Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, July 14, 2014

பறத்தலில் வீழ்தல் இனிது


“Most gulls don’t bother to learn more than the simplest facts of flight — how to get from shore to food and back again. For most gulls, it is not flying that matters, but eating. For this gull, though, it was not eating that mattered, but flight. More than anything else, Jonathan Livingston Seagull loved to fly.” - Richard Bach in ‘Jonathan Livingston Seagull’ நாவலை இலவசமாக தரவிறக்கி படிக்க: http://csermelyblog.tehetsegpont.hu/sites/default/files/angol%20sirály.pdf 

Diving Pelican 



எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று ஞாயிறு மாலை வேளச்சேரி நண்பர்கள் கூடும் மொட்டைமாடிக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்தேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பற்றி நான் இந்த ப்ளாக்கில் வெளியிட்டிருந்த கட்டுரையை ஒட்டி பேச்சு தொடங்கியது. நான் பறவை வல்லுனர் அல்லன் என்  பறவைகள் ஈடுபாடு கலை இலக்கியங்கள் சார்ந்தது மட்டுமே என்று விளக்கும்போது ரிச்சர்ட் பாக்கின் புகழ்பெற்ற நாவலான ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ பற்றி குறிப்பிட்டேன். கூடியிருந்த நண்பர்களில் ஒருவர் கூட அந்த நாவலை வாசித்திருக்கவில்லை என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று எந்த காரணத்தினால் முன் அனுமானம் கொண்டிருந்தேன்? 
ரிச்சர்ட் பாக்கின் ஜொனாதன் விவிங்ஸ்டன் கடற்பறவை எல்லா கடற்பறவைகள் போல அல்லது எல்லா பறவைகளையும் போல உணவுக்காக மட்டும் பறக்கின்ற பறவை அல்ல. பறத்தலின்பத்தினால்  பறவைக்கு பறத்தலென்ற செயலே எப்படி வாழ்தலாகிறது என்பதை ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ ஒரு நீதிக்கதை வடிவத்தில் சொல்கிறது. கலை என்றால் என்ன, வாழ்க்கையே கலையாவது எப்போது, கலை எதற்காக  கூட்டத்திலிருந்து விலகி தனியாக இருக்கவேண்டியதன் அவசியத்தை முன் நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது ஆகியவற்றை ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ போல கவித்துவமாக சொன்ன வேறொரு கதை இல்லை. மிகுந்த உற்சாகத்தினையும், உத்வேகத்தினையும், கலை ஈடுபாட்டின்  மேல் அளப்பரிய நம்பிக்கையினையும் உண்டாக்குகிற கதை அது. 
நான் சொல்ல வந்தது ஆனால் ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்லுக்கான அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல. ஜொனாதன் கடற்பறவைக்கு நாவலின் ஆரம்பத்திலேயே அது பறப்பதற்குக் காரணம் உணவே என்று வலியுறுத்தி சொல்லப்படுகிறது; அந்த வலியுறுத்தலை மீறியே ஜொனாதன் இலக்கற்ற பறத்தலை வாழ்தலாக அடையாளம் கண்டுகொள்கிறது. என்னுடைய நோக்கம் வானில் மிதக்கும் பறவைகள் தங்கள் இரைகள் நோக்கி வீழ்வதிலுள்ள அழகையும் கம்பீரத்தையும் கவனப்படுத்துவதன் மூலம் ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ வழங்கும் வாசிப்பனுபவத்தை உங்களுடையதாக்கிக்கொள்ள கோருவதுதான்.

