Wednesday, September 28, 2011

நாட்டுப்புறவியல் மற்றும் தொடர்புள்ள துறைகளின் ஆய்விதழ்கள்

நாட்டுப்புறவியல் மற்றும் தொடர்புள்ள துறைகளின் ஆய்விதழ்கள்

நாட்டுப்புறகலைகள் மற்றும் வாழ்வியல் ஆவணப்படங்களுக்கான எங்கள் You Tube Channel அறிவிப்பை டிவிட்டரில் கிழக்குப்பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி மறு டிவீட் செய்ததிலிருந்து ஏராளமானோர் எங்கள் தளத்திற்கு வருகை தந்ததோடு பலரும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். சிலர் நாட்டுப்புறவியல் மற்றும் தொடர்புடைய துறைகளின் ஆய்விதழ்கள் எங்கே கிடைக்குமென்று கேட்டிருக்கின்றனர்.

எங்கள் மையம் சார்பில் நான் பல வருடங்களாக ஆய்விதழ்களுக்காக http://indianfolklore.org/journals என்ற தளத்தினை நிர்வகித்து வருகிறேன். இந்தத் தளத்தில் நான் ஆசிரியராக இருக்கும் Indian Folklore Research Journal மற்றும் ஏன்Indian Folklife தவிர சீனிவாசனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் தமிழ் ஆய்விதழான 'புதிய பனுவல்' உட்பட பல இரு மொழி ஆய்விதழ்கள் பதிவேற்றப்படுகின்றன. open journal system என்ற மென்பொருளில் பதிவேற்றப்படும் இந்த ஆய்விதழ்களின் பழைய எண்களையும் படிக்கலாம். சில ஆய்விதழ்கள் மட்டும் பிரசுரமற்றுத் தேங்கி நிற்கின்றன.

சரி, அதையும் வாசித்துத் தொலைக்கிறேன்

அன்புள்ள எம்டிஎம்,
வ.வே.சு.ஐயர் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் சைவ வேளாளர் குழந்தைகளுக்கு உபநிடதம் கற்றுத்தருவதை பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் தமிழ் சைவத் திருமுறைகளையே அவர்களுக்குக் கற்றுத் தரவேண்டும் என்பர் என்று எழுதியிருக்கிறாரே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சித்திரக்குள்ளன்

அன்புள்ள சித்திரக்குள்ளன்,

உங்கள் பெயர் தருகிற புன்முறுவலுக்காக இந்த பதிலை எழுதுகிறேன். ஜெயமோகன் என்ன மானிடவியலாளரா, சாதீய பழக்க வழக்கங்கள் பற்றி களப்பணி செய்திருக்கிறாரா, புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுகிறாரா அல்லது செவி வழியாக அறிந்தவற்றை வைத்து எழுதுகிறாரா இல்லை வெறும் யூகங்களின் அடிப்படையிலா என்பதையும் நீங்கள் எனக்குச் சொல்லவேண்டும். அது தவிர எந்த இடத்தில் அவர் சொல்கிறார் என்ற சுட்டியினையும் எனக்குத் தந்தால் நல்லது. பொதுவாகவே எல்லாச் சாதியினரின் எல்லா வழமைகளைப் பற்றியும் விரிவான மானிடவியல் ஆய்வுகள் நம்மிடம் இல்லை. இப்போதைக்கு சரி அதையும் வாசித்துத் தொலைக்கிறேன் என்றுதான் சொல்லமுடியும்.

பொதுவாக மொழிக் கலப்பை தென்னிந்தியாவில் பார்க்குமிடத்து பல சாதியினரும் பல மொழிகளையும் காலங்காலமாகப் பயின்று வந்திருக்கின்றனர் என்பதே உண்மை. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளின் லிபிகளில் சமஸ்கிருதத்தை எழுதி படிப்பதும், ஒரு மொழியின் எழுத்துருவில் இன்னொரு மொழியின் பாடத்தை எழுதிப்படிப்பது என்பதும் தென்னிந்தியாவில் வழக்கம்தான். உதாரணமாக கேரளாவில் இன்றும் தொடர்கின்ற கூடியாட்டம் என்ற சமஸ்கிருத நாடக நிகழ்த்து மரபிற்கு சாக்கையார் குடும்பங்களில் எழுதப்பட்ட ஆட்டப்பிரகாரம் கையேடுகள் மலையாளம் எழுத்துருவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களாகும். தமிழ் கம்ப ராமாயணத்தை வாய்மொழி மரபாக தோல்பாவைநிழல் கூத்தாக கேரளத்து பகவதி அம்மன் கோவில்களில் கிருஷ்ணன்குட்டிப் புலவரின் மகனான ராமச்சந்திர புலவர் இன்றைக்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். காஞ்சிபுராணமோ தெலுங்கு எழுத்துருவில் எழுதப்பட்ட சமஸ்கிருத சுவடியாகக்கிடைக்கிறது. இந்த பல மொழிச் சூழலின் வரலாற்றினை வைத்துப் பார்க்கும்போது சைவவேளாள பெற்றோரோ மற்றவர்களோ உபநிடதங்களை தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதை ஆட்சேபத்திருக்க முடியாது. இது தவிர சைவ வேளாளர்களின் ஒரு பிரிவினரிடத்து வேத பாராயாணங்களை வீட்டின் பூஜையின் பகுதியாகக்கொள்ளும் வழமை இருக்கிறது. இது சம்பந்தமாக நான் களப்பணி செய்து எழுதிய ஆய்வுக்கட்டுரையின் சுட்டியை இங்கே இணைத்திருக்கிறேன். https://www.indianfolklore.org/nfscblog/research-papers/vedic-chanting-as-householders-meditation-practice-in-tamil-saiva-siddhanta-2/

Tuesday, September 27, 2011

நாட்டுப்புறக்கலை/வாழ்வு சார்ந்த ஆவணப்படங்கள்


நான் இயக்குனராக உள்ள  நாட்டுபுறவியல் உதவி மையத்திற்கென்று You Tube channel ஒன்று இருக்கிறது. அதில் எங்களுடைய ஆவணக்காப்பகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணப்படங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறேன். நேற்றுப் புதிதாக நாங்கள் தயாரித்து ஒய்னம் டொரென் என்ற மணிப்பூரைசேர்ந்த ஆய்வாளர் இயக்கிய Keepers of Tati என்ற அங்கமி நாகர் பழங்குடியினரின் நாட்டுப்புற பாடல்கள் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டேன். அதை நீங்கள் இந்த சுட்டியில் பார்க்கலாம் http://www.youtube.com/nfscchennai மொத்தமாக 46 படங்கள் வெளியிட்டிருக்கிறோம். அதில் ஒன்று மட்டும் சென்னை நகர மறைந்த கானாப் பாடகர் மயிலை வேணு பாடிய குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களின் ஒலி நாடா. தமிழ் நாட்டு அரவாணிகளின் சடங்குகள், கேரளத்தின் பன்னிரெண்டு குலங்களின் கதை, கோண்டு, லிசு, பழங்குடிகளைப்பற்றிய வாழ்வியல் ஆவணங்கள், ரூபன் மஷாங்குவா என்ற தான்குல் நாகர் பாடகரைப்பற்றிய படம், நரிக்குறவர்களின் வாழ்க்கை என பல படங்கள் இருக்கின்றன.

தமிழ் வாசகர்கள் இந்தப் படங்களைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கான அறிமுகமாய் இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.

Monday, September 26, 2011

நான் நீங்கள் நினைப்பது போல் கிடையாது சார்

சுகுணா திவாகர் தன் வலைத்தளத்தில் என்னுடைய தீராநதி பேட்டியை முன்னிறுத்தி என் சாதி என்ன என்று பேட்டி கண்ட நண்பர் கடற்கரை என்னை வினவியிருந்தால் நான் என்ன சொல்லியிருப்பேன் என்று விவாதித்திருக்கிறார் என நண்பர்கள் மூலம் அறிந்தேன். அந்தப் பதிவை அவர் வலைத்தளத்திற்கு சென்று தேடிப்பார்த்தேன். மீண்டும் அந்த பதிவை எடுக்க முடியவில்லை. டிவிட்டரில் அறிமுகமில்லாத ஒருவர் இந்த எம்டிஎம் என்ன சாதி என்று கேட்டு கர்ம சிரத்தையாய் என்னை tag-ம் செய்திருந்தார். இந்த மானிடவியல் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுவோமே என்று இதை எழுதுகிறேன்.

நான் திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதியைச் சார்ந்த சைவ வேளாள சாதியில் பிறந்தவன். நான் இந்த சாதியில்தான் பிறப்பேன் என்று அடம்பிடித்து பிறந்ததாகச் சொல்லமுடியாது. சைவ வேளாளன் ஒன்றரைப் பார்ப்பான் என்று எங்களூர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு. நானுமே ஒன்றரைப் பார்ப்பான் ரகம்தான். கல்லூரி நாட்களிலும் வயது இருபதுகளிலும் இருந்தபோது அப்படி இப்படி இருந்தாலும் தட்டுத்தடுமாறி ஒன்றரைப் பார்ப்பான் இடத்திற்கு  நாற்பதுகளில் வந்து சேர்ந்துவிட்டேன்.

1996இலிருந்து 2003 வரை பௌத்தம், சமணம், இஸ்லாம், யூத மதம், கிறித்தவம் ஆகிய மதங்களை சொல்லிய வரிசைக்கிரமப்படியே தழுவலாம் என்று முயற்சி செய்து தொடர்ந்து தோற்றுப்போயிருக்கிறேன். இதற்காக உலகம் முழுவதும் அலைந்ததுதான் மிச்சம். ஒருவேளை நான் தேர்ந்தெடுத்த பாதை தவறோ என்னவோ. ஒவ்வொரு மதத்திலும் உள்ள தியான முறையைக் கற்று அதன் மூலம் அந்த மதத்தைத் தழுவுவது என்பதும் அதன் மூலம் சாதியைத் துறப்பது என்பதுமே நான் பயணித்த பாதை. ஆனால் தழுவல் நிகழவில்லை. ஏதேதோ காரணங்களால் தட்டிப் போயிற்று. மதமற்ற ஸ்காண்டினேவிய தியானம்கூட தோதுப்பட்டு வரவில்லை. நல்ல வேளையாக எந்த சாமியாரிடத்தும் சிக்கிக்கொள்ளவில்லை.

சரி தமிழ்ப்பண் இசை கற்றுக்கொள்வோம் என்று தேவாரம் திருவாசகம் ஆகிய திருமுறைகளை ஓதும் முறைகளை முறையாகப் பயின்றேன். தியானம் கைகூடவில்லை. வைணவப் பிரபந்தங்களை பாராயணம் செய்து பார்த்ததிலும் பெரிய மன அமைதி கிட்டவில்லை.

2003-இல் தற்செயலாக வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயத்தில் அதிகாலையில் ஶ்ரீருத்ரம் ஜெபிக்கப்படுவதைக்கேட்டேன். அப்பா இந்து சமய அறநிலையத்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றியதால் சிறுவயது முதலே கோவில்களோடு சேர்ந்த வாழ்க்கையே அமைந்திருந்தது. ஆகையால் ஶ்ரீருத்ர ஜெபத்தினை அது என்னவென்று தெரியாமலேயே சிறு வயதில் நான் பலமுறை கேட்டிருக்கக்கூடும். ஶ்ரீருத்ரஜெபம் அபாரமான லயம் பொருந்தியது. அதை தினசரி கேட்டே ஆகவேண்டும் என்று உள்கட்டாயம் ஏற்பட்டது. தினசரி அதிகாலையில் தண்டீஸ்வரர் கோவில் போய் நின்றேன். சில நாட்கள் அதிகாலை ஶ்ரீருத்ரஜெபம் கேட்காவிட்டால் தலைவெடித்து சுக்குநூறாகிவிடும்போல் இருந்தது. ஏற்கனவே அரை குறை சமஸ்கிருதம் தெரியுமாதலால் நானே பாராயணம் செய்தால் என்ன என்று தோன்றியது. ஶ்ரீருத்ரம் பாடத்தை வாங்கி தினசரி உருப்போட்டேன். தண்டீஸ்வரர் கோவிலுக்குப்போய் ஶ்ரீருத்ரம் ஜெபிக்கப்படும்போது நானும் மனத்தினுள்  கூடவே ஜெபிப்பேன். இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த தியானமுறை என்று உறுதியாகப்பட்டது. சமஸ்கிருதமும் கூடவே மேலும் மேலும் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆறு மாத காலத்திற்குள் ஶ்ரீருத்ரம் மனனமாகிவிட்டது. இதற்கிடையில் கூத்துப்பட்டறையில் யோகம் பயிற்றுவிக்கிற ஈ.ஆர்.கோபாலகிருஷ்ணன் எனக்கு காயத்ரி ஜெபமும் சந்தியாவந்தனமும் சொல்லித்தந்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக என் அதிகாலை என்பது சந்தியா வந்தனம், சூரிய நமஸ்காரம், ஶ்ரீருத்ரஜெபத்தினோடு கூடிய சிவ பூஜை என்பதாக இருக்கிறது. சிவாலயங்களில் நடப்பது போலவே ஶ்ரீருத்ரத்திற்கு பிறகு பஞ்சசூக்தம் சொல்லி மந்திர புஷ்பத்தோடு என் தின சிவ பூஜை நிறைவு பெறும். போதுமான நேரமில்லையென்றால் பஞ்சசூக்தத்தை விட்டுவிடுவேன். எழுத்தாளர் கி.ஆ.சச்சிதானந்தன் எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பது தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவரின் வரியையும் தினசரி ஜெபத்தினோடு சேர்த்துக்கொள்ளச்சொன்னார்; சேர்த்துக்கொண்டேன். எப்பொழுதுமே சைவ உணவுதான். குடிப்பதில்லை புகைப்பதில்லை.

