கவிதை பற்றிய குறிப்புகள்
--
விழியிமை மகரந்தங்களில் திறக்கிறது
——————————
“விழியிமை மகரந்தங்களில் திறக்கிறது” என்பது பாப்லோ
நெரூடாவின் வரி. சண்முகத்தின் மொழிபெயர்ப்பு கவிதைகள் நூலில் இந்தக் கவிதை இடம் பெற்றிருக்கிறது.
————
என்ன அழகான வரி இது! அக விழிப்பினைச் சொல்ல இதை
விட சிறப்பான வரியை நான் வாசித்ததில்லை. நெரூடாவின் கவிதை புறகாட்சியை விவரித்து அனத்தும்
ஒரு எளிய பறவையால் கைகூடுகிறது என முடியும்.
———
விளாடிமிர் நபகோவின் சுயசரிதை “Speak,
Memory” இக்குப் பிறகு எழுத்தாளர்களின் சுயசரிதைகளில் முக்கியமானது நோபல் பரிசு பெற்ற
கவி Tomas Tranströmer இன் சுயசரிதை, “Memories Look at Me” ஆகும். சின்ன வயதில் கூட்டத்தில்
தொலைந்து போகும் டிரான்ஸ்ட்ரோமர் தான் கதிகலங்கிப் போய் அனாதையாய் நின்றதையும், பின்னர்
சுதாரித்துக்கொண்டு வீடு திரும்ப முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றதையும் அவர் தன்
சுயசரிதையின் முதல் அத்தியாயத்தில் விவரிக்கிறார். யாரோ ஒருவர் சாலையைக் கடக்க உதவுகிறார்.
மற்றபடிக்கு தானே வீடு வந்து சேர்ந்துவிடுகிறார். இந்த சம்பவம் தனக்கு எப்படி சுய நம்பிக்கை
வளர உதவியாக இருந்தது என அவர் விவரிக்கிறார். யாரோ ஒரு முகம் தெரியாதவரின் கரம் தன்
தோள் பற்றி சாலையைக் கடக்க உதவும் என்ற எளிய நம்பிக்கை.
---
எல்லோரும் நெஞ்சு வெடித்து அழ வைக்கிற கவிதைகளை
எழுதிக்கொண்டிருக்கும்போது நீங்கள் எப்படி மினிமலிச கண்ணின் இமை அசைவுகள் என்று எழுதுகிறீர்கள்
ரொம்பவும் தைரியம்தான் உங்களுக்கு என்றார் நண்பர். இல்லை, தைரியம் இல்லை இது இன்னும்
மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை. பேராவேச பெருந்துயர் நாடகீய கூச்சல்களுக்கு நடுவிலும்
மிக மெலிதான அசைவுகளையும் , உணர்வுகளையும் மனிதர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கை
என்று சொல்லி வைத்தேன்.
--
சொல் கூட்டிக்கொண்டு செல்லும்
திசை
நண்பர் ஜமாலன் 'கண்ணிமையின் ஒன்பது அசைவுகளில்'
வரும் இராமாயணக் குறிப்புகளை சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து நண்பரொருவர் 'அனாதையின்
காலம்' இராமாயணத்தின் மறு ஆக்கமா என்று இன்பாக்சில் கேட்டுள்ளார். இல்லை, இல்லை. நகுலனின்
கவிதைகளில் ரகு என்றொரு persona வரும்; எனக்கு அது மிகவும் பிடித்திருந்ததால் என் கதைகளிலும்
கவிதைகளிலும் ரகுநந்தன் என்ற பெயரை உலவவிட்டேன். அனாதையானாலும் யாரேனும் ஒருவர் பொருட்டுதானே
பேசமுடியும்? ரகுநந்தன் என்ற பெயரின் தொடர்புறுத்துதல்களால் இராமாயணக் குறிப்புகள்
என் கவிதைகளில் கள்ளம் புகுகின்றன; அவை என் சொற்ப சொற்களுக்கு கொடுக்கும் பரிமாணத்தை
வியந்து நான் அவற்றை அனுமதிக்கிறேன். அவ்வளவுதான். காவியங்களை மறு ஆக்கம் செய்வதற்கு
திட்டமிடலும் அரசியல் நோக்கங்களும் வேண்டும். நானோ சகல அலங்காரங்களையும் துறந்த சொல்
காட்டும் திசையை வியந்து பின்னால் செல்பவன்.
--
நகுலனின் நெய் நேர்த்தி
றியாஸ் குரானாவின் பதிவொன்றில் செய்நேர்த்திக்காக
வாசிக்கக் கூடாத கவிஞர்கள் பட்டியலில் நகுலனின் பெயரையும் பார்த்தேன். நகுலனை அவ்வளவு
எளிதாக குறைத்து மதிப்பிட முடியாது. நகுலன் வலுத்த கிழவர். 'மழை:மரம்: காற்று' நீள்
கவிதையில் சூரல் நாற்காலியில் பிணைந்து கிடப்பதை அவர் மீண்டும் மீண்டும் எழுதுவார்.
அவர் எழுதுகிற உணர்வுகள் அப்படி. இயங்காமை, boredom, ennui, கைவல்ய நவநீதம் அளித்த
இவ்வுலக பந்தம்,இவ்வுலக பிணைப்பே மோட்சம் என அவர் நெய்யும் உணர்வுகளுக்கு ஏற்பதான்
வடிவம் நேர்த்தி கொள்ளுமே தவிர அவருடைய கவிதைக்கு வெளியிலிருந்து அவர் பிரதிகளின் நேர்த்தியை
கோர இயலாது. பிசிறு தட்டுதலும், முடிக்காமல் விடுதலும், மெலிதான அர்த்த வித்தியாசங்களைக்கொண்ட
சொற்களின் தத்துவ வீச்சும் அபரிதமானவை, அவை மனதிற்குள் கார்வை கொள்ளும் என்பதை எழுதிக்காட்டியவர்
அவர். அவருடைய கவியுரு சூரல் நாற்காலியில் இருந்து எழும்போது கவிதையும் முடிந்துவிடுகிறது.
--
பண்ணினை, பண்ணில் நின்ற பான்மையை,
பாலுள் நெய்யினை, மால் உருவாய் நின்ற விண்ணினை
———————————————
திருமங்கைஆழ்வாரை பற்றி ஒரு செவிவழிக்கதை உண்டு;
அவர் வழிப்பறி திருடராய் இருந்து பின்னர் கவியாய் ஆன பின்னர் திருமால் அவர் பின்னே
போய் என்னைப் பற்றி பாட்டுப் பாடேன் பாட்டுப்பாடேன் என்று கெஞ்சிக்கொண்டிருந்தாராம்.
திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களுக்கு மயங்கி அதன் பிறகு திருமால் அவர் சொன்னதெல்லாம்
செய்துகொண்டிருந்தார். திருமழிசையில் உன் பைந்நாகப் பாயை சுருட்டிக்கொள் என்றவுடன்
தன் நாகப்படுக்கையை சுருட்டிக்கொண்டு அவர் பின்னாலே சென்றார் திருமால். திருக்கண்ணமங்கையில்
‘பண்ணினை, பண்ணில் நின்ற பான்மையை, பாலுள் நெய்யினை, மால் உருவாய் நின்ற விண்ணினை’
என்ற பாசுரத்தைப் பாட திருமாலுக்கு புரியவில்லை; என்ன புரியவில்லை என்று அதட்டிய திருமங்கைஆழ்வார்
திருமாலை தன் சிஷ்யனாக வரும்படி அதட்டினார்.
———————————
இவ்வாறாகவே திருமங்கை ஆழ்வார் நம்பிள்ளையாக அவதரிக்க,
அவரிடத்தில் கற்றுக்கொள்ளும் பெரியவாய்ச்சான் பிள்ளையாக திருமால் பிறந்தார். பெரியவாய்ச்சன்
பிள்ளை பாலுள் நெய்யை, அதாவது சொல்லின் உட்பொருளை விரிப்பதில் நிபுணர்; ஒரு சொல்லின்
பொருளை இவ்வளவு தூரம் விரிக்கமுடியுமா என்ற ஆச்சரியம் அவருடைய உரையைப் படிக்கும்போது
நமக்கு ஏற்படும்.
——————————
வண்ணதாசன் ஃபேஸ்புக்கில் முன்பொருமுறை பதிவிட்டிருந்த
பின்வரும் கவிதையினை பெரியவாய்ச்சான்பிள்ளை படிக்க நேர்ந்தால் எப்படியெல்லாம் உரை எழுதியிருப்பார்!
“சீலைக்காரி அம்மனின்
காலகாலக் களிம்பு ஏறிய
வெண்கலமணி விளிம்பில்
அசையாது அமர்ந்திருந்தது தட்டான்.
யாருமற்ற வெளியெங்கும்
அதிர்ந்துகொண்டிருந்தது
அரசிலைகளின் ஆதிக் குலவை.
காதுயர்த்தித் திரும்பிப் பார்த்துவிட்டு
தன் வழி நடக்கிறது ஒரு
காமதேனு.”
வன்ணதாசனின் கவிதை காட்சிபடிமத்தை விவரிக்கிறது,
இந்தப் படிமம் பண்பாட்டு குழூஉக்குறிகளால் பொருள் செறிந்திருக்கிறது. சீலைக்கார அம்மன்
கோவில் மணி ஒலிக்கவில்லை; அது கவனிப்பாரற்று களிம்பு ஏறி தட்டான் அசையாமல் அமரும்படி
இருக்கிறது. நம் கண்முன்னே இருக்கும் நாட்டுப்புற தெய்வத்தை நாம் உதாசீனம் செய்து மறந்திருந்தாலும்
அரசிலைகள் அந்த ஆதிகுலவையை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றைக் கேட்பதற்கு யாருமில்லை.
கேட்கின்ற காமதேனுவோ, நாம் எது கேட்டாலும் வழங்கக்கூடிய காமதேனுவோ தன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது.
பெரும் பண்பாட்டு செல்வங்களை வழங்கக்கூடிய மரபு கவனிப்பாரற்று அழிவதை மெலிதான சோகத்துடன்
காட்சிப்படிமமாக மாற்றி இந்தக் கவிதை சொல்கிறது.
—————————
காமதேனு தன் வழியில் போனால் என்ன? அரசிலைகள் ஆதி
குலவையில் அதிர்ந்தால்தான் என்ன?
--
நான் வாய்விட்டு அழுதால்,
தேவதைகளில் யாரே கேட்பர்?
——————————————————
கவி ரில்கே ஓரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கிறார்,
“The Notebooks of Malte Laurids Briggs”. அந்த நாவல் இவ்வாறாக ஆரம்பிக்கிறது: “இரைச்சல்கள்
இருக்கின்றன. ஆனால் அவற்றை விட மேலும் கொடுமையான ஒன்று இருக்கிறது; அது மௌனம். “ இதில்
ஒரு நகை முரண் என்னவென்றால். தன் வாழ்நாள் முழுவதும் ரில்கே இரைச்சல்களிலிருந்து விடுபட்ட
மௌனத்தையே நாடினார். ஆழ்ந்த மௌனத்திலிருந்து மெதுவாக மலரும் கவிதையின் ஆரம்ப வரிக்காக
தன்னை அலைக்கழித்துக்கொண்டார். அவருடைய புகழ்பெற்ற வரிகள் அதிகாலையில் தியானத்தோடு
கூடிய நடையிலிருந்து பிறந்தவையே. “நான் வாய்விட்டு அழுதால், தேவதைகளில் யாரே கேட்பர்?“
என்ற அவருடைய வரி கடற்கரையில் நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று தோன்றியதாக
அவர் எழுதியிருக்கிறார். ரில்கேயின் நாவல் அவர் கால மக்களின் உள நெருக்கடியை ஆழமாகப்
பதிவு செய்தது. பின்னாளில் சார்த்தர் போன்ற இருத்தலியல் தத்துவவாதிகள் ரில்கேயின் கவிதைகளிலிருந்தும்
நாவலிலிருந்தும் சிந்தனை ஊக்கம் பெற்றனர். 1890 இலிருந்து 1895 வரை பல ஐரோப்பிய கவிஞர்களிடையே
- உதாரணமாக Stefan George, Gabriele d'Annunzio, Maurice Maeterlinck, William
Butler Yeats- ஆழமான மௌனத்திலிருந்தும், அனாதைப்பட்ட உணர்விலிருந்தும் மெய்யுணர்வுக்கான
தேட்டங்கள் எழுந்தன. அந்த மெய்யுணர்வுக்கான தேட்டம் ரில்கேயில் கவிதையின் நுண்ணுணர்வு
மானுட வாழ்வு பற்றிய உண்மைகளை எழுதுவதாக விரிந்தது. ரில்கேயின் கதாபாத்திரம் அவருடைய
நாவலில் “நான் பார்ப்பதற்குக் கற்றுக்கொள்கிறேன்” தான் தனிமையால் அடையும் கிலியையும்,
கலவர உணர்வையும் சித்தரிக்கிறது. ஐரோப்பிய நவீன கவிதை ரில்கே முதலான கவிகளின் தாக்கத்தினால்
கலவர உணர்வினை தன் வெளிப்பாடாக சுவீகரித்துக்கொண்டது. இரண்டு உலகப்போர்களும் ஐரோப்பிய
நவீன கவிதையின் கலவரக்குரலில் மேலும் கிலியையும் கிறீச்சிடலையும் ஏற்படுத்தின.
—————————————
நாவல், சிறுகதை, உரைநடை வடிவங்களைப் போலவே ஐரோப்பிய
தொடர்பினால் தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் வந்து சேர்ந்த நவீன கவிதை சி.மணியின்
கவிதைகளில், குறிப்பாக ‘நரகம்’ நெடுங்கவிதை, ஐரோப்பிய கவிதையின் கலவரக்குரலை வெளிப்படுத்தியது.
இன்றைய தமிழ்க்கவிதை படிமத்திற்கான கடின வழிகளைப் புறக்கணித்து லகுவான வடிவத்தை அடைந்திருக்கலாம்;
இன்னும் லகுவாகி திரைப்பாடல் போலவே எழுதப்படலாம்; ஆனால் அது ஐரோப்பிய நவீன கவிதையின்
கலவரக்குரலை கைவிட்டதாகத் தெரியவில்லை. மேலும், கோட்பாடுகள் மேற்கிலிருந்து வந்தன என்று
குற்றம் சாட்டும் கவிஞர்கள் நவீன கவிதையின் வடிவமும் அதன் உணர்வுகளும் எங்கிருந்து
வந்தன வந்துகொண்டிருக்கின்றன என்று யோசிப்பதும், விவாதிப்பதும் நல்லது.
—————
நவீன தமிழ்க் கவிதையில் மெய்யுணர்வுக்கான தேட்டம்
என்னவாக இருக்கிறது?
--
எழுதும் தன்னிலைக்கு என்ன
பெயர்?
——————————————
நான் எழுத ஆரம்பித்தபோது எனது சிறுகதைகளுக்கான
புனைபெயராக ஸில்வியா என்று வைத்துக்கொண்டேன். சில்வியா அல்ல ஸில்வியா. ‘சி’ என்ற அட்சரத்தை
உச்சரிக்கும்போது நுனி நாக்கு மேல் நோக்கி சிறிதாக வளைந்து மேல் அண்ணத்தைத் தொடுவதில்
உள்ள சிறு வன்முறை எனக்கு பிடிக்கவில்லை. மாறாக, பற்களை நோக்கி மெலிதாக நாக்கு நீள
காற்று மென்மையாக வெளியேறும் ஸி யின் உச்சரிப்பு பொருத்தமானதாகப்பட்டது. ஆண் எழுத்தாளர்கள்
பலரும் பெண் புனைபெயர்களில் எழுதுவது போன்ற தெரிவு அல்ல இது. ஒரு அழகான மென்மையான சக்தி
வெளியேறும் சப்தம் என்றே ஸில்வியா என்னை வசீகரித்தது. இந்தப் பெயரை பெண்களுக்கு மட்டுமேதான்
சூட்டவேண்டும் என்ற உலக நடைமுறை எனக்கு ஏற்புடையதாகவும் இல்லை.
என் பெற்றோரிட்ட பெயர் சர்வ சாதாரணமாக நான் எழுதும்
சிறு கட்டுரைகள் அளவுக்கு நீளமாக இருப்பது வேறு புனைவு எழுதும் தன்னிலைக்குப் பெயராகக்
கொள்வதா என்ற மனத்தடங்கலை ஏற்படுத்தியது. என் பெற்றோரிட்ட பெயர் என் தாத்தாவின் பெயர்
(இனிஷியலோடு அப்படியே வந்துவிட்டது) என்பதால் குடும்பப்பெயர் சுரேஷ். நாகர்கோவிலில்
சுரேஷா என்று கூப்பிடுவார்கள். ஆச்சி தன் கணவர் பெயர் முத்துக்குமாரசாமி என்பதால் கண்ணா
என்று கூப்பிடுவார்கள். குடும்பத்தில் பேரப்பிள்ளைகள் பெருத்து முத்துக்குமாரசாமிகள்
அதிகமானபோது நான் பெரிய கண்ணன் ஆகிவிட்டேன். குழந்தையாக இருந்தபோது இந்த பல பெயர் குழப்பத்திலிருந்து
விடுபட்டு உன் பெயர் என்ன என்று கேட்டால் சுரேஷைச் சுருக்கி சீ என்பேன். அம்மாவுக்கு
சீ ரொம்ப பிடித்துப்போய்விடவே சீப்பா என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். சீப்பா என்ற
புனைபெயரில் எஸ்.வி.ராஜதுரை நடத்திய ‘இனி’ இதழில் தமிழ் காமிக்ஸ் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன்.
சீ என்பதையே புனைபெயராய் வைத்துக்கொள்ளலாம் என்று பலமுறை தோன்றினாலும் சோ என்பவரின்
நீட்சி போல தொடர்புபடுத்தப்படும் என்பதால் கைவிடவேண்டியதாயிற்று. என் குழந்தைகள் இருவரும்
ஒருநாள் தற்செயலாக விளையாட்டாக சீப்பா என்று கூப்பிட்டபோது ஏதேதோ ஞாபகங்கள் தாக்க நிலைகுலைந்து
போனேன். குழந்தைகள் இருவரையும் மடியில் இருத்தி இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள்
என்று கெஞ்சி கேட்டுக்கொண்டேன்.
எனக்குப் பிரியமான பெயரான ஸில்வியாவையுமே இவ்வாறாகவே
கைவிட வேண்டியதாயிற்று. முதலில் ஸில்வியா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேனே தவிர
புனைவு எழுதும் தன்னிலையான ஸில்வியாவை முழுமையாக அறிந்தேன் என்று சொல்லமுடியாது. புனைவும்
அதன் தர்க்கமும் வடிவமும் எங்கேயெல்லாம் கூட்டிச் செல்லுமோ அங்கேயெல்லாம் புதிது புதிதாய்
கண்டுபிடித்தவாறே போகத்தயாராக எப்போதுமே இருக்கிறேன். ஸில்வியாவை அறிவது கைக்கொள்வது
என்பது புனைவு எழுதுவதின் என் அந்தரங்க நோக்கங்களில் ஒன்றாகும். எழுதியவரைக்கும் எனக்கு
ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருந்தன. வெளிப்பாடுக்காக போராடும் தன்னிலையின் தவிப்பு
மிகவும் உக்கிரமானது என்பது பிரதான ஆச்சரியம். ஸில்வியா என்ற என் எழுதும் தன்னிலையின்
பெயர் ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கையோடு (படைப்புகளோடு அல்ல) அமானுஷ்ய தொடர்பு கொள்கிறதோ?
என்னவொரு பயம்! பயம் பீதியாக இனந்தெரியாத பதற்றம் ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. வயது
ஏற ஏற இந்தப் பதற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் வலு உடலுக்கோ மனதிற்கோ இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
எம்.டி.முத்துக்குமாரசாமி என்ற பெயரே புனைவெழுத்துக்கும்
போதும் என்ற சமரசத்திற்கு ஒரு வழியாக வந்துவிட்டேன். கட்டுரைகளில், கடிதங்களில், இணையத்தில்,
நேர்பேச்சில் என்னை யாரேனும் ஸில்வியா என்று குறிப்பிடும்போது யார் யாரோ என்னை சீப்பா
என்று அழைப்பதுபோல இருக்கிறது. அப்படிக் குறிப்பிடுபவர்கள் எல்லோரையும் என் மடியில்
இருத்தியா அப்படிக்கூப்பிடாதீர்கள் என்று கெஞ்ச முடியும்?
—————————————
ரோலாண்ட் பார்த் (வேறு யார்?) எழுதும் தன்னிலையின்
குரல் தான் தோன்றுகிற இடத்தை இழந்துவிடுகிறது என்று எழுதினார். As soon as writing
becomes “intransitive” – as soon as language is no longer an instrument, but
the very fabric of literature – “the voice loses its origin”: “to write is to
reach, through a preexisting impersonality … that point where language alone
acts, ‘performs’, and not ‘oneself’” The “scriptor” – “born simultaneously with
his text” and dismissed from it once it is finished – replaces the “Author-God”,
whose death implies that a text no longer has an “ultimate meaning”. Every text
is “eternally written here and now”, first by the scriptor, and then by the
reader, whose creative power Barthes unleashes.
—————————————
பெருவாரியான மக்கள் ஆதரவு இருக்கக்கூடியதுதானே
ஜனநாயகம் வெகுமக்கள் கேளிக்கை அனைத்தையும் ஜனநாயக ஆதரவுடையதாக நீங்கள் ஏன் எடுத்துக்கொள்வதில்லை
என்று நீங்கள் கேட்கக்கூடும். கலை இலக்கியத்தில் ஜனநாயகப் பண்பு என_ப்படுவது வெகுஜன
ஆதரவினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. உணர்ச்சி சுரண்டல் நிறைந்த மிகை நடிப்பு, அரிஸ்டாட்டலிய
கதைப் பின்னல், மொழி மற்றும் பிம்ப மேலாதிக்கத்தின் வழி வாசகர்/ பார்வையாளர்களை அடிமைப்படுத்துதல்,
நாடகீயம் ஆகியவற்றின் மூலமும் வெகுஜன ஆதரவினை திரட்ட முடியும். அர்த்த தயாரிப்பில்
வாசக/பார்வையாளர்களின் பங்கேற்பிற்கு வழி வகை செய்யும் படைப்புகளையே கலை இலக்கியத்தில்
ஜனநாயகப்பண்பு உடையவை என்று கருதவேண்டும். எழுதும் தன்னிலையும் வாசக தன்னிலையும் சந்திக்கும்
இடங்களைப் பற்றிய அறிவை விசாலப்படுத்தியதில் பார்த்திற்கு பெரும் பங்குண்டு.
--
அகத்தும் புறத்தும் ஓடும்
ஒரு நதி
--
நண்பர் ஜே.பி. 'அனாதையின் காலம்' பகுதி 1 பற்றிய
நீண்ட விமர்சனத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். ஃபேஸ்புக்கில் இல்லாத அழகிய மணவாளன்
என்பவரும் ( அவரை எனக்கு அறிமுகமில்லை) நீண்ட மின்னஞ்சல்களை அனுப்பி வருகிறார். இதுபோல
கடிதங்கள் ஒன்றிரண்டாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு வேளை கவிதைதான் நம்மிடையே அதிகமும்
வாசிக்கப்படும் இலக்கிய வடிவமாக இருக்கும் போல. கவிதையின் மூன்றாம் பகுதியான 'வாசனைகளில்'
தாமிரவருணி (பொருநை) நதி ஓடும் வழித்தடத்திலுள்ள இடங்கள் தொடர்ச்சியாக குறிப்பிடப்படுகின்றன.
நதியின் ஓட்டத்தை கவிதைகள் பின் தொடருவதாயும் ஒருவர் வாசிக்கலாம். ஆனால் அவை நேர்கோட்டில்
வரா. முன்னேயும் பின்னேயுமாக வாசிக்க வேண்டும். ஏனெனில் பொருநை அகத்தில் ஓடுவதை நான்
எழுதுகிறேன். இடங்கள் புறத்தே இருக்கின்றன. இன்றைக்கு பகிர்ந்துகொண்ட வாசனைகள் 2 இல்
வரும் கல்யாண தீர்த்தம் பொருநை தோன்றுகிற பொதிகை மலையில் இருக்கிறது. வாசனைகள் 1 கவிதையில்
வரும் புன்னைக் காயல் என்ற இடத்தில் பொருநை கடலில் கலக்கிறாள்.
--
“Of
what is lost, irretrievably lost, all I wish to recover is the daily
availability of my writing, lines capable of grasping me by the hair and
lifting me up when I'm at the end of my strength. (Significant, said the
foreigner.) Odes to the human and the divine. Let my writing be like the verses
of by Leopardi that Daniel Biga recited on a Nordic bridge to gird himself with
courage.”
― Roberto Bolaño, Antwerp
--
மகரனகரப்போலி
--
வாசனைகள் 8 கவிதையில் 'மனனே' என்று எழுதுகிறீர்களே
இது சரியான பிரயோகமா என்று நண்பர் ஒருவர் தயங்கித் தயங்கி கேட்டிருந்தார். மனம் என்ற
சொல்லை மனன் என்றும் இனம் என்ற சொல்லை இனன் என்றும் எழுதலாம்; கவிகள் ஓசை நயத்துக்காகவும்,
பொருள் விரிவிற்காகவும் அவ்வாறு எழுதக்கூடும். இலக்கணத்தில் இவ்வாறு எழுதுவதை மகரனகரப்போலி
எனக் குறிப்பிடுவார்கள். பின்வருவது நம்மாழ்வார் பாசுரம்:
“மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே ”
இதற்கு உரை எழுதும்போது பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்"மனன்
இனன் என்ற விடங்களில் மகரனகரப்போலி அறிக. மனம் என்றாலும் மனன் என்றாலும், இனன் என்றாலும்
இனம் என்றாலும் ஒக்குமென்க. இனன் என்பதற்கு இப்படிப்பட்டவனென்று பொருளாகும்போது, இனன்
என்று னகர வீற்றதாகவே சொல்வடிவமாகும்" என்று எழுதுகிறார்.
--
கவிதையின் ஊற்றுக்கண்
--
கவிதையின் செழுமை மொழி ஆழ் திறனிலும், வெளிப்பாடு,
மற்றும் வடிவ நேர்த்தியிலும் இருந்தாலும் அவற்றை நான் கவிதையின் ஊற்றுக்கண் என நம்பவில்லை.
