Sunday, March 31, 2013

தல யாத்திரை: ஶ்ரீவாஞ்சியம்


ஶ்ரீவாஞ்சியம் கோவில் முன்மண்டபம்




கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திலிருந்து திருவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதசுவாமி கோவிலை நோக்கி பயணப்பட்டேன். பிரளயத்தின்போதும் அழியாத தலங்கள் காசியைப் போலவே காவேரிக்கரையில் ஆறு உண்டும் என்றும் அவற்றில் திருவாஞ்சியம் தலையாய தலம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். மீதி ஐந்து தலங்களென திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை என்று சொல்வார்கள். தலங்களை நம்பிக்கைகளும் புராணங்களும் ஒரு வலைப்பின்னலில் தொடர்புறுத்தி இணைப்பதன் மூலம் புனித நிலப்பகுதிகளை உருவாக்குகின்றன, தல யாத்திரைக்கான தடங்களை வரைகின்றன. ஒவ்வொரு கோவிலிலும் அதே சாமிக்கு வேறு வேறு பெயர்கள், வேறு வேறு பலன்கள், சிறு சிறு வேறுபாடுகளுடன் கூடிய கோவில் கட்டிடக் கலைகள் என வேறுபாடுகளினால் ஓவ்வொரு தலத்திற்கும் தனிச் சிறப்பும் புனிதத்துவமும்  பெறும் அதே சமயம் அவை அனைத்துமே ஒரே பொதுமையின் பல வெளிப்பாடுகள் மட்டுமே என்பதாக  நம் முன்னோர் இக் கோவில்களை கதைகளால் இணைத்திருக்கக்கூடும். 

திருவாஞ்சியம் என் மன வெளியில் அணுக்கமான தலம்; என் பெற்றோர் என்னை இங்கே குழந்தையாகத் தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றனர்.  அவர்கள் இத்தலத்தினை ஶ்ரீவாஞ்சியம் என்றே குறிப்பிட்டனர். அம்மா ஶ்ரீவாஞ்சியம் கோவில் மண்டபத்தைப் பற்றி கோவில் குளத்தினைப் பற்றி பல முறை நினைவு கூர்வாள். என் அப்பா வழியில்  பெரும்  கூட்டுக்குடும்பம் ஶ்ரீவாஞ்சியத்தில் வந்து ஒரு கோடை விடுமுறையை என் பெற்றோருடன் செலவழித்துள்ளனர். ஶ்ரீவாஞ்சியம் கதைகள் என அத்தைமார் சித்தப்பாமார் சொன்ன கதைகள் ஏராளம். நன்னிலத்துக்குப் போய் ரயிலில் இறங்கி அங்கேயிருந்து ஒற்றை மாட்டு வில் வண்டியில் ஶ்ரீவாஞ்சியம் போய் இறங்கியது, கோவில் குளமாகிய குப்த கங்கையில் குதித்து நீந்தி கும்மாளம் போட்டது, பித்தளை அண்டா அண்டாவாக புளியோதரையும் தயிர்சாதமும் கோவில் மடப்பள்ளியில் வாங்கி சாப்பிட்டது என கேட்ட கதைகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. ஶ்ரீவாஞ்சியத்தைப் போய் பார்க்கவேண்டும் என்ற தூண்டுதல் எனக்கு இருந்து கொண்டேயிருந்தாலும் இந்த 2013 மார்ச் மாதத்திற்கு முன் ஒரு தடவை கூட இங்கே வருவதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போனது ஆச்சரியம்தான். 

குடும்பகதைகளின் காரணமாகவே ஶ்ரீவாஞ்சியம் பற்றி நிறைய படித்து வைத்திருந்தேன். அம்பாள் மங்களாம்பிகைக்கு வேறொரு பெயராக வாழவந்த நாயகி என்ற பெயர் வழங்குகிறது, நாதன் சுகவாஞ்சி நாதர். பிற்கால சோழர் காலத்து கல்வெட்டுக்கள் இக்கோவிலில் படி எடுக்கப்பட்டிருக்கின்றன; கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். சோழர் கல்வெட்டில் ஊர் இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. சென்னை வேளச்சேரியிலிருக்கும் தண்டீஸ்வரர் கோவிலுக்கும் ஶ்ரீவாஞ்சியத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே எமன் வழிபட்ட தலங்கள். ஶ்ரீவாஞ்சியத்தில் எமனுக்கு தனியே சன்னிதியே இருக்கிறது. முதலில் நுழைந்துவுடன் எமதர்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டதுதான் சிவனை தரிசிக்க உள்ளே செல்கின்றனர், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலும் ஒன்பதாம் நூற்றாண்டு கோவில்தான் அங்கே எமன் தன் தண்டத்தை லிங்கமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். 

நான் கோவிலினுள் நுழைந்தபோது ஒரு கார் நிறைய கரை வேட்டிக்காரர்களும் வந்திறங்கி திபுதிபுவென்று எமன் சன்னதி நோக்கி சென்றனர். அவர்கள் வழிபாட்டினை முடித்துவிட்டுப்போகட்டும் என்று காத்திருந்தேன். வாசலில் கிட்டத்தட்ட இருபது பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மற்றபடி கோவில் வெறிச்சோடிக்கிடந்தது. ஶ்ரீவாஞ்சியம் கோவில் முன் மண்டபம் அழகானது. அம்மா அந்த மண்டபம்  அழகும் அமைதியும் நிறைந்தது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. பதினெட்டு பத்தொன்பது வயதில் அம்மா அப்பாவோடு மடியில் என்னை கைக்குழந்தையாக வைத்திருக்கும் புகைப்படம் வீட்டிலிருக்கிறது. அம்மா அதில் இரட்டைச்சடை போட்டு அந்தக் கால கஃப் கை வைத்த ரவிக்கை அணிந்திருப்பாள். இரட்டைச் சடை யுவதியாய் அம்மா இந்த ஶ்ரீவாஞ்சியம் கோவில் மண்டபத்தில் நடந்து சென்றிருப்பாள் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. நினைவு கூர்தல் ஒரு வகையில் புனிதமானது. நினைவுகளின் லலிதத்தில் ஒரு இடம் சுவீகரிக்கும் ரம்மியம் அபூர்வமானது; அது சாவினை வென்றுவிடுகிறது.

குப்த கங்கை குளக்கரையில் போய் அமர்ந்திருந்தேன். பச்சையான குளம். மீன்கள் குளக்கரை படிக்கட்டில் கூட்டம் கூட்டமாய் குழுமுகின்றன. சுந்தரர்  திருவாஞ்சிய பதிகத்தில் சள்ளை மீன்கள் துள்ளும் பொய்கைகள் நிறைந்த திருவாஞ்சியம் என்று பாடியிருப்பது ஞாபகம் வந்தது. கிளிக்கூட்டத்தின் கீச்சு சப்தங்கள் தவிர வேறு எந்த சப்தங்களும் இல்லை. இவ்வளவு கிளிகளை நான் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் கோவில் பிரகாரத்தில்தான் கூட்டமாக இதற்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.  கிளிக்கூட்டத்தின் மழலை சொக்கவைப்பதாய் இருந்தது. கூடவே சந்தனத்தின் சுகந்தமும். ஶ்ரீவாஞ்சியத்தின் தல விருட்சம் சந்தனம் என்று பின்னர் அறிந்தேன். கோவில் பிரகாரத்தில் நறுமணம் கமழும் சந்தன மரமிருக்கிறது. சந்தன மரக் காடொன்றில் கிளிக்கூட்டம் வான் ஏகி கலகலத்து காற்றில் எனக்கான எதிர்கால ஏடுகளை எடுத்துத் திரும்புவதான கற்பிதம் மனதில் வியாபித்தது. இன்னுமா பல ஏடுகள்? இன்னுமா பல சாத்தியங்கள்? 

கரைவேட்டிக்கூட்டம் யமதர்மராஜனின் சன்னிதியிலிருந்து உள்ளே போய்விட்டது. அர்ச்சனை முடிந்தவுடன் குருக்கள் இந்த சன்னிதியில் அர்ச்சனைத் தட்டினை பிரசாதமாய் திரும்பத் தருவதில்லை ஈஸ்வரன் சன்னிதியில் சாவு தப்பி புது வாழ்வு தொடங்குவதாக இங்கே ஐதீகம் என்றார்.  மண்டபம் தாண்டி ஈஸ்வர சன்னிதானம் நோக்கி நடந்தேன். கரை வேட்டிக்கூட்டத்திற்கும் மறுவாழ்வா என்று அவரிடம் கேட்கத் தோன்றவில்லை. 

சுகவாஞ்சிநாதர் சுயம்புலிங்கம். சன்னிதானத்தில் என்னையும் குருக்களையும் தவிர வேறு யாருமில்லை. அவர் நிதானமாக அர்ச்சனை செய்ய ஏகாந்தமாய் நினைவுகளும் எண்ணங்களுமற்ற பல நிமிடங்கள் சாத்தியமாயிற்று. வாழவந்தநாயகியின் சன்னிதானத்திற்கு வந்தபோதும் சுகவாஞ்சிநாதரின் லிங்கரூபம் கண் நிறைந்து இருந்தது. அம்பாள் சன்னிதியில் குருக்கள் கூட இல்லை. இங்கே இந்தக் கணம் என் வாழ்வு மரணம் தாண்டி புதிதாய் தொடங்குமெனில் அது ஆசுவாசம் நிறைந்ததாக இருக்கட்டும் என்று சப்தமாய் கூறி கீழே தரையில் சம்மணம் கூட்டி உட்கார்ந்தேன்.  சரவிளக்கில் சுடர்கள் ஆடாமல் அசையாமல் பொன் மணிகள் போல நின்றன. மங்களாம்பிகையின் எழில் கண்மூடினால் ரூபம் கொள்கிறதா என்று பார்ப்பதற்காகக் கண்ணை மூடினேன். 

தோளைத் தொட்டு யாரோ லேசாக அசைத்து எழுப்பியபோதுதான் நான் தூங்கியிருக்கிறேன் என்று தெரிந்தது. சில நிமிடங்களேயானாலும் நல்ல ஆழ்ந்த தூக்கம். குருக்கள் எதிரே நின்றிருந்தார். அம்பாளின் கிருபை உங்களுக்கு பரிபூரணமாய் இருக்கும் போலிருக்கிறதே என்றார். அவர் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தபோது நினைவுகளிலிருந்து விடுபட்ட புதிய ஆரம்பம் புலனாகுவதாகவே தோன்றியது.

“நீ அப்பாவா தப்பாவா?” என்றான் ஃபோனில் அழைத்த இளைய மகன் நான் காரில் ஏறி ஶ்ரீவாஞ்சியத்தை விட்டு கிளம்ப யத்தனிக்கையில். நான் சென்னையிலிருந்து திருவாரூர் கிளம்புவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னால் அவன் எனக்கு ஃபோன் செய்தபோது அந்த அழைப்பு தவறான எண் ஒன்றிற்குப் போய்விட்டிருக்கிறது. அதை எடுத்த நபர் மறுமுனையில் பேசுவது குழந்தை என்பதினால் அழைப்பைத் துண்டிக்காமல் அவன் பேசியதை கேட்டிருக்க வேண்டும். அவன் என்னிடம் என்னவெல்லாம் வாங்கி வரச் சொல்வானோ அதையெல்லாம் அந்த நபரிடம் சொல்லிவிட்டு ஃபோனை வைத்திருக்கிறான். நான் எதுவுமே வாங்காமல் வீடு திரும்பியதும் பிடி பிடியென்று பிடித்துக்கொண்டான். நான் அவன் தப்பான எண்ணுக்கு அழைத்ததால் எனக்கு அவன் கேட்டது என்ன என்றே தெரியாது என்று விளக்கினேன். அதனால்தான் இப்போது ஆரம்பிக்கும்போதே இப்படியொரு கேள்வி. “தப்பா இல்லை மக்கா அப்பாதான்” என்றேன்; அவன் உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கையில் கார் திருக்கண்ணமங்கை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. 

Monday, March 18, 2013

ஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்கள்


மாணவர் போராட்டங்களுக்கான இந்த வலைத்தளத்தைப் பார்க்க நேர்ந்தது
http://studentsprotest.blogspot.in 

நியுயார்க் டைம்ஸ் ப்ளாக் India Ink இல் செய்தி http://india.blogs.nytimes.com/2013/03/18/tamil-nadu-students-protest-alleged-human-rights-abuses-in-sri-lankatamil-nadu-protests/



ஈழப்போரில் நடந்து முடிந்து விட்ட தமிழினப் படுகொலைக்காக நீதி கேட்டு தமிழகம் எங்கும் தன்னிச்சையாக பரவி வரும் மாணவர் அறப்போராட்டங்கள் தமிழ்நாட்டின், இந்தியாவின் அரசியலையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தவை. இது தாமதமான, காலங்கடந்து ஏற்பட்டிருக்கிற இளைய சமுதாய எழுச்சி என்றாலும் கூட பறவைக்கூட்டங்கள் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கையில் இளம் குஞ்சுகளே முன் பறந்து வழிகாட்டுவது போல பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் நலன்களையும் மதிக்கின்ற அரசியல் தமிழ்நாட்டிலும் அகில இந்தியாவிலும் உருவாக இந்த மாணவர் போராட்டம் வித்திடுமென்று நான் நம்புகிறேன். 

ஈழப்போரின் கடைசி கட்டத்தில் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் தமிழர்கள் பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இன்னொரு மூன்றரை லட்சம் தமிழர்கள் நிலை குலைந்து ஈழத்தில் வாழ்கின்றனர். கொல்லப்பட்ட அத்தனை ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் பேரும் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல என்பதினாலேயே இது இனப்படுகொலை என்றழைக்கப்படுகிறது.  இனிமேலும் மனித குல சரித்திரத்தில் சுய கௌரவத்தோடு வாழ நினைக்கும் எந்த இனக்குழுவுக்கும் இந்தப் பேரழிவு வந்து விடக்கூடாது என்பதற்காக வேணும் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நியாயத்தை நாம் உலக அரங்கில் கேட்டே ஆக வேண்டும். அதற்கான வழி முறைகளை மாணவர்களின் போராட்டம் கண்டுபிடிக்கும் என்றே நம்புகிறேன்.  

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், 12 வயது பாலகன், பாலச்சந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்கள் ஹிந்து நாளிதழில் வெளிவந்த பின்னர் ஏற்பட்ட உணர்ச்சி அலைகளின் விளைவாகவே  தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தோன்றியுள்ளது. ஈழப்போரில் சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை ஏராளமாக தமிழகம் இதுவரை கண்டுதானிருக்கிறது. ஆனால் பாலகன் பாலச்சந்திரன் கையில் பிஸ்கட் பாக்கெட்டோடு, சட்டையில்லாமல், குழந்தையின் உப்பிய கன்னங்களுடன் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய உணர்வேயில்லாமல் உதட்டைச்சுழித்தபடி மணல் மூட்டைகளால் தடுக்கப்பட்ட பங்கருக்குள் உட்கார்ந்திருக்கும் புகைப்படமும், அதைத் தொடர்ந்தே அக்குழந்தை மார்பு குண்டுகளால் துளைக்கப்பட்டு பிணமாக அதே இடத்தில் கிடக்கின்ற புகைப்படமும் உருவாக்கிய அதிர்ச்சியில் தமிழகத்தின் நாடி நரம்புகள் பொடிந்துவிட்டன. மேலும், பிபிசி சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படங்கள், செய்தி ஆய்வு அறிக்கைகள் ஈழத் தமிழரின் இனப்படுகொலையும் இதர போர்க்கால குற்றங்களும் எப்படியெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்று  தெளிவாகச் சொல்கின்றன. இவற்றை உலக அரங்கு கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும்.

போரையும் போரின் அழிவுகளையும் என் தலைமுறையினர் தடுத்து நிறுத்த சக்தியற்றவர்களாய் இருந்தோம். அடுத்த தலைமுறையினரான மாணவர்களாவது அமைதியையும் அகிம்சையையும் நீதியையும் நிலைநிறுத்துகிற வல்லமையுடையவர்களாக இருக்கட்டும். 



Sunday, March 17, 2013

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய பிம்பக் கோர்வை பாலாவின் ‘பரதேசி’






கல்லூரி காலத்திலிருந்தே நண்பனாக இருக்கும் ஜெர்ரி பாலாவின் பரதேசி படத்தில் கங்காணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் முதல் நாளே படத்தைப் பார்க்கப் போனேன்.  பரதேசி படமாகிக்கொண்டிருந்த மாதங்களில் ஜெர்ரியை சந்திக்கும்போதெல்லாம் காதில் கடுக்கன்களுடன், வழுக்கைத் தலையுடன், பாதி நரைத்த நீண்ட தாடியுடன் இருந்தார். படம் வெளிவந்தவுடன் பார்த்து ‘ஜெர்ரி இந்தக் காட்சியில் மேற்சொன்ன ஜோடனையில் சோபித்தார்’ என்று ஒரு வரியாவது எழுதிவிடவேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முக்கியமான பிம்பக்கோர்வையாய் இருந்தபடியால் படம் பார்க்கச் சென்றது நல்ல முடிவாகவே அமைந்தது.

அடிமைத்தனத்தின் உள்கட்டுமானங்களான உழைப்பு சுரண்டல், அதிகார படியமைப்பு, மருத்துவம், மாந்தரீகம், மதம், ஆண்மனம், பணத்தாசை ஆகியவற்றின் உறவுகளை காட்சிப்படிமங்களாக்குவதிலும் கதைக்காகக் கோர்வைப்படுத்துவதிலும் பாலாவின் பரதேசி பெரும் வெற்றியடைந்திருக்கிறது. இது குறைத்து மதிப்பிடக்கூடிய சாதனை அல்ல; இந்தப் படம் வணிகரீதியாக வெற்றியை சந்திக்குமானால்  தமிழ் சினிமாவினையே புரட்டிப் போட்டுவிடக்கூடிய வல்லமை கொண்டதாகவும் மாறிவிடும். நான் இப்படி எழுதுவதினால் இந்தப் படம் குறைகளற்ற படம் என்று அர்த்தமில்லை. உண்மையில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான குறைகள் இந்தப் படத்தில் உள்ளன. குறைகளை முதலில் தொகுத்துவிடுவது நான் சொல்ல வருவதை சரியான கோணத்தில் பார்ப்பதற்கு உதவும்.

