங்கிளையாய் இருக்கிறது.

——-

நிலக்காட்சியும் இழப்பும்

—-

ஓரம்போகியாரின் இந்தக் கவிதை நம்மை உழவர் பூரசு மரங்களின் கிளைகளை வளைக்கும் ஒரு நிலக்கட்ட்சிக்கு அழைத்துச் செல்கிறது. அதன் அழுத்தம் விவசாய விபரத்தைச் சொல்வதில் இருக்கிறது. உழவு என்பது இயற்கை வளைக்கப்பட்டதும், மனித நாகரீகத்தினுள் கொண்டுவரப்பட்டதும் எனவு நனவு நிலை என்பதாகவும் பொருள்படும். நனவின் காட்சியை நனவிலிப் பூந்தாதுவின் இழப்பாக கவிதை காட்சிப்படுத்துவதாக நாம் இக்கவிதையை வாசிக்கலாம். மகரந்தங்களின் சேர்க்கையில் அவைதான் அழிய பூக்கள்  பரிணமிக்கின்றன.


——

மூன்றாம் நபரின் பார்வையில் மறைத்தலின் சக்தி

——

கவிதையைச் சொல்கிறவள் தலைவியின் தோழி; அவள் தலைவனுக்குக் கூறுகிறாள். தலைவன் கவிதையினுள் இல்லாத உருவாக (absent figure) இருக்கிறான். முன்றாவது நபரின் பார்வையில் (gaze) , அதாவது தலைவி மறைத்துவிட்ட துயரத்தின் பேசுகுரலாக, அவளுடைய உள் மனதின், வெளிப்பாடாக, அவளுடைய ஆசை, துயரம் இரண்டின் வெளிப்பாடாகவும்  இந்தத் தோழி கூற்று அமைந்திருக்கிறது. அவள் மறைத்த உணர்ச்சியின் சக்தி என்ன என்பதைப் பேசுகிறாள். அது தலைவனை நாணமுறச்செய்யும் என்று, ‘கொடுமை கரந்தனள் ஆகலின் நாணிய வருமே’ என்று சொல்கிறாள்.  


நனவு பொதுவாக நாணுவதில்லை.  


Thursday, April 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-8

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-8

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைமகனுக்குத் தோழி வாயில் மறித்துக் கூறியது

—-

இயற்றியவர்: கயமனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 9

திணை: நெய்தலுள் மருதம் 

——

யாயா கியளே மாஅ யோளே

மடைமாண் செப்பிற் றமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய்சா யினளே

பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் 

இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்

கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணந் துறைவன் கொடுமை

நம்மு நாணிக் கரப்பா டும்மே.

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

இயல்பாகவே மாந்தளிர் நிறத்தையுடைய தலைவி இப்பொழுது மாட்சிமைப்பட்ட செப்பினுள், இட்டு அடைப்பத் தனித்தனவாகி வைகிய, சூடப்படாத பூக்களைப் போல உடல் மெலிந்தாள். பசுமையாகிய இலைக்கு மேலே உயர்ந்து தோன்றும் திரட்சியையுடைய காம்பினையுடைய நெய்தற்பூவானது, கூட்டமாகிய மீன்களையுடைய கரிய கழியின் கண் வெள்ளம் அதிகரிக்கும் தோறும், ஆழமான குளத்தில் முழுகும் மகளிரது கண்ணை ஒத்தற்கு இடமாகிய, தண்ணிய துறையுடைய தலைவனது கொடுமையை நம் முன்னே சொல்லுதற்கு நாணமுற்று, மறைத்தலையுடைய சொற்களைச் சொல்லுகின்றாள்; ஆதலின் கற்புக்கடம் பூண்டவளானாள்.

————

வாசிப்பு

———

இரு எதிரெதிர் படிமங்கள்; வாடிய பூ போன்ற தலைவியும், நெய்தற் பூ போன்ற கண்களையுடைய பெண்களும்

—————

‘மா அயோள்’, மாயோள், மாமை நிறத்தவளாகிய (மாமை நிறமென்பது  மாந்தளிர் போன்ற அழகிய நிறம், அது இலாவணியம் எனப்படும். தமிய வைகிய பூ, பெய்யாப் பூவென்க-  உ.வே.சா. உரை-) தலைவி செப்பிலிடப்பட்ட சூடப்படாத மலர்களைப் போல உடல் மெலிந்திருக்கிறாள் என்பது இந்தக் கவிதையில் ஒரு படிமம் எனில் அதற்கு நேரெதிராக நெய்தற் பூக்களைப் போன்ற கண்களைக் கொண்ட பெண்கள் என்பதில் வரும் ‘பசுமையாகிய இலைக்கு மேலே உயர்ந்து தோன்றும் திரட்சியையுடைய காம்பினையுடைய நெய்தற்பூ’ என்பது நிறுத்தப்படுகிறது. நெய்தற் பூ சிறப்பற்றது என்பதை நாம் உரையாசிரியர்களின் வழியே அறிகிறோம். உ.வே.சா. ‘சிறப்பில்லாத நெய்தற் பூக்கள் சிறப்புடைய மகளிர் கண்களுக்கு ஒப்புமை சொல்லப்பட்டதால், சிறப்பில்லாத பரத்தையர் தலைவனுக்குச் சிறப்புடைய தலைவியை ஒத்தனரென்ற குறிப்பு பெறப்படும்’ என்று எழுதுகிறார். செப்பிற்குள், அதாவது பெட்டிக்குள் வாடிய மலராய் இருக்கும் தலைவி என்ற சிறைப்படுதல், உள்ளிருத்தல், உள்ளொடுங்கிபோகுதல் என்பதற்கு எதிராக வளமான நெய்தற் பூ போன்ற கண்களையுடைய பெண்கள் என்ற அகண்ட இயற்கை, நெய்தல் நிலம், விரிவு, ஒடுக்குதலற்ற, கட்டற்ற உறவு ஆகியன கவிதையால் முன்வைக்கப்படுகின்றன.  வாடிய பூ சிறப்புடையது, செழுமையான நெய்தற் பூ சிறப்பற்றது.