ஶ்ரீருத்ரம் கிருஷ்ண யஜுர் வேதத்தின் பகுதி. சமஸ்கிருத அறிவு விருத்தியாக விருத்தியாக நான்கு வேதங்களையும் கற்றுக்கொண்டேன். கூடவே பல சமஸ்கிருத இலக்கிய இலக்கண நூல்களையும்.

கடந்த சில வருடங்களாக மனம் ஆழமான அமைதியை அடைந்துவிட்டது.

இப்படியாக அமைந்துவிட்ட வாழ்க்கைமுறையினால் என் எழுத்து வேளாள-பார்ப்பனீய கருத்தியலை வெளிப்படுத்துவதாக அமையுமா என்று எழுதி எழுதிப்பார்த்துதான் அறியவேண்டும். மற்றவர்கள் பார்த்துச் சொன்னாலும் நல்லதுதான்.

எப்படியாக இருந்தாலும் நீங்கள் நினைப்பது போல் நான் கிடையாது சார்.

Sunday, September 25, 2011

இலக்கியத்தில் வெற்றியும் தோல்வியும்


எனக்கு வந்திருக்கும் சில கடிதங்கள் கோணங்கியின் நாவல்களை பரிதாபகரமான தோல்விகள் என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறாரே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று வினவுகின்றன. ஜெயமோகன் எந்த இடத்தில் எதற்காகச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் தத்துவத்திலும் இலக்கியத்திலும் படைப்புகளில் வெற்றி தோல்வி என்று உள்ளதா என்ன என்பதே என் கேள்வி. அதிகம் எழுதுதல், அதிக வாசகரைப் பெற்றிருத்தல், எழுத்தின் மூலம் பணம் சம்பாதித்தல், புகழ் பெற்றவராக இருத்தல், புகழ் பெற்ற படைப்புகளை எழுதியிருத்தல் இவைகளையெல்லாம் வைத்து வியாபார சினிமா, வணிகச் செயல்பாடுகள், கொடுக்கல் வாங்கல், சந்தை நிலவரம் ஆகியவற்றை அளக்கலாமே தவிர இலக்கிய மற்றும் தத்துவப்படைப்புகளை மதிப்பிட இயலாது.

நான் வேண்டுமென்றேதான் தத்துவப்படைப்புகளையும் இந்த விவாதத்திற்குள் கொண்டு வருகிறேன். ஏனெனில் தத்துவப்படைப்புகளை வைத்து இந்த பிரச்சினையினை விளக்குவது எளிது. தத்துவப் படைப்பு ஒன்று கடினமான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கிறது அதிக வாசகர்களினால் வாசிக்கமுடியவில்லை என்பதனால் அதை நிராகரிக்க முடியுமா அல்லது அதன் முக்கியத்தைக் குறைத்து மதிப்பிடத்தான் முடியுமா? இல்லை தோல்வி என்று விவரிக்கத்தான் முடியுமா? அப்படி தத்துவப் படைப்புகளை விவரித்தோமேயென்றால் அவ்வளவு தத்துவ நூல்களையும் குப்பையில் தூக்கிப்போட்டுவிடவேண்டியதுதான்.

தத்துவத்தை விட அதிக மொழிச்சுதந்திரத்தைத் தரக்கூடியது இலக்கியம்; அதில் என்ன வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமானாலும் அதி சுதந்திரனாக எழுதிப்பார்க்க வேண்டியதுதான் முக்கியம். வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு நடைகளில் பல எழுத்தாளர்கள் ஒரு காலகட்டத்தில் எழுதுகிறார்கள் என்பதுதான் ஒரு மொழிக்கு செழுமை சேர்க்கும் விஷயமே தவிர ஒரே மாதிரியான பிரசித்தி பெற்ற எழுத்தே இருப்பது மொழியையோ கலையையோ செழுமைப்படுத்தாது.

அடிமுறை, வியாபார சினிமா, TRP television ratings ஆகியவற்றில்தான் வெற்றி தோல்வி என்ற சொல்லாடல் சாத்தியமே தவிர இலக்கியத்தில் அல்ல.

என் தலையெழுத்து இப்படி  பாலபாடமாய் ஒரு குறிப்பு எழுத நேரிட்டது.

Saturday, September 24, 2011

சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள்?


வீ.அரசுவின் அழைப்பின் பேரில் சில வருடங்களுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சமண நிகண்டுகள் பற்றி உரையாற்றினேன். வேறு ஏதோ தேடப்போக அந்த உரைக்காகத் தயாரித்த குறிப்புகள் கிடைத்தன.அந்த குறிப்புகளில் சிலவற்றை இங்கே பதிவேற்றுகிறேன்.

 என்னுடைய கேள்விகளெல்லாம் சமண முனிவர்கள் ஏன் அகராதி தயாரிப்பில் ஈடுபட்டார்கள்? சமண மதத்திற்கும் அகராதி தயாரிப்பதற்கும் என்ன சம்பந்தம்? நிகண்டுகளிலிருந்து அவற்றின் தயாரிப்புத் திட்டங்களை அனுமானிக்க இயலுமா? அவ்வாறே அந்த தயாரிப்புத்திட்டங்கள் தெரியவந்தால் அவற்றிலிருந்து எந்த தத்துவ நோக்கு சமண நிகண்டுகளின் உள்தர்க்கத்தைத் தீர்மானிப்பதாக இருந்தது என்று அனுமானிக்க இயலுமா ? இதுவரைக்கும் கல்விபுல ஆய்வாளர்கள் எழுதியவற்றுள் சமண நிகண்டுகள் பற்றிய பொதுவான விவரணைகள், வரலாற்று செய்திகள் இடம் பெற்றிருக்கின்றனவே தவிர என்னுடைய கேள்விகளுக்கான விடைகள் எதுவும் கிடைக்கவில்லை. என் யூகங்கள் சிலவற்றை சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

சரஸ்வதி மகால் வெளியிட்ட பதார்த்தசாரம் என்ற சமண தத்துவ நூல் உயிருள்ள பொருள் உயிரற்ற பொருள் அனைத்துமே அணுக்களால் கட்டமைக்கப்பட்டவை அவை கடவுளின் துணையின்றியே தன் போக்கில் இயங்குகின்றன என்று சொல்கிறது. அதாவது கடவுள் என்றால் இங்கே உலகைப்படைத்து வழி நடத்திச் செல்கிற மனிதனுக்கு மேம்பட்ட சக்தி என்று மட்டுமே பொருள்கொள்ளலாகாது. மனித அறம் சார்ந்து, மனித அறத்திற்கு செவி மடுத்து, மனிதனுக்கு மேல் இயங்குகின்ற இயற்கை சக்தி ஒன்று இல்லை என்றே சமணரின் கடவுள் மறுப்புக்கொள்கையை நாம் பொருள்கொள்ளவேண்டும். பிராகிருதமும் பாலியும் கலந்து பழைய அர்த்தமாகதியில் எழுதப்பட்ட பதார்த்தசாரம், இயற்கையின் மனித அறமற்ற தன்மையை (கடவுள் இல்லாத தன்மையை) அறிவதில் தேவ மூடம், உலக மூடம், பாஷாண்டி மூடம் என்ற மூன்று தடைகள் (சமண மொழியில் மூன்று குற்றங்கள்) ஏற்படுகின்றன என்று சாடுகிறது. தேவ மூடம் கடவுள் நம்பிக்கையைக் குறிக்கிறதென்றால் உலக மூடம் இயற்கையை அளவுக்கு அதிகமாக மனிதன் பயன் படுத்துவதைக் குறிப்பிடுகிறது. சமண சிறு காப்பியங்களான யசோதரகாவியம், உதயணன் கதை ஆகியவற்றில் உலக மூடத்தை கிண்டலடிக்கும் நகைச்சுவை பல இடங்களில் காணக்கிடைக்கிறது. இயற்கையை தேவைக்கதிகமாக பயன்படுத்துவதின் உருவகமாக அதிகம் சாப்பிடுதல் சமண நகைச்சுவையில் அதிகம் காணக்கிடைக்கிறது. பாஷாண்டி மூடம் என்றால் என்னவென்று தெரியவில்லை. இந்தக்கட்டுரைச் சுருக்கமாகக்கூட இருக்கலாம்.

மனிதனுக்கான அறத்தை மனிதன் தான் உருவாக்கவேண்டுமே தவிர இயற்கையோ கடவுளோ மனிதனுக்கான அறத்தைத் தரமாட்டார்கள் என்பதே சமணக்கோட்பாடு. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுவதற்கான (first prison reform in human history) தர்க்கத்தையும் இந்தக் கோட்பாட்டினை ஒட்டியே இதர சமண பனுவல்களிலும் காணலாம்.

ஆக உயிரற்றது, உயிருள்ளது அனைத்தையுமே மனித அறிவினுள் எனவே மனித அறத்தினுள் மொழியின் மூலமும் கணிதத்தின் மூலமும் கொண்டுவருவதே சமணர்கள் அகராதி தயாரிப்பிலும் வானியல் மற்றும் சோதிட கணிதத்திலும் ஈடுபட காரணம் என்று நினைக்கிறேன்.

ஒன்றைப்பார்த்து வியந்து ஐ என்று ஒலிஎழுப்புகிறோம் என்றால் அவ்வொலியை வியப்புசொல்லாகவே கருதவேண்டும் என்கிறது தொல்காப்பியம். இந்த அடிப்படை சொல்லாக்க முறைமையையே சமண நிகண்டுகளின் ஆசிரியர்கள் பின்பற்றினார்கள் என்று நம்ப இடமிருக்கிறது. சொற்களின் பெருக்கத்திற்கு அவர்கள் பிற மொழிகளையே சார்ந்திருந்தார்கள். பிற மொழி, பிற பண்பாட்டு கலப்பற்று தமிழ் மொழியும் தமிழ் சிந்தனையும் வளர்ச்சிபெற்றது தமிழ் சிந்தனையை இந்த மண்ணின் தூய சிந்தனையாக அடையாளம் காணமுடியும் என்பது மூடங்களில் ஒரு வகை அல்லாமல் வேறு என்ன?


விருப்பமுள்ளவர்கள் Joseph, George Gheverghese. The Crest of the Peacock Non European roots of mathematics. Princeton University Press, 2000. என்ற புத்தகத்தில் சமண கணிதம் பற்றிய அத்தியாயத்தைப் படித்துப்பார்க்கலாம். சமணரின் அறிவியலை குறிப்பாக அணு அறிவைப் பற்றிய விளக்கமான கட்டுரையை புதுவை ஞானம் எழுதியுள்ளார். அவரும் பதார்த்தசாரம் நூலையும் The Crest of Peacockஐயும் குறிப்பிடுகிறார் என்றாலும் சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள் என்பதை ஒட்டிய என் கேள்விகளுக்கான விடைகள் அவர் கட்டுரையில் இல்லை. தன்னளவிலேயே முக்கியமான புதுவை ஞானத்தின் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்: http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60501068&format=html&edition_id=20050106

எழுதும் தன்னிலைக்கு என்ன பெயர்?


நான் எழுத ஆரம்பித்தபோது எனது சிறுகதைகளுக்கான புனைபெயராக ஸில்வியா என்று வைத்துக்கொண்டேன். சில்வியா அல்ல ஸில்வியா. ‘சி’ என்ற அட்சரத்தை உச்சரிக்கும்போது நுனி நாக்கு மேல் நோக்கி சிறிதாக வளைந்து மேல் அண்ணத்தைத் தொடுவதில் உள்ள சிறு வன்முறை எனக்கு பிடிக்கவில்லை. மாறாக, பற்களை நோக்கி மெலிதாக நாக்கு நீள காற்று மென்மையாக வெளியேறும் ஸி யின் உச்சரிப்பு பொருத்தமானதாகப்பட்டது. ஆண் எழுத்தாளர்கள் பலரும் பெண் புனைபெயர்களில் எழுதுவது போன்ற தெரிவு அல்ல இது. ஒரு அழகான மென்மையான சக்தி வெளியேறும் சப்தம் என்றே ஸில்வியா என்னை வசீகரித்தது. இந்தப் பெயரை பெண்களுக்கு மட்டுமேதான் சூட்டவேண்டும் என்ற உலக நடைமுறை எனக்கு ஏற்புடையதாகவும் இல்லை. மாலதி மைத்ரியிடம் உரிமம் அல்லது அங்கீகாரம் பெற்றுதான் பெண் புனைபெயர்களைச் சூட்டிக்கொள்ளவேண்டும் என்ற விதியும் அப்போது இல்லை; ஏனெனில் அந்தக் காலத்தில் மாலதி மைத்ரி எழுத வந்திருக்கவேயில்லை.

என் பெற்றோரிட்ட பெயர் சர்வ சாதாரணமாக நான் எழுதும் சிறு கட்டுரைகள் அளவுக்கு நீளமாக இருப்பது வேறு புனைவு எழுதும் தன்னிலைக்குப் பெயராகக் கொள்வதா என்ற மனத்தடங்கலை ஏற்படுத்தியது. என் பெற்றோரிட்ட பெயர் என் தாத்தாவின் பெயர் (இனிஷியலோடு அப்படியே வந்துவிட்டது) என்பதால் குடும்பப்பெயர் சுரேஷ். நாகர்கோவிலில் சுரேஷா என்று கூப்பிடுவார்கள். ஆச்சி தன் கணவன் பெயர் முத்துக்குமாரசாமி என்பதால் கண்ணா என்று கூப்பிடுவார்கள். குடும்பத்தில் பேரப்பிள்ளைகள் பெருத்து முத்துக்குமாரசாமிகள் அதிகமானபோது நான் பெரிய கண்ணன் ஆகிவிட்டேன். குழந்தையாக இருந்தபோது இந்த பல பெயர் குழப்பத்திலிருந்து விடுபட்டு உன் பெயர் என்ன என்று கேட்டால் சுரேஷைச் சுருக்கி சீ என்பேன். அம்மாவுக்கு சீ ரொம்ப பிடித்துப்போய்விடவே சீப்பா என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். சீப்பா என்ற புனைபெயரில் எஸ்.வி.ராஜதுரை நடத்திய இனி இதழ்களில் தமிழ் காமிக்ஸ் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். சீ என்பதையே புனைபெயராய் வைத்துக்கொள்ளலாம் என்று பலமுறை தோன்றினாலும் சோ என்பவரின் நீட்சி போல தொடர்புபடுத்தப்படும் என்பதால் கைவிடவேண்டியதாயிற்று. என் குழந்தைகள் இருவரும் ஒருநாள் தற்செயலாக விளையாட்டாக சீப்பா என்று கூப்பிட்டபோது ஏதேதோ ஞாபகங்கள் தாக்க நிலைகுலைந்து போனேன். குழந்தைகள் இருவரையும் மடியில் இருத்தி இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டேன்.

எனக்குப் பிரியமான பெயரான ஸில்வியாவையுமே இவ்வாறாகவே கைவிட வேண்டியதாயிற்று. முதலில் ஸில்வியா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேனே தவிர புனைவு எழுதும் தன்னிலையான ஸில்வியாவை முழுமையாக அறிந்தேன் என்று சொல்லமுடியாது. திட்டம் போட்டு ஆண்டறிக்கைகள், கல்விப்புல கட்டுரைகள், திரைக்கதைகள் எழுதுவது போல புனைவினை நான் எழுதியதில்லை எழுதப்போவதுமில்லை. புனைவும் அதன் தர்க்கமும் வடிவமும் எங்கேயெல்லாம் கூட்டிச் செல்லுமோ அங்கேயெல்லாம் புதிது புதிதாய் கண்டுபிடித்தவாறே போகத்தயாராக எப்போதுமே இருக்கிறேன். ஸில்வியாவை அறிவது கைக்கொள்வது என்பது புனைவு எழுதுவதின் என் அந்தரங்க நோக்கங்களில் ஒன்றாகும். எழுதியவரைக்கும் எனக்கு ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருந்தன. வெளிப்பாடுக்காக போராடும் தன்னிலையின் தவிப்பு உலக அவலங்களிலேயே மிகவும் உக்கிரமானது என்பது பிரதான ஆச்சரியம். அழகும் அபத்தமும் மௌனமும் மாறி மாறி கூடி வர கூடி வர மறுக்க திக்கித் திண்டாடி போதும் போ என்று ஆயாசத்தில் விழுவது வழக்கமாகிப்போனது. எழுதி பிரசுரித்ததை விட பிரசுரிக்காமல் விட்டது, அழித்தது, மறந்தது, கைவிட்டது  அதிகமாகிக்கோண்டே போனது. முழுமையாக மனத்தில் உருப்பெற்றது எழுத்தில் கைவரப்பெறாமல் நழுவிக் கரைந்துபோகும் தருணங்கள் கூடிக்கொண்டேபோனது. ஸில்வியா என்ற என் எழுதும் தன்னிலையின் பெயர் ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கையோடு (படைப்புகளோடு அல்ல) அமானுஷ்ய தொடர்பு கொள்கிறதோ? என்னவொரு பயம்! பயம் பீதியாக இனந்தெரியாத பதற்றம் ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. வயது ஏற ஏற இந்தப் பதற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் வலு உடலுக்கோ மனதிற்கோ இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே சில பல வருடங்களாகவே ஸில்வியா என்ற பெயரைக் கைவிட்டுவிட்டேன். இருந்தாலும் ஸில்வியா என்ற பெயரில் எழுதிய மைத்ரேயி என்ற சிறுகதையை மட்டும் மறுபிரசுரம் செய்யவேண்டும் என்று எண்ணமிருக்கிறது. அக்கதை கோணங்கி நடத்திய கல்குதிரை இதழில் பிரசுரமானது. பிரசுரத்தில் அச்சுப்பிழைகள் மலிந்திருந்தன. பிழை திருத்திய வடிவத்தைப் படிக்கவேண்டும் என்பதே அவா.

எம்.டி.முத்துக்குமாரசாமி என்ற பெயரே புனைவெழுத்துக்கும் போதும் என்ற சமரசத்திற்கு ஒரு வழியாக வந்துவிட்டேன். கட்டுரைகளில், கடிதங்களில், இணையத்தில், நேர்பேச்சில் என்னை யாரேனும் ஸில்வியா என்று குறிப்பிடும்போது யார் யாரோ என்னை சீப்பா என்று அழைப்பதுபோல இருக்கிறது. அப்படிக் குறிப்பிடுபவர்கள் எல்லோரையும் என் மடியில் இருத்தியா அப்படிக்கூப்பிடாதீர்கள் என்று கெஞ்ச முடியும்?

Thursday, September 22, 2011

பலி

இனி என்ன செய்வதென்று தெரியவில்லை


காபிக் கோப்பைகளுடன் மௌனமாகக் கழித்தாயிற்று
விஸ்கி புட்டிகளும் தீர்ந்துவிட்டன
ஜன்னலுக்கு வெளியே எவ்வளவு நேரம்தான்
பார்த்துக்கொண்டிருப்பது

மீண்டும் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேருகிறோம்.

திரும்ப எல்லாவற்றையும் முதலிலிருந்து சொல்கிறோம்


தூரத்தில் உடுக்கடித்து குலக்கதை பாடுகிறார்கள்
இந்நேரம் கொடை பலிகள் முடிந்திருக்கும்
குடல் உருவி குருதி குடித்து
பொங்கலிட்டிருப்பார்கள்


வேறெங்கோ செல்லவேண்டுமென்று முடிவாகிறது
எங்கேயென்று நிச்சயம் தெரியவில்லை

aporia பன்னிரெண்டு வகை என்று யாரோ முணுமுணுக்கிறார்கள்

அறியப்படாத நிலத்தில் குருதி தொடல்
புனிதமில்லையாம்

Monday, September 19, 2011

மேனா மினுக்கி வால்


டாம் பூனையாய் இருப்பதற்கே தகுதியில்லாதவனா இருக்கிறான். சதா காதல் வயப்பட்டிருக்கிறான். இந்தக் குட்டி எலி ஜெர்ரியைப் பிடிக்கத் துப்பில்லை இந்த லட்சணத்தில் காதல் வேறு, வெண்டைக்காய். சுத்த துப்பு கெட்ட கழுதை. இதில் மீசை முறுக்கு வேற மேனா மினுக்கி வால் வேற. ஹே அடங்குடே. 
ஜெர்ரி உலகாயுதம் தெரிந்தவன். எல்லாப்பக்கமும் அவனுக்கு வளைகள் திறந்திருக்கின்றன. டாம் மூக்கிடித்து சுருண்டு பந்தாய் விழுந்து செமத்தியாய் அடி வாங்கும் இடங்களிலெல்லாம் கூட ஜெர்ரி நுழைந்து ஓடுவான் ஜெயித்துவிடுவான். வயலின் வாசிப்பான். 
டாம் ஜெர்ரியை துரத்திக்கொண்டேயிருக்கிறான். இதுதான் முதல் வாக்கியமாக இருந்திருக்க வேண்டும். ஜெர்ரி மாட்டினாலும் டாம் அவனை ஒன்றும் செய்வதில்லை. அப்புறமும் ஏன் டாம் அவனை துரத்திக்கொண்டேயிருக்கிறான்? பூனை எலியைத் துரத்துவதுதானே இயற்கையின் விதி? அதுதானே தர்மம்? 
ஜெர்ரி அப்படி ஒன்றும் நல்ல பயலாகவும் தெரியவில்லை. பெரிய கர்வி. சந்து கிடைத்த இடங்களில் எல்லாம் சிந்து பாடிவிடுகிறான். உல்லாசி வேறு இந்தப் பயல். டாம் நகத்தைத் தீட்டாமல் என்ன செய்வான்? டாம் பலவான் ஜெர்ரி பலவீனன். ஆனாலும் பலவீனன் தான் வெல்வான். வென்றுகொண்டேயிருப்பான். ஜெர்ரி எந்த அவதார மயிரும் இல்லை. 
ஜெர்ரி ஜெயிக்கும்போது நாமெல்லோருமே வெற்றிக்களிப்பில் சிரிக்கிறோம். டாம் பாவம்தான் ஏன் இவன் துள்ளி குதித்து இயற்கையிலிருந்து கார்டூனுக்குள் வந்தான்? வெளியிலேயே சாகவாசமாய் எலியைப் பிடித்துக்கொண்டிருந்தான் என்றால் வாழ்பனுபவமாக எஞ்சியிருப்பான். வேறென்ன கிடைத்திருக்கும். வேறென்னதான் கிடைக்கும். வேறென்னதான் வாழ்பனுபவத்திலிருந்து கிடைக்கும்?
அது சரி, டாமையும் ஜெர்ரியையும் கார்டூனில் பார்த்தபோது நீ என்ன செத்தாபோயிருந்தாய்? வாழவில்லை? 
டாமும் ஜெர்ரியும் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். நம் அனுபவங்களை விட்டு.
எஞ்சுவது என்னமோ மேனா மினுக்கி வால்தான்.


Sunday, September 18, 2011

பல் வலியோடு பார்த்த ஞாயிற்றுக்கிழமை வீடியோக்கள்


Jorge Luis Borges on Language and Reality - YouTube http://t.co/pdug1kqI
Jean-Paul Sartre Rejects the NOBEL PRIZE for LITERATURE!! - YouTube http://t.co/WfQ3G328
Derrida on Sartre "Not a strong philosopher" - YouTube http://t.co/D4DzG6bk
Jacques Derrida On Love and Being - YouTube http://t.co/FImfYj3Y
Jacques Derrida - Fear of Writing - YouTubehttp://t.co/poQDKYme
Georges Bataille : Literature And Evil - YouTube http://t.co/Nx2RwCjj
பல் வலி எனக்கு நானே செவுளில் ஒரு அறை விட்டதால் உண்டானது.

