Saturday, December 24, 2011

மூடன் விமலாதித்த மாமல்லன் வியப்பளிப்பதில்லை


தெரியாமல்தான் கேட்கிறேன் தெரியாமல்தான் கேட்கிறேன் என்று பொறுக்கி மொழியில் கூச்சலிடும் மாமல்லன் மூர்க்கன் மட்டுமல்ல மூடன் என்பது ‘ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும்’ என்ற அவரின் பதிவின் மூலமாக மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. நரிக்குறவர் மொழி அகராதியாலும் ஜேனு குறுபர் மொழி அகராதியாலும் சமூகத்திற்கு என்ன பயன் என்று தெரியாமல் கேட்கும் மாமல்லன் தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவற்காக மட்டுமே தீட்டும் திட்டங்களில் அகராதிகள் தயாரிப்பும் ஒன்று என்று நினைத்துக்கொண்டு அவருடைய வழக்கமான பொறுக்கி மொழியில் எழுதுகிறார். நரிக்குறவர், ஜேனு குறுபர் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த அகராதிகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளிகளில் போய்ப் பார்த்தால் இந்த அகராதிகளின் சமூகப் பயன்பாடு என்ன என்று தெரியவரும். நரிக்குறவர், ஜேனுகுறுபர் உள்ளிட்ட பல ஆதிவாசி மக்களின் மொழிகளுக்கு அகராதிகள் இல்லாதபடியால் மொழிகள் அழிந்து போகின்றன. அச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் தன் தாய்மொழியறிவுடன் மட்டுமே பள்ளிக்கு வருவதால் பிற பயன்பாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. பள்ளிப்படிப்பில் பின் தங்கும் ஆதிவாசிக் குழந்தைகள்  பள்ளிப்படிப்பை பாதியில் இதனால் நிறுத்திவிடுகின்றன. அகராதிகள் தயாரிக்கப்பட்டு நரிக்குறவர், ஜேனுகுறுபர் போன்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் அவற்றை விநியோகிக்கும்போது பிற பயன்பாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு கருவி கிடைக்கிறது. இதனால் அந்தக்குழந்தைகள் மேலும் படிப்பைத் தொடர ஏதுவாகிறது. மொழி அகராதிகளின் பயன்பாடு என்ன என்ற சிறிய அறிவே போதும் இந்த மாதிரியான அகராதிகளின்  சமூகப் பயன்பாடு என்ன என்று யூகிப்பதற்கு ஆனால் மாமல்லன்தான் மூடனாயிற்றே மனம் போன போக்கில் ஏசுகிறார். 
கருணை அடிப்படையில் தன் அரசாங்க வேலையைப் பெற்ற மாமல்லன் எனவே உழைப்பினால், திறனால், படிப்பறிவால் யாரும் எந்த வேலையையும் பெற்றிருக்கவும் முடியாது, வேலைகளில் தொடர்ந்து இயங்கவும் முடியாது என்று நினைக்கும் மாமல்லன், சென்டிரல் எக்சைஸ் இன்ஸ்பெக்டராக நீடிக்கும் மாமல்லன், தன் மேலதிகாரிகளை தன் ‘இலக்கிய தொடர்பினால்’ சரிக்கட்டும் மாமல்லன், அகராதிகளின் பயன்பாட்டை அறிவதற்கு நிறுவனத்தின் பொது வெளி கணக்கறிக்கையை பயன்படுத்துவதில் வியப்பில்லை. வரி ஏய்ப்பு (Tax evasion) வரி விடுபடல் ( missing sentence) இரண்டும் ஒன்று என்ற ரீதியில் தன் வேலையில் கற்ற நிபுணத்துவத்தையே இலக்கிய விமர்சனத்திற்கும் பயன்படுத்தி சிறு தகவல் பிழைகளை இலக்கிய உரைகளிலும் பிரதிகளிலும் கண்டுபிடித்து தன் பொறுக்கிமொழியில் குற்றப்பத்திரிக்கை எழுதி எழுத்தாளர்களை அவமானப்படுத்தி அதன் மூலம்  இணையத்தில் தன்னை ஒரு மல்லன் என நிறுவி வரும் மாமல்லனுக்கு ஒரு பிரதியின் பல்வகை வாசிப்பு தெரியாமல் போவதும் வியப்பில்லை; ஏனெனில் கணக்கறிக்கையும் இலக்கியப் பிரதியும் மூடன் மாமல்லனுக்கு ஒன்றுதானே.மேலும் உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த எழுத்தாளர்கள் இலக்கணப் பிழைகளோடும், தட்டச்சுப் பிழைகளோடும், தகவல் பிழைகளோடும் எழுதக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பிழைகளை பதிப்பகங்களிலும் பத்திரிக்கைகளிலும் வேலை பார்க்கும் எடிட்டர்களே களைகிறார்கள். மெய்ப்பு திருத்துபவர்களும், எடிட்டர்களும் தங்கள் தொழிலினை இலக்கிய விமர்சனமாக முன் வைப்பதில்லை. இது உலக நிலவரம். தமிழ் எழுத்தாளர்களுக்கு எடிட்டர்கள் இல்லை. க்ரியா போன்ற ஒரு சில பதிப்பகங்களே தாங்கள் பிரசுரிக்கும் புத்தகங்களுக்கு எடிட்டர்களை நியமித்து, எழுத்தாளர்களுடன் கலந்தாலோசித்து, பல முறை மெய்ப்பு பார்த்து புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.  இது தவிர உலகெங்கிலும் ஒரு பிழை எழுத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய எழுத்தாளர்களோ, பதிப்பகங்களோ தயங்குவது இல்லை.
தன்னைப் போலவேதான் பிறரும் இருப்பார்கள் எனறு நம்பும் மூடனும் மூர்க்கனுமான மாமல்லன் நான் நம்பிக்கும் எனக்கும் எந்தெந்தச் சூழலில் உறவு ஏற்பட்டது என்று சொல்வதற்காக பிரமிளுக்கும் நடந்த வாக்குவாதத்தைச் சொல்லப்போக நான் ஏதோ இதன் மூலம் இலக்கிய அந்தஸ்து தேடுவதாய்  எழுதியிருப்பதும் வியப்பளிக்கவில்லை. ஏனெனில் அவர்தான் ஜெயகாந்தன் மாமல்லனை ‘தேவடியா பிள்ளை’ என்று திட்டியதையும், சுந்தர ராமசாமிக்குத் தான் புரொஜெக்டரோடு போய் ஆட்டோவில் இறங்கி படம் போட்டு காண்பித்ததை கமலா ராமசாமி எழுதியதையும் பிரசுரித்து, உணர்ச்சிவசப்பட்டு, கண்கலங்கி இணைய வாசகர்களிடம் நொள்ளை பிம்பம் கட்டமைப்பதற்கு முயன்றவர். அப்படித்தானே பிறரும் மாமல்லனுக்கு இருக்கமுடியும்? சினிமாப் பாடல்கள் வெளிவந்த வருடங்கள், கணக்கறிக்கைகள், தான் தொலைபேசி உரையாடல்களின் மூலம் துப்பறிந்த தகவல்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பும் மாமல்லனுக்கு பிரமிள் குற்றாலம் கவிதைப்பட்டறை சண்டையைப் பற்றி அவரே எழுதியிருக்கிறார் என்று தெரியப்போவதில்லை. அதை ‘லயம்’ காலப்பிரதீப் சுப்பிரமணியத்திடமல்லவா கேட்கவேண்டும் என்று மாமல்லனுக்கு தெரியாமல்போவதைப்பற்றி யாராவது ஆச்சரியப்படவா போகிறார்கள்? மாமல்லனுக்குத்தான் அவர் செய்தித்தாள்கள் மூலம் ஈழப்போராட்டம் பற்றித் தெரிந்துகொண்டவை அதில் நேரடியாக பங்குபெற்றவர்கள் சொல்வதைவிட முக்கியமானதாயிற்றே.
நானும் தெரியாமலேயே மாமல்லனிடம் சில கேள்விகள் கேட்டு வைக்கிறேன். சரி, நானும் நாகார்ஜுனனும் மேற்குலகின் சிந்தனைகளை தமிழுக்குக்கொண்டுவருபவர்கள். உங்கள் எழுத்துக்களின்படி நீங்கள் மண்ணின் மைந்தர்; ஆங்கிலம் முறையாகப் பயிலாதவர். இந்த மண்ணின் சிந்தனை, இலக்கிய மரபுகள் என்ன என்று அறிந்துகொள்ள நீங்கள் மேற்கொண்ட படிப்பு என்ன? பழந்தமிழ் இலக்கியம் கற்றீர்களா? இல்லை நாட்டுப்புற கலைகளை அறிய முயற்சி செய்தீர்களா? அப்படி முயற்சி செய்திருந்தால் விளிம்பு நிலை கானாப் பாடகர்கள் பாடுவது உங்களுடையதைப் போன்ற பொறுக்கி மொழியிலல்ல குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களின் அறுபடாத இலக்கியத் தொடர்ச்சி என்று தெரிந்திருக்கக்கூடும். அட, ஆர்.வி.ரமணியின் சுனாமிக்குத் தப்பிய கேமிராவை புளங்காகித்து எழுதும் நீங்கள் அவரின் மற்றொரு படமான ‘நீ எங்கே’ படத்தை பார்த்திருந்தால் நாடோடிகளாய், தன் குடும்பப்பெண்களை ரிக்கார்ட் டான்ஸ் ஆடவிடும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட தோல்பாவை நிழல் கூத்து கலைஞர்கள் ராமாயணத்தை ஜெயமோகனைவிட அதிகமாய் கரைத்துக் குடித்தவர்கள் என்று தெரிந்திருக்கக்கூடும். மேலும் ஆராய்ந்திருந்தால் தன் விளிம்பு நிலை சமூகத்தைப் பற்றி எழுதுகிற திருநங்கை பிரியா பாபு மாமல்லனின் பொறுக்கி மொழியை தன் புத்தகங்களை எழுதப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிந்திருக்கக்கூடும். விளிம்பு நிலை மனிதர்களின் மொழியும் பொறுக்கி மொழியும் ஒன்று என்று, இவ்வளவு தூரம் எடுத்துச் சொன்ன பிறகும், தொடர்ந்து சொல்லிவரும் மாமல்லன் படித்துப்பார்ப்பது நல்லது; படிப்பு என்பது மூடனான மாமல்லனுக்கு ஏறாது என்றாலும் கூட. 
ஆலென் கின்ஸ்பெர்க் ‘Howl’ என்ற கூச்சல் கவிதை எழுதியதும், நிர்வாணமாய் தெருவில் நின்றதும் வியட்நாம் போருக்கு தன் எதிர்ப்பினை தெரிவிப்பதற்காக. எதிர் கலாச்சாரம் பற்றி எழுதிய நாகார்ஜுனன் தன் புத்தக அட்டைப்படமாய் கின்ஸ்பெர்கின் படத்தை பிரசுரித்ததை எடுத்துப்போட்டு தன் பொறுக்கி மொழியினை நியாயப்படுத்தி தொப்பை குலுக்கும் மாமல்லனுக்கு வியட்நாம் போரும் தெரியாது, ஈழப்போரும் தெரியாது என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
மாமல்லனுக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் திரைப்படப்பாடல்களும் வடிவேலு நகைச்சுவையும்தான். வடிவேலுவின் ஜாதி என்ன  என்று யாரும் மாமல்லனுக்கு சொல்லிவிடாதீர்கள். மூடனிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நகைச்சுவையும் போய்விடப்போகிறது. காவி அணிவது, இஸ்லாமிய குல்லா தரிப்பது போன்ற வடிவேலு நகைச்சுவைகளில் ஈடுபடும் மாமல்லன் நாளை கிறிஸ்துமஸ் ஆயிற்றே கின்ஸ்பெர்க் வெள்ளைக்காரனாயிற்றே அவனும் கிறிஸ்துமஸ்தானே கொண்டாடுவான், என்று கிறிஸ்துமஸ் கொண்டாட ஊர்வலம் கிளம்புவாராயின் அவருக்கு என் எளிய பரிசு: ஓர் மூடனின் தொப்பி.