———-

யாயாகியளே

————

வாடிய மலராய் இருக்கும் தலைவி, இப்போது நாணமுற்று உள்ளிருந்தாலும் தாயைப் போல அன்பின் மிகுதி கொண்டவள், அவள் பரத்தையரிடம் சென்று திரும்பும் தலைவனை மன்னித்து ஏற்றுக்கொள்வாள் என்பதை ‘யாயாகியளே’ என்ற சொல் குறிக்கிறது. உ.வே.சா. ‘தலைவியை யாயென்றது, புலத்திற்குக் காரணமான பரத்தமை, தலைவன் பால் உளதாகவும் அதை மனகங்கொள்ளாத கற்பின் சிறப்பை நோக்கி; என்று பொருள் எழுதுகிறார். ச. வே. சுப்பிரமணியன் ‘தாய்போல் மதிக்கத் தக்கவள்’  எனவும் தமிழண்ணல், ‘பொறுமையில் தாய் போல ஆகினாள், கற்புக்கடம் பூண்ட நம் தலைவி தாய்போல் மதிக்கத்தக்க பெருமையுடையவளே’  எனவும்  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் ‘தாயென தக்காள் ஆயினள்’ எனவும் எழுதுகின்றனர். 


————————-

தோழி கூற்றின் தொனி

———

இக்கவிதை தலைமகனுக்குத் தோழி வாயில் மறித்துக் கூறியதாகும் எனும்போது இக்கவிதையின் தொனி என்னவாக இருக்க முடியும்? பரத்தையோரோடு சல்லாபமிட்டு வீடு  திரும்பும் தலைவனை, அவன் பிரிவினால் உடல் மெலிந்து ( மெய் சாய்ந்து) இருக்கும் ஆனால் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தலைவி தாய்க்கு நிகரானவள்  என்பதைத் தோழி, அடங்கிய கோபம், நெய்தற் பூ கண்கள் கொண்ட பெண்கள்’ என்பதன் அங்கதம், ‘யாயாகியளே’ என்ற சொல்லின் உயர்வு ஆகிய உணர்வுகள் அடங்கிய சிக்கலான தொனியில் சொல்லியிருக்க வேண்டும்.  தலைவியின் மௌனமான துயருறுதலை புனிதமாகக் கட்டமைப்பதால் இக்கவிதை அன்றைய சமூகத்தின் விழுமியத்தை எடுத்துச் சொல்வதாகவும் வாசிக்கலாம்.  


  


Wednesday, April 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-7

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-7

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

காதற்பரத்தை கூற்று

—-

இயற்றியவர்: ஆலங்குடி வங்கனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 8

திணை: மருதம்

——

கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கயும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல 

மேவன  செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.

—————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வயலருகிலுள்ள மாமரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பொய்கையிலுள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுதற்கு இடமாகிய ஊரையுடைய தலைவன், எம்முடைய வீட்டில் எம்மை வயமாக்குதற்குரிய பெருமொழிகளைக் கூறி சென்று, தம்முடைய வீட்டில், முன்னின்றார் தம் கைகளையும் காலையும் தூக்க, தானும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றும் ஆடிப் பாவை போல தன்னுடைய மனைவிக்கு அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

————

வாசிப்பு

——-

கிடைத்தபோது துய்ப்பதும், முயற்சி இன்றி அடைவதும்

——

தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை அத்தலைவியின் தோழியர் கேட்கும்படி இதைக் கூறியதாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கவிதை,  சமூக விமர்சனமாக, ஆண்மகனின் பலவீனமான, நம்ப முடியாத தன்மையை அம்பலப்படுத்துகின்ற அதே நேரத்தில் அதை சாத்தியப்படுத்துகின்ற சமூக அமைப்புகள் ( social structures) என்னனென்ன என்பதையும் சொல்லிவிடுகிறது. கிடைத்தபோது துய்ப்பதற்கும், முயற்சி இன்றி அடைவதற்குமான  படிமமாக , “கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன்” - வயலருகிலுள்ள மாமரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பொய்கையிலுள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுவது’ இருக்கிறது. அந்த இடத்தை சேர்ந்தவன், ஊரன், எனத் தலைவன் குறிப்பிடப்படுவதால் அவனும் அந்தத் தன்மையினனே என்ற பொருள் அவன் மேல் ஏற்றப்படுகிறது. இதற்கு இரா.இராவகையங்கார் தன் உரையில் தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பு என்று குறித்தாளாம் என்று எழுதுகிறார்;  பரத்தையர் இயல்பாய் அது இருக்கும்பட்சத்தில், அது இந்தக் கவிதையில் தலைவனுக்குத்தான் இருக்கிறதே தவிர பரத்தைக்கு இல்லை. உண்மையில் மாம்பழங்களை வாளை மீன்கள் உண்ணுமா என்று எனக்குத் தெரியவில்லை; வாளை மீன்கள், மாம்பழங்கள் இரண்டுமே வளமையின் குறியீடுகள் (symbols of fertility). வளப்பம் மிகும்போது  துய்ப்பு மட்டுமே குறிக்கோளாக அது காதலற்ற வெற்றுத் துய்ப்பாக, கனிந்து விழும் மாம்பழத்தை மீன்கள் உண்ணுவது போல, அ-யதார்த்த, இயற்கை சாராத நிகழ்வாகிறது. கனிந்த மாம்பழங்கள் பெண்களுக்கும், வாளை மீன்கள் ஆண்களும் குறியீடாக, அந்த ஊரைச் சேர்ந்தவன், ஊரன் என்ற இழிவுபடுத்துதல் கிடைத்ததைத் துயக்கும் அத்தனை ஆண்மகன்களுக்குமான பொதுமையாகிறது.

