Sunday, November 27, 2016

அனாதையின் காலம் | பகுதி 4| நீ நான் நிலம் | நீள் கவிதை


அனாதையின் காலம் | பகுதி 4 | நீ நான் நிலம்

"Landscape" Torres Fuster 


ஒளி நெறி: நீ நான் நிலம்
--
பூமி தொட்டு
மூன்று முறை முத்தமிடுகிறாய்
அவளின் இதயத் துடிப்பு கேட்காதாவென
தரையில் காது பதிந்து கிடக்கிறாய்
திணைகளின் ஈர நறுமணங்களை
உன் நாசியேந்திரங்களில் நிரப்புகிறாய்
அவளுன்னை நுனி விரல்களாலும்
கூந்தலாலும் உடல் முழுக்க வருடுகையில்
பித்தேறும் உன் கண்களில் அவள் வதனம்
நான் அழிய
அவள் நிகழ
நீ நிகழ் நான் நிலம் நிர்குணம் என்பதாக
--
 1

ஏதோ ஒரு புல்வெளி நம் கனவிலும்
கற்பனையிலும் அடர்ந்திருக்கிறது
அதன் நினைவின் ஒரு மூலையில்
மைதிலி, அதோ பார்
பாபநாசத்தின் பசும்புல் வெளியெங்கும்
புல் நுனிகளில் நீர்த் திவலைகள்
அதிகாலை செங்கதிரோனின்
ஒளித்தூசுக்களின் மாணிக்கபரல்கள்
மைதிலி, வீர்யமுற்றிருக்கும் அவற்றைக் கண்களால் பருகு
எல்லாவற்றையும் எடுத்துக்கொள்
அவனியின் நிலப்பரப்பு
ஒளியின் உறைவிடம்

நறுவலாக நகரும் நனவின் வெண் குதிரை
பாபப் புற்களின் நாசத்தினை 
தன் போக்கில் மேய்கிறது
அது வாலை மெதுவாக சுழற்றும்போதும்
மெதுவாக கனைக்கும்போதும்
கனவின்  புல்வெளி
அழிகிறது
மைதிலி, அதைப் பார்
பாபநாசத்தின் பசும்புல் வெளியெங்கும்
புல் நுனிகளில் நீர்த் திவலைகள்
அந்தியின் செங்கதிரோனின்
ஒளித்தூசுக்களின் முத்துப்பரல்கள்
மைதிலி, அழியவிருக்கும் அவற்றைக் கண்களால் பருகு
எல்லாவற்றையும் எடுத்துக்கொள்
அவனியின் நிலப்பரப்பு
இருளின் இருப்பிடம்

--
2

காலம் உறைந்து
கல்லிடைக்குறிச்சியின் கடைசி வளவில்
நாழி ஓடுகளாலான வீடாய் சமைந்திருக்கிறது
அதன் ஓவ்வொரு கூடத்தையும்
மைதிலி
நாழிகைக்கு ஒன்றாய்
நாளுக்கு ஒன்றாய்
நாளந்தத்துக்கும் ஒன்றாய்
நீ கடக்கையில்
புழக்கடையில் ஓடும் பொருநை
சேரும்  அடிவானாய்
வீடு விரிந்து எல்லையின்மையைத் தொடுகிறது
அவ்வகம் உன் வாசனையின் வெளி வடிவு
அவ்வகம் உன் நடையின் வெளி நிழல்
அவ்வகம் உன் கனவின் வெளி நனவு
எனினும்
அவ்வகமே ஒரு அசோக வனம்
ஒரு வீடு ஒரு மைதிலி ஒரு உலகு என
முலைகள் விம்ம சலிக்கிறாய்
பிரார்த்தனையாய் அல்ல
முறையீடற்ற தியானமாய்
இசையொடுங்கும் மௌனமாய்
பருவங்கள் ஒடுங்கும் நிலமாய்
கல் அரண் அகம் தாண்டிய
குறிச்சியை கற்பனை செய்கிறாய்
அதுவே நீ நீ என
ஊடறுத்து முனகுகிறாய்
--
 3

முண்டந்துறையின் காடு
அம்பாசமுத்திரம்
மரச் செப்பு சாமான்களிலும்
கடைசல் தொட்டில் கம்பிலும்
ஏன் கோவில் தேர்களிலும் கூட
ஒளிந்திருப்பது
காலத்தின் புதிர்
வனநினைவு வெட்டப்பட்ட விருட்சங்களுக்கில்லை
என ஏன் நினைக்கிறாய்?
காலம் மரங்களை கற்களாக்கிய பின்னும்
மரக்கற்கள் கரியானபின்னும்
கரி வைரமான பின்னும்
அதன் உயிர் நினைவின் ஒளிர்வு மங்குவதில்லை
நினைவே காலம் அதுவே புதிரும் கூட
கண்ணீரின் தெளிவு நினைவுக்கு இருப்பதில்லை
அதன் அதிசயத்தை
கடிகார அந்தியும் விடியலும் சொல்வதில்லை
என்பது உண்மைதான்
ஆனால் மைதிலி
உன் நகக்கீறலில்
நான் கேட்டது
அருகிவிட்ட புலியின் உறுமல்
வனநினைவின் ஒரு பாவனை ஒரு புனைவு ஒரு ஒளிர்வு
--
4

காலத்தின் புனைவாய்
பிரேமையின் மடிப்புகளோடும்
உறக்கத்தின் ஆழ்நிலை ஓடைகளோடும்
புவியில் உன் இருப்பின் மென்கதுப்பாய்
தூய்மையின் குருதியாய் திட்பமாய்
உவரியின் செம்மண் தேரிகள்
துலக்கமாகின்றன

உவரியின் உப்புக்காற்று பனைகளூடே
உன் உன்மத்தத்தின் புயல் போலவே வீசுகிறது
கடல் அலைகள் ஆர்ப்பரித்து கொந்தளிக்கையில்
உன் திகைப்பின் பூர்ணிமை
திமிறி எழுகிறது அடிவானத்தில்

அதன் சன்னமான மணல் போன்ற
செந்நிற கிரணங்கள்
தேரியின் புழுதியோடும்
உன் குருதியோடும் கலக்க
எங்கும் செந்நிற ஐக்கியம்

நீயும் நிலவும் நீர்நிலையும் நிலமும் கடலும்
கலந்த கணத்தில்
மைதிலி
நானுனக்கு சொல்வதெல்லாம்
உவரியிலிருந்து
உன் ஏக்கத்தின் தொலைவில்தான் பரிபூரணம்
உன் பரவசத்தின் அருகில்தான் பேரெழில்

உன் ஆழ்மனச் சித்திரமே இவ்வுலகு
நீயே தேரி
நீயே திரு
--
5

காற்று நெடுஞ்சாலையின் புழுதியை
வாரி இறைத்து நகைக்கிறது
மன்றாடும் காலமாய் நீ
அதனூடே பயணம் செய்கிறாய்
உன் முந்தானையை முக்காடிட்டுக் கொள்கிறாய்
உன் வெள்ளி மெட்டிக்களில் களிம்பு
அடர்ந்திருப்பதை தலை குனிந்து பார்க்கிறாய்
பேருந்தின் ஜன்னல் வழி
கருவேலமரங்களும் கள்ளிச்செடிகளும்
யாரோ ஒருவரின் தீக்கனவின்
காட்சிகளாய் ஓடுகின்றன
பழுப்பு நிற  காளைகள் கூட்டம்
வாயில் எச்சில் ஒழுக்கி
புழுதியின் படலம் கிழித்து எதிர் வருகிறது
காளைகளின் கண்களின் மிரட்சியை
அவை குறி விரைத்து ஒன்றன் மேல் ஒன்று
ஏறுவதை விட்டேத்தியாய் கவனிக்கிறாய்
கருவேல மரத்தில் ஓணான் அசைவற்று இருக்கிறது
பல்லுயிர் ஓம்பும் லீலையின் நிகழ்வொன்று
நெடுஞ்சாலைக் காட்சியினை கலைத்து அடுக்குவதாக
ஏதோ ஒரு கிராமத்து வீடு தூரத்தில் தெரிந்து மீண்டும்
தூசுப்படலத்தில்  மறைகிறது
நிறமற்ற பறவை யொன்று வினோத ஒலி எழுப்ப
நீ அதன் உடந்தையென எண்ணுகிறாய்
சாக்கு முக்காடிட்ட  இடையன்
கோலூன்றி உன் ஜன்னல் கடந்து செல்கிறான்
எந்தப் பொருண்மையும் திகையாத வெறுமை
குருடனின் இரவாய் உன் கண்களில் கவிகிறது
--
6

காலம் ஒரு பகற் கனவு

இலஞ்சியில் நீலி கதையை வில்லடிக்கிறார்கள்
கேட்கப்போவதில் உனக்கு விருப்பமில்லை

கண்ணாடியில் முகம் பார்த்து
அதனுள்ளேஅகப்பட்டு
முற்றிய நெற்கதிர் வயல்களூடே
சாவற்ற தூரங்களைக் கடந்து
நீலியாய் நடந்துவருவதாய்
கூந்தலைக் கோதுகிறாய்

உன் ஒவ்வொரு நடையிலும்
உன் விரலளவு குருவிகள்
ஜனனத்தின் பின்னங்களாய்
விசிறியாய் விரிந்து
விருட்டென பறந்து
விண் நிறைத்து
ஒருமையில் மறைகின்றன

காற்றையே புசிப்பவளாய்
பேரழிவின் ருசி கண்டவளாய்
வயல்களை ஊதிக் கொளுத்த
நெற்கதிர்கள் தீப்பொறிகளாய்
ஜனனத்தின் பின்னங்களாய்
விரைவில் விண்ணேகி
பன்மையாய் மறைகின்றன

யாரோ கூப்பிட
நீ அறைக்கு வெளியே போகிறாய்
உன் நீலி பிம்பம்
கண்ணாடிக்குள் சிக்கி
வயற்காட்டில் திகைத்து நிற்கிறது
--
7

களக்காடில் குளிர்ச்சியான
காற்று வீசுகிறது
முந்தைய இரவின்
மழையில் இன்னும்
மரங்கள் களித்திருக்கின்றன
பால் சொட்டும்
உன் முகம் போல்
மாலையைப் போலி
செய்யும் ஒரு நடுப்பகல்
ஆனால் உனக்கு வழி
எதுவும் தெரியவில்லை
மீண்டும் கடலையும்
நதியையும் நீர்நிலைகளையும்
தேடிச்செல்ல நீ விரும்பவில்லை
உன் தனிமையை
உன் பொக்கிஷமாய்
பேண நினைக்கிறாய்
உன் கண்ணாடிகள்
அனைத்தையும் புதைத்துவிட்டால்
காலத்தின் தீராப்பசி
ஒரு கணம் நின்று
உன் பெண்மையை
விட்டு நீங்கி
அமைதி கொள்ளுமோ
என எண்ணுகிறாய்
சாலையின் இரு மருங்கிலும்
கிடக்கும் உதிர்ந்த தேக்கிலைகளை
கால்களால் எற்றி எற்றி நடக்கிறாய்
அவைகளூடே உனக்கான
கடைசி வாசகமோ
காயசண்டிகை உண்ட
நாவல் பழத்தின் எச்சமோ
உன் நிழல் உண்டு
உனை செரிக்கும் மாய பூமியோ
ஏதேனும் ஒரு நாடகம்
இருக்காதோவென மனம் சலிக்கிறது
இனிமையான பகலென்றால்
மரணம் நிகழாதா
உன் மனம்தான்
ஒவ்வாமை கொள்ளாதாவென
தளிர் இலையொன்று
உன் தலை மேல்  விழுகிறது
உதிர்ந்தது தளிர்
பழுத்த இலையில்லை என்றாலும்
விருட்சத்தின் காயம்
வானைத் தீண்டாது, மைதிலி
--
8

முகத்தைத் துடைத்துக்கொள்
உன்னிடத்தில் நிலக்காட்சிகளும்
ஊர்களும் தீர்ந்துவிட்டன
இனி ஒரு உதயத்தில் நீ
காணப்போவதெல்லாம் கடைத்தெருக்களே

வாய்ச்சாலக்கில் இனி
கட்ட முடியாது சிந்து பூந்துறையை
அதன் பன்னீர் புஷ்பங்களும்
ஆடி பிம்பங்களின் இறுதி வெளிகளாய்
கலைந்துவிட்டன

உன் அகத்தை இனி நிலத்தில் தேடுவதற்கில்லை
எல்லையற்ற நீல வானமோ
அலைகளில் கலையும் நீரோ
உனைக் காட்டப்போவதில்லை

உன் வீட்டை இனி உன் ஊரால் அழைக்கமுடியாது
உன் வீட்டின் மணிமாடம் தாழ் திறப்பதில்லை
உன் நிலவு ஏதோ ஒரு பாலையில் எங்கோ ஒளிர்கிறது
உன் பொருநை இனி உனக்கில்லை

காலம் இனியொரு நிலமற்ற கடைத்தெரு
--
 9


மைதிலி
கனவுகள் தொலைத்த காலத்தில்
நீ வேறொரு பெண்ணாய்
இருக்க விரும்புகிறாய்
மலையுச்சிக்குச் செல்லும்
பாதையை தேர்ந்தெடுக்கிறாய்
அதன் முடிவில் காலாதீதத்தின்
பொங்குமாங்கடல் இருக்கும் என நம்புகிறாய்
யாருனக்கு வழிகாட்ட முடியும்?

புத்தாசை
சூரியோதயத்தின் வெம்மையாய் விகசித்ததில் 
உன் நிலா எங்கோ உருண்டோடிவிட்டது

மலைப்பாதையின் இருமருங்கிலும்
உலர்ந்த தேக்கிலைகள்
மட்கிக்கொண்டிருக்கின்றன
அவற்றிலிருந்து பாழடைந்த
கோவில்களின்  இருள் மூலைகளில்
குடியிருக்கும்  வௌவால்களின்
வீச்சம் வீசுகின்றது
நீ என்ன செய்வாய்?

ஏதேனும் ஒரு சமவெளியை
எங்கிருந்தேனும் பார்த்துவிடலாம்
என்றொரு கற்பனை விரிவதில்
கசந்து திரியும் காட்டு அணில்களின்
கிறீச்சிடல்கள் உனக்கு கேட்பதில்லை

மிளாவா அது?
உன் கோசத்தில் உலவும் இன்னொரு உருவா?
ஏனிப்படி மதோன்மத்தத்தில் துள்ளி மறைகிறது?
அது ஏன் உன்னை மலைப்பாதையை
விட்டு வெளியே கீழே தள்ளுகிறது?

மலையுச்சியில் இருப்பதில்லை இராமேசுவரம்
என ஏன் நீ நினைக்கிறாய்?
எனக்கு நீயும் உனக்கு நீயும்
இந்நிலத்தின் ஆச்சரியமென
எங்கே சித்தியாகும்?

நம் கனவுகளின் ஆடி பிம்பங்கள்
நம்முடையவையல்ல
ஆகையால் நாம் பயந்திருக்கிறோம்.
--


No comments: