Friday, November 28, 2014

உயிர் விசையெனும் பந்தினைப் போல்



என்னுடைய சிறுகதைகளுக்கு முன்னுரை எழுதுவதைப் போல சிரமமான காரியம் ஒன்றினை நான் எதிர்கொண்டதில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் என்னுடைய எழுத்துக்கு பொறுப்பற்றவனாக அலட்சியமாக இருந்து வந்திருப்பதுதான் என்று இப்போது தோன்றுகிறது. 1984 ஆம் வருடம் நான் எழுத ஆரம்பித்திலிருந்து 2014 வரை நான் சுமார் இருநூறு சிறுகதைகள் எழுதியிருக்கக்கூடும். அவற்றில் முப்பது சிறுகதைகள் மட்டுமே வெவ்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரம் கண்டிருக்கின்றன ஆனால் அந்த முப்பது சிறுகதைகளையும் கூட  இந்தத் தொகுப்பிற்காக என்னால் சேகரிக்க முடியவில்லை. விடுபட்டு போன கதைகள், கைப்பிரதியில் தொலைந்து போன கதைகள் ஆகியன மனதினை ஆக்கிரமித்திருக்கும்போது  இந்தத்தொகுதிக்கு என்று என்ன முன்னுரையை எழுதமுடியும்? 

இந்தத் தொகுப்பிலுள்ள  கதைகள் என்னிடத்தில் மீண்டும் எப்படி வந்து சேர்ந்தன என்பதற்கான அடிக்குறிப்புகளை ஆங்காங்கே தந்திருக்கிறேன். பெரும்பாலும் நண்பர்களும் முகம் தெரியாத அந்நியர்களும் என்னிடத்தில் கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவும் அவர்களுக்கு என்னுடைய கதைகளின் மேல் இருக்கக்கூடிய அதீத பற்றின் காரணமாகவுமே இந்தத் தொகுப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. அந்த நண்பர்கள் அனைவருக்கும் நான் நன்றியுடையவன் ஆவேன். 
டென்னிசே வில்லியம்ஸின், ‘A street car named desire’ நாடகத்தில் சகோதரியின் கணவனால் கற்பழிக்கப்படும் மைய பெண் கதாபாத்திரம் சொல்லுவாள் “I believed in the kindness of strangers” என்று. அவள்சொல்லும் வாக்கியம்தான் என் வாழ்க்கையையும் எழுத்தையும் பொறுத்தவரை எவ்வளவு உண்மையானதாக இருக்கிறது! 

கடந்த இரண்டு வருடங்களில் நான் எழுதிய பல புதிய சிறுகதைகளையும், குட்டிக்கதைகளையும், நான் பதின்பருவத்தில் எழுதி 'பிரம்மனைத் தேடி' என்ற சிறுகதைத்தொகுப்பாக வந்த கதைகளையும் இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன்.  இந்தக் கதைகள் அனைத்தையும் நான் காலவரிசைப்படி அடுக்கவில்லை. அவை இங்கே எனக்கு மட்டுமே தெரிந்த விளையாட்டுத்தனமான அந்தரங்க வரிசையைக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையின் தர்க்கத்தினையே நான் இந்தத் தொகுதிக்கான முன்னுரையாக பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

இருபது வருடங்களுக்கு முன் எழுதிய கதையிலும் இரண்டே மாதங்களுக்கு முன் எழுதிய கதையிலும் சரி தத்துவார்த்தமாக ஒரு தொடர்ச்சியும் உள் தர்க்கமும் இருப்பதை காலவரிசைப்படி அடுக்கப்படாத இந்தக் கதைகள் எனக்கு உணர்த்தின. தமிழ் நாகரீகத்தின் ஏதோ ஒரு அறியப்படாத அழிவு ஒன்றினையும் அதற்கான புலம்பலையும் கேவலாக, அழுகையாக, வெறி கொண்ட நகைப்பாக, தன்னிலையின் சிதறலாக, அதீத வடிவ ஒழுங்காக, முற்றிலும் சிதைந்த வடிவமாக என பல வெளிப்பாடுகளை இக்கதைகள் ஏந்தி அமைதிபெறுகின்றன. கால ஓட்டத்திற்கு ஏற்ப ஒரு பயணம் இக்கதைகளூடே நிகழ்ந்திருக்குமானால் அந்தப் பயணம் ஒரு எளிமையையும், படித்தவுடனேயே தொற்றி அக உலகோடு உரையாடக்கூடிய வசீகரத்தினை நோக்கியதாகவே இருந்திருக்கிறது. கூடவே நடுக்கடலில் கப்பல் மூழ்கிவிடத் தப்பியவனின் அனாதை  அகம் கொள்ளும் பாவனைகளையே என் கதைகள் கொண்டிருக்கின்றன. நானே ஆச்சரியப்படும் விதத்தில் அவற்றில் தனிப்பட்ட புகார்கள் ஏதுமில்லை, வெறுப்பில்லை, சுயசரிதைக்குறிப்புகள் இல்லை. மாறாக இலக்கிய வடிவங்களை அக வடிவங்களாகக் கண்டு அவற்றோடு வாசக மனமாக உருமாறும் யத்தனிப்புகளாக என் கதைகள் வடிவம் பெற்றிருக்கின்றன.

இலக்கிய வடிவங்கள் பற்றிய கதைகள் (மெடாஃபிக்‌ஷன்) என்று என்னுடைய கதைகளுக்கு பல சக எழுத்தாளர்களும் விமர்சகர்களும் பல முறை பெயரிட்டிருக்கிறார்கள். 'மைத்ரேயி' கதை கட்டுரை வடிவத்தினையும், 'மர்ம நாவல்' நாவலையும், 'நாடகத்திற்கான குறிப்புகள்' நாடகத்தினையும் 'தமிழ் மற மகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை' விமர்சனத்தையும் தன் மையக்கருப்பொருளாகக் கொள்வதும் இதே போல பல கதைகளும் இலக்கிய வடிவங்களுக்கு நேரடியான அல்லது மறைமுகமான சுட்டுதலைக் கொண்டிருக்கின்றன என்பதினால் என் கதைகளை மெடாஃபிக்‌ஷன் (metafiction) என்று அழைப்பது பொருத்தமானதுதான். ஆனால் அவை இலக்கிய வடிவங்கள் பற்றி மட்டும் பேசுவதில்லை.  எழுத்தாளனாக என் அக்கறை வடிவங்களைப் பற்றியது மட்டுமல்ல. என் அக்கறைகளை நேர்கோடற்ற முறையில் சொல்வது என் கதைகளை வாசக அனுபவத்திற்கு அணுக்கமானதாக மாற்றக்கூடும். 

1984 ஆம் ஆண்டில் நான் கல்லூரி மாணவனாக எழுதத்தொடங்கியபோது தமிழகத்தின் கல்லூரி வளாகங்கள் மிகவும் அரசியல் எழுச்சி பெற்ற வளாகங்களாக இருந்தன. எழுபதுகளின் இறுதியில்  இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தை அடுத்து வன் அடக்குமுறைகளிலிருந்து மீண்டு வந்த நினைவுகள் கல்லூரி வளாகங்களை நிறைத்திருந்தன; ஈழத்தமிழ் போராட்டம் 1983இல் தமிழகமெங்கும் மிகப் பெரிய மாண்வர் எழுச்சிகளை ஏற்படுத்தியிருந்தது. இருத்தலியல் தத்துவங்களை குறிப்பாக சார்த்தரையும், காம்யூவையும், சிமோன் தி பூவாவையும் ஆங்கில இலக்கிய முதுகலை மாணவர்களாகிய நாங்கள் கற்பதும் விவாதிப்பதுமாய் இருந்தோம். தேசத்தின் சரித்திரத்திற்கும் தனி மனித வாழ்வுக்கும் உள்ள உறவுகள் எங்களுடைய விவாத பொருளாய் இருந்தது. ரமேஷ் குமார், செந்தில்குமார், ஃபிரான்சிஸ் மனோகர் ஆகிய நண்பர்கள் நடத்திய கல்லூரி வளாக இலக்கிய பத்திரிக்கையான ‘ராகம்’ இதழின் ஆசிரியர் குழுவில் நானும் சேர்ந்துகொண்டேன். மாதம் ஒரு முறை வந்த ‘ராகம்’ இதழில் ஸில்வியா என்ற புனைபெயரில் சிறுகதைகளும் என் இயற்பெயரில் கட்டுரைகள் எழுதினேன்; பல முக்கிய மொழிபெயர்ப்புகளும் செய்தேன். 

ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகளின் மேலும் அவருடைய தற்கொலையின் மீதும் பதின்பருவத்தின் கற்பனா வாத ஈடுபாட்டின் காரணமாகவே நான் என் புனைபெயரை ஸில்வியா என்று தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஆனால் கடந்த சில பல வருடங்களில் ஸில்வியா என்ற பெயர் துரதிருஷ்டத்தின் குறியீடு என்ற எண்ணம் என்னிடத்தில் முழுமையாக பதிந்துவிட நான் அப்பெயரை துறந்துவிட்டேன். ஆனால் கதைகளைத் துறக்க மனம் வரவில்லை. இது ஏன் என்று  யோசித்துப் பார்க்கும்போது நான் பரந்து பட்ட தேசமொன்றின் பிரக்ஞையின் அக வரலாற்று தருணங்களையே கதைகளாக்கியுள்ளேன் என் தனிப்பட்ட சுய சரிதையின் எந்தச்சுவடும் அந்த கதைகளில் இல்லை என்பது எனக்கு திட்டவட்டமாகத் தெரியவந்தது. ‘ராகம்’ இதழில் ஸில்வியாக எழுதிய முதல் கதையான ‘ஸ்வப்ன ஸ்னேகிதா’ வின் நாயகி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளன்று வயதுக்கு வருகிறாள்; மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்று அவள் தேர்ந்தெடுக்காத கணவனுடன் அவளுக்கு முதலிரவு நடக்கிறது. அவள் தான் விரும்பிய காதலனுடன் வாழ நினைத்தது கனவெனவே ஆகிட்டதை அசை போடுகிறாள்.  நனவோடை உத்தியில் இந்தக் கதையை எழுதியபோது நான் என்னுடைய ஆங்கில இலக்கிய முதுகலை ஆய்வேட்டிற்காக ஜேம்ஸ் ஜாய்ஸின் நாவலான ‘யுலிசஸை’ பற்றி வாசித்துக்கொண்டிருந்தது தற்செயலான தொடர்பாக இப்போது தோன்றவில்லை. “Why does Molly Bloom menstruate in the last chapter of James Joyce’s ‘Ulysses’ ?” என்ற என் ஆய்வேடு பெண்ணுடல்கள்  பரந்து பட்ட தேச சரித்திரத்தோடு தொடர்புடையவை என்று விவரித்தது என்று சொல்லவும் வேண்டுமோ? ‘ராகம்’ இதழ் இரண்டோ மூன்றோ வெளிவந்தபோது கவிஞர் ஆத்மாநாமின் தற்கொலை செய்தி என்னை மிகவும் நிலைகுலையச் செய்வதாக இருந்தது. ‘பிரம்மனைத் தேடி’ சிறுகதையில் நாயகனின் பெயரினை ஆத்மாநாமின் இயற்பெயரான மதுசூதனன் என்று வைத்தேன். கதையில் அதி நுண்ணுணர்வு வாய்ந்த மதுசூதனன் தன் அம்மாவின் ஒரு சொல் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். தாயன்பு, பெண்களின் பெருங் கருணை ஆகியன என் கதைகளில் தொடர்ந்து வருகின்றன. 2013 ஆம் ஆண்டு எழுதிய ‘மீனாள் அழுகிறாள், ரகு நந்த’ கதையில் பதின்பருவ சிறுமி தன்னுடைய ஏழ்மை காரணமாக சுரண்டப்படும் நிலையில் இருந்தாலும் தாய்பாலால் முலை விம்மும் கருணையை வெளிப்படுத்துகிறாள்.   