———

ஆடிப்பாவையின் பொய்மை

——

தலைவன் வீட்டிற்கு வெளியே, பரத்தையரிடம் ‘பெருமொழி’ கூறி மயக்கும்போதும், வீட்டிற்குள், தன் புதல்வனின் தாயின் முன், கையைக் காலை நாம் தூக்கினால் தானும் கையைக் காலைத்தூக்கும் ஆடிப்பாவை போல தலைவன்  இரண்டு இடங்களிலுமே பொய்யானவனாக, தனித்துவம் இல்லாதவனாக, இரு அமைப்புகளின் விளைபொருளாக மட்டுமே இருப்பவனாய் பரத்தையால் சுட்டிக்காட்டப்படுகிறான். தலைவியை ‘அவன் புதல்வனின் தாய்’ என்று பரத்தை குறிப்பது சுவாரஸ்யமானது; ஏதோ அவனுக்கு அவள் பிள்ளை பெற்றுவிட்டாள் எனவே அவன் அவளுக்கு ஆடிப்பாவை போல ஆடுகிறான் என்பது மறைமுகமாக தலைவிக்கு மனைவி என்ற அந்தஸ்தினை மறுக்கிறது; சூசகமாக தலைவியும் பிள்ளை பெற்றது ‘வாளை மீன் மாம்பழத்தை உண்ட’ சந்தர்ப்பத்தினால் எனில், அவளும் பரத்தையும் சம அந்தஸ்தினரே என்பதையும் சொல்கிறது. 


இல்லாத தலைவியும் முதுவேனில் காலமும்

—-

கவிதையில் நேரடியாக இல்லாத தலைவியே பரத்தையின் அவமதிப்புக்கு இலக்கு; பரத்தை தலைவனை செய்ல் திறனில்லாத (lacking in agency), சமூக எதிர்பார்ப்புக்கு ஏற்ற நடத்தையை பொய்யாகத் தலைவி முன் நிகழ்த்துகிற ஒரு பாவையாக சித்தரிப்பதன் மூலம், அப்பாவையைத் தன் வசம் இப்போது வைத்திருக்கிற தலைவி தருக்கித் திரிய இயலாது என்பதையும் உணர்த்துகிறாள். முதுவேனில் காலத்தில் கனிந்த மாம்பழங்கள் கீழே விழுந்துகொண்டுதானே இருக்கும், அவற்றை வாளை மீன்கள் கவ்விக்கொண்டுதானே இருக்கும் என்பவை தொக்கி நிற்கும் கேள்விகள்.   



Tuesday, April 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-6

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-6

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

கண்டோர் கூற்று

—-

இயற்றியவர்: பெரும்பதுமனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 7

திணை: பாலை

——

வில்லோன் காலன கழலே தொடியோள்

மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்

யார்கொ லளியர் தாமே யாரியர்

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி

வாகை வெண்ணெற் றொலிக்கும்

வேய்பயி லழுவ முன்னியோரே

—————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

——

ஆரியக்கூத்தர் கழையிற்கட்டிய கயிற்றின்மேல் நின்று ஆடும்பொழுது கொட்டப்படும் பறையைப்போல, மேல்காற்றானது தாக்குதலால் நிலைகலங்கி, வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுகள் ஒலித்தற்கு இடமாகிய, மூங்கில் செறிந்த பாலைநிலப்பரப்பில் கடந்து செல்ல நினைந்து வருபவர்களுள் வில்லினையுடையவனாகிய இவ்வாடவனது காலில் உள்ள வீரக்கழல்கள், தோள்வளையை அணிந்த இம்மகளினுடைய மெல்லிய அடியின் மேலுள்ளனவும் சிலம்புகள்; இந்நல்லோர் யாவரோ, இவர் அளிக்கத்தக்கார்!

——-

வாசிப்பு

—-

ஆபரணங்களின் குறியியல் ( The Semiotics of Adornment)

வில்லோனின் வீரக்கழல்களின் மேலும், மெல்லிய அடிகளையுடையவளின் கால்களில் இருக்கும் சிலம்பின் மேலும் கவிதை ஆரம்ப வரிகளில் நமது கவனத்தைக் குவிக்கிறது; இவ்வாபரணங்கள் உருவகங்களல்ல மாறாக ஆகுபெயர்களாகப் பயன்படுத்தப்படும் இணைச்சொற்கள் (metonyms). கத்திரிக்காயை விற்பதற்காக அதைக் கூடையில் சுமந்து செல்லும் ஒருவரை, ‘ஏ கத்திரிக்காய்’ என நாம் அழைப்பது போல. அவர்கள் இந்த ஆபரணங்களை என்றும் எப்போதும் அணிந்திருப்பவர்களல்ல; இப்போது இந்த நேரத்தில் அணிந்திருப்பவர்கள் ஆகையால் அவர்களுடைய சமூக நிலை என்ன என்பதைத் தெரிவிப்பவர்கள்.  இந்த ஆபரணங்களுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. மெல்லடியாளுடைய சிலம்பைப் பற்றி விளக்கம்  எழுதும் உ.வே.சா. 

அச்சிலம்பு தலைவனும் தலைவிக்குமிடையில் இன்னும் மணமாகவில்லை என்பதைப் புலப்படுத்துவதாகக் கூறுகிறார். மணம் புரிவதற்கு முன்பு, மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது ‘சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; “நும்மனைச் சிலம்பௌ கழீஇ யயரினும், எம்மமனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லினெவனோ… பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே” என்ற ஐங்குறுனூறு பாடல் 311 - குறிப்பினால் சிலம்பு கழி நோன்பு இருந்ததது நிறுவப்படுகிறது. கவிதையில் இந்த நோன்பு கழிக்கப்படாத சிலம்புகளை அணிந்த தலைவி, எனவே மணமாகாதவள் ( உ.வே.சா. ‘தலைவனால் இன்னும் வரைந்து கொள்ளப்படாதவள்’ என்று எழுதுகிறார்.) வீரக் கழல்கள் அணிந்த வில்லோனோடு இந்தப் பாலையில் மெல்லடிகள் வைத்து எங்கே போய்க்கொண்டிருக்கிறாள்? 


கண்டோர் உடனடியாக அவர்கள் இருவரும் உடன்போக்கில் இருக்கும் (elopement) ஜோடி என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்; நமக்கும் சொல்கிறார்கள்.

