Saturday, May 18, 2013

நான் ஆட்டோகிராஃப் போட்ட முதல் சந்தர்ப்பம்


வளர வளர எல்லாம் கோப்பரமாகிவிடும் என்பதற்கு டெல்லி விமான நிலையம் ஒரு எடுத்துக்காட்டு. முந்தா நாள் ராஞ்சியிலிருந்து டெல்லி வந்து விமானம் மாறி சென்னை வர வேண்டும். வேறு வேறு ஏர்லைன்ஸ் என்பதினால்  பெட்டியை சேகரித்துக்கொண்டு மீண்டும் புதியதாய் உள் நுழைந்து பாதுகாப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். டெல்லி வந்திறங்கினால் ஏரோபிரிட்ஜ் வேலை செய்யவில்லை. விமானத்திலிருந்து பஸ் சௌகரியமாய் ஊர்கோலமாய் பதினைந்து நிமிடங்கள் பயணம் போய் நிலையத்தில் இறக்கிவிட்டது. பட்டை ஐந்தில் உங்கள் பெட்டி வரும் என்றார்கள் அப்புறம் பட்டை ஆறு அப்புறம் ஒன்று என்று ஒரு வழியாய் அங்கேயும் இங்கேயும் ஜனம் அலைந்து திரிந்து தங்கள் பெட்டிகளை எடுத்தது. எனக்கோ இன்னும் அரை மணி நேரம்தான் அடுத்த விமானத்திற்கு இருந்தது. பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அடுத்த டெர்மினலுக்கு பதினைந்து நிமிடம் பஸ் பயணம் என்றார்கள். அடுத்த டெர்மினலில் மூச்சு வாங்க போய் உள் நுழைய இருக்கையில் ‘சார் நீங்கள் தவறான பெட்டியை தூக்கிக்கொண்டு போய் விட்டீர்கள் என்று ஃபோனில் கூப்பிட்டு சொன்னார்கள். அப்போதுதான் பெட்டியைப் பார்த்தேன் என்னுடைய பெட்டி போலவே அச்சு அசலான இன்னொரு பெட்டி. ஃபோனின் மறு முனையில் ஒரு இளம்பெண் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருந்தார். அவரிடம் மெதுவாக என் நிலைமையை விளக்கினேன். அவர் என் டெர்மினலுக்கு வந்து என் பெட்டியை கொடுத்துவிட்டு அவர் பெட்டியை வாங்கிச் செல்ல முடியுமா என்று கேட்டேன். வேறு வழி, வந்து தொலைகிறேன் என்று கத்தினார் இளம் பெண். Fucking moron என்று மறு முனையில் அவர் வேறெங்கோ பார்த்து திட்டுவதை காது குளிர கேட்டேன். அந்த சந்தர்ப்பத்திலும் எங்களூர் மின்சார வாரியத்தை பெயர் சொல்லிக் கூப்பிட்டீர்களா மேடம் என்று கேட்கத் தவறவில்லை.

என் விமானத்தின் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் போய் பெட்டி மாறிவிட்ட கதையைச் சொல்லி எனக்கு விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி சீட்டு வாங்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றேன். எனக்காக பதினைந்து நிமிடம் அதிகம் கால அவகாசம் தருவதாகவும் அதற்கு மேல் என் பொறுப்பு என்று தயவு பண்ணினார்கள். 1D டெர்மினலில் லிஃப்ட் பகுதில் காத்திருப்பதாக இளம்பெண்ணிடம் சொன்னேன். அவர் நான் மேலே வந்து விட்டேன் மேலே வாருங்கள் என்றார். மேலே ஓடிப்போய் இந்த அற்றத்திலிருந்து அந்த அற்றம் வரை தேடியும் ஆளைக் காணவில்லை. அவர் விமான நிலையத்தின் வருகை பகுதிக்குப் போயிருக்கிறார். நானோ விமான நிலையத்தின் வெளியேற்ற நுழை வாயிலில் காத்து நின்றேன். அந்த இளம்பெண் நான் இப்போது லிஃப்ட் பகுதியின் கீழ் தளத்திற்கு வந்துவிட்டேன் கீழே வாருங்கள் என்றார். கீழே திரும்பி ஓடிப்போனேன். அங்கே அந்த பஞ்சாபி இளம்பெண் கடும் கோபத்துடன் நின்றிருந்தார். அவரிடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்டு அவர் பெட்டியை கொடுத்துவிட்டு என் பெட்டியை வாங்கினேன். பெட்டிகளைக் கைமாற்றும்போது அவர் சார் நீங்கள் முத்துக்குமாரசாமிதானே என்றார். ஆமாம் என்றேன் தயக்கமாக. என்னை நினைவில்லை, நான் உங்களை சண்டிகரில் பேட்டி எடுத்திருக்கிறேன் என்றார். ஆமாம் போன வருடம் SAARC எழுத்தாளார்கள் மாநாட்டுக்காக சண்டிகர் போனபோது அவர் என்னை சண்டிகர் ஆங்கில நாளிதழுக்காக பேட்டி எடுத்தது நினைவுக்கு வந்தது. பரவாயில்லையே ஞாபகம் வைத்திருக்கிறீர்களே என்றேன். உங்களை மறக்க முடியுமா சார் எப்படி சிரிக்க சிரிக்க பேட்டி கொடுத்தீர்கள். உங்களைப் போல இன்சொல்லும், அழகும், கருணை உள்ளமும் கொண்டவர்களைக் கண்டால் எனக்கு நகைச்சுவை உணர்வு பீறிட்டுவிடும் என்று நன்றி தெரிவித்தேன். என்னுடனேயே லிஃப்டில் ஏறி நுழைவாயில் வரை வந்து வழி அனுப்பி வைக்க கூடவே வந்தார். உங்கள் ஆங்கில நாவல் எப்போதுதான் வெளியாகும் என்றார். மூன்றாவது முறையாக எடிட் செய்துகொண்டிருக்கிறேன் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ என்று அலுத்துக்கொண்டேன். நுழைவாயிலில் கைகுலுக்கி விடைபெறும் தருணத்தில் இந்தப் பெட்டியில் உங்கள் ஆட்டோகிராஃப் போட்டுத்தாருங்கள் சார் பின்னால் நீங்கள் புக்கர் பரிசெல்லாம் வாங்கி பெரும் புகழ் பெறும்போது நான் இந்தப் பெட்டியை வைத்து ஒரு கட்டுரை எழுதுவேன் என்றார். அவர் கொடுத்த ஸ்கெட்ச் பேனாவால் என் முழுப்பெயரையும் கையொப்பமிட்டு கீழே மின்சார வாரியம் என்று மேற்கோள்களில் குறித்தேன்.

