Wednesday, December 23, 2015

மீண்டும் பிரயாணம் அருணாச்சல பிரதேசத்திற்கு



இன்று குடும்பத்தோடு என் மனைவியின் ஊர் இருக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்கிறேன். அவருடைய ஊர் கிழக்கு இமயமலைத் தொடர்ச்சியில் சீனா, திபெத், மியன்மார், இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் இருக்கிறது. சென்னையிலிருந்து விமானத்தில் கொல்கத்தா, அங்கிருந்து டிப்ரூகர், பிறகு ஆறு மணி நேரம் மியாவ் என்ற ஊருக்கு சாலை வழி பயணம். அங்கிருந்து அல்லது அருகாமையிலுள்ள வேறு ஊர்களிலிருந்து ராணுவ விமானம் செல்லுமென்றால் (சமீபத்தில் ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனதால் ஹெலிகாப்டர் சிவில் சேவையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்) அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி மலையுச்சியில் இருக்கும் என் துணைவியாரின் கிராமத்திற்கு அருகில் இருக்கும் ராணுவ தளத்திற்குச் செல்லலாம். பிறகு ஒரு நாள் நடந்து சென்று அவருடைய கிராமத்தை அடையலாம். ராணுவ விமானமும் செல்லவில்லையென்றால் ஏழு நாட்கள் மலையேறி அவருடைய கிராமத்தை அடையலாம். குழந்தைகளோடு மலையேற்றம் சாத்தியமில்லை என்பதால் மியாவ் வரை செல்லவே முடியும் என்று நினைக்கிறேன். என் மனைவியின் உறவினர்கள் மிகவும் பிரியமானவர்கள் என்னை அருணாச்சல பிரதேசத்தின் மாப்பிள்ளை என்ற பொருள் வரும்படியான லிசு (என் மனைவியின் தாய்மொழி) வார்த்தையில் அழைப்பார்கள். ஆண்களும் பெண்களுமாய் பிரியத்தைக் கொட்டுவார்கள். ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து, போன மாதம் ஜெர்மனி, தவிர தொடர்ச்சியான உள் நாட்டு பயணங்கள் ஆகியவற்றினால் மிகவும் களைப்புற்றிருக்கிறேன் என்றாலும் ஆங்கியோவின் சுற்றத்தாரின் அன்பை நினைத்தே இந்த வருட பிரயாணத்திற்கு சம்மதித்தேன். ஒரு வேளை நாங்கள் மியாவ் வரைதான் செல்ல முடியுமென்றால் ஆங்கியோவின் கிராமமே கீழே இறங்கி வந்து எங்களோடு புத்தாண்டு கொண்டாடுவதாக ஏற்பாடு. என் மகன்கள் முதல் முறையாக அவர்களுடைய அம்மாவின் ஊருக்கு செல்ல்விருப்பதால் மிகவும் உற்சாகமாய் இருக்கிறார்கள். நோடெஹிங் நதியில் மீன் பிடித்தல், இருவாட்சிகளை காட்டில் பின் தொடருதல் என அவர்களுக்கு புதிய விளையாட்டுக்களும் பொழுதுபோக்குகளும் காத்திருக்கின்றன.

என் துணைவியார் ஜப்பானிய லிசு வம்சாவழியினர் அவருடைய இரண்டடுக்கு பர்மிய பாணியிலான வீட்டைச் சுற்றி ருத்திராட்ச மரங்கள் அடர்ந்திருக்கின்றன. மின்சாரமோ, சாலை வசதிகளோ இல்லாத அந்த கிராமத்தில், இமயமலையின் பனிச்சிகரங்களை பால்கனியின் நின்றாவாறு பார்க்க கண் விழிப்பது ஒரு சுகானுபவம்.

ஒவ்வொருமுறை அருணாச்சலத்திற்கு செல்லும்போதும் இல்லை அவர்கள் ஊரிலிருந்து யாரேனும் வரும்போதும் மூட்டை மூட்டையாய் எனக்கு ருத்திராட்சங்கள் கிடைக்கும். இங்கே சென்னையில் எங்கள் வீட்டில் நின்று கல்லூரி படிப்பை முடித்து வேலைக்குப்போன என் மைத்துனன் பாயோ மூளை புற்று நோயால், சிகிக்சை அளித்தும் பயனளிக்காமல், நான் ஜெர்மனியில் இருந்தபோது, அவர்கள் ஊரில் இறந்துபோனார். அந்தத் துயரத்தின் பெரு வளையம் எங்கள் குழந்தைகளை அணுகாமல் ருத்திராட்சங்களும் அவர்களும் பார்த்துக்கொள்வார்கள் என்று என் மாமனார் தொலைபேசியில் சொன்னார். ஆங்கியோவும் அவர் உறவினரும் கிறித்தவர்கள் என்றாலும் எனக்காக என் மாமனார் ருத்திராட்சங்களை குறிப்பிட்ட பண்பும், எங்கள் குழந்தைகளுக்காக தங்கள் துக்கத்தை மறைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களில்  ஈடுபட ஒரு கிராமமே தயாராக இருப்பதும் ஆதிவாசி சமூகங்களின் இயல்புகள்.