Wednesday, September 14, 2011

இரவல் மயில்பீலி

இரண்டு மூன்று நாட்களாக எனக்கு மனதே சரியில்லை. என்னுடைய வலைத்தளத்தைப் படித்துவிட்டு வரும் கடிதங்களில் ‘குரு வணக்கம்’ ‘குரு நமஸ்காரம்’ என்று ஆரம்பித்து எழுதப்படும் கடிதங்களைப் படித்து இனம் புரியாத திகைப்பில் ஆழ்ந்திருக்கிறேன். எனது தொழில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக உயர் கல்வி ஆசிரியனாக பணிபுரிவதுதான் என்றாலும் நான் இவ்வளவு பணிவான கடிதங்களை என் மாணவர்களிடமிருந்துகூட வரப்பெற்றதில்லை. எப்பொழுதிருந்து ஆரம்பித்தது இந்த சம்பிரதாயம்?

உதாரணத்திற்கு ஒரு கடிதம் டிஜிட்டலில் கிறுக்கிய பிள்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கிறது. அவர் தினசரி இணையத்தில் வாசிக்கும் எழுத்தாளர் ஒருவர் ஜெர்ஸி கோசின்ஸ்கியின் ‘Steps’ நாவலை குறிப்பிட்டிருந்தாராம். இவர் இணையத்தில் தேடி  கோசின்ஸ்கியின் ‘Hermit of the 69th street’ என்றொரு நாவலையும் எழுதியிருக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டாராம். இரண்டு நாவல்களும் என்னிடம் இருக்குமா, அவற்றை படிக்கலாமா, கூடாதா என் ஆலோசனையையும் அபிப்பிராயத்தையும் சொல்லி முடிந்தால் புத்தகங்களையும் தந்து உதவ முடியுமா என்று கேட்டு கடிதம் முடிகிறது. கோசின்ஸ்கியின் ‘Steps’ வன்முறைச் சித்தரிப்புகள் கொண்டதாயிற்றே, 69 எதைக் குறிக்கிறது தெரியுமா என்று இரண்டு வரி பதிலெழுதிப்போட்டேன். நீங்கள் வேண்டாமென்றால் படிக்கமாட்டேன் சார் என்று பதில் வந்தது. மீண்டும் அதே டிஜிட்டல் பிள்ளையார் சுழி. நான் வேண்டாமென்றா சொன்னேன்?

இன்னொரு கடிதம் இரவில் இயற்கை உணவு சாப்பிடலாமா என்று குருவிடம் வினவுகிறது. குரு இயற்கை உணவு என்றால் என்ன என்று கேட்டு எழுதுகிறார். ஒரு முறி தேங்காய்த் துருவல் என ஆரம்பித்து காய்கறிக்கடையின் விலைப்பட்டியலே பதிலாய் வருகிறது. இவ்வளவு சாப்பிடலாமா என்று குரு ஐயம் எழுப்புகிறார். ஏன் தோட்டத்திலேயே போய் மேய்ந்துவிடக்கூடாது என்றும் ஆலோசனை சொல்கிறார். அவருக்குமே மேயும் ஆசை எழுகிறது.

எளிய உதாரணங்களை எப்பொழுதும் கைவசம் வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியது குருவுக்கு ‘கை மைதுனம் செய்வதால் கண் குருடாகிவிடுமா?‘ என்று கேட்டு வந்த கடிதங்களின் தொடர் உரையாடல்தான். குரு, மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’யையும், ‘ஹரிஜன்’ இதழில் மகாத்மா எழுதிய  கடிதங்களையும் படிக்க அறிவுறுத்துகிறார். ‘சத்தியம்’ என்றால் என்ன? ‘சோதனை’ என்றால் என்ன என்று கேட்டு பதில் வந்தது. பைப்பை திறந்தால் தண்ணீர் வருகிறது; பைப்பைத் திறக்காவிட்டால் தண்ணீர் வருவதில்லை இது சத்தியம். சில சமயம் பைப்பைத் திறந்தாலும் தண்ணீர் வருவதில்லை இதுதான் சோதனை என்று குரு எளிய உதாரணம் மூலம் விளக்கினார். சிஷ்யன் இப்போது பாத்ரூமிலேயேதான் இருக்கிறாராம். என்ன காரணம் தெரியவில்லை.

கோசின்ஸ்கியோடு தன்னிலையில் ஆரம்பித்த இடுகை, இயற்கை உணவு, மகாத்மா காந்தி என்று நகர்ந்தவுடன் படர்க்கையில் சொல்லப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதுதான் நான் ஆரம்பத்தில் சொன்ன திகைப்பிற்கான காரணம். நானெப்படி அவனானேன்?

கடிதங்களினாலேயே கட்டப்பட்ட மடம் உருவாகிவிட்டிருந்தது. குரு தும்மினால் கூட போதும் டிவிட்டர், ஃபேஸ்புக், குறுஞ்செய்தி, கூகுள் பஸ் என்று செய்தி பறக்கிறது. குரு தமிழ் சினிமாவுக்கு கதை வசனம் எழுதுகிறார். கடிதம் எண்: 1234567893: நீங்கள் எழுதிய கதைக்கும் எடுக்கப்பட்ட சினிமாவுக்கும் சம்பந்தமேயில்லையே? ஆனாலும் படம் சூப்பர் சார்.

கண்ணாடியில் முகத்தைப் பார்க்கிறீர்கள். தலையை மொட்டை அடித்தாகிவிட்டது. கர்கலாவில், செரெவனபெலகொலாவில்  நிர்வாணமாக நிற்கும் கோமடேஷ்வரரைப் போல தோற்றம் வந்துவிட்டது. சமண மதமே தமிழ் வரலாற்றில் மறைக்கப்பட்ட மதம் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.

புதிதாய் கடிதம் எழுதியிருக்கும் வாண்டுக்கத்திரிக்காயை மயில் பீலியால் வருடிக்கொடுக்க நினைக்கிறீர்கள். மயில் பீலியை காணவில்லை.

அது சரி, எப்போது படர்க்கை சொல்லல் முன்னிலையானது?

நான் உங்களுக்கு நானே பிடித்த மயிலின் பீலியை இரவலாகத் தருகிறேன். இந்த இடுகை மூலமாக. மயிலெங்கே என்று மட்டும் கேட்காதீர்கள். 

Sunday, September 11, 2011

எளிமையின் அழகியல்


ஐந்து வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஐநூறு வார்த்தைகளில் சொல்வது ஆபாசம். தூரிகைத் தீற்றல் முழு உருவத்தையும் கற்பனைக்கு விட்டுவிட வேண்டும். சாயத்தை அள்ளிப்பூசினால் கல்யாண வீடுகளில் நகைக்கடை போல பட்டுப்புடவை சரசரக்க வளையவரும் பெண்களைப்போல பார்க்கவே கண்கள் கூசும். இவ்வாறெல்லாம் எளிமையின் அழகியலைப் பற்றி பேச ஆரம்பிக்கலாம்; என்றாலும் பாஷோவின் ஹைக்கூக்களில், காவபட்டாவின் நாவல்களில் எளிமை சாதிக்கும் நுட்பமும் தீவிரமும் சிக்கனம் அழகை எப்போதுமே கூட்டிக்கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது என்று ஆரம்பிப்பதே பொருத்தமாக இருக்கும். 
காவபட்டா தன்னுடைய நோபெல் பரிசு ஏற்புரையை ஜப்பானிய இலக்கியத்தில் பனியும் நிலவும் என்றே தலைப்பிட்டிருந்தார். பாஷோவின் ஓராயிரம் நிலவுகளைச் சுட்டிக்காட்டும் காவபட்டா பாஷோவின் பல ஹைக்கூக்களில் நிலவு வெளியே காய்வதில்லை என்கிறார். சங்க அகப்பாடல்களைப் பற்றி காவபட்டா பேசுகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது.
அக வெளியில் காயும் நிலவின் மெல்லிய கிரணங்களை ஒரு வரியில் சொல்ல அதன் அதீதம் பீடிக்கும் வாசகனுக்கு உன்மத்தம் ஏறும். முழு நாவல்களையுமே பல நூறு ஹைக்கூக்களின் தொகுதிபோல எழுதும் காவபட்டா, பாஷோவின் அகவெளி கிரணம் ஏற்படுத்தும் உன்மத்தத்தை, மெல்லிய சித்திரமாய் தீட்டப்படும் கிமோனாவின் ஒற்றை முடிச்சு, புறாக்குஞ்சு போல விம்மும் ஒற்றை முலை,  கண்ணாடியில் தெரியும் பாதி முகம், கூந்தலில் செருகியிருக்கும் சிறு க்ளிப், ஸ்கார்ஃபில் இருக்கும் நாரை, சிறு பாதங்களின் மென் நடை, வண்ணக்குடை என்பன மூலம் ஏற்படுத்திவிடுகிறார். உயர் கவித்துவ பாலியல் வெளியாக ஒவ்வொரு நாவலும் படித்து முடித்தபின் விரிகிறது.
சங்க அகப்பாடல்களின் மறு வாசிப்பு தமிழில் காவபட்டாவின் உயர் கவித்துவ பாலியல் வெளியைப் போன்ற நவீன கதைசொல்லலை உருவாக்கியிருக்க வேண்டும். அதை விடுத்து வாசக கற்பனைக்கு எதையுமே விட்டுவைக்காத பௌராணிக கதை சொல்லலும், உயர் கவித்துவ பாலியலுக்கும் மஞ்சள் எழுத்துக்கும் வேறுபாடே இல்லாத கொச்சையும் கோலோச்சுகிறது. 
மூச்சு முட்டாமல் என்ன செய்யும்? ஜன்னலுக்கு வெளியே ஆகாயத்திலும் நிலவில்லை.

மற்றவர்களுக்கு மூளை உள்ளதா?


தமிழ் எழுத்தாள பெருந்தகைகளின் தயவினால் நகைச்சுவைக்காக என் தளம் பிரபலமடைந்து வரும் வேளையில் ‘மற்றவர்களுக்கு மூளை உள்ளதா?’ என்ற வினைத்திட்பமுடைய கேள்வியை எழுப்பி அதற்குத் தத்துவக் கட்டுரை ஒன்றை விடையாக அளிக்க முற்படுவது எனக்கு நானே குழி வெட்டிக்கொள்ளும் காரியம்தான்.  ஆனாலும் என்ன செய்ய, நம் சம கால மெய் நிகர் உலகில் ‘மற்றவர்களுக்கு மூளை உள்ளதா?’ என்ற கேள்வி அதி முக்கியம் வாய்ந்த இருத்தலியல் கேள்வியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு நான் வினையாற்றாமல் விட்டுவிட்டேன் என்றால் நான் என் வரலாற்றுக் கடமையை செய்யத் தவறியவனாகிவிடுவேன்.
இந்தக் கேள்விக்கு எளிதாக ஆம், இல்லை, இருக்கலாம், இருந்தால்தான் என்ன, இருந்துவிட்டுதான் போகட்டுமே, வக்காளி இருந்துடும்? என்றெல்லாம் கண்ணாடி முன்னால் நின்று நீங்கள் சொல்லிப்பார்த்து பழகினால்தான் இந்தக் கேள்வியின் முழு தாத்பரியமும் அதன் பின்னே அடங்கியிருக்கும் சமூக ஒப்பந்தமும் உங்களுக்குத் தெரியவரும். அப்படி தெரியவந்தாலும் கூட மனிதர்களுடைய நடத்தையிலிருந்து அவர்களை சிந்திக்க வைக்கக்கூடிய பொறி அவர்களுக்குள்ளே இயங்குகிறதா என்று தீர்மானிப்பது மிகவும் கடினமான காரியமே என்று பல தத்துவ அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். 
இந்திய ஞான மரபுகளைப் பற்றி நான் இங்கே குறிப்பிடாவிட்டால் இந்த இடுகையையும் வெறும் வேடிக்கை என்று நீங்கள் புறக்கணிக்கக்கூடும். இந்திய ஞான மரபுகள் பாம்பைப் போலவே கீழே கிடக்கும் பழுதை பழுதென்றே தாண்டிச்செல்பவன், மிதித்துச்செல்பவன், பாம்பென்று கருதி அடிக்க தடி எடுப்பவன், அடித்தே விடுபவன், பயந்து ஓடுபவன் என்ற நடவடிக்கைகளை வைத்து அவனுடைய மூளை என்ற பொறி இருக்கிறது அது இன்ன விதமாகவெல்லாம் வேலை செய்கிறது என்று தத்துவ விசாரங்களை வளர்த்துச் செல்கிறது. பாம்போ பழுதோ அதைக்கட்டிபிடித்து முத்தம் கொடுப்பவன், எனக்கு பிரியமான பாம்பே என்று வருடிக் கொடுப்பவள், உயர் கவித்துவ பாலியலின் மெலிதான வெளிப்பாடாகக் காண்பவள்/ன், ஹே வேறு ஏதாவது சொல்லுங்கப்பா எத்தனை நூற்றாண்டுகளாக இதையே கேட்டுக்கொண்டிருப்பது என்று கொதிப்பவன்  இவர்களையெல்லாம்  இந்திய ஞானமரபுகள் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை. விழிப்பின், கனவின், ஆழ் கனவின் பல நிலைகளையும் இந்திய மரபுகள் பகுத்தறியும் மூளையின் வசத்துக்குட்பட்டதாகவே  அடிப்படைத் தர்க்க நிலைப்பாடாகக் கொள்கின்றன. பகுத்தறியா மூளை, ஆசைவசப்பட்ட மனத்தின் விசைக்கேற்ப இயங்கும் மூளை, உயர் கவித்துவ பாலியல் மூளை ஆகியவற்றின் வெளிப்பாடுகளை ஆராய்வதற்கான தர்க்கவியல் கருவிகளை இந்திய மரபுகள் உருவாக்கவில்லை.
பகுத்தறிவின் மொழியின் எல்கைக்கு அப்பாற்பட்ட, அதன் சமூக ஒப்பந்தத்தை கலைத்துப்போடுகின்ற எதிர்ப்பின் மொழியை, வெளிப்பாடுகளையே கலை இலக்கியங்களின் உச்ச பட்ச வெளிப்பாடான கவிதை சாதாரணமாகப் பேசுகிறது. சப்ளாக்கட்டையை அடித்துக்கொண்டு பேசப்படும் ஆன்மீகத்திற்கும் கலை இலக்கியத்திற்கும் ஒரு சுக்கும் சம்பந்தமில்லை. அப்புறம் எப்படியாக்கும் ஆன்மீகம், சாமியார்கள், மாந்த்ரீகம் என்றெல்லாம் சில எழுத்தாளர்கள் பேசித் திரிகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களெல்லோரும் ‘மற்றவர்களுக்கு மூளை உள்ளதா?’ என்ற கேள்விக்கு வக்காளி இருந்துடும், இருந்துடுமான்னு பார்க்கிறேன் என்ற பதிலையே தெரிவு செய்கிறார்கள். என்ன செய்ய, அதுவும் கூட ஒரு வகையில் சரியான பதில்தானே?

Friday, September 9, 2011

மைய நரம்பு முறிவு

மு. இன்றைக்கு அலுவலகத்திற்கு வந்திருந்தான். ஆம், என்னுடைய ‘மர்ம நாவல்’ என்ற சிறுகதையில் அறிவின் எல்லையைத் தேடிப்போய் காணாமல் போவானே அவனேதான். அந்த சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதிலிருந்து மு வுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் அவன் மகிழ்ச்சியாக இருப்பான் என்ற கற்பனையில் இருந்தேன். எலும்பும் தோலுமாய் வற்றிப்போய் இருந்தான். நெற்றி நிறைய விபூதி. கழுத்து நிறைய ருத்திராட்ச மாலை. கையிலிருந்த மஞ்சள் பை நிறைய முருகன் துதிப் பாடல்கள். திருச்செந்தூர் செந்திலாண்டவர் குல தெய்வமாம். தமிழின் முதல் பின் நவீன கதாபாத்திரங்களில் ஒருவனான மு வுக்கா இந்த கதி?

கழிந்த பங்குனி உத்திரத்திற்கு சீவலப்பேரி சுடலைமாடனுக்கு கிடா வெட்டி பொங்கலிட்டிருக்கிறான். முருகனின் அறுபடைவீடுகளுக்கும் அலகு குத்தி ஏரோப்பிளேன் காவடி எடுத்திருக்கிறான். ஐம்பத்தி இரண்டு வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் முருகன் கோவில் முருகன் கோவிலாக பால்குடம் எடுத்திருக்கிறான். பிபிஓ ஒன்றில் வேலை பார்த்திருக்கிறான். மு வுக்கு சம்பளம் நிறைய. 94இல் அவனுக்கு நரம்பு முறிவு ஏற்பட்டதில் இரவு ஒழுங்காக தூக்கம் வராது. அதனால் நைட் டூட்டி பார்ப்பதில் அவனுக்குச் சிக்கல் ஏதுமில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் தூங்குவான் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்வான். 96இல் அவனுக்கு ஏற்பட்ட இரண்டாவது மைய நரம்பு முறிவு (central nervous breakdown) காரணமாக கை கால் எப்போதும் உதறல் எடுத்துக்கொண்டேயிருக்கும். அதுவும் கூட ஒரு வகையில் மு வுக்கு சௌகரியமாகவே போயிற்று. கணிணியின் விசைப்பலகையில் கையை வைத்தானென்றால் கட கட வென்ற உதறலே தட்டச்சு செய்துவிடும்.

பிபிஓவில் முதலில் மு வுக்கு பெயர் ஸ்டான்லி. ஸ்டான் என்பது செல்லச் சுருக்கம். அமெரிக்க கைபேசி பயனர்கள் சொல்லும் ஆவலாதிகளையெல்லாம் பொறுமையாகக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை சாட்டில் தட்டச்சு செய்து கொண்டேயிருக்கவேண்டும்.  ஸ்டான்லிக்கு பதவி உயர்வு வந்து பத்து ஆவலாதி களைபவர்களை மேய்க்க வேண்டி வந்தபோதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. ஸ்டானின் பிரிவில் வேலை துரிதமாக நடக்கவில்லை. டாய்லெட்டில் தண்ணீர் போகாமல் அடிக்கடி பிரச்சினை வந்தது. டாய்லெட் அடைப்பிற்கும் வேலைத்தேக்கத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக மு நினைத்தது உண்மையாய் போயிற்று. இரவு முழுக்க மு கணிணி முன் உட்கார்ந்து தட்டிக்கொண்டே இருக்க அவன் குழுவினர் இரவுகளில் எல்லோரும் என்ன செய்வார்களோ அக்காரியங்களைத் திறம்பட செய்துகொண்டிருந்தார்கள். மு டி.ஸ். எலியட்டின் புகழ் பெற்ற கவிதை வரியான Jug Jug to dirty ears என்பதை முனகிக்கொண்டு வாளாவிருந்தான். உபயோகித்த ஆணுறைகள் டாய்லெட் குழாயை அடைக்கும் அளவுக்கு இரவின் நற்செயல்கள் பெருகிவிட்டிருந்தன. மு ஒரு பெரிய பட்டை தீட்டிய கத்தி ஒன்றை வாங்கி ஸ்டான்லி கையில் கொடுத்துவிட்டான். ஸ்டான்லி ஒரு நள்ளிரவில் தன் ஜோல்னாப் பையில் இருந்து பள பளக்கும் கத்தியை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டேயிருந்தான். ஜோடிகள் கழிப்பறையை ஒட்டிய டேபிள் டென்னிஸ் அறைக்குப் போவதை கவனித்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த அறையை நோக்கி கத்தியோடு பாய்ந்தான். ஊழலுக்கு எதிரான போராட்ட வழிமுறைகளை விவாதித்துக்கொண்டிருந்த ஜோடிகள் அரை குறை ஆடைகளோடு துள்ளிக் குதித்து ஓடியபோது ஸ்டான்லி பேய் சிரிப்பு சிரித்தான்.

மறு நாள் அலுவலக விசாரணை நடைபெற்றது. மு தான் மு அல்ல என்றும் ஸ்டான்லிதான் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினான். ‘அந்நியன்’ படத்தை விசாரணை அதிகாரிகள் பார்த்திருந்தது மு வுக்கு வசதியாகப் போயிற்று. ஸ்டான்லியின் அமெரிக்க ஆங்கிலத்தை மிகவும் மெச்சி, அவனுடைய அறச்சீற்றத்தைப் பாராட்டி, அதே சமயத்தில் இப்பொழுது வேலைக்கு ஆட்கள் கிடைப்பது எவ்வளவு துர்லபமாயிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு டேபிள் டென்னிஸ் அறையில் நடப்பதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

மு பட்டாக்கத்தியை தூக்கிக்கொண்டு ஓடிய விவகாரத்தை விசாரணை நடத்திய உயரதிகாரிகளில் ஒருவரான மார்க்கபந்துவை நீங்கள் பல இடங்களில் சந்தித்திருக்கலாம். பாரோபகாரி. பெரு நகரங்களிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் வரவில்லையென்றால் கார்ப்பரேஷனை தொடர்பு கொள்ளுவது, மின்சாரவாரியக்காரர்களை சரிக்கட்டுவது, பண்டிகை நாட்களில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, பெண்களை ஒருங்கிணைத்து திருவிளக்கு பூஜைகள் நடத்துவது, என்ற காரியங்களையெல்லாம் பலர் செய்வார்களே, அந்த மாதிரி ஒரு நபர். கூடுதல் என்னவென்றால் மார்க்கபந்து ஒரு இலக்கிய பங்காருவும் கூட. நிறைய எழுத்தாளர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது. எழுத்தாளர்கள் சென்னை வரும்போதெல்லாம் லாட்ஜ் அமர்த்துவார். பட்டிகாட்டான் போல உடை அணிந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு ஷாம்பூவும் ஜீன்ஸும் வாங்கித்தந்து குஷிப்படுத்துவார். நூல் வெளியீட்டு விழாக்களில் உணர்ச்சிவசப்பட்டு கையெழுத்து கேட்பார். அறியப்படாத சமணப்படுகைகளுக்கு செல்லவிருக்கும் வாசகர்களுக்கு பஸ் பிடித்துத்தருவார். இலக்கியம் தெரியாத ஆட்கள் அவரிடம் சிக்கிவிட்டால் தனக்கும் பிரபலங்களுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி பேசி விளாசித் தள்ளிவிடுவார். மார்க்கபந்துக்கு மு வை விளங்கிக்கொள்ள இயலவில்லை. மு வைத் தாக்கியிருந்த மைய நரம்பு முறிவு எந்த தமிழ் சினிமாவிலும் வந்திராதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது, அதனால் அவன் நோயின் தன்மை அவருக்கு புரியவும் இல்லை.

‘Unknown quantity’, ‘Unknown quantity’ என்று மு வைப் பற்றி மார்க்கபந்து அடிக்கடி தனக்குள் முனகிக்கொண்டார். மு நாளொன்றுக்கு 120 பக்கங்கள் வரை ஏதாவது தட்டச்சு செய்து வேறு அவரை அசத்திக்கொண்டிருந்தான். நரம்பு முறிவினால் இவ்வளவு எழுதமுடியுமா என்று மார்க்கபந்துக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட ஆச்சரியம் கொஞ்சம் கொஞ்சமாக மு வின் அடிமையாக மார்க்கபந்துவை மாற்றிவிட்டிருந்தது. மு வின் நோய்க்கூறினை அறிந்துகொள்ள  ‘Rain man’, ‘One who flew over cuckoo’s nest’, ‘Bat Man’, ‘Witches of the Eastwick’ போன்ற படங்களைப் பார்த்துத்தள்ளினார். மு தனக்கு ஹாலிவுட் நடிகர் ஜேக் நிக்கல்சனை மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தது வேறு அவரை பாதித்தது. அலுவலக ஆயுத பூஜைக்கு பெரிய டேப் ரிகார்டரில் ஹரிகிரி நந்தினி பாடலைப் போட்டுக்கொண்டு ஜேக் நிக்கல்சன் சார் Batman படத்தில் மியூசியத்தில் நுழைவது போல உள்ளே நுழையவேண்டும் என்று ஆலோசனை சொல்லி மார்க்கபந்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். அவருக்கு இப்படி ஒரு நகைச்சுவை உணர்வு இருப்பதை மற்றவர்கள் இப்படியே தெரிந்துகொண்டனர்.

பத்து புத்தகத்தைப் படித்தால் பதினோராவது புத்தகத்தை மு உடனடியாக தட்டச்சு செய்துவிடுவான். முருகன் துதிப்பாடல்களை மார்க்கபந்து மு வுக்குக் கொடுக்க மு ஒவ்வொரு பாடலைப் பற்றியும் தத்துவ விசாரம் ஒன்றை அவருக்கு எழுதிக் கொடுத்து விடுவான். அதை அப்படியே மார்க்கபந்து அருணகிரிநாதர் சபை, திருப்புகழ் முற்றோதுதல் குழு போன்ற இடங்களில்  பேசி புகழ் பெற ஆரம்பித்தார். லண்டன் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘ஓ லண்டன் முருகா!’ என்ற கீர்த்தனத்திற்கு மு எழுதிய தத்துவ விசாரத்தை மார்க்கபந்து ஜேக் நிக்கல்சன் சார் Witches of the Eastwick படத்தில் காதல் என்றால் என்ன என்று ஷெர் மேடத்துக்கு விளக்குவாரே அதே பாணியில் விளக்குவது வெளிநாடு வாழ் தமிழர்களிடையே மிகவும் பிரசித்தி. மார்க்கபந்து குமர தத்துவத்தை விளக்கும் முவின் உரையை பெங்களூரு ரமணி அம்மாவின்  ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் ‘ பாடலைப் பாடி கூடவே ஆடி முடிப்பது வழக்கம்.