சென்னை விமானத்தை சரியான சமயத்தில் பிடித்துவிட்டேன். வீட்டுக்குள் நுழையும்போது வழக்கம்போல குறைந்த அழுத்த மின்சாரத்தினால் விசிறிகளெல்லாம் மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தன. வெக்கை அள்ளி வீசியது. Fucking moron  என்ற பதச்சேர்க்கையை தமிழாக்கம் செய்யத்தான் எத்தனை பெயர்கள்! ஒரு துணை அகராதியே போடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

Tuesday, May 7, 2013

இரவு மணி 11.59 | சிறுகதை








“எனக்குள்ளும் இந்த கதைக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் வகையினமோ அல்ல” என்ற அறிவிப்பு சம்பந்தனை வெகுவாக கவர்ந்தது. அவன்  ‘ஆக்டோபஸ்’ என்ற மெய்நிகர் இரவு விடுதியில்  ஒரு இணைய அவதாரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். ‘ஹாய்! உனக்கு இந்த வாயிலில் பேரதிர்ஷ்டமும் பெருந்துய்ப்பும் காத்திருக்கிறது’ என்று சொல்லி கூடத்தில் தூணுக்குப் பின் மறைந்திருந்த பச்சை வர்ண ஒளித் திரையின் முன் சம்பந்தனை கூட்டிக்கொண்டு வந்து விட்டு விட்டு ஊர்சுளா மேகரேகையாய் குமிழியிட்டு மறைந்து போனாள்.

சம்பந்தன் அன்றுதான் முதன் முறையாக இரண்டரை லட்ச ரூபாய் பந்தயத்தில் வென்றிருந்தான். கடந்த ஒன்றரை வருடமாக சூதாட்டத்தில் இழந்ததோ எட்டு  லட்சம். அவன் வென்று ஒரு நொடி கூட இருக்காது அவன் வென்ற பணத்தை செலவழிக்க ஆலோசனை சொல்ல எட்டு ஒளிமங்கைகள் தோன்றினார்கள். அந்த அஷ்ட மங்கைகளில் பட்டுப்புடவை கட்டி தொப்புளிலும் புருவத்திலும் வளையங்கள் அணிந்திருந்த ஊர்சுளா அவனை வெகுவாகக் கவர்ந்தாள். ஊர்சுளாவின் புருவ வளையத்தில் பல வர்ணக்கோடுகள் சுழலும்போதே சம்பந்தனின்  பார்வை தன் ஒளியுடலில் எங்கெல்லாம் மேய்கிறது என்பதை அனுமானிக்கின்றன என்ற விபரத்தை சம்பந்தன் அறிந்திருக்கவில்லை. ஊர்சுளாவின் தொப்புள் வளையத்தில் சம்பந்தனின் கண்கள் நிலைத்தபோது அவள் விரல்கள் சேலையினை மேலும் அபாயகரமாக கீழே இழுக்க அவளின் கவட்டை எலும்புகளின் மேல் இரு பக்கங்களிலும் இரு வைரக்கற்கள் பளிச்சிட்டன. அஷ்ட ஓளிமங்கைகளில் ஊர்சுளாவைத் தேர்ந்தெடுக்க சம்பந்தனுக்கு அதிக நேரம் ஆகவில்லை.  

உடலின் எந்த பாகத்தில்தான் நகை அணிவது என்று விவஸ்தை இல்லையா என்று தோன்றியபோதே அந்தக் கோணல் வசீகரமுடையது என்றும் சம்பந்தன் நினைத்துக்கொண்டான். ஊர்சுளா தன் இடுப்பு ஒசிய ஒசிய நடந்து வந்தாள். நன்றாக இழுத்துக்கட்டின வயலின் தந்தி போன்று புடவையுள் விறுவிறுத்து நின்ற அவள் உடலும் அவள் மார்புகளின் மேல் படர்ந்த மெல்லிய மேலாக்குக்கு அடியில் ரவிக்கை முடிச்சில் இருந்த சிவப்புக்கல் பத்மத்தின் கர்வமும் அவனை சொக்க வைத்தன. ஊர்சுளாவிடம் சம்பந்தன் கிறங்கிவிட்டதைக் கண்ட இதர சப்த கன்னிகள் ஐய்யோ என்று வாய் பொத்தி ஓவியப் பதுமைகள் போல கரைந்து, எல்லாம் அறிந்த சிரிப்பினை வெளிப்படுத்தியவர்களாய்  ஒளிக்கோடுகளாய் சிதறி, பச்சைப்புள்ளிகளாய் குறுகி, திரையின் எல்லையின்மையில் ஓடி மறைந்தனர். 

வா என் பின்னால் என்று சைகை காட்டிவிட்டு ஊர்சுளா நடக்கத் தொடங்கினாள். அவள் புடவையை கீழிழுத்திருந்ததால் வெளித்தெரிந்த பிருஷ்ட வளைவில் ஆகாய நீல வர்ணத்தில் ஆபரணம் ஒன்று மின்னியது; நீலத்தின் நடுவில் இரவு விடுதிக் கூடத்து விளக்குகளின் பொன் ரேகைகள் ஊடுருவி, விட்டு விட்டு ஒளிர்ந்து, அந்த வளைவின் வாத்சல்யத்தை அதிகப்படுத்தின.  பின் தொடரும் சம்பந்தனைத் திரும்பி ஊர்சுளா பார்த்தபோது அவள் புருவ வளையங்கள் அவனை மேலும் கணித்தன. ஊர்சுளா தன் நாக்கை நீட்டி, கண் சிமிட்டினாள். நாக்கின் நுனியில் ஒரு சிறு முத்து வளையமும், சிமிட்டும்போது மூடிய கண் இமையின் மேல் மீன் ஒன்றும் தோன்றி மறைந்தன. சம்பந்தனின் மனம் ஒரு துள்ளு துள்ளி அடங்கியது. ஊர்சுளாவின் பின்பாகம் அவன் மனத்தின் அடியாழ ஆசைக்கேற்ப மேலும் சிறிது உப்பி அந்த ஆகாய நீல ஆபரணத்தின் அசைவின் போதையை அதிகமாக்கியிருந்தது.