பரதேசி படத்திற்கு மூலக் கதை பி.ஹெச்.டேனியல் எழுதிய ‘ ரெட் டீ’ என்ற ஆங்கில நாவல் இது தமிழில் இரா.முருகவேளினால் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுல்ளது. 1969இல் வெளிவந்த பி.ஹெச் டேனியலின் நாவல் முல்க் ராஜ் ஆனந்தின் “Two Leaves and a bud” என்ற அசாம் தேயிலைத் தோட்ட கொத்தடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையினை விவரிக்கும் நாவலுக்கு இணையானதாக கருதப்படுகிறது.  டேனியலின் நாவல் அதிகம் விவாதிக்கப்படவில்லையென்றாலும் முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் உருவாக்கிய விவாதங்களையொட்டி டேனியலின் நாவலும் ஓரளவுக்கு கவனம் பெற்றது. முல்க்ராஜ் ஆனந்தின் நாவல் முதலாளித்துவ பொருளாதாரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவற்றினால் விளையும் கொடுமைகளை சாடுகின்ற அதே வேளையில் இந்திய சாதி அமைப்பினையும் அது தருகின்ற உலகப்பார்வையினையும் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனந்தின் கதாநாயகத்தனமையற்ற கதாநாயகனான கங்கு இறந்தவளை அடக்கம் செய்யக்கூட பணம் புரட்ட முடியாமல் கூலித்தொழிலாளி பிடிப்பவனிடம் அடைக்கலமாக நேரும்போது அது அவனுடைய முன் ஜென்ம வினைப்பயன் என்று சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்வதிலுள்ள உலகப்பார்வையினையும் ஆனந்தின் நாவல் விமர்சிக்கிறது. டேனியலின் நாவலிலும் கயத்தாறில் காணப்படும் இரட்டைக் குவளைகள், சாதிய அடக்குமுறையினால் கூலி கொடுக்கப்படாமை ஆகியன விவரிக்கப்படுகின்றன. டேனியல் நாவலின் கதாநாயகர்களான கருப்பனும் வள்ளியும் தலித்துகள். ஏன் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி சிறுகதையிலும் இலங்கைக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளிகளாக செல்கிற மருதியும் அவள் தாயாரும் தலித்துகள்தானே? புதுமைப்பித்தன் கதையில் அவர்களால் பண்ணையாரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலுவதில்லை; சாலைகளுக்கு கப்பி போடும் வேலையும் முடிந்து விடுகிறது. அவர்கள் அவ்வாறு வேறு வழியேயில்லாமல் சலித்து சோர்ந்திருப்பதை விவரிக்கையில் புதுமைப்பித்தன்  எழுதுகிறார் “தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜெண்டு ஒருவன் வந்தான். பறைசேரியில், தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது. திரைகடல் ஓடியாவது திரவியம் தேட வேண்டுமாமே! “  முல்க் ராஜ் ஆனந்த், டேனியல், புதுமைப்பித்தன் என தேயிலைத் தோட்டக் கூலிகளாக உள்நாட்டிலோ வெளி நாட்டிற்கோ புலம் பெயர்த்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தலித்துகள் என்பதினை வெளிப்படையாகச் சொல்லும்போது பாலாவின் படம் பரதேசி ஏன் இந்த உண்மையினை பூடகமாகவேனும் சுட்டுவதில்லை? மனிதாபிமானமற்ற வன்கொடுமைகள் காலனீயத்தினால் மட்டும் நடக்கவில்லை அவை நம் நாட்டின் உள்ளார்ந்த வன்முறையான சாதி அமைப்பினாலும் நடந்தேறின. 

முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் வெளிவந்தபோது 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ‘ஸ்பக்டேட்டர்’ இதழில்  ஆனந்தின் நாவல் சித்தரிக்கின்றபடிக்கு ஒன்றும் அசாம் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை இல்லை என்று கோல்ட்வின் என்ற தேயிலைத் தோட்ட முதலாளி எழுதினார். அவருக்கு செப்டம்பர் 3, 1937 இதழில் பதிலெழுதிய ஆனந்த் தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் வைட்லி ராயல் கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அரசு அறிக்கையே ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை பாலியல், பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்துவதாகக் குறிப்பிடுவதை எடுத்துக்கூறினார். தானே நேரில் சென்று இலங்கை, அசாம் தேயிலைத் தோட்ட நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததாகவும் பதிலளித்தார். ஒரு நாவல் ஏற்படுத்திய தாக்கம் என்பது இங்கிலாந்தில் அப்படிப்பட்டதாக இருந்தது. மேலும் ஐரோப்பிய அளவிலும் நாவல்களைத் தொடர்ந்து சட்ட மாற்றங்களைக் கொண்டு வருவது, குடிமை சமூகத்தினை வலுப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது என்பது மரபுகளாகவே உருவாகியிருக்கின்றன. சுரங்கத் தொழிலாளிகளைப் பற்றிய எமிலி ஜோலாவின் நாவல் சுரங்கத் தொழில் குறித்த சட்டங்கள் சீரமைக்கப்படுவதற்கு வழிகாட்டியது, சார்ல்ஸ் டிக்கன்சின் நாவல்கள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய சட்டங்கள் இயற்றப்படக் காரணங்களாக அமைந்தன.

டேனியலின் நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் நரக வாழ்க்கையினை நேர்மையாகப் பதிவு செய்திருப்பது டிக்கன்சுக்கோ, ஜோலாவுக்கோ, ஆனந்துக்கோ எந்த விதத்திலும் குறைவுபட்டதல்ல; ஆனால் அது 1969 இல் சுதந்திர இந்தியாவில் வெளிவந்தபோது நம் குடிமை சமூகத்தில் எந்த விவாதத்தையும்  உருவாக்கவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை மையமாக வைத்து நாவல் எழுத வேண்டிய அளவுக்கு டேனியலுக்கு ஏற்பட்ட அக்கறை அவர் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டராகவும் கிறித்தவராகவும் இருப்பதானால் ஏற்பட்டது. டேனியலின் நாவலினால் ‘இன்ஸ்பையர்’ ஆகி எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசியிலோ விஷக்காய்ச்சலினால் கொத்து கொத்தாக மக்கள்  மடியும்போது பார்வையிட வருகின்ற டாக்டரோ கொள்ளை நோயினை தொழிலாளிகளை கிறித்துவத்திற்கு மதமாற்ற சந்தர்ப்பமாக பார்ப்பதாகக் காட்டப்படுகிறார். அவரும் அவருடைய வெள்ளைக்கார மனைவியும் ஜீஸஸ் குத்துப்பாட்டு ஆடி ரொட்டிகளை வீசியெறிய தொழிலாளிகள் அவற்றைப் பொறுக்கி எடுத்துக்கொள்கிறார்கள். மூலக்கதையை நாவலாக எழுதிய கிறித்தவ டாக்டரான டேனியலோ மருத்துவப்பணி செய்தது மட்டுமல்லாமல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உருவாகி அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார். டேனியலின் நாவலால் உந்தப்பட்டு எடுக்கப்பட்டதாகக் கூறும் படம் இப்படியொரு துரோகத்தினை அந்த நாவலாசிரியருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இழைத்திருக்க வேண்டாம். 

பரதேசி படக் கதையில் இன்னொரு பெரிய ஓட்டை 48 நாட்களுக்கும் மேலாக கூலித்தொழிலாளிகளாக கங்காணியால் பிடிக்கப்பட்டவர்கள் தேயிலைத் தோட்டத்திற்கு நடந்து செல்வதாக காண்பிப்பது. தென் தமிழகத்திலிருக்கும் சாலூரிலிருந்து  நடந்து தமிழகத்திற்குள்ளாக இருக்கிற எந்த மலையகத் தேயிலைத் தோட்டத்திற்கும் நடந்து செல்ல 48 நாட்களுக்கு மேலா பிடிக்கும்? என்ன கதை இது? 1939 என்பது என்ன கற்காலமா என்ன? வழியில் கோவில் குளங்கள். கிராமங்கள் எதுவுமே இல்லையா என்ன? இந்தியா முழுவதும் நடைபயணமாய் தீர்த்த யாத்திரை காலங்காலமாய் யாருமே சென்றதில்லையா? பரதேசி படத்தின் நம்பகத்தன்மையினை வெகுவாக பாதிப்பது இது. போதாக்குறைக்கு 48 நாட்களுக்கு மேலாக நடந்து சோர்ந்து தாடியெல்லாம் அடர்ந்துவிடுகிறவர்களுக்கு அதற்கேற்றாற் போல அப்ளாக்கட்டை கிராப்பில் தலையில் முடி வளர்வதில்லை. என்ன மாயமோ?

கொடி அடுப்பொன்றில் ஒட்டில் புட்டு அவித்தாற்போல நாஞ்சில் நாடனின் சிறுகதை ‘இடலாக்குடி ராசாவை’ படத்தின் முதல் பாதியில் செருகியிருக்கிறார்கள். அதனால்தான் கதை  பாலாவுடையது ஆகிவிட்டது போலும். முதல் பாதியில் வேதிகாவின் படு செயற்கையான நடிப்பும் Tomboyish கதாபாத்திர சித்தரிப்பும் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துகின்றன. வேதிகாவுக்கும் தன்ஷிகாவுக்கும் கருப்பு மையைத்தான் பூசிவிட்டார்களே கூடவே தலையில் அரைப்படி வேப்பெண்ணெயையும் தலையில் தேய்த்திருக்கவேண்டுமே என்று யாரும் சொல்லவில்லை போலும். ஷாம்பூவின் பளபளப்பில் தலை முடி வேதிகாவுக்கும் தன்ஷிகாவுக்கும் மட்டும் மின்னுகிறது. 

இசைக்கருவிகளும் இசைகளும் நிலப்பகுதிகளை ஆழ்  அகத்தில் உணர்வலை அடையாளங்களாய் எழுப்பும் தன்மைகள் உடையன என்பதினைப் பற்றி பரதேசி படத்தின் இசையமைப்பாளர் பிராகாஷுக்கு கிஞ்சித்தும் தெரிந்திருக்கவில்லை. எல்லா நாடகீயமான காட்சிகளுக்கும் சஜாங் சாஜாங் என்று மேற்கத்திய சிம்ஃபொனி போலவோ இசை நாடகம் போலவோ மேலெழும்பும் வயலின் இசை காட்சிகளை நராசப்படுத்துகிறது; அந்நியப்படுத்துகிறது. தேவரீர் காட்சிகளுக்கு ஏற்ற இயற்கையான சப்தங்களையே விட்டுவைத்திருக்கலாமே என்று கெஞ்சத் தோன்றுகிறது. பாடல்கள் எந்த பாதிப்பையும் நம்மிடம் ஏற்படுத்துவதில்லை. கேட்டால் கேளுங்கள் மறந்தால் மறந்துவிடுங்கள் ரகம்.

மேற்சொன்ன அத்தனை குறைகளையும் தாண்டி நடிப்பினால், காட்சிப்படிமங்களால், கதைகோர்வைப்படுத்துதால், வசனத்தால் பாலாவின் பரதேசி அபூர்வமான படமாகியிருக்கிறது.

