Saturday, September 6, 2014

தமிழ் சினிமாவின் தடித்தனத்தை கெக்கலி கொட்டும் ‘ஜிகர்தண்டா’


Image courtesy: http://www.cinejosh.com/telugu-movie-photos/15991/3/66/jigarthanda-tamil-movie-stills.html 




தமிழ் சினிமா வரலாற்றிலேயே, தமிழ் சினிமா நுண்ணுணர்வற்று பொருக்காடிப்போனதையும், நேர்மையான உணர்ச்சிகளுக்கு வாய்ப்பில்லாத உள்ளீடற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் உருமாறி இருப்பதையும் தன்னுடைய இருண்ட நகைச்சுவையின் மூலமாகவும், புதிய திரைமொழியின் மூலமாகவும், கெக்கலி கொட்டும் இசையின் மூலமாகவும் சொன்ன படமாக ‘ஜிகர்தண்டா’  முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் வெகுஜன சினிமாவை அதன் போலி வணிக வெளிப்பாடுகளுக்காகவும், உணர்ச்சி சுரண்டலை வியாபாரமாக மாற்றும் பண்புகளுக்காகவும் காத்திரமாக வெறுத்து ஒதுக்கும் சிறு பத்திரிக்கை இலக்கியவாதிகள் கூட முன் வைக்காத அளவுக்கு தமிழ் வெகுஜன சினிமாவின் மேல் தீவிரமாக வைக்கப்பட்ட விமர்சனமாக வடிவம் பெற்றிருக்கிறது கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ‘ஜிகர்தண்டா’.  

திரைப்படம் எடுப்பதைப் பற்றிய திரைப்படம் என்ற கதைக்களத்தின் சாத்தியப்பாடுகளை பல தளங்களாக விசாலப்படுத்தியே தனது விமர்சனத்தை நுட்பப்படுத்தியிருக்கிறது ‘ஜிகர்தண்டா’. திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே திரைப்படம் பற்றிய திரைப்படம் என்பதன் கூறுகள் நிறுவப்பட்டு விடுகின்றன. திரைப்படத்தில் இயக்குனர் கதாபாத்திரத்தின் பெயரும் படத்தை இயக்கியிருப்பரின் பெயரும் கார்த்தி என்ற பெயர் ஒற்றுமையிலும் இளம் இயக்குனர் நிகழ்ச்சியில் ‘குப்பைப்படம்’ என்றும் ‘வெகுவாக மக்களைக் கவரக்கூடிய படம்’ என்றும் உண்மையில் சொல்லப்படுவது ‘ஜிகர்தண்டா’ படம்தான் என்பதை டைட்டில் கார்டுகள் போடும்போதே குறிப்பதனாலுமே படத்தின் கதைக்களன் வேடிக்கையாக நிறுவப்பட்டுவிடுகிறது. ‘ஜிகர்தண்டா’வில் படத்துள் படங்களாக ஏழு தளங்கள் இவ்வாறு தொடர்ந்து உருவாக்கப்பட்டு அவை ஒன்றோடொன்று உறவாட வைக்கப்படுகின்றன. இவற்றை வரிசைப்படுத்திக்கொள்ளுதல் நமக்கு ‘ஜிகர்தண்டா’ என்ற திரைப்படத்தின் பிரதியின் உள்கட்டுமானங்களை அறிய உதவியாக இருக்கும். அவையாவன:

1. நாம் பார்க்கின்ற ‘ஜிகர்தண்டா’
2. கதையின் நாயகன் இயக்குனர் கார்த்தி எடுக்க விரும்புகிற திரைப்படம்
3. கதாநாயகனின் தயாரிப்பாளர் எடுக்க விரும்புகிற திரைப்படம்
4. கதாநாயகன் இயக்குனர் கார்த்தி எடுக்கிற திரைப்படம்
5. கதாநாயகன் கார்த்தி வில்லன் சேதுவிடம் தான் எடுப்பதாக நம்ப வைக்கிற திரைப்படம்
6. கதாநாயகன் கார்த்தி வில்லன் சேதுவின் வாழ்க்கையைப் பற்றி எடுத்து திரையிடுகிற நகைச்சுவை திரைப்படம்
7. வில்லன் சேது நடிக்க விரும்புகிற சுய சரிதை திரைப்படம்

மேற்சொன்ன ஏழு தளங்களையும் மிகவும் புத்திசாலித்தனமாக திரைக்கதையாக்குவதிலேயே கார்த்திக் சுப்பராஜின் வெற்றி சமூக விமர்சனமாகவும், தமிழ் வெகு ஜன சினிமாவைப் பற்றிய விமர்சனமாகவும் பரிணமித்திருக்கிறது. 