மெய்நிகர் இரவு விடுதி சூதாட்டத்தில் சம்பந்தன் பணம் ஜெயித்தது, ஒளிமங்கைகளில் ஊர்சுளாவிடம் மயங்கியது, அவள் அவனை கடவுசொல்லால் திறக்கும் வாயிலருகே நிறுத்திவிட்டு மறைந்தது எல்லாவற்றுக்குமே மொத்தமாக ஆறு நிமிடம் கூட ஆகியிருக்காது. ஆனால் அதற்குள் கணிணித் திரைகள் அவனைப் பற்றிய அனைத்து விபரங்களையும் சேகரித்துவிட்டன.  
------------------------------

‘ஆக்டோபஸ்’ தகவல் அறிக்கை

பெயர்: சம்பந்தன், முழுப்பெயர்: வெ.திருஞானசம்பந்தன், மெய்நிகர் அவதாரப் பெயர்: சூச்சா, வயது: 27, அசையாச் சொத்து மதிப்பு : 200 கோடி ரூபாய், வங்கியிருப்பு: 88 லட்ச ரூபாய், வங்கி கணக்கு  எண்: 5527643866, கடன் அட்டை எண்: 7766921903464 கடைசியாக கடன் அட்டை பயன்படுத்தி வாங்கிய ஐந்து பொருள்கள்: பால்வெனி ஸ்காட்ச் விஸ்கி, அப்பல்லோ மருந்துக்கடையில் மன அழுத்தம் குறைக்கும் மாத்திரைகள், கலர் பிளஸ் கடையில் ஒரு லினன் சட்டை, நியு ரெசிடென்ஸி ஹோட்டலில் டின்னர், இணைய தள கடையிலிருந்து ‘பாம்பின் விஷம்’. தொழில்: விபரம் சேகரிக்கப்படவில்லை. நோய்கள்: அதீத தனிமை, இணைய அடிமைத்தனம் Internet Addiction Disorder. சமூக வலைத்தளங்களில் பங்கேற்பு: அதிகமில்லை; ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் பிளஸ், லின்க்டின் வலைத்தளங்களில் கணக்கு உள்ளது. ‘ஆக்டோபஸ்’ அங்கத்தினர் விபரம்: இரண்டு ஆண்டுகளாக அங்கத்தினர். பழியாய் இரவு விடுதியிலேயே கிடக்கிறான்.  உடலில் துளையிட்டு அணியப்படும் நகைகள், பச்சை குத்துதல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். நடத்தை: introverted and impulsive. சூதாடித் தோற்றது எட்டு லட்ச ரூபாய். வென்றது இரண்டரை லட்ச ரூபாய். ஆக்டோபஸுக்கு நிகர லாபம்: ஐந்தரை லட்ச ரூபாய். Emotional Intelligence: வெகு குறைவு. காதல் வயப்படக்கூடியன். ஊர்சுளா பிம்பத்திற்கு படியக்கூடிய சாத்தியப்பாடு: 100%

-----------------------------------------

ஆக்டோபஸ் மெய்நிகர் இரவு விடுதி FAQ

ஆக்டோபஸ் மெய்நிகர் இரவு விடுதி ஒரு கலை நிறுவனம்: உங்களால் அதிகப்படியும் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆக்டோபஸ் ஒரு ரகசிய சங்கமா?

ஆமாம். ஆக்டோபஸின் வெளிமுகப்பினை அனைவரும் அடையலாம் என்றாலும் அதன் உள்க்கதவுகள் வெற்றி பெற்றவர்களுக்கே திறக்கும். தோல்வியுற்றவர்களை ஆக்டோபஸ் மன்னிப்பதில்லை; மென்று சக்கையாக வெளித் துப்பிவிடும்.  வெற்றிக்கு பரிசுகளும் அங்கீகாரமும் போலவே தோல்விக்கு தண்டனைகளும் நிராகரிப்பும் உண்டு.

ஆக்டோபஸ் ரகசிய சங்க உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மெய்யுலகில் அறியலாமா?

ஆக்டோபஸ் ரகசிய சங்க உறுப்பினர்கள் தங்களை மெய்யுலகில் அறிந்துகொள்வது அவரவர் அடையும் வெற்றிகளின் உச்சங்களைப் பொறுத்தது. மெய்யுலகின் வெற்றிப்பரிசுகளில் ஆக்டோபஸ் சங்க உறுப்பினர்களை நேரடியாக அறிவதும் ஒன்று. 

ஆக்டோபஸின் நோக்கங்கள் என்ன?

செக்ஸ், மதம், உலகம் முழுவதையும் தன் ஆளுகையில் வைத்திருப்பது- மூன்றையும் கூட்டினால் கிடைக்கும் இன்பத்தினை விட அதிகமான இன்பத்தினை உறுப்பினர்களுக்கு வழங்குவது ஆக்டோபஸின் தலையாய நோக்கமாகும். சூதாட்டத்தை கலையாக வளர்த்தெடுப்பது, கட்டற்ற கற்பனையின் சுதந்திரத்தினை உறுப்பினர்களை அனுபவிக்க செய்தல் ஆகியவை துணை நோக்கங்கள்.

ஆக்டோபஸின் நிறுவன அமைப்பு எத்தகையது?

ஆக்டோபஸ் டிரில்லியன் ரூபாய் கம்பெனி. உச்ச பட்ச இன்பத்தினை அனுபவித்த கலைஞர்களால் நடத்தப்படுவது. ஆக்டோபஸ் என்ற கடல்வாழ் உயிரினத்தின் உடல்கூறுகளுக்கு நிகரான நிறுவன அமைப்பினை உடையது. ஆக்டோபஸிற்கு, உதாரணமாக, பல இதயங்கள். அது போலவே கம்பெனிக்கும் பல நிர்வாக மையங்கள். மைய இதய நிர்வாக அமைப்பு கொடுக்கும் கட்டளைகளை  துணை இதய நிர்வாக அமைப்புகள் நிறைவேற்றுகின்றனவா என்ற அறிக்கையைப் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை. ஆக்டோபஸ் வகைகளில் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று பிற கடல் வாழ் உயிரினங்களைப் போல தன் உருவத்தை போன்மை செய்ய வல்லது; அது எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப கடல்பாம்பாக, சிங்கமீனாக உருவெடுக்குமோ அது போல ஆக்டோபஸ் பன்னாட்டு நிறுவனமாக, அரசு நிறுவனமாக, தொண்டு நிறுவனமாக, மத நிறுவனமாக, அரசியல், அறவியல் அல்லது அறிவியல் செயல்பாட்டு நிறுவனமாக என சூழலுக்கு ஏற்ப நிறுவன வடிவங்களை போன்மை செய்ய வல்லது. ஆக்டோபஸிற்கு பல கால்கள், தோலில் பல நிறங்கள், பல ஒளிர்வுகள்.

உறுப்பினர்களின் அந்தரங்க விபரங்களை ஆக்டோபஸ் பாதுகாப்பாக வைத்திருக்குமா?

நிச்சயமாக வைத்திருக்காது ஏனெனில் ஆக்டோபஸ் தன் உறுப்பினர்களின் அந்தரங்க விபரங்களை சேகரிப்பதேயில்லை. 

ஆக்டோபஸ் செக்ஸ் உள்ளடக்கங்களை வெளிப்படையாகத் தருவது பற்றி…

ஆக்டோபஸ் இன்பத் தொழிற்சாலையின் எதிர்காலம். செக்ஸிற்கு கற்பனையும் கலையும் அவசியம். அம்மாஞ்சிகள், மடிசஞ்சிகள், தொடைநடுங்கிகள், போதகர்கள் ஆகியோருக்கு ஆக்டோபஸ் ஒரு சீர்திருத்தப்பள்ளி.

‘ஆக்டோபஸின் தீய விழுதுக்கரங்கள்’ என்ற உருவகம்  பற்றி……

‘ஆக்டோபஸின் தீய விழுதுக்கரங்கள்’ என்ற உருவகம் புழக்கத்தினால் நைந்து துவண்டு போன உருவகம். அது இப்போதைய ஆக்டோபஸின் சமகாலத்திய செயல்பாடுகளுக்குப் பொருந்தாது. ஆக்டோபஸினை அறிய புதிய கற்பனையும் அதி சுதந்திரமும் வேண்டும். உங்கள் காதலனுக்கு அல்லது காதலிக்கு எட்டு கைகள் இருந்தால் கலவி இன்பம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இன்பமும் ஆசையுமே முதலாளித்துவ ஆக்டோபஸின் திறவுகோல்கள். 2010 உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டுக்களின் போது பால் என்ற சாதரண ஆக்டோபஸ் வரப்போகும் போட்டியில் எந்த அணி ஜெயிக்குமோ அந்த அணியின் நாட்டுக்கொடியை நோக்கி நகர்ந்து வெற்றிபெறபோவது யார் என்று முன்கூட்டியே குறி சொல்லி உலகப்புகழ் பெற்றது நினைவிருக்கட்டும். அந்த ஆண்டு பால் என்கிற ஆக்டோபஸ் குறிசொல்லிக்கு அரசு பாதுகாப்பு தரப்போவதாக ஸ்பானிஷ் பிரதமர் அறிவித்தார். இரானின் அதிபர் அதை மேற்குலகச் சீரழிவின் குறியீடு என்றார். உங்கள் தெரிவு உங்கள் அதிர்ஷ்டம்.

ஆக்டோபஸின் மதிக்கத் தகுந்த பண்பு?

கலவிக்குப் பின் ஆண் ஆக்டோபஸ் இறந்துவிடுகிறது; முட்டையிட்டபின் பெண் ஆக்டோபஸ் இறந்துவிடுகிறது.

இன்றுவரை ஆக்டோபஸ் கட்டிக்காக்கும் ரகசியம்?

இரவு மணி 11.59.

---------------------------------------------------

சூச்சாவை அப்படியே ஊர்சுளா காட்டிய பச்சை வர்ண ஒளித்திரையின் முன் விட்டுவிட்டு திரும்ப யத்தனிக்கையில்தான் சம்பந்தன் அந்தத் திரையின் மேல் எழுதப்பட்டிருந்த ‘மூன்றாவது கண்’ என்ற பெயரைப் படித்தான். மன அழுத்த எதிர்ப்பு சக்தி மாத்திரை ஒன்றை எடுத்து விழுங்கிவிட்டு தண்ணீருக்கு பதிலாய் ஸ்காட்ச் ஊற்றி இரண்டு மிடறு முழுங்கினான். என் அவதாரமாகிய சூச்சா வென்ற இரண்டரை லட்சத்தையும் இழந்தாலும் சம்பந்தனாகிய எனக்கு இனி பாதிக்காது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். ஸ்காட்ச் சம்பந்தனின் தொண்டையில் இறங்குகையில் சூச்சா தள்ளாடுவதை ஆச்சரியத்துடன் கவனித்தான். அவர்கள் என்னைக் கண்காணிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டான். மீண்டும் மீண்டும் அவர்கள் என்னை கண்காணிக்கிறார்கள் என்று சொல்லி சூச்சாவிடம் அது என்ன மாறுதலை உண்டாக்குகிறது என்று பார்த்தான். ஸ்காட்சின் பாதிப்பு நிகழ்த்திய எதிர்வினை போல கண்காணிக்கிறார்கள் என்ற செய்திக்கு எந்த எதிர்வினையும் இல்லை. ‘பாம்பின் விஷ’த்தினை உறையிலிருந்து எடுத்து குறுந்தகடு போடும் பெட்டியில் இருத்திவிட்டு ஆக்டோபஸில் இசை என் கணிணியிலிருந்து என்ற பொத்தானை அழுத்தி தெரிவு செய்தான். ஃப்ரெஞ்சு ஜாஸ் இசையில் ஊகூங் ஊகூங் ஊகூங் என்று விசித்திர கருவி ஒலியெழுப்ப தொடர்ந்து பெரிய அண்டாவின் அடியிலிருந்து வெளியேறும் நீர்க்குமிழிகள் என சப்தங்கள் ஒலித்தன.

