Monday, September 2, 2013

புத்தகங்களை வாசிக்கக் கேட்க


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

உங்களுக்கு என்னை நினைவிருக்க வாய்ப்பில்லை. நான் உங்களுடைய ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிய உரைகளை போன வருடம் உங்களுடைய மையத்தில்  கேட்டேன். அதன் பிறகு உங்களுடைய வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் ஏன் உங்கள் உரைகளை எல்லாம் கட்டுரை வடிவில் தராமல் இருக்கிறீர்கள்? என்னைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை படித்து புரிந்துகொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. நாடகங்களை வாசிக்கக் கேட்டுக்கொண்டே படித்துப் பார்க்கலாமா என்று உங்களுடைய 'சிறுகதைகளை வாசிக்கக் கேட்க' என்ற குறிப்பினைப் படித்தபோது தோன்றியது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை வாசிக்க அல்லது நிகழ்த்தப்பட்டபோது ஆடியோ பதிவு செய்யப்பட்டதை கேட்க முடியுமா? முன்பு புத்தகங்கள் கொடுத்து உதவியது போல இந்த உதவியினையும் செய்தீர்களென்றால் மிகவும் நன்றியுடையவன் ஆவேன்.

இப்படிக்கு,

பெஞ்சமின்

அன்புள்ள பெஞ்சமின்,

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கடிதத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

உங்களை எனக்கு நினைவு இருக்கிறது என்று பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு சுத்தமாக நினைவில்லை. மன்னிக்கவும். என்னிடம் புத்தகங்களை வாசிக்க வாங்கிப் போய்விட்டு திருப்பித் தராதவர்களை நான் நினைவில் வைத்திருக்கப் பிரயத்தனப்படுவதில்லை.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்றில்லை ஏராளமான இலக்கிம், தத்துவம், சமூகவியல் ஆகிய துறைகள் சார்ந்த மூல நூல்கள் ஆடியோ வடிவத்தில் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சிறிது முயற்சி எடுத்து தேடிப்பார்த்தாலே போதும். கீழே கொடுக்கப்பட்ட இரண்டு தளங்களில் மட்டுமே இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த முக்கியமான நூல்கள் அனைத்தையும் கேட்டுவிடலாம்.

http://www.youtube.com/channel/UCf099SXtegD4kv9-M3GIgnw  

http://librivox.org

உங்களுக்கு என் வாழ்த்துகள்

அன்புடன்,

எம்.டி.எம்




No comments: