ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருப்பது இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக முக்கியமான நம்பிக்கையளிக்கும் திருப்பு முனையாகும். அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வெகு ஜன மக்கள் போராட்டமாக மாறியபோதும். வெகு ஜன மக்கள் போராட்டத்தினை அரசியல் கட்சியாக அர்விந்த் கேஜ்ரிவால் உருமாற்றியபோதும் நான் இந்த முயற்சிகளின்பால் நம்பிக்கையற்றவனாகவும், சந்தேகங்கள் கொண்டவனாகவும், இளக்காரமான பார்வையுடையவனாகவுமே இருந்தேன். என்னுடைய பார்வைக்கு மூன்று முக்கிய காரணங்கள்.
முதல்க் காரணம் அன்னா ஹாசரே மதிப்பிற்குரிய முதியவராகத் தோன்றினாலும் அவர் கூரிய மதியுடையவராகவோ அரசியல் தீர்க்கதரிசனங்கள் உடைய சிந்தனையாளராகவோ தோன்றவில்லை.
இரண்டாவது காரணம் அர்விந்த் கேஜ்ரிவால், மனிஷ் சோஸ்டியா போன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரசு சாரா நிறுவனங்களில் அந்நிய நிதி உதவி பெற்று மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் என்ற மறுக்கவியலாத உண்மை. இந்தியாவில் வெகு ஜன கட்சிகள் முன்னெடுக்காத பல முக்கியமான அரசியல் போராட்டங்களை ( தகவல் அறியும் உரிமை, இயற்கை வளங்களின் பாதுகாப்பு, ஆதிவாசிகளின் உரிமைகள், உணவு மற்றும் சத்துணவு பெறுவதற்கான உரிமை, சிறு தொழில் பாதுகாப்பு, காந்திய கிராம பஞ்சாயத்து ராஜ் ஜனநாயகம், பெண்கள் உரிமைகள்) அரசு சாரா நிறுவனங்களே கையிலெடுத்து போராடி வந்திருக்கின்றன என்பதினால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரசு சாரா அந்நிய நிதி உதவி பெற்ற/ பெறுகின்ற நிறுவனங்களின் பின் புலங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் ஊழல் எதிர்ப்பு போராட்டம் அரசு சாரா நிறுவனங்களின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுவது உள் நோக்கங்கள் உடையது என்ற வாதம் கவனிக்கத்தக்கது என்று நான் நினைத்தேன். உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற உலகளாவிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் நீக்கமற எங்கும் விரவியிருக்கும் ஊழலே இந்தியாவை முழுமையான முதலாளித்துவ நாடாக மாறவிடாமல் தடுக்கிறது என்று நினைக்கின்றன. ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் , சிறு வணிகம் போன்ற பல துறைகளிலும் தனியார்மயத்தினையும் , வெளி நாட்டு முதலீட்டினையும் கொண்டுவருவதில் ஓரளவு வெற்றி பெற்றுவிட்ட வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத் துறைகள் மூலம் இயங்கும் அந்நிய நிதி நிறுவனங்கள் இன்னும் இலவச அடிப்படை கல்வி, விவசாயம், உயர் கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கான அரசு மானியங்களை தடை செய்வதிலும் லாபமீட்டும் தனியார்மயப்பட்ட தொழில் வாய்ப்புகளாக மாற்றுவதிலும் வெற்றி பெறவில்லை. இந்தத் துறைகளை தனியார்மயப்பட்ட தொழில் வாய்ப்புகளாக மாற்ற எராளமான அந்நிய நிதிகளை அரசாங்கத் துறைகளுக்கு வழங்கும் உலக நிதி நிறுவனங்கள் அத்தகைய நிதி நல்கைகள் அனைத்தும் அரசுத் துறை ஊழல்களினால் விளைவுகள் ஏதுமில்லாமல் விழுங்கப்பட்டுவிடுகின்றன; ஆகையால் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஊக்குவிப்பது முழு முதலாளித்துவ நாடாக இந்தியாவை மாற்றும் என்று உலக நிதி நிறுவனங்கள் நம்புகின்றன என்று தொடரும் வாதம் உண்மையானது என்றே நானும் நினைக்கிறேன். ஆகையால் ஊழலுக்கு எதிரான அன்னா ஹாசரே -அர்விந்த் கேஜ்ரிவால் போராட்ட நோக்கம் வெறுமனே ஊழல் ஒழிப்பு மட்டுமல்ல welfare stateஇன் அத்தனை மக்கள் மைய திட்டங்களையும் ஒழித்துக்கட்டுவதுதான் என்று நான் நினைத்தேன். மேலும் இந்திய அரசுத் துறைகளில் ஊழல் என்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கடும் தலைவலியைத் தந்து கொண்டிருப்பது. கார்ப்பரேட் நிறுவனங்களும் ஊழலற்ற அரசு எந்திரம் உருவாகுவதை விரும்புகின்றன.
மூன்றாவது காரணம் ஆம் ஆத்மி கட்சி இன்று பிடித்திருக்கும் ஆட்சியும், வெகுஜன மக்கள் ஆதரவும் உண்மையில் இடதுசாரிக் கட்சிகளைச் சென்றடைய வேண்டியவை. இடது சாரிக் கட்சிகள் தொலை நோக்குடன் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை நடுத்தரவர்க்கத்தின் ஆதரவைக் கோரியும், சமூக வலைத்தளங்களின் உதவியுடன் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அவை வெகு ஜன இயக்கங்களாக எடுத்துச் செல்லத் தவறியதை ஆம் ஆத்மி கட்சி பறித்துக்கொள்வதாகவும் நான் நினைத்தேன்.
மேற்சொன்ன மூன்று காரணங்களையும் மீறி இப்பொழுது ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைப்பதை நான் இந்திய ஜனநாயகத்தின் திருப்பு முனையாகக் கருதுவதற்கு ஒரே காரணம்தான்: ஆம் ஆத்மி கட்சிக்கு வெகுவாக வாக்களித்தவர்கள் ஏழை மக்கள். இலவச குடிநீரும், குறைந்த விலை மின்சாரமும் வேண்டி அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். டெல்லியிலுள்ள ஏழை மக்களின் வெற்றியாகவே ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அமைந்திருக்கிறது. ஆட்சி அமைக்கலாமா என்பதற்கே மக்கள் வாக்கெடுப்பு நடத்திய கேஜ்ரிவால் தொடர்ந்து இந்த ஜனநாயகப் பண்பினை காப்பாற்றுவாரென்றால் தொடர்ந்து socialist welfare stateஇன் மாண்புகளை காப்பாற்றுவதாகவே ஆம் ஆத்மி கட்சியும் இயங்க நிர்ப்பந்திக்கப்படும். இந்திய இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அரசியல் இயக்கமாக ஆம் ஆத்மி கட்சி பரிமாணம் பெறுமென்றால் அது இன்னும் உயரிய இடத்திற்கு செல்லும்.
அந்த வகையில் அர்விந்த் கேஜ்ரிவாலின் வெற்றி நம் வெற்றி.