ஈரப்பதம்
——
கவிதை/ தனிநபர் நாடகம்
——-
என்ன நாள், என்ன மணி
என்ன மணி, என்ன நிமிடம்
என்ன நிமிடம், என்ன நொடி
என்ன நொடி குதிரையின் மூச்சிரைப்பு
காற்றில் கனமாகக் கலந்திருக்கிறது ஈரப்பதம்
நான் ஏன் ஓடிக்கொண்டே
இருக்கவேண்டும்?
நான் ஏன் ஒரு மூலையில்
சுருண்டு படுக்கலாகாது?
மழை மரம் காற்று என நான்
ஏன் பார்த்திருக்கலாகாது?
மாதுளம் பழங்கள் ஏற்கனவே
உடைந்து பிளந்திருக்கின்றன
கடலோ காற்றின் விதிகளால்
போட்டிகளைப் பொங்கிப்
பொங்கி அணைத்துக் காட்டுகிறது
சுழலுறு கடலே சுழலுறு
உன் ஆழ்கடல் பாசிகளை
என் மேல் வீசிச் சுழலுறு
உன் ஈரம் பதமாக மலரிலிருந்து
மலருக்குச் செல்லட்டும்
அந்தி கவிவதைப் போல
வைகறை விரிவது போல
ஒளி குறைந்தோ
ஒளி விகசித்தோ பூவிதழ்கள்
தங்கள் உட்புறங்களின்
ரகசியத்தைக் காட்டட்டும்
வடிவம் செயலைப் பிரதிபலிக்கிறது என்றாலும்
அது பரிணாம வளர்ச்சியைச் சொல்வதில்லை
உனக்குத் தெரியுமா நான் எதை விடாமல்
துரத்திக்கொண்டிருக்கிறேன் என்று?
அதைச் சொல்லலாமா கூடாதா என்று கூட
எனக்குத் தெரியவில்லை
எனக்கு எல்லா முகங்களும்
அந்நிய முகங்களாய் இருக்கின்றன
நான் களைத்திருக்கிறேன்
நான் சலிப்படைந்திருக்கிறேன்
நான் ஒருகாலில் நின்று
மறுகாலில் நிற்பதான பாவனையை
உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்
ஆனாலும் என் புன்னகையின் கோடு
முடியும் புள்ளியை
நீங்கள் கணித்துவிடுகிறீர்கள்
நீங்கள் என்னைத் துருவித் துருவிப்
பார்ப்பதை நிறுத்தவேண்டும்
நான் தூங்குவேன் தூங்கினேன்
தூங்கிக்கொண்டே இருப்பேன்
தூங்குவதற்கும்
நான் உங்களுக்குத்
தன்னிலை விளக்கம் தரவேண்டுமா?
எந்தத் தெய்வத்தை முன்னிட்டு
நான் என் சொற்களை வீசுகிறேனோ
அந்தத் தெய்வமே இங்கே இதோ
தன் கௌரவ ஆசனத்தில்
புரோகிதனுடன் அற்பமாய்
முகம் திருப்பி உட்கார்த்திருக்கிறது
உங்கள் கண்ணுக்கு
அது தெரியவில்லை இல்லையா
தெரியாது உங்கள் கண்களுக்கு
அது தெரியவே தெரியாது
நீங்கள் ஒரு கண்ணிழந்த நிமித்தகன்
என் துன்பம் அறியாத நீங்கள்
எப்படி என் தெய்வத்தின்
அலட்சியத்தைப் பார்க்கமுடியும்?
நான் பற்றி இருப்பதெல்லாம்
இந்த ஈரப்பதத்தைதான்
அதை நான் பாடம் செய்யப்பட்ட பறவையின்
எலும்புக்கூடு போல அறிகிறேன்
நீங்கள் உங்கள் கத்திரிக்கோல்களை வைத்து
என்ன செய்யப்போகிறீர்கள்
முகங்களிடமிருந்து மட்டுமல்ல
ஈரப்பதத்திடமிருந்தும்
நான் அந்நியமாயிருக்கிறேன்
என ஆலோலம் பாடப் போகிறீர்கள்,
என்னைத் துண்டித்துப்
பார்க்கப் போகிறீர்கள்
உங்கள் பிளவுண்ட நாவுகள்
வீசும் சீறும் சொற்கள்
இருண்மைக்குள் என்னைத்
தள்ள விழைகின்றன
அந்தக் கத்திக்குத்து இருட்டிலிருந்து கூட
உங்கள் குதிரைகளின் மூச்சடைப்பிலிருந்து
நான் ஒரு துளி ஈரப்பதத்தை எடுத்துவிடுவேன்
முட்களாலான இரவின் முத்தத்தில்
உதடுகளில் துளிர்க்கும் ஒற்றை எச்சில் துளி
நம் குழந்தைப் பருவம்
ஆனந்தமாயில்லை எனச் சொல்லும் மனோவைத்தியன்
ஆ ஆனந்தம்
அதற்காக நடுநடுங்கும் கண்ணிமைகள்
அதற்காக ஏங்கி வலிக்கும் தோள்கள்
கணுக்காலின் குதிரைச்சதையில் ஏற்படும் இறுக்கம்
எது எங்கே அடைபட்டிருக்கிறது
என எனக்குச் சொல்லத் தெரியவில்லை
நிலவழிந்த நள்ளிரவு நா நுனியால்
தொட்டுத் திறக்கக் காத்திருக்கிறது
நான் ஒருமையுடன் பேசவில்லை என்றுதானே
நினைக்கிறீர்கள் நான் மனச்சிதைவுற்றிருக்கிறேன்
என்றுதானே உங்கள் கைக்குட்டையால்
வாய்பொத்தி சிரிக்கிறீர்கள்
நான் உங்களை நோக்கிப் பேசவில்லை
ஆரம்பத்திலிருந்தே நான்
உங்களை நோக்கிப் பேசவில்லை
எந்த இடம் மழையால் நனைக்கப்படுகிறதோ
அந்த இடத்தை நோக்கி
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
மழை உங்களுக்கென்றும் எனக்கென்றும்
தனியாகப் பெய்வதில்லை
என்ன நாள், என்ன மணி
என்ன மணி, என்ன நிமிடம்
என்ன நிமிடம், என்ன நொடி
என்ன நொடி குதிரையின் மூச்சிரைப்பு
காற்றில் கனமாகக் கலந்திருக்கிறது ஈரப்பதம்
நான் ஏன் ஓடிக்கொண்டே
இருக்கவேண்டும்?
நான் பேசாமல் நின்றிருக்கிறேன்
பெய்யெனப்பெய்யும் மழையில் நனைந்தவாறே
No comments:
Post a Comment