மெங்வா ஓவின் மூன்று மகள்கள் |
கொஹிமாவுக்கு வெளியில் இருக்கும் காட்டில் போய் இருவாட்சியைத் தேடாமல் அருணாச்சல பிரதேசத்திற்கு போவானேன் என்று எனக்கு சந்தேகம் எழாமலில்லை. ஆனால் ரீபாங்கோ மற்றவர்களோ சொல்லட்டுமே என்று வாளாவிருந்தேன். ரீபாங் என் மனத்தினைப் படிக்கும் ஆற்றல் கொண்டவராயிருக்கிறாரா என்றும் கவனிக்க ஏதுவாய் எதுவும் கேட்காமலேயே பயண ஏற்பாடுகளில் தீவிரமாயிருந்தேன். மியாவ் நகரிலிருந்து இமயமலைத் தொடர் நோக்கி மேல் விரியும் அடர் கானகம் ரத்தம் உறிஞ்சும் அட்டைகளால் நிரம்பியது; அந்த அட்டைகள் நம்மை அண்டாமலிருக்க உள்ளாடைகள், கட்கம் என பச்சைப் புகையிலையை பொதிந்து கொள்ள வேண்டும். பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்தே உடம்பு முழுவதும் பச்சைப் புகையிலையைக் குளியலுக்குப் பின் தேய்த்துக்கொள்வதும் அட்டைகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். பச்சைப் புகையிலை வாடையில் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. ரீபாங்கின் மகள் சோக்கோவுக்கு நான் படும் அவஸ்தைகள் வேடிக்கையாயிருந்தன. சோக்கோ நான் கரடி, புலி, யானை, முள்ளம்பன்றி என்றெல்லாம் பார்த்து பயந்து நடுங்குவேனா என்று அவ்வபோது கேட்டுக்கொண்டிருந்தாள். சோக்கோ இனிமையான பாடகி; அவளிடமிருந்து நான் பல அங்கமி நாகர் பாடல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். சோக்கோவும் அவளுடைய தோழிகள் சிலரும் எங்களுடன் இருவாட்சிகளைப் பார்க்க வருவதாய் கிளம்பினர். அவர்களனைவருக்கும் காட்டில், காட்டு மிருகங்களைப் பார்த்து நான் பயந்து நடுங்குவதான காட்சி மிகவும் உவகையளிப்பதாக இருந்திருக்க வேண்டும்.
காட்டுக்குப் புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் ரீபாங்கின் விசாலமான வீட்டு முற்றத்தில் வைத்து சோக்கோவும் அவள் தோழிகளும் பாட நான் அப்பாடல்களை வழக்கம் போல் ஒலிப்பேழையில் பதிவு செய்துகொண்டிருந்தேன். பாடல்கள் முன்பு திருவிழாக்களில் கூட இருந்த தோழியர் இப்போது திருமணமாகி தொலைதூரம் போய் விட்டதால் எவ்வளவு அருமையான திருவிழாக்களை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்பதாகப் போய்க்கொண்டிருந்தன. இருவாட்சிகளைப் பற்றிய பாடல்கள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு வைத்தேன். ரீபாங் இவனுக்கு இருவாட்சி பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி சிரித்தார். சோக்கோ ஆமாம் காட்டுக்குப் போவதில் இவ்வளவு ஆர்வமாய் இருக்கிறாயே உனக்கு நீச்சல் தெரியுமா என்றாள். காட்டில் நீச்சல் அடிப்பார்களா என்ன ரீபாங் உங்கள் மகளுக்குத்தான் பைத்தியம் என்றேன். எல்லோரும் விழுந்து விழுந்து என்னைப் பார்த்து சிரித்தனர். ரீபாங் உனக்கு நீச்சல் தெரியாவிட்டால் நாம் இந்தப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதுதான் என்றார். அட அசடே என்பதுபோல என்னைப் பார்த்த சோக்கோ காட்டுக்குப் போக ஏன் நீச்சல் தெரிய வேண்டும் என விளக்கினாள். காட்டு வழியில் இரவில் ஆற்றங்கரையில் தங்குவதுதான் பாதுகாப்பானதாம். இமாலய ஆறுகளில் ஒன்றான, நோடெஹிங் நாங்கள் செல்லவிருக்கும் வழியில் ஓடுகிறதாம். நோடெஹிங் ஒரு காட்டாறு; அது மலையிலிருந்து பெரும் பாய்ச்சலுடன் இறங்குகிறதாம். நோடெஹிங், இன்று ஓடும் தடத்தில்தான் நாளையும் ஓடும் என்ற விதியில்லாத மனித வாழ்க்கையைப் போன்ற காட்டாறாம். தன் கரையில் படுத்துறங்கும் பலரையும் அது தன் தடத்தை மாற்றும்போது அடித்து சென்று விடுமாம். காட்டாற்று நீச்சல் தெரியாதவர்கள் பலர் அதில் இறந்து போயிருக்கிறார்களாம். ரீபாங் என் முகத்தில் தோன்றிய கலவரத்தினைக் கவனித்திருக்க வேண்டும்; நகரத்தவர்களுக்குக் காட்டாற்று வெள்ளத்தை சமாளிக்கத் தெரிந்திருக்காதுதானே என்றார் சமாதானப்படுத்தும் குரலில். அன்றிரவு பனிப்பாறைகளோடு இறுக்கமாக நகரும் காட்டாறு ஒன்றில் அடித்துச் செல்லப்படுவதாகத் தீக்கனவு ஒன்று கண்டேன்.
—————————————————————————————
பிறர் மனத்தைப் படிக்கும் கலை ரீபாங்குக்குத் தெரிந்துதான் இருந்தது. மறு நாள் காலையில், சாப்பாட்டு மேஜையில் அனைவரும் அமர்ந்தபோது ரீபாங் வேறு யாருக்கோ சொல்வது போல அருணாசலப் பிரதேச காட்டில்தான் இருவாட்சிகளை கூட்டமாகக் காணலாம் என்றார். கொஹிமாவை அடுத்த காடுகளில் ஒன்றிரண்டு இருவாட்சிகளைத்தான் காண முடியுமாம். பட்சி பரிவர்த்தனையை எனக்குப் பயிற்றுவிக்க கூட்டமாய் இருவாட்சிகள் இருக்குமிடம்தான் தோதுப்படுமாம். சோக்கோ நேற்றிரவு நன்றாகத் தூங்கினாயா என்று கேலியாக நலம் விசாரித்தாள். நோடெஹிங்கினால் அடித்துச் செல்லப்பட்ட கனவை விவரித்தேன். ரீபாங் உன் பயம் நீங்கிவிட்டது இனி நாம் தைரியமாக காட்டுக்குச் செல்லலாம் என்றார். எல்லோரும் அதை ஆமோதித்தனர். கனவுகளுக்கு அங்கமி நாகர் அளிக்கும் விளக்கங்களைப் பற்றி தனியாக விசாரிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டேன். சாப்பிட்டு முடித்ததுதான் தாமதம் ரீபாங் என்னை மூன்று நீர் நிலைகளின் பெயரை அதிகம் யோசிக்காமல் சொல் பார்ப்போம் என்றார். கடல்- ஆறு- குளம் என்றேன். ரீபாங் சோக்கோவிடம் இவன் தேறிவிட்டான் என்றார்.
ரீபாங்கும் அவரைச் சார்ந்த பலரும் கடலை தங்கள் வாழ்நாளில் பார்த்ததேயில்லை எனப் பின்னர் அறிந்தேன். கடலைப் பற்றிய அவருடைய கற்பனை நேரில் பார்த்துவிட்டால் சிதைந்துவிடும் என்றே இன்னும் கடல் பார்க்கப் போகாமலிருப்பதாகச் சொன்னார் ரீபாங்; அவருடைய கற்பனையில் கடல் ஒரு பிரும்மாண்டம். கடல்-ஆறு-குளம் என்ற என் அனிச்சைத் தொடர்ச்சி பிரும்மாண்டத்திலிருந்து தனித்துவத்தை அடைவதையும் ஆகாயத்திலிருந்து இருவாட்சி மரம் பற்றுவதையும் சொல்வதாக ரீபாங் அர்த்தப்படுத்தினார். ஆகாயத்தையும், மரத்தையும் உதறிப் பறக்கும் உனக்கான இருவாட்சியினை இனி நாம் அடையாளம் கண்டு விடலாம் கவலைப் படாதே என்றார் ரீபாங். இருவாட்சியின் பறத்தலையே மனித வாழ்க்கையென உவமிக்கிறாரோ என எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவ்வளவு எளிதான கணக்குகளுக்குள் அடைபடுவதா ஆதிவாசி மாந்தரீகம்? அன்றிரவு கவிதை சொல்லலை பதிவு செய்யலாம் என்றாள் சோக்கோ. எனக்கான இருவாட்சி நோடெஹிங்கின் வெள்ளம் புரளும் மேற்பரப்பில் மீனொன்றைக் கொத்தி ஒய்யாரமாய் மேலெழும்புவதாய் பகற்கனவில் ஆழ்ந்தேன்.
