Sunday, July 31, 2011

போலி செய்தல் (கட்டுரை போலவே இருக்கும்)


இந்த முறை நான் கண்டுபிடித்திருக்கும் இலக்கிய வடிவத்தை யாரும் போலி செய்து புகழடைந்து விட முடியாது. இதை புகழ் மறுப்பு இலக்கிய வகை என்றே பின் நவீன தமிழ் விமர்சகர்கள் சரித்திரத்தின் ஏடுகளில் பதியக்கூடும். என்னுடைய literary estate-இன் மிக ரகசிய பாதாள அறைகளில் இந்த வடிவத்தின் பல வெளிப்பாடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. என் பாதாள அறைகள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயத்தின் பாதாள அறைகளைப் போலவே அமைக்கப்படிருக்கின்றன என்பது வாசகர்களின் கவனத்திற்கு உரியதாகும். எனவே நீங்கள் இந்த போலி செய்தலை 'திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி' என்று அவசியம் 'tag' செய்யவேண்டும். பத்மநாபனின் செல்வத்தை என்ன செய்வது என்று அரசாங்கங்களும் மக்களும் எப்படி உற்சாகமும் கவலையும் அடைந்து பேராசையால் எப்படி பீடிக்கப்படுகிறார்களோ அது போலவே இந்த இலக்கிய வகையின் ஒரு வெளிப்பாட்டின் பெயரைக் கேட்டவன்/ள் கூட பேராசையாலும் நிராசையாலும் உடனடியாகப் பீடிக்கப்படுவார்கள்; பெரும் காம உந்துதலையும் மனக்கசப்பையும் ஒருங்கே ஏற்படுத்தக்கூடியவை இந்த ஆக்கங்களின் பெயர்கள். உதாரணத்திற்கு 'சீனப் பேரரசியின் தங்கக்குண்டி' என்ற ஆக்கத்தைக் குறிப்பிடலாம். 'சீ பே குண்டி' என்பது அந்த ஆக்கத்தின் சுருக்கமான பெயராகும். 'f theory' என்பது இந்த இலக்கிய வகை சார்ந்த வலைத்தளத்தின் பெயர். 'f' என்றால் என்ன என்று நான் உங்களுக்கு சொல்லமாட்டேன்.

நானே என் போலவே பல பெயர்களில் எழுதி என் வாழ்க்கை வரலாற்றினையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் எழுதி வரும் யுவதிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறேன் என்பதும் இப்போது இந்த நிலவறை ஆக்கங்கள் பற்றிய செய்தி வெளியாவது சிடுக்குகளை அதிகமாக்கும் என்பதும் நான் அறிந்ததே. அவர்கள் இதுவரை எழுதி வரும் நொள்ளைக் கட்டுரைகள் இச் செய்தி அறிவிப்பினால் பரபரப்பு கட்டுரைகள் ஆனாலே போதும் என் மனம் பூரிப்படைந்துவிடும். 'மனப்பாங்குகளின் வரலாறு' என்ற என்னுடைய பதின் பருவ தத்துவ நூலில் உள்ள 'பதுக்குதலின் வேட்கையும் பதுங்குதலின் வேட்டையும்' என்ற அத்தியாயத்தையும்  நிலவறை ஆக்கங்களையும் தொடர்புபடுத்தி என்னவெல்லாம் யூகங்கள் எதிர்காலத்தில் வருமோ! தாது வருஷ பஞ்சம் பல்லாயிரம் உயிர்களைக் குடித்தபோதும், நல்லதங்காளின் அவலக்கதை பாவைக்கூத்து கலைஞர்களால் திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதும் ஊர் ஊராய் சொல்லப்பட்டபோதும் ஏன் பத்மநாபனின் செல்வம் வெளியே வரவில்லை என்று கேட்கத் திராணியில்லாதவர்களா  'பதுக்குதலின் வேட்கையை' அறியப்போகிறார்கள் என நான் கவலையடையாமலும் இல்லை. இது தவிர பதுக்குதலின் வேட்கை 'oral' அல்ல 'anal' என்பது மனோவியலின் பாலபாடம். இதனாலேயே என் ரகசிய நிலவறைகளின் கதவுகளில் சீனப்பேரரசியின் முத்திரையை பொறித்திருக்கிறேன்.

'சிக்கலான பொறி', சிக்கலான பொறி' எனபார்கள் எதிர்கால யுவதிகள் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.  எல்லா சங்கேதங்களும் வரலாறுகள் போலவே யூகங்கள் மட்டுமே.

No comments: