ந.முத்துசாமி |
நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்படுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
முத்துசாமியின் சிறுகதைத் தொகுதியான ‘நீர்மை’யும் சரி அவருடைய நாடகங்களும் சரி மீண்டும் மீண்டும் பயிலப்படவேண்டியவை. ‘சுவரொட்டிகள்’, ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘நாற்காலிக்காரர்’, ‘இங்கிலாந்து’, ‘உந்திச்சுழி’, ‘நற்றுணையப்பன்’,‘காலம்காலமாக’ ‘படுகளம்’ ஆகிய நாடகங்கள் தமிழின் இணையற்ற நவீன நாடகங்கள். முத்துசாமியின் ‘அன்று பூட்டிய வண்டி’ தெருக்கூத்து பற்றி முத்துசாமி எழுதிய தனித்துவமான பார்வையுடன் கூடிய கட்டுரைகளின் தொகுப்பு.
முத்துசாமியின் உரைநடை அபூர்வமானது; அவருடைய நாடகங்களைப் போலவே தனித்துவமானது; அலங்காரங்களும், தளுக்குகளும், மேனாமினுக்குகளும், சாமர்த்தியங்களும், தந்திரங்களும் இல்லாதது. நகரத்தில் வாழும் முத்துசாமி தான் பிறந்த கிராமமான புஞ்சையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் எழுத்துக்குள் கொண்டுவர யத்தனித்ததால் உருவான உரைநடை அது.
தெருக்கூத்துதான் தமிழனின் அரங்கு என்பதை நாற்பது வருடங்களாக தொடர்ந்து எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தி தெருக்கூத்திற்கு சமூக அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைப்பதற்காக அயராமல் பாடுபடுபவர் முத்துசாமி. தனிப்பட்ட முறையில் 1985இல் ஆய்வு மாணவனாக நான் சென்னையில் இருந்தபோது முத்துசாமிதான் என்னை புரிசைக்கு கூட்டிக்கொண்டுபோய் மகாபாரதக் கூத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறாக பலருக்கும் மகாபாரதக்கூத்தினை அறிமுகப்படுத்துவதை அவர் தன்னுடைய கடமையாக செய்துவந்தார். முத்துசாமி கொடுத்த அறிமுகத்தினாலேயே நாட்டுப்புறவியல்துறையே என்னுடைய துறை என நான் தேர்ந்தெடுத்தேன். என்னைப் போல் எண்ணற்ற நபர்களின் வாழ்வினை முத்துசாமி சீரமைத்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்து கலைராணி, பசுபதி, ஜெயக்குமார், ஜெயராவ், ஜார்ஜ், சுந்தர், சந்திரா, பழனி என அசலான நாடக நடிகர்களை முத்துசாமி உருவாக்கியிருக்கிறார். நாடக நடிகர்களாக இவர்கள் உருவானதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். நான் பார்க்காமல் இன்னும் இரண்டு மூன்று அடுத்த தலைமுறை நடிகர்களும் முத்துசாமியால் உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.
ந.முத்துசாமியோடு நான் பழகுவதற்கு வாய்த்த சந்தர்ப்பங்களை என் வாழ்க்கையின் பெறும்பேறாகவே நினைக்கிறேன். லட்சியக் கனவுகள் கொடுக்கும் வேகம், நடைமுறை சார்ந்த விவேகம், உள்ளார்ந்த உறுதி, கூர்மையான பார்வை, வெள்ளம்பியான மனம், பெருந்தன்மை என எப்போதுமிருக்கும் முத்துசாமியோடு உரையாடும் சந்தர்ப்பங்களில் இயல்பாகவும், பாதுகாப்பாகவும், ஆசுவாசமாகவும் உணர்ந்திருக்கிறேன். கள்ளமற்ற கலை ஆளுமையின் வசீகரம் அது.
முத்துசாமியையும் அவருடைய படைப்புகளையும் பற்றி விரிவாக நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன். இந்த சிறு குறிப்பு முத்துசாமிக்கு பத்மஶ்ரீ வழங்கப்படுவதையொட்டி நான் அடைந்த மகிழ்ச்சியை பதிவு செய்வதற்கு மட்டுமே.
ந.முத்துசாமிக்கு என் வணக்கங்களும் வாழ்த்துகளும்.