Sunday, March 31, 2013

தல யாத்திரை: ஶ்ரீவாஞ்சியம்


ஶ்ரீவாஞ்சியம் கோவில் முன்மண்டபம்




கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திலிருந்து திருவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதசுவாமி கோவிலை நோக்கி பயணப்பட்டேன். பிரளயத்தின்போதும் அழியாத தலங்கள் காசியைப் போலவே காவேரிக்கரையில் ஆறு உண்டும் என்றும் அவற்றில் திருவாஞ்சியம் தலையாய தலம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். மீதி ஐந்து தலங்களென திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை என்று சொல்வார்கள். தலங்களை நம்பிக்கைகளும் புராணங்களும் ஒரு வலைப்பின்னலில் தொடர்புறுத்தி இணைப்பதன் மூலம் புனித நிலப்பகுதிகளை உருவாக்குகின்றன, தல யாத்திரைக்கான தடங்களை வரைகின்றன. ஒவ்வொரு கோவிலிலும் அதே சாமிக்கு வேறு வேறு பெயர்கள், வேறு வேறு பலன்கள், சிறு சிறு வேறுபாடுகளுடன் கூடிய கோவில் கட்டிடக் கலைகள் என வேறுபாடுகளினால் ஓவ்வொரு தலத்திற்கும் தனிச் சிறப்பும் புனிதத்துவமும்  பெறும் அதே சமயம் அவை அனைத்துமே ஒரே பொதுமையின் பல வெளிப்பாடுகள் மட்டுமே என்பதாக  நம் முன்னோர் இக் கோவில்களை கதைகளால் இணைத்திருக்கக்கூடும். 

திருவாஞ்சியம் என் மன வெளியில் அணுக்கமான தலம்; என் பெற்றோர் என்னை இங்கே குழந்தையாகத் தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றனர்.  அவர்கள் இத்தலத்தினை ஶ்ரீவாஞ்சியம் என்றே குறிப்பிட்டனர். அம்மா ஶ்ரீவாஞ்சியம் கோவில் மண்டபத்தைப் பற்றி கோவில் குளத்தினைப் பற்றி பல முறை நினைவு கூர்வாள். என் அப்பா வழியில்  பெரும்  கூட்டுக்குடும்பம் ஶ்ரீவாஞ்சியத்தில் வந்து ஒரு கோடை விடுமுறையை என் பெற்றோருடன் செலவழித்துள்ளனர். ஶ்ரீவாஞ்சியம் கதைகள் என அத்தைமார் சித்தப்பாமார் சொன்ன கதைகள் ஏராளம். நன்னிலத்துக்குப் போய் ரயிலில் இறங்கி அங்கேயிருந்து ஒற்றை மாட்டு வில் வண்டியில் ஶ்ரீவாஞ்சியம் போய் இறங்கியது, கோவில் குளமாகிய குப்த கங்கையில் குதித்து நீந்தி கும்மாளம் போட்டது, பித்தளை அண்டா அண்டாவாக புளியோதரையும் தயிர்சாதமும் கோவில் மடப்பள்ளியில் வாங்கி சாப்பிட்டது என கேட்ட கதைகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. ஶ்ரீவாஞ்சியத்தைப் போய் பார்க்கவேண்டும் என்ற தூண்டுதல் எனக்கு இருந்து கொண்டேயிருந்தாலும் இந்த 2013 மார்ச் மாதத்திற்கு முன் ஒரு தடவை கூட இங்கே வருவதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போனது ஆச்சரியம்தான். 

குடும்பகதைகளின் காரணமாகவே ஶ்ரீவாஞ்சியம் பற்றி நிறைய படித்து வைத்திருந்தேன். அம்பாள் மங்களாம்பிகைக்கு வேறொரு பெயராக வாழவந்த நாயகி என்ற பெயர் வழங்குகிறது, நாதன் சுகவாஞ்சி நாதர். பிற்கால சோழர் காலத்து கல்வெட்டுக்கள் இக்கோவிலில் படி எடுக்கப்பட்டிருக்கின்றன; கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். சோழர் கல்வெட்டில் ஊர் இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. சென்னை வேளச்சேரியிலிருக்கும் தண்டீஸ்வரர் கோவிலுக்கும் ஶ்ரீவாஞ்சியத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே எமன் வழிபட்ட தலங்கள். ஶ்ரீவாஞ்சியத்தில் எமனுக்கு தனியே சன்னிதியே இருக்கிறது. முதலில் நுழைந்துவுடன் எமதர்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டதுதான் சிவனை தரிசிக்க உள்ளே செல்கின்றனர், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலும் ஒன்பதாம் நூற்றாண்டு கோவில்தான் அங்கே எமன் தன் தண்டத்தை லிங்கமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். 