————————————————————————————————
அன்றிரவு ரீபாங்கின் நண்பரும் நாகர்களின் புகழ் பெற்ற பாடகருமான மெங்வா ஓவும் அவருடைய மூன்று மகள்களும் கவிதை சொல்லலுக்கு வந்து சேர்ந்தனர். சோக்கோ மெங்வா ஓவைப் பார்த்த மகிழ்ச்சியில் என்னை மேலும் கேலி பேசலானாள். மெங்வா ஓவின் பாடலுக்காகக் குழுமியிருந்தபோது சட்டென்று ரீபாங் தன் இருவாட்சியை அடையாளம் காண வந்திருக்கும் நம் தமிழ் நண்பர் நீர் நிலையொன்றினைப் பற்றி கவிவசனம் சொல்லுவார் என்று அறிவித்தார். ஆங்கிலத்திலும், அங்கமி நாகா மொழியிலுமான அந்த நிகழ்வில் சோக்கோ என் மொழிபெயர்ப்பாளர். சோக்கோவிற்கும் மெங்வா ஓவின் மகள்களுக்கும் குதூகலம் பிடிபடவில்லை. சரியாக சிக்கினான் பார் என்று தங்களுக்குள் கண் சிமிட்டி சத்தமில்லாமல் வாய் பொத்தி சிரித்தனர். எனக்கு பாஷோவின் ஹைக்கூ ஒன்று நல்ல வேளையாக நினைவுக்கு வந்தது. நான்
“பழைய குளம் அது
ப்ளாப்! தவளை குதித்தது அதனுள்
தண்ணீரின் சப்தம்” என்று உரக்கச் சொன்னேன்.
சோக்கோவும் தோழிகளும் சிரிப்பதை நிறுத்திவிட்டனர். ஒரு சில நிமிடங்கள் ஆழமான அமைதி நிலவியது. ரீபாங்கும் மெங்வா ஓவும் ஒருவரை ஒருவர் இவன் லேசுப்பட்ட ஆளில்லை என்பது போல பார்வைகளை பரிமாறிக்கொண்டனர். சோக்கோ கவிவசனமெல்லாம் சொல்வாயா நீ கரடிகளை சமாளித்து விடுவாய் போ என்றாள். ஹைக்கூ என்னுடையதில்லை பாஷோ என்ற புகழ் பெற்ற ஜப்பானியக் கவிஞரின் புகழ்பெற்ற ஹைக்கூ கவிதை அது என்று விளக்கினேன். பாஷோ தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் எழுதிய அந்தக் கவிதை ஜப்பானில் மிகவும் பிரபலம்; அதிக புழக்கத்தினால் தொய்வடைந்து விட்டதும் கூட என்றேன். நாகர்களின் கவிதை சொல்லலில் ஒருவர் சொன்ன கவிவசனத்திற்கு மற்றவர்கள் பதில் கவிவசனம் சொல்ல வேண்டும் கடைசியில் அத்தனை கவி வசனங்களையும் தொகுத்துப் பாடுவார்கள். பாஷோவின் தியான மரபில் பழைய குளம் பிரபஞ்ச அடிப்படையின் சலனமற்ற நீர் பரப்பு, அதில் தவளை குதிப்பதினால் ஏற்படும் சிறு சலனம் தனி வாழ்வின் அர்த்தமெனக் கொள்ளலாம் என மேலும் விளக்கினேன். மெங்வா ஓவின் முதல் மகள் தான் குளம் என்றாள், இரண்டாமத்தவள் தான் தவளையென்றாள், மூன்றாமவள் தான் தண்ணீரின் சப்தமென்றாள், சோக்கோவுக்கு தெரிவுகளில்லாததால் கவிவசனம் சொல்லும்படி ஆயிற்று. அவள்
“பழைய குளம் அது
ஸ்படிகத் தண்ணீரில் ஆகாயம்
இருவாட்சியின் சிறகடிப்பு” என்று கூறி கண் சிமிட்டினாள்