இந்தப் பின் நவீன நிகழ்வு மேலும் மேலும் பிரசித்தி பெறவே பொறாமையும் எல்லாத் தரப்பிலும் வலுத்திருக்கிறது. முவும் மார்க்கபந்துவும் பிபிஓ வேலையை விட்டு விட்டு இப்போது முழு நேர முருகன் நிகழ்ச்சி நடத்துபவர்களாகிவிட்டனர். தான் படிக்கும் புத்தகங்களுக்கு நேர்மையாக இருக்கும் மு முருக பக்தனாகிவிட்டான்.

சிக்கல் இதன் பிறகு புதிதாகிவிட்டது. மு - மார்க்கபந்து கூட்டணி ஓமுருகா நிகழ்ச்சியை பொறாமைக் கும்பல் ஒன்று பிராமணரல்லாரின் இந்து தமிழ் தேசீய நிகழ்வு என்று வருணித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிராமணர்களையும் உள்ளடக்கிய இந்து தமிழ் தேசீய நிகழ்வாய் மாற்ற வேண்டுமாம். என்ன யோசனை சொல்வீர்கள் நீங்கள் என்றான் மு.

அசந்து போய் உட்கார்ந்திருந்தேன். நான் தமிழ் சினிமா பார்ப்பதில்லையே என்றேன் ஈனஸ்வரத்தில்.

மார்க்கபந்துவிடமிருந்து முவிற்கு கைபேசி அழைப்பு வந்தது. மார்க்கபந்து நாம் தேடிக்கொண்டிருந்த படம் கிடைத்துவிட்டது என்று கூவினார். மு அவசரமாகக் கிளம்பினான்.

என்ன படம் என்றேன் ஆர்வமாக.

நான் கடவுள்.

Tuesday, September 6, 2011

உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா?

‘உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா?’ என்ற தலைப்பில் ஆன்மீக புத்தகமொன்று எழுதவிருக்கிறேன். தலைப்பை நீண்ட நாட்கள் யோசித்து முடிவு செய்திருக்கிறேன். ‘அள்ள அள்ள பணம்’ என்ற புத்தகத் தலைப்பிற்குப் பிறகு படித்தவுடனேயே வாங்க வேண்டும் என்ற அதீத விருப்புணர்வைத் தூண்டக்கூடியத் தலைப்பு இந்தத் தலைப்பாகத்தான் இருக்கமுடியும் என்பது சந்தை நிபுணர்களின் முடிபு. ஏனெனில், எப்பொழுதுமே எல்லோருக்குமே ஒரு மாதிரிதானே இருக்கும்? ஆன்மீகப் புத்தகமென்றால் ப்ளாவெட்ஸ்கியின் ரகசியக் கோட்பாட்டின் பொழிப்புரை போல முன்பு ஒரு தண்டி நாவல் தமிழில் வந்ததே அது போல இருக்கும் Inception படத்தோடு எல்லாம் அதை ஒப்பிட முடியும் என்றெல்லாம் நினைத்து பயந்துவிடாதீர்கள். இது புது யுகத்திற்கான ஆன்மீக நூல். இதைப்படித்து பயன் பெறுவதால் நீங்கள் மடிசஞ்சியாகவோ தயிர்வடையாகவோ மாறிவிட மாட்டீர்கள்.

போன பத்தியை எழுதி முடித்ததுதான் தாமதம் தனக்கு மூக்கில் வியர்த்தது போல என் ஊர் நண்பர் கூப்பிட்டார்.  நாகர்கோவில்காரர்.

புக்கு முடிஞ்சிட்டாடே? எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு பாத்துக்க. இந்த வருடம் டிசம்பர்-ஜனவரி புக் எக்சிபிஷன்ல சப்பி கிடத்திடனும். இப்பத்தான் தலைப்பே ரெடி. அதுக்குள்ள என்ன ஏற்பாடாக்கும்? ஏ இது ஒனக்கு ரீ என்றீ பாத்துக்க. பத்து பதினஞ்சு வருஷம் நீ ஒரு புக்கும் போடல. இப்பேர்ந்தே எல்லாம் பண்ணனுமில்லையா. இப்பல்லாம் புக்கு போடுகது சினிமா குடுக்க மாரியாக்கும். அப்டியா? ரீ என்றீன்னா என்னா? அதாண்டே இந்த நடிகைகள்லாம் இருக்காளில்லையா. நல்லா குடுத்துகிட்டே இருப்பா பாத்துக்க திடீர்னு காணாம போய்டுவா. அப்றம் அக்காவா, அத்தையா ஒரு ரவுண்டு வருவா பாத்துக்க. அதுக்கு பேர்தான் ரீ என்றீ. ஓ. நீ என்ன இத்தன வருஷமாட்டு மெட்ராஸ் வந்தும் ஊர்க்காரன் மாரியே இருக்க. ஹ்ம். ஒரு போட்டோகாரனை பிடிச்சு அனுப்பி வைக்கன் என்னா, நல்லா கண்ணாடில்லாம் போட்டுப் போஸ் குடு. போஸ்டர் போடனும். தக்கல பயக்க ரெண்டு பேரு புள்ளமாருதான், சினிமால நிக்காம் பாத்துக்க அவங்கிட்ட சொல்லி உன் சைசுக்கு தக்கன ஏதாச்சும் ரோலு குடுக்கச் சொல்லிருக்கேன். இப்ப ஆனு பொன்னு எல்லாம் குத்தாட்டம் ஒன்னு ஆடுதில்லையா அது போல ஒன்னு கிடைச்சா கூட போதும். போய்ட்டு வந்திரு. புக்கு நல்லா விக்கும். ஹ்ம். என்ன ஊமு ஊமுன்னுட்டு இருக்க. புக்கு தலப்பு என்ன சொன்ன. உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா? செக்ஸாடே? இல்ல ஆன்மீகம். பிச்சிட்டி போவும். ஆங். சீக்கிரம் சினிமாக்கு எழுது என்ன நான் சொல்றது. எனக்குத் தெரிஞ்சே ஒரு பய மூனு லட்சம் குடுத்தாதான் பேனாவையே தொரப்பேன் அப்டிங்கானாம். பன்னெண்டு லட்சம் குடுத்தாதான் முழுக்கதையும் தருவேங்கானாம். தெரியுமா ஒனக்கு. இல்ல தெரியாது. என்னமோப்பா சொல்லக சொல்லியாச்சு. ஒங் கிருத்திருவத்தக் காமிச்சிராம பாத்து நடந்துக்க. வைக்கட்டா? சரி.

உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதோ இல்லையோ எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது. இன்றைக்கு இவ்வளவுதான். இன்னொரு நாள்தான் என் ஆன்மீகப் புத்தகம் பற்றி.

Sunday, September 4, 2011

ஜிக்மெ லிங்பாவின் ரகசிய சுயசரிதை

சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலுள்ள திபெத்தியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2000 ஆம் ஆண்டு போயிருந்தபோதுதான் ஜிக்மெ லிங்பாவின் பெயரை முதன் முதலாக அறிந்தேன். பௌத்த தத்துவ அறிஞர்களான நாகார்ஜுனனுக்கும் தர்மகீர்த்திக்கும் இடையில் நடந்த கடிதப்போக்குவரத்தை அப்போது நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். காங்டாக் திபெத்தியல் நிறுவனத்திலிருந்த பழம் ஓலைச்சுவடிகளை இது சம்பந்தமாய் பார்க்கவேண்டியிருந்தது.  என் பயணத்தோழிக்கு நான் இப்படி பௌத்த மடாலயம் பௌத்த மடாலயமாய் நேபாளம், பூட்டான் என்று சுற்றி காங்டாக் வந்தபோது பௌத்தம் பற்றியே பெரும் அலுப்பு தட்டியிருந்தது. காங்டாக்கிலிருந்து திபெத்திற்கு ஜீப்பில் பயணம் செய்யலாம் என்றும், ‘திபெத்திய இறந்தவர்களின் புத்தகத்தின்’ செவ்வியல் பதிப்பில் நம் கற்பனைக்கேற்றவாறு தோற்றம் கொள்ளும் சமவெளி ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், அதை நாம் எப்படியும் போய் பார்த்துவிடலாமென்றும் சொல்லி அவளைக்கூட்டி வந்திருந்தேன். சிலுக்குரியிலிருந்து காங்டாக்கிற்கு இரவு பஸ்ஸில் பயணம் செய்தபோது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கி தூங்கி என் தோளிலும் மடியிலும் விழுந்தவாறே நான் சொன்ன கதைகளை அரைகுறையாய் கேட்டுக்கொண்டுவந்தாள்.  என் பயணத்தோழி சீன நடிகை யாவோ சென் போலவே அசப்பில் இருப்பாள். எனவே எல்லா பௌத்த மடாலயங்களிலும் இளம் துறவிகள் நான் கேட்ட தகவல்களையெல்லாம் என் தோழியின் பொருட்டு வாரி வழங்கிக்கொண்டிருந்தனர்.  நான் இரவுப்பேருந்தில் சொன்ன கதைகளில் என் தோழிக்கு திபெத்திய சமவெளியில் வைரமும் வைடூரியமும் கொட்டிக் கிடக்குமாம் என்பது மட்டுமே காதில் ஏறியிருந்தது.  திபெத்தியல் நிறுவன ஓலைச்சுவடிகளிலே வைரச் சமவெளிக்கான வரைபடம் கிடைக்குமோ என்று என் தோழி தேடிக்கொண்டிருந்தாள்.  அவள்தான் அகிலோகேஷ்வர் ஐம்பொன் சிலைக்கு நேர் எதிரில் கண்ணாடிப் பெட்டகத்தில் வைக்கப்பட்ட ஓலைச்சுவடியை எனக்குச் சுட்டிக் காண்பித்தாள்.


ஜிக்மெ லிங்பாவின் ரகசிய சுயசரிதையின் ஒலைச்சுவடியின் பிரதி அது. அந்த ஓலைச்சுவடியில் இருந்த ஒரு சிறு  ஓவியம் என் கவனத்தை கவர்ந்தது. பௌத்த பெண் தெய்வங்கள் பலரும் நிர்வாணமாக ஒரு பௌத்த துறவியை இச்சைத் துன்புறுத்துதல்களுக்கு ஆளாக்கிக்கொண்டிருந்தனர்.  ஓலைச்சுவடிகளின் காப்பாளர் திபெத்திய லாமாக்களின் ஒரு பிரிவினரான மஞ்சள் தொப்பியருக்கு அது தியானத்திற்கான முக்கிய கையேடு என்றார். மஞ்சள் தொப்பியரையும் சிவப்புத்தொப்பியரையும் வகைபிரிக்க நான் அறிந்தே இருந்தேன்.  ஒரு பதினேழு வயது ரிம்போச்சே சீன அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பி திபெத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடி வந்த கதையை நீங்கள் சில பல வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். அவர் மஞ்சள் தொப்பி பிரிவினரே. ஜிக்மே லிங்பாவின் ரகசிய சுய சரிதையை சிவப்புத் தொப்பி பிரிவினர் வாசிப்பதில்லை.

பெண் தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை வைத்து தியானம் செய்வது எனக்கு மிகவும் உவப்பான காரியமாகப் பட்டது.  அந்த ஓவியங்களை வைத்துக்கொண்டு மதுரை சோமு போல உருகி உருகி ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்று திபெத்திய மொழியில் பாடுவார்களோ என்று நினைத்தேன்.  என் வடகிழக்குப் பயணத்தோழிக்கு மதுரை சோமுவின் முருகன் பாடலின் மகத்துவத்தை விளக்குவதற்குள் டங்குவார் அறுந்துவிட்டது. வைரச்சமவெளியின் வரைபடம் அந்த ஓவியங்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதுதான் ரகசியம் என்று ஒப்புக்கு சொல்லி வைத்தேன். ஆண் கடவுளர்களின் நிர்வாண ஓவியங்கள் தியானத்திற்கு இல்லையா என்றாள்.  குறி விரைத்த கால பைரவனின் ஓவியம் ஒன்றை கண்டுபிடித்து அவளுக்குப் பார்க்கக்கொடுத்தேன். நெடுநேரம் கால பைரவனை தொழுதுகொண்டிருந்தாள் சுவாரசியமாக.