——

இயற்கை எனும் நிகழ்த்துனர்

—-

உடன்போகிக்கொண்டிருக்கும் தலைவனையும் தலைவியையும் சுற்றி  இயற்கை தன் பெருநிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது;  கொடும் பாலை நீண்டிருக்கிறது, (திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில்   இதை காட்டு நிலத்தின் பரப்பு என்கிறார்),  மேல் காற்றானாது ஆரியக்கூத்தரின் கழைக்கூத்தில் ஒலிக்கும் பறைப்போல ஒலித்து வாகை மரத்தினது நெற்றுக்கள் ஒலிக்கும் இடத்தில் நிலைகுலையச் செய்கிறது, மூங்கில் செறிந்த பாலைப் பரப்பு முன்னால் நீண்டிருக்கிறது. உடன்போகியரின் ஆபாரண விபரங்களுக்கு எதிராகக் கவிதை இந்த இயற்கைக் காட்சிகளை முன்னிறுத்துகிறது. வீரக்கழல்கள் அணிந்த தலைவன் இயற்கை அளிக்கவிருக்கிற எண்ணிலா சிரமங்களை வென்றுவிடுவான் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

————

மெல்லடி எனும் இரக்கக்குறிப்பு

—-

‘தொடியோள் மெல் அடி மேலவும் சிலம்பு’ என்ற வரியிலுள்ள ‘மெல்லடி’ என்னும் இரக்கக்குறிப்பு, கவிதையின் பேசுகுரலான ‘கண்டோர்’ உடன்போகியரின் மேல் பரிவுணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது. ‘முன்னியோரே’ என்ற சொல்லுக்கு பொ. வே. சோமசுந்தரனார், ‘செல்லக் கருதிச் செல்லா நிற்போர்’ என உரை எழுதுகிறார். திட்டமிட்டு செல்லும் ஒரு பாதையில் அவர்கள் செல்லாமல் நிற்பது அவர்கள் தடுமாறி நிற்பதை உணர்த்தி வாசகராகிய நம்மிடமும் அதே இரக்க உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. 

—-

அறியப்படாத பாதை

———

‘இந்நல்லோர் யாவரோ’ ( யாரிவர் என்ற மூன்றாவது வரி) எனும் இறுதிக்கேள்வி உடன்போகும் காதலரின் வாழ்வு சிறப்பானதாகத்தான் இருக்கும் என்ற முடிவினை தருவதில்லை; அவர்கள் யாரெனத் தெரியாது என்பது போலவே அவர்கள் பாதை இனி என்னவாக இருக்கும் என்பதும் தெரியாததாய் இருக்கிறது. ஒரு முடிவினை (closure) இந்தக் கவிதை நல்காமல் இருப்பதால் நம் மனதில் தயங்கி நிற்கும் கேள்வியாய் கவிதை விடைபெறுகிறது.  


Monday, April 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-5

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-5

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழிக்குக் கூறியது

—-

இயற்றியவர்: நரிவெரூஉத் தலையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 5

திணை: நெய்தல்

——

அதுகொ றோழி காம நோயே

வதிகுரு குறங்கு மின்னிதழற் புன்னை

உடைதிரைத் திவலை யரும்புன் தீநீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல்லித ழுண்கண் பாடொல் லாவே.

—————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குவதற்குக் காரணமாகிய புன்னை மரமானது, கரையைச் சாரசார உடைக்கின்ற அலைகளால் வீசப்படும் துளிகளால் அரும்புகின்ற, கண்ணுக்கு இனிதாகிய  நீர்ப்பரப்பையுடைய, மெல்லிய கடற்கரையை உடைய தலைவன் பிரிந்தானாகையால், பல இதழ்களை உடைய  மலரைப் போன்ற என் கண்கள் இமை பொருந்துதலைச் செய்யாவாயின; காம நோயென்பது அத்தன்மையதோ?

——

வாசிப்பு

—-

கண்களின் துரோகம்

—-

இந்தக் கவிதை இயற்கையின் படிமங்களாலானது. பகிர்ந்துகொண்ட மதியங்களில், எதிரொலிக்கும் அறையினுள், தோழிக்குச் சொல்லும் தலைவி ‘இது காம நோயோ’ என வினவுகிறாள்; அவளுடைய மனதின் ‘மெல்லிய கடற்கரையில் புலம்பும் அலைகளை’  அங்கீகரிக்கிறாள், அடையாளம் காண்கிறாள்.  அந்த உள் மனதின் நிலப்பகுதி அவள் கண் முன்னே காண்பதாகிய, குருகுகளுக்குத் தூங்க நிழலும் கிளைகளும் தரும் புன்னை மரத்திலிருந்து வேறுபட்டதாய் இருக்கிறது; குருகுகள் தூங்குகின்றன, அலைகள் எழும்பி விழுகின்றன, கடற்கரை நீர்த்திவலைகளால் நிறைந்திருக்கிறது. கடற்கரையும், நீரும், நீர்த்திவலைகளுமான படிமமே தலைவனாகவும் காமமாகவும் தன் பௌதீக இன்மையின் மூலம் தலைவியின் கண்களைத் துரோகமிழைக்க வைக்கின்றன; மலரைப் போல பல இதழ்கள் கொண்ட அவள் கண் மையிட்ட கண்கள் ‘பாடு ஒல்லா’ நிற்கின்றன; அதாவது கண்கள்  மூடுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றன. பல்லிதழ் என்பது பூவிற்கு ஆகுபெயர், உ.வே.சா இதை தாமரை என்றே குறிப்பிடுகிறார். உண்கண் என்பது மையிட்ட கண்கள். குருகுகள் புன்னை மரமென லயம் கூடியிருக்கும் சுற்றுச் சூழலுக்குப் பொருந்தாமல் தானியங்கியாய் கண்கள் துரோகமிழைக்கின்றன. A dissonanace, a symphony out of tune. 

——-

கதைசொல்லலுக்கு பதிலாய் மனப்பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்தல்

—-

இந்தக் கவிதை படிமங்களாலான மனப்பதிவுகளுக்கு கதைசொல்லலுக்கு பதிலாய் முன்னுரிமை அளிக்கிறது. ஒரு அகண்ட கடற்கரை, நீர்த்திவிலைகள், புன்னை மரம், குருகுகள், பல்லிதழ் கொண்ட மலர் என பல துண்டுகளாகி தன் உணர்ச்சி நிலை என்ன என தனக்குத்தானே அர்த்தப்படுத்திக்கொள்ள விழையும் பெண்ணை நாம் வாசகர்களாக அறிகிறோம். ‘இது காம நோயா’ என்ற rhetorical question பதிலளிக்கப்பட வேண்டியதில்லை என்றாலும் அதற்கான பதில் மேற்சொன்ன விரைந்து தோன்றுகின்ற குறிப்பான்களால், -fleeting signifiers-  ஆனவையாக இருக்கின்றன. காதலனின் இன்மை (absence) கடற்கரையின் ‘மெல்லம் புலம்பனாக’ தன் இருப்பினை (presence) அறிவித்து உடனடியாக அது நீர்த்திவலைகள், மணல், எனக் கசிகிறது. வலியும், நினைவும், ஏக்கமும், இணைவிற்கான விருப்பமும் காமத்தின் உள்ளடுக்குகளாகின்றன.

—-

பெண்ணுடலில் எழுதப்படும் கவிதையும், காமமும்

—-

இந்தக் கவிதை காமத்தின் ஏக்கத்தை உடலில் எழுதுகிறது; மனம் உடலின், கண்களின் தன் போக்கிற்கு சாட்சியாய் நிற்கிறது. பல்லிதழ் மலராகிய மையிட்ட கண்கள் பெண்குறிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட உருவகமாக (displaced metaphor) அது அகண்ட  கடற்கரையொன்றின்   நீர்த்திவிலைகளைக் கனவெனவேக் கண்டு ஏங்குகிறது. துஞ்சாக் கண்களின் தானியங்கித்தன்மையைத் தன் தோழியுடன் கிழத்தி பகிர்ந்துகொள்வதால், அவ்விரு பெண்களிடையே ஒருவருக்கொருவர் அந்தரங்கமாகச் சொல்லிக்கொள்வதை புரிந்துகொள்ளும் தோழமை ( camaraderie ) நிலவுவதாக வாசகர் அனுமானிக்கலாம். 


Sunday, April 14, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-4

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-4

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தும்பியிடம் கூறியது

—-

இயற்றியவர்: இறையனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 2

திணை: குறிஞ்சி 

——

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே.

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே அழகிய சிறகுகளையும் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!

——

வாசிப்பு:

——

அழகிய சிறகும் அகச்சிறையும்

———

‘திருவிளையாடல்’ திரைப்படத்தினால் மிகவும் பிரசித்தி பெற்று தேய்வழக்காகிவிட்ட இக்கவிதையின் நுட்பங்கள் நம்மால் உள்வாங்கப்படமாலிருக்கின்றன. ‘அஞ்சிறை’ என்ற சொல்லுக்கு பொ. வே. சோமசுந்தரனார் ‘அழகிய சிறகு’ என்றும் இரா. இராகவையங்கார் ‘அகச்சிறை’ என்றும் , உ. வே. சாமிநாதையர் உள்ளிடத்து சிறை, அழகிய சிறையுமாம் எனவும் பொருளுரைக்கின்றனர். புணர்ச்சியின் அனுபவம் ஒன்று அகச்சிறையாக அதன் வெளிப்புறத் தோற்றமே, அதன் துருத்திய முன்னிறுத்தமே தும்பியின் அழகிய சிறகாகிறது. தும்பி உணர்வுகளின் தூய அமிழ்தலுக்கு உருவகமாக, அது உலகைக் கடந்து செல்லக்கூடிய உயிரி அல்லாமல், அது அமிழ்தலை அறிதலாக்கியதாக இயற்கையாக, இயற்கையின் ஒரு துணுக்காக நமக்குச் சொல்லப்படுகிறது. இவ்வுலகில் உணர்வுகளின் வளமைகளில் அமிழ்தல் அமிர்தமாக, அதை விடச் சிறந்த நறுமணம் ஏதுமுண்டோ எனக் கேட்பதன் மூலம்  இவ்வுலக உணர்வுகளின் வாழ்வு இறுதி அறிவாக இக்கவிதையில் கொண்டாடப்படுகிறது. அது சிறைதான், சிறகும்தான், சிக்கிகொண்டதும்தான், ஆனந்தமும்தான்.


ஆசையின் நிறைவு எனும் அபூர்வம்

——-

ஆசை, எப்போதுமே தள்ளிப்போடப்படுவது, இடமாற்றம் செய்யப்படுவது, திசை திருப்பப்படுவது, என்றுமே திருப்தியுறாதது. இக்கவிதையிலோ ஆசை அபூர்வமாய் திருப்தியடைந்து அந்த அதீதத் திகைப்பின் திளைப்பில் களிமுற்றி பேசும் குரலைக் கேட்கிறோம். அந்தக் குரல், தலைவியின் நறுமணத்தை, மயில் போன்ற மென்மையை, செறிவான பற்களை (காமப் பற்கடிப்புகளுக்கான பதிலீடு) உணர்வுகளின் பேரானந்தமாக அடுக்குகிறது. இதில் ஒப்பீட்டில் கணக்கிட  முடிந்ததாய் மணமும், மென்மையும் இருக்க, கணக்கிட முடியாததாய் கெழீஇய நட்பு, ஏழு பிறப்பிலும் தலைவியின் நட்பும் இருக்கிறது.


புற உலக உறுதியளிப்பும் அதற்கான ஏக்கமும்

——

தொல்காப்பியத்துக் களவியல்  சூத்திரமான

“ வண்டே, இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று

அன்னவை பிறவும், ஆங்கு அவண் நிகழ

நின்றவை களையும்கருவி என்ப”  என்பதற்கு நச்சினார்க்கினியர்

 இக் கவிதையை எடுத்துக்காட்டி, “இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல், கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல், கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல், காமம் செப்பாது என்றது எந்நிலத்து வண்டாகலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது”  என்று உரை  எழுதுகிறார். 


 அதாவது காதலில், களவியலில் ஏற்படும் சந்தேகங்களுக்கு நிவர்த்தி அளிப்பதில் வண்டும் ஒன்று என்பது தொல்காப்பிய சூத்திரம்.  என்னதான் அகம் நிறையும் அனுபவம் நிகழ்ந்தாலும் அதன் உண்மையை உறுதிப்படுத்த ஒரு புற உலகக் கருவித் தேவைப்படுகிறது. அது ஒரு rhetorical device ஆக இருந்தால் கூட, மொழியாலானதாக இருந்தால் கூட போதும்தான். இதுவே இக்கவிதையின் மையக்கருத்துமாகும்.