நடிப்பில் அதர்வா கதாபாத்திரத்தின் பாட்டியாக நடித்திருக்கும் மூதாட்டி என் மனதினைக் கவர்ந்தார். வேதிகா (அங்கம்மா) அம்மாவிடம் ஊர்ப்பஞ்சாயத்தில் கைச்சண்டையில் இறங்குவதிலிருந்து, சத்தியம் பண்ணச்சொன்ன எரியும் சூடத்தை அலட்சியமாக அணைத்துவிட்டு போவதாகட்டும் படத்தின் பிற்பகுதியில் அங்கம்மா கர்ப்பமாக இருக்கிறாள் என்பது அறிந்து அவள் அம்மா அவளை தலை முழுகி திட்டும்போது அங்கம்மாவை கையைப்பிடித்து தன் குடிசைக்கு அழைத்து வருவதாகட்டும் மூதாட்டி அசத்துகிறார். முழுப்படத்திலேயுமே வலுவான பார்வையும் தீர்மானமான செயல் ஊக்கமும் கொண்ட கதாபாத்திரமாக அந்த மூதாட்டியே இருக்கிறாள். அவளுக்கு தன் பேரன் இப்படி பொறுப்பில்லாமல் ஒட்டுப்பொறுக்கி என்று பெயரெடுத்து அப்பிராணியாக திரிகிறானே என்ற கவலையும் நியாயமாகவே இருக்கிறது. அங்கம்மாவுக்கு பிள்ளைப்பேறு பார்த்து திருமணத்திற்கு முன்பே பிறந்த அந்த சிசுவை தொப்புள்கொடி ரத்தத்தோடு கையில் ஏந்தி பெரிய சாதனை போல கொண்டாடும் அந்த மூதாட்டி நம் மரபின் வளமான மதிப்பீடுகளின் குறியீடு.

பேரன் ஓட்டுப்பொறுக்கி  பலவீனங்களின் மொத்த உருவம். முட்டாளல்ல ஆனால் அப்பாவி யாசிப்பதற்கும் உரிமையோடு கேட்டு வாங்கி சாப்பிடுவதற்கும் வித்தியாசம் தெரியாதவனாய் இருக்கிறான். தன் இலைக்கு பந்தியில் யாரும் கவனிக்காமல் போகிறார்கள் என்றாலும் அழுகிறான் அடிபடும்போதும் அழுகிறான். தன்ஷிகா கதாபாத்திரத்தின் குழந்தையோடு விளையாடி விளையாடி உறவினை வளர்த்துக்கொள்ளும்போதும் தன் நண்பனின் மனைவி வெள்ளைக்காரனின் பாலியல் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி வருகையில் அவளை மௌனமாக ஒதுக்கி உதாசீனப்படுத்துவதிலும் அதர்வா பலவீனமான ஆணொருவனின் நல்ல கெட்ட பக்கங்களை நன்றாக வெளிப்படுத்துகிறார். அவர் பாட்டிக்கு இருக்கக்கூடிய செயலூக்கம் இவருக்கு இல்லாமல் இருப்பதே அவருடைய அடிமைத்தனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது பல சமயங்களில் சித்திரமாகிறது. 

கங்காணி கதாபாத்திரத்திற்கு வேண்டிய குரூரம் ஜெர்ரியிடம் இல்லை என்று கங்காணி அதர்வாவை அடிக்கும் காட்சியை வைத்து  நான் நினைத்தேன்; ஏனெனில் அந்தக் காட்சியில் அடி வாங்குபவனை விட அடிப்பவனின் வேதனை அதிகமாக இருப்பது போல ஜெர்ரியின் முகபாவம் இருக்கிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்தின் குரூரம்  கங்காணி வெளிப்படுத்தும் அலட்சியத்திலும் அக்கறையின்மையிலும் மனிதாபிமானமற்ற சுயநலத்திலும் இருக்கிறது அடிப்பது அடி வாங்குவதில் இல்லை என்பது பின்னர் தெளிவாகியது. கால் நடைப் பயணத்தின் போது குற்றுயிரும் குலையுருமாய் விழுந்துவிட்டவனை சுமை கூலி முக்கா பணமா என்று அலட்சியமாக உதறிவிட்டு வருமாறு உத்தரவிடும்போது, தப்பி ஓட முயன்ற அதர்வாவைப் பிடித்து இழுத்து வந்து கங்காணி வீட்டின் முன் நிறுத்தும்போது ஏன்டா என்னைத் தொந்திரவு செய்கிறீர்கள் என்பது போல நிற்கும்போது என்று ஜெர்ரி அலட்சியத்தின் மொத்த உருவமாக இருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து inheritance ஆக நம் அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் நாம் பெற்றது இந்த அலட்சியத்தோடு கூடிய சுய நலத்தையே. ஜெர்ரி கோவணாண்டியாக எண்ணெய் தேய்த்து குளிக்கிற காட்சியில் நடிப்பில் சோபிக்கிறார்.

தன்ஷிகாவின் நடிப்பும் அபாரம். வேதிகாவைப் போல மிகை நடிப்பில் ஈடுபடவேண்டிய கட்டாயமில்லையாதலால் நுட்பமான பாவனைகள் கைகூடி வருகின்றன. அதர்வா தன் குழந்தையுடன் விளையாடுவது, கால் கழுவி விடுவது என்பதயெல்லாம் பார்க்கும்போது தன்ஷிகாவின் முகத்தில் தெரியும் அபாரமான மலர்ச்சிகள் மின்னல்கள் போல திரையின் சட்டகத்தையே பிரகாசமாக்குகின்றன. அதர்வாவுக்கும் அங்கம்மாவுக்கும் திருமணமாகாமலே குழந்தை பிறந்திருப்பதை அறியவரும்போது அதர்வா அதை அங்கம்மாதான் என்று நியாயப்படுத்த முயல பெண்ணைக் குற்றம் சொல்லாதே என தன்ஷிகா சீறுவதும் கச்சிதமாக இருக்கிறது. 

சிறு பாத்திரங்களில் நடித்திருக்கும் விக்கிரமாதித்யன் நம்பி முதல் கூட்டங்களில் வரும் குழந்தைகள் வரை பிசிறில்லாமல் நடித்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் வசனம் பிரமாதமாக இருக்கிறது. இயல்பான பேச்சு மொழி இவ்வளவு வலுவாக வேறெந்த தமிழ் படத்திலும் வெளிப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.

செழியனின் கேமரா வழியாக பிடிக்கப்பட்டுள்ள பதினைந்து காட்சிப் படிமங்களையேனும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். இந்தப் படிமங்களின் நகர்வில்தான் பாலாவின் பரதேசி திரைப்படம் நம் ஆழ்மனத்தோடு அந்தரங்கமாகப் பேசும் படமாக மாறிவிடுகிறது.

  1. கச்சம்மாள் தன் பேரன் அதர்வா வாய் பிளந்து தூங்குவதை உயரத்தில் உட்கார்ந்து பார்த்திருப்பது
  2. அதர்வா கிராமக் கோவிலில் தலையை ஒரு புறமாய் சாய்த்து கைகளை இல்லையே என்பது போல வைத்துக்கொண்டு கண் மூடி நின்று பிரார்த்திக்கும் காட்சி
  3. கயிற்றுக்கட்டிலில் சம்மணம் போட்டு உட்கார்ந்து சம்மணக்காலோடு பின் சரிந்து கையில் கள் கலயத்தோடு விக்கிரமாதித்யன் உனக்கு எத்தனை பெரியம்மா தெரியுமா என்று சிரிப்பது
  4. சாரி சாரியாக இடம் பெயரும் கூட்டம். வானம் முக்கால்வாசி திரையை ஆக்கிரமிரத்திருக்க ஒற்றை மாட்டு வண்டி முன் செல்ல மூட்டை முடிச்சுகளுடன் அத்தனை பேரும் வரிசையாகப் பின் செல்லும் காட்சி
  5. நீர் நிலையொன்றில் இடம் பெயரும் கூலித் தொழிலாளிகள் அனைவரும் நடைபயணத்தின் போது மிருகங்களைப் போல தண்ணீரில் வாய் வைத்து நீர் அருந்தும் காட்சி
  6. குற்றுயிரும் குலையுயிருமாய் கைவிடப்பட்டவன் தரையில் கிடக்க அவன் கை மட்டும் தூக்கி நிற்க அவன் மனைவி கூட்டத்தினரால் இழுத்துச் செல்லப்படும் காட்சி 
  7. பணப்பெட்டியை திறந்து வைத்து கங்காணி, மருத்துவர், பூசாரி உட்கார்ந்திருக்க அவர்கள் முன்னே தேயிலைத் தொழிலாளிகள் அனைவரும் குத்த வைத்து உட்கார்ந்திருப்பது
  8. தப்பி ஓடிய அதர்வாவை சிறைபிடித்து கைகால் கட்டி ஆஸ்பத்திரியில் குப்புறப்போட்டு கணுக்கால் நரம்பினை வெட்டுவது
  9. நாக்கை வெளியே நீட்டி வெள்ளைக்காரி சிலுவை போடுவதற்காக காத்திருக்கும் குள்ள உருவம் கொண்ட தொழிலாளி
  10. தேயிலைத் தோட்ட ஆங்கிலேய முதலாளி வீட்டின் முன்னால் மண்டி போட்டு கதறும் கங்காணி
  11. ஜீசஸ் குத்துப்பாட்டின் போது தொழிலாளிகளின் உணர்ச்சி மிகுந்த வெளிப்பாடுகளைப் பார்த்து கண்களை உருட்டி உருட்டி ஆனந்திக்கும் வெள்ளைக்காரி
  12. சிறு குன்றின் மேல் குழந்தையோடு உட்கார்ந்து வானம் நோக்கி கதறும் அதர்வா
  13. தினசரி அதி காலையில் கொம்பூத குடிசைகளிலிருந்து வேலைக்குக் கிளம்பும் கொத்தடிமைகள்
  14. பாறையின் மேல் தனித்து உட்கார்ந்து அழும் பெண் குழந்தை
  15. அதர்வா, வேதிகா, குழந்தை ஆகியோர் தரையில் கிடக்கும் கடைசிக் காட்சி

மேற்கண்ட காட்சிப்படிமங்களும் நான் இங்கே சொல்லாமல் விட்ட பலவும் இணைந்து, தொடர்புறுத்துதல்கள் பெற்று, நகர்ந்து நம் அகத்தில் இயங்குகின்ற காலத்தினை உருவாக்குகின்றன. அவ்வாறாக நகர்கிற திரை பிம்பக் கோர்வையில் பாலாவின் பரதேசி எங்கேயெல்லாம் மனிதர்கள் மனிதர்களை அடிமைப்படுத்துகிறார்களோ அவர்களை எல்லாம் பற்றி பேசுகிற கதையாக உலகப்பொதுமை பெறுகிறது. பாலாவின் பரதேசி தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் மகத்தான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. 