ஆக்டோபஸின் அரங்கு ஜாஸ் இசைக்கேற்ப அதிர்ந்தது. மூன்றாம் கண்ணின் திரையிலிருந்து நீர்க்குமிழிகள் வெளிப்பட்டு இசைக்கேற்ப ஐய்யோடா என்று வெளிப்பட்டு ஓடின. நீர்க்குமிழிகளுக்குள் ஊர்சுளா மாட்டிக்கொண்டு ஓடி ஓடி மறைந்தாள். ஒரு குமிழி சூச்சாவின் நெற்றியில் மோதி உடைய இரிராரோவ் என்று பெண்ணின் குரலொன்று பலமைல்களுக்கு அப்பால் ஒலித்தது.

சம்பந்தன் அம்மாவின் கால்களில் கைக்குழந்தையாய் குப்புறக்கிடந்தான். எண்ணெய்ப் பிசுக்கு போக அம்மா அவனைத் துடைத்துகொண்டிருந்தாள். குழந்தை பொக்கை வாயைக் காட்டி கன்னங்கள்  குழிய சிரித்துக்கொண்டிருந்தது.  திடீரென்று வாணம் ஒன்று மேல் நோக்கி சீறிச்சென்று ஆகாயத்தில்  வெடிக்க அதிலிருந்து நாலைந்து வகை நிறப் பொறிகள் மலர்களாய் மிதந்து, குடை கவிழ்ந்து, அவிந்தன. 

கணிணித் திரையை சம்பந்தன் இரண்டாய் பிரித்து வைத்துக்கொண்டான். வலது பகுதியில் ஆக்டோபஸ் ஜன்னலை நிறுத்தினான். இன்னொரு உலவியை இடது பகுதியில் திறந்து அதில் கூகுளில் ‘பாம்பும் பல்லியும் அல்லாத ஊர்வன’ என்று தேடினான். மூன்றாம் கண் ‘ஏதோ தவறு ஏதோ தவறு’ என்று அலறல் செய்தியை வெளியிட்டது. சூச்சா வெளியே தூக்கி வீசப்பட்டான். இசை நிறுத்தப்பட்டது. ஆக்டோபஸ் அறிக்கை சம்பந்தனின் வெற்றிப் பணத்தில் 25000 ரூபாய் விளையாட்டு விதிகளை மீறியதற்கு அபராதமாய் விதிக்கப்பட்டிருப்பதாய் தெரிவித்தது. 

“ நான் என்ன விதியை மீறினேன்?’

“மூன்றாம் கண் கடவுச்சொல்லை அறிய கூகுளில் ‘பாம்பும் பல்லியும் அல்லாத ஊர்வன என்று தேடினாய்”

அவர்கள் கண்காணிக்கவில்லை என்று நினைத்தோமே என்று சம்பந்தன் தன்னைத் தானே நொந்துகொண்டான். ஆக்டோபஸ் Foul Card ஒன்றினைத் தூக்கிக் காண்பித்தது.

“ஆக்டோபஸிற்கு விளையாடுதலின் புனிதம் முக்கியமானது. ஆக்டோபஸின் மூளை பாலூட்டிகளின் மூளையைவிட அதிக சக்தியும் திறனும் வாய்ந்தது. மெய்நிகர் உலக யதார்த்தத்தின் பிதாமகர்களுள் ஒருவரான ஜரோன் லானியர் ஆக்டோபஸ்கள் விளையாட, மனிதர்கள் செல்லப்பிராணிகள் என்று ஆக்டோபஸ்களின் மூளைத் திறனை வர்ணித்திருக்கிறார்”

“சரி. மூன்றாம் கண்ணின் திரை வாயிலுக்கு மீண்டும் செல்ல நான் என்ன செய்யவேண்டும்?”

“அதற்கு ரூபாய் 25,000 கட்டணம்”

“சரி, எனக்கு ஊர்சுளாவின் மெய்யுலகத் தொடர்பு வேண்டும்”

“அதற்கு ஆக்டோபஸிற்கு கட்டணம் ரூபாய் 50,000 ஊர்சுளாவிற்கு ரூபாய் 50,000”

“சரி. ஆனால் நான் இப்போது விளையாட்டைத் தொடர விரும்பவில்லை”

“அது உங்கள் இஷ்டம். மீண்டும் உறுதிப்படுத்துங்கள். நீங்கள் வென்ற தொகை இரண்டரை லட்சம் அதில் அபராதம் 25000, மீண்டும் மூன்றாம் கண் திரைக்குச் செல்ல அனுமதிக் கட்டணம் 25,000, ஊர்சுளாவின் மெய்யுலக தொடர்பு விபரத்திற்கு ஆக்டோபஸிற்கு 50,000, ஊர்சுளாவுக்கு 50,000. போக உங்களிடம் விளையாட தற்போது உள்ள தொகை ஒரு லட்சம். சரியா?”

“சரிதான். உறுதிப்படுத்துகிறேன்.”

“ஒரு லட்சத்திற்கு மேலும் பணம் கட்ட விரும்புகிறீர்களா?”

“இப்போது இல்லை. இது தீர்ந்தால் பார்க்கலாம்”

“உங்களுக்கு பேரதிர்ஷ்டமும் பெருந்துய்ப்பும் வாய்க்க வாழ்த்துகள். ஆக்டோபஸைப் பயன்படுத்தியதற்கு நன்றி”

கணிணித் திரை வெறுமையானது.

------------------------

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடும் மையத்தில் சம்பந்தன் ஊர்சுளாவுக்காகக் காத்திருந்தான். அதிக இரைச்சலும் கூட்டமும் இருக்கும் இடத்தில் தன்னைக் கண்காணிப்பவர்கள் குறைவாக இருப்பார்கள் என்பது அவன் எண்ணம். ஃபேப் இண்டியா பருத்தி குர்தாவும் பாட்டியாலா பைஜாமாவும் அணிந்து நகைகள் எதுவும் இல்லாமல் நவீன நடனக்கலைஞர் போல மெதுவாக நடந்து வந்த ஊர்சுளாவுக்கு மஞ்சள் லினன் சட்டை அணிந்து ஓரமாக குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்த சம்பந்தனை அடையாளம் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகவில்லை. எதுவும் பேசாமல் ஊர்சுளா கையிலிருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து காகிதத்தைக் கிழித்து அதில் “உங்கள் ஃபோன், ஐபேட் வேறு ஏதேனும் கருவிகள் இருந்தால் அனைத்தையும் மின்சாரத்தைத் துண்டித்து அணைத்துவிடவும்” என்று எழுதிக்காண்பித்தாள். சம்பந்தன் தன்னுடைய ஃபோனையும் ஐபேடினையும் அணைத்தான்.

