Thursday, September 13, 2012

அஞ்சலி: ‘ராகம்’ ரமேஷ் குமார்

அஞ்சலி: ‘ராகம்’ ரமேஷ் குமார்



'ராகம்' ரமேஷ்குமார் அவருடைய புத்தகவெளியீட்டு விழாவின்போது 


பொதுவாகவே நட்பினையும் அன்பினையும் அதிகம் வெளிப்படுத்தத் தெரியாதவன் நான் என்ற புகார் என் நண்பர்களிடையே உண்டு. தமிழின் மிகையுணர்ச்சி கலாச்சாரத்தில் ஊறிப்போனவர்கள் சொல்லும் புகார் அது அவர்களுக்கு போலி வெளிப்பாடுகளும் சம்பிரதாயங்களும்தான் முக்கியமானவையே தவிர உண்மையான வாஞ்சையல்ல என்பதே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. சங்கோஜியாகவும், தொட்டாற்சிணுங்கியாகவும், தனிமை விரும்பியாகவும் நான் இருந்து தொலைப்பது வேறு பல உறவினருக்கும் நண்பர்களுக்கும் என் அசலான நட்பின்தன்மையை அறிய அனுசரணையாக இருப்பதில்லை. என் நட்பும் சுற்றமும் வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்களோடு கடந்த இருபது ஆண்டுகளில் வளர்ந்தபின் பல பிற பண்பாடுகளைச் சேர்ந்த நண்பர்களும் என்னை ஒரு இறுக்கமான அந்நியமான ஒருவனாகவே சித்தரிப்பதைக் கண்டு, கேட்டு ஒரு வேளை நானே அப்படித்தானோ என்று குழம்பியிருக்கிறேன். என் மனைவியையும் குழந்தைகளையும் தாண்டிய சுற்றத்தோடும் நட்போடும் ஒருவகை பாதுகாப்பு கவசம் அணிந்து இருப்பது எனக்கு இயல்பாகிவிட்டிருக்கலாம்.

ஆனால் கும்மாளமும் குதூகலமும் கூடிய கல்லூரி நாட்களில் நான் இப்படி இருந்திருக்கவில்லை. 1985 இல் ‘ராகம்’ இலக்கியப் பத்திரிக்கையை நடத்திய ரமேஷ்குமார், செந்தில், மனோகர் ஆகியோரோடு இணைந்து செயல்பட்டபோது எல்லாமே வேறுவிதமாக இருந்தது. குண்டனாகவும், இடிதடியனாகவும், இள நரையுடனும் அறிமுகமாகிய ரமேஷ் மென்மையான குரலுடனும் அபாரமான நகைச்சுவையுணர்வுடனும் இருந்தார். அவருக்கு நகைச்சுவை உணர்வு இல்லாதவன் இலக்கியவாதியே இல்லை என்ற எண்ணம் இருந்தது. திருச்சி மெயின்கார்ட் கேட்டில் ஜோசஃப் கல்லூரி அருகில் இருந்த லெட்டர் பிரஸ் ஒன்றில் வைத்து ராகம் பத்திரிக்கையை நானும் ரமேஷும் மெய்ப்பு திருத்துவோம். என்னுடைய ஸில்வியா கதைகள் ராகத்தில் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. ரமேஷுக்கு அந்தக் கதைகளின் வேகமும் வடிவப் புதுமைகளும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்து மதிலெட்டிச் சாடி ஹாஸ்டலுக்கு வார்டன் கண்ணில் படாமல் ஓடும்போதுதான் எனக்கு இம்மாதிரியான கதைக்கருக்கள் தோன்றுமா என்று ரமேஷுக்கு அடிக்கடி சந்தேகம் வரும். மெய்ப்பு திருத்துகிறேன் பேர்வழி என்று லெட்டர்பிரஸ் கம்போசிட்டரோடு சேர்ந்து நான் அடித்த கூத்துதான் ஸில்வியா கதைகள் என்ற பரவலான இலக்கிய நம்பிக்கையை நண்பர்கள் வட்டாரத்தில் ஏற்படுத்தியதும் ரமேஷ்தான் என்றும் ஒரு பிராது உண்டு. ரமேஷ் ராகத்தில் எழுதிய நகைச்சுவை கட்டுரைகள் மிகவும் பிரபலமானவை. பூனைக்குட்டி ஒன்றை தயிர்சாதமும் அப்பளமும் மட்டுமே கொடுத்து ரமேஷ் வளர்க்க முயற்சி செய்து தோல்வியுற்றதை ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை போன்ற அபாரமான நகைச்சுவை கட்டுரைகளை தமிழில் யாருமே எழுதியிருக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். சிந்தனையாளனாக, எழுத்தாளனாக, சமூக சேவகனாக, பெரும் படிப்பாளியாக நாம் உருவாக வேண்டும் என்று எங்களுக்கு பெரும் கனவிருந்தது. அந்தக் கனவின் மர்ம வாசல்களைத் திறக்கும் கதவாக ராகம் ரமேஷுக்கு இருந்தது. எங்களுடையது என்றில்லாமல் எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் இடமளிக்கிற பத்திரிக்கையாக ராகத்தை ரமேஷ் வளர்த்தெடுத்தார். மாணவர்களின் பத்திரிக்கையாக ஆரம்பித்த ராகம்  ஆறே இதழ்களில் வெகு சிறப்பான இலக்கிய சிற்றிதழாகப் பேசப்பட்டது.

