Monday, December 13, 2010

தொழுவம்

என் வீட்டுத் தொழுவத்தில் அவர்கள்
வந்து தங்கியிருக்கிறார்கள்
எனக்குத் தெரியாமல்
இன்னும் இருக்கிறார்களா என்ன?
நான் இப்போது பாடுவதில்லை 
தலைமறைவாயிருக்கிறேன்
உருவற்றுப்போனேன் என்பதால்
மாடுகளின் கண்களை உற்று நோக்கியபடியே
வால்களைத் தூக்கி
வரும் சாணத்தை ஆசையாய்
எதிர்பார்த்தபடியே
இருந்தார்களாம்
மாடுகளின் பெருமூச்சினையும்
மூக்கணாம் கயிறு மீறிய திமிறலையும்
பருத்திக்கொட்டை புண்ணாக்கையும்
என் பேசாமையின் ஆக்கமென்றார்களாம்
இரவின் நுண் நாவுகளால்
அவர்கள் எழுதிய என் முகம்
மாடாயிருக்க 
கொம்பு முளைத்து
‘ம்மா’ என்கிறேன்
எல்லோருக்கும் வசதியாய்