பிரக்ஞையின் கரை உடைதலை நான் கூறிய பாஷோவின் கவிதை சொல்லியதென்றால், பிரக்ஞை தன்னடையாளம் காணுதலை சோக்கோவின் கவிவசனம் காட்டுகிறது என்றேன். அவ்வளவு சீக்கிரம் எதையும் அர்த்தப்படுத்தாதே என்றார் ரீபாங். மெங்வா ஓவின் மகள்கள் மீண்டும் குளம், ஸ்படிக ஆகாயம், இருவாட்சி மூன்றையும் எடுத்துக்கொள்ள எனக்கே கவி வசனம் சொல்லும் முறை வந்து சேர்ந்தது. நாகர்களின் கவி சொல்லலில் ஏற்கனவே சொல்லப்பட்ட வரியிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மேலும் புனைய வேண்டும். நான்
“நொய்ந்த கிளை அது
அமர்ந்த இருவாட்சி
உதிர்ந்த சிறகு” என்று சொல்லிவிட்டு எதிர்வினைகளுக்குக் காத்திருந்தேன்.
நல்லவேளை கிளை முறியவில்லை என்றார் மெங்வா ஓ. கிளையையும், இருவாட்சியினையும் முதலிருவர் எடுத்துக்கொண்டனர். அவருடைய மூன்றாவது மகள் உதிர்ந்த சிறகினை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. உதிர்ந்த சிறகு துக்கத்தின் நினைவாகவோ அல்லது கிடைத்த பரிசாகாவோ இருக்கலாம் என்று சில நிமிடங்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். அவள் எதையும் எடுத்துக்கொள்ளாததால் கவி சொல்லுதல் அவள் முறை ஆயிற்று. மூன்றாவது மகள்
“உதிர்ந்த சிறகில்
உயர்ந்த கொண்டை
காற்றில் மிதந்த இருவாட்சி” என்று கிட்டத்தட்ட பாடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மெங்வா ஓ தன் மூன்றாவது மகளை மிகவும் பெருமையோடு பார்த்தார். அவள் எப்பொழுதுமே அப்படித்தானாம் இருவாட்சிகளை காற்றில் மிதக்க விட்டுக்கொண்டேயிருப்பாளாம். வாழ்க்கையின் உயிர்மூச்சவள் என்றார். சோக்கோவும் சகோதரிகளும் அவளைக் கட்டி அணைத்துக்கொண்டனர். மெங்வா ஓ! நீங்கள் ஒரு கிங் லியர் என்றேன் நான். சோக்கோ அதை மொழிபெயர்த்து சொன்னது போலத் தெரியவில்லை. திருமதி ரீபாங் எங்களனைவருக்கும் அரிசிக்கள் பரிமாறினார். ரீபாங்கின் முற்றம் முழுக்க ஆட்கள் கூடிவிட்டனர். இருள் கவிந்து நிலவொளி ஆகாயத்தில் மெலிதாகப் படர்ந்திருந்தது. மெங்வா ஓ பழைய குளம் அது என்று பாட ஆரம்பித்தார். டாட்டி என்று அழைக்கப்படும் கொட்டாங்கச்சி வயலின் போன்ற இசைக்கருவியை மீட்டியபடியே அவருடைய பாடலில் மூன்று மகள்களும் சேர்ந்து கொண்டனர். மகள்களின் கோரஸ் போன இருவாட்சி திருவிழாவின்போது திருமணம் ஆகிப் ஊரைவிட்டுப் போய்விட்ட தோழிகளுக்கு இந்த அருமையான சந்தர்ப்பம் கொடுத்து வைக்கவில்லையே என்பதாக இருந்தது.
அரிசிக்கள்ளின் போதையில், மெங்வா ஓவின் பாடலில், மகள்களின் கோரசில் லயித்து ரீபாங்கின் முற்றமே மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. ரீபாங் என்னருகே வந்து இருவாட்சி பறக்க ஆரம்பித்து விட்டதில்லையா என்று என் காதில் கிசுகிசுத்தார்.
———————————————————————————————————
தொடரும்
No comments:
Post a Comment