நான் கோவிலினுள் நுழைந்தபோது ஒரு கார் நிறைய கரை வேட்டிக்காரர்களும் வந்திறங்கி திபுதிபுவென்று எமன் சன்னதி நோக்கி சென்றனர். அவர்கள் வழிபாட்டினை முடித்துவிட்டுப்போகட்டும் என்று காத்திருந்தேன். வாசலில் கிட்டத்தட்ட இருபது பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மற்றபடி கோவில் வெறிச்சோடிக்கிடந்தது. ஶ்ரீவாஞ்சியம் கோவில் முன் மண்டபம் அழகானது. அம்மா அந்த மண்டபம்  அழகும் அமைதியும் நிறைந்தது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. பதினெட்டு பத்தொன்பது வயதில் அம்மா அப்பாவோடு மடியில் என்னை கைக்குழந்தையாக வைத்திருக்கும் புகைப்படம் வீட்டிலிருக்கிறது. அம்மா அதில் இரட்டைச்சடை போட்டு அந்தக் கால கஃப் கை வைத்த ரவிக்கை அணிந்திருப்பாள். இரட்டைச் சடை யுவதியாய் அம்மா இந்த ஶ்ரீவாஞ்சியம் கோவில் மண்டபத்தில் நடந்து சென்றிருப்பாள் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. நினைவு கூர்தல் ஒரு வகையில் புனிதமானது. நினைவுகளின் லலிதத்தில் ஒரு இடம் சுவீகரிக்கும் ரம்மியம் அபூர்வமானது; அது சாவினை வென்றுவிடுகிறது.

குப்த கங்கை குளக்கரையில் போய் அமர்ந்திருந்தேன். பச்சையான குளம். மீன்கள் குளக்கரை படிக்கட்டில் கூட்டம் கூட்டமாய் குழுமுகின்றன. சுந்தரர்  திருவாஞ்சிய பதிகத்தில் சள்ளை மீன்கள் துள்ளும் பொய்கைகள் நிறைந்த திருவாஞ்சியம் என்று பாடியிருப்பது ஞாபகம் வந்தது. கிளிக்கூட்டத்தின் கீச்சு சப்தங்கள் தவிர வேறு எந்த சப்தங்களும் இல்லை. இவ்வளவு கிளிகளை நான் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் கோவில் பிரகாரத்தில்தான் கூட்டமாக இதற்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.  கிளிக்கூட்டத்தின் மழலை சொக்கவைப்பதாய் இருந்தது. கூடவே சந்தனத்தின் சுகந்தமும். ஶ்ரீவாஞ்சியத்தின் தல விருட்சம் சந்தனம் என்று பின்னர் அறிந்தேன். கோவில் பிரகாரத்தில் நறுமணம் கமழும் சந்தன மரமிருக்கிறது. சந்தன மரக் காடொன்றில் கிளிக்கூட்டம் வான் ஏகி கலகலத்து காற்றில் எனக்கான எதிர்கால ஏடுகளை எடுத்துத் திரும்புவதான கற்பிதம் மனதில் வியாபித்தது. இன்னுமா பல ஏடுகள்? இன்னுமா பல சாத்தியங்கள்? 

கரைவேட்டிக்கூட்டம் யமதர்மராஜனின் சன்னிதியிலிருந்து உள்ளே போய்விட்டது. அர்ச்சனை முடிந்தவுடன் குருக்கள் இந்த சன்னிதியில் அர்ச்சனைத் தட்டினை பிரசாதமாய் திரும்பத் தருவதில்லை ஈஸ்வரன் சன்னிதியில் சாவு தப்பி புது வாழ்வு தொடங்குவதாக இங்கே ஐதீகம் என்றார்.  மண்டபம் தாண்டி ஈஸ்வர சன்னிதானம் நோக்கி நடந்தேன். கரை வேட்டிக்கூட்டத்திற்கும் மறுவாழ்வா என்று அவரிடம் கேட்கத் தோன்றவில்லை. 

