Showing posts with label வாசகர் கடிதத்திற்கு பதில். Show all posts
Showing posts with label வாசகர் கடிதத்திற்கு பதில். Show all posts

Monday, September 2, 2013

மொழிபெயர்ப்பு நாவல்களுக்கு இலக்கிய உரைகளும் பின்னணித் தகவல்களும்

ஐயா,
என் பெயர் மாணிக்கம். நான் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். திரையுலகத்தில் பலரும் பேசக் கேட்டு 'என் பெயர் சிகப்பு', 'One hundred years of solitude' ஆகிய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்தேன். எனக்கு இந்த நாவல்களைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமமாக இருக்கிறது. மொழிபெயர்ப்பில் கோளாறா எனக்குதான் புரியவில்லையா என்று விளங்கவில்லை. தாங்கள் உதவ முடியுமா?
அன்பு மறவாத
மாணிக்கம்

அன்புள்ள மாணிக்கம்,

"நூறாண்டு தனிமை', 'என் பெயர் சிகப்பு' ஆகிய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் இன்னும் வாசிக்கவில்லை. இந்த நாவல்களை மொழிபெயர்த்த சுகுமாரனும், ஜி.குப்புசாமியும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களாகக் கருதப்படுபவர்கள்.எனவே மொழிபெயர்ப்புகளில் பெரிய கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு என்ன புரியவில்லை என்று சிறிது விளக்கியிருந்தீர்கள் என்றால் உங்கள் சிரமங்கள் என்ன என்று நான் கணித்திருக்க முடியும்.

'நூறாண்டு தனிமை', 'என் பெயர் சிகப்பு' ஆகிய நாவல்களை வெறும் கதைகளாகவே சுவாரஸ்யமாக வாசிக்கலாம் என்றாலும் அந்த நாவல்களுக்கான பின்னணித் தகவல்களை அறிந்திருப்பது நாவல்களை புரிந்துகொள்ள கூடுதலாக உதவக்கூடும். எளிமையான ஆங்கிலத்தில் இந்த நாவல்களுக்கான உரைகளும் பின்னணித்தகவல்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றின் சுட்டிகளைக் கீழே தந்திருக்கிறேன். அவை உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள்.

http://learner.org/courses/worldlit/my-name-is-red/

http://learner.org/courses/worldlit/one-hundred-years-of-solitude/ 

கூடுதலாக இந்த நாவல்களுக்கான உரைகளையும் கேளுங்கள், பின்னணித் தகவல்களைப் படியுங்கள்

http://learner.org/courses/worldlit/things-fall-apart/

http://learner.org/courses/worldlit/the-god-of-small-things/ 


நீங்கள் உங்கள் பெயரை எழுதாமல் சில மின்னஞ்சல்களையும் எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள். பெயரில்லாமல் வரும் கடிதங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை,

அன்புடன்,
எம்.டி.எம்

புத்தகங்களை வாசிக்கக் கேட்க


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

உங்களுக்கு என்னை நினைவிருக்க வாய்ப்பில்லை. நான் உங்களுடைய ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிய உரைகளை போன வருடம் உங்களுடைய மையத்தில்  கேட்டேன். அதன் பிறகு உங்களுடைய வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் ஏன் உங்கள் உரைகளை எல்லாம் கட்டுரை வடிவில் தராமல் இருக்கிறீர்கள்? என்னைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை படித்து புரிந்துகொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. நாடகங்களை வாசிக்கக் கேட்டுக்கொண்டே படித்துப் பார்க்கலாமா என்று உங்களுடைய 'சிறுகதைகளை வாசிக்கக் கேட்க' என்ற குறிப்பினைப் படித்தபோது தோன்றியது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை வாசிக்க அல்லது நிகழ்த்தப்பட்டபோது ஆடியோ பதிவு செய்யப்பட்டதை கேட்க முடியுமா? முன்பு புத்தகங்கள் கொடுத்து உதவியது போல இந்த உதவியினையும் செய்தீர்களென்றால் மிகவும் நன்றியுடையவன் ஆவேன்.

இப்படிக்கு,

பெஞ்சமின்

அன்புள்ள பெஞ்சமின்,

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கடிதத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

உங்களை எனக்கு நினைவு இருக்கிறது என்று பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு சுத்தமாக நினைவில்லை. மன்னிக்கவும். என்னிடம் புத்தகங்களை வாசிக்க வாங்கிப் போய்விட்டு திருப்பித் தராதவர்களை நான் நினைவில் வைத்திருக்கப் பிரயத்தனப்படுவதில்லை.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்றில்லை ஏராளமான இலக்கிம், தத்துவம், சமூகவியல் ஆகிய துறைகள் சார்ந்த மூல நூல்கள் ஆடியோ வடிவத்தில் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சிறிது முயற்சி எடுத்து தேடிப்பார்த்தாலே போதும். கீழே கொடுக்கப்பட்ட இரண்டு தளங்களில் மட்டுமே இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த முக்கியமான நூல்கள் அனைத்தையும் கேட்டுவிடலாம்.

http://www.youtube.com/channel/UCf099SXtegD4kv9-M3GIgnw  

http://librivox.org

உங்களுக்கு என் வாழ்த்துகள்

அன்புடன்,

எம்.டி.எம்




Thursday, August 29, 2013

இந்திய புராணங்களுக்கான என்சைக்ளோபீடியா- வேட்டம் மணி

'பண்பாட்டு தேசியவாதத்தின் அபத்தங்கள்' கட்டுரையைத் தொடர்ந்து பல மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மாணவர்களிடமிருந்து வந்திருக்கின்றன. பொதுவான இந்திய புராணங்களுக்கான reference work இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள். பல இருக்கின்றன; அவற்றில் வேட்டம் மணி தயாரித்த இந்திய புராணங்களுக்கான என்சைக்ளோபீடியா  இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கக் கிடைக்கிறது. விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்ட சுட்டியில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://archive.org/details/puranicencyclopa00maniuoft

வேட்டம் மணியின் உழைப்பு அபாரமானது. தனி நபராக அவர் உருவாக்கிய இந்த  என்சைக்ளோபீடியா தனி நபர்களின் சாதனைக்கு ஒரு உதாரணம். வேட்டம் மணியின் என்சைக்ளோபீடியாவைப் பற்றியும், அவர் தொகுத்திருக்கும் தரவுகளிலிருந்து இந்தியப் புராணங்களை அமைப்பியல் ஆய்வு செய்தும் இரு கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். அவற்றை மேலும் செழுமைப்படுத்தி விரைவில் தமிழில் வெளியிடுகிறேன்.

Thursday, December 13, 2012

நித்ய அனுசந்தான கோவில் திருமொழி

ஶ்ரீராமானுஜரின் சாதி எதிர்ப்புக்கான வரலாற்று ஆதாரங்களை வேறொரு பதிவுக்கு பின்னூட்டங்கள் இட்டிருந்த வெங்கடேசன், குலசேகரன் ஆகியோர் கேட்டிருந்தனர். வேறு சில ஆதாரங்களைக் கொடுத்திருந்த நான் 'உடையவர் உயர்நலம்' என்று தொடங்கும் நித்ய அனுசந்தான கோவில் திருவாய்மொழியைத் தேடிக்கொண்டிருந்தேன். அந்த வீடியோவை எனக்கு அனுப்பித் தந்த நண்பர் பாலாஜி ஶ்ரீனிவாசனுக்கு நன்றி. அந்த வீடியோவை கீழே தருகிறேன். ஶ்ரீராமானுஜரைப் பற்றிய அ.மார்க்ஸின் கட்டுரையை வெங்கடேசன் அனுப்பித்தந்திருந்தார் அதற்கான சுட்டியையும் கீழே தந்திருக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் 'ராமானுஜர்' நாடகமும் மிகவும் முக்கியமானது. நித்ய அனுசந்தானம் 'திராவிட' வேதத்தை புகழ்ந்தும் இனவேறுபாடு இல்லாமல் உடையவராய்  உயரவேண்டும் என்று பிரார்த்திப்பதும் கவனிக்கத்தக்கது.


https://www.youtube.com/watch?v=2sHmISqMM8o

அ.மார்க்ஸின் கட்டுரை http://www.keetru.com/puthiyakaatru/jun06/a_marx.php 


திராவிட வேதா எனும் தளத்தில் நாலாயிர திவ்வியபிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களும் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை , விளக்க உரை, ஆங்கில மொழி பெயர்ப்பு ஆகியவை கொடுக்கப் பட்டுள்ளன. விளக்க உரையாக ஶ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமி அவர்களின் உரை வழங்கப் பட்டிருக்கிறது. பார்க்க http://dravidaveda.org 

Sunday, December 9, 2012

சமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு








வியாச பாரதம் சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாக தமிழில் கும்பகோணம் தமிழ் பண்டிதர் ம.வீ.இராமானுஜாசாரியாரால் முதன் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் அதன் பதிப்புரிமை பெற்று ஶ்ரீமகாபாரத பிரஸ்ஸில் அச்சிட்டு வெளியிட்டார். இந்த மொழி பெயர்ப்பு பதினெட்டு பாகங்களாக, பதினெட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன; 1. ஆதி பர்வம் 2. ஸபா பர்வம் 3. வன பருவம் 4.விராட பருவம் 5. உத்யோக பருவம் 6.பீஷ்ம பர்வம் 7.துரோண பருவம் 8. கர்ண பர்வம் 9. சல்ய பருவம் 10. சாந்தி பருவம் 11. அனுசாஸன பர்வம் 12. ஸ்த்ரீ பர்வம் 13.ஆச்வதிக பர்வம் 14 மௌஸலை பர்வம் 15 சௌப்திக பர்வம் 16. மஹாப்ரஸ்தானிக பர்வம் 17.ஆச்ரமவாஸிக பர்வம் 18. ஸ்வர்க்கா ரோஹண பர்வம். 

இதில் பெரும்பான்மையான பர்வங்களை தமிழில் மொழி பெயர்த்தவர் கும்பகோணம் தி.ஈ.ஶ்ரீநிவாஸாசாரியார். சாந்தி பர்வம் பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளாலும் உத்யோக பர்வம் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரிகளாலும் விராடபருவம் கும்பகோணம் அ.வேங்கடசாசாரியாராலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த பதினெட்டு பர்வங்களும் ஒரு காலத்தில் எங்கள் வீட்டிலிருந்தன. 1980களில் இந்த மொழிபெயர்ப்புகளை முழுமையாக வாசிக்க முனைந்தபோது பதினெட்டு பர்வங்களில் ஒன்றிரெண்டே எனக்குக் கிடைத்தன. 1988 இல் கோணங்கி அத்தனை பர்வங்களையும் எங்கிருந்தோ மொத்தமாக கொண்டுவத்திருந்ததாகச் சொன்னார். கோவில்பட்டிக்கு உடனடியாகக் கிளம்பிப்போய் அவரிடமிருந்து ஏழு பர்வங்களை வாங்கி வந்து ஒளி நகல் எடுத்துவிட்டு அவரிடம் திருப்பிக்கொடுத்தேன். 


ம.வீ.ராமானுஜாசாரியாருக்கு மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பும்சரி பகவத்கீதையின் மொழிபெயர்ப்பும்சரி  மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தது. அவர் 1919இல் வெளிவந்த பீஷ்ம பர்வம் முதல் பதிப்பு முகவுரையில் எழுதுகிறார்:

“ஶ்ரீபகவத் கீதையை மதத்ரய பாஷ்யங்களுடன் மொழிபெயர்த்து வெளியிடுவதாக நிச்சயித்திருந்தேன். பகவத்கீதைக்கு அந்த அந்த மதச்சார்பாக அநேக மொழிபெயர்ப்புகளிருந்தாலும் வேறுசில காரணங்களாலும் அதனை இப்போது செய்யாமல் நிறுத்திக்கொண்டேன். கீதையின் மொழிபெயர்ப்பு மகாபாரதத்தின் மற்ற பகுதிகளைப் போலவே ஒரு மதச் சார்பாக இராமல் பொதுவாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். ஆயினும் வேதாந்த பாகங்கள் வரும்பொழுது அங்ஙனம் செய்தல் சாத்தியப்படவில்லை. மொழிபெயர்ப்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களோ அந்த மதத்தின் சார்பாகத்தான் மொழிபெயர்ப்பு அமைகிறது. இதனை, பகவத்கீதையில் மாத்திரமேயின்றி மற்ற பருவங்களிலும் வேதாந்தப் பகுதிகள் வருமிடந்தோறும் காணலாம். இந்த மாதிரியான இடங்களில் தங்கள் மதக் கொள்கைக்கு முரணாயிருப்பதாக நினைப்பவர்கள் தங்கள் சமய நூல்களில் வல்ல பண்டிதர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க.”


இந்த மொழிபெயர்ப்புகளின் உரிமை பெற்றிருந்த கும்பகோணம் சிவராமகிருஷ்ணனின் பேரன் எஸ்.வெங்கட்ரமணனை 2002 இல் ஒரு முறை சந்தித்தேன். வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்புகளை திரும்ப அச்சில் கொண்டுவர பணமில்லாமல் மிகுந்த சிரமத்திற்கிடையே ஒவ்வொரு பர்வமாக அச்சிட்டு வெளியிடுவதாகச் சொன்னார். 2002இல் ஆரம்பித்து 2007 வரை வருடம் ஒன்று இரண்டு என ஒரு வழியாக பதினெட்டு பர்வங்களையும் தன் விடா முயற்சியால் வெங்கட்ரமணன்  மீண்டும் பதிப்பித்துவிட்டார். 

‘தமிழ் ஹிந்து’ தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் என்னுடைய ‘தீண்டாமையைப் பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்’ கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதியிருப்பதை இன்று படித்தேன். அவருடைய எதிர்வினையில் அவர் மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்கோள் காட்டுவதை படித்தபோது அவருக்கு தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்திருப்பது தெரியாதோ என்று சந்தேகம் எழுந்தது. அதற்கு ஏற்றார் போல அவர் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட அன்பர் ஒருவர் அவரிடம் வியாச பாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடாதோ என்று கேட்டிருப்பதையும் படித்தேன். அதனால் அரவிந்தன் நீலகண்டனுக்கு பதில் எழுதுவதற்கு முன் ஏற்கனவே வெளிவந்துள்ள இந்த பதினெட்டு பாகங்களிலான மொழிபெயர்ப்பைப் பற்றி எழுதிவிடுவோமென்று இந்தப் பதிவை இடுகிறேன். 


வியாச பாரதம் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்க: 

எஸ்.வெங்கட்ரமணன்
ஶ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ்
பிளாட் எண் 78, செல்வராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் II
சர்வே எண் 46/18 எண் 4
ஊரப்பாக்கம் கிராமம் 
செங்கல்பட்டு தாலுகா
செங்கை எம்ஜியார் மாவட்டம்

அல்லது 

ஶ்ரீபால கணபதி பிரிண்டர்ஸ்
(பழைய பெயர் ஶ்ரீவேதவிநாயகா பிரிண்டர்ஸ்
பழைய எண் 9 புது எண் 20/1
ஹனுமார் கோவில் தெரு 
மேற்கு மாம்பலம்
சென்னை- 600033
தொலைபேசி: 4745505

Sunday, January 22, 2012

‘அநாதையின் காலம்’- அறிவிப்பு




விகடதுன்பங்கள் இடுகையைத் தொடர்ந்து ‘அநாதையின் காலம்’ எப்போது வெளிவரும் என்று கேட்டு எழுதிய நண்பர்களுக்கு நன்றி.
‘அநாதையின் காலம்’ கிட்டத்தட்ட 120 பக்கங்கள் வரக்கூடிய ஒரே நீள்கவிதை; கவிதைகளின் தொகுதி அல்ல. முழுமையாகத் திருத்தியபின் பக்கங்கள் குறையலாமே தவிர கூடாது. ‘நீர் அளைதல்’ வெளியானது போலவே மின் பதிப்பாக தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வெளியிட உத்தேசித்திருக்கிறேன். ‘நீர் அளைதல்’ தொகுதியை epub வடிவத்தில் வெளியிட இயலவில்லை. Epub வடிவத்தில் மாற்றும்போது தமிழ் எழுத்துரு சிதைந்து போனது. இப்போது அதை சரி செய்துவிட்டேன். ‘அநாதையின் காலம்’ pdf ஆகவும் கைபேசி, ஐபேட் போன்ற கருவிகளில் வாசிக்கத் தகுந்த விதத்தில் epub ஆகவும் வெளிவரும். விலைக்கு விற்பதாக இல்லை.

Saturday, January 21, 2012

விகடதுன்பங்கள்



விகடதுன்பங்களை ஈர்ப்பது என் ஜாதக விசேஷம். அதிலும் என் கவிதைகளைத் தொகுத்து மின் பதிப்பாய் வெளியிட்டதிலிருந்து என் ஜாதக விசேஷம் முழுமையாய் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது போலும்; என் மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிகிறது. 
மாகானுபாவர் சித்திரக்குள்ளன் தினசரி இருபதிலிருந்து முப்பது பக்கக் கட்டுரைகளால் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். யார் பெற்ற பிள்ளையோ வார்த்தைகள் சுலபமாகக் கொட்டுகின்றன; ஆனால் அவர் விமர்சிப்பதாகச் சொல்கிற என் கவிதைகளுக்கும் அவர் எழுதுவதற்கும் எந்த சம்பந்தத்தையும் காணோம். நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது முதலாகவே ஒவ்வொரு பதிவுக்கும் சித்திரக்குள்ளனுக்கு சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. பின்னே இப்பொழுது தொகுதியே கிடைத்துவிட்டது. சும்மா புகுந்து விளையாடுகிறார்.
சித்திரக்குள்ளன் ஜெயமோகனின் கையாளோ என்று பாரதி விவாதத்தின்போது சந்தேகப்பட்டேன். அப்படி எதுவும் குழு விசுவாசி போலவும் இப்போது தெரியவில்லை. ஒரு கும்பலே சித்திரக்குள்ளன் என்ற பெயருக்குள் ஒளிந்திருப்பதாக எனக்கொரு சம்சயம். சொல்லாடலா சொற்களனா எது சரியான கலைச்சொல் என்பது போன்ற கலைச்சொல்லாக்கங்கள் குறித்த கவலைகள் அவரது கடிதங்களின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கின்றன என்றால் நான் எப்போதோ ஆற்றிய உரைகள், உதிர்த்த முத்துக்கள், எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் என என்னுடைய மொத்த இறந்த காலமும் சித்திரமொன்றில் விகார குள்ளனாய் உருவெடுத்துபோல ஏகத்திற்கும் என் வார்த்தைகளே எனக்கு மேற்கோள்களாய் காட்டப்படுகின்றன. ஏச்சை விட மிகையான பாராட்டுகள் மனதை அதிகம் கூசச் செய்கின்றன; எங்கேயாவது போய் தலையை மணலில் புதைத்துக் கொள்ளலாமா என்றிருக்கிறது.
வழமையாக நவீன கவிதை என்று தமிழில் அறியப்பட்டதிலிருந்து வேறுபட்டதாக என் கவிதைகள் இருப்பதாகவும் அவை சாதாரண தினசரி அனுபவத்திற்கும் ஒரு வகையான அநாதைத் தன்மைக்கும் இடையில் ஊடாடுவதாகவும் எழுதியிருக்கும் கோலி சோடா வெர்ஷன் 2 க்கு நன்றி. தொகுதியாக வாசிக்கும்போது ஒரு மனிதனின் அந்தரங்க கவியுலகு உருக்கொள்வதை அவதானிக்க முடிவதாக பெயரிலி எழுதியிருக்கிறார். கோலி சோடா வெர்ஷன் 2-க்கும் பெயரிலிக்கும் மேற்கோள் காட்டும்போது நான் மகிழ்ச்சியடையும் விதத்தில் வசதியாக நல்ல பெயர்கள் சீக்கிரமே கைகூடி வரட்டும். கோலி சோடா வெர்ஷன் 2க்கு  என் கவிதைகளைப் பற்றி இந்த அபிப்பிராயமாம் அந்த அபிப்பிராயமாம் என்று எழுதினால் நன்றாகவா இருக்கிறது!
மு கதைகளில் வரும் மு நான்தான், முதான் ‘பே’  என்ற முன்அனுமானங்களோடும் முன் தீர்மானங்களோடும் கவிதைகளுக்கு விளக்கம் கேட்பவர்களுக்கு என்ன பதில் எழுத? நான் முவுமில்லை பேயுமில்லை என்றால் நம்பப்போவதில்லையாம் அவர்கள். இந்த வன்முறையிலிருந்து எப்போது எப்படி தப்பிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்தால் என் எழுத்து, என் வாழ்க்கை, என் முகம், என் அனுபவங்கள் அனைத்தையும் மறுத்து எனக்கென அவர்கள் வழங்கும் அடையாளங்களும் அனுபவங்களும்தான் என்னுடயவை என்று கூச்சலிடுவார்கள் போல. என்னைப் பலராய் நினைத்துருகும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பிறர் அனுபவங்களைத் தங்களால் மட்டுமே தீர்மானிக்கமுடியும் என்றும் நம்புவர்களுக்கும் இலக்கியமே லபிக்கமால் போகக்கடவதாக. 
என் கவிதைகளை ஆங்கிலத்திலும் ஃபிரெஞ்சிலும் மொழிபெயர்ப்பவர்கள் கிட்டத்தட்ட தங்கள் வேலைகளை முடித்துவிட்டார்கள். ஆனால் கடந்த மாதங்களில் அவர்கள் என்னைப் படுத்திய பாட்டினை சொல்லி மாளாது. அக்கு அக்காய் கவிதைகளைப் பிரித்து இந்தச் சொல்லுக்கு அந்தப் பொருள்தானா, அந்தச் சொல்லுக்கு இந்தப்பொருள்தானா என்று நச்சரித்ததில் கந்த சஷ்டி கவசம் படிக்காமல், நெற்றி நிறைய விபூதி அள்ளிப் பூசாமல், தூங்கச் செல்வதில்லை என்றாகிவிட்டது. மொழிபெயர்ப்புத் திட்டங்களில் நான் பங்கேற்க மாட்டேன் என வீரசபதம் எடுத்தபின்னர்தான் என் மின்னஞ்சல் பெட்டியில் பதற்றம் குறைந்தது.
ரொமாண்டிசிசமே இல்லாமல், அடர்த்தியான பிரயோகங்களே இல்லாமல் இவையெல்லாம் என்ன கவிதைகள் என்று கர்ம சிரத்தையாய் கேட்டு வந்திருக்கும் கடிதங்களுக்கும் குறைவில்லை. அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். 
என் ஆப்பிள் கணிணியிலிருந்து வலைத்தளத்திற்கு கவிதைகளை படியெடுக்கும்போது சில தமிழ் எழுத்துருக்கள் சிதைவதாயிருந்தன. இதை சரி செய்ய நான் அணுகிய நண்பர் சதீஷ்பாலாவுக்கு என் கவிதைகள் பிடித்துப்போய்விடவே என் தளத்தையும் தன் ஓய்வு நேரத்தில் இலவசமாக நிர்வகிக்கிறார். அவர் கொடுத்த புள்ளிவிபரத்தின்படி முந்தா நாள் வரை 2088 தடவைகள் என் கவிதைத் தொகுதி தரவிறக்கப்பட்டுள்ளதாம். முப்பதிலிருந்து ஐம்பது ரூபாய் என விலை வைத்து விற்கலாம் என்று இப்போது விடாமல் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார். அமேசான், ஐபுக்ஸ் என்றெல்லாம் கூட விற்கலாமாம். பதிப்பகங்களின் துணை வேண்டாமல் தனி ஆளாகவே பேபால் கணக்கு தொடங்கி செய்யலாம் என்கிறார். என் தொழில் கவிதை என்று அறிவித்தவர்களெல்லாம் வயிற்றுப்பாட்டுக்குக் கவலையில்லாமல் வாழ்வதான கற்பிதச் சித்திரம் சதீஷ்பாலாவின் குறுஞ்செய்திகளில் கூடிக்கூடி கலைகிறது.  
விகடதுன்பங்களையும் மீறி அடுத்து ‘அநாதையின் காலம்’ என்ற என் நீள்கவிதையை மின்பதிப்பாய் வெளியிட யோசனை.

Thursday, November 17, 2011

யானை பற்றி அல்ல யானை




கோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம்


கல்லும் சொல்லும்
கவிதை
உடையானை
அறிந்தானை
விடுத்தானை
எடுத்தானை
கல் யானை





----------------------------------------------------------------------------------------------------------
*கம்பனின் சரஸ்வதி அந்தாதி: “அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி”










Sunday, October 16, 2011

சமையல் குறிப்புகள் எழுதுவீர்களா?



அன்புள்ள எம்.டி.எம்,

உங்கள் சனிப்பெயர்ச்சி பலன்களையும் அந்தப் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் கண்டு அகமகிழ்ந்தேன். நீங்கள் கைரேகை, நாடி சோதிடம் இவையும் பார்ப்பது உண்டா? சமையல் குறிப்புகளும் எழுதுவீர்களா?

அன்புடன்,

சித்திரக்குள்ளன்


அன்புள்ள சித்திரக்குள்ளன்,

எனது ஞாயிறு காலையை உங்கள் கடிதம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்கியது. கைரேகையும் பார்ப்பேன். ஆனால் அது இளம் பெண்களுக்கு மட்டும்தான். அதுவும் பௌர்ணமி இரவில் நிலவொளியில் திறந்தவெளியில் மட்டுமே இளம் பெண்களுக்கு கைரேகை பார்ப்பேன். அப்படிப் பார்க்கையில்தான் முழுப்பலன்கள் கைகூடுகின்றன என்பது என் அனுபவம். நாடி ஜோதிடத்திற்கு வேண்டிய ஓலைச்சுவடிகள் என்னிடத்தில் இல்லை. அகத்தியர் நாடி, அனுமார் நாடி, போகர் நாடி என்று ஏதாவது கிடைத்தால் கொண்டு வாருங்கள் நான் படித்துச் சொல்கிறேன். ஒலைச்சுவடிகள் படிப்பதில் நான் டிப்ளமா வாங்கியிருக்கிறேனாக்கும்.

சமையல் குறிப்புகள் எழுதவேண்டும் என்று எனக்கு ஒரு கள்ள ஆசையிருந்துகொண்டேயிருக்கிறது. அதை எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லை. என்னுடைய நாட்டுக்கோழி பிரியாணி நாடகத்தைப் படித்திருக்கிறீர்களா என்ன? இப்போது இதை எழுதுவதால் றியாஸ் குரானா கவிதைகளுக்கு விமர்சனம் எழுதலாம் என்ற என் திட்டம் என்னுடைய நாவலை மெய்ப்பு பார்த்து இந்தத் தளத்தில் வெளியிடலாமென்ற தொடர் திட்டம் எல்லாம் தள்ளிப்போகிறது. என்றாலும் கள்ள ஆசைகளுக்குதானே நாம் முதலிடம் தரவேண்டும்? கற்பினும் களவு நன்று என்றுதானே இறையனார் அகப்பொருளுரை சொல்கிறது?

சமையல் குறிப்புகள் எழுதும் கள்ள ஆசை லாரா எஸ்கிவெலின் ‘Like Water for chocolate’ என்ற மெக்சிக நாவலை வாசித்தபோது ஏற்பட்டது என்றுதான் நினைக்கிறேன். நாவல் முழுவதும் சமையல் குறிப்புகளாலேயே எழுதப்பட்டது. அவரவர்களின் படைப்பூக்கமும் திறனும் எங்கே இருக்கிறதோ அதை மதிப்பதுதானே பண்பாடும் இலக்கியமும்? நாவலின் கதாநாயகி டிடா காதல் உணர்ச்சி அவளைக் காட்டாற்று வெள்ளம் போல அலைக்கழிக்கும்போது ரோஜா இதழ்களில் தோய்ந்த குயில் கறி செய்கிறாள். அந்த குயில் கறியை சாப்பிடும் டிடாவின் சகோதரி ஜெர்ட்ருசிக்கு காம வெறி ஏறுகிறது. அடக்கவியலா வெறி என்பதினால் செய்வதறியாது புர ட்சிகரராணுவ வீரனொருவனை அழைக்க அவன் அவளைத் தான் பயணிக்கும் குதிரையின் மேல் ஏற்றிக்கொள்கிறான். ஓடும் குதிரையின் மேலேயே அவர்கள் உன்மத்த உடலுறவு கொள்கிறார்கள். பிறகு அந்த ராணுவ வீரன் அவளை பரத்தையர் விடுதியில் சேர்த்துவிட்டுப் போய்விடுகிறான். குடும்பமும் அவளை விலக்கிவைத்துவிடுகிறது. ‘Like Water for chocolate’  படமாகவும் வந்துள்ளது. அந்தப்படத்தில் ஓடும் குதிரை மேல் உடலுறவுக் காட்சி உலக சினிமாவில் உயர்கவித்துவ பாலியல் காட்சிகளில் ஒன்றாகும். இத்தனைக்கும் நாவலின் மையம் ஒன்றும் இந்த நிகழ்வு இல்லை.

Like Water for chocolate

வாஸ்கோ போப்பாவின் காதல் செய்வதற்கேற்ற நூறு இடங்கள்  என்ற பட்டியல் கவிதையில் ஓடும் குதிரையின் முதுகு இல்லாதது பற்றி எனக்கு உள்ள புகார் ஏன் என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே. செர்பிய நாட்டுக்கவிக்கு குதிரையின் முதுகின் உபயோகம் பற்றிக்கூட கற்பனை செய்யத்தெரியாவிட்டால் அவன் என்ன மண்ணுக்கு கவியாய் இருக்கிறான்? போப்பாவை நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய hit list க்கு நகர்த்தியதும் இப்படித்தான். ஒரு வேளை போப்பா அந்தக் கவிதையை எழுதவில்லையோ. அப்படியே போப்பா அந்தக் கவிதையை எழுதியிருக்காவிட்டாலும் அவரை hit list -இலிருந்து தூக்கிவிட முடியுமா? ஒரு தடவை ஒரு பட்டியலில் சேர்த்தாயிற்றென்றால் சேர்த்தது சேர்த்ததுதான். நான் என்ன க.நா.சு.வா சும்மா சும்மா பட்டியலில் பெயர்களை காரணமெதுவும் சொல்லாமல் மாற்றிக்கொண்டிருக்க?

நான் தான் குதிரைக்கவிதை எழுத திட்டம் வைத்திருந்தேனோ? எம்.எஃப். ஹுசைனின் குதிரையைப் பார்த்து குதிரை ஓவியம் கூட ஒன்று தீட்டியிருக்கிறேன். சென்னை மெரீனா கடற்கரையிலும், கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகேயும் குதிரைகளை ஏக்கத்துடன் பார்த்திருக்கிறேன். இப்படியாகவே அந்த வெண் புரவி என் கவிதைக்குள் நுழைந்ததாகவும் நினைக்கிறேன்.

சிறு கண்ணாடி பொம்மைக் குதிரைகள், சுடு மண் குதிரைகள், கணிணித் திரைக் குதிரைகள் என ஏகப்பட்ட குதிரைகளால் நிரம்பியிருக்கிறது என் சுற்றுப்புறம். அகவெளியிலோ பல குதிரைகள் எப்போதுமே நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் குழம்பொலிகளை நீங்கள் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறீர்கள்?

ஆசையை மறுத்து ஆன்மீகச் சப்ளாக்கட்டையுடன் பின் எப்படி இலக்கியமோ சமையலோ படைக்கமுடியும் சொல்லுங்கள்? இலக்கியம் படைக்கிறேனோ இல்லையோ சமையல் குறிப்புகள் கண்டிப்பாய் எழுதுவேன்.

பின் குறிப்பு:
வேறு வண்ண வார்த்தைகள் சுட்டிகள் என்று சொல்லவும் வேண்டுமோ?