5 comments:

Unknown said...

நான் இப்போழுது தான் தமிழ் பற்றியும், இலக்கியம் பற்றியும் படிக்க ஆரம்பிக்கும் வாசகன். முதல் படியில் இருக்கின்றேன்.

இந்த மாதிரி சண்டைகள் தான் இலக்கிய பெரியோர்களால் பதிவு செய்யப்படுமானால், எனக்கு பயமாகவே இருக்கிறது.

இலக்கிய சண்டைகள் இருக்கலாம். ஆனால் இது கொஞ்சம் அல்ல, மிகவும் அதிகம் என்று நினைக்கிறேன்.

உங்கள் பாரதி பற்றிய ஜெயமோகன் அவர்களுடன் விவாதம் பயனுள்ளதாகவும், மதிப்பாகவும் இருந்தது. இந்த விவாதம் தேவையா, இனிமேலும் தொடர வேண்டுமா என்பது உங்கள் விருப்பம்.

Anonymous said...

I agree with the comment above, they provoke and aggravate to bring you down to their level. Just ignore them and continue with your mission.

Anonymous said...

Sir, please ignore and move on.

Anonymous said...

எம்.டி.எம்,
இது உண்மையில் தேவைதானா? இது விவாதம்தானா? ஏதேனும் உருப்படியான தகவல்களை தகுதியான நபர்கள் அல்லது இயக்கங்களுடன் விவாதிக்கவும்.

அப்படிப்பட்ட விவாதங்களையே உங்களிடம் யாரும் எதிர்பார்க்கிறார்கள்.

நன்றி.

venkatesan said...

ஜெயமோகன் உடனான பாரதி விவாதம், முழுதும் புரியாவிட்டாலும் விவாதம் என்ன என்பதாவது புரிந்தது. இப்போதைய விவாதத்தில் (?) அது கூட புரியவில்லை.