Pensive Bhidisattva- Picture courtesy National Museum of Korea 's website http://www.museum.go.kr/site/main/index002
இண்ட்சியோன் விமானநிலையத்தில் சஞ்சயும், சின்னச்சாமியும் அதிகாலையில் இறங்கியபோது குளிர் காற்று காதுகளைத் துளைத்தது. சியோல் நகரிலிருந்த ஹோட்டலுக்கு அவனையும் சின்னச்சாமியையும் அழைத்துச் செல்ல கம்பெனியிலிருந்து ஷி வூ வந்திருந்தார். பெரும்பான்மையான கொரியர்களுக்கு இல்லாத உப்பிய கன்னத்துடன் கனத்த இமைகளுடனும் இருந்தார். பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசினார். இங்கிலாந்தில் படித்தாராம். ஷி வூவின் ஆங்கிலப் புலமையைக் கருத்தில் கொண்டே அவரை கம்பெனி இந்தியர்களை வரவேற்க அனுப்பியிருந்தது. சின்னச்சாமி கலகலப்பாக பேசக்கூடியவனாக இருந்தது சஞ்சய்க்கு ஆறுதலாக இருந்தது. அவன் காரின் கண்ணாடி வழியே ஒரே மாதிரியாக நெடுதுயர்ந்த கட்டிடங்களையும் சுத்தமான சாலைகளையும் பார்த்துக்கொண்டே இருந்தான். ஷி வூ அவன் தனிமையின் குமிழுக்குள் அடைபட்டிருக்கும் பிராணி என்பதினை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டவராக அவர் சின்னச்சாமியிடமே பேசிக்கொண்டிருந்தார். விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போய்ச் சேர நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்; ஹோட்டல் சியோல் நகரின் மையப்பகுதியில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டார்கள்.
“சேஜூ தீவு சியோலிலிருந்து எவ்வவளவு தூரம்?” என்று திடீரெனக் கேட்டான் சஞ்சய்.
காரை ஓட்டிக்கொண்டிருந்த ஷி வூ சட்டென்று பின் சீட்டில் உட்கார்ந்திருந்த சஞ்சையைத் திரும்பிப் பார்த்துவிட்டு “சேஜூ தீவு முத்துக்குளித்தலுக்கு பிரசித்தம். இயற்கையான முத்துக்கள் வாங்க அங்கே போகலாம் என்றிருக்கிறீர்களா? சியோலிலிருந்து எட்டு மணி நேர பஸ் பயணம். ஆனால் நீங்கள் இங்கே தங்கியிருக்கும் நாட்களில் நாம் ஜிண்டோ தீவிற்கு செல்லத்தான் நாம் திட்டமிட்டிருக்கிறோம்.” என்றார்.
சஞ்சய் தன் தந்தையின் மரணம் சேஜூ தீவினருகே நடந்ததை சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்துவிட்டு அவரிடம் முதல் அறிமுகத்திலேயே சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தான்.
“நான் கண்டிப்பாக ஒரு நாள் அங்கே போய் வரவேண்டும் சார் “ என்றான் பொதுவாக. ஷி வூ ஆனால் தொடர்ந்து சேஜூ தீவினைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார்.
“சேஜூ தீவில் முத்துக்குளிப்பவர்கள் பெண்கள் அவர்களால் கடலாழத்தில் நீண்ட நேரம் மற்றவர்களை விட மூச்சடக்கி இருக்க முடியும். இப்போது நவீன வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. மரபான முத்துக்குளித்தலில் முன்பெல்லாம் ஈடுப்பட சேஜோ தீவின் பெண்கள் ஆக்சிஜன் சிலிண்டர் எதுவும் இல்லாமலே கடலாழத்தில் நீண்ட நேரம் இருப்பார்கள். அவர்கள் நீந்தி மேலெழும்பி வரும்போது விசித்திரமான சீழ்கை ஒலியெழுப்பி மூச்சினை உள்வாங்குவார்கள். அவர்களை நாங்கள் மச்சக்கன்னிகள் என்று அழைப்போம் தெரியுமா?”
சஞ்சய்க்கு ‘மச்சக்கன்னிகள்’ என்ற பெயரைக் கேட்டவுடனேயே முகம் மலர்ந்துவிட்டது. சின்னச்சாமிக்கு கொரிய உணவை சாப்பிட்டு எப்படி காலம் தள்ளப்போகிறோம் என்பதே கவலையாக இருந்தது. அவன் ஷி வூவிடம் தொடர்ந்து உணவு பற்றியே கேட்டுக்கோண்டிருந்தான். சியோல் நகரில் அம்பிகா அப்பளம் கிடைக்குமா என்று மட்டும்தான் சின்னச்சாமி இன்னும் கேட்கவில்லை என்று சஞ்சய் நினைத்தபோது ஹோட்டல் வந்துவிட்டது. அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு ஷி வூ போய்விட்டார். மதிய உணவுக்குப் பிறகு கொரிய நேஷனல் மியுசியத்திற்கு செல்வதாக ஏற்பாடு.
