Thursday, April 30, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 18- லாரா எஸ்குயிவெல் (Laura Esquivel) Like Water for Chocolate: A novel in monthly instalments with recipes, romances and home remedies



    பெண்களின் வரலாறு சமையலறை, உணவு ஆகியவற்றின் மூலமாக சொல்லப்படுகிறது என்று பேட்டியளித்த லாரா எஸ்குயிவெல்லின் நாவல் “Like water for chocolate” மெக்சிகோ புரட்சியினைப் பின்புலமாகக் கொண்டு ஒரு குடும்பத்தின் கதையை சொல்கிறது. “Like water for chocolate” பன்னிரெண்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது அவை ஒவ்வொன்றும் மாதங்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. முதல்  அத்தியாயம் ஜனவரி. ஒவ்வொரு அத்தியாயமும் மெக்சிக உணவுப் பதார்த்தம் ஒன்றை செய்வதற்கான சமையல் குறிப்புடன் தொடங்குகிறது. தேவையான பொருட்களின் பட்டியலைத் தொடர்ந்து உணவு பதார்த்தத்தை எப்படி தாயாரிப்பது என்று விளக்கும்போது  எஸ்குயிவெல் அதை கதை மாந்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களோடு இணைத்துவிடுகிறார். முதல் அத்தியாயம் ஜனவரி Christmas rolls செய்வதற்கான சமையல் குறிப்புடன் தொடங்குகிறது:

Christmas Rolls
Ingredients
1 can of sardines
1/2 Chorizo sausage
1 onion
i can of chiles serranos
10 hard rolls

Preparation

Take care to chop onion fine. To keep from crying when you chop it (which is so annoying) I suggest you place a little bit on your head. The trouble with crying over an onion is that once the chopping gets you started and the tears begin to well up, the next thing you know you jsut cant stop. I just do’t know whether that’s ever happened to you but I have to confess it’s happened to me many times. Māmā used to say it was because I was especially so sensitive to onions like my great aunt, Tina.

    நாவலின் கதை மெக்சிகோவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள எல்லைப் பிரதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் நடைபெறுகிறது. கதையின் நாயகியான டிடாவுக்கு நாவல் ஆரம்பிக்கும்போது 15 வயது. அவள் தன் தாய் எலெனா, சகோதரிகள் ஜெர்ட்ரூடிஸ், ரோசரா ஆகியோருடன் பண்ணையில் வசித்து வருகிறாள். டிடா பக்கத்து பண்ணையில் வசிக்கும் பெட்ரோவின் மேல் காதல் வசப்படுகிறாள். மெக்சிகோவின் மரபுப்படி வீட்டின் கடைசி மகள் தாய் தந்தையரை கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறபடியால்  டிடா,  பெட்ரோ திருமணத்திற்கு தாய் எலெனா அனுமதி தர மறுக்கிறாள். வேண்டுமென்றால்  பெட்ரோ தன்னுடைய இன்னொரு மகள் ரோசராவை மணம் புரிந்துகொள்ளலாம் என்று எலெனா சொல்ல  பெட்ரோ டிடாவின் அருகாமையிலேயே ரோசராவை மணம்புரிந்துகொண்டாவது இருக்கலாமே என்ற எண்ணத்தில் அவளை மணந்துகொள்கிறான். டிடாவுக்கும்  பெட்ரோவுக்குமான காதல் வெளிச் சொல்லப்படாததாக ஆனால் பண்ணை முழுக்க அதன் கொதிநிலையில் மறைந்திருக்கிறது. டிடா தன் உணர்ச்சிகளை  சமையலில் மட்டுமே வெளிப்படுத்துவளாக இருக்கிறாள். “Like water for chocolate” என்பதே சாக்லேட் பானத்திற்கு பதிலாக கொதிக்கும் வெந்நீரை தருவதா என்ற ஸ்பானிஷ் பேச்சு வழக்கினை குறிப்பதாகும்.

    லாரா எஸ்குயிவெல்லின் நாவல் மெக்சிகோவின் வெகுஜன பத்திரிக்கையில் வெளிவந்தபோது இலக்கிய நாவலாக அறியப்படவில்லை. காதலையும் அது சார்ந்த உணர்ச்சிகளையும் வெகு ஜன தளத்தில் எடுத்தியம்பும் பாப்புலர் நாவலாகவே கருதப்பட்டது. ஆனால் சில இலக்கியப் பிரதிகள் இலக்கியமாக கண்டடையப்படுவதற்கு வருடங்கள் தேவைப்படுகின்றது சில சமயங்களில் மொழிபெயர்ப்புகளும் உதவுகின்றன. Like water for chocolate  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர்  திரைப்படமாகவும் புகழ்பெற்ற இந்த நாவல் அது சொல்லப்பட்ட முறைகளினால் மட்டுமல்லாமல் அதன் உள்ளார்ந்த கலைப்பார்வைக்காகவும் சிறந்த இலக்கியமாக விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. கார்லோஸ் ஃபுயெண்டெஸின் Death of Artemio Cruz மெக்சிக புரட்சியின் வரலாற்றினை ஆண்களை மையப்படுத்தி சொல்லியதென்றால் எஸ்குயிவெல்லின் நாவல் அதே மெக்சிக புரட்சியின் வரலாற்றினை பெண்களின் கதை வழி சொல்கிறது.

    மரபுகள் ஒரு சமூகத்தின் சரித்திரத்தில் வன்முறையான இறுக்கத்தை உண்டாக்கக்கூடும். நாவலில் டிடாவின் தாய் எலெனா அம்மாதிரியான மரபின் வன்முறைக்கு குறியீடாகிறாள். தாய் எலெனா இறந்த பிறகும் கூட டிடாவை வாழவிடுவதில்லை. அவள் பேயாக வந்து டிடாவை அலைக்கழிக்கிறாள். நாவலின் இறுதிப் பகுதியில் எலெனாவின் ஆவியோடு பேசிக் கொண்டிருக்கும் டிடா ஒரு கட்டத்தில் எலெனா உருவாக்கும் மன இறுக்கத்தின் வன்முறை தாளமுடியாமல் பண்ணையை தீயிட்டு கொளுத்திவிடுகிறாள். டிடாவின் சமையல் குறிப்புகள் அடங்கிய நோட்டுப்புத்தகம் மட்டும் கடைசியில் எஞ்சுகிறது.

    நாவலில் வரும் பெண்கள் அனைவருமே தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். டிடா, ஒரு முறை  பெட்ரோவை நிணைத்துக்கொண்டே காம உணர்ச்சிகள் மேலிட்டவளாய் ரோஜா இதழ்களில் வெந்த காடைக்கறி செய்கிறாள். அதை சாப்பிடும் அவள் சகோதரி ஜெர்ட்ரூடிஸுன் காம உணர்ச்சிகள் வெகுவாகத் தூண்டப்படுகின்றன. ஜெர்ட்ரூடிஸ் அவளுடைய காதலிக்கும் புரட்சிகரப்படையின் சிப்பாய் ஒருவனுடன் வீட்டை விடு ஓடிப்போகிறாள். அவர்கள் ஓடும் குதிரையின் மேலேயே உடலுறவு கொள்கிறார்கள். Like water for chocolate திரைப்படத்தில் ஓடும் குதிரைமேல் ஜெர்ட்ரூடிஸும் அவள் காதலனும் கொள்ளும் உறவுக்காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்சிகர சிப்பாய் காதலன் ஜெர்ட்ரூடிஸை ஒரு விபச்சார விடுதியில் சேர்த்துவிட்டு காணாமல் போகிறான். பல பல வருடங்களுக்குப் பின் வீடு திரும்பும் ஜெர்ட்ரூடிஸை எலெனா ஏற்றுக்கொள்வதில்லை. அவள் ஊரினாலும் குடும்பத்தினாலும் ஒதுக்கப்பட்டவளாக வாழ்கிறாள். ஒரு தேசத்தின் வரலாற்று நிகழ்வுகள் தனி மனித வாழ்க்கையில் எப்படியெல்லாம் குறுக்கீடுகளை நிகழத்துகின்றன என்றும் Like Water for chocolate ஐ வாசிக்கலாம்.

    மெக்சிகோ நிலப்பகுதியின் வெப்பமும், அதன் உணவின் காரமும், மக்களின் அதீத உணர்ச்சிகளும் நிறைந்த நாவல் Like water for chocolate. மெக்சிகோவின் காதல் பற்றிய அதிக கவனக்குவிப்பையும் அதன் ரொமாண்டிசிச மரபினையும் வெளிப்படுத்தும் பாப்புலர் நாவல் இது என்று சில விமர்சகர்கள் லாரா எஸ்குயிவெல்லின் நாவலை விமர்சிக்காமலும் இல்லை.

    ஆனால் ரொமாண்டிசிசம் முழுமையாக செத்துவிட்டால் கவிதையே எழுதமுடியாது, கற்பனாவாதம் கண்டிப்பாக இலக்கியத்திற்கும், கவிதைக்கும் தேவை என்று லாரா எஸ்கியுவெல்லின் சக மெக்சிகரான ஆக்டேவியா பாஸ் வாதிடவில்லையா, என்ன? 


 http://www.amazon.com/Like-Water-Chocolate-Laura-Esquivel/dp/0739334190







Wednesday, April 29, 2015

The wholeness of a water drop | A tribute to Jayakanthan published in Frontline



D. Jayakanthan (1934-2015) captivated the Tamil reading public with an outpouring of literary works that explored the societal options available for a historical individual to flourish and bloom into fullness and achieve freedom.



Please read the article in the link given below:

http://www.frontline.in/other/obituary/the-wholeness-of-a-water-drop/article7150600.ece

Tuesday, April 28, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 17- ரொனால்ட் சுகெனிக் (Ronald Sukenick) 98.6


   



 “உலகம் ஒரு நிமிடத்திலிருந்து அடுத்த நிமிடத்தில் தூய கண்டுபிடிப்பாகிவிடும்” என்று ரொனால்ட் சுகெனெக்கின் ஒரு கதாபாத்திரம் “Out” என்ற நாவலில் சொல்வது சுகேனிக்கின் படைப்புலகத்திற்கான திறவுகோல். ரோலன் பார்த் ஆசிரியனின் இறப்பை உலகிற்கு அறிவித்தார் என்றால் நாவலின் இறப்பை உலகிற்கு அறிவித்த அமெரிக்க நாவலாசிரியர் ரொனால்ட் சுகெனிக். அரிஸ்டாட்டிலிய நாடகீயக் கதை வடிவம் உணர்ச்சி சுரண்டலுக்கு மட்டுமல்ல கற்பனையின் எல்லையையும் குறுக்குகிறது என வாதிட்ட சுகெனிக் கதைக்களன், கதையின் வளர்ச்சி அது உச்சகட்டத்தை கதாநாயகனின் செயல்களின் மூலம் நகர்வது ஆகிய கதைக்கூறுகள் அனைத்திற்கும் பதிலிகள் கண்டுபிடித்தார். யதார்த்தம், காலம், ஆளுமை என்று எதுவுமே இல்லை என்று அறுதியிட்ட சுகெனெக்கின் புனைவுலகம் முழுமையை நோக்கி பூர்த்தி செய்ய நகராத துண்டுகளால் ஆனது. சுகெனெக்கின் நாவல்கள் வெகு ஜன வாசிப்பை இன்றளவும் எட்டவில்லை ஆனால் அவருடைய தீவிர வாசகர்கள் சுகெனிக்கின் நாவல்களையே உலகில் தலை சிறந்த நாவல்களாகக் கொண்டாடுகிறார்கள். என்னுடைய கதை சொல்லல்களில் மிக ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தியவர் சுகெனிக். என்னுடைய ‘மர்ம நாவல்: அறிவில் எல்லையைத் தேடிச் சென்ற மு பைத்தியமாகி காணாமல் போனதும் அதற்காக விசனப்பட்டதும்’ என்ற கொலாஜ் சிறுகதை சுகனெக்கின் “98.6” நாவலை 1988 இல் வாசித்த பாதிப்பில் எழுதியது. கடந்த பத்தாண்டுகளில் நான் பல முறை 98.6 நாவலை பல முறை நான் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தொடர்பற்ற வாக்கியங்கள் மீண்டும்  மீண்டும் ஏதோ ஒரு அர்த்த முழுமையை நோக்கி நகர்வதை ‘மர்ம நாவல்’ சிறுகதையை எழுதிப்பார்த்து எப்படி நான் புரிந்துகொண்டேனோ, அது போலவே “98.6” வாசக மனதில் ஒரு முழுமையான கதையாடலை நோக்கி நகர்வதை  தவிர்க்க முடிவதில்லை என்பதையும் உணர்ந்தேன். கதையாடலின் முழுமை மனித மனத்தின் அடிப்படை தேவைகளில் ஒன்று; சிதறல்களை சிதறல்களாகவே வைத்திருப்பது மனித மனத்தின் முடிச்சுகளை அவிழ்த்து சுதந்திரத்தை தரிசிக்க வைப்பதாகும். அதை 98.6 நாவலில் சுகேனிக் எழுதிக்காட்டும்போது (முழுமையை தவிர்க்க இயலாமல்) தோல்வியடைகிறார். ஆனால் என்ன மகத்தான தோல்வி அது!

    1975 ஆம் ஆண்டு வெளிவந்த “98.6” நாவல் 1960களில் அமெரிக்காவில் எழுந்த ஹிப்பி இயக்கங்களின், எதிர் கலாச்சார போக்குகளின் தோல்வியினைச் சந்தித்த ஒரு குழுவினரின் கதையைச் சொல்கிறது.  மூன்று பாகங்களைக்கொண்ட நாவலில் முதல் பாகம் ஃப்ராங்கென்ஸ்டீன், இரண்டாம் பாகம் ஃப்ராங்கென்ஸ்டீனின் குழந்தைகள், மூன்றாம் பாகம் பாலஸ்தீனம் என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன. மேரி ஷெல்லி எழுதிய ஃப்ராங்கென்ஸ்டீன் நாவலின் மைய கதாபாத்திரம் மனிதனால் உருவாக்கப்பட்டு மனிதனையே அழிக்கிற அரக்கத்தனங்களுக்கான உருவகமாக மேற்கத்திய இலக்கியத்தில் சொல்லாட்சியும் கருத்தும் பெற்றுவிட்ட கதாபாத்திரமாகும். நாவலின் முதல் பாகம் கவித்துவமான சிதறல்களால் மட்டும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க முதாளித்துவ வளர்ச்சியில், அதன் மில்லியன் பொய்களில் ஏமாற்றப்பட்டு, 1960 களின் இறுதியில் மேற்கத்திய காடுகளில் ஒரு கம்யூனை அமைப்பதற்கு செல்கிறது ஒரு ஹிப்பி குழு. கம்யூனின் பொது பாலுறவு, அங்கே நிகழும் மரணங்கள், மனப்பிறழ்வு நிலைகள் ஆகியன ஒவ்வொரு சிதறலிலும் கூடிக்கூடி மேகத்தின் நகர்வு போல கலைகிறது. அவர்களுடைய கம்யூனுக்கு பக்கத்தில் இன்னொரு வன்முறையான குடியிருப்பு கிரிப்டோ கிரகம் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து தங்கள் மோட்டார்பைக்குகளில் அடிக்கடி கிளம்பி வரும் ரௌடிகளுக்கும் கம்யூனில் வாழ்பவர்களுக்கும் இடையே தகறாறுகள் நிகழ்கின்றன. வாழ்க்கையை கலையாக மாற்ற யத்தனிக்கும் கம்யூன் குழுவினர் ஒவ்வொரு கணத்தையும் உயிர்ப்புடையதாக வைத்திருக்க முயற்சி செய்கின்றனர்.  ஆனால் கிரிப்டோ குடியிருப்பு ரௌடிகளினால் அவர்களுடைய வாழ்க்கையின் போக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த தொடர் விளைவுகளை சுகெனிக் மரபான நாவலில் வருவது போன்ற நிகழவுகளின் காரண காரிய தொடர்ச்சியாக சித்தரிப்பதில்லை. காரண காரிய தொடர்ச்சி, கதைப்பின்னல், கதாபாத்திரம் ஆகியனவற்றினை மறுத்து, மொழியின் சக்தியையும் அதற்கு மனித வாழ்வில் இருக்கக்கூடிய மிக அடிப்படையான பங்களிப்பினை வெளிப்படுத்துவதாகவும் நகர்கிறது “98.6”.