இதை தன் விளக்கவுரையில் சுட்டிக் காட்டும் உ.வே.சா. இதற்கு ‘இயற்கைப் புணர்ச்சியின் கண் அன்பு தோற்ற நலம் பாராட்டியது’ என்று தலைப்பிடுகிறார். 


அது எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது. இதை நான் இவ்வுலக இயற்கையை அத்தனை உணர்வுகளின் அமிழ்தலோடு அறிதல் ஒரு நிறைவான சம்போகத்தின் வழிதான் என அறிகிறேன், மகிழ்கிறேன். 



Friday, April 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-3

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-3

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழிக்கு தலைவி கூறியது

—-

இயற்றியவர்: காமஞ்சோகினத்தார்

குறுந்தொகையில் பாடல் எண்; 4

திணை: நெய்தல் 

——

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே

இமைத்தீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி

அமைதற் கமைந்த நங் காதலர்

அமைவில ராகுத நோமென் நெஞ்சே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

நோகாதே என் நெஞ்சே, நோகாதே என் நெஞ்சே, இமைகளைத் தீயச் செய்யும் வெம்மையையுடைய கண்ணீர் தாங்கி அளவளாவுதற்கு அமைந்த நம் தலைவர் இப்போது மனம் பொருந்தாராய்ப் பிரிந்திருத்தலால் நோகாதே என் நெஞ்சே. 

——-

வாசிப்பு

——-

மொழியின் முதன்மையும் நடுங்கும் குறிப்பானும்

—-

இந்தக் கவிதை நெஞ்சுடைக்கும் காதல் பிரிவின் மையத்தில் இருப்பது மொழியின் முதன்மை என்பதை உடனடியாக உணர்த்திவிடுகிறது. தமிழண்ணல் தன்னுடைய உரையில் இதையே நோம் என் நெஞ்சே என மூன்று முறை அடுக்கும் பாடல் அமைப்பே துன்பத்தின் மிகுதியை புலப்படுத்தி விடுகிறது என்று எழுதுகிறார். கவிதைப்பிரதி பிரிவின் காரணத்தையோ அதன் கதையையோ சொல்வதில்லை; மாறாக வலியின் உருவாக மொழியை, ‘நோம் என் நெஞ்சே’ எனும் பதச்சேர்க்கையை முன்மொழிகிறது. உடல் வலியாக மொழி அதன் உருவாகிறது. இதை நடுங்கும் குறிப்பான் (trembling signifier) எனலாம். நெஞ்சை வலியின் மையமாகக் கவிதை குறிப்பிடுகையில் அது பௌதீக இதயத்தைக் குறிப்பதில்லை; அது இதயம் என்பது துன்பப்படுதலின் மையப்புள்ளி என்ற பண்பாட்டுக் கட்டுமானத்தைக் குறிக்கிறது. வலி இங்கே உடலின் வலியா இல்லைப் பிரிவின் வலியின் அருவமா?  நடுங்கும் குறிப்பான் இவ்விரண்டுக்குமிடையில் நழுவுகிறது. இந்த வலி மொழியாலானது; உடலின் வலியை அப்படியே மொழியில் வைத்திருப்பதான தோற்றத்தை வைத்திருக்கிறது.


தீப்பிடித்த இமைகளும், இல்லாத காதலனின் பிம்ப உருவாக்கமும்

—-

கவிதையில் காதலனாக, தலைவனாக விவரிக்கப்படுபவன், ‘அமைதற்கு அமைந்தவன்’ என்பதை உ. வே. சாமிநாதையர் உரை – அளவளாவதற்கு அமைந்த என்றும்  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றியிருத்தற்குக் காரணமான தண்ணளி பொருந்திய என்றும், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மனம் பொருந்திய என்றும் விளக்கமளிக்கின்றன. இமைகள் தீப்பிடிக்க வைக்குமளவு என்றும் அழுவாளா தலைவி அல்லது இந்தப் பிரிவின் காரணமாகத்தான் அழுகிறாளா? என்றும் நெஞ்சில் காயமிருக்க, அதனால் இமைகள் தீப்பிடிக்க, அத்தீயை அணைக்க வரும் கண்ணீரைத் தாங்க தலைவன் ஏற்கனவே இருந்தானா, இல்லை அப்படிக் கண்ணீரைத்தாங்க வந்துவிடுவான் என்பது தலைவியின் நம்பிக்கையா? திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரையின்படி காதலனைத் தலைவிக்கு மனம் பொருந்தியவன் என்று நாம் எடுத்துக்கொண்டால், இப்போது தலைவியில் அருகே இல்லாத காதலன் கண்ணீரைத் தாங்குபவன் என்பது தலைவியின் பிம்ப உருவாக்கம் என்றே தோன்றுகிறது.  துக்கத்தில் கண்ணீரின் வெம்மையில் தீயும் இமைகள் என்பது அசாத்திய அழகும் வலுவும் கொண்ட சித்திரம், மீண்டும் வலி மொழியாக, மொழி உடலாக, தீப்பிடிக்கும் திகைப்பை நமக்குக் கவிதை கடத்திவிடுகிறது.


மற்றமை அறிய இயலாததாய் இருப்பதும் அதன் துயரமும்

——————

இந்தக் கவிதையில் வரும் தலைவன்/ காதலன் அவனுடைய முழுமையான இன்மையினால் நமது கவனத்தை ஈர்ப்பவனாகிறான். தலைவியின் கண்ணீரைத் தாங்கிப் பிடிப்பவன் என்பது தவிர அவனுக்கு வேறு அடையாளம் ஏதுமில்லை. அவன் ஏன் தலைவியைப்  பிரிந்து சென்றான் என்பதற்கான விளக்கங்களில்லை. அவனைக் கவிதை அறிய இயலாத மற்றைமையாக (the other) கட்டமைக்கிறது; பிரிவின் புனித துயரத்தின் புராணம் ஒன்று கட்டிஎழுப்பபட அதன் மையமான காதலன் மற்றமையாக ஒரளவுக்கு மேல் அறியப்பட முடியாதவன். நம்முடனே இருக்கும் சக மனிதைரைப் போலவே. பிரிவின் துயரத்தோடு மற்றமையை அறிய இயலாத துயரம் சேர்ந்து அடர்த்தியுற, ‘நோமென் நெஞ்சே,  நோமென் நெஞ்சே ‘ என்ற வரிகள் சடங்கொன்றின் மந்திர ஓதுதல்களாக நம்மைப் பீடிக்கின்றன. 