நான் பயணம் செய்த விமானம் வானத்திலிருந்து ஒரு முறை கீழே விழுந்திருக்கிறது.2000 ஆண்டில் சென்னையிலிருந்து விமானத்தில் கல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். மே மாதம். அந்தப் பருவத்தில் வருடந்தோரும் வங்காள விரிகுடாவில் தாழ்வழுத்த மண்டலங்கள் உருவாகும். பொதுவாகவே வங்காள விரிகுடாவில் கடல் இந்தியாவின் மேற்கிலிருக்கும் அரபிக்கடலைப் போல அமைதியானது அல்ல. வங்காள விரிகுடாவில் கடல் பல கொந்தளிப்புகளையும் புயல்களையும் வான வேடிக்கைகளையும் உருவாக்க வல்லது.  ‘வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ என்ற விஷ்ணு துதிக்கான வரி வங்கக் கடல் பற்றிய அனுபவத்தால் உண்டானது. பருவ மழையும் தாழ்வழுத்த மண்டலங்களும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் வங்காள விரிகுடாவிலும் அதையொட்டிய இந்திய நிலப்பகுதிகளிலும் வானில் பல air pockets என்று அழைக்கப்படுகின்ற தாழ்வழுத்த வெற்றிடங்களை உண்டாக்குகின்றன. 2000 வருடம் மே மாதம் நான் பயணம் செய்த விமானம் வங்காள விரிகுடாவின் மேல் வானத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய air pocket ஒன்றினுள் வசமாக மாட்டிக்கொண்டது.
இரை நோக்கி இறக்கைகள் மடக்கி வானில் இருந்து செங்குத்தாக கீழே விழும் பறவை போல எங்கள் விமானம் கீழே விழுந்தது. நடு வானில் அதன் வீழ்தலைக் கட்டுப்படுத்தி விமானி காற்றழுத்த அறையிலிருந்து வெளிக்கொணர முயன்றபோதெல்லாம்  விமானமே துண்டு துண்டாய் சிதறப்போவது போல அதிர்ந்து அடங்கியது. எந்த முன்னறிவிப்பும் இன்றி ஏற்பட்ட முதல் வீழ்தலிலேயே பயணிகள் அலற ஆரம்பித்துவிட்டார்கள். சுமார் முப்பந்தைந்து நிமிட நேரம் நீடித்த அந்த வீழ்தலும் பறத்தலும் யுகாந்திரமாய் நீடிப்பது போல தோன்றியது.  முதல் வீழ்தலிலேயே என் இருக்கைக்கு பின் இருக்கையில் இருந்த பெண்மணி ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று உச்ச ஸ்தாயியில் அலற ஆரம்பித்துவிட்டார். விமானம் முழுக்க  எழுந்த பயத்தின் கூச்சல்களை மீறி அவருடைய சத்தம் அதிகமாகக் கேட்டது. அவருக்கு இணையாக குழந்தையொன்றும் அலறியது. என் முன்னிருக்கையில் இருந்த நபர் விமானம் அமைதிப்படும்போதெல்லாம் நல்ல வேளை இது வங்க தேச விமானமல்ல வங்க தேச விமானமாயிருந்தால் மேற்புறங்களில் நீர் கசிந்திருக்கும் என்று அல்லாவுக்கு நன்றி சொன்னார். வேறொரு இருக்கையில் இருந்த நபர் விமானம் சிதறி எல்லோரும் இறந்துவிட்டோமென்றால் உறவினர்களெல்லாம் எங்கள் உடல்களைத் தேடும்போது எங்கோ அத்துவானக்காட்டில் போய் செத்துத் தொலைந்திருக்கிறான் பார் என்று எப்படியெல்லாம் திட்டித் தீர்ப்பார்கள் என்று சத்தமாய் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த அரைமணி நேர நரக வேதனையும் அச்சமும் நிறைந்த நிமிடங்களில் விமானத்தின் கேப்டனிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கிலேசமும் பயணிகளான எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 
விமானம் காற்றழுத்த வெற்றிடப் பொறியிலிருந்து தப்பித்து கல்கத்தா செல்வதற்கு பதிலாக அருகாமையிலிருந்த புவனேஷ்வர் சென்று தரையிறங்கியது.  பூமியைத் தொடுவதற்கு சற்று முன்னர்தான் விமான கேப்டன் ஒலிபெருக்கியில் முதல் முறையாக  அறிவித்தார்: “நாம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டோம். வானில் காற்றழுத்த வெற்றிடத்தில் நம் விமானம் சிக்கிக்கொண்டது. நான் வடக்கு, கிழக்கு, மேற்கு என்று ஒவ்வொரு திசையாய் மோதி வெளிவரப்பார்த்தேன். ஆனால் மூன்று திசைகளிலும் மேகங்கள் அடர்ந்து வழிவிடவில்லை. நல்ல வேளையாக தெற்கில் நமக்கு வழி கிடைத்தது. புவனேஷ்வரில் நாம் தரையிறங்குகிறோம். நான் உங்களை பயமுறுத்தவேண்டாம் என்றுதான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடாததற்கு மன்னிக்கவும். உங்கள் அனைவரையும் பத்திரமாக பூமியில் இறக்குவது எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வானில் இருந்து இரை நோக்கி கீழே விழும் பறவைகளுக்கு இது தினசரி அனுபவம். நமக்கு கடவுளின் ஆசி கிடைத்த பேரனுபவம்.”
புவனேஷ்வரில் விமானம் தரையிறங்கியதும் பயணிகளின் ஆனந்தக்கூச்சல் எழுந்தது. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் சிலர் பூமியை முத்தமிட்டார்கள்; சிலர் கீழே விழுந்து புரண்டார்கள்; ஆண்டவனின் கருணை என்று சிலர் முணுமுணுத்தார்கள். புவனேஷ்வர் விமான நிலையத்தில் எங்களை பத்திரமாகத் தரை இறக்கிய கேப்டனை சந்தித்து நான் நன்றி சொன்னேன். கேப்டன் ராக்கேஷ் ஷர்மாவின் முகத்திலும் கழுத்திலும் வியர்வை வெள்ளமாய் வழிந்திருந்தது. நான் கைகுலுக்கியபோது அவர் உடல் மெலிதாய் நடுங்கியதாய் நான் நினைத்தேன்.
வானத்தில் மேகங்கள் கலைந்துவிட்டபின் புவனேஷ்வரிலிருந்து கல்கத்தாவுக்கு விமானம் புறபடத்தயாரானது. ஆனால் என்னையும் வங்கதேசத்து பயணி இன்னொருவரையும் தவிர வேறு எவரும் அந்த விமானத்தில் மீண்டும் பயணம் செய்யத் தயாராக இல்லை. அனைவரும் ரயில் பிடித்து கல்கத்தா போவதாகக் கிளம்பிப் போய்விட்டனர். விமானப் பணிப்பெண்கள், கேப்டன் ராக்கேஷ் ஷர்மா, மற்றும் நாங்கள் இருவர் என ஒன்றாக நடந்து போய் விமானத்தில் ஏறினோம். ராக்கேஷ், “நீங்கள் இருவர் மட்டுமாவது மீண்டும் வருவது உற்சாகமாக இருக்கிறது. உங்களுக்கு பயமாக இல்லைதானே?” என்று கேட்டார். “உங்கள் திறமையில் நம்பிக்கையிருக்கிறது, ஆனால் உங்களுக்கு பயமாக இல்லையா?” என்று நான் திருப்பிக் கேட்டேன். “நாங்கள் பறவைகள், பறத்தலில் இனிது வீழ்தல்” என்றார் ராக்கேஷ். எங்களோடு நடந்த விமானப்பணிப்பெண்கள் உற்சாகமாக சிரித்தார்கள்.
புவனேஷ்வரிலிருந்து கல்கத்தா விமான பயணம் சுமுகமாக இருந்தது. நான் கல்கத்தாவிலிருந்து ஷில்லாங், பிறகு அங்கிருந்து அருணாசல பிரதேசத்திலுள்ள லோஹித் மாவட்ட கிராமங்கள் என்று பயணம் செய்ய ஆரம்பித்தேன். அருணாசல பிரதேசத்தின் காடுகளில் இருவாட்சிகளைப் பார்க்க மிஷிங் ஆதிவாசி நண்பர்களோடு சென்றேன். மிஷிங் ஆதிவாசிகளின் மூப்பர் செர்னாவ் மிரி என்னுடைய நல்ல நண்பர். செர்னாவ் மிரி இருவாட்சிகளை (hornbills) நுட்பமாகத் தெரிந்து வைத்திருப்பவர். அவரிடம் நான் விமானம் பறவை போல கீழே விழுந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தேன். செர்னாவ் மிரி இருவாட்சிகள் இரை நோக்கி கீழே வானில் இருந்து எய்த அம்பு போல இறங்கும்போது அவை உயிர் வெறுத்து உயிர் வாழ விழைகின்றன என்று சொன்னார்.
இருவாட்சிகளின் வாழ்வினைப் பற்றி செர்னாவ் மிரி எனக்களித்த நுட்பமான பார்வை ரிச்சர்ட் பாக்கின் நாவல் ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’லில் இல்லாதது; ஆனால் பாக்கின் நாவலை மீண்டுமொரு முறை வரி வரியாய் வாசிக்க வைத்தது.
பள்ளிக்கரணையில், வேடந்தாங்கலில், முப்பந்தலில், அருணாச்சலப்பிரதேச காடுகளில் ஏன் யுடூப் வீடியோக்களில் இரை பிடிக்க கீழே விழும் பறவைகளைப் பார்க்கும்போது நான் பயணம் செய்த விமானம் கீழே விழுந்த அனுபவம் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அப்படி கீழே விழுந்தபோது என் மனமும் உயிர் வாழும் இச்சையால், துடிப்பால் பீடிக்கப்பட்டதாக நான் கற்பனை செய்து கொள்கிறேன். பறத்தலுக்கான உந்துதல் அந்த இச்சையில் இருக்கிறது.
கோழிகள், தவிட்டுக் குருவிகள் போன்றவையும் பறவைகள்தான்; அவற்றிற்கு உயரப் பறந்து உயிர் வெறுத்து இரை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 
உயிர் வாழ இச்சை நிறையும் மனதினையே அமிர்தகலசம் என்று புராணங்கள் உருவகித்ததாய் எனக்கொரு சம்சயம் உண்டு; அமிர்த கலசங்களை உயரப் பறக்கும் பறவைகள் தங்களகத்தில் கொண்டிருக்கின்றன.    