    நாவலின் இரண்டாம் பாகத்தில் கம்யூனில் குழந்தைகள் பிறந்துவிட, கதை முதல் பாகத்தின் சிதறல்களை விட அதிகமும் ஒருமை கூடி கலைகிறது. கம்யூனில் மக்கள் “intelligent enough to be free but too dumb to be unhappy”. “98.6” என்ற தலைப்பு மனித உடலின் சாதாரண வெப்ப அளவினை குறிப்பது. நாவலில் இரண்டாம் பாகத்தில் 98.6 மனித பிரக்ஞையின் ரசமட்டத்தினை மொழிகொண்டு அளந்து அதன் அளவுகள் மேலும் கீழும் அல்லாடுவதை விவரிக்கிறது. சுகெனிக்கின் கவித்துவமான நடை இரண்டாம் பாகத்தில் அமெரிக்க கவி வாலஸ் ஸ்டீவன்சின் கவிதை வரிகளைப் போல இருக்கின்றன என சுகெனெக்கின் புது வகை எழுத்தினை கொண்டாடும் விமர்சகர்கள் எழுதுகிறார்கள். நாவலின் இரண்டாம் பாகத்தில் கம்யூனின் கூட்டு வாழ்க்கை மெல்ல உருமாற தனிமனிதன், அவனுடமை, அவன் வழித்தோன்றல்கள் என கவனமும் முக்கியத்துவமும் இடம் மாறுகின்றன. பாலஸ்தீனம் எனப் பெயரிடப்பட்டிருக்கும் மூன்றாம் பாகம் ஒரு லட்சிய சமூகம் (utopia) உருவாகாமல் எப்படி சிதறிப்போக்கிறது என்பதையும் கம்யூன் வாழ்க்கையை வைத்து விவரிக்கிறது.

    “98.6” ஒரு முக்கியமான அரசியல் நாவலும் கூட. அதன் அரசியல் அமெரிக்க முதலாளித்துவம் உண்டாக்கிய பிரக்ஞையின் சிதைவினை கவித்துவமாக விவரிக்கிறது அதே சமயம் கூட்டு வாழ்க்கையின் சாத்தியமின்மைகளின் அக புற காரணங்களையும் சொல்கிறது. மனித அகங்களின் வரலாறுகளைச் சொல்வதே நாவல் கலையின் உச்சபட்ச சாத்தியமாகும் என்பதையும் “98.6” முன்வைக்கிறது. மாற்று அரசியல் கருத்துக்களை முன்வைப்பது மட்டும் அரசியல் எழுத்தல்ல, மாற்று அரசியல் வாழ்க்கை முறையாக பரிணமிக்குமென்றால் அதன் எல்லைகள் என்ன என்பதையும் பரிசோதித்துப் பார்க்கும் நாவலே மாற்று அரசியலைப் பேசும் கலையாக இருக்கமுடியும். அந்த வகையில் “98.6” ஏன் 0.4 விகிதாச்சாரத்தில் மாற்று அரசியலின் முழுமை கை நழுவிவிடுகிறது என்பதை அதீத அழகுடன் விவரிக்கிற நாவலாகும். உண்மையில் நாவல் கலையில் “98.6” அதற்கு முன்னும் பின்னும் ஒப்பீடற்ற தனித்துவ சாதனை. 


http://www.amazon.com/98-6-A-Novel-Ronald-Sukenick/dp/091459009X

Friday, April 24, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 16- அயன் மக் ஈவன் (Ian McEwan) “Atonement”


    




யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டி ஒருத்தனை சிறைக்கு அனுப்பி அவன் வாழ்க்கையை சீரழித்த பின்பு அவன் மேல் குற்றம் சாட்டியது தவறு, உண்மை வேறு என்று தெரியவந்தால் அதற்கான பிராயசித்தம் என்ன? அதுவும் குற்றம் சாட்டியது ஒரு எழுத்தாளர் என்றால் எழுதி பிராயசித்தம் தேட முடியுமா என்பதை ஆராய்கிறது அயன் மக் ஈவனின் நாவல் “Atonement” (பிராயசித்தம்). 2001 இல் வெளிவந்த இந்த நாவலைப் பற்றி  நான் பல முறை உரையாற்றிருக்கிறேன். தாஸ்தவ்ஸ்கியின் குற்ற களம், அயன் மக் ஈவனின் கதை சொல்லலினால் எப்படி மனசாட்சியில் வடிவம் கொள்ளாமல் கற்பனையில் திரள்கிறது என்பதை எனக்கு என் உரைகளில் சொல்லி மாளாது. ஐரோப்பிய நாவலின் களத்தினை குற்றமும் தண்டனையுமிலிருந்து , குற்றமும் கற்பனையும் பிராயசித்தமும் என்ற தளத்திற்கு நகர்த்திய நாவல் “Atonement”. இருபதாம் நூற்றாண்டில் ஆங்கில நாவல் பிரித்தானிய தீவுகளைத் தவிர மற்ற எல்லா தேசங்களிலும் எழுதப்படுகிறது, வில்லியம் கோல்டிங்கிற்குப் பிறகு பெரிதாக நாவலே பிரித்தானிய  தீவுகளில் இல்லை என்று தொடர்ந்து பேசப்பட்டபோது இல்லை இங்கிலாந்திலும் ஆங்கில நாவல் உயிர்ப்புடன் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில் எழுதியவர்களில் முக்கியமானவர் அயன் மக் ஈவன்.  அவர் ஆரம்பத்தில் எழுதிய சிறுகதைகள் தொகுப்பு First Love, Last Rites (1975), In Between Sheets and Other stories (1978), முதலிரண்டு நாவல்கள் The Cement Garden (1979),  The Comfort of Strangers (1981) ஆகியன பதின்ம வயதினரின் வன்முறையான பாலியல் உறவுகளை சித்தரித்ததால் மக் ஈவனின் எழுத்து அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்தது எனற பொதுக் கருத்தினை உருவாக்குவதாக இருந்தது.  அடோன்மெண்ட் நாவல் வருவதற்கு முன் மக் ஈவன் தொலைக்காட்டிச் நாடகங்கள் சினிமாவுக்கான திரைக்கதைகள் என பல எழுதினார். எல்லாமே பொதுவாக மக் ஈவனை  தீமையின் சித்தரிப்புகளை துல்லியமாக ஆனால் விலகலுடன் எழுதக்கூடியவராக ஆனால் யாதார்த்தவாத எழுத்தாளராகவே உலகுக்கு காட்டின. ஆனால் அடோன்மெண்ட் மக் ஈவனின் கலை வேறுவிதமான பின் நவீனத்துவ கூறுகள் நிரம்பியது என்று காட்டி வாசிப்பு உலகை திகைக்க வைத்தது.

    அடோன்மெண்ட் நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் மக் ஈவனின் கலையை விளக்க இயலாது. மூன்று பாகங்கள், நான்காவதாக பின்கதை இணைப்பு என  பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதல் பாகமே நாவலில் பாதிக்கு இருக்கிறது. முதல் பாகத்தில் பிரியோனி டால்லிஸ் என்ற 13 வயது பெண் தன்னுடைய பெற்றோருடன் கிராமப்புற வீட்டில் வாழ்ந்து வருகையில் நடைபெறுகிற சம்பவங்களை விவரிக்கிறது. பிரியோனி எழுத்தாளராக வேண்டும் என்ற லட்சியமுடையவள், நிறைய எழுதிப் பழகுகிறாள்.  பிரியோனியின் சகோதரி சிசிலியாவும் வீட்டில் வேலைசெய்பவர்களின் மகனான ராபியும் கேம்பிரிட்ஜ் பல்கலையில் ஒன்றாகப் படிக்கிறார்கள். அவர்களும் அவர்களுடைய தாய்வழி மாமா பிள்ளைகளும் லோலா ஃபிலிப் ஆகிய நண்பர்களும் கோட விடுமுறைக்கு வீட்டுக்கு வருகிறார்கள். பிரியோனி ராபியும் சிசிலியாவும் உடலுறவு கொள்வதை தற்செயலாக பார்த்துவிடுகிறாள். ராபி ஒரு செக்ஸ் வெறியன் என்ற எண்ணம் பிரியோனிக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒரு நாள் லோலாவை யாரோ வன்புணர்வு செய்வதை பிரியோனி பார்த்துவிடுகிறாள்; அவ்வாறு வன்புணர்வு செய்தவன் ராபிதான் என்று முடிவுக்கு வரும் அவ்வாறே போலீசுக்கும் சாட்சி சொல்ல ராபி சிறை செல்கிறான். சிசிலியாவும் அவர்களுடைய தாயையும் தவிர யாரும் ராபி குற்றமற்றவன் என்று நம்புவதில்லை. ராபி சிறை சென்றபின் சிசிலியா மீண்டும் பல்கலைக்கு சென்று படிப்பைத் தொடராமல் செவிலியாக பயிற்சி எடுக்க செல்கிறாள். சிசிலியாவும் சிறையிலிருக்கும் ராபியும் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் உலகப் போர் வெடிக்கிறது. சிறையிலிருக்கும் ராபி ராணுவத்தில் சேர்ந்து போருக்கு செல்லவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப் படுகிறான். அவன் சிசிலியாவை போருக்குச் செல்லுமுன் அரை மணி நேரம் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவன் அவளை முத்தமிட்டு பிரிந்துபோய் போர்முனையில் அவளையே நினைத்து கற்பனையில் வாழ்கிறான். பிரியோனியும் லண்டனுக்கு சென்று செவிலியாகிறாள். மூன்றாம் பாகத்தில் பிரியோனி தொடர்ந்து எழுதக்கூடியவளாக இருக்கிறாள் ஆனால் அதிகம் எழுத ஆசைப்படுவதில்லை. அவளுக்கு லோலாவை வன்புணர்வு செய்தவன் ராபி அல்ல ஃபிலிப் என்று ஒரு கட்டத்தில் தெரியவருகிறது அந்த உண்மை தெரியவரும்போது லோலாவும் ஃபிலிப்பும் மண்ம செய்துகொண்டு தம்பதிகளாகியிருக்கின்றனர். பிரியோனிக்கு போர் முனையில் செவிலியாக பணிபுரியும்போது சாகக்கிடக்கும் ராணுவ வீரன், லுக் என்பவனோடு மெலிதாக காதல் ஏற்படுகிறது. அவனை மணந்துகொண்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் ஆழ்கிறாள். சிசிலியாவும் ராபியும் அவளை மன்னிக்க மறுத்துவிடுகிறார்கள். பிரியோனி ராபி குற்றமற்றவன் என்று நிறுவுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறாள். நாவலின் நான்காவது பகுதியில் இதுவரையிலான மூன்று பாகக் கதையினை எழுதியவள் பிரியோனி என்று தெரியவருகிறது. அவள் தன் நாவலில் காதலர்களான சிசிலியாவையும் ராபியையையும் சேர்த்து வைத்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர்கள் சேரவில்லை என்று அறிகிறோம். 77 வய்தாகியிருக்கும் பிரியோனி நாவலின் வேறுபட்ட கதைப்போக்கு முடிவுடன் கதையை திரும்ப எழுதி வேறு வகையான பிராயசித்தம் தேடலாமா என்று யோசிப்பதோடு நாவல் முடிகிறது.

    கடைசி பாகத்தில்தான் மக் ஈவன் எழுதியிருப்பது யதார்த்தவகை நாவலல்ல இது மெடாஃபிக்ஷ்ன் நாவல் என்று தெரிகிறதா என்றால் அதுதான் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பல நூறு உட்குறிப்புகள கொடுக்கப்படுகின்றன. ஆனால் நாவலை வரிக்கு வரி உன்னிப்பாக அணுக்கமாக வாசிக்காதவர்கள் மக் ஈவனின் நாவல் ஒரு மெடாஃபிக்‌ஷன் என்று உணரவே முடியாது. நாவலின் ஆரம்ப இரங்கற்பாவிலேயே இந்த புனைவு எப்படிப்பட்டது அதை எப்படி வாசிக்க வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. ஜேன் ஆஸ்டனின் நாவல் “Northanger Abbey” எடுக்கப்பட்ட மேற்கோள் மற்றவருடைய வாழ்க்கையைப் பற்றிய கற்பனை எப்படி அடுத்தவரை பலிகடா ஆக்கக்கூடியது, என்று சொல்கிறது. ஆனால் மற்ற்வருடைய வாழ்க்கையை பற்றி கற்பனை செய்யாமல் எப்படி நாவல் எழுதுவது? நாவலின் கதை சொல்லி பிரியோனி ங்கள் வீட்டில் நடந்த சம்பவங்களைப் வைத்து எழுதுகின்ற ஒரு நாடகத்தோடு நாவல் ஆரம்பிக்கிறது. ஆனால் அந்த நாடகத்தின் மொழி நவீன இலக்கியமாக ஏர்றுக்கொள்ளத்தக்க மொழியாக இருக்கிறது. இந்த நவீன மொழியின் வழி விளைந்த கற்பனையே பிரியோனியை ராபியை தவறாக குற்றம் சாட்டத் தூண்டுகிறது. நாவலின் கதை சொல்லி வர்ஜினீனியா வுல்ஃபோ என்று சந்தேகிக்கத்தக்க அளவு வர்ஜீனியா வுல்ஃபின் The Waves , Between the Acts, To the lighthouse ஆகிய நாவல்களை நினைவுபடுத்தும் பல பத்திகள். வர்ஜீனியா வுல்ஃபின் பாதிப்பு இந்த நாவலில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மக் ஈவனின்  நடைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் வீட்டோடு இருக்கும் பெண்கள் அனைவரும் ரமணிச்சந்திரன், லஷ்மி, ஆகியோரின் நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகிய புனைவுகளுக்குள் சிக்கியிருப்பது போல வர்ஜினீயா வுல்ஃபின் புனைவுகளுக்குள் இங்கிலாந்தின் வாசகர்கள் சிக்கியிருந்தார்களோ? என்ன மாதிரியான மெடாஃபிக்‌ஷன் நாவல் அடோன்மெண்ட்? தெற்கு இங்கிலாந்தின் இரண்டாம் போர்க்கால வருடங்களில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்வதான தோற்றத்தைக் கொண்டிருக்கும் அடோன்மெண்ட்டின் பிரதியினை அகழ்ந்து அகழ்ந்து நாம் படிக்கும்போது போர் என்பதே யாருடைய கற்பனையில் விளைந்தது? என்ன் மாதிரியான கற்பனை அது? போர்க்காலத்தை என்ன கற்பனைகளைக்கொண்டு மக்கள் திரள் கடந்தது? கற்பனையின் உள்ளீடுதான் என்ன? ஆங்கில அமெரிக்க விமர்சகர்கள் அடோன்மெண்ட் நாவலில் பிற நாவல்களுக்கான ஊடுபாவு குறிப்புகளை ஏராளமாகக் கண்டுபிடித்துச் சொல்லியிருகிறார்கள். அவர்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதும் அடோன்மெண்ட் எவ்வளவு செறிவான பிரதி என்பது அதிசயிக்கத்தக்க அளவில் தெரியவருகிறது. தாஸ்தவ்ஸ்கியை ஐரோப்பிய நாவல் எத்தனையோ தளங்கள் தாண்டி ஓடிவிட்டது. ஆனால் gothic romance நாவல்களைப் படித்து, அதன் கற்பனைக்கும் புனைவுக்கும் பலியாகி உலகை வென்று வர சாஞ்சோ பாஞ்சோவின் துணையுடன் கிளம்பிய டான் கெஹிட்டேயின் நிழல் மக் ஈவனின் அடோண்மெண்ட் வரை நீண்டுகிடக்கிறது. ஃபுயெண்டெஸின் கதைசொல்லிகளைப் போலவே மக் ஈவனின் கதைசொல்லியும் நம்பகத்தகுந்தவளாக இல்லை. லோசாவின் கதாபாத்திரமோ என்று கூட பிரியோனியை நாம் சந்தேகப்படலாம். வித்தியாசங்கள் என்னவென்றால் மக் ஈவனின் கதாபாத்திரங்கள் முற்றிலும் பிரித்தானிய தீவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாவலும், அதன் பிரித்தானிய கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உள்ளடங்கிய உணர்ச்சிகளைப் போலவே, தன் மெடாஃபிக்‌ஷன் தன்மையினை ஒளித்துவைத்திருக்கிறது. நாவலை வாசித்து முடிந்த பின்பும் பிராயசித்தம் என்றால் என்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.


http://www.amazon.com/Atonement-A-Novel-Ian-McEwan/dp/038572179X
   

Saturday, April 18, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 14 & 15 கார்லோஸ் ஃபுயெண்டெஸ் (Carlos Fuentes) “The Death of Artemio Cruz” and “Inez”





    கார்லோஸ் ஃபுயெண்டெஸ்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு- பல முறை பரிந்துரைக்கப்பட்டபோதிலும்- கிடைக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு. கொலம்பியாவுக்கு மார்க்வெஸ், பெருவுக்கு லோசா என்றால் மெக்சிகோவுக்கு கார்லோஸ் ஃபுயெண்டெஸ் எனலாம். ஆனால்  ஃபுயெண்டெஸ் மெக்சிகோவில் ஒரு வகையான அந்நியராகவும் வெளியுலகில் மெக்சிகராகவும் உணர்ந்தார். ஃபுயெண்டெஸின் குழந்தைப்பருவம் வெவ்வேறு  லத்தின் அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்காவிலும் கழிந்தது. பதினாறு வயதில் மெக்சிகோ திரும்பிய ஃபுயெண்டெஸ் நாட்டின் பெரும்பான்மை இடதுசாரி அரசியலை ஆதரிப்பவராக இருந்தாலும் அவருடைய வாழ்க்கை பெரும் செல்வந்த வாழ்க்கை முறையாக இருந்தபடியால் அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். நிகாரகுவா நாட்டின் சாண்டினிஸ்டா இயக்கத்தை ஆதரித்ததில் ஃபுயெண்டெஸுக்கும் சக மெக்சிகரான ஆக்டேவியா பாஸுக்கும் பெரும் மோதல் வெடித்தது. ஆக்டேவியா பாஸ் ஃபுயெண்டெஸின் மெக்சிக அடையாளத்தை விமர்சனத்துக்குள்ளாக்கினார். ஃபுயெண்டெஸ் தன்னுடைய அடையாளத்தை  ஒரு விமர்சனபூர்வமான அந்நியன் என்றே வரையறை செய்துகொண்டார்.  பிறப்பு, வளர்ப்பு, வர்க்கம் ஆகியவற்றினால் அல்ல, படைப்புகளில் வெளிப்படும் கலைப்பார்வையினால் தான் ஒரு அந்நியன் என்று ஃபுயெண்டெஸ் அறிவித்தார். தன் சமூகத்திலிருந்து விலகிய பார்வையினை மெக்சிகோவின் வரலாறு குறித்தும் அரசியல் குறித்தும் அவரால் நாவல்களாக முன்வைக்க முடிந்தது. ஃபுயெண்டெஸின் மிக முக்கியமான படைப்பான “Terra Nostra” உலக இலக்கியத்தில் ஒரு பெரும் சாதனை. மெக்சிகோவின் வரலாறு என்றில்லாமல் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாறுகளையும் அவற்றின் உள் இணைவுகளையும் கவித்துவமாக, ஃபுயெண்டெஸின் விலகலோடு சொன்ன நாவல் Terra Nostra. வாய்மொழிக்கதைகள், புராணங்கள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் கலந்து எழுதப்பட்ட டெர்ரா நோஸ்டிராவை தமிழில் மொழிபெயர்ப்பது கடினம். கூடுதலாக டெர்ரா நோஸ்டிராவின் கதை பதினாறாம் நூற்றாண்டுக்கும் சமகாலத்துக்கும் மாறி மாறி நடப்பதால் அதன் வரலாற்று விபரங்கள் பிற பண்பாடுகளைச் சேர்ந்த்வர்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால் டெர்ரா நோஸ்டிரா ஒரு எழுத்தாளன் தன் தேச வரலாற்றினை தேசப்பற்று கொண்ட அசட்டுத்தனத்தோடு எழுதாமல் எப்படி காத்திரமான விமர்சனத்தோடும் கற்பனையின் விரிவோடும் எழுத வேண்டும் என்பதற்கு  சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

    டெர்ரா நோஸ்டிரா அளவுக்கு கடினமில்லாத ஆனால் தன் தேச வரலாற்றினை புனைவாக்கத்தின் விலகலோடும் விமர்சனத்தோடும் சொல்கிற ஃபுயெண்டெஸ்ஸின் இன்னொரு நாவல் “The Death of Artemio Cruz”. மார்க்வெஸ் “The General in his labyrinth”, லோசா “The Feast of the Goat” ஆகிய நாவல்களின் தங்கள் நாடுகளின் சர்வாதிகாரிகளைப் பற்றி எழுதியிருந்தாலும் அந்த நாவல்களைவிட சிறப்பானதும் அவற்றிற்கான மூல வடிவத்தை வழங்கியதும் ஃபுயெண்டெஸின் The Death of Artemio Cruz என்று பல இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள். நம்மூர் அரசியல்வாதிகளை நினைவுபடுத்தும் ஆர்தேமியோ க்ரூஸ் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல அவன் ஒரு பத்திரிக்கையாளன்,பெரும் வியாபாரி, காதலன்; தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை அம்சங்களிலும் ஊழல் மலிந்தவன். சாவுப்படுக்கையில் இருக்கும் ஆர்தேமியோ க்ரூஸ் நாவலில் தன் வாழ்க்கையின் சம்பவங்களை நினைவு கூர்கிறான். ஆர்தேமியோ க்ரூஸின் உயிலைக் கைப்பற்றி விட அவனுடைய குடுமப்த்தினர் அவன் சாவுப்படுக்கையைச் சுற்றி சுற்றி வருகின்றனர். ஆர்தேமியோ க்ரூஸ் யேசுவின் பிறப்பு பற்றி கெட்ட பாலியல் சிந்தனைகளை வெளிப்படுத்தியதால் கிறித்தவ திருச்சபைக்கும்  அவனுக்கும் ஏற்பட்ட தகறாறினைத் தீர்க்க திருச்சபை முயற்சி செய்கிறது. க்ரூஸின் காரியதரிசி அவனுடைய லஞ்ச ஊழல் பேரங்களின் ஒலிநாடாக்களை வைத்து மிரட்டுகிறாள். இதையெல்லாம் மீறி க்ரூஸ் தன் காதல்களைப் பற்றியும் இதர புலனின்ப வாழ்க்கை சம்பவங்களையும் பற்றி தன் சாவுப்படுக்கையில் யோசித்துக்கொண்டிருக்கிறான். The Death of Artemio Cruz ஐ வாசிப்பவர்களுக்கு நம் நாட்டு அரசியல்வாதிகளைப் பற்றி இப்படி யாரேனும் தீவிர நாவலொன்றை எழுத மாட்டார்களா என்ற ஏக்கம் மேலிடும். ஃபுயெண்டெஸின் இந்த நாவலில் கதைசொல்லும் உத்திகள் அபாரமானவை. ஃபுயெண்டஸ் திரைப்படத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மார்க்வெஸ்ஸோடு இணைந்தும் தனியாகவும் பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். திரைப்படத்தின் உத்திகளான க்ளோஸப், ஜம்ப் கட், ஃப்ளாஷ் பேக், போன்றவற்றை ஃபுயுண்டெஸ் இந்த நாவலில் அழகாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இதையெல்லாம் விட இந்த அரசியல் நாவலின் முக்கியத்துவம் என்ன்வென்றால் ஃப்யுண்டெஸ் இந்த நாவலில் மெக்சிகோவின் நிலச்சீர்திருத்தம் எப்படி ஊழல்களினால் தோற்றுப்போனது என்று விரிவாக எடுத்துச் சொல்கிறார்.

    பல நாவல் வடிவங்களையும் ஃபுயெண்டெஸ் கையாண்டிருக்கிறார். Crystal Frontiers நாவல் கிட்டத்தட்ட கநாசு தமிழில் “மதகுரு” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த ஸ்வீடிஷ் நாவலாசிரியை ஷெல்மா லாகார்லாஃபின் “கோஸ்டாபெர்லிங்” என்ற நாவலின் வடிவத்தினை ஒத்தது. அதாவது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப் போல இருக்கும் அத்தியாய சிறுகதைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புறுத்தப்பட்டு நாவல் பரிமளிக்கும். ஃபுயெண்டெஸின் Crystal Frontiers மெக்சிகோவிலிருந்து வட அமெரிக்காவில் குடியேறியவர்கள் வாழ்க்கைகளைச் சொல்வது. அந்த நாவலின் அழகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் முழுமையாக பெயர்வதற்கு சாத்தியமில்லை.

    “Inez” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கவித்துவமும் கதையாடல் முறையும் தமிழுக்கு அறிமுகமாகும். இறந்தால் வெனிஸ் நகரத்தில் இறக்கவேண்டும் ஏனென்றால் அங்கேதான் காதலின் மடியில் சாகலாம் என்ற உலகளாவிய ‘முதுமொழி’ உருவாவதற்கு காரணமான தாமஸ் மன்னின் நாவல் “Death in Venice” இன் பாதிப்பில் ஃப்யுண்டெஸ் எழுதிய நாவல் “இனெஸ்”. தூய கன்னி என்ற பொருளுடைய கிரேக்க தேவதையை நினைவுபடுத்தும் ‘இனெஸ்’ என்ற பெயரில் அமைந்த நாவல் வெனிஸில் நடக்கும் காதலையும் துரோகத்தையும் பற்றிய கதை. இரண்டு இசைக்கலைஞர்களுக்கிடையே உள்ள தொழில் போட்டி, காதல் ஆகியவற்றை கருவாகக்கொண்ட “இனெஸ்” லாசராவின் உரைநடைக்கு நிகரான உணர்ச்சியையும் வேகத்தையும் கவித்துவத்தையும் வெளிப்படுத்துவது. தாமஸ் மன்னின் நாவலின் பாதிப்பில் உருவானதே சால்மான் ருஷ்டியின் “Enchantress of Florence”, Kazuo Ishiguro வின் “The Unconsoled” ஆகிய நாவல்களும் ஆனால் ஃபுயெண்டெஸே இந்த காதல் கதையை புதிய உயர்தளத்திற்கு எடுத்துச் செல்கிறார். வழக்கம்போல ஏராளமான நாட்டுப்புற கதைகளையும் புராணங்களையும் கார்லோஸ் ஃபுயெண்டெஸ் நாவலுக்குள் பயன்படுத்துவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் நாவலின் apocalyptic vision ஒவ்வொரு வாக்கியத்திலும் வெளிப்படுவது.

    தமிழில் சமீப காலமாக சிலர், இந்து மதத்தின் பிரளயத்தை நோக்கி பிரபஞ்சம் செல்வதான உலகநோக்கு கிறித்தவத்தின் ஆப்ரஹாமிய மதங்களின் தீர்ப்பு நாள் உலக நோக்கிலிருந்து வேறுபட்டது என்று வாதிட்டு வருகிறார்கள். அவர்கள் “இனெஸ்” நாவலை கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்படியொன்றும் பிரபஞ்ச முடிவும் மறுபிறப்பும் பற்றிய இந்து உலக நோக்கு இதர மத உலகப்பார்வைகளிலிருந்து வேறுபட்டதல்ல என்பது புலப்படும்.










http://www.amazon.in/The-Death-Artemio-Cruz-Classics/dp/0374531803 

http://www.amazon.in/Inez-Carlos-Fuentes-ebook/dp/B008JP4RSO/ref=sr_1_2?ie=UTF8&qid=1429367875&sr=8-2&keywords=Inez+carlos+fuentes 


Thursday, April 16, 2015

ஃபேஸ்புக் முல்லா நஸ்ருதீன் கதைகள் | குட்டிக்கதை

ஃபேஸ்புக்கில் நான் எழுதிய சமீபத்திய  முல்லா நஸ்ருதீன் குட்டிக்கதைளை இந்தத்தளத்தில் பகிர்ந்துகொள்ளவில்லை என சில நண்பர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்காக இங்கே மீள்பகிர்வு செய்கிறேன். என்னுடைய சிறு கதைகளில் மு என்று வந்த நபரே பின் நவீன யுகத்தில் முல்லா நஸ்ருதீனாக மாறிவிட்டான். வேறு சில குட்டிக்கதைகளில் அவன் ஜோ ப்ரயன்ஸ்கி என்ற பெயரில் உலவுகிறான். ஜோ ப்ரயன்ஸ்கி யாரென்று யாரும் என்னிடம் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை. எனவே அது ரகசியம் என்று அறிக.

----------------------------------------
1

என் பையன்களின் பள்ளி ஆண்டு விழாவுக்கு நேற்று போயிருந்தேன். அவர்களின் ஆசிரியை என்னிடம் கடிந்துகொண்டார். நீங்களே ஒரு புரஃபசர். நீங்கள் உங்கள் மகன்களுக்கு அறிவுரை சொல்வதே இல்லையா என்றார். நான் அவரிடம் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைச் சொன்னேன்.

முல்லா நஸ்ருதீன் தன் மகனுக்கு அறிவுரை சொன்னார்: மகனே, ஆல்கஹால் நல்லதுதான். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதோ அந்த மூலையில் நான்கு பேர் உட்கார்ந்து இருக்கிறார்களே அவர்கள் எட்டு பேராக உன் கண்களுக்குத் தெரியும் போது நீ நிறுத்திவிட வேண்டும். மகன் சொன்னான்: அப்பா, அங்கே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள்.

-------------------------------------------
2

ஜோ ப்ரயன்ஸ்கி ஏரியில் படகில் சுற்றி வர விரும்பினான். படகுக்காரன் ஒரு சுற்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் கேட்டான். ஜோ ப்ரயன்ஸ்கி இரண்டாயிரம் ரூபாயா என்று வாய் பிளந்தான். பின்னே, யேசு நீரில் நடந்த ஏரியாயிற்றே இது என்றான் படகுக்காரன். அவர் ஏன் நீரில் நடந்தார் என்று இப்போதுதான் புரிகிறது என்றான் ஜோ ப்ரயன்ஸ்கி. படகுத் துறை காலிப் படகுகளால் நிரம்பியிருந்தது.


-----------------------------------------
3

முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொள்வதென்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு ஊரெல்லையில் இருந்த புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி சாவதைப் போல நாக்கைத் தொங்கவிடுவது என்று பாவனைகள் மட்டும் செய்துவிட்டு திரும்பி வந்துவிடுவார். புளியமரக் கொப்பில் வசித்து வந்த சங்கீத வித்துவான் பேய் ஒன்றிற்கும், அதன் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் முல்லா நஸ்ருதீனின் பாவனைகள் புரிபடவில்லை. வித்வான் பேய் தன் ஃபேஸ்புக் நண்பர்கள் புடை சூழ முல்லாவை அணுகி "நஸ்ருதீன், அந்த மிருதங்கத்தை வைத்து என்ன செய்கிறாய்?" என்று கேட்டது. "உங்களைப் போலவே நடிகர் திலகம் சிவாஜியிடம் கற்றுக்கொண்டு மிருதங்கசக்கரவர்த்தி ஆக முயற்சி செய்கிறேன்" என்றார் முல்லா.