Saturday, March 16, 2013

சங்க இலக்கியத்தின் வேர்கள்: பயிலரங்கு


செம்மொழி ஆய்வு மையமும், கோழிக்கோடு பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் ‘சங்க இலக்கியத்தின் வேர்கள்’ என்ற பயிலரங்கு கோழிக்கோடு பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் ஆய்வு பள்ளியில் மார்ச் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பயிலரங்கினை தொடங்கி வைத்து உரையாற்றும்படி அழைக்கப்பட்டுள்ளேன். இந்தப் பயிலரங்கின் நோக்கங்களுள் ஒன்று சங்க இலக்கியத்தின் வழி நாம் அறியவரும் பண்டைய தமிழகத்தின் வாழ்வியல் கேரளத்தையும் உள்ளடக்கியது என்பதினை எடுத்துரைப்பது என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்கு முக்கியமாகப்பட்டது.

‘மேலும்’ இதழில் ‘சங்க இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியல்’ என்ற கட்டுரையை எண்பதுகளில் எழுதினேன். அக்கட்டுரையைத் தொடர்ந்து பல ஆங்கில கட்டுரைகளை தமிழ் இலக்கண நூல்களை மையப்படுத்தி தமிழரின் பண்டைய அறிவுத்தோற்றவியல் காலந்தோறும் என்னென்ன அழுத்தங்களைப் பெற்று வந்துள்ளது என்று எழுதியுள்ளேன். தமிழில் அவற்றை இன்னும் எழுதவில்லை. இலக்கண நூல்களின் வழி நான் அடைந்த முடிவுகளை ராஜ் கௌதமன் ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ் சமூக உருவாக்கமும்’ ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’ ஆகிய நூல்களில் இலக்கிய பனுவல்களை ஆராய்வதன் மூலம் அடைந்த முடிவுகளாக முன்வைப்பனவோடு ஒப்பிட்டு என்னுடைய உரையை தயார் செய்து வருகிறேன்.  இது தொடர்பாக தமிழவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘சிற்றேடு’ இதழில் (எண் 2 எப்ரல் 2011) கோவை ஞானி எழுதியுள்ள ‘மார்க்சிய நோக்கில் பேராசிரியர் ராஜ்கௌதமனின் சங்க இலக்கிய ஆய்வுகள்’ என்ற ஆகச் சிறந்த கட்டுரையை கவனமாக வாசித்துள்ளேன். இந்தப் பொருள் தொடர்பாக நான் கவனப்படுத்தவேண்டிய கட்டுரைகள் நூல்கள் ஆகியனவற்றை நண்பர்கள் சுட்டிக்காட்டினால் மகிழ்வேன். என்னுடைய உரை ஆங்கிலத்திலேயே இருக்கப்போகிறது ஆனால் அதை விரைவில் தமிழில் எழுதி பகிர்ந்து கொள்ள உத்தேசித்திருக்கிறேன். 

பயிலரங்கின் ஏற்பாட்டாளர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் கோவிந்தராஜ வர்மாவும் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் எம். ராமகிருஷ்ணனுன் ஆவர். கோவிந்தராஜ வர்மா பயிலரங்கின் தொடக்க நாளான மார்ச் 23 ஆம் தேதி மாலை தெய்யம் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார். கோழிக்கோடு நண்பர்கள் வரலாம்.


Wednesday, March 13, 2013

புது சரஸ்வதி வந்தனம் : கவிதையும் கவிமூலமும் பலாபலனும்





பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியம்



 கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு தல யாத்திரை போய் வந்ததைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா அதில் நண்பர் பாலாஜி ஶ்ரீனிவாசன் எனக்கு இன்னும் சரஸ்வதி ஓவியத்தைத் தரவில்லை என்று புலம்பியிருந்தேனல்லவா பாலாஜிக்கு மனம் நெகிழ்ந்துவிட்டது. முந்தா நாள் இரவு  நண்பர் காந்தியுடன் பாலாஜி ஶ்ரீனிவாசன் என் வீட்டிற்கு வந்து சரஸ்வதி ஓவியத்தைத் தந்தார். மேலே புகைப்படமாய் தந்திருப்பது பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியம்; இரண்டரை அடிக்கு மேல் உயரம். புகைப்படமெடுக்கும்போது இடது பக்கத்தில் என் மேஜை விளக்கின் ஒளி பிரதிபலிக்கிறது. அதை சரி செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன். என் வீட்டு படிப்பறை-நூலகத்தின் களையே லஷ்மிகரமாக இந்த ஓவியத்தை என் எழுது மேஜையில் வைத்தவுடன் மாறிவிட்டது.  என்னுடைய சரஸ்வதி பிரேமை கட்டுக்குள் வந்துவிட்டதான கற்பிதத்தில் மனம் அமைதியாகிவிட்டது. ஆராய்ச்சி நோக்கம் தவிர பெரிதாக கடவுள் நம்பிக்கை, மத ஈடுபாடு ஏதுமற்ற எனக்கு வழிபாட்டு முறைகள், மதம் சார் படிமங்கள், கோவில் குள தல யாத்திரைகள், பாராயணங்கள், என் மனதினை எப்படி நெறியாளுகின்றன என்பதை உற்று கவனிப்பதிலும் அவற்றை பாரபட்சமற்று பதிவு செய்வதிலும் ஆர்வம் மிகுந்திருக்கிறது. 

கிட்டத்தட்ட என்னைப் போன்றே மனப்பான்மையுடையவர்கள் நண்பர்கள் பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் என்பது என் எண்ணம். பாலாஜி ஶ்ரீனிவாசன் NFSC (National Folklore Support Centre)  நடத்திய இந்திய மரபு ஓவிய பயிலரங்குகளில் கலந்து கொண்டபோது எனக்கு அறிமுகமானார். NFSC 14 இந்திய ஓவிய மரபு பயிலரங்குகளை இது வரை நடத்தியுள்ளது. ஒவ்வொரு மரபு ஓவிய பயிலரங்கிலும் மரபு ஓவியர்கள் கலந்து கொள்வபர்களுக்கு தங்கள் ஓவிய மரபின் நுட்பங்களை பயிற்றுவிக்க, கூடவே ஆராய்ச்சி உரைகளும் வழங்கப்பட்டன. நான் எல்லா மரபுஓவிய பயிலரங்குகளிலும் ஆராய்ச்சி உரைகளாற்றியிருக்கிறேன். எல்லா பயிலரங்குகளிலும் பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் கலந்து கொண்டிருக்கின்றனர். பயிலரங்குகளின் போதும் அவற்றைத் தொடர்ந்தும் என் உரைகளை ஒட்டி நடந்த உரையாடல்களில் பாலாஜி ஶ்ரீனிவாசனுக்கும் எனக்குமான நட்பு பலப்பட்டது. பாலாஜி ஶ்ரீனிவாசனை ஒரு ஓவியராக, பயணியாக, கோவில் கட்டிடக்கலை, புராணங்கள், ஆகியவற்றைப் பற்றிய சிறந்த அறிவுடைய படிப்பாளியாக நான் கொஞ்சம் கொஞ்சமாக  அறியலானேன். NFSC   இந்தியா முழுக்க மேற்கொண்ட வாய்மொழி நிகழ்த்துகலைகள் ஆய்வுத் திட்டமொன்றில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்ட ‘பிரகலாத சரித்திரம்’ நாடக நிகழ்த்துதல்களை ஆய்வுக்கும் ஆவணப்படுத்துதலுக்கும் உட்படுத்தும் பணியினை பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் செய்து தந்தனர். அவர்கள் இருவரும் 2002 இல் NFSC நடத்திய நாட்டுப்புற கலைகளின் விழாவிற்காக மகாராஷ்டிர மாநிலத்தின் சித்ரகதி ஓவிய மற்றும் கதை சொல்லல் மரபு கலைஞர்களைப் பற்றிய களப்பணியும் மேற்கொண்டனர்.

பாலாஜி ஶ்ரீனிவாசன் NFSC பயிலரங்குகளின் வழி அறிந்த மதுபனி ஓவியங்களின் கலாமரபினைப் பின்பற்றி மகாபலிபுரம் சிற்பங்களை வரைந்து ஒரு தனி நபர் கண்காட்சி நடத்தியுள்ளார். போன வருடம் தன் ஒன்பது மாணவர்களை வழி நடத்தி சித்ரகதி பாணியில் பாரதக்கூத்தினை வரைய வைத்து  கண்காட்சி நடத்தியுள்ளார்.

மரபான ஓவியக்கலையின் எல்லைகளுக்குள்ளாகவே ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும், புதுமைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவைகள் பாலாஜி ஶ்ரீனிவாசனின் ஓவியங்கள். பாலாஜி ஶ்ரீனிவாசன் எனக்குக் கொடுத்துள்ள தஞ்சாவூர் பாணியிலான சரஸ்வதி ஓவியம் அந்த மரபின் நீட்சியில் ஒரு முக்கிய கண்ணி என்பதினை தஞ்சாவூர் ஓவிய மரபினை அறிந்த எவருக்குமே பார்த்தவுடனேயே தெரியவரும். இம்மாதிரியான படைப்புகளை உருவாக்குகிற கலைஞர்களே நம் மரபுக் கலைகள் உயிர்ப்புடன் நீடித்திருப்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றனர். என் தினசரி வாழ்வின் பகுதியான என் படிப்பறையின் ecology-ஐயே மாற்றிவிட்ட  பாலாஜி ஶ்ரீனிவாசனுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.

நேற்றைக்கு முன் தினம் அமாவாசை. மாசி மாத அமாவசையன்று அங்காளபரமேஸ்வரி ஆலயங்களில் மயானக் கொள்ளை அல்லது மயான சூறை என்றழைக்கப்படும் திருவிழா நடைபெறும். நான் வேளச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் நடைபெறும் மயானக் கொள்ளையை வருடா வருடம் பார்த்து வருகிறேன். இரண்டு வருடங்களாகத் தப்பிவிட்டது. மயானக்கொள்ளை மகாசிவராத்திரிக்கு மறு நாள் வரும். மகாசிவராத்திரிக்குக் கண்முழிப்பதால் மறு நாள் நடு நிசியில் நடைபெறும் மயானக் கொள்ளை பார்ப்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாகக் கண் முழிக்க இயலவில்லை. இந்த வருடம் சிவராத்திரிக்கு இரவு இரண்டு மணிக்கே தூங்கிவிட்டேன். அதனால் மறு நாள் மயானக் கொள்ளை பார்க்க சக்தியிருந்தது. சரஸ்வதி படம் வீட்டுக்கு வந்த உற்சாகம் வேறு. பாலாஜி ஶ்ரீனிவாசனும் காந்தியும் திருவல்லிக்கேணி அங்காளபரமேஸ்வரி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டினை சூறையாடுவதைப் பார்க்கப் போய்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் வேளச்சேரியையும் சேர்த்துப் பார்க்கலாம் என்றேன். இரவு பத்தரை மணிக்கு வேளச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு போனபோது ஒன்பது மணிக்கே மயானத்துக்கு தேவி போய் வந்துவிட்டதாகக் கூறினார்கள். அங்கிருந்து திருவல்லிக்கேணிக்கு போனோம். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி அங்காளபரமேஸ்வரி ஆலயங்களிலும் மயான சூறை முடிந்து விட்டிருந்தது. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. காந்தியும் பாலாஜியும் என்னை வீட்டில் விடும்போது மணி ஒன்று இருக்கும். சரஸ்வதி படத்தையே பார்த்துகொண்டு உட்கார்ந்திருந்தேன். தூக்கம் கண்ணைக் கட்டுகையில் இந்தக் கவிதையை எழுதினேன்.



சரஸ்வதி வந்தனம்

நீர்க்கர்ப்பத்தின் 
சுழுமுனை 
இமை திறக்க
செவி குளிர 
முதுமொழிக்காவிய தெளி பாடல் 
வீணையின் மீட்டலுடன்
நாளொன்று எழ
முக்குணக் கடல் தாண்டி 
முகிழ்க்கும் கமலப்பூ
உன் கால் விரல் தீண்டலால்
வெண்மைப் பேரொளி பரப்ப
புவியும் நீ
மறிபுனலும் நீ
கனலும் நீ
வளியும் நீ
வெளியும் நீ
மனமும் நீ
நீ நீயென 
தானழிப்பாய் மாதோ
யாதோ உன் 
நித்திய கிருபையென
உன் பிணை விழியால்
கலை பல அமுதத்தாரையாய்
அகிலம் நிறைக்க
மங்கல போகம் நகை வீச
பிராவகம்
இடுகாடு தாண்டியோட
மேனி முயங்கு தொறும்
தடுத்தாட்கொள்வாய்
என்
சாரதே










(சூட்சுமம்: 45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட கவிதையை அர்த்தம் புரிந்து 1000 தடவை ஜபித்து வந்தால் செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி ஏற்படும்; ராஜவசியமும், ஜன வசியமும், பெண் வசியமும், பொன், பொருள், மனைவி, மக்கள், வீடு, நோயற்ற வாழ்வு, வாகனம், ஐபேட், ஐஃபோன், பெரும் பதவி, ஆறிலக்க மாத வருமானம், மன நிம்மதி மற்றும்  இந்தப் பட்டியலில் விட்டுப்போன சகலதும் கிடைக்கும். தமிழ் எழுத்தாளனாய் இருந்து தொலைக்காட்சி பேட்டிக்கும் சினிமா கதை விவாதத்திற்கும் போனால் ஆட்டோ கட்டணமும் சன்மானமும் கிடைக்கும். உபரிகளாய் கிடைப்பதைப் பற்றி எனக்கு கடிதமெழுதத் தேவையில்லை. உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எண்ணிக்கையையோ சொதப்பிவிட்டு பலன் கிடைக்கவில்லையென்றால் என்னைக் குற்றம் சொல்ல இயலாது; சொதப்பியது எது என்று தானே சுய பரிசோதனை செய்து பார்த்துகொள்ள வேண்டியதுதான்)





Sunday, March 10, 2013

பூரண மதுவிலக்கே இன்றைய தேவை


பூரண மதுவிலக்கினை தமிழ் நாட்டில் அமல்படுத்தியே ஆகவேண்டிய சூழல் நிலவுவதாகவே நான் நம்புகிறேன். முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் மது அடிமைகள் மிக அதிகமான அளவில்  பெருத்துள்ளனர். தனி நபர்கள் ஆரோக்கியம் கெட்டு, குடும்பங்கள் சீரழிய குடி இன்று தமிழகத்தின் தலையாய சமூகச் சீர்கேடாக உருவெடுத்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு தலைமுறையே முழுமையாகக் குடியினால் சீரழிந்து போயிருக்கிறது. இளம் தலைமுறையினரோ மேலும் மேலும் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இன்றைக்கு குடியின் ஆதிக்கத்துக்கு உட்படாத கல்லூரி வளாகங்களோ விடுதிகளோ இல்லை எனும் அளவுக்கு குடி இளைஞர்களின் வாழ்வினை ஆக்கிரமித்திருக்கிறது. எந்த குறைந்த பட்ச வாழ்க்கைக்கும் லாயக்கற்ற ஊளைச் சதை தொங்க முப்பது முப்பத்தைந்து வயதிலேயே சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நரை, மூப்பு எய்திய சோதாக்களால்  நிரம்பிய சமூகமாக ஏற்கனவே பலவீனப்பட்டு கிடக்கிறது தமிழகம். சோப்ளாங்கிகளுக்கு வர்க்கமில்லை; ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள், படித்தவர், படிக்காதவர்கள் என்று எங்கும் அவர்கள் விரவியிருக்கிறார்கள். 

உடல் ஆரோக்கியத்தை பேணும் பண்பாடற்ற தமிழ் சமூகம் குறித்தான இரண்டு ஆய்வேடுகளை சமீபத்தில் நான் படித்தேன். இந்த ஆய்வேடுகளின் வழி தமிழ் சமூக வாழ்வு குறித்து வெளிப்படுகின்ற சில பொது முடிவுகளை கீழே தருகிறேன்.

  1. நடுத்தர வர்க்க  பெண்கள் இன்னும் அதிக அளவில் குடிக்கு அடிமையாகவில்லை என்றாலும் அவர்களும் மது அருந்த ஆரம்பித்துள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமான பிரிவினை மிக அதிகமாக மது அருந்துவதை ஒட்டி ஏற்படுகிறது.
  2. நாற்பது, நாற்பத்தைந்து வயதிலேயே தமிழ் ஆண்கள் கிழப்பருவம் அடைந்துவிட்டதாக நம்புகிறார்கள். நாற்பத்தைந்திலிருந்து ஐம்பத்தைந்து வயதிற்குள் மரணங்கள் சம்பவிப்பதும் அதிகமாகிவருகிறது. உட்கார்ந்த இடத்திலேயே உளுத்துப்போன உடல்களாக தமிழ் ஆணுடல்கள் இருக்கின்றபடியால் குடியும் சேரும்போது முப்பத்தைந்து வயது வாக்கில் ஆண்மைக்குறைவு பெரும்பான்மையோரை பீடிக்கின்றது. 
  3. குடிப்பதற்கு ஏற்ற சத்தான உணவினை தமிழர்கள் சாப்பிடுவதில்லை. ஆக்கக்கேடான கண்ட எண்ணையிலும் சமைத்த பதார்த்தங்களை தின்று வைக்கின்றனர்.

இந்த ஆய்வுகள் டாஸ்மாக்கில் மது வியாபாரம் மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கின்ற வரி வருமானத்தை கீழ்வருமாறு அட்டவணைப்படுத்துகின்றன;


Fiscal Year
Revenue in Crores
 % Change
2002 - 03
2,828.09

2003 - 04
3,639
pastedGraphic.pdf 28.67%
2004 - 05
4,872
pastedGraphic_1.pdf 33.88%
2005 - 06
6,086.95
pastedGraphic_2.pdf 24.94%
2006 - 07
7,300
pastedGraphic_3.pdf 19.93%
2007 - 08
8,822
pastedGraphic_4.pdf 20.85%
2008 - 09
10,601.5
pastedGraphic_5.pdf 20.17%
2009 - 10
12,491
pastedGraphic_6.pdf 17.82%
2010 - 11
14,965.42
pastedGraphic_7.pdf 19.80%
2011 - 12
18,081.16
pastedGraphic_8.pdf 20.82%



2002 ஆம் ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்த வரி வருமானம் 2828 கோடி ரூபாய் என்றால் 2012 இல் 18000 சொச்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு வருமானம் வெறும் வரி விதிப்பினால் வருகிற வருமானம் மட்டுமே. மொத்த மது விற்பனை என்பது பதினெட்டாயிரம் கோடியிலிருந்து பத்து மடங்கேனும் அதிகம் இருக்க வேண்டும். இந்த அளவுக்கு மது விற்பனை இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இளைஞர்களும், சிறுவர்களுமே குடிப்பவர்களாக இருக்கவேண்டும் என்பது இந்தப் புள்ளிவிபரத்திலிருந்து  உறுதியாகத் தெரிகிறது. இன்னும் பத்து ஆண்டுகள் இந்த நிலைமை நீடிக்குமென்றால் தமிழ்நாடு சோதா சோப்ளாங்கி நோயாளிகளின் மாநிலமாக மாறிவிடும்.  சினிமா தொலைக்காட்சி மாயைகளில் ஏற்கனவே தன்னைத் தொலைத்து உட்கார்ந்திருக்கும் தமிழ் சமூகம் குடியினால் தன் எதிர்காலத்தை மீட்க முடியாதபடி இழக்கும் அபாயம் இருக்கிறது.

காந்தியவாதி சசிபெருமாளின் உண்ணாவிரதப் போராட்டத்தை அவருக்கு வலிந்த சிகிக்சை அளித்து அரசு முடிவுக்குக்கொண்டுவந்திருக்கலாம் ஆனால் பூரண மதுவிலக்கினை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான தேவையை அவர் போராட்டம் பொது வெளிக்குக் கொண்டுவந்துவிட்டதெனவே நான் நினைக்கிறேன்.   முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடைகளை நிறுவி மேலும் மேலும் அரசுக்கு வருமானத்தை பெருக்குவதிலும் அந்த வருமானத்தை இடை மறித்து கொள்ளையடிக்கும் தரகர்களை பிரமுகர்கள் ஆக்குவதிலும் மட்டுமே முனைப்போடு இருக்கிற எந்த அரசும் மக்களின் நலன்களில் எந்த அக்கறையும் உடைய அரசாகத் தன்னை சொல்லிக்கொள்ள இயலாது என்பதினையும் பெரியவர் சசிபெருமாளின் போராட்டம் பொது வெளியில் உணர்த்திவிட்டது.

மது விற்பனையையும் மது அருந்துதலையும் ஒழுங்குபடுத்துவதன் மூலம் மதுவின் தீமைகளை நம் சமூகத்தில் கட்டுப்படுத்திவிடலாம் என்ற வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை; அதற்கான காலம் கடந்துவிட்டது. பூரண மதுவிலக்கே இன்றைய தேவை. 


Friday, March 8, 2013

தல யாத்திரை : கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயம்


 தல யாத்திரை : கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயம் 

பல வருடங்களுக்குப் பின் தல யாத்திரை செல்லும் வாய்ப்பொன்று கிடைத்தது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் தலைமை விருந்தாளியாகக் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தேன். மார்ச் மாதம் இரண்டாம் தேதி விழா நடந்தது. அதில் கலந்துகொண்டபின் திருவாரூரிலும் திருவாரூரைச் சுற்றியும் உள்ள தலங்களைப் பார்த்து வழிபட்டுவிட்டு சென்னை திரும்பினேன். 

கூத்தனூர் சரஸ்வதி 


திருவாரூருக்கு அருகில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு முதலில் சென்றேன். சரஸ்வதியின் உருவத்தின் மேல் எனக்குக் கடந்த ஒரு வருடமாக ஒரு வகை பிரேமை பிடித்திருக்கிறது. சிறு குழந்தையாக இருந்தபோது அம்மா சரஸ்வதி படத்தின் முன் என்னை உட்கார்த்தி வைத்து ‘வெள்ளைக் கலையுடுத்தி, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாய்’ என்று மனனம் செய்யவைத்து தினசரி வழிபாட்டின் பகுதியாக மாற்றியதிலிருந்து சரஸ்வதியின் உருவம் மனதில் ஆழமாய் படிந்து விட்டது. ரவிவர்மா வரைந்த நாட்காட்டி சரஸ்வதியின் உருவமே அது. எப்போது சமஸ்கிருத சரஸ்வதி மந்திரம் ‘சரஸ்வதி நமோஸ்துப்யம் வரதே காமரூபினி, வித்யாரம்பம் கரிஷ்யாமி, சித்திர் பவதுமே சதா’ தினசரி வழிபாட்டின் பகுதியாயிற்று என்று நினைவில்லை ஆனால் சரஸ்வதி காமரூபினி என்ற எண்ணம் ஏற்படுத்தும் உவகையும் கிளர்ச்சியும் ஆச்சரியமானவை; ரவிவர்மாவின் ஓவிய சரஸ்வதியை காமரூபினி என்று எந்தவகையிலும் சொல்ல இயலாது. பாறையொன்றின் மேல் நான்கு கைகளோடு இரு கைகளில் வீணையையும், ஒரு கையில் தியான மாலையையும், மறு கையில் ஓலைச் சுவடிகளையும் வைத்திருக்கும் ரவிவர்மாவின் சரஸ்வதி ஒரு அம்மாமியின் முகத்தோற்றமும் சாந்தமும் உடையவள். மனதிற்குள் சொல்லும் ஸ்தோத்திரங்களுக்கும் வெளியில் இருக்கும் உருவப்படத்திற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடு மனதினை ஒரு முகப்படுத்த விடுவதில்லை. வருடா வருடம் சரஸ்வதி பூஜையின்போது வசீகர சரஸ்வதி உருவமொன்றை கற்பிதம் செய்வது வழக்கமாக மாறிவிட்டது. பார்ப்பது ஒன்று அதன் மேல் நாம் கொள்ளும் கற்பிதம் வேறொன்று என்ற அ-யதார்த்த கலை சித்தாந்தம் எனக்கு உவப்பானதாக உறுதிபெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். சரஸ்வதியை காமரூபினி என்பது ஒரு அக ஊற்றினை, கண்ணுக்குப் புலப்படாத நதியினை, ஒரு பிரவாகத்தினை, ஒரு உயிரெழுச்சியை, உயிர் திளைத்தலை குறிப்பதாகும் என்று பதினைந்து பதினாறு வயதில் எனக்கு வசமாயிற்று. கம்பனின் சரஸ்வதி அந்தாதி காப்பில் வரும் “படிக நிறமும் பவளச் செவ்வாயும், கடி கமழ்பூந்தாமரை போற் கையுந்-துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமுந் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி” என்ற துதி அக ஊற்றின் அழகிய உருவம் என்பதாக எனக்கொரு எண்ணம் உண்டு. “சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை’ என்ற குமரகுருபரின் வரிக்கு கம்பனே சரியான உருவமளிக்கிறார் என்றால் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரே சரஸ்வதி உருவத்திற்கு “மந்திரத்தை முணுமுணுத்தேட்டை, வரிசையாக அடுக்கி, அதன் மேல் சந்தனத்தை, மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனையன்றாம்! வீடு தோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி, நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள், நகர்கள் எங்கும் பல பள்ளி” என்று அதற்குச் செயல் வடிவம் கொடுக்கின்றார். 


ரவி வர்மா ஓவியம் 


கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்திற்கு காரில் பயணப்பட்டுக்கொண்டிருந்தபோது காலையில் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையினை அசை போட்டுக்கொண்டிருந்தேன். உயர்கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் தங்களை உடனடியாகச் சுற்றியுள்ள சமூகத்தோடும் கலை மரபுகளோடும் நெருக்கமான உறவுகளைப் பேணவேண்டியதன் அவசியம் பற்றி என் உரை அமைந்திருந்தது. காவேரி டெல்டா பகுதின் வளமிக்க நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளையும் அவ்வகை ஆராய்ச்சிகளுக்கான ஆவணக்காப்பகம் ஒன்றினை உருவாக்குவதற்கான அவசியம் பற்றியும் நான் வலியுறுத்தினேன். பொய்க்கால் குதிரை ஆட்டம், பொம்மலாட்டம், கூத்து, பிரகலாத சரித்திரம் நாடகம், தஞ்சாவூர் குத்து வரிசை, மரப்பாச்சி பொம்மைகள், பட்டு நெசவு, நாதஸ்வர இசை, தியாகராஜர் கீர்த்தனைகள், கோவில் தல புராணங்கள், கட்டிடக் கலைகள், மரபான விவசாயம் என்று தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஆராய்ச்சி செய்யவும் ஆவணப்படுத்தவும்தான் எத்தனை மரபுகள் இருக்கின்றன அவற்றைப் பற்றியெல்லாம் துல்லியமான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை இந்தியா முழுவதிலுமுள்ள டெல்டா நாகரீகங்களின் சமூக கலை வாழ்க்கையினோடு ஒப்பீடு செய்வதன் மூலம் டெல்டா நாகரீகங்களுக்கான முதன்மையான மையமாக திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உருவாகலாம் என்ற கனவுத் திட்டத்தை முன் வைத்தேன். கம்ப ராமாயணத்தை முழுமையாக மனனம் செய்து வாய்மொழி மரபாக இன்றளவும் நீடிக்கச் செய்யும் பொம்மலாட்டக் கலைஞர்கள் மராத்திய மண்ணிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள்  என்ற செய்தி எதைச் சொல்கிறதென்றால் வெவ்வேறு மொழிகளும், கலைகளும், மனிதர்களும் கலப்பதன் மூலமாகவே பண்பாடு செழுமை பெறுகிறது பண்பாட்டுத் தூய்மையினால் ஆவது ஒன்றுமில்லை என்பதாகவும் என் பேச்சு அமைந்தது. 

திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் என்றொரு கிராமம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து கிளை பிரிகின்ற சாலையில் ஆரெழு கிலோமீட்டர் தூரத்தில் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயம் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் பயணம் செய்வது என்பது ஒரு சுகானுபவம். சுத்தமான கிராமங்கள். பச்சைப் பசேல் என்று வயல்வெளிகள். சிற்றோடைகள், கால்வாய்கள் என்று நீர் சலசலத்து ஓடும் காட்சிகளும் சப்தங்களும் நம் கூடவே வருகின்றன. காற்றில் சுகம் தரும் ஈரப்பதம் நிரம்பியிருக்கிறது. மூலவர் சரஸ்வதி வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கிறாள். இடது கைகளில் அமிர்த கலசமும் புத்தகமும், வலது கைகளில் அட்சர மாலையும் சின் முத்திரையும் தாங்கியிருக்கிறாள். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் மகாசரஸ்வதிக்கு மூன்று கண்கள். இரண்டாம் ராஜராஜ சோழன் ஒட்டக்கூத்தருக்கு   பரிசாக வழங்கிய கிராமத்தில் ஒட்டக்கூத்தரின் பேரனான ஓவாதகூத்தர் மகாசரஸ்வதி ஆலயத்தை கி.பி.1185 ஆம் ஆண்டில் கட்டினார் என்பது வரலாறு. 


மைசூர் ஓவியம் 


ஒட்டக்கூத்தர் பேரன் கட்டிய ஆலயத்தில் ஒட்டக்கூத்தரின் இலக்கிய எதிரியான கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதியால் துதிக்கலாமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. ‘விநோதரசமஞ்சரியில்’ ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் நடந்த சோழ அரசவை அரசியல் சண்டைகள் யார் கவிச்சக்கவர்த்தி என்ற போட்டி எல்லாம் கதைகளாக்கப்பட்டிருக்கின்றன. கம்பருடன் ஒப்பிடுகையில் ஓட்டக்கூத்தரின்  படைப்புகள் உப்புப் பெறாது. அவருடைய ‘மூவருலா’ மூன்று சோழ அரசர்களின் புகழ் பாடுவது; வராலாற்றுச் செய்திகளை அறியலாம். மற்றபடிக்கு பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. ‘தக்கையாகப் பரணியி’ல் விநாயகர் துதிக்கு பதிலாக வரும் பைரவர் துதி அபூர்வமானது. ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ அரும்பாக்கம்  மணவிற்கூத்தன் என்ற விக்கிரமச் சோழனின் படைத்தலைவனின் புகழ் பாடுவது. ‘எழுப்பெழுபது’, ‘ஈட்டியெழுபது’ ஆகியன செங்குந்தர் வரலாறுகளைப் பாடுகின்றன. ‘எழுப்பெழுபதில்’ பன்னிரெண்டு பாடல்களே கிடைதுள்ளன. செங்குந்தர் வரலாறுகளை முதலில் ஒட்டக்கூத்தர் பாட மறுத்ததாகவும் செங்குந்தர் தங்கள் தலைகளை அறுத்துப் போட்டதால் ஒட்டக்கூத்தர் பாடல்கள் பாடி அவர்களை உயிர் மீட்டு எழுப்பியதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன. ‘ஈட்டியெழுபதினை’த் தொடர்ந்து ‘களிப்பொருபது’, ‘செங்குந்தர் பிரபந்தத் திரட்டு’, ‘செங்குந்தர் துகில் விடு தூது’ ஆகிய பிற்கால நூல்கள் செங்குந்த மரபினைச் சொல்லும்போதே அந்தக்கால யாழ்ப்பாண- தமிழ்நாடு தமிழ் உறவுகளையும் சேர்த்துச் சொல்கின்றன. மந்திரசக்தியும், அரசவை கௌரவங்களையும் பெற்றிருந்த ஒட்டக்கூத்தர் தன் காலம் விஞ்சி நிற்காமல் போனது இலக்கியத்திற்கும் காலத்திற்கும் உள்ள விசித்திர உறவினை விளக்குகிறதென்றால்   பத்து நூற்றாண்டுகளுக்கு மேல்  ஆகிவிட்ட இலக்கியச் சண்டையில் விளைந்த  பலன் என்னவென்றால் கம்பரினால் ஓட்டக்கூத்தரின் பெயரும் விளங்குவதுதான். சரஸ்வதி என்ற பிரவாகம் கால ஓட்டத்தில் எவ்வெவெற்றை யார் யாரை எப்படியெல்லாம் இணைக்கும் என்று யாரே முன்கூட்டிச் சொல்ல முடியும்?

கூத்தனூர் சரஸ்வதி ஆலய தல புராணம் சகோதர சகோதரி மணம் புரிவதற்கான பண்பாட்டுத் தடையினைப் பேசுகிறது. சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது, கல்விக்கரசியான தன்னாலேயே  சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்திய லோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துவிட்டனர். இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்தபோது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு," என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.

பிறவாமையே முக்தி என்ற மதிப்பீடு இருக்கின்ற சமூகத்தில் பிறப்பு சாபமாக அறியப்படுவதாக புராணக்கதை சொல்லப்படுவதில் வியப்பேதுமில்லை. ஆனால் சாப விமோசனத்திற்கே சாத்தியமில்லாமல் போய் பிரம்மனும் சரஸ்வதியும் இணையவே முடியாமல் போவது அபூர்வமான கதையாகும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தல புராணமும் இறைவனும் இறைவியும் திருமணத்தால் இணையமுடியாமல் போக கன்னி பகவதியாகவே அருள் பாலிப்பது குமரி தெய்மாகும்; ஆனால் அங்கே இறைவனும் இறைவியும் சகோதர சகோதரியாய் பிறந்ததாகக் கதை இல்லை. கன்னியாகுமரி தல புராணத்தைப் போன்ற தடைப்பட்ட திருமணமாக இருந்தாலோ அல்லது திருமணமே நடக்க இயலாத உறவு இருந்தாலோ கன்னியாக அம்மன் அருள் பாலிப்பது புராணமாக்கப்பட்டு கன்னி சக்திகள் அபூர்வ கிரியா சக்தி கொண்டவைகளாக நம்பப்படுகின்றன. கூடுதலின் சாத்தியமே அற்ற கன்னிதான் காமரூபினி என வருணிக்கப்படுகிறாளோ? கூத்தனூர் சரஸ்வதி படைப்பின் எல்லையற்ற அறிவை இணைய இயலாதவளாக, ஆனால் அதற்கான கிரியையை சதா தூண்டிவிடக்கூடியவளாக  இருப்பவளை அருள்பாலிப்பவள் என்றில்லாமல் வேறு எப்படி விவரிப்பது?  அந்த சக்தியை எப்போதும் உள்ளூரக் கனன்றுகொண்டிருக்க வைப்பது எப்படி?

படைப்பூக்கத்தின், அறிவின்,  மரபான உள்க்கட்டமைப்பு என்ன என்பதினை அறிவதில்தான் சரஸ்வதி பிரேமை கடந்த ஓராண்டாக என்னைப் பீடித்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். வாக்கின் தேவி, சாரதா, கலைமகள், கலைவாணி என்ற பெயர்களெல்லாம் ரவி வர்மா ஓவியத்தில் தேவி அணிந்திருக்கும்  வெண் பட்டினை ஸ்பரிசிப்பது போன்ற உணர்வுகளை உருவாக்க கூத்தனூர் கோவில் வாசல் கடைகளிலோ புட்டா போட்ட வெள்ளை சுங்கடிச் சேலைகளைப் பார்த்தேன், பிரார்த்தனைக்காக அந்தச் சேலைகளை வாங்கி சாத்துகிறார்கள். தளையும் வெண்பட்டின் மென் புலன் வருடல் சட்டென்று நீங்கி சுங்கடிச் சேலையின் கஞ்சி மொடமொடப்பின் தீண்டலில் புலன் நவீனமாகியது. கோவில் வாசல் கடைத்தெரு முழுக்க நோட்டுப்புத்தகங்களையும் பேனாக்களையும் பென்சில்களையும் விற்கும் கடைகள் நிறைத்திருக்கின்றன. தகடுகளில் வரையப்பட்ட சரஸ்வதி எந்திரங்களும் விற்கப்படுகின்றன. கடைகளிலிருந்து கோவிலுக்குள் செல்வதும்  மீண்டும் கடைகளைப் பார்வையிடுவதுமாய் பல தடவைகள் சென்று வந்துகொண்டிருந்தேன். கூத்தனூர் மகாசரஸ்வதி கோவிலை விட்டு கிளம்ப மனம் வரவில்லை.

கூத்தனூரிலிருந்து ஶ்ரீவாஞ்சியம், திருக்கண்ணமங்கை, தண்டலை ஹரிஹர புத்தர ஐய்யனார் கோவில் ஆகிய கோவில்களை தரிசித்துவிட்டு சாயரட்சைக்கு சரியாய் திருவாரூர் கோவிலுக்கு வந்து சேர்ந்துவிட்டேன். இந்தக் கோவில்களைப் பற்றி தனித்தனிப் பதிவுகளாக எழுதுகிறேன்.

சொல்ல மறந்துவிட்டேனே சரஸ்வதி பிரேமை பீடித்த அன்றே நண்பர் ஓவியர் பாலாஜி ஶ்ரீனிவாசனிடம் தஞ்சாவூர் ஓவிய பாணியில் சரஸ்வதி படமொன்று கேட்டேன். போன வருட சரஸ்வதி பூஜைக்கே மனிதர் தரவேண்டியது. இந்தா அந்தா என்று நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. மனிதர் வரைந்துகொண்டே இருக்கிறார் எனக்கோ சரஸ்வதி பிரேமை உக்கிரமாகிக்கொண்டே போகிறது. 






Monday, March 4, 2013

சிந்தனையாளர் காயத்ரி ஸ்பிவக்கின் முக்கிய உரைகள்

சிந்தனையாளர் காயத்ரி ஸ்பிவக்கின் முக்கியமான உரைகளைப் பற்றி எழுதலாம் என்றிருந்தபோது அவருடைய உரைகள் யுடூபில் கிடைப்பதைக் கண்டுபிடித்தேன். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாமென்று இந்தப் பதிவை இடுகிறேன். காயத்ரி ஸ்பிவக் இந்திய ஆங்கிலத்தில் பேசுபவராக இருப்பதால் அவரை கவனிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் எந்த சிரமமும் இருக்காது என்று நம்புகிறேன்.

உரை 1 :

Gayatri Spivak: The Trajectory of the Subaltern in My Work




உரை 2:


Gayatri Spivak:  "Cosmopolitanisms" 








உரை 3:


Gayatri Spivak: "A Borderless World" 






உரை 4:

காயத்ரி ஸ்பிவக்கின் "Can subalterns speak?" கட்டுரையைப் பற்றிய உரை