Friday, August 23, 2013

சிறுகதைகளை வாசிக்கக் கேட்பது

சிறுகதைகளை வாசிக்கக் கேட்பது என்பது அலாதியான அனுபவம். நியுயார்க்கர் பத்திரிக்கை மாதந்தோறும் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகளை எழுத்தாளர்களைக்கொண்டு வாசிக்க வைத்து podcast ஆக வெளியிடுகிறது. கதைகளைப் பற்றிய சிறிய உரையாடல்கள்,  அறிமுகங்களுக்குப் பிறகு கதைகளை எழுத்தாளர்கள் வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் எழுதப்படும் விதவிதமான சிறுகதைகளைப் பற்றி அறிந்துகொள்ள நியுயார்க்கர் பத்திரிக்கையின் மாதாந்திர சிறுகதை podcast நல்ல வழியாக இருப்பது மட்டுமல்ல சிறுகதைக்கு எத்தனை சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்பதும் உடனடியாகத் தெரிய வருகிறது. காலை நடைப்பயிற்சியின் போது, அலுவலகத்திற்கு பயணம் மேற்கொள்ளும்போது, அறையை ஒழுங்கு பண்ணும்போது, புத்த்கங்களை அடுக்கி வைக்கும்போது, சமைக்கும்போது என பல சந்தர்ப்பங்களில் சிறுகதைகளைக் கேட்கிறேன். இந்தக் கதைகள்தான் என் தினசரி அனுபவத்தையும் பகற்கனவுகளையும் எவ்வளவு வளம் மிக்கதாக மாற்றுகின்றன! கண்களால் சிறுகதைகளை வாசித்துக்கொண்டே அதே வரிகள் வாசிக்கப்படுவதைக் கேட்பது வாசிப்பினை மிகவும் ஆழமானதாகவும், கவனம் மிக்கதாகவும், நுட்பமானதாகவும் மாற்றுவதை நான் உடனடியாக உணர்ந்தேன். அதை விட வேறென்ன வேண்டும் எனக்கு?

நியுயார்க்கர் சிறுகதை podcastஐ நீங்கள் http://www.newyorker.com/online/blogs/books/podcast/ என்ற சுட்டியில் கேட்கலாம்.

இந்தக் கதைகளில்

6/4/2013 அன்று ராபர்ட் கூவர் வாசித்த இடாலோ கால்வினோவின் 'The daughters of the moon'

4/2/2013 அன்று மார்கரெட் அட்வுட் வாசித்த மேவிஸ் காலண்ட்டின் ''Voices Lost in snow'

12/4/2012 அனறு ஹிஷாம் மாடர் வாசித்த போர்ஹெசின் 'Shakespeare's memory'

8/19/2011 அன்று சால்மான் ருஷ்டி வாசித்த டொனால்ட் பார்த்தல்மேயின் கதை 'Concerning the bodyguard'

9/21/2011 அன்று பென் மார்கஸ் வாசித்த இஷிகுரோவின் கதை 'A village after dark'

10/15/2010 அன்று டேவிட் மீன்ஸ் வாசித்த ரேமண்ட் கார்வரின் 'Chef's house'

8/12/2010 அன்று கிறிஸ் அட்ரியன் வாசித்த டொனால்ட் பார்த்தல்மேயின் 'Indian uprising'

10/13/2009 அனறு பாமுக் வாசித்த விளாடிமிர் நபகோவின்  சுய சரிதை 'Speak memory' புத்தகத்திலிருந்து 'My Russian education' அத்தியாயம்

4/10/2009 அன்று நாதன் இங்கிலாண்ட் வாசித்த பால்விஷஸ் சிங்கரின் கதை ' Disguised'

ஆகியன எனக்கு மிகவும் பிடித்தவை. நான் இந்தக் கதைகளை- நபகோவின் சுய சரிதை அத்தியாயம் உட்பட- மீண்டும் மீண்டும் கேட்டேன். சிறுகதை என்ற வடிவம்தான் எத்தனை சாத்தியப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது! நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன். தேதிகளையும் இதர விபரங்களையும் நீங்கள் எளிதாகத் தேடிப்பார்ப்பதற்காகத் தந்திருக்கிறேன்.


Saturday, May 18, 2013

நான் ஆட்டோகிராஃப் போட்ட முதல் சந்தர்ப்பம்


வளர வளர எல்லாம் கோப்பரமாகிவிடும் என்பதற்கு டெல்லி விமான நிலையம் ஒரு எடுத்துக்காட்டு. முந்தா நாள் ராஞ்சியிலிருந்து டெல்லி வந்து விமானம் மாறி சென்னை வர வேண்டும். வேறு வேறு ஏர்லைன்ஸ் என்பதினால்  பெட்டியை சேகரித்துக்கொண்டு மீண்டும் புதியதாய் உள் நுழைந்து பாதுகாப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். டெல்லி வந்திறங்கினால் ஏரோபிரிட்ஜ் வேலை செய்யவில்லை. விமானத்திலிருந்து பஸ் சௌகரியமாய் ஊர்கோலமாய் பதினைந்து நிமிடங்கள் பயணம் போய் நிலையத்தில் இறக்கிவிட்டது. பட்டை ஐந்தில் உங்கள் பெட்டி வரும் என்றார்கள் அப்புறம் பட்டை ஆறு அப்புறம் ஒன்று என்று ஒரு வழியாய் அங்கேயும் இங்கேயும் ஜனம் அலைந்து திரிந்து தங்கள் பெட்டிகளை எடுத்தது. எனக்கோ இன்னும் அரை மணி நேரம்தான் அடுத்த விமானத்திற்கு இருந்தது. பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அடுத்த டெர்மினலுக்கு பதினைந்து நிமிடம் பஸ் பயணம் என்றார்கள். அடுத்த டெர்மினலில் மூச்சு வாங்க போய் உள் நுழைய இருக்கையில் ‘சார் நீங்கள் தவறான பெட்டியை தூக்கிக்கொண்டு போய் விட்டீர்கள் என்று ஃபோனில் கூப்பிட்டு சொன்னார்கள். அப்போதுதான் பெட்டியைப் பார்த்தேன் என்னுடைய பெட்டி போலவே அச்சு அசலான இன்னொரு பெட்டி. ஃபோனின் மறு முனையில் ஒரு இளம்பெண் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருந்தார். அவரிடம் மெதுவாக என் நிலைமையை விளக்கினேன். அவர் என் டெர்மினலுக்கு வந்து என் பெட்டியை கொடுத்துவிட்டு அவர் பெட்டியை வாங்கிச் செல்ல முடியுமா என்று கேட்டேன். வேறு வழி, வந்து தொலைகிறேன் என்று கத்தினார் இளம் பெண். Fucking moron என்று மறு முனையில் அவர் வேறெங்கோ பார்த்து திட்டுவதை காது குளிர கேட்டேன். அந்த சந்தர்ப்பத்திலும் எங்களூர் மின்சார வாரியத்தை பெயர் சொல்லிக் கூப்பிட்டீர்களா மேடம் என்று கேட்கத் தவறவில்லை.

என் விமானத்தின் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் போய் பெட்டி மாறிவிட்ட கதையைச் சொல்லி எனக்கு விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி சீட்டு வாங்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றேன். எனக்காக பதினைந்து நிமிடம் அதிகம் கால அவகாசம் தருவதாகவும் அதற்கு மேல் என் பொறுப்பு என்று தயவு பண்ணினார்கள். 1D டெர்மினலில் லிஃப்ட் பகுதில் காத்திருப்பதாக இளம்பெண்ணிடம் சொன்னேன். அவர் நான் மேலே வந்து விட்டேன் மேலே வாருங்கள் என்றார். மேலே ஓடிப்போய் இந்த அற்றத்திலிருந்து அந்த அற்றம் வரை தேடியும் ஆளைக் காணவில்லை. அவர் விமான நிலையத்தின் வருகை பகுதிக்குப் போயிருக்கிறார். நானோ விமான நிலையத்தின் வெளியேற்ற நுழை வாயிலில் காத்து நின்றேன். அந்த இளம்பெண் நான் இப்போது லிஃப்ட் பகுதியின் கீழ் தளத்திற்கு வந்துவிட்டேன் கீழே வாருங்கள் என்றார். கீழே திரும்பி ஓடிப்போனேன். அங்கே அந்த பஞ்சாபி இளம்பெண் கடும் கோபத்துடன் நின்றிருந்தார். அவரிடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்டு அவர் பெட்டியை கொடுத்துவிட்டு என் பெட்டியை வாங்கினேன். பெட்டிகளைக் கைமாற்றும்போது அவர் சார் நீங்கள் முத்துக்குமாரசாமிதானே என்றார். ஆமாம் என்றேன் தயக்கமாக. என்னை நினைவில்லை, நான் உங்களை சண்டிகரில் பேட்டி எடுத்திருக்கிறேன் என்றார். ஆமாம் போன வருடம் SAARC எழுத்தாளார்கள் மாநாட்டுக்காக சண்டிகர் போனபோது அவர் என்னை சண்டிகர் ஆங்கில நாளிதழுக்காக பேட்டி எடுத்தது நினைவுக்கு வந்தது. பரவாயில்லையே ஞாபகம் வைத்திருக்கிறீர்களே என்றேன். உங்களை மறக்க முடியுமா சார் எப்படி சிரிக்க சிரிக்க பேட்டி கொடுத்தீர்கள். உங்களைப் போல இன்சொல்லும், அழகும், கருணை உள்ளமும் கொண்டவர்களைக் கண்டால் எனக்கு நகைச்சுவை உணர்வு பீறிட்டுவிடும் என்று நன்றி தெரிவித்தேன். என்னுடனேயே லிஃப்டில் ஏறி நுழைவாயில் வரை வந்து வழி அனுப்பி வைக்க கூடவே வந்தார். உங்கள் ஆங்கில நாவல் எப்போதுதான் வெளியாகும் என்றார். மூன்றாவது முறையாக எடிட் செய்துகொண்டிருக்கிறேன் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ என்று அலுத்துக்கொண்டேன். நுழைவாயிலில் கைகுலுக்கி விடைபெறும் தருணத்தில் இந்தப் பெட்டியில் உங்கள் ஆட்டோகிராஃப் போட்டுத்தாருங்கள் சார் பின்னால் நீங்கள் புக்கர் பரிசெல்லாம் வாங்கி பெரும் புகழ் பெறும்போது நான் இந்தப் பெட்டியை வைத்து ஒரு கட்டுரை எழுதுவேன் என்றார். அவர் கொடுத்த ஸ்கெட்ச் பேனாவால் என் முழுப்பெயரையும் கையொப்பமிட்டு கீழே மின்சார வாரியம் என்று மேற்கோள்களில் குறித்தேன்.