 


குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-2

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-2

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

—-

இயற்றியவர்: பதுமனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 6

திணை: நெய்தல் 

——

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவி ந்

தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று

நனந்தலை யுலகமுந் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

இடையிரவு செறிந்த இருளை உடையதாக இராநின்றது; மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர். அகன்ற இடத்தையுடைய உலகிலுள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றி துயிலால் நிற்கும்.  யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனானேன். 

—-

வாசிப்பு

——

நள்ளிரவின் மௌனம் (தலைவியின்) பேசுகுரலின் செயல்திறனை (agency) களைந்துவிடுதல்

——

கவிதையின் ஆரம்ப வரி, ‘நள்ளென் றன்றே யாமஞ்’ காலத்தை, நேரத்தை, நள்ளிரவை ஒரு அருவமான கருத்து என்பதாக இல்லாமல் அதை ஒரு நீள்கின்ற, நிலைகொள்கிற, ஒடுக்குகின்ற மௌனம் நிறைந்த, பௌதீகமாக உணரத்தக்க ஒன்றாக முன்வைக்கிறது. மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயிலும் அந்த நள்ளிரவில் தான் மட்டுமே பேசுவதாய் இருக்கும், அதனால் ஒரு செயல்த்திறனைப் (agency)  பெறுவதைப் போலத் தோற்றமளித்து, அந்தக் கணமே மௌனத்தின் ஒடுக்குதலில் தன் சக்தியை இழந்ததாக மாறிவிடுகிறது. அனைவருக்கும் தூக்கத்தினால் அருளப்பட்ட மௌனத்தின் இனிய வரம் தனித்த பேசுகுரலுக்கு இல்லாமல் தலைவி உளப்பாதுகாப்பற்று, பலவீனமாய் இருக்கிறாள்.  நள்ளிரவின் மௌனம் (தலைவியின்) பேசுகுரலின் செயல்திறனை, தனித்திருப்பதை சொன்ன வேகத்திலேயே (agency) அதைக் களைந்துவிடுகிறது.

——


தனிமையின் பதற்றம் சட்டகமிடப்படவில்லை

—-

எதனால் தலைவியின் பேசுகுரல் பதற்றத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்பதற்கான விபரங்கள் கவிதையினுள் இல்லை. மணம் செய்துகொள்வதற்கு இடையே பொருளீட்டுதற்காகப் பிரிந்த தலைவனைப் பற்றிய எண்ணத்தினால் ஏற்பட்ட பதற்றம் என தொல்காப்பியம் களவொழுக்கத்திற்கு  நச்சினார்க்கினியர் எழுதிய உரையைச் சுட்டும் உ.வே.சா. பொருள் விளக்கத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அதைச் சொல்வதற்கான வரிகள் கவிதையில் இல்லை. ஆனால் தலைவியின் பேசுகுரலின் தனிமையின் பதற்றம் பிரதியில் இல்லாத வேறொரு சட்டகத்தினால் (an absent frame) வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. அந்த சட்டகம் என்னவென்று தெரியாது எனப் பிரதியை மட்டுமே நம்பி அணுக்க வாசிப்பில் ஈடுபடும் என்னைப் போன்றோருக்கு கவிதை ஒரு உயிரியின் தனிமையை, தனித்திருப்பதன் பொங்குநிலையை, தூக்கமின்மையை அதன் ஏக்கத்தை, பரிதவிப்பை, ஒரு ஆறுதலுக்கான சக மனித வருடலை எதிர்பார்ப்பதை குரலுயர்த்தாமல் சொல்லிவிடுகிறது.

——

சொல்லாமல் விடுவதன் ஆழம்

——

பிற உரையாசிரியர்களின் துணைகொண்டு உ.வே.சா இந்தக் கவிதையின் தலைவி தன் தோழியை நோக்கி இக்கவிதையைப் பேசுகிறாள் எனக் கூறுகிறார். ஆனால் கவிதைப் பிரதியில் அதற்கான சான்றுகள் இல்லை; அப்படிப்பட்ட விளக்கமானது மரபான பொருள்கொள்ளும் முறைகளிலிருந்து வருவதாக இருக்கவேண்டும். ஏற்கனவே தலைவியின் நிலைமை என்ன என்று தெரிந்த தோழியிடம் ( அவளும் மற்றவர்களைப் போலவே இனிமையாகத் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்) அவள் பேசுவதாக எடுத்துக்கொண்டால் இந்தக் கவிதையின் பொருண்மை சுருங்கிவிடுகிறது. பிரதிக்கு உண்மையாக, யாரோடு இந்தக் கவிதையின் தலைவி பேசுகிறாள் என்பதை நிர்ணயிக்காமல் இருக்கும்போது, வெளியுலக அமைதிக்கு எதிராக அவளது உள்ளார்ந்த புயல், அவளது பதற்றம், தணியுமா இன்னும் விரக்திக்கும் தனிமைக்கும்  இட்டுச்செல்லுமா எனத் தெரியாமல் அர்த்த வெளியை திறந்து வைக்கிறது. சொல்லாமல் விடுதலின் அந்த ஆழம் இந்தக் கவிதையின் தனிமையும் ஏக்கமும் பதற்றமுமான உணர்வு நிலைக்கு நம்மை அணுக்கமாக்குகிறது.

—-

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-1

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-1

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

—-

இயற்றியவர்: தேவகுலத்தார்

குறுந்தொகையில் பாடல் எண்; 3

திணை; குறிஞ்சி

——

நிலத்தினும் பெரிதே வானினுமுயர்ந்தன்று

நீரினு மாராள வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தே னிழைக்கு  நாடனோடு நட்பே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

மலைப்பக்கத்திலுள்ள கரிய கொம்புகளையுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக்கொண்டு, பெரிய தேனை வண்டுகள் செய்தற்கான இடமாகிய நாட்டையுடைய தலைவனோடு யான் செய்த நட்பானது நிலத்தினும் பெரிது, ஆகாயத்தைக்காட்டிலும் உயர்ந்தது, கடலைக்காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது.

