Friday, June 24, 2016

The Mahabharata: Texts and Performances | Sahapedia article

My  Sahapedia article "The Mahabharata: Texts and Performances" and associated content can be read at  the  links given below:

Knowledge Traditions


Module Landing Page

Overview landing page

Books in Library 

Saturday, June 11, 2016

அகம் உருக்குலைந்து பொருக்காடிவிட்ட சமூகத்தின் கதை ‘இறைவி’ | திரைப்பட விமர்சனம்



‘மே 17 ‘ என்று பெயரிடப்பட்ட படம் தயாரிப்பாளரின் அகங்காரத்தினால் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. படத்தின் இயக்குனரான அருள் (எஸ்.ஜே. சூர்யா) படம் வெளிவராத காரணத்தினால் குடிகாரனாகி சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் nuisance ஆக இருக்கிறான் என்பதை களனாகக்கொண்டு ‘இறைவி’ படத்தின் கதை சொல்லப்படுகிறது.  மே 17 திரைப்ப்டத்தின் கதையோ தரமோ என்ன்வென்று நமக்குத் தெரியாது. ஆனால் மே 17 என்று பெயரிடப்பட்டிருப்பதாலேயே அது எந்த வகையான உள்ளீட்டினை கொண்டிருக்கும் என்பது நமக்குத் தெரியாதா என்ன? ஆச்சரியம் என்னவென்றால் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இறைவி’ படத்தைப் பற்றி எழுதப்பட்ட சிறு துணுக்குகளிலிருந்து, நீண்ட கட்டுரைகள் வரை - இயக்குனர் ராம் தி இந்து நாளிதழில் கொடுத்த பேட்டி ஒன்றைத் தவிர - அடிப்படையாகவும் வெளிப்படையாகவும் படத்தில் சொல்லப்பட்ட கருத்தினை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வித விதமாக படத்தை அர்ச்சித்ததுதான். மே 17 இலங்கையில் நடந்த இறுதி யுத்ததின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். மே 17இன் நினைவுகள் இனப்படுகொலைக்கு பிந்தைய சமூகத்தின் அத்தனை கதைகளின் பின்புலமாக நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இருக்கத்தானே செய்யும்? தமிழினப்படுகொலைக்கு பிந்தைய தமிழகம் போரைத் தடுத்து நிறுத்த தவறியதற்காக வருந்தவில்லை கொந்தளிக்கவில்லை தன் சமூகத்தின் ஊடுபாவும் கட்டுமானமும் எங்கே சிதைந்து போயிற்று என்று ஆராயவில்லை. தமிழ் சமூகத்தின் கூட்டு பிரக்ஞையின் கீறல் எங்கே விழுந்திருக்கிறது என்று அடையாளம் காணவில்லை. ஒரு நாவலாசிரியரின் கதை சொல்லும் திறனுடன், ‘இறைவி’யில்  தீவிரமாக, தமிழ் சமூகத்தின் மிகப் பெரிய அவலமாக அகம் உருக்குலைந்து பொருக்காடிவிட்டதை  கார்த்திக் சுப்புராஜ் ஈவு இரக்கமில்லாமல் சொல்கிறார். அகமும் புறமும், காதலும் வீரமும், தமிழ் வாழ்க்கையின், தமிழ் சமூகத்தின் மைய அச்சுக்கள். இரண்டும் ஒன்றோடு ஒன்று இறுகிப்பிணைந்த இணைகள். ஒன்று சிதையுமானால் மற்றொன்றும் அழியும். அகம் காதலால் நிரம்பாதபோது புறம் தன் விழுமியங்களை இழந்து குற்ற சமூகமாகிவிடும். குறைந்த பட்சம் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு தர்க்கத்தின்படி அப்படித்தான் அது நிகழ முடியும். குற்ற சமூகத்தின் மீட்பு காதலிலும், உறவுகளிலும், மரபார்ந்த கடமைகளிலும் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்பதையும் ‘இறைவி’ தெள்ளத் தெளிவாக சொல்கிறது.  ‘இறைவி’ தமிழினப்படுகொலைக்கு பிந்தைய படம் என்பதையோ, அது தமிழ் சமூகத்தின் அக உருக்குலைவை, மரபார்ந்த விழுமியங்களின் வீழ்ச்சியை சொல்கிறது என்பதை நாம் படத்தின் குறியீடுகளையும் பிம்பங்களையும் உள்ளடுக்குகளையும் மெனெக்கெட்டு வாசித்து வெளிக்கொணர வேண்டியதில்லை. திரைப்படம் வெளிப்படையாகவும் சத்தமாகவும் சொல்லும் கதை நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் கவனமாகப் பார்த்தாலே போதும். கார்த்திக் சுப்பராஜ் சில தமிழ் எழுத்தாளர்களைப் போல கதை தன்பாட்டுக்கு தன்னை நகர்த்திக்கொண்டு செல்கிறது என்ற வகையில் படம் எடுப்பவரல்ல ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு செய்தியையும் நனவுபூர்வமாக கட்டமைப்பவர் என்பதை நினைவில் வைத்திருந்தாலே போதும்.

கற்புக்கரசிகள் பெய்யெனச் சொன்னால் பெய்யும் மழை ‘இறைவி’யில் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது.  பெண் கதாபாத்திரங்கள் மழையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வாழ்நாளெல்லாம் அழுதே காலத்தைக் கழித்து விட்டு படம் முழுக்க ஆஸ்பத்திரி கட்டிலில் கோமாவில் கிடக்கும் வடுவுக்கரசி (தாய் கதாபாத்திரம்) ஆரம்ப காட்சியில் ஜன்னல் வழியே கை நீட்டி மழைத்துளிகளை கைகளில் ஏந்துகிறார். அழகான கணவன் தன்னை மணப்பான் என்ற நம்பிக்கையில் மழையை கை நீட்டி ஸ்பர்ஸிக்கும் அஞ்சலி கதாபாத்திரத்தின் வாழ்க்கைப்போக்கின்படியே உக்கிரமாகப் பெய்து அத்தனை சைக்கிள்களையும் தள்ளிவிடுகிறது மழை.   பொன்னியும் அவள் மகளும், யாழினியும் அவள் மகளும் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள். மழையில் நனைய ஆசைப்படுகிறார்கள். மறுமணத்திற்கு மீண்டும் தயாராகி தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட அருளின் மனைவி யாழினியால் மழையை வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது. கணவன் கொலையுண்ட பிறகே கடைசி காட்சியில் பொன்னிக்கும் அவள் மகளுக்கும் அருள் மழையில் நனையும் சுதந்திரமும் பேரானந்தமும் வாய்க்கிறது. கணவனின் மரணத்திற்குப் பின் ‘சுதந்திரமாக’ வாழும் மலருக்குக் (பூஜா தேவரியா)  கூட தன்னை விட்டு விலகிச் செல்லும் மைக்கேல் மழையின் நனைந்தபடி பைக்கில் செல்வதைப் பார்த்து விசும்ப மட்டுமே முடிகிறது. யாருடைய உள்ளுறுப்பையும் அகத்தையும் நனைக்க சாத்தியமற்றுப் பெய்கிறது மழை.

‘இறைவி’ என்ற சொல் படத்தில் தமிழரின் தாய் தெய்வமான கண்ணகியைச் சுட்டுகிறது என்பதற்கான பல குறிப்புகள் திரைப்படம் முழுக்க விரவிக்கிடக்கின்றன. கண்ணகிக்கான கோவில்கள் கேரளத்தில் இருக்கின்றன என்பதையும் கேரளத்துக் கோவில் ஒன்றிலிருக்கும் தாய் தெய்வத்தின் சிலையையே மைக்கேலை அனுப்பித் திருட ஜெகன் (பாபி சிம்ஹா) திட்டமிடுகிறான் என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். ஜெகன் தன் கல்லூரி வகுப்பறையில் சிலப்பதிகாரத்தை உணர்ச்சிகரமாக விவாதிக்கிறான். நீதி மறுக்கப்பட்டு சிறையிலிடப்படும், கொலை செய்யப்படும் மைக்கேல் (விஜய் சேதுபதி ) சிலப்பதிகார கோவலனின் வார்ப்பு என்றால் அவன் மனைவி பொன்னி (அஞ்சலி) கண்ணகியின் பிரதிபிம்பம். திருமணத்திற்கு முன்பும் பின்னும் சிலப்பதிகார மாதவி போல ஒரு பெண்ணிடம்- மலர் (பூஜா) உறவு வைத்திருக்கும் மைக்கேலுக்கு அவளை திருமண பந்தத்தில் சிக்கவைக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அவள் மேல் நம்பிக்கையோ காதலோ இல்லை. சும்மா கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்ய வந்தவனை கள்ளத்தொடுப்பு போல சித்தரித்து பொய்யாக சீண்டினால் மைக்கேல் ஓடியே விடுகிறான். மைக்கேலுக்கு பொன்னியிடமும் அதே பிரச்சினை. அவள் காதலைத் தெரிவித்த ஜெகனோடு படுத்துக்கொண்டாளா இல்லையா என்று மட்டும்தான் மைக்கேலுக்கு தெரிய வேண்டும். இத்தனைக்கும் பொன்னி ஜெகன் காதலை தெரிவித்த மறுநாளே குழந்தையோடு கண் காணாத இடத்துக்கு ஓடிவிடுகிறாள். அவள் அப்படி ஒதுங்கி வாழ்ந்து வருகிறாள் என்பது மைக்கேலுக்கும் தெரியும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், மயிரானாலும் மைக்கேல் என்ற மரபின் பந்தத்தை உடைக்க முடியாமலே வாழ்கிறாள் பொன்னி. யாழினியின் கதியும் அதேதான். குடிகாரக் கணவனை விட்டு வேறு மணம் செய்யவும் முடியாமல் தவிக்கிறாள்.