வைரச்சமவெளி பற்றிய ஆசையில் அவளும், புது வகை பௌத்த தியான முறை பற்றிய ஆர்வத்தில் நானும் மறு நாள் காங்டாக்கிலிருக்கும் மஞ்சள் தொப்பியரின் மடாலயத்திற்கு சென்றோம்.  தூரத்தில் கஞ்சன்ஜங்கா சிகரம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. சிகரத்தை நோக்கி சிவ சிவா இந்த புது தியான முறையாவது எனக்கு சித்தியாகவேண்டும், தினசரி ஐம்பது பக்கங்களாவது கவித்துவமாக எழுதும் பாக்கியம் வேண்டும் என்று வேண்டி சங்கல்பம் செய்துகொண்டேன்.  குழந்தைத் துறவிகள் மடாலயத்தருகிலிருந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் பயணத்தோழி குழந்தைத் துறவிகளை புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தாள்.  திபெத்திய மடாலயங்கள் பெற்றோரை மதரீதியாக வசப்படுத்தி தங்களின் குழந்தைகளை மடத்திற்கு அர்ப்பணிக்கும்படி நிர்ப்பந்திக்கின்றன என்ற சீன அரசின் பிரச்சாரம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. என் பயணத்தோழி இங்கே கால்பந்து ஆடுபவனில் எவன் மைத்திரேய புத்தனோ என்றாள். எனக்குத் தூக்கிவாரிபோட்டது. இவள் லேசுப்பட்டவள் இல்லை போலும்! அவள் கேமராவில் புகைப்படங்களை பரிசோதித்தோம். இவன் தான் அவன் தான் மைத்திரேய புத்தன் என்று பந்தயம் கட்டிக்கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவள் எல்லோருமே மைத்திரேய புத்தன்கள்தான் அசடே என்றாள். என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்தவள் மஞ்சுஶ்ரீயின் அம்சமோ?

மடாலயத்திற்கு வருவதற்கு முன்பே ஜிக்மெ லிங்பா பற்றி மேலும் தெரிந்துகொண்டிருந்தேன். நவீன திபெத்திய புத்தமதத்தின் சிற்பியான லிங்பா ரகசியமாக தன் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தார். தன்னிலையும் சூன்யம், புறநிலையும் சூன்யம், வாழ்வு என்பது கணம்தோறும் தொடர்பற்று நீள்வது என்ற கருத்துக்களை போதிக்கும் பௌத்த சமயம் சார்ந்த ஒருவர் அகம் நோக்கிய விசாரணையாக சுயசரிதை எழுதியிருப்பது ஒரு முரண்பாடாகவே எனக்குப்பட்டது.  அதுவும் சுயசரிதை முழுக்க பாலியல் ஆசைகளின் பெருக்கத்தையும் நுட்பத்தையும் கொண்டுள்ள நூல் எப்படி தியானத்தின் மையபிரதியாக இருக்க முடியும்?

இரவு உணவுக்கு நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம். மாமிச வகைகளும் ரொட்டிகளும் வேகவைத்த காய்கறிகளும் என்று மடாலயத்தில் இரவு உணவு அமர்க்களப்பட்டது. என் பயணத்தோழி வெளுத்துக்கட்டிக்கொண்டிருந்தாள்.  நான் நீராவியில் வேகவைத்த மரக்கறி மோமோவையும் கோதுமை ரொட்டிகளையும் சாப்பிட்டுவிட்டு சுத்த பத்தமாக இருந்தேன். சாப்பிட்டபின் மடாலயத்தின் தலைமை பிக்குவை சந்தித்தோம். பழுத்த பழமாய் இருந்தார். நான் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளையெல்லாம் என் தோழி மொழிபெயர்க்க அவர் நிதானமாக கேட்டுக்கொண்டேயிருந்தார். ஆசையை வெல்வது அவ்வளவு எளிதா என்றார் ஒரு முறை. ஹிந்து தாந்த்ரீகம் தெரியாதா உனக்கு என்றார் இன்னொரு முறை. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த எங்கள் உரையாடலில் எனக்கு அவர் மேல் மரியாதை ஏறிக்கொண்டே போனது.  அவருடைய இடுங்கிய கண்களில் கேலியும் குதூகலமும் மாறி மாறி ஒளிர்ந்ததாக எனக்கு பட்டது.  எல்லா வெறுப்புகளையும் வென்றவனே தூய அன்பினை அறிகிறான் என்றார். தலாய்லாமா பற்றிய பேச்சு வந்தபோது அவருடைய அலமாரியில் எத்தனை ரே பென் கறுப்புக் கண்ணாடிகள் இருக்கின்றன என்று தெரியுமா உனக்கு என்றார். அவரிடம் கண்ணாடிகளைக் காட்டினால் அவற்றை வேண்டாம் போ என்று அவரால் சொல்லமுடியுமா என்று கேட்டார்.  பாலியல் ஆசைகளைப் பற்றி பேச்சு திரும்பியது. தன் குறியை தன் குதத்தில் செருகிக்கொண்ட பிக்குவின் கதை பாலியில் எழுதப்பட்ட வினயா பிரதியில் இருக்கிறதே படித்திருக்கிறாயா என்றார். சொல்லுங்களேன் என்றதற்கு அவர் சொன்ன கதையைக் கேட்டு என் தோழிக்கு முகம் சிவந்து போயிற்று. மொழிபெயர்க்க மறுத்துவிட்டாள்.

இரவு சுமார் பத்து மணிக்கு அந்த சடங்கு தொடங்கியது. வெண்கலத் தாம்பாளம் போலிருந்த அந்த   திபெத்திய ‘காங்’கில் மர உருளையால் இடிக்க, சிறு சிறு மத்தளங்களை குச்சிகளால் பிக்குகள் தட்டி தாள லயமேற்ற, எகத்தாளம் போன்ற கருவிகள் முழங்க ஜிக்மே லிங்பாவின் சுய சரிதையிலிருந்து மிகவும் ஆபாசமெனக் கருதப்படகூடிய ஒரு பகுதி ஓதப்பட்டது. பிக்குகள் எல்லோரும் அதைத் திரும்பி ஓதினர். எல்லோருக்கும் கொஞ்ச நேரத்திலேயே அருள் வந்துவிட்டது. எல்லா பிக்குகளின் உடல்களும் முன்னும் பின்னும் ஆட வாத்தியக் கருவிகளின் வேகமும் சீராக அதிகரித்தது. தமிழ் நாட்டு ஆவேசங்கள் போல இல்லை அவை. உச்சத்தை சீராகச் சென்று தொட்டபின் அந்நிலையிலேயே தொடர்ந்து பல மணி நேரம் இருந்தார்கள்.  வெள்ளி முளைப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே எங்கள் அறைகளுக்கு நாங்கள் திரும்பிவிட்டோம்.

எதையோ தேடி வந்து எதையோ பார்த்தது போன்ற குழப்பமான மனோநிலையிலேயே சிலுக்குரிக்கு   இரவு பஸ்ஸைப் பிடித்தோம். வைரச் சமவெளிக்கு நாம் கண்டிப்பாகப் போகத்தான் போகிறோம் என்றேன். பிரம்மபுத்திரா நதிமுகத்தைத் தேடி இமயமலையைச் சுற்றிக்கொண்டு போனால் வைரச்சமவெளி வந்துவிடும் தெரியுமா என்றேன். என் தோழிக்கு எந்த உரையாடலிலும் நாட்டமில்லாதது போலத் தோன்றியது.  மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தோம். பொத்தாம்பொதுவில் யாருக்கோ சொல்வது போல அந்த தலைமை பிக்கு பெரிய ஞானி தெரியுமா என்றேன். என் தோழி உடனடியாக விழிப்படைந்து ஹலோ அந்த பிக்கு என் பின் பாகத்தில் கிள்ளினான் தெரியுமா உனக்கு என்றாள்.

நீண்ட நேரம் ஜன்னல் வழியே மலைப்பாதையையும் தூரத்தில் மினுங்கும் விளக்குகளையும் பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு சிறு கேவலோடு என் தோழியை அருகே இழுத்து இறுகக்கட்டிக் கொண்டு தூங்கிப் போனேன்.






கதைகள் போல கட்டுரைகளும் கட்டுரைகள் போல கதைகளும் நான் எழுதுவதால் நான் சொல்லும் தகவல்களில் எது உண்மை எது கற்பனை என வாசகர்கள் குழம்புவதாக எனக்கு தெரியவந்துள்ளது. எனவே சொல்லிவிடுகிறேன்: ஜிக்மெ லிங்பா உள்ளபடியே வாழ்ந்த திபெத்திய பௌத்த துறவி. அவருடைய ரகசிய சுயசரிதையைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வு நூலை ஜேனட் கியட்ஸோ என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியை எழுதியுள்ளார். அந்த நூலை கீழ்க்காணும் சுட்டியில் காணலாம். http://tinyurl.com/42m9vfw

Saturday, September 3, 2011

பைத்திய நிலையும் கலை இலக்கியமும்


நண்பர் விமலாதித்த மாமல்லன் தன்னுடைய தளத்தில் ‘ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழி கதை’க்கும் ‘நீலத்திமிங்கலங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்ற பதிவுக்கும் சுட்டிகளைக்     கொடுத்ததிலிருந்து தூங்கிவழிந்துகொண்டிருந்த என்னுடைய தளத்திற்கு எராளமானோர் வருகை தந்துள்ளனர். 38 மின்னஞ்சல்கள் வந்துள்ளன. சுமார் மூன்றரை நபர்களுக்கு மட்டுமே ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் எழுதியிருந்த எனக்கு இத்தனை பேர் படிப்பதும் கடிதம் எழுதுவதும் ஒரு வகையான பதற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தோற்றுவித்துள்ளன. கடிதங்களுக்கு பதில் எழுதுகிறேன் பேர்வழி என்று ஜாலிலோஜிம்கா பதிவுகள் எழுதி பின்னர் அதை புத்தமாகத் தொகுத்து அதே வாசகர்களுக்கு அப்புத்தகங்களை விற்றுவிட்டு நாற்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் பார் ஐம்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் பார் என்று மார் தட்டலாமா என்று யோசனை ஓடியது. ஆனால் இந்த மாதிரியான பேத்தல் பிஸினசுக்கான ஆள் நானில்லை. அதில் ஏதாவது ஒரு புத்தகத்தை யாராவது பாப்புலர் கழிவு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சீரீஸில் சேர்த்து வைக்க, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவுடன் அது South Asian Classic என்று அமெரிக்க பல்கலைக்கழகங்களில்   பாடமாக வைத்துவிட்டார்களென்றால் என்ன செய்வது என்ற பீதி வேறு கவ்விக்கொண்டது. எத்தனை அவமானங்களோடுதான் ஒருவன் உயிர் வாழமுடியும்? எவ்வளவு சீக்கிரம் எனக்கு எதிராக நானே வேலை செய்கிறேன் பாருங்கள். எனவே அ அ வாசக ஆ ஆ வாசகி எனக்கு உங்கள் கடிதங்களுக்கு பதிலெழுத முடியாது. என் தளத்தில் பின்னூட்ட வசதி நிறுத்தப்படவில்லை என்பதை கவனியுங்கள். உங்களுக்குத் தோன்றியதை அங்கே எழுதிக்கொள்ளுங்கள். இல்லையேல் உங்களுக்குள் விவாதித்துக்கொள்ளுங்கள். சர்வ காலமும் கணிணி முன் உட்கார்ந்து தட்டச்சு செய்துகொண்டேயிருக்க முடியாது. நிற்க.
இருந்தாலும், வந்த கடிதங்களில் ஒன்று என்னைப் பதிலளிக்கத் தூண்டுகிறது. அவருடைய வேண்டுகோளின்படி அவருடைய பெயரை இங்கு தரவில்லை. மற்றபடி கடிதம் இதோ:
‘அன்புள்ள எம்.டி.எம்,
விமலாத்தித்த மாமல்லன் அவருடைய தளத்தில் நீங்கள் ஜெயமோகனின் அறம் சீரீஸ் கதைகளைப் பாராட்டி கடிதம் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார். அவர் கதைகளைப் பாராட்டி எழுதிய நீங்கள் அவரை கிண்டலடித்து எப்படி ‘நீலத்திமிங்கலங்கள்’ எழுதுகிறீர்கள்? 1980 களின் மத்தியில் நீங்கள் அதிகம் எழுதியும் கூட்டங்களில் பேசியும் இருந்த காலகட்டத்தில் அறம், இலக்கியம், செயல்பாடு குறித்தும் நீங்கள் அதிகம் பேசியிருப்பதையும் நான் அறிவேன். 1987-88இல் கோவை ஞானி உங்களை அழைத்து கோவையில் நடத்திய கூட்டத்தில் அமைப்பியல் அல்தூசர் என்றெல்லாம் நாள் முழுக்க நீங்கள் பேசியதை நான் கேட்டது மட்டுமல்ல அந்தப் பேச்சின் பத்து மணி நேர ஒலி நாடாக்களையும் நான் பல முறை கேட்டிருக்கிறேன். இப்பொழுது என் கேள்வியெல்லாம் அறம், லட்சியவாதம், இலக்கியம் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?’
அறம் இலக்கியத்தின் உட்கிடைக்கை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இலக்கியத்தின் அறம் இடம், காலம் சார்ந்த நன்னடத்தை முறைமை சார்ந்தது அல்ல; அது நிரந்தரமான மனித குலத்திற்கே பொதுவான அறச்சிக்கல்களைப் பேசுவது. அறச் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகள் காண்பது கலை இலக்கியத்தின் வேலையில்லை. அறச்சிக்கல்களின் செறிவை அதிகமாக்குவதும் தனித்துவமான மனித சூழல்களை நுட்பமாகவும், கூர்மையாகவும் அவதானிக்க வைப்பதுவும்தான் கலை இலக்கியத்தின் வேலை. கடுமையான அறச்சிக்கல்களை இலக்கியம் தீர்வற்ற புதிராகவே வைத்திருக்கிறது. லட்சியவாதமோ அறச்சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகளை வழங்கிவிடுகிறது. 
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், லட்சியவாதம் தோற்கும் இடங்களில் உருவாகும் பைத்திய தருணங்களில்தான் கலை இலக்கியத்தின் தோற்றுவாய் இருக்கிறது. முழுப்பைத்தியம் அல்லது தற்கொலை என்ற கொடூரத் தெரிவுகளிடையே ஊடாடுவதே படைப்பு மனோநிலையாக இருக்கிறது. இந்த ஊடாட்டத்தின் வெளிப்பாடுகளை பாரதி, மௌனி, புதுமைப்பித்தன், நகுலன், பிரமிள், ஜி.நாகராஜன், ஆத்மாநாம், விக்கிரமாதித்யன், பிரம்மராஜன், சுகுமாரன், வன்ணநிலவன், ந.முத்துசாமி, சம்பத், பாதசாரி, பிரேம்-ரமேஷ், மாமல்லன், சுகுமாரன், கோபிகிருஷ்ணன், கௌதம சித்தார்த்தன், ஃபிரான்சிஸ் கிருபா, லஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன் என்று பலருடைய பிரதிகளில் காணலாம். இங்கே என்னுடைய நோக்கம் கநாசு பட்டியல் ஒன்றைத் தயாரிப்பது அல்ல. என்னுடைய நினவிலுள்ள பிரதிகளை வைத்து அடையாளம் காட்டுகிறேன்.  பைத்தியத்திற்கும் தற்கொலைக்குமிடையே ஊடாடும் மனத்தினை நாம் சமூகத்தின் மைய இருதயமாகக் கொண்டாட வேண்டும், பாதுகாக்க வேண்டும். அம் மனம் வெறி கொண்டு கூச்சலிடும், போதை நாடும், மேடை, மேஜை நாகரீகங்களைப் பேணாது, சிதைந்த மொழியில் பேசும், அ-தர்க்கத்தையோ, குதர்க்கத்தையோ முன் வைக்கும். உங்களை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கும், சௌகரியமாக இருக்க விடாது. தூங்கவிடாது. லட்சியவாதம் தோற்ற இடங்களைச் சந்தித்த அத்தகைய கலை இலக்கிய மனமே சமூக வெளியில் முத்துக்குமாராகவும், செங்கொடியாகவும் மரணமுறுகிறது. அக வாழ்வில், உறவுகளில், நண்பர்களிடத்தே, தொழிலுறவில் லட்சியவாதம் தோற்கும்போது கயமை, ஊழல், கடவுள் துறப்பு, அவ நம்பிக்கை, முழு சூன்யம் உருவாதல் என் பல தன்மை பொருந்திய, பன் முகம் கொண்ட இருண்மை உருவாகிறது. கலை இலக்கியம் லட்சியவாதத்தை முன்வைத்து இந்தச் சூழல்களை மறைக்கும் மாய்மாலத்தைச் செய்யாது. யாரையும் எளிதாக குற்றவாளியாக்கி தப்பிக்காது. சாளரங்களை இரக்கமில்லாமல் திறந்து காட்டிவிட்டு, பார் பார், என்று சொல்லிவிட்டு தனக்கு சம்பந்தமில்லாதது போல கைகட்டி நிற்கலாம்; அல்லது சாளரத்தின் வழி தெரியும் காட்சிகளில் ஐக்கியமாகி உருக்குலைந்தும் போகலாம்.
லட்சியவாதத்தைக் கூவி கூவி அறுதியிடும்போது  இலக்கியமற்றதும் கலையற்றதும் கலை இலக்கியமாகப் பிரசித்தி பெறுகிறது. அகிலன், நா, பார்த்தசாரதி, கல்கி (தியாக பூமி), பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்கள், கோமல் சுவாமிநாதன் என அடையாளப்படுத்தப்பட்ட பிரதிகளை சொல்லலாம். இந்த வகையிலேயே ஜெயமோகனின் அ-புனைவு கட்டுரைகளும் கருத்துரைகளும் பெரும்பாலும் சேருகின்றன. புனைவிற்கும், நினவுகூறலுக்கும் இடைப்பட்ட ‘அவதாரம்’ என்ற அவருடைய இடுகையை  வாசித்துப்பாருங்கள். ஜெயமோகனுக்கு தொழில் நுட்பத்தின் சிறப்பே அறமோ, கடவுளோ என்ற கேள்விகளிருக்கின்றன. இக்கேள்விகளை அவர் தன்னுடைய 'அவதாரம்' என்ற இடுகையில் வெளிப்படையாகவே சொல்கிறார்.  சொல்லப்பட்ட 'அவதாரம்' இடுகையில் இலக்கியம் கைகொள்ளும் அறம் குறித்தான கேள்விகளை ஆசிரான் அப்புவிடம் அடிவாங்கி தோற்றபின் இரண்டு வருட காலம் என்ன மனோ நிலையில் இருந்தான், வன்புணர்ச்சிக்குள்ளான சினேகப்பிரபா தன் வாழ்க்கையைப் பிறகு எவ்வாறு கழித்தாள் என்பவை புனைவாக்கப்படும்போதுதான் பேச இயலும். ஜெயமோகனின் இடுகைப்பிரதியோ தமிழ் கச்சடா சினிமாவின் உச்சகட்டம்போல அப்பு ஆசிரானை அடித்து வீழ்த்தியவுடன் முடிந்துவிடுகிறது! ஆசிரான், அப்பு ஆகியோருடைய வாழ்க்கையிலாவது என்ன நடந்தது என்று சில வரிகள் கேள்விப்படுகிறோம் ஆனால் சினேகப்பிரபாவைப் பற்றியோ பிரதி மௌனம் சாதிக்கிறது. பரிதாபமான வன்முறைக்கு ஆளாகப்போகும் அவளைப்பற்றி 'உள்ளூர் நிலவரத்திற்கு அழகி', 'ரத்த சோகையை கூட எங்களூரில் சிவப்பு என்று சொல்வார்கள்' என்ற விவரணை வரிகள் இந்தப் பிரதியை இலக்கியத்திற்கும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாததாய் மாற்றிவிடுகின்றன.
ஜெயமோகனின் புனைவுகளை நாம் எடுத்துக்கொண்ட கருவைக் கொண்டே ஆராய்வது என்பது வேறு கதை. அவருடைய ஆசிரிய நோக்கங்களை மீறி புனைவுகளை வாசகன் தனக்கேற்ப வாசிக்கலாம். புனைவுகள் தரும் சௌகரியம் அது. அறம் சீரீஸில் லட்சியவாதத்தை உண்மையிலேயே நம்பும் வெள்ளம்பியான ஜெயமோகன் என்ற ஆசிரியர் நன்றாகவே அடையாளம் தெரிகிறார். அந்த சீரீஸில் சில கதை மாந்தர்களை நான் நன்கு அறிவேன். உதாரணமாக எங்களூர் (நாகர்கோவில்) பூமேடை. அந்தக் கதைகளைப் படிக்கும்போதுதான் லட்சியங்கள் வாழ்வில் ஜெயித்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்ற Mills and Boons பகற்கனவு விரிந்தது. ‘வாத்தியார் நல்லதே செய்வார்’ என்று நம்பும் எம்ஜிஆர் ரசிகனின் மனோநிலை அது. என்னைப் பொறுத்தவரை அது ஒரு அபூர்வமான தருணம். அதை எனக்கு வழங்கியமைக்காக ஜெயமோகனை உச்சி முகர்ந்துகொள்ளலாம்.

Thursday, September 1, 2011

ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழிக் கதை

கைபேசி காதோடு ஒட்டிப்பிறந்தவளுக்கு மடியோடு தைத்த கணிணியோடு மாப்பிள்ளை பார்த்தார்கள். மடி கணிணி மாப்பிள்ளை இணைய இடுகை இடுவதில் வல்லவனே தவிர மற்றபடிக்கு சங்கதி வேலை செய்யாதாம். காதோடு கைபேசிகாரிக்கு மடி கணிணி மாப்பிள்ளை உணர்ச்சிவசப்பட்டு அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதற்காக ராம் லீலா மைதானத்திற்கு போனது கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். நல்ல வேளை மாப்பிள்ளை உண்ணாவிரதம் இருக்கவில்லையாம். ராம் லீலா மைதானத்தில் மடி கணிணியோடு உட்கார்ந்து இடுகை மேல் இடுகை இட்டதோடு சரி. பதிமூன்று நாளில் அறுபது இடுகைகளாம். புத்தகமே போடலாமாம். காதோடு கைபேசிகாரி தொடர்ந்து மாப்பிள்ளையோடு தன் தோழிகளோடு பேசுவது போலவே காலை என்ன மதியம் என்ன இரவு என்ன சாப்பாடு என்று கேட்டுக்கொண்டே இருந்தாளாம். லாரி லாரியாய் கச்சோரியாம், சமுசாவாம், சாட்டாம், பூரியாம், கிழங்காம், ரொட்டியாம். மாப்பிள்ளை சாப்பிட்டுகிட்டே இருக்கானாம். சாப்பிட்ட சாப்பாட்டில் வயிறு ஊதிகிட்டே இருக்காம். மடி கணிணியை நெஞ்சில் வைத்துதான் ஏழாவது நாளிலிருந்து இடுகையே எழுதமுடிந்ததாம். வயிறு ஊதும் போதுதான் அந்தக் கையில்லா சட்டைகாரியோடு சண்டை வந்து விட்டதாம். கையில்லா சட்டைக்காரி எங்கேயிருந்து வருகிறது லாரி லாரியாய் கச்சோரி, டாங்க், டாங்காய் மினரல் வாட்டர் என்று டிவிட்டியே கண்டுபிடித்து விட்டாளாம். ராம் லீலா மைதானக் கூட்டம் எகிப்து போலவே, லிபியா போலவே சமூக ஊடக பரிசோதனை சதியாம். கேட்டவுடன் மாப்பிள்ளை பொங்கிட்டானாம். கையில்லா சட்டைக்காரிகளே நாட்டைத் துண்டாட வந்த ஐந்தாம்படை என்று விட்டானாம் பாருங்கள் இடுகை ரத்தக் கொதிப்பு அளவுக்கு அதிகமானதாலும் வாயில் கச்சோரியை வைத்துக்கொண்டே ' பாரத மாதாக்கு ஜே!' என்று கூவியதாலும் மூச்சடைப்பே வந்துவிட்டதாம். அப்போதுதான் ' அழகிய அசடே' என்று காதோடு கைபேசிகாரியைக் கொஞ்சி தன் சங்கதி ரகசியத்தை உளறிவிட்டானாம். காதோடு கைபேசிகாரி அத்தோடு மாப்பிள்ளையை விட்டவள்தானாம். இந்திய பாராளுமன்றத்தை விட பெப்பே கொடுப்பதில் கெட்டிக்காரிகள் இந்த காதோடு கைபேசிகாரிகள் என்று புலம்பித்திரிகிறானாம் மாப்பிள்ளை. இனிமேல் ஜென்மத்துக்கும் சம கால வரலாற்றுத் தருணங்களைப் பற்றி இடுகையே இட மாட்டானாம். வரலாற்றுத் தருணங்களை கோட்டை விடுவதை மையமாக வைத்து ஒரு பைங்கிளி நாவலை எப்படி இணையத்தில் எழுதுவது என்று கையில்லா சட்டைக்காரியிடம்  யோசனை கேட்டிருக்கிறானாம்.