——-

வாசிப்பு

பிரம்மாண்டத்தின் பிரசன்னம் உலகப் பொருளாயத்துக்குத் திரும்புதல்

—-

இந்தக் கவிதை அதன் ஆரம்பக் கருத்தறிவிக்கும் செயற்குறிப்பாய், பிரம்மாண்டத்தின் பிரசன்னமாய், ‘நிலத்தினும் பெரிதே, வானத்திலும் உயர்ந்ததே’ எனக் காதலைத் தெரிந்தவற்றின் வரைபடத்திற்குள் பிடிபடததாய், அதை விடப் பெரியதாய், ஏதோ அந்த எல்லயற்றது இந்த கட்டற்ற உணர்ச்சியான காதலில் மூழ்கியிருப்பதை நமக்குத் தெரிவித்துவிடும் என்ற  நம்பிக்கையில் தொடங்குகிறது. அது ஒருவகையில் நமக்கு அறிமுகமான, உலகியல் சர்ந்ததை விட மேலான, பெரியது ஒன்றை முன்னுரிமைப்படுத்தும் மெய்யியல் சமிக்ஞை. இருப்பினும் அது கட்டுக்கடங்காததைச் சொன்னவுடனேயே உலகப்பொருளாயத்துக்குத் திரும்பி மலைச்சரிவுகளையும், குறிஞ்சி மலரையும், தேனுறிஞ்சும் வண்டுகளையும் சொல்லி கீழிறிங்கி வந்துவிடுகிறது. காதலானது அதன் உலகப் பொருளாயாத இருப்பிலிருந்து தப்பிச்செல்ல இயலாததாகத் தோன்றுகிறது.


துணைப்பொருளும் முரணும்

————

கவிதை ஒரு நிலைத்த ‘இந்த மனிதனுக்கான; இந்தக் காதலு’க்காக ஏங்குகிறது; ஆனால் அந்த குறிப்பிட்டதன்மை நிலையின்மையை விளைவிக்கிறது. ஏனெனில் இந்த ‘மலைச்சரிவுகளின் மனிதன்’ ஒரு மனிதன் மட்டுமல்ல; அவன்  நிலத்தின் பகுதியான, உரு; அந்த நிலப்பகுதியில் வாழ்வு வண்டுகளின் ரீங்காரத்துடனும், மொட்டவிழும் குறிஞ்சிகளோடும்  தன்போக்கில் உயிர்த்திருக்கிறது. அந்த மனிதன் அந்த நிலப்பகுதியில் இருக்கும் பண்பாட்டு வலைப்பின்னலில் ஒரு கணு.  குறிஞ்சிப் பூ, அது போலவே கவிதையின் சட்டகத்திற்கு வெளியே இருக்கும் வரலாற்றை கிசுகிசுக்கிறது. 


நாம் இங்கே காலத்தை வென்று நிற்கிற, சாசுவதமான விருப்பங்களின் முரண் ஒன்றை எதிர்கொள்கிறோம்; ஒன்றை அடையும் மனித செயல் என்பது அதிலிருந்து விலகுவதாகவும் இருப்பது. பெயரிடுவது என்பது சட்டகமிடுவது, எந்த சட்டகத்தின் உள்ளுமோ அதற்கு வெளியே இருக்கக்கூடிய ஒன்றின் உரு எப்போதுமே பழிப்பு காட்டுவது. ஆசை எதையும் உடைமையாக்க விழைவதில்லை, மாறாக அறிந்ததை ஆழம் காண இயலாததின் பிரதிபலிப்பாய் அது உருமாற்றுகிறது.  உலாகாய்த பொருளாயத்தை எந்த சொற்கள் கடந்து மேல் செல்ல விரும்பினவோ அவையே துணைப்பொருட்களாய் மாறி எந்த உலகை விட்டுச் செல்ல முயன்றனவோ அவற்றையே மீண்டும் சுட்டுகின்றன. இந்தக் கவிதை எந்தக் காதலை வரையறை செய்ய முயன்றதோ அதுவே இந்தக் கவிதையால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட இயற்கை என்பதை வெளிக்காட்டுகிறது. 


எழுதப்படாததும் தீர்மானிக்கமுடியாததும்

——

கவிதையில் பேசுகுரலாக இருக்கும் தலைவியின் அடையாளம் காதல் எனும் பெரு உணர்ச்சியில் கரைந்துபோய்விடுகிறது. அவளுடைய பின்னணிக்கதை எதுவும் நம் மேல் பாரமாக சுமத்தப்படவில்லை; எந்த ஒரு உறவின் உளியக்கமும் நமக்குச் சொல்லப்படுவதில்லை. நாம் ஒரு உண்ர்ச்சியின் பொங்குநிலைக்கு சாட்சியாக இருக்க மட்டுமே அழைக்கப்படுகிறோம்.  ஒரு பச்சையான உணர்ச்சியை அதை இவ்வுலகின் அடிப்படை மூலக சக்தியாக, நம்மை மூழ்கடிக்கக்கூடியதாக இருப்பதை உணர அழைக்கப்படுகிறோம். அடையாளமற்ற குரலாய் தலைவி இருப்பதால் அங்கே எழுதப்படாததும், தீர்மானிக்கமுடியாதுமாய் இருப்பது அனைவருக்குமானதாய் பரந்து விரிந்து விடுகிறது. வாசகி ஒருவர் இயல்பாய் இந்த தலைவியின் குரலில் ஏறி உட்கார்ந்து இது தன்னுடைய குரல் என சுவீகரித்துக்கொள்ளலாம்.


தூய இருப்பு உணர்ச்சிக்கு இல்லை

—-

இந்தக் கவிதை ஒரு கட்டுக்கடங்கா உணர்ச்சியை கட்டுக்கடங்கும் பொருட்களை வைத்து சொல்ல முயன்று அவ்வுணர்ச்சி தொடர்ந்து நழுவி நழுவிச் செல்வதை மொழியின் விரக்தியுடனும்  அதன் எழிலுடனும் சொல்கிறது.  தூய இருப்பு உணர்ச்சிக்கு இல்லை என்பதை அறிந்து நாம் பெருமூச்செறிகிறோம். 

-