மேற்சொன்னவற்றை நாம் எளிதாக தொழில்முறை எழுத்தாளர்களைப் போல _தொடர்ந்த பயிற்சியின்
மூலம் கைவரப் பெற்றுவிடலாம். பக்கம் பக்கமாக எழுதியும் குவித்துவிடலாம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில்
ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதற்கு மாணவர்களை பயிற்றுவிப்பது போலவே இலக்கியத்தைப் படைப்பதற்கும்
சொல்லித் தருகிறார்கள். இலக்கிய உத்திகளையும் வடிவங்களையும் இப்படிக் கற்றுக்கொண்டு
சந்தையில் வெற்றிகரமாக பொருளீட்டும் பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். பலர்
நாட்டின் அரசவைக் கவிஞர்கள் ஆகியிருக்கிறார்கள். கவிதையின் ஊற்றுக்கண் இவற்றிலெல்லாம்
இல்லை; அது ஒரு ஆழமான எதிர்ப்புணர்ச்சியில் சூட்சுமம் கொண்டிருக்கிறது. அது அரசியல்
சார் எதிர்ப்பு மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தின் தான் வாழும் காலத்தின் விழுமிய வீழ்ச்சியை
ஆத்மார்த்தமாக அடையாளம் காண்பதில் சுழித்திருக்கிறது; தன் மொத்த மொழித்திறனையும் தான்
நம்பும் விழுமியங்களின் வீழ்ச்சிக்கான எதிரான வெளிப்பாடுகளாக சௌந்தர்யம் கொள்ளச் செய்வதில்
அடங்கியிருக்கிறது. அதற்காக ஒருவனோ ஒருத்தியோ தன் வாழ்நாளை ஒப்புக்கொடுக்கவேண்டும்.
அதற்கு வெற்றிகளோ சன்மானங்களோ அங்கீகாரங்களோ கிடைப்பது துர்லபம். ஆனால் தன் வாழ்நாளை
இப்புவியில் திருப்தியாய் கழித்த இறப்புக்கு முந்தைய தருணத்தை கவிதையின் ஊற்றுக்கண்
திறப்பு வழங்கவல்லது.
--
நறுவலாய் நகரும் நனவின் வெண்குதிரை
--
சூர்யா (Surya Vn) யாரென்று எனக்கு நேரடி பழக்கமில்லை; ஃபேஸ்புக்கில்
சமீபத்தில் நண்பரானவர். அவர் விடாமல் ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கிறார். மின்னஞ்சலில்,
ஃபேஸ்புக்கில் என. இப்போது அவர் மின்னஞ்சலில் உங்கள் கவிதை எப்படி உருவாகிறது என விளக்கமுடியுமா
என்று கேட்டிருக்கிறார். ஒரு முறை வண்ணநிலவனிடம் நீங்கள் உங்கள் கதையை எப்படி உருவாக்குகிறீர்கள்
என்று கேட்டதற்கு என் பக்கத்து வீட்டுக்காரர் பலாப்பழம் வாங்கியிருந்தார் அதன் வாசனை
என் மூக்கைத் துளைத்தது அவர் எனக்கும் பலாப்பழச் சுளைகளை தருவார் என்று எதிர்பார்த்திருந்தேன்
ஆனால் அவர் தரவேயில்லை; நான் 'பலாப்பழம்' என்றொரு கதை எழுதினேன் என்று சொன்னதுதான்
நினைவுக்கு வருகிறது. இதைத் தெரிந்து கொள்வதால் வண்ணநிலவனின் 'பலாப்பழம்' கதையைப் படிக்கும்
வாசக அனுபவத்தில் என்ன புதிதாய் சேர்ந்துவிடப்போகிறது? நானோ 'அனாதையின் காலம்' நீள்
கவிதையை -நேர் கோட்டில் அல்ல- அடுக்கு அடுக்காக கட்டி எழுப்பி வருகிறேன். உதாரணமாக
காலம் என்பது புதிர் என்று ஓரிடத்தில் சொல்லப்பட்டால் இன்னொரு இடத்தில் காலம் என்பது
நினைவு என்று இன்னொரு இடத்தில் சொல்லப்படுகிறது. காலமே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் வேறு
வேறு கவித்தருணங்களில் பரிமளிக்கலாம். இத்தனைக்கும் காலம் என்பது இந்த நீள் கவிதையின்
ஒரு அம்சம் மட்டுமே. இதில் எப்படி கவிதை உருவாவதன் ப்ளு பிரிண்டை தரமுடியும்? திட்டம்
போட்டு நடத்துகிற காரியமா இது? கவிதையை வாசிப்பதே கவிதையை அணுகுவதற்கான சிறந்த வழி.
வாசிப்பே நறுவலாய் நகரும் நனவின் வெண்குதிரை; அதைக் கட்டி நிறுத்துவதும் தறி கெட்டு
ஓட விடுவதும் வாசகர் பாடு.
--
ஜனனத்தின் பின்னம்
--
நீ நான் நிலம் 6 கவிதையில் வரும் ஜனனத்தின் பின்னம் என்ற
சொற்சேர்க்கையின் பொருள் என்ன என்று பெயர்குறிப்பிட விரும்பாத ஃபேஸ்புக் நண்பர் கேட்கிறார்.
மனிதப்பிறப்பு என்பது குறையுடையது அது தன் முழுமையை பிரபஞ்ச விரிவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும்போது
அடைகிறது என இந்திய இறையியல் தத்துவங்கள் பேசுகின்றன. இந்தத் தத்துவங்கள் நம்பிக்கைகளாகவும்
தினசரி புழக்கத்திலுள்ள பேச்சு வழக்கங்களாகவும் பல பரிமாணங்கள் பெற்றிருக்கின்றன. வைணவ
இறையியலின்படி குறையுள்ளது மனித பிறப்பு, முழுமையுள்ளது இறைநிலை என்ற அர்த்தத்தில்
பெயர்கள் கூட இடப்படுகின்றன. பிறப்பு குறைவுபட்டது
அது தன் முழுமையை நாடுவது என்ற பொருளில்தான் 'ஜனனத்தின் பின்னம்' என்ற சொற்சேர்க்கையை
பயன்படுத்துகிறேன். லா.ச.ராவின் புகழ்பெற்ற 'ஜனனி' என்ற சிறுகதையில் இதை முதன்முதலில்
வாசித்ததாக ஞாபகம். லா.ச.ராவின் எத்தனையோ வார்த்தைகள் என் மனதின் அடியாழத்தில் நதியினால்
உருட்டித் தேய்த்து செம்மையாக்கப்பட்ட கூழாங்கற்கள் போல என் கைவாகிற்கு பதமை கொள்ளும்.
நீ நான் நிலம் 6 கவிதை நீலி போன்ற நம் பண்பாட்டு கதை நாயகிகளுக்கான ஜனன பின்னம் ஒருமையில்
முழுமையடையுமா, பன்மையில் முழுமையடையுமா அல்லது இரண்டு முழுமைகளும் இணைந்த நிர்குணமாகிவிடுமா
என யூகிக்கிறது.
--
உத் கீதம் பாடு
--
வாயுவே சம்வர்க்கம் அனைத்தையும் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது
எப்போது தீ அணைகிறதோ அப்போது அது வாய்வில் ஒடுங்குகிறது
எப்போது சூரியன் அஸ்தமிக்கிறதோ அப்போது அது வாயுவில் அதன் ஒளி
ஒடுங்குகிறது; எப்போது சந்திரன் அஸ்தமிக்கிறதோ அப்போது வாயுவில் அதன் ஒளி ஒடுங்குகிறது
எப்போது நீர் சுண்டிப்போகிறதோ அப்போது அது வாயுவில் அது ஒடுங்குகிறது
--
--
தமிழ் தி இந்து இதழில் ‘அனாதையின்
காலம்’ நீள் கவிதை குறித்து சிறு செய்தி வெளிவந்ததிலிருந்து எனக்கு அவ்வபோது மின்னஞ்சல்கள்
வருகின்றன. அவற்றில் இன்று மதியம் வந்த கடிதம் சிறிய கடிதம்தான். சுமார் 2000 வார்த்தைகள்.
கோணங்கியின் எழுத்து போலவே ஆங்காங்கே குழம்பிய நதியாழத்திலும் பளிச்சிடும் கற்களைப்
போன்ற பல சொற்கள். எழுதியவர் யார் என்று ஒருவாறு
யூகித்திருக்கிறேன்; கடிதத்தை எழுதியவர் தான் இன்னாரென்று வெளிப்படுத்தாதவரை நான் என்
தளத்திலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ கடிதத்தை வெளியிடப்போவதில்லை. புரியாத கடிதத்தில் இருந்த
‘மறைபொருளின் பிழம்புரு’ என்றொரு சொற்சேர்க்கை என்னைக் கவர்ந்தது. அதை ‘ரகசிய கனல்’
என்று தமிழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்.
ஆங்கிலத்தில் ‘mystical
ember’ என்று எழுதினால் புரிவதுபோல
இருந்தது. கடிதத்தின் முற்பகுதியில் சிகரெட் என்றொரு வார்த்தை இருந்ததால் கொண்டு கூட்டி
அது சிகரெட் கங்குதான் என்று கண்டு கொண்டேன். அதாவது குளிர்கால இரவில் சிகரெட்டின்
கங்கும் புகையும் தரும் வெதுவெதுப்பை என் கவிதை தருகிறதாம். மெய்யுணர்வு பற்றிவிட்ட
திருப்தியில் இருக்கிறேன். அன்பர் இதே போல காதல் கடிதங்கள் எழுதி வெற்றி பெற வேண்டும்
என்பதே என் கோரிக்கை.
--
-
பலரும் தொடர்ந்து ‘அனாதையின்
காலம்’ கவிதையின் உத்திகளையும் கூறுமுறைகளையும் விளக்குமாறு மின்னஞ்சல் அனுப்புகின்றனர்.
தி இந்து நாளிதழ் செய்தி என் கவிதையின் கூறுமுறைகளை கவனப்படுத்தியதன் விளைவு இது என
நினைக்கிறேன். என் கவிதையை நானே விளக்குவது அவ்வளவு விவேகமான செயலல்ல; வாசகர்கள்தான்
கவிதையின் கூறுமுறைகளையும் உத்திகளையும் கண்டறிய வேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் என்னால்
சொல்ல முடியும். நான் கவிதை காதல், காமம், அரசியல் ஆகியவற்றிற்கான வடிவம் மட்டுமே என்று
நம்பவில்லை. நவீன கவிதை என்று இன்று புழக்கம் பெற்றுவிட்ட வடிவம் கவிதையின் சாத்தியப்பாடுகள்
அத்தனையும் கொண்டிருக்கிறது என்றும் நம்பவில்லை. நான் கவிதை ஒரு அறிதல் முறை என்றும்
அது நாவலை விட அதிகமான அளவில் சிந்தனையை உள்வாங்கும் சக்தி கொண்டது என்றும் நினைக்கிறேன்.
இதன் பாதைகள் எனக்கு முன்கூட்டியே தெரியுமென்று சொல்ல முடியாது. உதாரணமாக மருள் தோற்றங்கள்
5, 6 ஆகிய கவிதைகள் ஒரே வார்த்தைகளைப் பயன்படுத்தும் இரு வேறு கவிதைகள். அவற்றைத் தற்செய்லாகத்தான்
எழுதினேன். ஏதோ ஒரு கூடுதலில் லயம் சித்திக்கலாம்தானே? ஏதோ ஒரு ஒடுங்குதலில் உத் கீதம்
எழலாம்தானே? ஏதோ ஒரு அபத்தம் பற்றுகையில் அழகு விகசிக்கலாம்தானே?
கவிதையில் மௌனம்
--
நண்பர் எஸ்.சண்முகம் ‘அனாதையின்
காலம் ‘ நீள் கவிதை குறித்து தினசரி என்னோடு உரையாடி வருகிறார். அவருடைய கூரிய அவதானங்கள்
என்னை செழுமைப்படுத்துகின்றன. சண்முகம் ‘கண்ணிமையின் ஒன்பது அசைவுகள்’ பகுதியை எழுதி
வரும்போதே இதில் மறைபொருள் மெய்யுணர்வு கவிதைகளுடைய (mystical
poetry) தீற்றல்கள் இருப்பதை எனக்கு எடுத்துச் சொன்னார். ஒவ்வொரு பகுதிக்கும்
நான் ஒளி நெறி கவிதை ஒன்றை தருவது காவியமாக நீளும் கவிதைக்கு மிகவும் நல்ல முன்னிகை
என்றும் சொன்னார். ஒளி நெறி என்ற பதச்சேர்க்கையை நான் இராமலிங்க வல்லளாரின் திருமுறைகளில் வாசித்திருக்கிறேன். பக்தி இலக்கியங்களை வாசிப்பதற்கான
வழிகாட்டிகளை ஒளி நெறி என்று குறிப்பிடுவது வழக்கம். புற உலகை சுட்டுதற்கும், தற் சுட்டுதலுக்கும்
( self reference), தன்னிறைவுடன் (self
sufficiency) கவிதா மொழி இயங்குவதை குறிக்க ஒளி நெறி என்ற சொல்லாக்கம் உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும்
நான் எழுதும் ஒளி நெறி கவிதை அந்த பகுதிக்கான மீ கவிதையாகவும் (meta
poem) அந்தக் கவிதைகளின் உள்ளீடுகள் என்ன ஒளியோட்டத்தைப் பெற்றிருக்கின்றன என்பதைச்
சுட்டவும் பயன்படுகிறது. இவ்வாறாக நான் என் நீள் கவிதையை ஒழுங்கமைத்து வருவதை சண்முகம்
வெகுவாக சிலாகித்தார். வேறென்ன வேண்டும் எனக்கு? அமிர்தம் தாரை தாரையாய் பொழிந்ததை
அனுபவித்த சந்தோஷம்.
--
‘மருள் தோற்றங்கள்’ என்ற இரண்டாம் பகுதிக்கான தலைப்பும்
வள்ளலாரிடமிருந்து நான் கடன் பெற்றதுதான். அவர் பொய்த் தோற்றங்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்;
நான் apperances for bewildered stateச் of mind என்பதை குறிக்க பயன்படுத்துகிறேன். சண்முகம் இந்தப் பகுதியில்
நான் பல கவிதாபிரச்சனைப்பாடுகளை கட்டுவதாகவும் அவற்றைத் தீர்த்து மௌனத்தை நோக்கி கவிதைகளை
கொண்டுசெலுத்தாமல் நான் அவற்றை கைவிட்டுவிடுவதாகவும் கூரிய வாசிப்பை முன் வைத்தார்.
எனக்கு கவிதாபிரச்சனைப்பாடு படிக்கட்டல்ல, கதவல்ல என்று அது ஒரு முடிச்சு அதை அவிழ்த்தவுடன்
வெறுமையே எஞ்சுகிறது அமைதி பரிமளிப்பதில்லை என்று தோன்றியது. இருந்தாலும் நான் ஒரே
வார்த்தைகளாலான மருள் தோற்றங்கள் 5, 6 கவிதைகளை எழுதினேன் அவை வெவ்வேறு கவிதைகளானதே
தவிர மோனம் சித்திக்கவில்லை. சண்முகத்தின் பொருட்டே
-
கதவுகளை
நீ விரும்பவில்லை
அவை எவற்றையோ திறக்கின்றன
படிகள் உனக்கு பிடிக்காது
அவை மேலேயோ கீழேயோ செல்கின்றன
முடிச்சுகளை நீ ஆராதிக்கிறாய்
அவற்றை அவிழ்த்தபின் ஏதும் இருப்பதில்லை
நீந்தும் மீன் கடல் நனவு கொள்வதில்லை
பறக்கும் பறவை வான் நனவு கொள்வதில்லை
என்பதோர் முடிச்சு
-
என்ற கவிதையை மருள் தோற்றங்கள்
7 ஆக சேர்த்தேன்.
---
யோகத்திலும் தியானத்திலும் ஜென்
பௌத்தத்திலும் வலியுறுத்தப்படும் ஆழ்நிலை மௌனம் எனக்கு ‘நொறுங்கிய உன் பிரக்ஞையில்,
ரகுநந்த, பொருநை எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறாள்’ என்ற வரியை எழுதியபோது கிடைத்தது. சண்முகத்துக்கு
நான் எவ்வளவு கடன் பட்டுவிட்டேன் என்பதும் உறைத்தது. சண்முகம் ஜென் கவிதைகளாக ஃபேஸ்புக்கை
நிரப்பிக்கொண்டிருந்தார். மௌனத்தை அகக்காட்சிப்படுத்திப் பார்த்த போது, ‘காய்ந்த கிளையிலிருந்து
உதிரும் கடைசி இலை’ என்ற வரி தோன்றி கலவரப்படுத்தியது. ‘மாடிப்படிகளில் உணரும் மௌனம்’
என்ற ரில்கேயின் வரியும் எதிரொலித்தது அதன் தொடர்ச்சியாகவே ‘மௌனம் ஒளியா? இருளா?’ என்ற
அடுத்த பகுதிக்கான ஒளிநெறிக் கவிதையை எழுதினேன்.
---
பகுதி 3 ஐ ‘வாசனைகள்’ என்ற வார்த்தையால்
நான் உணர்த்துவது நறுமணங்களையும் நாற்றங்களையும் மட்டுமல்ல. பௌத்த தத்துவத்தில் வாசனை
என்ற பதம் நினைவுகளில் விடுபடாமல் ஊன்றுவதையும் பழக்கத்திற்கு மனமும் உடலும் அடிமையாவதையும்
குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நானும் அவ்வாறே கவிதைகளின் வழி நினைவுகளிலும் பழக்கங்களிலும்
ஒளிந்திருக்கும் மௌனத்தை அனுபவிக்க விரும்புகிறேன். நாக்கற்ற காண்டாமணி முகூர்த்தத்துக்கு
வழமையாய் அசைவது போல? திரட்டுப்பால் கிண்டுவதை தூரத்தில் தொழுவத்து பசு சுவாசிப்பது
போல?
--
‘செய்யாமற் செய்த உதவிக்கு,
வையகமும், வானகமும் ஆற்றல் அரிது’ என்கிறது குறள். என் சிந்தனையும் சொற் கூட்டுதல்களும்
செறிவடைய சண்முகம் செய்யும் உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?
--
பாலா கருப்பசாமி என்னுடைய ‘நிலவொளி எனும் இரகசியத்துணை’ நூலுக்கு
வேற்று கிரகவாசியின் டைரிக்குறிப்புகள் என்ற தலைப்பை வைத்திருக்கலாம் என்று பதிவிட்டதற்கு
மறுநாள் ஆனந்தவிகடனில் வந்த திருநெல்வேலி பற்றிய கட்டுரையில் என்னையும் நெல்லை மண்ணின்
மைந்தர் எழுத்தாளர் பட்டியலில் சேர்த்திருப்பதாக நண்பர்கள் கூப்பிட்டு சொன்னார்கள்.
இரண்டே நாட்களில் வேற்றுகிரகவாசியை மண்ணின் மைந்தனாக குடியமர்த்தி விட்டார்களே என எனக்கு
ஆச்சரியம் தாங்கவில்லை. அதுவும் திருநெல்வேலியில் ! இதற்கு முன்னாலும் இதே போன்ற குடியமர்வு
எனக்கு நடந்திருக்கிறது. என்னுடைய ‘கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள்’ சிறுகதையை நெல்லை
மாவட்ட சிறுகதைகள் தொகுப்பில் காவ்யா சண்முகசுந்திரம் சேர்த்திருப்பதை தொகுப்பு வெளிவந்து
பல வருடங்கள் கழித்து தற்செயலாக அறிந்தேன்.
அப்போது நான் என்னை ஒரு Unidentified Flying Object ஆக கற்பனை செய்து வைத்திருத்தபடியால்
பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது; இப்போது ஆச்சரியம் மட்டுமே. அந்த அளவுக்கு இது முன்னேற்றம்தான்.
வெளியாள் உன்னை ஊடுறுவிப் பார்த்துவிடுவான் ஆனால்
உள்ளூர் ஆளுக்குத்தான் மண்ணின் ரகசியங்கள் தெரியும் என்பது மானிடவியலின் அடிப்படை அனுபவ
அறிவுகளில் ஒன்று.
--
சொல்லுக்கும் பொருளுக்குமிடையிலான
திரை
--
இன்று கவிஞர் இன்குலாப் இவ்வுலகு நீத்ததற்கான அஞ்சலிகளை தேடித்தேடி
வாசித்தேன். அவருடைய நண்பரும் மாணவருமான நண்பர் எஸ்.சண்முகத்திடம் விசாரித்தேன். கவிஞர்
இன்குலாபை நான் இரு முறை சந்தித்திருக்கிறேன். கனிவான மனிதர் அவர் என்ற மனப்பதிவு உயிர்ப்புடன்
இருக்கிறது. ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் நான் அவருடைய கவிதைகளை முறையாகவும் ஆழமாகவும் பயின்றிருக்கவில்லை. ஏதேதோ எழுத்துக்களை தேடித்
தேடி வாசிக்கும் நான் இன்குலாபின் கவிதைகளை
வாசித்திருக்கவில்லை என்பது தமிழ் இலக்கியத்தின்
வாசகனாக பெரும் குறை. சங்கக்கவிதைக்கும் நவீன தமிழ் கவிதைக்கும் இடையில் உள்ளடக்க உறவுகளை
உருவாக்கியது, தமிழ் தேசிய இன உணர்வின் பொய்ப் பிரகடனங்களை (இராஜராஜேச்வரியம்) மறுத்து
அதன் சத்திற்கு உயிரூட்டியது, மதங்களை மறுத்த மெய்யுணர்வைப் பாடியது, கொள்கை விலகா
தன் அரசியலுணர்வுக்கு நேர்மையாக வாழ்ந்து காட்டியது, கவிதை சமூகத்தின் கடைக்கோடி மனிதனின்
மீட்புக்கான ஆயுதம் என்று தொடர்ந்து சுட்டியது என இன்குலாபின் பங்களிப்புகள் உதாரண
புருடர்களுக்கு உரியவை. அவர் சொல்லுக்கும் என் பொருளுக்கும் இடையிலான திரை செயற்கையானது;
அது அழகியலை முதன்மைப்படுத்திய தமிழ் சிற்றிலக்கிய சூழல் என்னிடத்தில் உருவாக்கிய பாதிப்பு
என்று உணர்கிறேன். வாசகனாக நான் என்னை மேம்படுத்தி இன்குலாபின் கவிதைகளை ஆழமாகப் பயின்று
அவற்றின் உண்மையை அகவயப்படுத்த முயற்சி செய்வதே அவருக்கு நான் செலுத்தும் மனமார்ந்த
அஞ்சலியாகும்.
--
கவிதை வாசிப்பு - எதிர்வினைகள்
--
ஃபேஸ்புக்கில் கவிதைகளை பகிர்ந்துகொள்வதில்
உள்ள சௌகர்யம் என்னவென்றால் உடனடியாக எதிர்வினைகள் கிடைத்துவிடுகின்றன. ப்ளாக்கில்
பகிரும்போது எத்தனை பேர் வாசித்தார்கள் என்பதற்கு மேல் தெரிவதில்லை. அதே சமயம் கவிதைகளை
பகிரும்போது வாசித்தார்களா இல்லை கடந்து சென்றார்களா என்று தெரியாதவர்களெல்லாம் அதே
கவிதைகளில் வரிகளை தலைப்புகளில் பயன்படுத்தி குறிப்புகள் எழுதும்போது அபாரமான உரைநடை
என்று பாராட்டுகிறார்கள். உதாரணமாக ‘நறுவலாக நகரும் நனவின் வெண்குதிரை’, சொற்களின்
உயிர்த்தாது’ ‘சொல்லிற்கும் பொருளுக்கும் இடையிலான திரை’ ஆகியனவெல்லாம் என் கவிதைகளில்
வரும் பிரயோகங்கள். இந்தப் பதங்களின் பல சூழல் பயன்பாடுகளை ஏன் கவிதையிலே அடையாளம்
காணவில்லை? அல்லது ஏன் கவிதை வாசிப்பில் துலங்காதது உரைநடையில் அபூர்வவெளிச்சம் கொண்டதாகிறது?
கவிதை ஆதாரமாக உணர்ச்சிகளைப் பேசுகிறது. உணர்ச்சிகளை ஒருவர் கீச்சுக்குரலில் வெளிப்படுத்தினால்,
இன்னொருவர் காட்டுக்கத்தலாய் வெளிப்படுத்தலாம் இன்னொருவர் முனகலாம் என உணர்ச்சிகளின்
வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை எல்லாவற்றிற்குமே ஒரு சமூகத்தின் ஜனநாயக இலக்கிய வெளியில்
இடமுண்டு. அப்படி பலதரப்பட்டதாக இருப்பதே அழகும்
ஆரோக்கியமும் கூட. ஆனால் அதே சமயம் போலி நாடகீய
உணர்ச்சி வெளிப்பாடுகளை ஒரு குழந்தை கூட கண்டுபிடித்து நிராகரித்துவிடும். நமக்கு வெகுஜன
பத்திரிக்கை தமிழில் எழுதப்படும் போலி நாடகீய உணர்ச்சி வெளிப்பாடுகள் பழக்கமாகி இருக்கின்றன
எனவே ஒரு நாடகத்தை எதிர்பார்த்து அது இல்லாத உள்ளடங்கிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
கவிதைகளை கடந்து சென்று விடுகிறோம் ஆனால் அவற்றின் பதங்கள் உரைநடையில் பயன்படுத்தப்படும்போது
அவற்றின் புதுமையால் ஈர்க்கப்படுகிறோம். இது கவிதை வாசிப்பை பற்றிய என் அனுமானம் மட்டுமே.
நான் தவறாகக்கூட கணித்திருக்கலாம்.
--
--
கவிதைகளில் ‘நான்’ என்று எழுத வேண்டிய இடங்களிலும் ‘நீ’ என்றே
எழுதுவது எனக்கு எப்போது பழக்கமாயிற்று என்று என் நாட்காட்டி சொல்வதில்லை. பௌத்த தியான
மரபுகளை ஆராய்ச்சி செய்யப்போய் அந்த தியானங்களை என் தினசரி செயல்பாட்டிற்கு கொண்டுவந்ததால்
ஏற்பட்ட விளைவாக இது இருக்கலாம். பௌத்த துறவிகள் பல வருடங்களுக்கு முந்தைய என் தன்னிலையை
வேறொருவனாக -அவன், இவன், உவன் - என பார்க்க சொல்லித் தந்தார்கள். பல வருடங்கள் என்பது
பல மாதங்களாக நாட்களாக மணித்தியாலங்களாக நொடிகளாகக் குறைந்து இதோ இந்தக்கணமாகிவிட்டது.
கணந்தோறும் எழுந்து அவிழும் தன்னிலையைக் காணும் படிகத்தைக் கைக்கொண்டவன் ஆனேன். முந்தைய
தன்னிலை நான் அவன் என்பதிலிருந்து ‘நீ’ என்பதாகவும், பார்க்கும் பிறரிடத்தும் மேகம்
கொள்வதாகவும் எனக்குள் பொதுமை படர்த்திவிட்டது. இவ்வாறாகவே ‘நீ’ எனக்கு மிகவும் அந்நியோன்யமான
சொல்லாக, கவிதை அதை கடத்துகிறது. தன்னிலை இது என ஓசை கூட்ட முடியாத தருணங்களில் ‘என்
ஈச’ என்று விரக்தியில் கூவுகிறேன். அது உபாசனையா என்று எனக்குத் தெரியாது, அது அப்படியாக
இருக்கும் பட்சத்தில் அது அப்படியே ஆகக் கடவதாக.
--