“ஹாய் சூச்சா!”

“நான் சம்பந்தன். ஹாய் ஊர்சுளா!”
“நான் அம்முலு. நீங்கள் வியாபார நிமித்தம் பார்க்கவேண்டும் என்று சொன்னதினால்தான் உடனே வந்தேன். என்ன வியாபாரம்?”

மாநிறத்தில் எந்த அலங்காரமும் நகையும் இல்லாமல் அம்முலு பளிச்சென்று இருந்தாள். 

“நீங்கள் ஆக்டோபஸ் ஊழியரா?”

அம்முலு சில விநாடிகள் யோசித்தாள். 

“உங்கள் ப்ரொஃபைலை முழுமையாக ஆய்வு செய்துவிட்டதால் தைரியமாகச் சொல்கிறேன். ஆமாம் நான் ஆக்டோபஸ் ஊழியர்தான்”

“ம்ஹ்ம், நான் அப்படித்தான் யூகித்திருந்தேன். நான் எட்டு லட்சம் இழந்துவிட்டேன். ஜெயித்த இரண்டரை லட்சத்தில் மீண்டும் ஒன்றரை போய்விட்டது. விட்டதை பிடிக்க வேண்டும். மேலும் கொஞ்சம் ஜெயிக்கவேண்டும். அப்புறம் ஆக்டோபஸை விட்டு ஓடியே போய்விடுவேன். இதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்”

“இங்கே ஒரே இரைச்சலாக இருக்கிறது. பேசிக்கொண்டே நடக்கலாம்”

அம்முலுவுக்கு சம்பந்தன் தன்னை வேறு காம நோக்கங்களுக்காக அழைக்கவில்லை என்பது ஆறுதலாகவும் ஆச்சரியமாகவும் ஏன் ஏமாற்றமாகவும் கூட இருந்தது. அவன் தன் மேல் நூறு சதவீதம் காதல் வயப்படக்கூடிய சாத்தியம் உள்ளவன் என்ற ஆக்டோபஸ் ஆய்வறிக்கை அவளுடைய உள் மனதில் குறுகுறுப்பாக இருந்தது. அவர்கள் ஃபீனீக்ஸ் மார்க்கெட் சிட்டியின் உணவுக்கூடத்தில் ஒதுக்குப்புறமான பால்கனி மேஜையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தார்கள். வெளியில் கோடையின் வெப்பம் இரவு ஏழு மணிக்கும் கடுமையாக இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் வியாபாரத்தையே பேசிக்கொண்டிருந்தது அவர்களை சீக்கிரமே நல்ல நண்பர்களாக மாற்றியது. ஆக்டோபஸில் எழுபது லட்சத்தை எப்படி சூதாடி வெல்வது என்றும் அதை எப்படி ஆளுக்குப் பாதியாக ரகசியமாகப் பிரித்துக்கொள்வது என்றும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அம்முலு தான் இணையத் தொடர்பில்லாமல் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்க இயலாது என்றும், இணையத் தொடர்பில் வந்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் சொல்லிவிட்டு சீக்கிரமே பிரிந்து போய்விட்டாள். இரண்டாம் சந்திப்பில் அம்முலு சம்பந்தனை ஆக்டோபஸ் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யச் சொன்னாள். 

-----------------------------

“மரணத்திற்கு நிகரான அனுபவங்களே உச்ச பட்ச துய்ப்பு அனுபவங்கள்” என்று சம்பந்தன் ஆக்டோபஸ் பற்றிய ஆராய்ச்சி குறிப்பில் எழுதினான். அவன் அம்முலுவின் வருகைக்காக வேளச்சேரி ‘காஃபி டே’யில் காத்திருந்தான். இன்று பதினோரு மணிக்குள் மூன்றாம் கண் திரை வாயிலுக்கு வராவிட்டால் அவன் கட்டணம் காலாவதி ஆகிவிடும் என்று அவனுக்கு அன்று காலை செய்தி வந்திருந்தது. அதன் நிமித்தமாகவே அம்முலுவை அவன் சந்திக்க விரும்பினான். வீட்டில் இருந்த கணிணி, மற்ற கருவிகள் எல்லாவற்றையும் இணைய தொடர்பில் வைத்துவிட்டு வந்திருந்தான். ஆக்டோபஸ் அவன் இணையத்தில் உலவிக்கொண்டிருப்பதாகவே கண்காணித்துக்கொண்டிருக்கும் என்று அவன் நினைத்துக்கொண்டான். அம்முலு அவனுக்கு ஆக்டோபஸின் கண்காணிப்பினை திசை திருப்புவதற்கு பல துப்புகள் கொடுத்திருந்தாள். இணையத் தொடர்புள்ள கருவிகளை வெளியே எடுத்து வராமலிருப்பது, தான் உண்மையில் பயன்படுத்தும் பொருட்களை கடன் அட்டையில் வாங்காமல் பேப்பர் பணத்தைக் கொடுத்து வாங்குவது, தன் அந்தரங்க விவகாரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருப்பது, தவறான தகவல்களை வெளியிட்டு தன்னைப் பற்றி யதார்த்தத்திற்கு சம்பந்தமில்லாத பிம்பத்தைக் கட்டமைப்பது என்று அம்முலு கொடுத்த அத்தனை குறிப்புகளையும் செயல்படுத்தியிருந்தான். இருந்தாலும் அம்முலுவை சம்பந்தனும், சம்பந்தனை அம்முலுவும் முழுமையாக நம்பினார்கள் என்று சொல்ல முடியாது. 

அம்முலு வந்ததும் வராததுமாக சம்பந்தன் “மூன்றான் கண்ணுக்கு பாஸ்வேர்ட் என்ன?” என்று கேட்டான். அம்முலு புதியதாய் ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தாள். தலமுடியை பாந்தமாய் உயர பூங்கொண்டை போட்டு கட்டியிருந்தாள். அவளைப் பார்ப்பவர்கள் எவருமே அவள் ஒரு சூதாட்டக்கம்பெனியின் போன்மையுரு ஊழியர் என்று சொல்லவே முடியாது என்று சம்பந்தன் தனக்குள் நினைத்துக்கொண்டான். கண்ணாடி வழியே அவனைத் தீர்க்கமாகப் பார்த்த அம்முலு “Tuatara” என்றாள்.

“வாட்?”

“ Tuatara என்பது நியுசிலாந்தில் வாழும் பல்லி போன்ற உயிரினம்”

“ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன். ஆக்டோபஸ் ஒரு கேளிக்கை சூதாட்ட கம்பெனியா இல்லை ஒரு மிருகக்காட்சி சாலையா?

“மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்போதெல்லாம்? டுவாடாராவுக்கு மூன்றாவது கண் உண்டு. அதனால் மூன்றாம் கண் கொண்டு ஓளியையும் நிழலையும் கண்டறிய முடியும். மூன்றாம் கண்ணுக்குள் நுழைந்த பின் உன்னாலும் ஒளியெது, நிழலெது என்று உன்னால் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் நீ விளையாட்டில் ஜெயித்துவிடலாம்.”

“இவ்வளவுதானா?”

“டுவாடாராவுக்கு நிழலும் ஒளியும் என்றால் மனிதர்களுக்கு நினைவும் நிகழ் காலமும்” 

“வாவ். அது நல்ல விளையாட்டுத்தான். ஆனால் ‘இரவு மணி 11.59’ என்பதன் ரகசியம் என்ன?”

அம்முலு ஐஸ் தேநீரை சத்தமாக உறிஞ்சினாள். “ நினைவும் நிகழ்காலமும் தொடர்ந்து விளையாடும்போது மனித மனத்திற்கு மரணத்திற்கு நிகரான இன்ப அனுபவம் கிடைக்கிறது. அந்தத் தருணத்தை ஆக்டோபஸ் ‘இரவு மணி 11.59’ என்று அழைக்கிறது.”

சம்பந்தன் ஒரு சில விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தான். 

“ஆக்டோபஸ் சூதாட்டத்தில் இறந்து போனவர்களும் உண்டா?”

“அதிலென்ன சந்தேகம்? ஆனால் அவர்கள் அதீத இன்பத்தின் உச்சம் தாங்க முடியாமல் இறந்து போகிறவர்கள். கலவியில் ஈடுபடும் ஆக்டோபஸ் போல.”

சம்பந்தனுக்கு தான் கைக்குழந்தையாய் அம்மா முழங்காலில் கிடந்தது போன தடவை ஆக்டோபஸ் விளையாட்டின் போது காட்சியாய் தோன்றியது நினைவுக்கு வந்தது. 

“அது சரி போட்டியில் ஜெயித்த பிறகு என் பங்கு பணத்தை எப்படி கொடுப்பாய்?”

சம்பந்தன் தான் கொண்டுவந்திருந்த பிராமிசரி நோட்டு பத்திரங்களை அவளிடம் காட்டினான். 
“விளையாட்டு முடிந்த பின் நான் உயிரோடு இருந்தால் இவை செல்லுபடியாகும்”

அம்முலுவின் முகத்தில் இளநகை அரும்பியது. “எவ்வளவு பந்தயம் கட்டப் போகிறாய்?

“எண்பது லட்சம்”

‘உன்னுடைய வங்கியிருப்பு மொத்தத்தையுமா?”

“ஹா ஆக்டோபஸ் அந்தரங்க விபரங்களை சேகரிப்பதில்லை என்று நினைத்தேனே!”

“பதினோரு மணிக்கு இன்னும் இரண்டு மணி நேரங்களே இருக்கிறது”

“கடைசி ஆலோசனை என்ன?

“ நீ வேறு உன் போன்மையுரு சூச்சா வேறு என்று எப்போதும் நினைவில் வை”

அம்முலு இடுப்பு ஒசிய ஒசிய நடந்து செல்வதை சம்பந்தன் பார்த்திருந்தான்.

-------------------------

“ நல்வரவு சூச்சா. இதோ நீங்கள் விரும்பிய மூன்றாவது கண்ணின் திரை வாயில். உள்ளே நுழைந்து விளையாடுவது உங்கள் சாமர்த்தியம்”

“நல்வரவு சூச்சா. எனக்குள்ளும் இந்தக் கதைவிளையாட்டுக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் இனமோ அல்ல.”

சம்பந்தன் “Tuatara” என்று தட்டச்சு செய்தான். மெய்நிகர் இரவு விடுதி ஆக்டோபஸ் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. மூன்றாம் கண்ணின் இமை வாசலாய் சட்டென்று திறந்து புது உலகம் காட்டத் தயாரானது. யாரோ இரவு மணி பதினொன்று என்று சொன்னார்கள்.

“எவ்வளவு பந்தயம் கட்டப் போகிறீர்கள்?”

“விளையாட்டு என்ன?”

“ உங்களுக்குப் பிடித்த போன்மையுருவின் உடல் ஆபரணங்களை அகற்றி காப்பாற்றவேண்டும்”

“ஃபூ இவ்வளவுதானா. பந்தயம் எண்பது லட்ச ரூபாய்”

“மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திவிட்டு பணத்தைக் கட்டுங்கள்”

சம்பந்தன் ஒற்றைக் கிளிக் முறையில் தன் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கட்டினான்.

-----------------------------------------

மூன்றாவது கண்ணின் திரைக் காட்சிகள் மாறின. சூச்சா சம்பந்தன் கலர் ப்ளஸில் வாங்கிய லினன் சட்டையைப் போட்டுக்கொண்டு தானியங்கிப்படியில் மேலேறிக்கொண்டிருந்தான். பெண் போன்மையுருக்கள் கீழ் நோக்கிச் செல்லும் படியில் சென்றுகொண்டிருந்தன. நட்சத்திரக்குவியல்களுக்கிடையே நிலவு போல ஊர்சுளாவின் முகம் தென்பட்டதுதான் தாமதம் சூச்சா அவளைக் கையைப் பிடித்து சட்டென்று தூக்கி மேலேறும் படிக்கட்டில் தன்னோடு சேர்த்து நிறுத்துகிறான். அவள் ‘மெதுவாக, மெதுவாக, இந்த முரட்டுத்தனம்தானே வேண்டாம் என்கிறது” என்று சிணுங்கியபடியே அவனுடன் வருகிறாள். படிக்கட்டுகள் மேலேறிப் போய்ச் சேர்ந்த இடத்தைப் பார்த்தவுடன் சம்பந்தன் பெரும் அதிர்ச்சி அடைந்தான். அந்த இடம் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள பால்கனி. எந்த இடத்திற்கு அம்முலுவோடு ஆக்டோபஸிற்குத் தெரியாமல் தாங்கள் ரகசியமாய் வந்ததாய் சம்பந்தன் நினைத்துக்கொண்டிருந்தானோ அந்த இடம்! சூச்சா ஊர்சுளாவை நோக்கி ஆங்காரத்துடன் கத்தினான் “ நாம் சந்தித்தது எப்படித் தெரியும் இவர்களுக்கு?” ஊர்சுளாவின் உடல் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் மூக்கில் அணிந்திருந்த புல்லாக்கில் அஸ்தமன சூரியனின் கதிர்கள் ஜாலம் காட்டின. யாரோ ‘காதோடுதான் நான் பேசுவேன்” என்ற சினிமாப் பாடலை குழைந்து குழைந்து பாடிக்கொண்டிருந்தார்கள். சூச்சா ஆவேசமாய் ஊர்சுளாவின் புல்லாக்கினை பிடிக்கப்போக அவன் கைககளில் பல்லியொன்றின் அடிப்பாகத்தைத் தொட்டது போல பிசுபிசுத்தது. அருவருப்பில் சம்பந்தனுக்கு நினைவு தப்பியது. அம்மா அவனை ஒரு இருட்டு கொட்டடியில் போட்டு பூட்டிவிட்டு வெளியே நின்று  “மாப்பு மன்னிப்பு சொல்லு மாப்பு மன்னிப்பு சொல்லு” என்று கத்திக்கொண்டிருந்தாள். சம்பந்தனின் காலடியில் பாச்சாக்களும் பல்லிகளும் ஊர்ந்துகொண்டிருந்தன. உதட்டைப் பிதுக்கி அழுகையை அடக்கியவாறு சம்பந்தன் நின்றுகொண்டிருந்தான். இருட்டுக்கொட்டடி கொஞ்சம் கொஞ்சமாய் பயத்தை அதிகமாக்க சம்பந்தன் மெதுவாக ‘மாப்பு மன்னிப்பு’ என்கிறான். அம்மா அவனை வெளியே இழுத்து தலையில் நறுக்கென்று குட்டி ‘போய்த்தொலை’ என்கிறாள்.

சூச்சா சுதாரித்தபோது அவனும் ஊர்சுளாவும் சௌகரியமாய் ஃபீனிக்ஸ் சிட்டி பால்கனியில் உட்கார்த்திருந்தார்கள். ஊர்சுளா பால்வெனி ஸ்காட்ச் விஸ்கியை ஒரு கண்ணாடி டம்பளரில் ஊற்றி அவன் கையில் கொடுத்து ‘ரிலாக்ஸ்’ என்று கூறி புன்னகைத்தாள். அவள் மூக்கிலிருந்த புல்லாக்கைக் காணோமே என்று சம்பந்தன் நினைத்திருக்கையில் ஊர்சுளா அம்முலு அணிந்திருந்த அதே பாட்டியாலா பைஜாமாவையும் ஃபேப் இண்டியா குர்தாவையும் அணிந்திருப்பதை கவனித்தான். சூச்சா ‘அடி கிராதகி’ என்று தன் கையில் இருந்த ஸ்காட்சை அவள் மேல் விசிறியடித்தான். ஸ்காட்ச் ஊர்சுளாவின் குர்தாவை நனைக்க அவள் கோபமாகத் தன் குர்தாவைக் கழற்றி வீசி எறிந்தாள். அவளுடைய பொன்னிற முலைக்காம்புகளில் இரு வைடூரிய ஆபரணங்கள் மின்னின. ஊர்சுளா சூச்சாவை இறுகத் தழுவி இதழோடு இதழ் பொருத்தி அவன் கைகளைப் பிடித்து தன் மார்புகளில் தவழவிட்டாள். அவன் காதுகளில் ‘எண்பது லட்சமும் எனக்குத்தான்’ என்றாள். சூச்சாவின் விரல்கள் அவளுடைய முலைக்காம்பு ஆபரணங்களை கழற்றியபோது அவன் கைவிரல்களில் கம்பளிப்பூச்சிகள் ஊர்ந்தன. சம்பந்தன் அந்தப் பெரியவரின் மீசை கம்பளிப்பூச்சி போல இருப்பதாக நினைத்தான். அந்த கம்பளிப்பூச்சி மீசைக்குள் கோணலாய் அவர் புன்னைகைத்துக்கொண்டே “உங்கள் அப்பா பெரிய அரசியல் தலைவர்தான் தம்பி. ஆனால் உங்களுடையது அவ்வளவும் ஊழல் பணம். ஊரை, நாட்டைக் கொள்ளையடித்தது” என்கிறார். ஓரு பெரிய உறையூர் சுருட்டைப் பற்ற வைத்துக்கொள்கிறார். வட்ட வட்டமாய் அறை முழுக்க புகை விடுகிறார். 

“நீ ரொம்ப ஆயாசமாய் இருக்கிறாய். கொஞ்சம் ஐஸ் தேநீர் குடி, இந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்”  என்று ஊர்சுளா சம்பந்தன் வழக்கமாய் எடுத்துக்கொள்ளும் மன அழுத்தத்திற்கான மாத்திரையை சூச்சாவிடம் நீட்டினாள். சூச்சா மாத்திரையினை நீட்டிய கையில் ஒரு ஆக்டோபஸ் பச்சை குத்தப்பட்டிருப்பதைப் பார்த்தான். அவன் மனதை கடுமையான கசப்புணர்வும் அழுகையும் தோற்றுவிட்ட அவமானமும் பீடித்தன. ஊர்சுளாவின் நீட்டிய கையை சூச்சா அப்படியே பிடித்து முறுக்கி   “பாவி பாவி” என்று கதறினான். ஆக்டோபஸின் விழுதுக்கரங்களுள் ஒன்று சூச்சாவின் குரல்வளையை இறுக்கி அவன் தலையை அறுத்து எறிந்தது. சூச்சாவின் அறுக்கப்பட்ட தலை ரத்தம் பீறிட, கண்கள் சொருக, நாக்கு வெளித்தள்ள தரையில் உருண்டு சென்றது. அப்போது இரவு மணி 11.59.