---------------------------------------------
4

முல்லா நஸ்ருதீன் தன் விழிகளைத் தூக்கி தன் கழுதையைத் தொடுவதும் மீள்வதுமாய் இருந்தார். வழிப்போக்கன் ஒருவர் முல்லா நீங்கள் எந்தக் குட்டிக்கதையிலும் இப்படி செய்வதில்லையே இப்ப என்ன இப்படி என்று வினவினார். ஏம்ப்பா வெண்முரசின் எத்தனை அத்தியாயங்களில் எத்தனை கதாபாத்திரங்கள் விழிகளைத் தூக்குவதும் தொடுவதுமாய் இருக்கிறார்கள் அதையெல்லாம் கேட்க மாட்டீர்கள். ஒரே ஒரு கதையில் நான் விழிகளை கீழே போட முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், உடனே கேட்க வந்து விட்டீர்களே என்று முல்லா நஸ்ருதீன் சலித்துக்கொண்டார்.

------------------------------------------------
5

அதிபர் ஒபாமா தன்னுடைய lame duck presidency இன் போது என்னென்ன பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முல்லா நஸ்ருதீன் கட்டுரை ஒன்று வனைந்துகொண்டிருந்தார். ஆம், குயவன் மட்பாண்டம் வனைவது போல கட்டுரையை வனைந்துகொண்டிருந்தார். இடையிடையே எழுந்து போய் கண்ணாடி முன் நின்று ‘நீ பெரிய அறிவாளிடா நஸ்ருதீன்’ என்று தன்னைத் தானே பாராட்டிக்கொண்டு திரும்ப வந்து வனைவார். நஸ்ருதீனின் மனைவிக்கு இது தாள முடியாமல் இருந்தது. “இந்த நினைப்புதானே பொழைப்ப கெடுக்குது; நீ என்ன பெரிய பொருளாதார நிபுணனா இல்லை ஒபாமாதான் எதையும் செயல்படுத்தும் நிலையில் இருக்கிறாரா உனக்கு எதுக்கு இந்த அறிவுரைக் கட்டுரை எழுதற வேலை எல்லாம்?” என்ற மனைவியிடம் நஸ்ருதீன் சொன்னார்: “ சமஸ் மட்டும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லியில் போய் தமிழக பட்ஜெட் பற்றி என்ன பேச வேண்டும் என்று அறிவுரைக் கட்டுரை எழுதவில்லையா?”

------------------------------------------------------
6

ஃபேஸ்புக் ஃபேக் ஐடி மிருதங்க சக்கரவர்த்தி 'ஜாஹிர் ஹுசைன் தபலா இவள்தானா' என்று சதா பாடிக்கொண்டு வெறுமனே கைகளைத் தட்டிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம் 'show now show now' என லைக் போட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியே போன முல்லா நஸ்ருதீன் 'உனக்கு என்னப்பா பிரச்சினை என்று கேட்டார். ஃபேஸ்புக் ஃபேக் ஐடி மிருதங்க சக்கரவர்த்தி 'சார், இந்தப்பாட்டு என் வாயிலிருந்து வருவது நிற்கவே மாட்டேன்கிறது. என்னை என் சைக்கியாட்ரிஸ்ட் You are anal அப்டின்னு சொல்லிட்டார்' என்றார் அழுதபடியே. நஸ்ருதீன் அதற்கு 'இதற்கு எதற்கப்பா சைக்கியாட்ரிஸ்டிடம் போக வேண்டும்? You are an asshole என்றுதான் உலகத்துக்கே தெரியுமே' என்று சொல்லி ஆறுதலளித்தார்.

-------------------------------------------------------------
7

கேங்டோக்கில் பௌத்த துறவி சாரஹாவை மையமாகக் கொண்டிருக்கும் ஓவியங்கள் பலவற்றைப் பார்த்தேன். தாந்தரீக பௌத்தத்தின் 84 மகா சித்தர்களில் முதன்மையாகக் கருத்தப்படுகிற சாரஹா பௌத்தம் பேசுகின்ற theory of dependence ஐத் தாண்டிச் சென்று தியானத்தை மேற்கொள்ளும் முறைமையை கற்பித்தவர். அவர் மனிதமனம் எதையும் நீர் நீரை சந்திப்பதைப் போல தியானத்தின் வழி சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். சார்பு உறவுகளின் வழியே நம் உணர்ச்சிகள் கட்டமைக்கப்படுகின்றன. சார்பு நிலை உறவுகளை மீறிச் செல்வதையே சாரஹா நீர் நீரைச் சந்திப்பது போல என விளக்குகிறார்.


சார்பு உறவுநிலை வழி உணர்ச்சிகள் உருவாவதை விளக்கும் முல்லா நஸ்ருதீனின் கதை ஒன்று உண்டு.
முல்லா நஸ்ருதீன் ஒரு நாள் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் முகம் கடும் வேதனையில் இருந்தது. எந்த நேரமும் கதறி அழுதுவிடுவார் போல இருந்தார். பார்ப்பவர்கள் எல்லோரும் என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். முல்லா சொன்னார்: என்னுடைய ஷுக்கள் என் கால்களின் அளவை விட இரண்டு இலக்கம் குறைந்தவை. என் கால்களை நான் அவற்றுள் திணித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் கடும் வலியும் வேதனையும் உண்டாகிறது. எல்லோரும் நீ ஏனப்பா அளவான புது ஷூக்கள் வாங்கிக்கொள்ளக்கூடாது என்று கேட்டார்கள். அதற்கு முல்லா இந்த ஷூக்களை கழற்றிப் போடும் போது ஏற்படும் மகிழ்ச்சியும், விடுதலை உணர்வும் இருக்கிறதே அது அளவான ஷூக்கள் அணிந்தால் வருமா என்று கேட்டார்.

-------------------------------------------------------
8

டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமியின் தினசரி காட்டுக்கத்தலைக் கேட்டு பழகியிருந்த முல்லா நஸ்ருதீனின் காதுகளுக்கு அவருடைய கழுதை கத்துவது மிகவும் இனிமையாக இருந்தது. கழுதை கத்துவதைக் கேட்டு இன்புற்று "இன்று பதினோரு முறை", "இன்று பதினெட்டு முறை" என்று ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவதை நஸ்ருதீன் வழக்கமாக்கிக்கொண்டார். நஸ்ருதீனின் ஃபேஸ்புக் பதிவுகளை கண்காணித்து, ஒற்றறியும் ஃபேஸ்புக்கின் போலி நபருக்கு என்ன ஏது என்று புரியவில்லை ஆனால் பொறாமையாக இருந்தது. நஸ்ருதீன் "இன்று 22 முறை" என்று பதிவிட்ட போது பொறுக்க முடியாமல் போலி ஃபேஸ்புக் நபர் இந்த புணர்ச்சிகளின் எண்ணிக்கையை யார் சரி பார்ப்பது என்று எழுதினார்; அதற்கு நஸ்ருதீனின் பதிவுகளுக்கு லைக் போடும் நபர்களில் சிலரும் லைக் போட்டிருந்தனர். நஸ்ருதீன் அவருக்கு காது மந்தம் போலிருக்கிறது அதனால்தான் தன் கழுதை கத்துவது கேட்கவில்லை என்று நினைத்து, " நீங்கள் வேண்டுமானால் குனிந்து நில்லுங்கள் நான் என் கழுதையை கூட்டி வந்து நிரூபிக்கிறேன்" என்று பதிலளித்தார்.

----------------------------------------------------- 


கவிதை எழுதுவது எப்படி? | குட்டிக்கதை

       முல்லா நஸ்ருதீனிடம் அவர் மகன் கவிதை எழுதுவது எப்படி என்று கேட்டான். நஸ்ருதீன் அவனுக்கு ஒரு கதை சொன்னார்.

       ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் அவனுக்கு மிகவும் வயதாகிவிட்டபடியால் தொழிலுக்கு செல்ல முடியவில்லை. அவனுடைய மகன் குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான். சரி வா என்று முதிய திருடன் மகனைத் திருட கூட்டிக்கொண்டு போனான். ஒரு வீட்டுக்குள் இரவு நுழைந்தபின், திருடன் மகனை ஒரு பீரோவுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெகுவாக சத்தமெழுப்பிவிட்டு அவன் ஓடி தப்பிவிட்டான். பீரோவுக்குள் மாட்டிக்கொண்ட மகனுக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான், பயந்தான். முதிய திருடன் எழுப்பிய ஓசையில் வீட்டிலுள்ளவர்கள் விழித்துக்கொண்டார்கள். உடனே மகன் பீரோவுக்குள்ளிருந்து பூனை போல கத்தினான். பூனைதான் உள்ளே மாட்டிக்கொண்டதாக்கும் என்று நினைத்து வீட்டிலுள்ளோர் பீரோவைத் திறக்க, மகன் அவர்கள் இருட்டில் ஏந்திவந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு தப்பி ஓடினான். வீட்டிலுள்ளோர் அவனை துரத்திக்கொண்டு வந்தார்கள். மகன் புழக்கடையில் இருந்த கிணற்றில் கல் ஒன்றைத் தூக்கிப் போட்டுவிட்டு ஓரமாக ஒளிந்துகொண்டான். திருடன் கிணற்றில் விழுந்துவிட்டான் என்று நம்பி அவர்கள் கிணற்றுக்குள் அவனைத் தேடுவதில் மும்முரமாய் இருக்கும்போது அவன் நழுவி வீட்டுக்கு சாவகாசமாய் வந்து சேர்ந்து விட்டான். முதிய திருடன் மகனிடம் கேட்டான்
"அதாவது அப்பன் என்னை இப்படி ஒரு இடத்தில் மாட்டிவிட்டானே என்று நினைத்தாய்?"
"ஆமாம்"
“அதாவது பூனை போல கத்தி நீ ஒரு பூனை என்று பிறரை நம்ப வைத்தாய்?”
“ஆமாம்”
“அதாவது கிணற்றுக்குள் கல்லைப் போட்டு நீதான் விழுந்துவிட்டாய் என பிறரை நம்ப வைத்தாய்” “ஆமாம்”
“அது சரி, ஆனால் திருடின பொருள் எங்கே?”
மகன் திருதிரு என்று முழித்தான்.
 தயங்கி “அப்பா, நான் எதையும் எடுத்து வரவில்லை” என்றான் மகன்.
 “போடா, நீ கவிதை எழுதத்தான் லாயக்கு”

Wednesday, April 15, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 13- கோ யுன் (Ko Un) Little Pilgrim

"Avatamsaka Gandavyuha Teaching 1" by Asia Society created the file. Artwork created by an anonymous ancient source. - http://asiasocietymuseum.org/region_object.asp?RegionID=1&CountryID=2&ChapterID=10&ObjectID=558. Licensed under Public Domain via Wikimedia Commons - http://commons.wikimedia.org/wiki/File:Avatamsaka_Gandavyuha_Teaching_1.jpeg#/media/File:Avatamsaka_Gandavyuha_Teaching_1.jpeg

"Cover of Ko Un's Little Pilgrim" by Source (WP:NFCC#4). Licensed under Fair use via Wikipedia - http://en.wikipedia.org/wiki/File:Cover_of_Ko_Un%27s_Little_Pilgrim.jpg#/media/File:Cover_of_Ko_Un%27s_Little_Pilgrim.jpg

கோ யுன் கொரிய நாட்டின் முது பெரும் கவி. 1933 ஆம் ஆண்டு கோ யுன் பிறந்தபோது கொரியா ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கொரிய மொழியில் பேசுவது எழுதுவது படிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. போதுமான ஊட்டச்சத்து இன்றி வளர்ந்த கோ யுன், போதுமான உடல் வலுவைப் பெறவில்லை ஆதலால் அவரை ராணுவத்தில் சேர்க்கவில்லை. ஆனாலும் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் தொடர்ந்து நடந்த போர்களைப் பார்க்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பிக்கவில்லை. 1952 ஆம் ஆண்டு  கோ யுன் ஜென் புத்த மடாலாயத்தில் சேர்ந்து புத்த பிக்குவானார்.  பத்தாண்டு கால புத்த மடாலய வாழ்க்கைக்குப் பின், கோ யுன் மடாலயம் சுய நலங்களை வளர்ப்பதாகக்கூறி அதிலிருந்து வெளியேறினார். இருமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போன கோ யுன் 1970 களில் கொரிய ஜனநாயக விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதால் சிறையிலடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். சிறை வாழ்க்கையின்போது தான் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு நபரையும் பற்றி ஒரு கவிதை எழுதுவது என்று ஆரம்பித்து சிறைலிருந்து வெளிவந்தும் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதினார். Ten Thousand Lives என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கவிதைத் தொகுதி உண்மையில் பத்தாயிரம் நபர்களைப் பற்றியது. 

    போரின் கொடுமைகளை நேரில் பார்த்திருந்தாலும், கொடுமையான வன் கொடுமைகளுக்கு ஆளானவராக இருந்தாலும், பௌத்த மடலாயங்களின் மேல் நம்பிக்கை இழந்தவராக மாறினாலும் கோ யுன் பௌத்தத்தில் நம்பிக்கை இழக்கவில்லை அது தருகின்ற வாழ்க்கையை அறுதி செய்யும் ஒளியினையும் இழக்கவில்லை. அவருடைய கவிதைகளில் எதிர்மறையின் கீற்றினை கிஞ்சித்தும் காண இயலவில்லை. ‘பத்தாயிரம் வாழ்க்கைகள்’ கொரிய வாழ்க்கையின், சரித்திரத்தின், இணையற்ற ஆவணமாகவும், கொரிய நாட்டின் போராட்டங்களில் இருந்து முகிழ்த்த கவித்துவ உச்சமாகவும் கருதப்படுகிறது.  ஆலென் கின்ஸ்பெர்க், கோ யுன் பௌத்த மத விற்பன்னர், மகா கவி, அரசியல் விடுதலைக்கான போராளி, இயற்கையின் சரித்திரத்தை எழுதிய ஆசான் என்று குறிப்பிட்டார். கோ யுன் தன் அரை நூற்றாண்டுக்கும் மேலான இயக்கத்தில் ஏராளமாக படைத்திருக்கிறார். அவருடைய படைப்புலகத்தின் சிறு பகுதியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோ யுன் கொரிய கிராமம் ஒன்றில் தன் மனைவியுடன் தற்போது வாழ்ந்து வருகிறார். இரு முறை அவர் பெயர் இலக்கியத்திற்கான நோபெல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

    நான் கோ யுன்னின் நாவல் Little Pilgrim ஐ கொரியாவில் பயணம் செய்யும்போது வாசித்தேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘அழாதே மச்சக்கன்னி’ நாவல் கொரியாவில் நிகழ்வதால் கொரிய மொழிப் படங்கள், சுற்றுலாத் தலங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றை படிப்பதோடு கொரிய கவிதைகளையும் நாவல்களையும் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். ‘லிட்டில் பில்கிரிம்’ கொரிய மக்களின் ஆன்மீக மையத்தினை அடையாளம் காண எனக்கு உதவியது.

    ‘லிட்டில் பில்கிரிமின்’ கதை இந்தியாவில் கௌதம புத்தரின் காலத்தில் நிகழ்கிறது.  கௌதம புத்தர் நாவலில் எந்த இடத்திலும் கதாபாத்திரமாக நேரடியாக வருவதில்லை. நாவல் கொரிய மகாயான பௌத்தத்தின் அடிப்படை நூலான அவதாம்சக சூத்திரத்தை அடியொற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து கொரியாவுக்கு மொழிபெயர்ப்பில் சென்ற அவதாம்சக சூத்திரம் கொரிய மொழியில் Daebanggwang Bulhwaeom Gyeong or Hwaeom Gyeong என்று அழைக்கப்படுகிறது. அவதாம்சக சூத்திரம் கௌதம புத்தரின் இறப்புக்கு ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு உஜ்ஜயினியைச் சேர்ந்த புத்த துறவியான பராமார்த்தர் அவதாம்சக சூத்திரம் ‘போதிசத்துவ பீடிகை’ என்ற பெயரிலும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார். அவதாம்சக சூத்திரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுள்ளது. பார்க்க:  The Flower Ornament Scripture : A Translation of the Avatamsaka Sūtra (1993) by Thomas Cleary, ISBN 0-87773-940-4 இந்தியாவிலிருந்து கொரியாவுக்கு அவதாம்சக சூத்திரம் சீன மொழிபெயர்ப்புகளின் வழி சென்றடைந்துள்ளது.

    உபநிடதங்களில் வரும் நசிகேதன் பிராஜபதியுடன் உரையாடி ஞானம் பெறுவது போல லிட்டில் பில்கிரிமில் வரும்  சுதானன் பல ஆண் பெண் துறவிகளையும், மிருகங்களையும், பறவைகளையும், தாவரங்களையும் சந்தித்து ஞானம் பெறுகிறான். கோ யுன் அவதாமசக சூத்திரத்தின் பத்து படி பாதையை அப்படியே நாவலின் உள்க்கட்டமைப்பாக வைத்திருக்கிறார். மொத்தம் 53 உரையாடல்கள். தெரியாத அதிசயத்தை தெரிந்த வடிவத்தை வைத்து விளக்கும் தவறினை செய்யும்  மேற்கத்திய விமர்சகர்கள் லிட்டில் பில்கிரிம் நாவலை தாந்தேயின் டிவைன் காமெடியோடு ஒப்பிடத்தலைப்படுகிறார்கள். ஆனால் ‘லிட்டில் பில்கிரிம்’ மேற்கத்திய மரபின் அர்த்தத்தில் வடிவமுடைய  காப்பியநாவல் அல்ல; இந்திய தத்துவங்களின் கதைகூறலுக்கு அணுக்கமான கதை சொல்லலைக் கொண்ட

    ‘லிட்டில் பில்கிரிம்’  சுதானனுக்கு வயது ஏறுவதே இல்லை நாவலில் காலம் கழிந்தாலும் அவன் சிறுவனாகவே இருக்கிறான். போரில் நாவலின் ஆசிரியர் கோ யுன்னைப் போலவே குடும்பத்தை இழந்த அனாதை சுதானனின் சந்திப்புகள் பத்துபடிப் பாதை வழியே மெதுவாக பூரணவிழிப்பினை நோக்கி நகர்வதாகத் தோன்றினாலும் அவனுக்கு அதி விழிப்பு சடாரென்றே நிகழ்கிறது; சுதானன் அவனைப் போலவே போரில் குடும்பத்தை இழந்த இன்னொரு சிறுவனை சந்திக்கும்போது சாவினைக் கடந்த சுழற்சி உறுதிப்படுகிறது.

    கோ யுன் ‘லிட்டில் பில்கிரிம்’ நாவலை இருபத்தி இரண்டு வருடங்களில் எழுதி முடித்தார். நாவலின்  முதல் பகுதி  கவித்துவமாகவும், நடுப்பகுதி சமூக பிரச்சினைகள் நிரம்பியதாகவும் மூன்றாம் இறுதிப்பகுதி தத்துவார்த்தமாகவும் இருக்கிறது. எனக்குப் பிடித்த பகுதிகள் நாவலின் ஆரம்ப பகுதிகளே.

லிட்டில் பில்கிரிம் இவ்வாறாக ஆரம்பிக்கிறது:

“The river was beginning to loom into view beyond a cluster of hybiscus trees hanging as if in a drunken stupor. It flowed quickly in the early morning light the sound of its rippling subdued . For little Sudhana, that glimpse of the the river constituted the first awareness of the world as he regained consciousness.
    “He’s alive!” Manjushri rejoiced. The oldman rescued the child evening before, as the boy floated close to the riverbank. All night long, the aged Manjushri had kept watch beside him on the sandy shore of the vast triangular reach where the Son River united with a small tributary before flowing down to join the Gaṅgā.

    They were in the northern regions of what is now called India. All the nation’s frontier’s and fortresses were in a state of unprecedented alert. King Virudhaka had determined to wipe the entire Shakya clan of Kapilavastu  from the face of the Earth. …….”


“லிட்டில் பில்கிரிம்” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அது சிறுவர்களுக்கான மிகச் சிறந்த நாவலாகவும் இருக்கும்.

    http://www.amazon.com/Little-Pilgrim-Novel-Ko-Un/dp/1888375434

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 12 - டபுள்யூ.ஜி. செபால்ட் (W.G. Sebald) The Rings of Saturn



 

தியானம் போல ஒரு நாவலின் உரை நடை இருக்க முடியுமா? அரிஸ்டாட்டிலிய நாடகக்கதை வடிவம், வணிகநாவல்கள், ஹாலிவுட் சினிமா, அவற்றின் தமிழ்க் கள்ளக்குழந்தைகள் என்று பொதுத்தளத்தை ஆக்கிரமித்திருப்பது நாம் அறிந்ததுதான்.  அரிஸ்டாட்டிலிய நாடகக்கதை வடிவத்தினை உலக இலக்கியம்  பல வகைகளிலும் துறந்து விட்டது. அப்படி அரிஸ்டாட்டிலிய நாடக்கதை வடிவத்தினை முற்றிலும் துறந்த நாவல் The Rings of Saturn.  நாவலில் ஆழ்ந்த அமைதியை, நினைவுகளின் பவித்திரத்தை, தொலைந்து போன நினைவுகளை, ஆர்ப்பாட்டமில்லாத ஆனால்  தீவிர உணர்ச்சிகளை,  அபூர்வமான தியான உரைநடையாக்கியிருக்கிறார் செபால்ட்.  இங்கிலாந்தில் வாழ்ந்த ஜெர்மானியரான செபால்ட் ஜெர்மன் மொழியில் எழுதிய The Rings of Saturn 1999 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
   
    என்ன வகையான தியானத்தை வடிவமைக்கிறது செபால்டின் உரைநடை? The Rings of Saturn நாவலில் பெயரில்லாத பயணி ஒருவர் இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலேயே கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறார். அந்தப் பயணியின் தன்னிலைக் கதையாடலாக சொல்லப்படுகின்ற நாவல் அவர் சந்திக்கின்ற மனிதர்கள், பார்க்கின்ற கட்டிடங்கள், அவருக்கு அனுபவமாகின்ற நிலப்பகுதிகள் ஆகினவற்றை அவை கிளர்த்துகின்ற நினைவுகளோடு, சிந்தனைகளோடு  இணைக்கிறது. பயண நூலா, நினைவுக்குறிப்புகளா, அனுபவப்பதிவுகளா என்று தனித்து சொல்லவியலாத வகையில் பிரக்ஞையின் தூண்டுதலகள் செபால்டின் உரைநடையில் இணைக்கப்படுகின்றன. இது சுதந்திர இணைவுகளில் ஓடும், மொழியின் ஒலி வழுக்கல்களால் தொடரும் நனவோடை உத்தி அல்ல. நுண்ணுணர்வுகள் உயிர்பெற சிந்தனையின் இழைகள் நனவிலிக்குள் நீர் போல கசிந்து ஊடுறுவும் உரைநடை, கதை சொல்லல். கதாபத்திரங்கள் அவர்களின் வீர தீரச் செயல்கள் இவை நிரம்பியவே கதைசொல்லல் என்று நம்புபவர்களுக்கு செபால்டின் நாவல் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கும். கதைசொல்லல்கள் பல தரப்பட்டவை அவற்றின் அழகுகள் வித்தியாசமானவை, விதிகளுக்குள் அடங்காதவை, தொடர்ந்த உரையாடல் தருகின்ற அழகிய அனுபவத்தை அளிப்பவை என்று கதைசொல்லலின் எல்லைகளை விஸ்தரித்து புரிந்துகொள்ளும் வாச்கர்களுக்கு செபால்டின் நாவல் அளிக்கின்ற ‘வாசிப்பின்பம்’ எல்லையற்றது. ஆம், அந்த தனித்துவ வாசக அனுபவத்தை ‘வாசிப்பின்பம்’ என்றுதான் சொல்ல வேண்டும். வேறெப்படி சொல்வதாம்?

    ஆனால் செபால்டின் கதைசொல்லலிலும் உரைநடையிலும் ஆழமான துக்கம் அடியோட்டமாக இருக்கிறது. The Rings of Saturnஇன் கதை சொல்லி மூன்று விதமான அழிவுகளைப் பற்றி தியானிக்கிறான்; இயற்கை உண்டாக்குகிற அழிவுகள், அழிந்துபோன நகரங்கள், அழிந்து காணாமல் போன வாழ்க்கை முறைகள். அழிவுகளைப் பற்றி தியானிக்கின்ற கதைசொல்லிக்கு இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பும் நினைவுகளூடே மேலெழுந்து வருகின்றன. 

     The Rings of Saturn இன் கதைசொல்லியின் நிலையற்ற பிரக்ஞை அவன் பயணம் செய்கின்ற  இடங்களின் காட்சிப்புலத்தினால் தூண்டப்படுகிறது. நாவலில் செபால்ட் பல தேவாலயங்கள், மரங்கள், பாலங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களையும் தன் கதைசொல்லலின் பகுதிகளாக இணைக்கிறார். பயணம் என்பது எப்போதுமே ஓரிடத்திற்கு திரும்பச் செல்லும்போதுதான் உண்மையிலேயே அனுபவமாகிறதோ என்று நாம் வியக்கிறோம் வேறெந்த எழுத்தாளரிடம் செபால்டின் கதைசொல்லி போன்ற பயணியை நாம் எதிர்கொண்டிருக்கிறோம் என்று நான் நினைத்துப்பார்த்தேன். டி.ஹெச்.லாரண்சிடம் நாம் காணக்கூடும். வி.எஸ்.நய்ப்பாலில் The Enigma of Arrivalஇல் நாம் செபால்டின் பயணிக்கு நிகரான தியானத்தையுடையவரை நாம் அடையாளம் காணக்கூடும். ஏன் வர்ஜினியா வுல்ஃபின் The Waves  நாவல் கூட நினைவுக்கு வரக்கூடும். ஆனால் செபால்டின் அபூர்வம் அவர் ஜெர்மனியைப்பற்றி ஜெர்மனிக்கு வெளியே இங்கிலாந்தில் வாழ்ந்து எழுதுவதால் செழுமை பெற்றது.    செபால்ட் ஜெர்மனியை விட்டு வெளியே வாழ்ந்ததாலே அவரின் பவித்திர நினைவலைகளில் ஜெர்மனியின் போருக்குப் பிந்தைய இலக்கியத்தின் ரொமாண்டிசச கறை படிவதில்லை. பழம்பெருமைக்கான ஏக்கமாகவும் கொச்சையாவதில்லை.

    செபால்டின் கதைசொல்லலின் வசீகரம் அது காருண்யத்தின் கொடைகளால் நிரம்பியிருப்பதுதான் என்று நான் மெதுவாகவே கண்டுபிடித்தேன். அது ஈடு இணையற்ற வசீகரமும் கூட.

    தியானத்தின் நோக்கம் மௌனம் என்று யாரேனும் சொல்வதைக் கேட்கும்போதோ, எழுதியதைப் படிக்கும் போதோ எனக்கு செபால்டின்  The Rings of Saturn நாவலில் வரும் இயற்கையைப் பற்றிய அவதானிப்புகளை, குறிப்பாக பெரிய வெடிப்புகளில் சூரிய மண்டலம் தோன்றி அதில் சனி கிரகத்தைச் சுற்றி சுழலும் வளையங்களுக்கு என்ன பொருள் என்று கேட்கத் தோன்றும். அதாவது பொருளாலான பிரபஞ்சமே அது அழிவிலிருந்து உயிர்த்ததை சனியின் வளையங்களின் ஒளிர்வுகள் என நினைவு வைத்திருக்கும்போது, மனிதப் பிரக்ஞை அழிவின் நினைவு ஒளிர்வுகளை இழந்து எப்படி மௌனம் கொள்ளும்? 

http://www.amazon.com/The-Rings-Saturn-W-Sebald/dp/0811214133 

Monday, April 13, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 11- ஹருகி முராகமி (Haruki Murakami) “1Q84”





தமிழில் சமீபத்தில் அதிகமும் மொழி பெயர்க்கப்பட்ட ஆசிரியர் ஹருகி முராகமியாகத்தான் இருக்க வேண்டும் . சென்னை புத்தகக்கண்காட்சியில் முராகமியின் ‘நார்வேஜியன் வுட்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். சில பக்கங்களைப் புரட்டி பார்த்து சில பத்திகளை வாசித்துப் பார்த்தேன். தமிழே விசித்திரமாக இருந்தது. ஏர்டெல்லின் மாதாந்திர மொபைல் பில் கூட விளங்கிவிடும்  போல ஆனால் இந்த முராகமி நாவல் தமிழில் சுத்தமாகப் புரியாது என்று தோன்றியது. திருச்செந்தூர் முருகனுக்கு நேர்ந்து புத்தகத்தை கீழே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அப்பன் முருகன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்.

முராகமியின் 1Q84 நாவலில் வரும் ஒரு அத்தியாயம் ‘பூனைகளின் நகரம்’, தனியாக சிறுகதையாகவும் வாசிக்கப்படுகிறது சிறுகதையாக மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதையை எங்கே வாசித்தேன் என்று குறித்துவைத்துக்கொள்ளவில்லை ஆனால் நல்ல மொழிபெயர்ப்பாக இருந்தது. முராகமியின் உரைநடை எளிமையானது ஆகையால் மொழிபெயர்ப்பது சிரமமாக இருக்காது. மூன்று பாகங்களைக் கொண்ட பெரிய நாவலான 1Q84 தமிழில்  மொழிபெயர்க்கப்பட்டால் புதிய புனைவுலகம் தமிழுக்கு அறிமுகமாகும். 

ஹருகி முராகமியின் புனைவுலகம் எப்படிப்பட்டது? அது லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் மூலமாக அறிமுகமான மாந்தரீக யதார்த்தவாத இலக்கிய வகையைச் சார்ந்ததும் இல்லை, ஜப்பானிய மரபிலிருந்து கிளைத்த காவபட்டா நாவல் வகையும் இல்லை. முராகமியின் புனைவுலகம் உலகமயமான சமகால ஜப்பானிய சமூகத்தின் நனவிலியை நோக்கி கீழே இறங்கிச் செல்வதாக இருக்கிறது.   “கீழே இறங்கிச் செல்லுதல்” என்பது தனது எழுத்தில் அலுப்பூட்டக்கூடிய அளவில் ஏணியில் இறங்குதல், கிணற்றுக்குள் இறங்குதல் என பலவகைகளிலும் வர,  இறங்கியபின் கதையில் தள மாற்றம் நிகழ்வது தனக்கே பிடிக்கவில்லை என முராகமி ஒரு பேட்டியில் சொல்கிறார். அதனால்தானோ என்னவோ 1Q84 நாவலில் கதையின் நாயகி அமோமி முதல் அத்தியாயத்தில் டோக்கியோ நகர பாலமொன்றில் மேலேறிச் செல்லும்போது நனவின் தள மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. டோக்கியோவில் வசிக்கும் முராகமி டோக்கியோவில் மாயாஜாலங்கள் எதுவும் நிகழ்வதில்லை, பறக்கும் கம்பளங்கள் போன்ற மாயப்பொருட்கள் எதுவும் காணக்கிடைப்பதில்லை மயாஜாலங்கள் நிகழவேண்டுமென்றால் நீங்கள் உங்களுள்ளேயே உங்கள் மனதின் அடியாழத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார். முராகமியின் நாவல்கள் இப்படி ஜப்பனியர்களை அவர்கள் மனதின் அடியாழத்துக்கு உண்மையிலேயே கூட்டிச் செல்கிறது போலும். ஓவ்வொரு முரகாமி நாவல் வெளியீட்டின் போதும் ஒட்டு மொத்த ஜப்பானே அதை எதிர்பார்த்து காத்திருக்கிறது. முராகமியின் நாவல்களின் கரு என்ன என்று  பலவிதமான யூகங்கள் வெகுஜன ஊடகங்களில் எழுப்படுகின்றன. அதனால் முராகமி 1Q89 நாவலின் கருவை படு ரகசியமாக வைத்திருந்தார். நாவல் வெளியான மூன்று மணி நேரத்திலேயே நான்கு மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.  2008-2009 ஜப்பானிய மொழியில் வெளியான 1Q84 நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2011 இல் ஆங்கிலத்தில் வெளியானது அது இன்றுவரை தொடர்ந்து அதிகம் விற்பனையான இலக்கிய படைப்பாக இருந்துவருகிறது.
முராகாமியின் நாவலின் ஈர்ப்பு அது ஒரு கனவு போலவே எழுதப்பட்டிருப்பதுதான் என்று நான் நினைக்கிறேன். கனவு போலவே அனுபவமாகின்ற 1Q84  ஒரு காதல் கதையாகவும், மர்ம நாவலாகவும், சுயகண்டுபிடிப்பின் சாகசமாகவும், அதீத கற்பனையாகவும், தேவதைக்கதையாகவும்,  வார்த்தைகளற்ற துக்கமாகவும், அபத்தத்தின் வெற்றிகளாகவும் முழுமை கொள்கிறது.

கதை நாவலின் கதாநாயகி அமோமி முதல் அத்தியாயத்தில் அனாமதேய டாக்சி டிரைவர் ஒருவனின் அமானுஷ்ய ஆலோசனையின் படி டோக்கியோ நகர பாலமொன்றில் ஏற அவள் நனவின் தளங்கள் மாறுகின்றன. நாவலின் தலைப்பு ஆர்வெல்லின் புகழ்பெற்ற நாவலான “1984” ஐ நினைவுபடுத்தும்படி பெயரிடப்பட்டிருக்கும் 1Q84 இல் நாவலின் நிகழ்வுகளும் புனைவாக்கப்பட்ட 1984 இல் நடக்கின்றன.1984இல் ஜப்பானில் பிரசித்திபெற்று விளங்கிய பாப் இசைப் பாடல்கள் நாவல் முழுக்க வெவ்வேறு விபரக்குறிப்புகளாக வருகின்றன. அமோமி ஒரு தொழில்முறை கொலைகாரி; அவள் Sakigake  என்ற ரகசிய மதக் குழு ஒன்றின் தலைவரை கொலை செய்யுமாறு  பணிக்கப்பட்டிருக்கிறாள். அவளை அனுப்பிய செல்வந்த மூதாட்டி விதவை (the dowager ) என்று மட்டுமே நாவலில் அழைக்கப்படுகிறாள். அந்த சீமாட்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விடுதி நடத்தி வருகிறாள். அவளுடைய விடுதியில் தாபூசா என்ற பத்து வயது சிறுமி  வேறொரு Air Chrysalis என்ற நாவலில் வரும் சிறிய மனிதர்களால் காற்றில் ஒரு கூண்டு அமைத்து கடத்தப்படுகிறாள்.  விதவை சீமாட்டி ரகசிய மதக் குழுவின்  குருவும் ஆஸ்ரமத் தலைவருமான ‘தி லீடர்’ தான் கடத்தியிருக்க வேண்டும்  என்று துப்பறிந்து அவனைக் கொல்வதற்கு அமோமியை அனுப்புகிறாள். அமோமி ஆன்மீக குரு தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் பணியாள் வேடமிட்டு நுழைந்து அவனை சந்திக்கும்போது அவனுக்கு உண்மையிலேயே சில அபூர்வ சக்திகள் இருக்கின்றன. ஆனால் அவன் கடுமையான கழுத்து தசைப்பிடிப்பினால் அவதிபட்டுக்கொண்டிருக்கிறான். அவன் அமோமியிடம் தன்னை வலியில்லாமல் கொன்றுவிடுமாறு வேண்டுகிறான். இந்த சம்பவங்களின் போதே அமோமி 1Q84 என்ற மாற்று யதார்த்த தளத்தினுள் தள்ளப்பட்டு விடுகிறாள். அமோமி இந்த சம்பவங்களை ஆவணக்காப்பகத்திலுள்ள செய்தித்தாள்களின் மூலம் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறாள். ஆன்மீக குரு கொலை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறவில்லை அதை இயற்கை மரணம் என்றே அறிவிக்கிறது.

அமோமியின் கதை நடக்கும்போதே இணையாக அமோமியின் பள்ளித் தோழன் டெங்கோ கவானாவின் கதையும் சொல்லப்படுகிறது. டென்கோ ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக இருக்கிறான். அவன் ஒரு இலக்கிய எழுத்தாளனும் கூட. டெங்கோவிடம் அவனுடைய பதிப்பாளர் 17 வயது பெண் எழுதிய கதையைக் கொடுத்து திருத்தி தருமாறு கேட்கிறார். அந்தக் குறு நாவல் Air Chrysalis. அதை எழுதிய ஃபூக்கோ எரி மனவளர்ச்சி குன்றிய பெண். அவள் அமோயியால் கொல்லப்படுகிற ஆன்மீக குருவின் மகள். அவள் பத்து வயது வரை ரகசிய மதக்குழுவின் ஆஸ்ரமத்தின் கம்யூனில் வளர்ந்து அதன் பிறகு அந்த ஆஸ்ரமத்திற்கு  எதிர் கம்யூன் அமைத்த புரபசர் எபிசுனோவின் வீட்டில் வளர்கிறாள். எபிசுனோவின் மகள் Air Chrysalis கதையை, அதாவது பத்து வயது வரையிலான அவளுடைய ஆஸ்ரம நினைவுகளை குத்துமதிப்பாக வார்த்தைப்படுத்த உதவுகிறாள். Air Chrysalis ஒரு தேவதைக்கதை. அதில் சிறிய மனிதர்கள் சிறுமிகளை தொந்திரவு செய்கிறார்கள். டெஙோ ஃபூக்கொ எரியின் கதையை செழுமைப்படுத்திக்கொடுக்க அது அதிகம் விற்று விற்பனையில் சாதனை படைக்கிறது. 

தங்கள் தலைவரின் கொலையை துப்பறிய யூஷிக்காவா என்ற அசிங்கமான வக்கீலை நியமிக்கிறது ரகசிய மதக்குழு. யூஷிக்காவா முராகமியின் வேறொரு கதையிலும் வரும் கதாபாத்திரம். உஷிக்காவா டென்கோவும் அமோமியும்  பள்ளித்தோழர்கள் என்று கண்டுபிடித்துவிடுகிறான். அவன் ஃபூக்கொ எரி Air Chrysalis கதையை டெங்கோவின்  உதவியுடன் எழுதினாள் என்றும் கண்டுபிடித்துவிடுகிறான். அமோமியும் டெங்கோவும் யூஷிக்காவின் துப்பறிதலின் மூலமாக இருபது வருடங்களுக்குப் பின் இணைகிறார்கள். அதாவது இரண்டு இணைகதைகளும் சந்திக்கின்றன. யூஷிக்காவாவை சீமாட்டி விதவையின் காவலன் டமரு கொன்று அமோமியை காப்பாற்றி விடுகிறான். டமரு நாவலில் ஒரு சுவாரஸ்மான கதாபாத்திரம். ஓரின சேர்க்கையாளன். பெரிய படிப்பாளி. ஷேக்ஸ்பியரையும் ஆண்டன் செகாவ்வையும் அடிக்கடி மேற்கோள் காட்டி  பேசுகிறவன். டமரு யுச்சிக்காவை கொல்லும்போதும் ஆண்டன் செகாவ்வை மேற்கோள்களை சொல்கிறான் ( எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய செகாவ் நூலை படித்திருப்பான் போல) 

மேற்சொன்ன சிக்கலான கதை தொய்வில்லாமல் சொல்லப்படுகிறது. பாலியல் சித்தரிப்புகளுக்கும் காட்சிகளுக்கும் குறைவில்லை. அமோமியும் அவளுடைய போலீஸ் தோழி அயோமியும் சேர்ந்து சிங்கிள்ஸ் பார்களுக்கு சென்று அவர்களுடைய அப்போதைய பாலியல் இச்சைக்கேற்ப ஆண்களைத் தேர்ந்தெடுத்து  உடலுறவு கொள்கிறார்கள். ஒரு முறை அவர்கள் வழுக்கைத் தலை ஆண்களை இச்சை கொள்வதும் தேர்ந்தெடுத்து உறவு கொள்வதும் நாவலில் விரிவாக விவரிக்கப்படுகிறது. அயோமி மர்மமான முறையில் நாவலில் கொல்லப்பட்டுவிடுகிறாள். பொலீசும் கொலையாளியும் ஒரே மன அமைப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

டெங்கோ மருத்துவமனையில் இருக்கும் தன் தந்தையை பார்க்க பூனைகளின் நகரத்திற்கு செல்கிறான். போகிற வழியில் நர்ஸ் பெண் ஒருத்தியுடன் உறவு கொள்கிறான். இலக்கற்ற, காதலற்ற உறவுகள் நாவலில் பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் தொடர்பற்றும் தொடர்புடனும் இருக்கின்றன. கேபிள் டிவி சந்தா சேகரிக்க வீடு வீடாக அலையும் உருவம் டெங்கோவின் தந்தை என்று வாசகனுக்கு தெரிகிறது. டெங்கோவுக்கு மருத்துவமனையில் இருக்கும் தந்தையைத்தான் தெரியும்.

  அமோமிக்கும், டெங்கோவுக்கும் இருக்கும் சிறிய பள்ளி நினைவு அவர்களின் வன்முறையான வாழ்க்கை சம்பவங்களூடே காதலென மலர அவர்கள் முழு நிலவினை பார்த்து நிற்க நாவல் முடிகிறது. அவர்கள் அன்று ஆனால் இரு முழு நிலவுகளின் உதயத்தைப் பார்க்கிறார்கள். ஒன்று யதார்த்தம் சார்ந்தது மற்றொன்று 1Q84 ஐ சார்ந்தது. 






Sunday, April 12, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 10 ஜெர்சி கோசின்ஸ்கி (Jerzy Kosinski) “Steps”- (கூடவே ஜெயமோகனுக்கு சில விளக்கங்களும், ஆர். அபிலாஷுக்கு ஒரு வாழ்த்தும்)






ஜெர்சி கோசின்ஸ்கியின் புகழ்பெற்ற “Painted Bird” என்ற நாவலில் இரண்டாம் உலகப்போரின்போது சிறுவன் ஒருவன் ஐரோப்பிய கிராமங்களில் சுற்றியலைகிறான்; அவனை சாதாரண கிராமமக்களும் ராணுவத்தினரும் சொல்லவொணாத வன்கொடுமைக்குள்ளாக்குகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்கும், யூத இன அழிப்புக்கும் தப்பிய ஜெர்சி கோசின்ஸ்கி அமெரிக்காவில் குடியேறினார். அவருடைய நாவல்கள் அனைத்துமே போருக்குப் பிந்தைய, யூத இன அழிவினை நினைவுகளாகவும், கற்பனைகளாவும், ஏந்திய அகத்தினை ஆராய்வதாக இருக்கிறது. Pinball,  Being There, The Hermit of the 69th street, Cockpit, Blind Date, Passion Play ஆகியன அவருடைய இதர நாவல்கள். Being There திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.

    ஜெர்சி கோசின்ஸ்கியின் Steps எனக்கு ஏன் ‘பிடித்த’ நாவலாகிறது என்பதை எழுதும்போதே எனது தேர்வுகளின் அடிப்படையைப் பற்றியும் ஒரளவேனும் விளக்கமளிக்கலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் ஏழு நாவல்கள் பட்டியலுக்கு  ஜெயமோகன்  அவருடைய தளத்தில் “எம்.டி.எம்மின் ரசனையில் புனைவை ஒரு விளையாட்டாகக் காட்டும் முறைக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது” என்று எழுதியிருக்கிறார். ஆனால் என்னுடைய தேர்வுகள் மொழி, வடிவ விளையாட்டுக்களின் நேர்த்தியை வெளிப்படுத்துகிற நாவல்கள் மட்டுமல்ல. ஏனெனில் நாவல் வடிவத்தினை நான் அவ்வளவு எளிய மகிழ்ச்சிகளை அளிப்பவையாக மட்டும் கருதவில்லை. ஜெயமோகன் தன் ‘வெண்முரசு’  வரிசை நாவல்களை காப்பிய வடிவத்தில் எழுதும்போது எப்படி ஒரு தேச உருவாக்கத்தினை அதன் பாரம்பரியத்தோடு சேர்த்து புனர் நிர்மாணம் செய்ய முடியும் என்று எண்ணுகிறாரோ அது போலவே அதன் வெவ்வேறு காலகட்டங்களில் நாவல் என்ற வடிவம் தன் நிலமும் வரலாறும் சார்ந்து பல மதிப்பீடுகளை உருவாக்குகிறது அந்த மதிப்பீடுகளை அந்தந்த நாவல்களின் விளையாட்டுக்களின் வழி அறிந்து அடையாளம் காட்ட முடியும் என்று நான் எண்ணுகிறேன். உலக இலக்கியத்தில் படைக்கப்பட்ட  பல நாவல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுமென்றால் அவற்றைப்பற்றிய சொல்லாடல் பரவலாகுமென்றால் நம் படைப்புகள் உருவாக்க விரும்புகின்ற  விழுமியங்கள் வேறு வகைமையினதாக இருக்கும் என்பது என் எண்ணம். அதாவது ‘வெண்முரசு’ பின்னை காலனீய தமிழ்சமூகத்தில் உருவாக்க யத்தனிக்கும் இந்திய தேச புனருத்தானம், வீர நாயகர்களின் வழிபாடு, பராம்பரிய குல, சாதிய உறவுகள் மற்றும் மோதல்கள், சடங்குகள், மரபுகள், ‘குலச்சபைகள்’, உணவு பழக்கவழக்கங்கள், சமஸ்கிருத மந்திரங்கள், பழம்பெருமை  ஆகியவற்றால் ஆன பாரம்பரியம், பழமையின் பிடிப்பில்  வாசகனையும் தலைமுறைகளையும் நிரந்தரமாகப் பிணைக்கும் கதையாடல்- ஆகிய மதிப்பீடுகளுக்கு அப்பால் சமகாலத்திய நவீன மனித இருத்தல்களின் பிரச்சனைகள் என்ன அவற்றை சமகாலத்திய உலக இலக்கியம் எவ்வாறெல்லாம் நவீனப்படுத்திப் பேசுகிறது என்பனவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சியே என் ‘ரசனை’ பட்டியல்.

    கதேயின் நாவல்கள் இல்லாமல் மேற்கத்திய சமூகத்தில் ‘தனிமனிதன்’,  சட்டம், சமூகம், ‘அறம்’ ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும் மதிப்பு  வாய்ந்த சமூக அலகாக தோற்றம் பெற்றிருக்க முடியாது, வளர்ச்சி பெற்றிருக்க இயலாது என்று அறிந்த அனைவருக்குமே நாவல் வடிவத்தின் வரலாற்று பலம் என்ன என்று தெரிந்திருக்கும்.  ஆனால் Sorrows of Young Werther ஐ படிக்கும் அனைவருக்கும் அந்த நாவல் மொழியின் கவித்துவம், நேர்த்தி, செழுமை, விளையாட்டு நிறைந்த ‘கலையாக’ மட்டுமே அனுபவமாகும்.  மொழி மற்றும் வடிவ விளையாட்டின் மேல் கவனத்தைக் குவிக்கும் நாவல்கள், அவற்றை மறைத்து வைத்திருக்கும் நாவல்கள் உருவாக்கும் மதிப்பீடுகளையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது. நகுலனின் ‘நினைவுப்பாதை’ சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகளின்’ போதாமையையும், நபகோவின் The Real Life of Sebastian Knight-இன் உயர்வையும் உடனே சுட்டிவிடுவது போல.  ‘நினைவுப்பாதை’ சிதைந்துவிட்ட எழுத்தாளனின் சுயத்தை வரைபடமாக்கி தமிழின் நவீனத்துவ பரப்பினை எடுத்தியம்பியதென்றால், ‘ஜே ஜே சில குறிப்புகள்’ எழுத்தாளனின் சுயத்தை சாதாரணர்களிடமிருந்து வேறுபடுத்தி, புனிதப்படுத்தி தமிழ் சமூகத்தில் Me Generation, Selfie Generation இன் வருகையை அறிவிக்கிறது. Me generation இன் அதீதம் அயன் ராண்டின் virtue of selfishness என்ற வக்கிர எல்லையினை அடைந்துவிட்ட அமெரிக்க சமூகத்தில் எழுத்தாளனின் சுயமே ஒரு புனைவு, வேறு பல புனைவுகளோடு பிணைக்கப்பட்டது என்ற தீவிரத்தினை சொல்கின்ற நபகோவின் The Real Life of Sebastian Knight புனைவின் ‘நிஜத்தினை’ சொல்கிறது.  ஆகவே மொழி, வடிவ விளையாட்டுக்கள் கொண்ட நாவல்கள் திறவுகோல்கள், அவை திறப்பவை அவற்றின் பிரதி எல்லைகள் தாண்டியவை.  “எல்லையில்லா விளையாட்டுடையவர் யாரவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று கம்பன் நமக்கு சொல்லித் தரவில்லையா? விஷ்ணு மாயை என்ற விளையாட்டாக உலகைக் காணவேண்டும் என்ற நம் தத்துவஞானிகள் நம்முடைய பொது அறிவில் இருப்பதில்லையா?