முதல் காட்சியில் “பாசமலர்” படத்தில் ‘மலர்ந்தும் மலராத’ பாட்டில் ‘நதியில் விளையாடி மதுரை நகர் கண்ட’ என்ற வரி வரும்போது ஏதோ சீட்டாட்ட பார் போல இருக்கும் கொட்டகை ஒன்றில் ஒருவரை நாலைந்து பேர் ‘ கார்த்தி கொடுக்கச் சொன்ன கிஃப்ட்’ என்று சொல்லி சுட்டுக்கொல்கிறார்கள்; கொட்டகையினுள் ஓடும் கருப்பு வெள்ளை திரைப்படத்தில் பாலும்பழமும் பட சிவாஜிகணேசன் தொடர்ந்து பாட்டுப்பாடி குழந்தையை சீராட்டிக்கொண்டிருக்கிறார். இந்தக் கொலையின்  பின்னணி என்ன என்பதற்கு  விளக்கம் சொல்வதாக ஆரம்பிக்கின்ற  படம் கடைசியில் அது கதாநாயகன் கார்த்தி, வில்லன் சேதுவை ஏமாற்றி எடுத்த, நகைச்சுவைப்படத்தின் காட்சிகளுள் ஒன்று என்று சொல்கிறது. அதாவது ‘ஜிகர்தண்டா’வின் படத்துள் படமும், படம் பற்றிய படமும் ஒரு அபாரமான காட்சிப்புல விளையாட்டினை நிகழ்த்திக்காட்டுகின்றன.

‘காட்ஃபாதர்’, ‘நாயகன்’, ‘தளபதி’ போன்ற ‘ரத்தம் தெறிக்கிற’ கேங்ஸ்டர் படம் வேண்டும் என்று கேட்கிற தயாரிப்பாளர் கதாநாயகன் கார்த்தி சொல்கின்ற கதையை வாயில் தண்னீரை களகளவென்று தொண்டையில் குமிழியிட்டுக்கொண்டே அசுவாராஸ்யமாய் ‘சொல்லித் தொலை’ என்பதாகக் கேட்கிறார். அவரைப்பார்ப்பதற்காக வரவேற்பறையில் காத்திருக்கும்போது யாரோ ஒருவரை கூட்டமாக கொல்கின்ற காட்சியினை கதாநாயகன் கார்த்தி பார்க்கிறான். அதாவது எல்லாமே ஊடகப்படுத்தப்பட்ட யதார்த்தங்கள்தான். மதுரையில் நடக்கின்ற நடு ரோட்டுக் கொலைச் சம்பவம் தொலைக்காட்சி வழி கார்த்திக்குத் தெரியவருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துத் தொலைத்து விட்டோமே என்று தயாரிப்பாளர் கார்த்திக்கை சந்திக்க சம்மதிக்கிறார். அவர் கார்த்திக்கை பார்க்க மாட்டேன் என்று சொல்ல இயலாது ஏனெனில் அவர் தொலைக்காட்சியில் அறிவித்தது பத்திரிக்கைகளில் பரவலாக வெளியிட்டாகிவிட்டது என்கிறார் கார்த்திக்கோடு கூட வரும்  பத்திரிக்கையாளர். எல்லாமே ஊடகப்படுத்தப்பட்ட யதார்த்தங்கள் ஆகையால் எடுக்கப்படுகிற முடிவுகள். இவ்வாறாக ஊடகப்படுத்தப்பட்டு விட்டதால் மட்டுமே ‘மதிப்பு’ தமிழ் சமூகத்தில் உருவாகிறது என்பதே படம் முழுக்க சொல்லப்படுகிற கதையாக இருக்கிறது. தயாரிப்பாளரின் வெற்றிப்பட வேட்கை என்பதினை வன்முறைக்கான வேட்கை என்பதை நீச்சல்குளத்தில் தன்னை அமிழ்த்தி குளிக்கும்போது புரிந்துகொள்கிற கார்த்தி ‘உண்மையான’ ரௌடி ஒருவனின் வாழ்க்கையினை கூட இருந்து பார்த்து ஆவணப்படுத்தி அதை படமாக்க முடிவு செய்கிறான்.
Image courtesy: http://www.cinejosh.com/telugu-movie-photos/15991/3/66/jigarthanda-tamil-movie-stills.html