சுகவாஞ்சிநாதர் சுயம்புலிங்கம். சன்னிதானத்தில் என்னையும் குருக்களையும் தவிர வேறு யாருமில்லை. அவர் நிதானமாக அர்ச்சனை செய்ய ஏகாந்தமாய் நினைவுகளும் எண்ணங்களுமற்ற பல நிமிடங்கள் சாத்தியமாயிற்று. வாழவந்தநாயகியின் சன்னிதானத்திற்கு வந்தபோதும் சுகவாஞ்சிநாதரின் லிங்கரூபம் கண் நிறைந்து இருந்தது. அம்பாள் சன்னிதியில் குருக்கள் கூட இல்லை. இங்கே இந்தக் கணம் என் வாழ்வு மரணம் தாண்டி புதிதாய் தொடங்குமெனில் அது ஆசுவாசம் நிறைந்ததாக இருக்கட்டும் என்று சப்தமாய் கூறி கீழே தரையில் சம்மணம் கூட்டி உட்கார்ந்தேன்.  சரவிளக்கில் சுடர்கள் ஆடாமல் அசையாமல் பொன் மணிகள் போல நின்றன. மங்களாம்பிகையின் எழில் கண்மூடினால் ரூபம் கொள்கிறதா என்று பார்ப்பதற்காகக் கண்ணை மூடினேன். 

தோளைத் தொட்டு யாரோ லேசாக அசைத்து எழுப்பியபோதுதான் நான் தூங்கியிருக்கிறேன் என்று தெரிந்தது. சில நிமிடங்களேயானாலும் நல்ல ஆழ்ந்த தூக்கம். குருக்கள் எதிரே நின்றிருந்தார். அம்பாளின் கிருபை உங்களுக்கு பரிபூரணமாய் இருக்கும் போலிருக்கிறதே என்றார். அவர் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தபோது நினைவுகளிலிருந்து விடுபட்ட புதிய ஆரம்பம் புலனாகுவதாகவே தோன்றியது.

“நீ அப்பாவா தப்பாவா?” என்றான் ஃபோனில் அழைத்த இளைய மகன் நான் காரில் ஏறி ஶ்ரீவாஞ்சியத்தை விட்டு கிளம்ப யத்தனிக்கையில். நான் சென்னையிலிருந்து திருவாரூர் கிளம்புவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னால் அவன் எனக்கு ஃபோன் செய்தபோது அந்த அழைப்பு தவறான எண் ஒன்றிற்குப் போய்விட்டிருக்கிறது. அதை எடுத்த நபர் மறுமுனையில் பேசுவது குழந்தை என்பதினால் அழைப்பைத் துண்டிக்காமல் அவன் பேசியதை கேட்டிருக்க வேண்டும். அவன் என்னிடம் என்னவெல்லாம் வாங்கி வரச் சொல்வானோ அதையெல்லாம் அந்த நபரிடம் சொல்லிவிட்டு ஃபோனை வைத்திருக்கிறான். நான் எதுவுமே வாங்காமல் வீடு திரும்பியதும் பிடி பிடியென்று பிடித்துக்கொண்டான். நான் அவன் தப்பான எண்ணுக்கு அழைத்ததால் எனக்கு அவன் கேட்டது என்ன என்றே தெரியாது என்று விளக்கினேன். அதனால்தான் இப்போது ஆரம்பிக்கும்போதே இப்படியொரு கேள்வி. “தப்பா இல்லை மக்கா அப்பாதான்” என்றேன்; அவன் உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கையில் கார் திருக்கண்ணமங்கை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. 

1 comment:

Venkatesan Chakaravarthy said...

திருவாஞ்சியம் பதிவு சூப்பர். அடுத்து திருக்கண்ணமங்கை பதிவை எதிர்பாக்கிறேன். உங்கள் சார்பாக ஒரு டிரைலர்.

திருநின்றவூர் பக்கமாக சென்ற திருமங்கை ஆழ்வார் இவ்வூர் பக்தவத்சல பெருமாளை பாடாமல் சென்று விடுகிறார். இதை அறிந்த பெருமாள், ஆழ்வாரை துரத்தி சென்று திருக்கடன்மல்லையில் மடக்குகிறார். ஆழ்வாரும் ஒரு பாசுரம் பாடி விடுகிறார்.

"நின்றவூர் நித்திலத்தை தொத்தார் சோலை காண்டவத்தை கனலெரிவாய் பெய்வித்தானை கண்டது நான் கடல்மல்லை தல சயனத்தே".

ஒரு பாசுரம் பெற்ற வெற்றிக் களிப்போடு ஊர் திரும்பிய பெருமாளை பாராட்டாமல் "ஒரு பாசுரம் தானா" என தாயார் உசுப்பேத்தி விடுகிறார். மறுபடியும் கிளம்பிய பெருமாள், இம்முறை திருக்கண்ணமங்கையில் பிடிக்கிறார். திருமங்கை மன்னனும் பெரிய மனது வைத்து மேலும் ஒரு பாசுரம் பாடுகிறார்.

"நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினை புனலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே".

இப்படியாக கஷ்டப்பட்டு இரண்டு பாசுரம் பெற்று தனது கோவிலை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக்கி விட்டார் பக்தவத்சலர்.