சஞ்சயின் அறை ஹோட்டலின் பதினோராவது மாடியில் இருந்தது. ஹோட்டலுக்கு மொத்தம் இருபத்தி ஏழு மாடிகள். அறைக்குள் நுழைந்தவுடன் தன் மடிக்கணினியை எடுத்து அம்மாவுக்கு ‘நலம். நல்லபடியாக சியோலுக்கு வந்து சேர்ந்து விட்டேன். எங்களை வரவேற்க வந்த ஷி வூவிடம் சேஜூ (ஜேஜூ அல்ல) தீவு பற்றி விசாரித்தேன். நிச்சயம் ஒரு நாள் போய் வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். அங்கே போவதற்கு முன் மீண்டும் தெரிவிக்கிறேன். நீ நல்லபடியாகத் தூங்கு. சின்னச்சாமி என்னை நன்றாக கவனித்துக்கொள்வான். நீ கவலைப்படாதே. அன்புடன்” என்று மின்னஞ்சல் அனுப்பினான். ஜன்னல் திரைச்சீலையை விலக்கி பார்த்தபோது சியோல் நகரம் காலையிலேயே சுறுசுறுப்பாய் இயங்குவதாகத் தோன்றியது. தூரத்தில் ஹன்ஸ் நதியின் மேல் கட்டப்பட்ட பாலம் தெரிந்தது. கொரியமொழியில் எழுதப்பட்ட நியான் பலகைகளில் விளக்குகள் அணைந்திருக்க நகரத் தெருவே கொரிய மொழி புத்தகம் ஒன்றின் திறந்த பக்கம் போல விரிந்திருந்தது. கட்டிலுக்கு அருகே அடுக்களை மேடையொன்றும் சமைத்துக்கொள்வதற்கான உபகரணங்களும் இருந்தன.
சின்னச்சாமி ஃபோனில் கூப்பிட்டான்.
“மச்சி, சாப்டியா இல்லையா?”
“எனக்கு எதுவும் வேண்டாம்டா, நீ சாப்டு. நா தூங்கப் போரென்”
“ஒழிஞ்சு போ. ஆனா விசாலாட்சியம்மா நாளைக்கு எம் பையன இப்டி பட்டினி போட்டு கொரியாவுலேர்ந்து கூட்டி வந்திருக்கேயேன்னு கேட்டா நா என்ன சொல்றது?”
“ மத்யானம் சாப்டரேண்டா. நல்லா தூங்கிட்டன்னா ஒரு மணிக்கு எளுப்பு. சரியா”
“நானும் சாப்ட்டு அலாரம் வச்சுட்டுத்தான் தூங்கப் போரென். அசந்து தூங்கிட்டன்னா நீ என்னை எளுப்பு. ஒனக்கும் என்னப் பாத்துக்கிற பொறுப்பு இருக்கு மாமூ”
“சரிடா சரி”
சின்னச்சாமிக்கு குழந்தை முகம். மீசை சரியாக வளராமால் அரும்பு மீசையாகவே தேங்கிவிட்டதால் அப்படி தோன்றுவதாக இருக்கலாம். கலகலப்பாக பேசுகிற பேர்வழி என்பதால் எல்லோரும் உடனடியாகப் பழகிவிடுவார்கள். சஞ்சயை ஏனோ பொதுவாக குறும்பும் விஷமமும் முகத்தில் தாண்டவமாடுகிறவனாகப் பார்ப்பார்கள். அவன் உள்ச்சுருங்கி தனித்து இருப்பதால் அவனை வில்லனாக முதல்ப்பார்வையில் அறுதியிடுபவர்களும் உண்டு. விசாலாட்சிக்கு இது தெரிந்திருந்தது. சின்னச்சாமி சஞ்சையை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நேற்று வீட்டுக்கு வந்தபோது அவனிடம் வெளிப்படையாகவே விசாலாட்சி சொன்னாள். “ எப்ப பாரு எதாவது பொத்தகத்தப் படிச்சுட்டே இருக்கானா, ஒலகமே அவன் கண்ணில பட மாட்டேங்கு போ. கொரியால போயி நீதாம்பா ஒளுங்கா சாப்டானா தூங்குனான்னு பாத்துகிடனும். அவன் மொகத்தப்பாத்து எல்லாம் சரியான வில்லன்னு நினைப்பாங்க உள்ளபடிக்கு அவனுக்கு கல்மிஷமே கிடையாது”. சின்னச்சாமி முகத்தை இறுக்கிக்கொண்டு “ ஆமா ஆமா அவன் போதிசத்துவருல்லா” என்றான். சஞ்சய் சத்தமாக சிரிக்க விசாலாட்சியும் அவனுடன் சேர்ந்துகொண்டாள். சஞ்சய் கொரிய பௌத்தம் பற்றி தான் படித்ததை அவனிடம் கூறியிருந்தான். கொரியாவுக்கு செல்வதற்கான பயண ஏற்பாடாக பலவற்றையும் படித்தது போல கொரிய பௌத்தத்தையும் அவன் படித்துக்கொண்டிருந்தான்.
சின்னச்சாமிக்கு சஞ்சயின் வாசிப்புகளைப் பற்றி இளக்காரமே இருந்தது. கொரியாவில் இட்லியும், தயிர்சாதமும் கிடைக்குமா கிடைக்காதா என்பது மட்டுமேதான் அவன் அக்கறைகொண்ட விஷயங்களாயிருந்தன. அவன் மனைவி சந்திரிகாவும் அவனுக்கு வித விதமாய் உறுகாய் பாட்டில்களும், பருப்பு பொடிகளும் அவன் பயணப்பெட்டியில் பொதிந்து வைத்திருந்தாள். “அரிசிச்சோறு கிடைச்சா போதும் மாமே நா கொரியா என்ன சைபீரியால கூட வாழ்ந்திருவேன்” என்று சவடால் விட்டுக்கொண்டிருந்தான் சின்னச்சாமி. சஞ்சய்க்கு விசாலாட்சி அப்படி உணவுப்பொருள்கள் எதுவுமே தயார் செய்து கொடுக்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் பக்கத்திலேயே இருக்கும், தன் கூடவே வேலை செய்யும் சின்னச்சாமிக்கும் தனக்கும் எவ்வளவு பெரிய நிரப்ப முடியாத இடைவெளி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் சஞ்சய்.
பயணச்சோர்வின் மிகுதியில் அவன் கட்டிலில் விழுந்தபோது மூடிய கண்களுக்குள் சியோலின் தெருவில் ஆக்கிரமித்திருந்த கொரியமொழி பலகைகள் சித்திரங்களாய் ஓடின . என்ன சொல்கின்றன அவை? சித்திர எழுத்துக்களில் என்ன மாயம் இருக்கிறது? செய்பவனும் செய்யப்படுபவையும் இல்லாமல் தூய வினையாக, தூய செயலாக, சித்திரமாக அந்தரத்தில் மிதக்கும் தியான வடிவங்களாக காற்றில் அலைகின்றன அவை.
தொலைபேசி மணி ஒலித்தபோது சஞ்சய் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து பதறி எழுந்தான். கைக்கடிகாரம் காலை மணி பத்து நாற்பது என்று காட்டியது. தொலைபேசியில் சின்னச்சாமி “மணி ஒன்னாச்சுடா கீழே இறங்கி வா. லாபியில் வெய்ட் பண்ரேன்” என்றான். சஞ்சய்க்கு தான் தன் கைக்கடிகாரத்தை இன்னும் கொரிய நேரத்துக்கு ஏற்ப மூன்று மணி இருபது நிமிடங்கள் கூட்டி வைக்கவில்லை என்பது உறைத்தது. அவசர அவசரமாக குளித்துவிட்டு ஹோட்டலின் வரவேற்புத் தளத்திற்கு இறங்கிச் சென்றபோது சின்னச்சாமி ஏற்கனவே சாப்பிட்டிருந்தான். காஃபி ஷாப்பில் சாப்பிட்டுவிட்டு வா நான் வரவேற்பறையில் காத்திருக்கிறேன் ஷி வூ எந்த நேரமும் வந்து விடுவார் என்ற சின்னச்சாமியின் முகத்தில் சுரத்தில்லை; கொரிய சாப்பாடு அவனுக்குப் பிடிக்கவில்லை போலும் என்று சஞ்சய் நினைத்துக்கொண்டான்.
சாப்பாட்டு மேஜையின் மையத்தில் அடுப்பு இருந்தது. சஞ்சய் மேஜையில் அமர்ந்தவுடன் அடுப்பைப் பற்றவைத்து வாணலியை மேலை வைத்து சுற்றிலும் சிறு சிறு தட்டுகளில் மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, கீரை, கடற்பாசிச் சருகு, வினிகரில் ஊறி மிளகாய்த்தூள் தூவப்பட்ட முட்டைகோஸ், சீவிய முள்ளாங்கித் துண்டுகள், மீன்கறி, ஒரு கோப்பை அரிசிச்சோறு, என்று மேஜையை நிரப்பினாள் ஹோட்டல் பணியாள். ரொட்டி இருக்கிறதா என்று சஞ்சய் தேடினான். எவர்சில்வர் சாப்ஸ்டிக்குகள் இருந்தன. ரொட்டி இல்லை. சாப்பாடு மேஜையின் அடுப்பின் மேல் புகைபோக்கி மேலே கூரையிலிருந்து இறக்கப்பட்டிருந்தது. அதன் குழாய் மேலே செல்லும் பெரும் குழாயில் இணைவதையும் ஒவ்வொரு மேஜையிலிருந்தும் இப்படி புகைபோக்கிகள் மேலே செல்வதாய் அமைக்கப்பட்டிருப்பதால் சாப்பாட்டுக்கூடம் தரையோடு இணையாத தூண்கள் நிரம்பிய மண்டபம் போல் இருப்பதை கவனித்தான். ஹோட்டல் பரிசாரகர்கள் அந்த மண்டப கூடத்தினை திறமையாக சுத்தமாக வைத்திருப்பதாய் நினைத்தான். சஞ்சய் பச்சையாக இருந்த மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் வாணலியில் வைத்து சிறிது வெண்ணெயைப் போட்டு வறுபட வைத்து விட்டு அரிசிச் சோற்றினை எடுத்துப் பார்த்தான். இப்படி மாட்டுக்கறியும், பன்றிக்கறியும், மீனும் சாப்பிடுகிற கொரியர்கள் எப்படி இவ்வளவு ஒல்லியாக சதைப்பற்றில்லாமல் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான். சோறு பிசுக்பிசுக் என்று ஒட்டிக்கொண்டு பாதி காய்ந்த கஞ்சியை உருட்டி வைத்தது போல இருந்தது. சிறு இஞ்சித் துண்டுகள், பச்சைமிளகாய்காய்கள், பச்சைக்கறித்துண்டுகள் என கொரிய சாப்பாட்டு மேஜை ஒரு ஓவியனின் வண்ணப்பலகை போல இருப்பதாக சஞ்சய் நினைத்தான்.
மியுசியத்திற்கு செல்லும் வழியில் ஷி வூவிடம் கொரிய சாப்பாட்டு மேஜை ஒவியனின் அழகான வண்ணப்பலகை என்று தான் நினைத்ததைச் சொன்னான் சஞ்சய். “வாயில வைக்கத்தான் ஒன்னும் விளங்காது” என்று தமிழில் சொல்லிய சின்னச்சாமியை அவர்களிருவரும் கண்டுகொள்ளவில்லை. “நீங்கள் artistic type போலிருக்கிறது; இன்று மியுசியத்தில் நான் உங்களுக்கு கொரிய மொழியின் நவீன கவி ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கப்போகிறேன். அவர்தான் உங்களை ஜிண்டோ தீவிற்கு அழைத்துச் செல்லப்போகிறார். சஞ்சய், அதிகம் புத்தகம் வாசிக்கின்ற நீங்கள் அவரிடம் சீக்கிரம் நண்பராகிவிடுவீர்கள். அவர் பெயர் கிம் கி வோன் “ என்றார் ஷி வூ. அவர்களுடைய கார் சயாங்க்யேங்குங் அரண்மனை வெளி வாயிலைத் தாண்டி விரைந்துகொண்டிருந்தது. அந்த வெளிவாயிலின் அலங்காரத் தோரணம் ஜப்பானியர்களோடு நிகழ்ந்த போரில் அடியோடு அழிக்கப்பட்டதாகவும் நவீன கொரியா இப்படி அழிக்கப்பட்ட எல்லாவற்றையும் மறுநிர்மாணம் செய்துவிட்டதாகவும் ஷி வூ கூறினார்.
கிம் கி வோனுக்காக மியுசியம் வாயிலில் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு அவன் வரத் தாமதமானதால் ஷி வூ அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். சின்னச்சாமிக்கு மியுசியம் செல்வது சுத்தமாக பிடிக்கவில்லை. ‘சிங்கநடைபோட்டு சிகரத்தில் ஏறு’ என்ற பாட்டை செஃல்போன் ஹெட்ஃபோனில் கேட்டுக்கொண்டே கடனே என்று இவர்களுடன் வந்தான். ஷி வூ அவர்களை நிரந்தர கண்காட்சிக்கூடத்தில் விட்டுவிட்டு இதோ வருகிறேன் என்று வெளியே போனார்.
கால்போன போக்கில் நடந்துகொண்டிருந்த சஞ்சய் அந்த போதிசத்துவரின் சிலை முன்னால் அதன் அழகில் மயங்கி ஒரு கணம் தன்னை மறந்து நின்றான். இளவரசன் சித்தார்த்தன் ஒரு காலினை ஒரு கால் மேல் போட்டு ஆழ்ந்த தியானத்தில் உட்கார்ந்திருக்கும் யோகாசன வடிவில் இருந்தது போதிசத்துவரின் அந்தத் தங்கச் சிலை. கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரம் இருந்த போதிசத்துவரின் சிலையில் கைவிரல்கள் அவர் கன்னத்தை நோக்கி உயர்ந்திருந்தன. மும்முடி உடைய தாமரை கிரீடத்தை அவர் அணிந்திருந்தார். சற்றே கீழ் நோக்கி தாழ்ந்திருந்த அவர் முகத்தில் அந்த வசீகரமும் மர்மமும் நிறைந்த புன்னகை. சஞ்சய் உடனடியாக அந்தப் புன்னகையில் தன் மனதினைப் பறிகொடுத்தான். சஞ்சய் சின்னச்சாமியை கூப்பிட்டு இந்தச் சிலையை பார் பார் என்று பரவசமாகக் காட்டினான். கொரியாவின் தேசீய பொக்கிஷங்களுள் ஒன்று அந்த போதிசத்துவர் சிலை என்று அந்த சிலையின் விளக்கக்குறிப்பு தெரிவித்தது. சின்னச்சாமி இவரும் பன்றிக்கறியும் மாட்டுக்கறியும்தான் சாப்பிட்டாரா என்றான். சஞ்சை பதில் சொல்வதற்குள் ‘ஹா இதோ இருக்கிறார்கள்’ என்று ஷி வூ சொல்வது கேட்டது. ஷி வூ வெளியே சென்று தாமதமாக வந்த கிம் கி வோனை அழைத்து வந்திருந்தார். அவர் கிம் கி வோனை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே ஆர்வ மிகுதியில் “என்ன அழகான தெய்வீகப் புன்சிரிப்பு இந்த போதிசத்துவருக்கு!” என்றான் சஞ்சய்.
கிம் கி வோன் “அவர் இந்த பெருநகர் சியோலில் என்ன யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் தெரியுமா? ஜப்பானியரிடமிருந்து நாங்கள் கடன் பெற்றுச் செய்த இந்த போதிசத்துவரின் புன்னகையை இன்றைக்கு பல போர்களுக்கும் அப்புறம் ஜப்பானியர்களை நோக்கி கொரியர்களால் மீண்டும் அதே போல புன்னகைக்க முடியுமா என்றுதான் அவர் இந்தப் பெருநகர் சியோலில் யோசித்துக்கொண்டிருக்கிறார்” என்றான். ஷி வூவுக்கு அவன் அப்படிச் சொன்னது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. “ஷ்ஷ் முதலில் அறிமுகம்” என்று அவனை அடக்கினார். கிம் கி வோன் “நான் பலருக்கும் பிடிக்காத சங்கடப்படுத்துகிற விஷயங்களைப் பேசுபவன்” என்றவாறே அவர்களுடன் கைகுலுக்கினான். “நீதான் சொல்லேன் எதற்கு புன்னகைக்கிறார் இந்த போதிசத்துவர்” என்று சஞ்சயைச் சீண்டினான்.
“மறு பிறவிகளிலும் தொடரும் முன்பிறவிகளின் வாசனைகளை நினைத்து அவர் புன்னகைக்கிறார்”
“ஷி வூ நீங்கள் சொன்னது சரிதான் போல. சஞ்சய், ஷி வூ உன்னைப்பற்றி என்ன சொன்னார் தெரியுமா? கொரிய சாப்பாட்டு மேஜை ஓவியனின் வண்ணத்தட்டு என்று நீ சொன்னாயாமே- அதை வைத்து அவர் என்ன சொன்னார் தெரியுமா நீ என்னுடைய இந்திய இரட்டை என்று சொன்னார்.” என்று சொல்லி கிம் கி வோன் கடகடவென்று சிரித்தான். ஷி வூவும் சின்னச்சாமியும் கூட அவனோடு சேர்ந்து சிரித்தார்கள்.
|