சென்னை விமானத்தை சரியான சமயத்தில் பிடித்துவிட்டேன். வீட்டுக்குள் நுழையும்போது வழக்கம்போல குறைந்த அழுத்த மின்சாரத்தினால் விசிறிகளெல்லாம் மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தன. வெக்கை அள்ளி வீசியது. Fucking moron  என்ற பதச்சேர்க்கையை தமிழாக்கம் செய்யத்தான் எத்தனை பெயர்கள்! ஒரு துணை அகராதியே போடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

Sunday, December 2, 2012

எங்கும் குடி மயம்


நேற்று ராஞ்சியில் விமானம் ஏறும்போது பீடித்த ஆயாசம் நேற்றிரவு சென்னை வந்த பிறகும் இன்று ஞாயிறன்றும் நீடித்தது. நான்கு நாட்கள் ராஞ்சி பல்கலையில் விடாமல் தினமும் ஆறு மணி நேரம்  உரையாற்றியது அதன் பின் முப்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தனித்தனியாக கல்விப்புல அறிவுரை வழங்கியது என்று சோர்ந்துவிட்டேன். வழக்கமாக இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எனக்கு உற்சாகம் குறைவதில்லை. தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் பலரையும் போலவே நானும் வாய் ஓயாமல் பேசக்கூடியவன்தான்; மேடையிலிருந்து முழங்கினால் பேருரை, வகுப்பறை என்றால் உரை, குழுவில் நண்பர்களோடு என்றால் உரையாடல். அவ்வளவுதான். பெயர்தான் வித்தியாசம். மற்றபடி பேசுவதை நிறுத்துவதே இல்லை. மற்றவர்களின் அந்தரங்க அனுபவத்தைக் கூட எதற்கும் நம்பளே பேசிவிடுவோமே என்று பேசிவிடுவதும் உண்டு; அந்த மாதிரியான சூழ்நிலைகளில் தொண்டை கரகரத்து போய் நம் குரலும் கூட அடுத்தவர் குரல் போல ஒலித்து ஒத்துழைக்கும். இப்படி பேசுவதையெல்லாம் எழுதிப் போட்டால் வருடாந்திர புத்தகக் கண்காட்சிக்கு பத்து புத்தகங்கள் தேறிவிடும். ஆகையால் ஆயாசம் தொடர்ந்து பேசியதால் ஏற்பட்டது அல்ல.

செவ்வாய் இரவு ராஞ்சி பல்கலை விருந்தினர் இல்லத்தில் போய் இறங்கியதுமே என் நண்பர் வடகிழக்கு மாநிலங்களில் மூத்த நாட்டுப்புறவியல் பேராசிரியர் எனக்காகக் காத்திருப்பதாக அறிந்தேன்.  உடையை மாற்றக்கூட இல்லாமல் நேராக அவருடைய அறைக்கு விரைந்தேன். பேராசிரியர் நிறை போதையில் கையில் ஒரு கோப்பை மதுவோடு தள்ளாடிக்கொண்டிருந்தார். வந்தாயா பார்த்தாயா இந்த புத்தகத்தை இந்த வருடம் 2012இல் வெளிவந்தது என்றொரு குண்டு ஆங்கில புத்தகத்தைத் தூக்கிப்போட்டார். சர்வதேச நாட்டுப்புறவியல் துணைவன். பதிப்பித்தது யார் என்று பார்த்தேன். வைலி ப்ளாக்வெல். நெடுஞ்சாலை கொள்ளைக்காரர்களாயிற்றே கடுமையான விலையாயிருக்குமே என்றேன். நம்மூர் பணத்திற்கு 12,700 ரூபாய்தான் என்றார் பேராசிரியர். இந்தியா கட்டுரையில் உன்னைப் பற்றி ஒரு நீள பத்தி இருக்கிறது. உன் புத்தகங்களுக்கும் கட்டுரைகளுக்கும் 16 குறிப்புகள் புத்தகம் முழுவதும் இருக்கின்றன ஆனால் என்னைப் பற்றி கண்ட கிறுக்கன்களோடு சேர்த்து என் பெயரும் ஒரே ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது என்று கத்திய அவர் மதுக்கோப்பையை முழுவதுமாய் வாயில் கவிழ்த்தார். 

இரவெல்லாம் தொடர்ந்து குடித்திருப்பார் போலும். மறுநாள் காலையில் நானும் அவரும் கருத்தரங்கக்கூடத்திற்கு நடந்து போய் சேர்ந்தபோது அவர் உடல் வலிப்பு வருவதற்கு முந்தைய படிநிலை போல ஆடிக்கொண்டிருந்தது; கைகால்கள் ஒரு பக்கமாய் இழுத்துக்கொண்டிருந்தன. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. அவரையும் என்னையும் உள்ளடக்கி மொத்தம் நான்கு பேர் அந்த பயிற்சிக் கருத்தரங்கில் உரையாற்றுவதாக ஏற்பாடு. ஒருவர் அவர் வீட்டில் ஏதோ துஷ்டி என்று வரவில்லை; மற்றொருவர் ராஞ்சி பல்கலையைச் சேர்ந்தவர் அவருக்கு ஏகப்பட்ட கருத்தரங்க நிர்வாகப் பொறுப்புகள்; இப்போது ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டாரா அத்தனை உரைகளையும் நானே ஆற்ற வேண்டிய பொறுப்பு என் தலையில் விடிந்தது.

அதீத குடியினால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் விதிவிலக்கல்ல மாறாக அவரே விதி; என் தலைமுறைக்கு முந்தைய ஒரு தலைமுறை இந்திய நாட்டுப்புறவியல் பேராசிரியர்களில் முக்கால்வாசிப் பேர் மதுவுக்கு அடிமையாகி சீரழிவுக்கு உள்ளானவர்களே. தமிழ் சிறு பத்திரிக்கை உலகும் அகில இந்திய நாட்டுப்புறவியல் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் உலகும் அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரே வகையானதே ஆகும். வித்தியாசம் என்னவென்றால் பேராசிரியர்களை பத்திரமாக கவனித்துக் கொள்ள அவருடைய மாணவர்கள் இருப்பார்கள் என்பதுதான். 

இந்திய குரு சிஷ்ய பரம்பரையின் மதிப்பீடுகளெல்லாம் முழுமையாக உள்வாங்கப்பட்ட ஒரே இடம் பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சித் துறைகள்தான். ஆராய்ச்சி வழிகாட்டியாக இயங்கும்  பேராசிரியருக்கு ஆராய்ச்சி மாணவர்கள் கொத்தடிமைகளாய் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்பது மரபின் நீட்சி. ஷூவுக்கு பாலிஷ் போடுவது, சாக்சைத் துவைப்பது வீட்டு வேலை செய்வது என்பதிலிருந்து கல்விப்புல கட்டுரைகள் எழுதுவதில் ஒத்தாசை செய்வது என்பது வரை தொண்டூழியங்கள் எண்ணற்றவை. குடித்துவிட்டு கீழே கிடக்கும் பேராசிரியர்களை அவர்கள் அறைகளில் கொண்டு சேர்ப்பது, உணவு ஊட்டி விடுவது, அவிழ்ந்த உடைகளை சரி செய்வது என பல வேலைகளும் குரு சிஷ்ய தொண்டூழியங்களின் பகுதிகளே. ஆய்வேடுகளின் தரத்தினால் அல்ல தொண்டூழியங்களின் சிரத்தையினாலேயே பெரும்பான்மையான ஆய்வுப்பட்டங்கள் பெறப்படுகின்றன. ராஞ்சியில் என் நண்பர்-பேராசிரியரை அவருடைய மாணவர்கள் சிறப்பாக கவனித்துக்கொண்டதை நான் வெகுவாக பாராட்டிப் பேசினேன். கருத்தரங்கு முடிந்தபின் என்னை சந்தித்த அவருடைய மாணவி தலை எழுத்தே என்று செய்கிறோம் சார் என்று குட்டை உடைத்தபோது மனமும் உடலும் வெகுவாக சோர்ந்துவிட்டன. 

வெளி நாட்டிலிருந்து வந்திருக்கும்  விஞ்ஞானி  நண்பர் ஒருவரின் பொருட்டு இன்று ஞாயிறு என் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தேன். பல்வேறு விஞ்ஞான துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் வந்திருந்தனர். உரையாடல் ராஞ்சியில் நடைபெற்ற சம்பவங்களை நோக்கித் திரும்பியது. எனக்கு முந்தைய தலைமுறை நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து போன கதைகளை நான் சொல்லச் சொல்ல இதர விஞ்ஞானம் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் மதுவின் பாதிப்பினால் குடும்பங்களை சொந்தப்பிள்ளைகளை கவனிக்காமல் சீரழிந்தவர்களின் கதைகளை மற்றவர்கள் சொல்ல ஆரம்பித்தனர். ஒரு துறை பாக்கியில்லாமல் எங்கும் மது வியாபித்திருப்பதாகத் தோன்றியது.

இரவு உணவு முடிந்து விருந்தினர் அனைவரும் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டனர். என் சின்ன மகன் தூங்காமல் எனக்காகக் காத்திருந்தான். நேற்று அவனுக்கு கராத்தே ப்ரௌன் பெல்ட் பரீட்சை. நான் ராஞ்சியிலிருந்து திரும்பும் பயணத்தில் இருந்ததால் அவனோடு பரீட்சையை ஒட்டி நடக்கும் கராத்தே டெமான்ஸ்டிரேஷனுக்கு என்னால் செல்ல இயலவில்லை. அதனால் அவன் கோபமாய் இருப்பான் என்று எனக்குத் தெரியும்.   காலையில் இருந்து தூங்கிக் கழித்தாயிற்று அப்புறமாக நண்பர்கள் விருந்து என்று போய்விட்டது. பொம்மூ நீ நேற்று கராத்தே டெமான்ஸ்டிரேஷன் பிரமாதமாகப் பண்ணிணியாமே என்றேன். ஓரிரு நிமிடங்கள் பாராமுகமாய் இருந்தவன் நான் கொஞ்ச கொஞ்ச ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவனும் அவன் அண்ணனுமாய் கராத்தே நிகழ்வு கதைகளை உற்சாகமாகச் சொல்லலாயினர். ஏதோ நல்லூழ்தான் நான் குடி பழகவில்லை அடிமையாகவும் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.

Monday, November 5, 2012

என்ன செய்ய?



நேற்று நள்ளிரவுக்கு மேல் வாசல் அழைப்பு மணி ஒலிப்பது கேட்டது. வாசலில் ரமா(பெயர் மாற்றியிருக்கிறேன்)வின் தந்தை பதற்றத்துடன் நின்றிருந்தார். பெரியவருக்கும் எனக்கும் காலை நடை செல்லும்போது பார்த்து பரஸ்பரம் புன்னகைக்கும் பழக்கம். நான் வசிக்கும் தெருவின் கோடியிலுள்ள சந்தில் சிறு போர்ஷனில் அவரும் அவர் கடைசி மகளும் குடியிருக்கின்றனர். “ரமா இன்னும் வீட்டுக்கு வரல என்ன செய்ரதுனு தெரில ஒங்க வீட்ல லைட் இருந்துச்சு அதான் கூப்டேன்” பெரியவர் பதற்றமாகவே பேசினார். வீட்டிற்குள் அழைத்து மேலும் விபரம் கேட்டேன்.

ரமா தி.நகர் பகுதியிலுள்ள பெரிதும் சிறிதுமில்லாத ஜவுளிக்கடை ஒன்றில் கடந்த இரு மாதங்களாக வேலை பார்க்கிறாள். ஆயத்த உடை பிரிவில் விற்பனையாளர். காலை பத்து மணிக்கு கடைக்குப் போனால் தினமும் இரவு பத்துமணிக்குத்தான் வீட்டிற்கு வருவாள். இன்று மணி பன்னிரெண்டாகியும் வீடு திரும்பவில்லை. அவள்  கைபேசிக்கு அழைப்பு மணி போய்க்கொண்டேயிருக்கிறது. ஜவுளிக்கடை தொலைபேசி எங்கேஜ்ட் ஆகவே இருக்கிறது. என்ன செய்ய? அவர் கொடுத்த எண்களை நானும் ஒரு முறைக்கு இரு முறை சுழற்றினேன். அதே நிலைமைதான். பெரியவருக்கு தொலைபேசியில் பேசமுடியாதது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. போலீசுக்கு புகார் சொல்லும் அளவுக்கு ஏதேனும் விபரீதமா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. தி.நகரில் பெரியவருக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா என்று கேட்டேன். அவர்கள் எல்லோரும் நெல்லூர் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கிறார்களாம். மூத்த மகள்களின் குடும்பங்கள் குண்ட்டூரில்.

ரமாவுக்கு நான் அறிமுகமில்லை. அவள் தொலைபேசி எண்ணையும், அவளுடைய கடை முகவரியையும் வாங்கிக்கொண்டு தி.நகர் போய் நேரில் பார்த்து வரக் கிளம்பினேன். நான் தி.நகர் போக அவர் மகள் இங்கே வந்துவிட்டால்? நீங்கள் இங்கேயே இருந்து பார்த்து ரமா வந்தால் எனக்கும் சொல்லுங்கள் என்றால்  பெரியவருக்கு என்னை அனுப்பிவிட்டுத் தனியாக இருக்க அவருடைய பதற்றம் விடுவதாயில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை. நான் என் மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போது மணி ஒன்றரை ஆகிவிட்டிருந்தது. பெரியவருக்கு நான் தொடர்ந்து தொலைபேசியில் ரன்னிங் கமெண்டரி சொல்வதாய் ஏற்பாடு.

கார் ஓட்டி பல வருடங்களானாலும் ஆபத்துக்கு பாவமில்லை என காரைக் கிளப்ப முயற்சித்தேன். கிளம்புவனா என்றது. பெரியவரின் கண்களில் கண்ணீர் தளும்பிவிட்டது; உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆட்டோ இந்நேரத்தில் கிடைப்பது துர்லபம். டாக்சியைக் கூப்பிட்டேன். வர அரை மணி நேரமாகும் என்றார்கள். காத்திருக்கும் நேரத்தில் மீண்டும் தொலைபேசி எண்களை சுழற்றினோம். பயனில்லை.

ரமா பட்டப்படிப்பு முடிக்கவில்லை. அவளுக்கு மாதம் 6500 ரூபாய் சம்பளம். பிடித்தம்போக 5700 சொச்சம் கையில் தருவார்கள். பிஎஃப், இஎஸ்ஐ. உண்டு.  சனி, ஞாயிறு தவிர்த்த வேறொரு நாளில் வார விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். இப்போது போல தீபாவளி பண்டிகை காலங்களில் வார விடுப்பு கிடையாது.  காலையில் எழுந்து பெரியவருக்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு, மதிய உணவு டப்பா எடுத்துக்கொண்டு காலையில் போனாளென்றால் மாலை ஏழு மணிவாக்கில் பசி வயிற்றைக் கிள்ளும். ஐந்து ரூபாய்க்கு வாங்கும் டைகர் பிஸ்கட் பாக்கெட் மூன்று நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும்.  ரமாவுக்கு ரத்த சோகை. மெலிந்து வெடவெடவென்று இருக்கிறாள். விடுமுறை நாள் முழுக்க பேயடித்தது போல தூங்குவாள். நான் கொடுத்த காப்பியைக் குடித்துக்கொண்டே பெரியவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரவு 2.20க்கு டாக்சி வந்தது. பெரியவரை வீட்டிற்கு வெளியே நாற்காலி போட்டு அமர்த்திவிட்டு கிளம்பினேன். தி.நகரில் ரமா வேலைபார்க்கும் ஜவுளிக்கடை ஷட்டர்களெல்லாம் இறக்கிவிட்டு சாத்தியிருந்தது. பெரிய பூட்டுக்கள் வேறு. என்ன செய்ய?  கடை பூட்டியிருக்கிறது என்று பெரியவருக்கு சொல்லலாமா வேண்டாமா? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்விட வேண்டியதுதானா? டாக்சி டிரைவருக்கும் விஷயம் தெரியும். ஆட்கள் கடைக்குள்ளே இருக்கிறார்களா என்று ஷட்டரை நானும் டிரைவரும் உலுக்கிப் பார்த்தோம். பெரியவர் ரன்னிங் கமெண்டரிக்காக கைபேசியில் அழைத்தார். இருங்கள் கூப்பிடுகிறேன் என்றுவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டேன்.   இப்படித்தான் சார் போன மாசம் என்று ஆரம்பித்த டிரைவரை எதுவும் மேலும் பேச விடாமல் தடுத்தேன். பெரியவரின் பதற்றம் என்னையும் தொற்றிக்கொண்டது. சாலை பெரும்பாலும் வெறிச்சோடியிருந்தது. மீண்டும் கடை எண்ணையும், ரமா எண்ணையும் எதற்கும் இருக்கட்டுமே என்று கடை வாசலில் இருந்தே அழைத்தேன். பலனில்லை. டிரைவர் காரில் போய் உட்கார்ந்துகொண்டார். அவர் கதையை கேட்காத கடுப்பு. மீண்டும் ஷட்டரை தனியாக உலுக்கிப் பார்த்தேன். இரவு காவலாளி கூடவா கிடையாது?


டாக்சியில் ஏறி திரும்ப சைதாப்பேட்டை வரை வந்தாயிற்று. பெரியவரின் கைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. கடை காம்பவுண்ட் முழுக்க சுற்றிப்பார்க்கவில்லை ஒரு வேளை பின்புறம் வாசல் இருந்தால் அதையும் பார்த்துவிட்டல்லவா வந்திருக்கவேண்டும்?! டாக்சியை மீண்டும் கடைக்குத் திருப்புங்கள் என்றேன். ‘நைட்ல டபுள் சார்ஜ் சார்’ முணுமுணுப்போடு டிரைவர் காரைத் திருப்பினார்.

கடைக்குப் பின்பக்கம் பேஸ்மெண்ட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. கதவருகே தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை எழுப்பினேன். புதிதாய் தீபாவளிக்கென்று வந்திருக்கும் ஜவுளியில் விலைப் பட்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்களாம். ரமாவும் உள்ளேதான் இருக்கிறாளாம். அப்பாடா. தீபாவளிக்குத் தீபாவளி இப்படித்தானாம். அதிகாலை நான்கு மணிக்கு கார் சொல்லியிருக்கிறார்களாம் கடை நிர்வாகமே எல்லோரையும் அவரவர் வீடுகளில் விட்டு விடுமாம். பரம சந்தோஷம், ஆனால் ரமாவைப் பார்க்காமல் நகரமாட்டேன் என்றேன். காவலாளி தான் மட்டும் உள்ளே போய் ரமாவையும் அவளுடைய மேலாளரையும் அழைத்துவந்தார்.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த பதற்றம் வெடித்து விட்டது. இப்படியா ஆட்களை வேலை வாங்குவீர்கள், அப்படியே வேலை வாங்கினாலும் முன் கூட்டியே சொல்ல மாட்டீர்களா, ஃபோன் அடித்தால் எடுக்க மாட்டீர்களா- காச்சு மூச்சு என்று கத்துவதற்கு எனக்கா சொல்லித் தரவேண்டும்? கடை மேலாளர் பொதுவாக என்னிடமும் ரமாவிடமும் யார் சார் நீங்க என்றார்; ரமா இவர் யாருன்னு எனக்குத் தெரியாது சார் என்றாள் தீர்மானமாக.

பெரியவரை தொலைபேசியில் அழைத்தேன். பெரியவரின் எண் எங்கேஜ்டாக இருந்தது! ரமாவையே அவள் அப்பாவிடம் பேசிப்பார்க்கச் சொல்லுங்கள் என்றதற்கு பணியாளர்களின்  கைபேசிகளெல்லாம் கடைக்குள்ளே அனுமதிக்க மாட்டோம் எல்லாம் பணியாளர்கள் டைனிங் ஹாலில் உள்ள  பெட்டியில் வைத்து பூட்டிவிடுவோம் என்று காவலாளியும் மேலாளரும் மாறி மாறி சொன்னார்கள். அதனால்தான் என்னாலும் பெரியவராலும் ரமாவைத் தொடர்புகொள்ள முடியவில்லையாம், முடியாதாம்.  நீங்கள் உண்மையிலேயே ரமாவின் அப்பா அனுப்பி வேளச்சேரியிலிருந்து வந்திருக்கலாம் சார் ஆனால் முன்னே பின்னே தெரியாத ஆளோடு எங்கள் லேடி ஸ்டாஃபை அனுப்ப முடியாது என்று மேலாளர் ஒரே போடாய் போட்டார்.

அதிகாலை நாலேகால். பெரியவர் கைபேசி தொடர்ந்து எங்கேஜ்டாக இருந்தது. நான் டாக்சியில் ஏறும்போது கடை ஏற்பாடு செய்திருந்த டாடா சுமோவில் ரமாவும் ஏறுவதை கவனித்தேன். வீட்டு வாசலில் நாற்காலியில் பெரியவர் தூங்கிப் போயிருந்தார். அவரை எழுப்பி ரமா கடை ஏற்பாடு செய்த காரில் வருவதை தெரிவித்தேன். அவர் கடையின் இன்னொரு தொலைபேசி எண்ணை அழைத்திருக்கிறார் அது ஃபேக்ஸ் லைனுக்குப் போயிருக்கிறது. இணைப்பைத் துண்டிக்காமலேயே பெரியவர் கண் அயர்ந்திருக்கிறார். என்ன செய்ய?

டாக்சிக்கு அறு நூற்றுச் சொச்சம் அழுதுவிட்டு, பெரியவரோடு நடந்து அவர் வீட்டு வாசலில் ரமாவுக்காக காத்திருந்தபோது அடுத்த இருபது நிமிடங்களில் ரமா சுமோவில் வந்து இறங்கிவிட்டாள். அப்பாவும் மகளும் தெலுங்கில் உரக்க பேசிக்கொள்கையில் நான் விடைபெற்று வந்துவிட்டேன்.

இன்று காலை எழுந்திருக்க மணி பத்தாகிவிட்டது.  அலுவலகம் வர தாமதமாகும் என்று ஃபோனில் தெரிவித்தேன். நேற்றிரவு நடந்ததெல்லையாம் ஒரு பரபரப்பு வெகுஜன எழுத்தாளன் எப்படியெல்லாம் ஒரு சிறுகதையாகவோ அல்லது ஜவுளிக் கடை பணியாளர்கள் பற்றிய கட்டுரையாகவோ எழுதியிருப்பான் என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பெரியவர் பெயரைக்கூட கேட்டுக் கொள்ளவில்லை இன்னும்.

நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது பெரியவர் வந்து கொடுத்துவிட்டுப்போனார் என்று சிறு கிண்ணத்தைக் காட்டினாள் மனைவி. என்னவென்று பார்த்தேன். ஆந்திரா கோங்கூரா சட்னி. நேற்று இரவு எக்ஸ்டிரா வேலை நான்கு மணி வரை பார்த்ததற்கு ரமாவுக்கு முப்பது ரூபாய் பேட்டாவாம். கோங்கூரா சட்னி சுள்ளென்று உள் நாக்கில் உறைக்க கண்ணில் நீர் கட்டியது.