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று நெருக்கடிகளினால் சுய உடல் அழிவிற்கும் சுய அக அழிவிற்கும் ஆளாகும் நபர்களின் குறிப்பாக பெண்களின் அல்லது பெண் அக உலகங்களைக்கொண்ட ஆணுடல்களின் கதைகளையே நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன்.  கணவன்- மனைவி உறவின் பொய்மையில் அந்நியமாகிப் போன மனைவியின் மன ஓட்டத்தினை ‘பாறைகள்’ கதையில் வாசிக்கிறோமென்றால் முற்றிலுமாக சிதைந்து விட்ட சுயத்தின் சித்தரிப்புகள் ‘செப்பிடு வித்தை’ மற்றும் ‘மர்ம நாவல்’ ஆகிய கதைகளில் வாசிக்கக்கிடைக்கின்றன. ‘மர்ம நாவல்' சிறுகதையில் வந்த கதாபாத்திரமான மு சமீபத்திய வருடங்களில் என் குட்டிக்கதைகளில் மீண்டும் வருபவனாகிவிட்டான். அவனுக்கு காஃப்காவின் ‘கே’ கதாபாத்திரத்தின் சாயலும் முல்லா நஸ்ருதீனின் சாயலும்  காலப்போக்கில் சேர்ந்துகொண்டன. 

‘மர்ம நாவல்’ சிறுகதையில் போர்ஹெஸின் பாதிப்பில் உருவான விளையாட்டுத்தனமான பட்டியலும், அந்த பட்டியல் கேள்விக்குள்ளாக்குகின்ற epistemology-யும் சுயத்தின் அழிவினால் உண்டாகிற nihilismமும்   ஒரு புனைவு வடிவத்தினை ஏற்படுத்திக்கொடுக்கின்றன. அந்த புனைவு வடிவத்தில் நான் முழுமையாகச் சிக்கிகொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த புனைவு வடிவத்திலிருந்து முட்டி மோதி வெளியே வர நான் செய்திருக்கும் பிரயத்தனங்கள்தான் என்னுடைய இதர கதைகள் என்று நான் ஒரளவு தீர்மானமாகவே சொல்லமுடியும். ‘மர்ம நாவல்’ சிறுகதை ‘பிற’ என்ற ஒற்றைச் சொல்லில் முடிவது இத்தகைய இதர யத்தனங்களை சுட்டுவதற்கே. 

சூன்யவாதம் உருவாக்கும் வெறுமையிலிருந்து தப்பிப்பதற்கு இரு வழிகள்: ஒன்று நீட்ஷேவிய அதி மனிதனாகுதல். ‘ஒரு துண்டு வானம்’ கதையில் வரும் நீட்ஷேவிய அதி மனித நாயகன் அரசியல் சிறைக்கைதியாக இருக்கிறான். அவன் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலை  தனது வெற்றியை சதா நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கக்கூடிய ஒரு கார்ப்பரேட் நிறுவனம். சிறைச்சாலை கார்ப்பரேட்டின் பங்குகள் சந்தையில் சரிந்துகொண்டிருக்கின்றன. கதையின்  நாயகனை மனமுறிவுக்கும், உடல் தோல்விக்கும் உள்ளாக்குவதன் மூலம் சிறைச்சாலை தன்னை வெற்றிகரமான நிறுவனமாக விளம்பரப்படுத்துகிறது. நீட்ஷேவிய அதி மனிதனுக்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் என்ன ஆவார்கள்? சூன்யவாதம் உருவாக்கும் வெறுமையிலிருந்து தப்பிப்பதற்கான இரண்டாம் வழி காருண்யம்.