ஊடகத்திற்கான வேட்கை என்பதே ஓவ்வொருவரிடமும் வன்முறையாக வெளிப்படுகிறது. போலீஸ்காரர் ஒருவர் மூலமாக சைக்கோ கொலைகாரன் ஈவு இரக்கமற்ற முறையில் கொல்லக்கூடியவன் என்றெல்லாம் அறிப்படுகிற மதுரை ரௌடி அசால்ட் சேது தன்னைப் பற்றி பத்திரிக்கையில் தொடர் எழுதிய பத்திரிக்கையாளனை பெட்ரோல் ஊற்றிக் கொழுத்திக்கொல்கிறான். ‘தளபதி’ படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் ரஜினி ஏராளமான ஆட்களை பெட்ரோல் ஊற்றி கொழுத்தும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. பத்திரிக்கை செய்தியிலிருந்து காட்சிப்படுத்துதலுக்குத் தாவும் ‘ஜிகர்தண்டா’வில் வில்லன் சேது கார் டிக்கியிலிருந்து எடுத்து வாயையும் கையையும் காலையும் கட்டி பத்திரிக்கையாளனை வைக்கோல் போர் நடுவில் தூக்கி வீசிவிட்டு காரின் மேல் உட்கார்ந்து சிகரெட்டைப் பற்ற வைக்கப் போகையில் பத்திரிக்கையாளனிடமே தீப்பெட்டி கேட்கிற சேதுவுக்கு மிகப் பெரிய புகார் தன் புகைப்படத்தையும் சேர்த்து அந்த பத்திரிக்கையாளன் தன் கதையை பிரசுரிக்கவில்லை என்பதாக இருக்கிறது. கத்தியால் கொன்றால் ஊற்றிய பெட்ரோல் வீணாகிவிடுமோ என்று கவலைப்படுகிற அடியாட்கள், ‘சம்பவம்’ பண்ணி (கொலை பண்ணி) பெரிய ஆளாகத் துடிக்கிற சௌந்தர் (நடிகர் செந்தில் குமரன்) என்று தொடரும் நகைச்சுவை வசனங்களில், காட்சிகளில்  பார்வையாளர்களாகிய நாம் எதைப்பார்த்து சிரிக்கிறோம்?  படத்தின் இரண்டாம் பகுதியில் நாம் இந்தக் காட்சி கதாநாயகன் கார்த்திக் மணிரத்னத்தின் தளபதி’ போல தயாரிப்பாளரின் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து நகைச்சுவையாக subvert பண்ணிய காட்சி என்று அறிகிறோம். உண்மையில் நாம் முதலில் வசனங்கள், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் இருண்ட நகைச்சுவை ‘தளபதி’ படத்தின் மேலும் அதன் உணர்வற்ற வன்முறையின் மேலும் வைக்கப்பட்ட விமர்சனமாகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் iconic status உடைய மணி ரத்னத்தின் ‘தளபதி’ படத்திற்கு திரையிலேயே வைக்கப்பட்ட காத்திரமான விமர்சனம் இது. இந்த விமர்சனம் எங்கே பார்வையாளர்களுக்கு புரியாமல் போய்விடுமோ என்பதாலேயே படத்தின் கடைசியில் ‘தளபதி’ போன்ற படத்தை எடுத்த இயக்குனர் மேல் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப் போனால் அவன் எப்படி உணர்வான் என்று காட்சி அமைந்திருக்கிறது. ‘தளபதி’ படத்தினை ஞாபகப்படுத்துகிற வேறொரு காட்சி கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி  கயல்விழியை காதலிக்க சந்திக்கும் தீபங்கள் நிறைந்த காட்சி; அது ‘தளபதி’ படத்தில் வரும் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலில் வரும் ‘குனித்த புருவமும் கோவை செவ்வாயும்’ பத்தியில் ஷோபனா தீபங்கள் ஏற்றும் காட்சியை நினைவூட்டுவதாகும். கார்த்திக் சுப்பராஜின் subversive energyஇக்கு நிகரான ஆற்றல் படத்தில் வேறொருவரிடமும் இருக்கிறது என்றால் அது கதாநாயகனான சித்தார்த்தின் நடிப்பிலும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணணிடமும்தான் என்று சொல்ல வேண்டும்.