    மேற்சொன்ன பின்னணியுடன் வாசித்தால் நான் ‘எனக்குப் பிடித்த நாவல்கள்’ வரிசைக்கான குறிப்புகள் ‘ரசனை’, ‘பிடித்திருக்கிறது’, ‘பிடிக்கவில்லை’ போன்ற பதங்களை பயன்படுத்தும் mode of discourse அவ்வளவுதான் என்பது விளங்கும். சொல்லாடல் பாங்குகளை போன்மை செய்வது அவற்றை கவிழ்ப்பதற்கே, அவற்றை நிலைநிறுத்துவதற்கு அல்ல.

    ரசனை விமர்சனத்தை நான் கையாளும் விதம் இப்படி இருக்க, ஜெயகாந்தனுக்கு நான் எழுதிய அஞ்சலி குறிப்பினை ரஜினி ரசிகனின் உயற்வு நவிற்சி போல இருக்கிறது என்று வாசித்திருக்கிறார் ஆர்.அபிலாஷ். வேடிக்கைதான். ஜெயகாந்தனுக்கு நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பு ஜெயகாந்தனின் எழுத்து என்னை வசீகரிக்கவில்லை என்று ஆரம்பித்து, என் தந்தையின் தலைமுறையினர் ஜெயகாந்தனின் எழுத்துக்களில் எதைக் கொண்டாடினார்கள் என்று சொல்லி, அதன் நீட்சியாக அவருடைய ‘கம்பீரத்தை’ என்ன மாதிரியான வாய்மொழி anecdotes வழி நாம் அறிகிறோம் என்பதை உதாரணங்கள் காட்டி, அவற்றை மீறிய விதத்தில் நான் அவரை சந்தித்த போது ‘கைக்கடக்கமாக குள்ளமாக இருந்தார்’ என்று எழுதுவது எப்படி ரஜினி ரசிகன் ரஜினியை வியந்தோதுதல் போல அமைந்த கட்டுரையாகும்? அபிலாஷுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதா? இவர்  சாகித்ய அகாடமி இலக்கியத்திற்கு வழங்கும் யுவ புரஷ்கார் விருது பெற்றவர். ஆர். அபிலாஷ் மேலும் வளர்ந்து தன்னுடைய மழலைச்சொற்களுக்கு சிசு புரஷ்கார் விருது பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். நிற்க.

    என்னுடைய ‘ரசனை’ யின்படி எனக்குப் ‘பிடித்த’ ஜெர்சி கோசின்ஸ்கியின் Steps  நாவலை நான் இரண்டாம் முறை வாசிக்க விரும்பமாட்டேன். ஏனென்றால் Steps மனிதனின் கற்பனை வன்முறையினை எந்த எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தது என்பதனையும் யூத இன அழிப்பின் குரூர நினைவுகள் நவீன மனிதனின் பிரக்ஞையின் அங்கமாக எப்படி மாறிவிட்டது என்பதையும் வாசகனின் நரம்புகள் கூழாகும் விதத்தில் சொல்லும் நாவல். கோசின்ஸ்கியின் நாவல்கள் செர்ஜி டூப்ரோவ்ஸ்கி ஃப்ரெஞ்ச் மொழியில் அறிமுகப்படுத்திய Autofiction வகையைச் சார்ந்தது என்று பொதுவாகக் கருதப்படுக்கின்றன.  சுய வரலாற்றினை தன்னிச்சையான சுதந்திர எழுத்துடன் கற்பனை கலந்து எழுதும் ஆட்டோஃபிக்‌ஷனை இந்த நாவலில் பிரம்மை கலந்து எழுதுகிறார் கோசின்ஸ்கி. கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. நினைவுகளும் கற்பனைகளும் பிரம்மைகளும் துண்டு துண்டாக அத்தியாயங்களாகின்றன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக சில சமயங்களில் இருக்கின்றன; பல சமயங்களில் இருப்பதில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதி குரூர வன்முறை சித்தரிப்புகள் இருக்கின்றன. நாவலின் நாயகனுக்கு அடையாளமில்லை அவன் நகரத்தின் மிருகக்காட்சி சாலையில் ஆக்டோபஸ் ஒன்று தன்னைத்தானே சாப்பிட்டு அழித்துக்கொள்வதைப் பார்ப்பதற்காக போவதில் நாவல் ஆரம்பிக்கிறது. போர்ச்சூழலில் உள்ள கிராமம், மன நோயாளிகளுக்கான மருத்துவமனை, கழிப்பறை, புகைப்படம் கழுவுவதற்கான இருட்டறை, மயானம், அறியப்படாத இடம் ஆகிய இடங்களில் சம்பவங்கள் நடக்கின்றன. Hermit of the 69th street இல் இருந்த நகைச்சுவை கிஞ்சித்தும் Steps இல் இல்லை. Paris Review : Art of Fiction பேட்டியில் கோசின்ஸ்கி தான் ஒரு புகைப்படக் கலைஞரும் ஆகையால் புகைப்படம் கழுவதற்கான இருட்டறையே உலகினை காட்சிப்படுத்துவதற்கான தன்னுடைய உருவகம் என்று குறிப்பிடுகிறார். இந்த வன்முறைக்காட்சிகளில் வன்முறையாளன்-பலிகடா, ஒடுக்குபவன் - ஒடுக்கப்படுபவன் ஆண்டான் - அடிமை இருவருமே ஒரே மாதியான மன அமைப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலக்கியத்தில் இதற்கான முன் மாதிரி ஜெனெயின் எழுத்துக்களில் இருக்கிறது. The Art of the Self: Essays à propos Steps (1968) என்ற நூலில் புகைப்படம் கழுவுவதற்கான இருட்டறையாகிய இவ்வுலகிலிருந்து தான் ஏன் தப்பித்து ஓட நினைக்கிறேன் என்று கோசின்ஸ்கி ஸ்டெப்ஸ் நாவலை மையமாக வைத்து எழுதுகிறார். அதீதமான வன்முறையை எழுதிய கோசின்ஸ்கி தன் வாழ்க்கையில் தாந்திரீக பௌத்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அதை Hermit of the 69th street நாவலிலும் பதிவு செய்தார். யூத இன அழிப்பின் கொடூர நினைவுகளிலிருந்து தப்ப இயலாத கோஸின்ஸ்கி 1991 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோஸின்ஸ்கியின் Steps நாவலை வாசிக்கும் அனுபவம் உங்கள் நரம்புகளை கூழ் கூழாக்கும் என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை.

http://www.amazon.com/Steps-Jerzy-Kosinski/dp/0802135269

Saturday, April 11, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 9 - இடாலோ கால்வினோ (Italo Calvino) "Invisible Cities"

"InvisibleCities" by Source. Licensed under Fair use via Wikipedia - http://en.wikipedia.org/wiki/File:InvisibleCities.jpg#/media/File:InvisibleCities.jpg

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 9 - இடாலோ கால்வினோ (Italo Calvino) “Invisible Cities”

    இடாலோ கால்வினோவின் Invisible Cities தமிழில் ஏற்கனவே மொழிபெயர்ப்பாகிவிட்டதா என்று தெரியவில்லை. “If on a winter's night a traveller” நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படுள்ளது. அந்த மொழிபெயர்ப்பை ஐந்தாறு பக்கங்கள் படித்தவுடனேயே மூடி வைத்துவிட்டேன். Invisible Cities தமிழில் மொழிபெயர்க்கப்படுமானால் அதற்கு ஒரு சீரும் சிறப்புமான நல்ல வாழ்க்கை அமைய அதன் மொழிபெயர்ப்பாளர் மெனெக்கெட வேண்டும்.

    ஏனெனில் கால்வினோவின் Invisible Cities மரபான அர்த்தத்தில் நாவல் இல்லை; இதில் கதையென்று ஏதும் சொல்லப்படுவதில்லை. சீனாவின் பேரரசரான குப்ளாய் கான் தனது விரியும் சாம்ராஜ்யத்தினை அறிந்துகொள்ள வேண்டி புகழ்பெற்ற பயணியான மார்கோ போலோவை அனுப்பி வைக்கிறார். மார்கோ பொலோ திரும்பி வந்து குப்ளாய் கானிடம் ஐம்பத்தைந்து நகரங்களைப் பற்றிய விவரணைகளைச் சொல்கிறார். மார்கோ போலோ பேசுவது ஒரு மொழி குப்ளாய் கான் புழங்குவது இன்னொரு மொழி இரண்டு பேரும் உரையாடுகிறார்கள். கற்பனையை ஊடகமாக வைத்து ‘மொழிபெயர்த்து’ இருவரும் புரிந்துகொள்கிறார்கள். ஆக, கற்பனையும் கற்பனையின் சாத்தியங்கள் மட்டுமே இந்நாவலின் கரு.

    நாவலில் வரும் அத்தனை நகரங்களும் பெண் பெயர்கள் கொண்டவை, அந்தப் பெண்களோடு கொள்ளும் ‘உறவுகளின்’ அடிப்படையில் பதினோரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. நகரங்களும் நினைவுகளும், நகரங்களும் ஆசையும், நகரங்களும் குறிகளும் (மக்களே! இங்கே குறிகள் என்பது signs என்ற ஆங்கில் வார்த்தையின் தமிழாக்கம்), ஒல்லியான நகரங்கள், வியாபார நகரங்கள், நகரங்களும் கண்களும், நகரங்களும் கண்களும், நகரங்களும் பெயர்களும், நகரங்களும் வானமும், நகரங்களும் இறந்தவர்களும், தொடர்ந்த நகரங்கள், மறைந்திருக்கும் நகரங்கள் ஆகியன பிரிவினைகள். 

    கால்வினோவின் மூல இத்தாலிய நாவல் 1972 இல் வெளிவந்தது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1975இல் வந்தது. க்ரியா ராமகிருஷ்ணன் 1986இல் கால்வினோவின் நாவல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் கால்வினோவின் ஒரு சிறுகதையை ‘இனி’ இதழுக்காக மொழிபெயர்த்தார் என்று ஞாபகம். கால்வினோவின் இதர படைப்புகளைத் தேடித்தேடி படித்த நான் 2004 ஆம் வருடம் ஃபிரான்ஸின் தலைநகரான பாரிசிலிருந்து நண்பர்களுடன் இத்தாலியின் ஃப்ளாரன்சுக்கும், வெனிசுக்கும் சாலைவழியாக பயணம் செய்தபோதுதான் Invisible Cities ஐ வாசித்தேன். அதற்குள் நான் உலகத்தை இரண்டு முறை சுற்றி வந்துவிட்டபடியால் மார்கோ போலோ போன்றே என்னுள் ஒரு பயணியின் அகம் உருவாகியிருந்தது. கால்வினோவின் ஐம்பத்தைந்து வசனகவிதைகளால் ஆன அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் என் பயண அனுபவங்களை கற்பனையால் மேலும் மேலும் செழுமைப்படுத்திக்கொண்டே இருந்தது. நாட்டார் வழக்காறுகளின் தொகுதியாக பிறந்த ஐரோப்பிய நாவல் செர்வாண்டசில் நகை பொலிவு பெற்று கால்வினோவின் Invisible Citiesஇல் எங்கே வந்து சேர்ந்திருக்கிறது பார்த்தீர்களா என்று வாய்விட்டு கூவினேன்.  என்னுடன் பயணம் செய்த இரண்டு ஃப்ரெஞ்சுத் தோழிகளும் “எங்கே வந்து சேர்ந்திருக்கிறதா? வெனிஸுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. வெனிஸுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக” என்று பதிலளித்தார்கள்.

    ஃப்ளாரென்ஸையும், வெனிஸையும் பார்த்த தாந்தே (Dante) எப்படி நரகத்தை (inferno) கற்பனை செய்திருக்கமுடியும் என்று தாந்தேயைத் திட்டிக்கொண்டே வெனிஸை சுற்றிப்பார்த்தேன். படித்துக்கொண்டிருக்கும் Invisible Cities இல் ஒரு பத்தி பொருத்தமாய் இருந்தது : “The inferno of the living is not something that will be; if there is one, it is what is already here, the inferno where we live every day, that we form by being together. There are two ways to escape suffering it. The first is easy for many: accept the inferno and become such a part of it that you can no longer see it. The second is risky and demands constant vigilance and apprehension: seek and learn to recognize who and what, in the midst of inferno, are not inferno, then make them endure, give them space.”

    வெனிஸிலிருந்து ஊர்திரும்ப கிளம்பியபோது காதலியைப் பிரியும் காதலனைப்போல என் நெஞ்சு விம்மியது. வெனிஸின் படகு வீட்டிலிருந்து பார்த்த ஆகாயத்தை மீண்டும் நான் எப்போது பார்ப்பேன்? “Memory's images, once they are fixed in words, are erased," Polo said. "Perhaps I am afraid of losing Venice all at once, if I speak of it, or perhaps, speaking of other cities, I have already lost it, little by little.”
   
    ஊர்திரும்பியபோது சென்னை நகரம் புத்தம் புதியதாய் இருந்தது: “...the people who move through the streets are all strangers. At each encounter, they imagine a thousand things about one another; meetings which could take place between them, conversations, surprises, caresses, bites. But no one greets anyone; eyes lock for a second, then dart away, seeking other eyes, never stopping...something runs among them, an exchange of glances like lines that connect one figure with another and draw arrows, stars, triangles, until all combinations are used up in a moment, and other characters come on to the scene... ”

    பயணம் தரும் கனவிலிருந்து விழித்து சென்னையின் தினசரி வாழ்க்கையில் மூழ்கிக்கொண்டிருந்தேன். என் தோழிகளிடம் இருந்து ஒரு போஸ்ட்கார்ட் வந்தது: “ உனக்கு ஒன்று தெரியுமா Invisible Cities நாவலில் வரும் அத்தனை நகரங்களுமே வெனிஸ்தான். கோர் விடால் எழுதியிருக்கிறார்.”  என்றாவது ஒரு நாள் நானும் சென்னையின் கன்ணுக்குப் புலப்படாத நகரங்களைப் பற்றிய ஒரு நீள் கவிதையை புனைவேன் அதன் தலைப்பு ‘அனாதையின் காலம் ‘ என்பதாக இருக்கும்.

http://www.amazon.in/Invisible-Cities-Vintage-Classics-Calvino/dp/0099429837

    

Friday, April 10, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள்- 8 யாசுனேரி காவபட்டா (Yasunari Kawabata) “Beauty and Sadness”


எனக்குப் பிடித்த நூறு நாவல்கள்- 8 யாசுனேரி காவபட்டா (Yasunari Kawabata) “Beauty and Sadness”

    இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யாசுனேரி காவபட்டாவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்து எழுதியவர் பிரம்மராஜன். அவர் காவபட்டாவின் நாவல் “House of Sleeping Beauties”இக்கு எழுதிய அறிமுகக் கட்டுரை விரிவானது அருமையானது. காவபட்டாவின் நாவல் தமிழில் “தூங்கும் அழகிகள் இல்லம்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பு எனக்கு திருப்தியைத் தரவில்லை. அதில் வரிக்கு வரி மொழிபெயர்ப்பு இலக்கணரீதியாக சரியாக இருப்பது என்னவோ உண்மைதான். காவபட்டா ஜப்பானிய மொழியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். எல்லாமே நூற்றிருபது பக்கங்களுக்குட்பட்ட படைப்புகளே.அவை அத்தனையும் ஆங்கிலத்தில் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவற்றுள் “House of Sleeping Beauties”, “Snow Country”, “One Thousand Cranes” ஆகியவை புகழ்பெற்றவை. “One Thousand Cranes” நாவலை தமிழில் மொழிபெயர்க்க முன்பொருமுறை நண்பர் ஒருவரிடம் பரிந்துரை செய்தேன். நாவலோடு போனவர்தான் இன்னும் மொழிபெயர்ப்பும் வெளிவரவில்லை கடன் கொடுத்த நாவல் பிரதியும் திரும்பி வரவில்லை. காவபட்டாவின் நோபெல் பரிசு ஏற்புரை “Moon and Snow in Japanese literature” என்ற தலைப்பில் அமைந்தது. நோபெல் பரிசு ஏற்புரைகளிலே மிகவும் கவித்துவமானது. அதை வாசித்தபோதுதான் காவபட்டாவின் நாவல்களிலேயே -அதாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவற்றுள்- அவருடைய அழகியலுக்கு மிகவும் அணுக்கமானது மேற்சொன்ன மூன்று நாவல்களும் அல்ல “Beauty and Sadness” தான் என்று நான் அறிந்தேன்.