தாயை கோமாவில் கிடத்திவிட்டு தாய் தெய்வ சிலைகளைத் திருடத் திட்டமிடுகிறார்கள். ஏனென்றால்  அப்படி பணம் சம்பாதித்துதான் முடங்கிக்கிடக்கும் மே 17 படத்தை மீட்க வேண்டுமாம். அருள் ஆஸ்பத்திரியில் காட்டு கத்தலாக பேசுகிறான். நர்ஸ் வந்து வந்து கத்தாதீர்கள் என்று மூன்று தடவைக் கேட்டுப்பார்க்க தெய்வ சிலைகளைத் திருட நினைக்கும் குடும்பமே அவளை அதட்டி விரட்டிவிட்டுவிடுகிறது. கவனியுங்கள், தெய்வ சிலைகளைத் திருட கிரிமினல்கள் திட்டமிடவில்லை. பாரம்பரியமாக தெய்வசிலைகளை செய்துவரும் சிற்பி குடும்பத்தினர் திட்டமிடுகின்றனர். யாருக்கும் எந்த குற்ற உணர்வோ ஐய்யோ இப்படிச் செய்யலாமா என்ற பதைபதைப்போ இல்லை. அவர்களுடைய தர்க்கம் பாழடைந்த கோவில்களில் கவனிப்பாரற்று போட்டுவைத்திருக்கும் சிலைகளை யாராவது அந்நியருக்கு விற்றால் சிலைகளை பத்திரமாக மியூசியத்தில் வைத்திருப்பார்களாம்.  காலமெல்லாம் மனைவியை அழுகையிலேயே வைத்திருந்த அப்பா ( ராதாரவி) தற்போது அவளை கோமாவில் கிடத்தி பார்த்துக்கொள்ளும்போது சிலைகளை திருடி விற்க ஒப்புதலளிக்கிறார். பாரம்பரியமாக சிலைகளைச் செய்து வந்த குடும்பம் சர்வ சாதாரணமாக குற்றமயமாகிப்போகிறது. கோமாவில் கிடத்தியிருக்கும் தாயிடம் மட்டுமே தன் பாவசங்கீர்த்தனத்தை ஜெகனால் செய்யமுடிகிறது என்றால் போதையின் பிரம்மையாக மட்டுமே மைக்கேலுக்கு இறைவி பிரத்தியட்ச அனுபவமாகிறாள். என்ன சொல்ல வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்? முழுமையாக அகம் சிதைந்து கடப்பாடும் கண்ணியமும் அற்றுப்போய்விட்ட மனிதர்களின் கதை அல்லாமல் இது வேறு என்ன? மே 17ம், தமிழினப்படுகொலையும் ‘இறைவி’ திரைப்படத்தின் ஒரு பின்புலக் களன் என்றால் தாய் தெய்வமும் சிலப்பதிகாரமும் இன்னொரு பின்புலக்களனாகும். இந்த இரு பின்புலக்களன்களின் காரணமாகவே ‘இறைவி’ ஒரு சமூக விரோத கதையாக மாறாமல் தமிழ் சமூகம் அகம் சிதைந்த மனிதர்களால் நிரம்பிய சமூகம் என்ற காத்திரமான விமர்சனத்தை முன்வைக்கிற படமாகிறது.

ஆண்களுக்கு தாம்பத்திய உறவு என்பது தன்னுடன் மட்டுமே பெண் படுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை பட்டவர்த்தனமாகவும் உண்மையாகவும் சொல்லும் ‘இறைவி’யில் ஆண் கதாபாத்திரங்கள்  தனக்கென்று குடும்பம் இருக்கிறது என்ற உணர்வேயில்லாமல் கொலை, திருட்டு என்று குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  இத்தனைக்கும் படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் கட்டைப் பஞ்சாயத்து காட்சிகளைப் போல ஆண்களின் வீரம் என்பது சும்மா கூட்டம் சேர்த்துக்கொண்டு காட்டும் நகைச்சுவை உதார்தான். 

படத்தில் சித்தப்பா (சீனு மோகன்) கதாபாத்திரம் மட்டுமே நெஞ்சில் ஈரக்கசிவுடன் நியாயம், மன்னிப்பு ஆகியவற்றைப் பேசுகிறது. அதனால் என்ன பயன்?

‘இறைவி’ படத்தின் பெண் கதாபத்திரங்கள் கே,பாலச்சந்தர் படங்களின் துடுக்கான சில கதாநாயகிகளையும், மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் வரும் குடும்ப பந்தத்தில் சிக்கிய கதாநாயகியையும் நினைவுபடுத்துகிறார்கள். பாலச்சந்தரின் படங்களில் வரும் ‘சிம்பாலிக் ஷாட்’ போல குட்டிகரணம் போடும் பொம்மைகள் கதாபாத்திரங்களின் மனக்குழப்பத்தை சொல்வது என ஆங்காங்கே கார்த்திக் சுப்புராஜ் தொட்டுக்காட்டுகிறார். அவையெல்லாம் அந்தக் கதாநாயகிகளுக்கு இப்போது  என்ன ஆயிற்று பாருங்கள் என்று சொல்வதாக இருக்கிறது.  சுஜாதாவின் ‘ஜன்னல்’ சிறுகதையில் டாக்டரிடம் வரும் கதாபாத்திரம் ஒருவன் தினசரி ஒரே வேலையை செய்து செய்து முசிந்துவிட்டது ஓடும் ரயிலிலிருந்து அல்லது அடுக்கு மாடியிலிருந்து குதித்துவிடலாமா என்று கேட்பான். புதுமைப்பித்தனின் கதையொன்றில் மளிகைக்கடையில் பொட்டலம் மடித்துக்கொடுத்துக்கொண்டேயிருக்கும் வள்ளிநாயகம் பிள்ளைக்கு ரயிலை பிடித்து வேறெங்காவது ஓடிப்போய்விடவேண்டும் என்று தோன்றிக்கொண்டேயிருக்கும். ஆனால் ஓடிப்போக முடியாது. ந.முத்துசாமியின் ‘செம்பனார் கோவிலுக்கு போவது எப்படி?’ சிறுகதையில் செம்பனார் கோவிலுக்குப் போவதை பற்றி ஒருவன் யோசித்துக்கொண்டே இருப்பான் கடைசி வரை போகவேமாட்டான்.  இவர்களைப் போலவே ‘இறைவி’யின் பெண் கதாபாத்திரங்கள் மழையின் நனைவதற்கு ஆசைப்பட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

‘இறைவி’யில்  அபாரமாக நடித்துள்ளவர்கள் விஜய் சேதுபதியும் அஞ்சலியும் ஆவர். படத்தின் அழகான மென் தருணங்கள் விஜய் சேதுபதி அஞ்சலியைத் தேடிப்போய் குக்கிராம வீட்டில் சந்திக்கும் போது  நிகழ்கின்றன. அஞ்சலி, விஜய் சேதுபதி இருவருமே சிக்கலான உணர்ச்சிகளை நுட்பமான முகபாவங்களில் வெளிப்படுத்துகிறார்கள். எஸ்.ஜே. சூர்யா தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார் நன்றாக நடனம் ஆடுகிறார். பாபி சிம்ஹாவுக்கு பெரிதாக வேலையில்லை. சினிமா தயாரிப்பாளரின் கொலை, ஜெகன் பொன்னியிடம் காதலைச் சொல்லும் தருணம், அருள் தன் மனைவின் மறுமண நிச்சயதார்த்ததை நிறுத்த செல்லுதல், அங்கிள் என்று அழைத்து வந்த குழந்தை தன்னை அப்பா என்று கூப்பிட்டவுடன் பரவசத்தில் சாக்லேட் வாங்க ஓடும் மைக்கேல், மைக்கேலின் கொலையைப் பார்த்துவிட்டு நிற்காமல் ஜடம் போல நடந்து சென்று ரயிலின் ஏறிச் செல்லும் பொன்னி என படத்தில் நாடகீய தருணங்கள் ஏராளம். ஆனால் அத்தனை நாடகீய தருணங்களும் படத்தில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட காட்சிகளாய் ஆகியிருக்க்கின்றன. ஆயிரம் வயலின்கள் பின்னணி இசையாய் கூப்பாடு போட்டு நம் உணர்ச்சி வேகத்தைக் கூட்டவில்லை. மாறாக நாம் காட்சியையும் நிகழ்வனவற்றையும் உள்வாங்க பின்னணி இசை உதவி செய்கிறது. அந்த வகையில் சந்தோஷ் நாரயணின் பின்னணி இசை ‘இறைவி’க்கு கூடுதல் பலம். ஆனால் பாடல்கள் சோபிக்கவில்லை ஏற்கனவே ‘ஜிகர்தண்டா’ படத்தில் கேட்ட பாடல்களின் முரட்டுத்தனத்தையே மீண்டும் கேட்ட மாதிரிதான் இருக்கிறது.


ஓரு நாவலாசிரியர் சாதிக்கவேண்டியதை ‘இறைவி’ திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சாதித்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். பெய்யெனப் பெய்யும் மழை அனைவருக்குமானதுதானே?