நாம் பார்க்கிற ‘ஜிகர்தண்டாவும்’ கதாநாயகன் கார்த்தி சேதுவை ஏமாற்றி எடுத்த படமும் ஒரே படமாக இருக்கிறது; ஆனால் கதாநாயகன் கார்த்தி எடுக்க விரும்பிய படமோ மணிரத்னத்தின் ‘தளபதி’ அல்லது ‘நாயகன்’ ஆகவே கதாநாயகன் கார்த்தி மணிரத்னத்தின் அக உலகினை சித்தரிக்கின்ற கதாபாத்திரம். சித்தார்த் தன்னுடைய அளவான வசனங்கள், நுட்பமான முகபாவங்கள் மூலம் மணிரத்னம் ஆவது என்றால் என்ன என்பதை திறம்பட வெளிப்படுத்துகிறார். போலீஸ்காரர் சொல்கிற கொடுமையான கொலைகாரன் சேதுவை பற்றி கதையை முதலில் கேள்விப்படும்போதே சித்தார்த்தின் முகம் வசமான கதை ஒன்று சிக்கிவிட்ட சந்தோஷத்தில் கொப்பளிக்கிறது; அதாவது சொல்லப்படுகின்ற கதையின் கொடூரம் அவரை பாதிப்பதேயில்லை. சேதுவோடு நட்பாகி அவனுடைய வாழ்க்கையை படம் பண்ணுவதுதான் தன் நோக்கம் என்று தெரிவித்தபின் கதாநாயகன் கார்த்தி சேதுவின் சுய சரிதையை காமெராவில் பதிவு செய்யும் காட்சியில் ‘மணிரத்னம் ஆகுதல்’ இன்னும் தீவிரமடைகிறது.  நாற்பத்தி எட்டு கொலைகள் பண்ணியிருப்பதை வீர பிரதாபம் போல விவரிக்கும் சேதுவின் (நடிகர் பாபி சிம்ஹா) மொழி கொஞ்சம் கொஞ்சமாக ‘கார்ப்பரேட்’ மொழியாக மாறுகிறது. கட்டைப் பஞ்சாயத்து செய்ய ஒரு பேக்கேஜ், ஆயுதம் தூக்க ஒரு பேக்கேஜ், என்று சேது கார்ப்பரேட் மொழியில் விவரிக்க விவரிக்க கதாநாயகன் கார்த்தி மணிரத்னமாக மாறுவதும் இணையாக நடக்கிறது. சேதுவின் சுயசரிதையைக் கேட்கும்போது கார்த்தி எடுக்க விரும்புகிற படமும் விஜய் சேதுபதி நடித்த படமாக இடையிடையே காட்டப்படுகிறது; அந்தப் படத்தின் துண்டுக் காட்சிகள் ‘தளபதி’, ‘நாயகன்’ போல படு சீரியசாக இருக்கின்றன அவற்றில் கிண்டல் கேலி இல்லை.  மோசமான பயல்கள் காட்டுமிராண்டிக்கூட்டம் என்றெல்லாம் முதலில் கார்த்தியை சேதுவை ஆவணப்படுத்தி படம் எடுக்கும் எண்ணத்தை மாற்றும்படி ஆலோசனை சொல்லும்   கார்த்தியின் நண்பன் ஊர்ணி (நடிகர் கருணாகரன்) திரைப்படமாகுதலின் ஆசைக்கு அடிமையாகி  கொஞ்சம் கொஞ்சமாக சேதுவின் அடியாட்களுக்கே  கொடூரமான யோசனை சொல்கிறவனாக மாறுவது கார்த்தி மணிரத்னமாக அகஉருமாற்றம் அடைவதற்கு இணையானது.  ‘டிங்டாங்’ பாடலின்போது பின்னணியில் அருண்ராஜாவின் தமிழ் ‘ராப்’ குரல் ‘ஒன்னக் கட்டி வச்சு ஒதப்பேன்’ என்று அச்சுறுத்தும்போது பயப்படுகிற கார்த்தியும் ஊர்ணியும் சேதுவின் அடியாட்கள் காமெராவுக்கு ஏற்றவாறு எப்படியெல்லாம் துன்புறுத்த வேண்டும் என்று யோசனை சொல்கிறவர்களாக மாறுகிறார்கள். ஊர்ணி ஆங்கிலப்படங்களில் வருவது போல துப்பாக்கியில் ஒற்றை குண்டினை போட்டு ரவை உருளியை சுழற்றி விட்டு மிரட்டு என்று யோசனை சொல்லும்போது அடியாள்  ராசு (நடிகர் ராமச்சந்திரன் துரைராஜ்) முதலில் ‘கம்பெனி ரூல்ஸ்’ இடம் தராது என்று மறுக்கும் இடம் கார்ப்பரேட் மொழி பயன்படுத்தலின் உச்சபட்ச இடம். ஆனால் காமெராவில் இடம் பெற நினைத்து துப்பாக்கியை பயன்படுத்த மிரட்ட கூட்டி வந்தவன் இறந்தே போகிறான். நடிகனாக ஆசைப்படுகின்ற ஊரணிக்குக்கூட சேது  கத்தியோடு வந்து ஊரணி சங்கினை அறுத்து ரத்தம் எப்படி பீச்சியடிக்கும் என்று ‘நிகழ்த்திக்காட்டும்’ கொடுங்கனவு வந்து அவன் அலறி விழிக்கிறான். ஆனால் மணிரத்னம் ஆகிக்கொண்டிருக்கிறவனுக்கோ தனக்கு ஏற்படுகிற வலி தவிர எதுவும் உறைப்பதில்லை.