    லா.ச. ராவின் உணர்ச்சிப் பெருக்கில் உத்வேகம் ஏறிய உரைநடை, வேறொரு ஆகச்சிறந்த எளிமையில் ஆனால் லா.சா.ராவின் உன்மத்தத்தை அப்படியே கடத்துவதாக இருக்குமானால் அந்த உரைநடையை என்னவென்று சொல்வீர்கள்? ஆங்கில மொழிபெயர்ப்பில் கூட Beauty and Sadness அத்தகைய எளிய, கட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் இருதயத்தை நொறுக்கிவிடும் hypersensitivityயோடு கூடிய உரைநடையைக் கொண்டிருக்கிறது. காவபட்டா தன்னுடைய “Moon and Snow in Japanese Literature உரையில் தன்னுடைய உரைநடையினையும், கதை சொல்லலையும் ஜப்பானின் பௌத்த தியான பாரம்பரியத்திலிருந்தும், ஹைக்கூ கவிதை மரபிலிருந்தும் உருவாக்கிகொண்டதாகச் சொல்கிறார். மெல்லிய தூரிகைத் தீற்றல் போன்ற விவரணைகள், அடங்கிய தொனியில் வெளிப்படும் உச்சபட்ச இச்சை, நிலப்பகுதியோடு சேர்ந்து எழும் உணர்வுகள், அழகில் மயங்கவும் சிந்திக்கவும் வைக்கும் உள்ளார்ந்த உவமைகள் என காவபட்டாவின் “Beauty and Sadness” ஒரு சங்கக் கவிதை போல இருக்கிறது. எளிமையான மொழி, பக்கங்களும் குறைவு என்பதால் மொழிபெயர்ப்பது சுலபம் ஆனால் அதன் ஆத்மாவைப் பிடிப்பது கடினம்.

    “Beauty and Sadness” இல் கதை எழுத்தாளன் ஒகி டோஷியோ தன் சொந்த ஊருக்கு திரும்புவதில் ஆரம்பிக்கிறது. ஒகி டோஷியோ தன் கடந்த கால காதலியான ஒடோகோ யுயெனோவை சந்திக்க நேர்கிறது. புகழ்பெற்ற ஓவியராகியிருக்கும் ஓடோகோயுயெனோ, கெய்கோ சகாமி என்ற யுவதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஒடோகோ யுயெனோவின் கடந்த கால காதலை அறியவரும் கெய்கோ சகாமி ஒகி டோஷியோ பெரும் துரோகத்தை ஒடோகோ யுயனோவிற்கு இழைத்துவிட்டதாக கருதுகிறாள் அவள் ஒகி டோஷியோவை எப்படி பழி வாங்குகிறால் என்று நாவல் சொல்கிறது. கெய்கோ சகாமி உணர்ச்சிகள் பொறாமை, பழி வாங்குதல், காதல், இளமையின் அகந்தை என பல அடுக்குகளால் நிரம்பியிருக்கின்றன. ஒகி, ஓடோகோ ஆகிய இருவருக்குமிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கடந்த கால காதலின் ஆனால் இன்றைக்கு பலி கேட்கும் உணர்ச்சிக்குவியலின் குறியீடாகவும் கெய்கோ நாவலின் கதைப்போக்கில் அபூர்வம் கொள்கிறாள்.  Sensuous and intriguing, “Beauty and Sadness” will haunt you!

http://www.amazon.com/Beauty-Sadness-Yasunari-Kawabata/dp/0679761055



Thursday, April 9, 2015

அஞ்சலி: ஜெயகாந்தன்





 ஜெயகாந்தனோடு நெருங்கிய நண்பராக இருந்த திரைப்பட நடிகர் ஒருவரின் மகள் எனக்கு கல்லூரித் தோழி; அவருடன் கல்லூரி நாட்களில் ஜெயகாந்தனை முதன்முதலாக சந்தித்திருக்கிறேன். அப்போது நான் ஆங்கில நாடகங்களை இயக்குபவனாக அறியப்பட்டதால் ஜெயகாந்தன் என்னிடத்தில் நாடகங்களைப் பற்றியே பேசினார் என்று நினைவு. பின்னர் 2002 ஆம் ஆண்டு தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் நடத்திய நாட்டுப்புற கலைகள் திருவிழாவுக்கு தலைமை விருந்தினராக அவரை அழைக்க போனபோது அவரோடு  உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது; அதைத் தொடர்ந்து அவரை பல முறை சந்தித்து ஓரிரு வருடங்கள் பழக வாய்ப்புகள் அமைந்தன. அந்த சமயங்களிலெல்லாம் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார் நான் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு வந்துவிடுவேன். ஒரே ஒரு முறை எனக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர் யார் என்று கேட்டார், நான் நகுலன் என்று பதிலளித்தேன். அவரும் அதற்கு மேல் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை. ஆனால் ஜெயகாந்தனின் ஆளுமை அவருடைய எழுத்தைவிட பெரியது என்று என்னுடைய டைரிக் குறிப்புகளில் எழுதியிருக்கிறேன். அது ஏன் என்று ஜெயகாந்தன் மறைந்துவிட்டதாக செய்தி வந்த இந்நாளில் யோசித்துப்பார்க்கிறேன்.

    மௌனி, புதுமைப்பித்தன், லா.ச.ரா., நகுலன் என அக உலகக் கலைஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட எனக்கு ஜெயகாந்தனின் சிறுகதைகள் வசீகரிக்கவில்லை; ஏனோ தானோவென்று படித்து வைத்தேன்.  பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் அவர்கள்தான் கல்லூரி நாட்களில் ஜெயகாந்தனை அணுக்கமாக வாசிக்கவேண்டியதன் அவசியத்தை எனக்கு எடுத்துச் சொன்னார். ‘ ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’, ‘பாரீசுக்குப் போ’ ஆகிய நாவல்களைப் பற்றியும் அதன் நாயகர்களான ஹென்றி, சாரங்கன் ஆகியோரின் சமூக ஒவ்வாமை, தனித்தன்மை பற்றியும் மணிக்கணக்கில் எஸ்.ஆல்பர்ட் பேசுவதை கவலையோடு உன்னிப்பாக கவனித்திருக்கிறேன். ‘சில நேரங்களில் சில மனிதர்களில்’ அதன் நாயகி தன் தாயிடம் ‘அக்னிப்பிரவேசம்’  சிறுகதையை வாசிக்கக்கொடுக்க, தாய் அக்னிப்பிரவேசம் சிறுகதையில் வரும் தாயைப்போல ஒரு குடம் தண்ணீரை ஊற்றி உன்னைத் தூய்மைப்படுத்தாமல் வீட்டைவிட்டு துரத்திவிட்டேனே என்று அழுவதாக வருவதன் Self reflexivity எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெயகாந்தனின் உரைநடை தட்டையானது, கவித்துவங்கள் இல்லாதது, உவமான உவமேயங்கள் குறியீடுகள் இல்லாதது. ஆனாலும் எஸ்.ஆல்பர்ட் போன்ற தீவிர இலக்கிய வாசகர்களை ஜெயகாந்தனின் நாவல்கள் கவர்கின்றனவென்றால் அதற்கு அடிப்படை காரணம் அவருடைய கதாபாத்திரங்களும், காலச்சக்கரத்தின் சுழற்சியில் காதாபாத்திரங்கள் அடைகின்ற மாற்றங்களை வைத்து ஜெயகாந்தன் தருகின்ற உலகப்பார்வையுமே ஆகும். ‘சில நேரங்களில் சில மனிதர்களை’த் தொடர்ந்து ‘கங்கை எங்கே போகிறாள்?’ என்ற sequelஐ ஜெயகாந்தன் எழுதியபோது பல ஜெயகாந்தனின் தீவிர வாசகர்கள் கூட அதை அதிகமும் வரவேற்கவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் ‘கங்கை எங்கே போகிறாள்?’  தொடர்கதையாக எழுதப்பட்ட நாவலை நான் தேடிப்படித்தேன். காலத்தின் தொடர்ந்த ஓட்டத்தில் நல்லது கெட்டது, ஏற்றம் இறக்கம் எல்லாம் நடந்த பின்னும் தனி மனித சுதந்திரமும் அதற்கான வேட்கையும் அதற்கான மானுட யத்தனமும் எவ்வளவு முக்கியம் என்பதே ஜெயகாந்தனின் கலைப்பார்வை, உலகப் பார்வை என்று எனக்குப் புலப்பட்டது.  ஒப்பிட்டு பார்த்தோமென்றால் அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் சிறிது போராடிவிட்டு வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து சரணாகதி அடைந்து விடுவார்கள். ஜெயகாந்தனோடு ஒப்பிடும்போது தி.ஜானகிராமன், பி.எஸ்.இராமையா, ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகிய தமிழ் நாவலாசிரியர்களுக்கு எந்த விதமான உலகப்பார்வையும் இருப்பதாகவே தெரிவதில்லை.

    ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதையின் வெகுஜன வெற்றியைத் தொடர்ந்து வணிக நோக்கங்களுக்காகவே தொடர் நாவல்களை ஜெயகாந்தன் எழுதினார் என்று சொல்லக்கூடிய விமர்சகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த தொடர் நாவல்களில் அவர் என்ன கேள்விகளை எழுப்பினார், என்ன மாதிரியான முடிவுகளுக்கு வந்தார் என்று யாரும் ஆராய்வதில்லை. மாத நாவலாக வெளிவந்த அதிக கவனத்தை பெறாத ‘பாவம், இவள் ஒரு பாப்பாத்தி’ யில் கூட தொழிற்சங்க போராட்டம் நடக்கும் தொழிற்சாலை அருகே வடைசுட்டுக் கொடுக்கும் வயதான பாட்டியான பாப்பாத்தி தன் விடுதலையைத் தேடுவதை ஜெயகாந்தனால் விவரிக்கமுடிந்தது.

    தன் எழுத்தில், கலையில் விடை தேடிய கேள்விகளை அவர் அச்சமின்றி, முன்முடிவுகளின்றி, தயக்கங்கள் இன்றி தேடியதால்தான் ஜெயகாந்தனால் துணிச்சலாக ஆணித்தரமாக பேச முடிந்தது, தன் கருத்து மாற்றங்களைக்கூட தீவிரமாக எடுத்துச் சொல்ல முடிந்தது. தனி மனித விடுதலைக்கான வழி சமூக சமத்துவத்தில் இருப்பதாக ஜெயகாந்தன் நம்பினார், அதை இந்திய நாகரீகம் அனைத்தையும் துறந்த ஓங்குகூர் சாமி போன்றவர்களின் துறவற பெருந்தன்மையின் வழி  இந்திய நாகரீக வாழ்வியலாகக் காட்டுவதாக புரிந்துகொண்டார். தமிழ் சித்தர் மரபில் ஜெயகாந்தனுக்கு இருந்த ஈடுபாடு, திருக்குறளை நினைவில் இருத்தி சதா தன் பேச்சுக்களில் குறிப்பிட்ட விதங்கள், மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் இருந்த ஆழமான புலமை, மகாகவி பாரதியிடமிருந்து கற்றுக்கொண்ட ‘விட்டு விடுதலையாகி’ நிற்பதன் அவசியம், ஏற்ற தாழ்வுகளை காலம் எப்படி சமன் செய்கிறது என்று அறிகின்ற பார்வை ஆகியன அவருக்கு  துணிச்சலையும் கம்பீரத்தையும் தந்தது. அந்த கம்பீரத்தை அவர் பல வழிகளிலும் வெளிப்படுத்தினார்.

    வாய்மொழியாக நான் அறிந்த ஜெயகாந்தனின் கம்பீரக் கதைகளில் சில. ஒரு முறை மேடையில் ஜெயகாந்தன் அமர்ந்திருக்க சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராய் இருந்த ந.சஞ்சீவி மௌனி மௌனின்னு ஒரு எழுத்தாளர் இருக்கார் நான் தமிழ்த்துறை தலைவர் ஆனா எனக்கே அவர் என்ன எழுதறார்னு புரியல என்று பேசியபோது எழுந்து அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கிய ஜெயகாந்தன் மௌனி உனக்காக எழுதல உட்கார்றா என்று கத்தினார். தான் ஒவ்வொரு கதை எழுதுவதற்கு முன்பும் மௌனியின் கதைகளைப் படித்துவிட்டே எழுதத் தொடங்குவதாகவும் குறிப்பிட்டார்.

    சிவாஜி கணேசனின் ரசிகர்கள் கூடிய பெருங்கூட்டம் ஒன்றில் சிவாஜி மேடையில் இருக்கவே ஜெயகாந்தன் சிவாஜியின் மிகை நடிப்பினை கடுமையாக விமர்சித்தார். கூட்டம் கூவி ஜெயகாந்தனை அடிக்க வர, அவரை பத்திரமாக கூட்டிச் செல்ல முயன்றபோது சட்டைக்கைகளை சுருட்டி விட்டுக்கொண்டு ஒண்டிக்கு ஒண்டி வாங்கடா பாக்கலாம் என்று கத்தினார்.

    எம்ஜியார் தலைமையிலான தமிழக அரசு கஞ்சாவை தடை செய்து சட்டம் இயற்றியபோது, பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டி தான் தினசரி கஞ்சா புகைப்பதாகவும் முடிந்தால் தமிழக அரசு அவரை கைது செய்துகொள்ளட்டும் என்றும் ஜெயகாந்தன் அறிவித்தார். எம்ஜியார் ஜெயகாந்தனை எப்படி கைது செய்வது என்று ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்ஜியார் அரசு ஜெயகாந்தனுக்கு முதல் ராஜராஜசோழன் பரிசினை அறிவித்தபோது இந்த திராவிடப் பயல்களுக்கு இப்போதுதான் கண் தெரிந்ததா என்று ஜெயகாந்தன் கத்தினார் என்று கேள்வி.

    ரஷ்யாவுக்கு பயணம் செய்து திரும்பிய பின் தான் லெனினின் சமாதிக்கு சென்று வந்துவிட்டு பிணங்களை பாடம் செய்து கும்பிடுகிறார்கள் முட்டாள்கள் என்று ஜெயகாந்தன் எழுதினார்.

    வாய்மொழியாக அறிந்த பல கதைகளையும் கேட்டபின்பு ஜெயகாந்தனை சந்திக்க சென்றபோது அதிசயிக்கும் விதத்தில் அவர் கைக்கடக்கமாக குள்ளமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் இலக்கியத் தேடல் கொடுக்கின்ற கம்பீரத்திற்கு குறைச்சல் இருக்கவில்லை.

    ஜெயகாந்தனை வாசிக்கவும் அவரை சந்திக்கவும் கிடைத்த பாக்கியங்கள் என் வாழ்வினை வளப்படுத்தியிருக்கின்றன. அன்னாருக்கு என் உளப்பூர்வமான அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன்.