காருண்யத்தின் மொத்த சொந்தக்காரர்களாக என்னுடைய புனைவுலகில் பெண்களே இருக்கிறார்கள். அவர்களாலே நாம் வாழும் பிரபஞ்சம் உணர்ச்சிகரமான ஒருமையைப்  பெறுகிறது. பெண்களே இப்பிரபஞ்சத்தின் மூல உயிர்சக்தியின் அடிப்படை விசையாக இருக்கிறார்கள்.  பேரழிவிற்குப் பின்னரும்  இனங்களைக் காப்பவர்களாகவும் கைவிடப்பட்ட ஆத்மாக்களை கரை சேர்ப்பவர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள். பெண்களே நாம் வாழும் பிரபஞ்சத்தின் ரகசியங்களும் காரணங்களும் ஆவர்.   ‘மைத்ரேயி’ கதை இப்படி பெண்ணை உடலாகவும் பெண்மையை பிரபஞ்சமாகவும் கொண்டாடுகிறது. ஆகவேதான் ‘மைத்ரேயி’ இந்தத் தொகுப்பின் முதல் கதை.  தொகுப்பின் முதன்மைக் கதையும்கூட.

‘மைத்ரேயி’ கதை எனக்கு வேறு பல வகைகளிலும் முக்கியமானது. முழுக்க முழுக்க முன்னிலை கதை சொல்லலாக எழுதப்பட்ட கதை அது. நானல்ல, பிறன்மையே, நீயே, முக்கியம் என்ற விழுமியத்தைக் கட்டமைக்கும் கதை.  உயிர் சக்தியினை சத்துவ சக்தியாய் பார்க்கும் பார்வை என்னிடத்தில் தோற்றம் கொண்ட கதையாக ‘மைத்ரேயினை’ வாசிக்க வேண்டும். எந்த நிலையிலும் உயிரழிவினை மறுத்தல் அதன் முக்கிய அம்சங்களுள் ஒன்று. தத்துவ அறிஞர் ஹென்றி பெர்க்சனின் élan vital (இலான் விடால்) என்ற உயிர் சக்தியை பற்றிய கருத்தாக்கம் என்னுடைய மைய சிந்தனை இழைகளுள் ஒன்றாக எப்பவுமே இருந்து வந்திருக்கிறது. ‘மர்ம நாவல்’ கதையின் cheerful nihilism (சியர்ஃபுல் நிஹிலிசம்) என்னால் உயிர் சக்தியின் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கையினாலேயே, அதை பெண்மையின் வடிவமாக கொண்டாடுவதன் மூலமே, அதை பிரபஞ்சத்தின் உணர்ச்சிகர வியாபகமாக விரிப்பதன் மூலமே கடந்து செல்ல முடிந்திருக்கிறது. உயிர் சக்தியின் இயக்கத்தினை எழுதி எழுதி தீராது எனக்கு. ‘பெண் வேடமிட்ட பெண்’ கதை ‘மைத்ரேயி’ கதையில் தோற்றம் கண்ட கரு வேறு வகை பரிமாணம் பெறுவதற்கு நல்ல உதாரணம். 