1994க்குப் பிறகு எனக்கு ராகம் நண்பர்களோடு தொடர்பு அறுந்துவிட்டது. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் திடீரென ரமேஷ் வந்தார். அவர் பையன் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார், ரமேஷ் விருப்பத்தின்பேரில் அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்று அறிந்தேன். ரமேஷ் வந்த நாளில் எனக்கு தத்துவம் குறித்த உரைகளாற்ற வேண்டியிருந்தது. ரமேஷ்  மாணவர்களோடு உட்கார்ந்து என்னுடய இரு உரைகளைக் கேட்டார். உரை முடிந்து என்னோடு வீடு திரும்புகையில் ‘நீ ஒரு உச்சத்தை தொட்டுவிட்டாய், நான் தான் எழுத்தை விட்டுவிட்டேன். மீண்டும் நகைச்சுவை கதைகளும் நாவல்களும் எழுத வேண்டும், சில கதைகள் எழுதியிருக்கிறேன், பிரசுரிக்கும் முன் நீ கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்துத் தாயேன்’ என்றார். அடுத்த வாரத்திலேயே திரும்பி வந்த ரமேஷ் அவர் கதைகளின் பிரதிகளைக் கொடுத்துச் சென்றார். நான் இன்னும் அவற்றை வாசித்தபாடில்லை.

திரும்பவும் ரமேஷ் தொடர்பு கொண்டபோது அவர் கதைகள் ‘கவுன்சிலர் நாரதர்’ என்ற தலைப்பில் பிரசுரமாகிவிட்டதாகவும் வெளியீட்டுவிழா ஒன்று திருச்சியில் ஏற்பாடாகியிருப்பதாகவும் தெரிவித்தார். நான் பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி ஜேடியிடம் இருந்து ரமேஷ் காலமாகிவிட்டதாய் குறுஞ்செய்தி வந்தது. படித்துவிட்டு நான் சும்மாதான் இருந்தேன். அடுத்த அரைமணி நேரத்திற்குப் பின் மறு நாள் ரமேஷின் இறுதிச் சடங்குகள் நடக்கவிருப்பதாக மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. வாசித்த என்னிடத்தில் எந்த எதிர்வினையும் இல்லை. தன்னிச்சையாக, நான் அதிர்ச்சி அடைந்ததாக பதில் செய்தி அனுப்பிவிட்டு வாளாவிருந்தேன். ஜேடி ஃபோனில் கூப்பிட்டபோது சம்பிரதாயமாய் இருவரும் ரமேஷ் குறித்து பேசிக்கொண்டோம். என்னுடைய புறங்கழுத்து வீக்கத்தினால் எழுதவோ படிக்கவோ முடியாமல் இருப்பதை பற்றியே நான் அதிகம் ஜேடியிடம் பேசினேன் என்றுதான் இப்போது நினைக்கிறேன். மறு நாளிலிருந்து கார் டிரைவர் எல்லாம் வேண்டாமென்று விட்டு எந்த பஸ்ஸிலாவது ஏறுவது எங்கேயாவது போய் இறங்குவது, மின்சார ரயிலில் பயணம் செய்வது, மனம் போன போக்கில் நடப்பது எனக் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்துவிட்டது. உடல் அலைவுற்றாலும் மனம் நிச்சலனமாகவே இருந்தது. முந்தா நாள் முன்னிரவில் வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து மேம்பாலத்தின் கீழே நடந்து வருகையில், குப்பை மேட்டில் நாயொன்று துரத்த செத்த எலியைக் கவ்வியபடி ஓடும் பூனையொன்றைப் பார்த்தேன். ரமேஷ் வளர்த்த வெஜிடேரியன் பூனை நினைவுக்கு வந்தது, ரமேஷ் இப்போது இல்லை என்ற ஸ்மரணை கத்திக்குத்தென உள் இறங்கியது. பெருங் கேவலுடன் உடைந்து அழுதேன்.