வன்முறைக் காட்சிகளை அலட்சியமாகவும் இருண்ட நகைச்சுவை நிரம்பியதாகவும் காட்டுவதன் மூலம் நாம் வன்முறைக்கான அருவருப்பை இழந்து உணர்வற்றவர்களாகி தடித்ததோல் சமூகமாய் மாறிவிட்டோம் என்று உணர்த்துவது க்வெண்டின் டேரெண்டினோ (Quentin Tarantino) படங்களிலிருந்து கடன் பெற்ற அழகியல் பாணி;  ‘ஜிகர்தண்டா’ படம் பல விதங்களில் டேரெண்டினோவின் பாணியை பயன்படுத்திக்கொள்கிறது. காட்சிரூபமாக, 4444 என்ற எண்ணுடைய பழைய சிவப்பு காண்டெஸ்ஸா கார் போல ஏராளமாக சின்ன சின்ன காட்சி விபரங்கள் என்றால், வசனங்களில் குரூர நகைச்சுவை என்றால், ‘ஜிகர்தண்டா’ படத்தை முழுமையாக டேரெண்டினோ பாணி படமாக மாற்றுவது சந்தோஷ் நாராயணின் இசையமைப்புதான்.  முதல்  கொலைக்காட்சிக்கு ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ என்ற சிவாஜிகணேசன் செண்டிமெண்டெல் பாட்டை இணைத்ததிலிருந்தே சந்தோஷ் நாராயணனின் ரகளை ஆரம்பித்துவிடுகிறது. சேதுவை பாரின் கழிப்பறையில் வைத்து கொல்ல முயற்சி நடக்கும்போது பின்னணியில்”நம்ம ஊரு சிங்காரி” பாடல் ஒலிக்கிறது. ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடல் போல ஒரு இளக்கார காதல் பாடல் தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை. ரிடாவும், அந்தோணி தாசனும் குரலில் கொண்டுவந்திருக்கும் பிசிறும் கரகரப்பும் கேலியும் நம் காலத்து காதல் ‘காத்தடிச்சா சாயும் காதல்’ என்பதை சொல்லிவிடுகின்றன. சேலை திருடியான கதாநாயகி (நடிகை லட்சுமி மேனன்), சேதுவை தொடர்பு கொள்வதற்காக மட்டுமே அவளை காதலிப்பதாக நடிக்கும் கார்த்தி போலிக் காதலுக்கு ‘கண்ணம்மா” சரியான பாடல். டிரம்ஸ் ஒலி, டிவைங் டிவைய்ங் போன்ற சப்தங்கள், சீழ்கை ஒலி, சாக்ஸஃபோன் என பல பின்னணி சப்தங்கள்/ இசை பல பலகீனமான காட்சிகளைக்கூட சுவாரஸ்யமாக்கிவிடுகின்றன. உதாரணமாக சேது பெரிய ‘சம்பவம்’ ஒன்று நடக்க இருக்கிற இரவன்று சாமி படங்களின் முன் நின்று மௌனமாக பிரார்த்தித்துக்கொண்டிருக்கையில் பின்னணியில் ஒலிக்கும் சீழ்கை ஒலி. ‘ராப்’ இசை, ஹூ ஹா பாடல், ஆங்கில இசைப்பாடல்கள் என பின்னணி இசை கொலை, கொடூர காட்சிகள் அனைத்தையும் கேளிக்கையாக்குகின்றன. சேதுவை உளவு பார்க்கும் மணிரத்னமாகிக்கொண்டிருக்கும் கதாநாயகன் கார்த்திக்கு சௌந்தர் சேகரிடம் சேதுவின் திட்டத்தைப் போட்டுக்கொடுப்பது ஆச்சரியமாகவும், அது சேது சௌந்தருக்கு விரித்த வலை என்பதை அறியும்போது ‘செம டிவிஸ்டாகவும்’ இருக்கிறது. சேது கார்த்தியும் ஊற்ணியும் தன்னை ஒட்டுக்கேட்கிறார்கள் என்பதை அறியும் தருணம் சந்தோஷ் நாரயணணுக்கு உற்சாகம் பிய்த்துக்கொள்கிறது சாக்ஸஃபோனை உற்சாகமாக பின்னணியில் ஒலிக்க விட்டு விடுகிறார். படத்தில் பல இடங்களில் ‘அன்பே சிவம்’ படத்தின் இசை பின்னணியாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  மணிரத்னம் படங்களிலிருந்து குறிப்பாக ‘தளபதி’, ‘நாயகன்’ படக்காட்சிகள் references ஆகவும் reversal ஆகவும் வருகின்றன. இவற்றில் தலையாய reference and reversal என ‘ புழுதி பறக்குது பாரு’ பாடலை சொல்லலாம். ‘திருடா, திருடா’வின் மிக இனிமையான பாடலாக புகழ் பெற்ற ‘வீர பாண்டிக்கோட்டையிலே’ பாடலுக்கு எதிரிணையாக ‘ புழுதி பறக்குது பாரு” என்ற திறந்த வெளிக் கிணற்றுக்குள் படமாக்கப்பட்ட பாடலைச் சொல்லலாம். 

டேரெண்டினோ பாணி காட்சிகள் என்று ‘ஜிகர்தண்டா’வின் நான்கு முக்கிய காட்சிகளைக் குறிப்பிடலாம். பத்திரிக்கையாளனை சேது பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் காட்சி, சேதுவை பார் கழிப்பறையில் வைத்து கொல்ல முயலும் ஒருவன் வேறொரு அப்பாவியைக் கொன்று விடும் காட்சி, தன்னைக் கொலை செய்ய வந்தவனை வீட்டின் நடுக்கூடத்தில் இட்லி சாப்பிட்டுக்கொண்டே ‘விசாரிக்கும் போது’ அடியாட்களில் ஒருவன் அவனை கொன்று விடும் காட்சி, சேது சேகரையும் சௌந்தரையும் கொல்லும் காட்சி என நான்கு காட்சிகளும் டேரெண்டினோவின் Reservoir dogs, Inglorious Basterds, Pulp Fiction ஆகிய படங்களின் பாணியையும் அழகியலையும் நினைவுபடுத்துகின்றன. அப்படி நினைவுபடுத்தினாலும் கூட காட்சிகளின் உள்ளடக்கமும் இசைச்சாரமும் முழுக்க கார்த்திக் சுப்பராஜையும் சந்தோஷ் நாரயணனையுமே சாரும்.
  
தமிழ் சினிமா வரலாற்றில் மணிரத்னத்தின் படங்கள் பெரும் வரவேற்பினை பெற்றபின்பு அதற்கு முன்  புகழ்பெற்றிருந்த பாரதிராஜா படங்களும் அவர் பாணியில் அமைந்த கிராமத்து படங்களும் ஓரம் கட்டப்பட்டன செல்வாக்கையும் புகழையும் இழந்தன. ஆகஸ்ட் 24, 2014 தேதியிட்ட தி இந்து தமிழ் செய்தித்தாளில் பேட்டியளித்த பாரதிராஜாவே மணிரத்தினத்தின் வருகைக்குப் பின் தன் பாணி கிராமத்துப் படங்கள் வணிகரீதியாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார். மணிரத்னத்தின் படங்களை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் ‘ஜிகர்தண்டா’ பாரதிராஜா வகைப் படங்கள் ஓரங்கட்டப்பட்டதையும் அவற்றின் முக்கியத்தியத்துவத்தையும் முன் நிறுத்தத் தவறவில்லை. ஜிகர்தண்டா கதாநாயகன் கார்த்தி மதுரைக்கு வந்து ரௌடி சேதுவோடு அணுக்கமாக இருக்கக்கூடிய மூவர் மூலம் சேதுவை அணுக திட்டமிடுகிறான். முதல் அடியாள் குடிகாரன் தூய வன்முறையாளன் அவனை அவர்களால் அணுக முடிவதில்லை. இரண்டாம் அடியாள் பலான படம் பார்க்கக்கூடியவன் அவனிடம் வெளி நாட்டு நீலப்படங்களைக் கொடுத்து நட்பினை உண்டாக்கியபோதிலும் அவன் பார்க்கும் படத்தை வீட்டில் பார்த்துவிடுவதால் அவனோடும் உறவு நீடிப்பதில்லை. மூன்றாவது நபர் பழனி (நடிகர் சங்கிலி முருகன்) பெட்டிக்கடை வைத்திருக்கிறார். அவர் சிவநேசன், குருவம்மா என்று கிராமத்து கதை சொல்லி சினிமா எடுக்க முயன்று தோற்றவர். அவர் சேதுவை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு கார்த்தி ஆளாகும்போது அவனை சந்தர்ப்பத்தை கை நழுவ விடாமல் படத்தை எடுக்கச் சொல்லி ஊக்கப்படுத்துகிறார். அவரைப் பார்த்து ரம்பம் அறுவை என்று ஓடிப்போன கார்த்தி தான் படம் எடுக்கும்போது அவரையே முதல் க்ளாப் அடித்து படத்தை ஆரம்பித்து வைக்கச் சொல்கிறான். ஜிகர்தண்டா படத்தில் மௌனமாக்கப்பட்டு ஓரமாக உடகார்ந்திருக்கும் சேதுவின் அம்மா மதுரைப்பக்கத்து மூதாட்டியாக இருக்கிறார். சேதுவின் தொழில் பிடிக்காமல் அவரோடு பேசாமல் இருக்கக்கூடிய அந்த மூதாட்டி பக்கத்தில் வீட்டில் நடுக்கூடத்தில் குத்திக்கொன்ற பிணத்தினை, போலீஸ் தற்செயலாக வரும்போது, தோளோடு தோளோடாக உட்கார்த்தி வைத்து பக்கத்துக்கு இருவராக அடியாட்கள் பிடித்துக்கொள்கிறார்கள்.  

குருவம்மா கதை போன்ற மண் சார்ந்த படங்களே நமக்குத் தேவை என்பதினை ஒரு மதிப்பீடாகவும் அதை மறைமுகமாகவும் முன்வைக்கிற ‘ஜிகர்தண்டா’ மணிரத்னம் படங்களை யும் கார்ப்பரேட் கலாசாரத்தினையும் காட்டமாக விமர்சிப்பது போலவே மேல் நாட்டு மோகத்தினையும் விமர்சிக்கிறது. கார்த்தியை கண்காணிக்க வந்த சேதுவின் அடியாள் சௌந்தர் ( நடிகர் ஆடுகளம் நரேன்) கார்த்தி புகைப்படம் எடுப்பதை பார்த்து தன்னை மேலும் புகைப்படங்கள் எடுத்துத் தரும்படி கேட்கிறான். அந்த புகைப்ப்டங்களின் பின்னணியில் லண்டன் போன்ற ஐரோப்பிய நகரங்களின் காட்சிகள் வேண்டும் என்கிறான். சேதுவை கண்காணிப்பில் வைத்திருக்கும் இன்னொரு தாதாவான சேகர் (நடிகர் தென்னவன்) வெள்ளைக்கார முகமூடி போட்டுக்கொண்டு வெள்ளைக்காரி முகமூடி போட்டிருக்கும் தன் வைப்பாட்டியுடன் “டைட்டானிக்” படம் பார்த்துக்கொண்டே உறவில் ஈடுபடுகிறான். சேது சேகரை சுட்டுக்கொல்லும்போது ஒரு முகமூடியை தான் அணிந்துகொண்டு இன்னொரு முகமூடியை சேகரை அணியவைத்து கொல்கிறான். 

மணிரத்னம் படங்களின் வன்முறைக்கு எதிரான படமாக வளரும் ஜிகர்தண்டா பின்பாதியில் சினிமா என்ற கலையின் மனிதப் பண்பினை மீட்டெடுக்கும் ஆற்றலை அதே நகைச்சுவையுடன் சொல்ல முயல்கிறது. நடிக்கத் தெரியாத சேதுவும் அவன் அவன் அடியாட்கள் கூட்டமும் முத்து வாத்தியாரிடம் (நடிகர் சோமசுந்தரம்) நடிப்புப் பயிற்சி பெறும்போது சேதுவுக்கு மட்டுமேனும் கருணை, காதல், அன்பு போன்ற உணர்ச்சிகளின் முக்கியத்துவம் புரிய வருகிறது. படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லி அழுகிற தயாரிப்பாளரைப் போலவே கதையின் நாய்கனும் நாயகியும் தங்கள் உணர்ச்சிகளின் தனமை இன்னது என்று புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். படம் எடுப்பதற்காக தன்னை பயன் படுத்திக்கொண்டான் என்று மனம் உடைந்து போகிற கயல்விழி சேதுவே கார்த்தி படத்தின் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கருத்தினை விதைத்து கார்த்தியின் கனவுகளை தரைமட்டமாக்குகிறாள். நடிப்பு வாத்தியாரிடம் காதலிக்கத் தெரியாத தத்தி என்று திட்டு வாங்குகிற சேதுவை கயல்விழி விரும்புவதாக பொய்த்தோற்றத்தினை ஏற்படுத்துகிறான் கார்த்தி. உணர்ச்சிகள் தங்கள் இயல்புகளை மறந்து குழப்பமானவைகளாவும் செத்தும் போயிருக்கையில் ஊடகத்திற்கான பயிற்சியின் மூலமாகவே மீண்டும் தன்னியல்பினை பெறுகின்றன.  

ஆனால் படத்தின் முக்கிய நீரோட்டமான கிண்டலும் பகடியும் இரண்டாம் பாதியிலும் தொடர்வதால் படத்தின் நீதி துலக்கம் பெறுவதில்லை. சேதுவை ஏமாற்றி எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம் சேதுவுக்கு முதலில் கோபத்தை ஏற்படுத்தினாலும் அவன் தன் படத்துக்கு கிடைக்கின்ற வரவேற்பின் மூலம் மனிதத்தன்மை பெறுவதாக அமைக்கப்பட்ட காட்சிகள் சிரிப்பினையே மேலும் உண்டாக்குகின்றன. இன்னொரு சக ரௌடியின் சாவு வீட்டில் அவன் மனைவி அழுவதை நிறுத்திவிட்டு சேதுவிடம் வந்து ‘படம் சூப்பர்’ என்று சொல்லிச் செல்வது, ‘நாயகன்’ படக்காட்சியினை நினைவுபடுத்தும் வகையில் சேதுவால் கொல்லப்பட்ட சௌந்தரின் மனைவியும் குழந்தையும் சேது என்ற நடிகனிடம் வந்து உரையாடுவதும் கைகொடுப்பதும் எள்ளலகளாகவே அமைகின்றன.  அ.குமார் என்பது அழுகுணிக்குமார் என்று விரிவடையும்போது அது  செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’ படத்தினை ஞாபகப்படுத்துகிறதே தவிர சேது அடைகின்ற மாற்றத்தினை வலுவாகச் சொல்லத் தவறிவிடுகிறது. பயன்மதிப்பால் ஈர்க்கப்பட்ட காதலர்களான கார்த்தியும் கயல்விழியும் ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுப்பதில் வெற்றி பெற்ற அளவுக்கு காதலர்களாக எப்படி வெற்றி பெற்றார்கள் என்று ‘ஜிகர்தண்டா’ சொல்லவில்லை. மேலும் கார்த்தி என்ற இளம் சினிமா இயக்குனர் மணிரத்னமாகின்ற அகமாற்றத்தின் விளைவாக ரௌடியாய் மாறி கயல்விழியினை மணந்து வெர்றி பெற்ற இயக்குனராக வாழ்கிறான் என்பது எந்தச் செய்தியையும் சொல்வதில்லை. வைர மலையை கட்டி இழுத்து கடைசியில் கூழாங்கற்களை மட்டுமே கையில் பெற்ற கதையாகிவிடுகிறது.

அபாரமான திரைக்கதை, தொழில்நுட்ப லாவகம், திறமை வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள், உழைப்பு எல்லாம் இருந்தும் ‘ஜிகர்தண்டா’ வெறும் கேலிப்படமாக மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அது உண்மையான உணர்ச்சிகளை பின்பாதியில் கையாள முயற்சி எடுத்திருக்குமேயானால் நல்லதொரு கலைப்படமாய் திரண்டிருக்கும். அந்த அரிய வாய்ப்பினை தவற விட்டுவிட்டார் கார்த்திக் சுப்பராஜ்.   

———————————————————————————

நன்றி: இந்தக் கட்டுரை “காட்சிப்பிழை” தமிழ் திரைப்பட ஆய்விதழில் (செப்டம்பர் 2014, மலர் 2, இதழ் 9) முதலில் பிரசுரமானது; அச்சில் பிரசுரமான கட்டுரையில் இருந்த இரண்டு தகவல் பிழைகளை நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் சுட்டிக்காட்ட அவற்றை இந்த இணைய பிரசுரத்தில் களைந்திருக்கிறேன். நண்பர் சுரேஷ் கண்ணன் சுட்டிக்காட்டிய இரு பிழைகளில் ஒன்றை மட்டும் களைந்திருக்கிறேன். இன்னொன்றை அப்படியே இருக்கட்டும் என்று விட்டிருக்கிறேன்.
1. கணேஷ் வெங்கட்ராமன் மின்னஞ்சல் : "கட்டுரையில் சிறு தகவற்பிழைகள்.(1) தாதா சேகர் கொல்லப்படுமுன் தன் காதலியுடன் பார்ப்பது நீலப்படமல்ல ; டைடான்னிக் திரைப்படம். (2) மலர்ந்தும் மலராத திரைப்பாடல் இடம் பெற்றது பாசமலர் திரைப்படத்தில் ; பாலும் பழமும் அல்ல."  
2. சுரேஷ் கண்ணனின் ஃபேஸ்புக் குறிப்பு: Suresh Kannan எம்டிஎம் எழுதிய கட்டுரையில் நான் கவனித்த வரை (கட்டுரையை பாதிக்காத) இரண்டு சிறுபிழைகள் உள்ளன

1) ரவுடி சுடப்படும் முதல் காட்சி 'கார்த்தி வில்லன் சேதுவை ஏமாற்றி எடுத்த நகைச்சுவைப்படத்தின் காட்சிகளுள் ஒன்று என்று சொல்கிறது." என்பதாக எழுதப்பட்டுள்ளது சரியல்ல,
அது, அசால்ட் சேது நடிகனாகி விட்ட பிறகு நிகழும் (வெற்றிமாறன் இயக்கத்தில்) படப்பிடிப்புக்காட்சி என்பது இறுதியில் தெளிவாகும்.
2) திரையரங்கு கழிவறையில் ரவுடி மீது நிகழும் கொலை முயற்சியின் பின்னணியில் 'சிங்காரி சரக்கு நல்ல சரக்கு" பாடல் ஒலித்தது என்பது சரியல்ல. அப்போது திரையிடலில் இருக்கும் படம் (பழைய) நினைத்தாலே இனிக்கும். ஒலிக்கும் பாடல். "நம்ம ஊரு சிங்காரி..." 


Tuesday, September 2, 2014

உலகு எனும் உச்சரிப்பு

ஃப்ரெஞ்சு கவி பாதலேருக்கு (Baudelaire) பிரபஞ்சமே மொழியாகத்தான் எப்போதும் தெரியும்; பருப்பொருளாக அல்ல. உதாரணமாக ‘கடவுள் உலகை படைத்தார்’ என்று பாதலேர் எழுதமாட்டார். ‘கடவுள் உலகை உச்சரித்தார்’ என்றுதான் அவர் எழுதுவார். இந்த கருத்து ஒன்றும் புதிதல்ல என்றாலும் பாதலேரிடம் அது பெருகின்ற முக்கியத்துவம் அபாரமானது. வாக்னரின் இசை பற்றி பாதலேர் எழுதியிருக்கிற கட்டுரையில் உண்மையான இசை அதற்கு ஒத்திசைவு காட்டுகிற மனங்களில் இசைக்கு இணையான எண்ணங்களை உருவாக்குகிறது. சப்தங்கள் நிறங்களையும், நிறங்கள் ராகங்களையும், நிறங்களும் ராகங்களும் கருத்துக்களையும் ஒன்றன் ஒப்புமை மற்றொன்றாகத் தோற்றுவிக்கின்றன. பொருள்கள் தங்களை எப்போதுமே ஒன்றன் ஒப்புமையில் விளைந்த மற்றொன்றாகவே வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் கடவுள்   உச்சரித்த உலகு பிரிக்க முடியாத சிக்கலான முழுமை கொண்டது. மலை என்பது ஒரு வார்த்தை, நதி என்பது மற்றொன்று, நிலப்பகுதி என்பது ஒரு வாக்கியம். எல்லா வாக்கியங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத் தொடர்பு என்பது தொடர்ந்த உருமாற்றமே. பிரதியாகிய உலகு ஒன்றல்ல பலது; அதன் ஒவ்வொரு பக்கமும் இன்னொரு பக்கத்தின்  உருமாற்றமே என முடிவற்று நீள்வது. உலகு என்பது உருவகத்தின் உருவகம். உலகு இவ்வாறாக அதன் யதார்த்தத்தை இழந்து பேச்சின் வகைமையாகிறது. இந்த ஒப்புமைகளின் தொடர்ச்சியில் அதன் இருதயத்தில் வீற்றிருப்பது இன்மை. பிரதிகளின் பல வடிவங்கள் மூலப் பிரதி என்று ஏதுமில்லை என்று சொல்கின்றன. அதன் மூல இன்மையில் (emptiness) உலகின் யதார்த்தமும்,மொழியின் அர்த்தங்களும் தலைகுப்புற விழுந்து, காணாமல் போகின்றன. 

ஆனால் பாதலேர் அல்ல கவி மல்லார்மேதான் (Mallarme) இன்மையினை உற்று நோக்கி அந்த சிந்தனையை கவிதையின் உள்ளீடாக மாற்றியவர். 


மேலுள்ள குறிப்பு -ஆக்டேவியா பாஸ் எழுதிய “Children of the mire: Modern Poetry from Romanticism to the Avant-Garde” (Translated by Rachel Phillips) Published by Harvard University Press 1991 புத்தகத்தில் பக்கம் 71-இன் சுதந்திர மொழிபெயர்ப்பு.