உயிர்சக்தி பற்றிய எனது மைய கவனம் எனது தேடலை இந்திய தாந்தரீக மரபுகளை நோக்கி திருப்பியதை பதிவு செய்த கதை ‘பெண் வேடமிட்ட பெண்’. தாந்தரீக மரபுகளைப் பற்றி மேலும் மேலும் கற்க அவை என்னுடைய கதைகளில் தன்னியல்பாக உருவாகி வந்திருக்கும் கருத்துக்களோடு மிகவும் ஒத்துப்போவதாக நான் நினைக்க ஆரம்பித்தேன். பெண்ணுடல், இயற்கை, கால மாற்றம். பருவங்கள் ஆகியவற்றுக்குள்ள  தொடர்பு உயிர் சக்தியின் இயக்கத்திற்கு வழிவகை செய்யக்கூடியதாகவும் அதற்கு எதிரானவை ஆதரவானவை என என் புனைவுலகு பலவற்றையும் நனவற்று வகுத்துவைத்திருக்கிறது. உயிர் சக்தியின் இயக்கத்திற்கு எதிரானவற்றை பகடிக்கும்  கேலிக்கும் என் கதைகள் உள்ளாக்குகின்றன. எது எதிரானது எது ஆதரவானது என்பது என் புனைவின் தர்க்கங்கள் சார்ந்தவை மட்டுமே. ‘பெண் வேடமிட்ட பெண்’ தாந்தரீகத்தினையும் புரட்சிகர அரசியலையும் உயிர்சக்தியின் இயக்கத்திற்கு ஆதரவான ஒரே செயலின் இரு பக்கங்கள் என்று புனைவின் வழி நிறுவுகிறது. அந்த புனைவு கனவு, பிரம்மை, யதார்த்தம் ஆகியவற்றுக்குள் உள்ள வேறுபாடுகளை அழிக்கிறது; இந்த வேறுபாடுகள் இல்லாத உலகு எனக்கு அதன் பிறகு எழுதப்பட்ட கதைகளில் இயல்பானதாகிவிட்டது. ‘தமிழ் மற மகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக் கதை’யோ   ஆண் வம்சாவளி மரபு, பெண் வம்சாவளி மரபு என்ற வேடிக்கை பிரிவுகளை உண்டாக்கி ஆண், பெண், இனம், மரபு ஆகியனவற்றை absolute categories ஆகக் கொண்டு உருவாக்கப்படும் சொல்லாடல்களை மேலோட்டமான வாசிப்பிற்கு புலனாகாதவாறு பகடி செய்கிறது. ஆம், தூய, நிலையான சாதி, மதம், தேசம் உள்ளிட்ட வகைமைப்படுத்துதல்கள் வன்முறையானவை எனவே பகடியால் தகர்க்கப்பட வேண்டியவை. காதலுக்கு எதிராக, கலப்புத் திருமணத்திற்கு எதிராக அறிக்கை விட்ட அரசியல்வாதியை கிண்டல் செய்கிறது ‘சில்வியா எழுதாத கதை அல்லது மு என்ற இராமதாசு’. தனித்தமிழில் எழுதப்பட்ட இந்தக் கதை தூய வகைமைப்படுத்துதலை மொழியில் அடையாளம் காணுகிறது. ‘நுனி’ என்ற அறிவியல் புனைகதையோ நம்முடைய ‘அறிவியல் சிந்தனைகள்’ எப்படிப்பட்ட புராணக்கதையாடல்களுக்குள் சிக்கியிருக்கின்றன என பால்வீதிகளூடே நடக்கும் கதையை வைத்து சொல்கிறது.

 சமூகவியல், வரலாறு, இலக்கிய விமர்சனம் அல்லது தத்துவம் போல தோற்றம் அளிக்கும் வகையில் எழுதப்பட்ட பத்திகளால் நிரம்பியிருக்கிறது ‘தமிழ் மற மகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை’. இவை அனைத்தும் அபத்தங்கள் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காஃப்காவும் பெக்கெட்டும் சாதாரண தினசரி நிகழ்வுகளில் அபத்தத்தை உணர கற்றுத்தந்தார்கள் என்றால் என் கதைகள் தூய்மையான வகையினங்களை உருவாக்குவதிலுள்ள metaphysical absurdity ஐ கவனப்படுத்த முயல்கின்றன.

அண்மை காலத்தில் எழுதப்பட்ட என்னுடைய கதைகளில் மிருகங்களும் பிற உயிரினங்களும் அதிகமும் நடமாடுகின்றன. “மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி’ கதையில் குரங்குகள், ‘மீனாள் அழுகிறாள், ரகுநந்த’ கதையில் ஆமைகள், ‘இரவு மணி: 11:59 கதையில் ஆக்டோபஸ், ‘நாங்கள் கோபியை மிரட்டினோம்’ கதையில் பன்றிகள்  என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.  மிருகங்களின் தீடீர் வருகை எதற்கு என் கதைகளில் என்று எனக்கு மனதிலாகவில்லை. ‘மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி’ கதையில் ஒரு வாசகம் வரும்: “கண்ணாடிகளின் மேற்புறங்கள் கள்ளமற்றவை அல்ல அவை ஆழ்பிரதிகள் இருப்பதான மாயைகளை உண்டாக்குகின்றன. ஆழ்பிரதிகள் எவற்றுக்குமே இல்லை எல்லாமே மேற்புறங்கள்தான்”. ஒரு வேளை இந்த வாசகம் உண்மைதான் போலும். அதே நேரத்தில் ‘ஒரு துண்டு வானம்’ கதையில் வரும் “இவ்வுலகும் உயிரும் அழகியல் நிகழ்வாக அன்றி வேறு எதுவாகவும் ஜீவித நியாயம் பெறுவதில்லை” என்ற வாசகமும் உண்மைதானே?

சூன்யவாதத்திலிருந்து முழுமையாக விடுபட்டு மனிதர்களின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டவனாக நான் மாறிவிட்டேன் என்பதினையே குறுங்கதை வடிவங்களில் எனக்குள்ள ஆர்வம் சொல்கிறது. குறுங்கதைகள், டிவிட்டர் கதைகள், ஃபேஸ்புக் கதைகள் என்று எழுதிப்பார்ப்பது மிகக்குறைவான வார்த்தைகளிலேயே நாம் நினைப்பதை சக மனிதனுக்கு உணர்ர்த்திவிட முடியாதா என்ற ஆதங்கத்தினால்தான். குறு வடிவங்களிலும் நான் நகைத்துக்கொண்டே இருக்கிறேன் என்பதும் உண்மை.

கைக்குழந்தையாக இருந்தபோது என் அம்மா என்னை “Brow binkey, eye winkey, nose noppy, cheek cherry, mouth merry’ என்று ஒவ்வொரு அவயங்களாகத் தொட்டு கொஞ்சுவார்களாம். அப்போதெல்லாம் நான் பெரிதாக சத்தமிட்டு சிரிப்பேனாம். கைக்குழந்தை இப்படி சத்தம்போட்டு சிரிக்குமா என்று என் அம்மாவுக்கு ஆச்சரியமாக இருக்குமாம். அந்த கொஞ்சலின் குதூகலத்தையே கதைகளின் வழி நான் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். அதுவே இக்கதைகளின் பின்னணியில் உள்ள உயிர்விசை.

இந்த முன்னுரையை வாசிக்காமலும் நீங்கள் நேரடியாக கதைகளை வாசித்து உங்கள் விருப்பம் போல முடிவுகளுக்கு வரலாம்

என் கதைகளை மிகவும் அக்கறை எடுத்து பதிப்பிக்கும் ‘அடையாளம்’ பதிப்பகத்திற்கும் நண்பர் சாதிக்கிற்கும் அவருடைய பதிப்பு குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


---------------------------------------------------------------------------------------------------------
"மைத்ரேயி மற்றும் பல கதைகள்' எனும் தலைப்பில் அடையாளம் பதிப்பக வெளியீடாக இந்த வருடம் வெளியாக இருக்கும் என் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை.