Friday, January 18, 2013

மூன்று ஃபேஸ்புக் குட்டிக் கதைகள்


நேற்றிரவு விநாடிக்கு ஒரு தரம் மின்சாரம் போவதும் வருவதுமாய் இருந்தது. ஒரு முக்கியமான கட்டுரையை இறுதி செய்து அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தேன். கட்டுரை வரலாற்றுத் தரவுகள், அவற்றிற்கான ஆவணங்கள், புனைவுகள், ஆவணங்களும் நினைவுகளும், தொன்மங்கள், நாட்டார் வழக்காறுகள் ஆகியவற்றிற்கிடையிலான உறவுகளை ஆராய்வது. மின்சாரம் தொடர்ந்து விளையாட்டு காட்டிக்கொண்டே இருந்ததால் என் கட்டுரையின் மைய வாதத்தை குட்டிக் கதைகளாக எழுதி வைத்துக்கொண்டால் எனக்கு வாதத்தின் தொடர்ச்சியை நினைவு வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்று தோன்றியது. ஐபேடில் மூன்று குட்டிக்கதைகள் எழுதி அவற்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். ஃபேஸ்புக்கில் ஓடிக்கொண்டிருந்த இதர திரிகளோடும் கதைகள் இயைபும் ஒவ்வாமையும் பெற்றன. சரி அவற்றை இங்கே சேகரித்து வைத்துக்கொள்வோமே என்று பதிவாக வெளியிடுகிறேன். ஏற்கனவே வாசித்துவிட்ட நண்பர்கள் மன்னிக்கவும்.

----------------------------------------------------

'புற்களின் நுனிகளில் பலி ஆட்டின் ரத்தத்துளிகள். மந்தை மந்தையாய் மேய்கின்றன இதர ஆடுகள்'. மேற்கோளுக்குள் இருப்பதால் அது புனைவு வரி அதை மறந்துவிட்டு ஆட்டுக்கால் பாயா சாப்பிடு என்கிறார் வழி தப்பிய ஆடென அறியப்பட்டவர். கருப்பு ஆடு ஆமோதித்து தலையாட்டுகிறது. / ஃபேஸ்புக்குக்கு ஒரு குட்டிக் கதை 1


----------------------------------------------------------

மேய்ப்பருக்கு ஆடுகள் அதிகம். வீடு திரும்பிய மகனுக்காக அடித்த கொழுத்த ஆடு மேய்ப்பரின் கையில் குட்டியாய் வெள்ளையாய் ஓவியத்தில் கண்டது. கறியைக் கடித்து சுவைத்த மகனுக்கு மேய்ப்பரின் கையில் பாந்தமாய் கள்ளமற்றிருந்த குட்டி செல்லமாய் சிணுங்குவது கேட்டது/ ஃபேஸ்புக்குக்கு ஒரு குட்டிக் கதை 2

-------------------------------------------------------------------------------------

சுடு மண் சிற்பத்தில் ஆடு சமைத்து மேய்ப்பரிடம் கொடுத்தான் வீடு திரும்பிய மகன். பழக்கத்தில் மேய்ப்பரின் கை அன்பின் கதகதப்புடன் தடவ ஓவிய வெள்ளைக் குட்டி ஆடும் ஆசுவாசமாய் சிணுங்கியது. ஆனால் கடைசி இரவு உணவின் போது யாருக்கும் அந்த சிணுங்கல் கேட்கவில்லை. / ஃபேஸ்புக்குக்கு ஒரு குட்டிக் கதை 3

-----------------------------

பின் குறிப்பு: குட்டிக் கதைகளுக்கு உபயோகங்கள் அதிகம். மத குருமார்களே குட்டிக்கதைகளை சரியாக பாவிக்கத் தெரிந்தவர்கள். மலையாள வாடை வீசுவதாக தமிழ்ச் சூழல் இருக்கிறது என்பதற்காக ‘குட்டி’ என்றால் இளம் பெண் அல்ல என்று நான் அகராதி அர்த்தம் கொடுக்கவும் வேண்டுமோ?





No comments: