Wednesday, August 10, 2016

அஞ்சலி : டி கே வி தேசிகாச்சார் | ஒரு தத்துவ ஆசிரியரின் மறைவு |தமிழ் தி இந்து கட்டுரைஅஞ்சலிக் கட்டுரையை இந்த சுட்டியில் வாசிக்கலாம்:

http://tamil.thehindu.com/opinion/columns/ஒரு-தத்துவ-ஆசிரியரின்-மறைவு/article8967102.ece?homepage=true&theme=true 1994 ஆம் ஆண்டு நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது யோக சிகிட்சைக்காக கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்திற்கு சென்றேன். நான் கிருஷ்ணமாச்சாரியா அவர்கள் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு, குறிப்பாக சமாதி பாதத்திற்கு எழுதிய உரையை நான் ஆழமாகப் பயின்றிருந்தேன். இருந்தாலும் நான் மிகுந்த அவநம்பிக்கையுடனேயே யோக மந்திரத்திற்கு சென்றேன். அப்போது கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தின் இயக்குனராக பேராசிரியர் ஈ.ஆர்.கோபாலகிருஷ்ணன் இருந்தார். என்னுடைய உடலையும் மனத்தையும் முதலில் மருத்துவர்கள் சோதித்தனர் அதன் பிறகே கோபாலகிருஷ்ணன் என்னைப் பார்த்தார்.அவர் எனக்கு வெகு குறைவான ஆசன மற்றும் மூச்சுப் பயிற்சிகளையே அளித்தார். என் மனமும் உடலும் இருந்த நிலைமைக்கு அந்த குறைவான பயிற்சிகள் போதும் என்று அறிவுறுத்தினார். ஒரு வாரப் பயிற்சியிலேயே என் முகமும் மனமும் மிகவும் பிரகாசமாகிவிட்டன. அந்த நாட்களில் என்னை மந்தைவெளி- மைலாப்பூர் தெருவில் பார்த்த சாரு நிவேதிதா இவ்வளவு தேஜஸ்வியாக இருக்கிறாயே என்று ஆச்சரியப்பட்டார். கோபாலகிருஷ்ணனோடு எனக்கு நட்பு நெருக்கமாக அவர் எனக்கு காயத்ரி மந்திரத்தையும் சந்தியாவந்தனம் செய்யும் முறைமையையும் கற்பித்தார்; அவர் வேத பாராயணம் செய்வதன் அடிப்படைகளையும் வாய்மொழி வாய்பாடுகளையும் கூடவே எனக்கு சொல்லித் தந்தார். நான் சமஸ்கிருதம் கற்றுகொள்ள ஆரம்பித்தேன்.

ஏழெட்டு வருடங்களில் சமஸ்கிருதத்தில் ஓரளவு பாண்டித்தியமும் ருத்ர பாராயணத்தில் தேர்ச்சியும் வந்துவிட்டது. வேத பாராயணமும் தியானமும் என்ற பொருளில் ஆங்கிலத்தில் சில ஆய்வுக்கட்டுரைகள் எழுதினேன். அந்தக் கட்டுரைகளை எழுதுவதற்காக  விளக்கங்களைக் கேட்பதற்காக டி கே வி தேசிகாச்சார் அவர்களை 2000ஆம் ஆண்டு மூன்று நான்கு முறை சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு அளித்த விளக்கங்கள் நுட்மானவையாகவும் அதே சமயத்தில் செயல்முறையின்பாற்பட்டவையாகவும் இருந்தன. நான் கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தில் பெற்ற சிகிட்சை எப்படி தேசிகாச்சார் பதஞ்சலியை ஆழமாக உள்வாங்கியிருந்ததால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் புரிய வந்தது. தேசிகாச்சார் யோகத்தின் ஆன்மீகத்தையோ அல்லது கடவுள் நம்பிக்கையையோ வலியுறுத்தவில்லை.அவர் எல்லா ஆசனங்களும், எல்லா வகை மூச்சுப் பயிற்சிகளும் அனைத்து உடல்களுக்கும் உகந்தவை அல்ல என்பதை எடுத்துச் சொன்னார். யோக சூத்திரத்தில் சமாதி பாதம், அத்தியாயம் 1, 35 ஆவது சூத்திரமான viṣyavatī vā pravittiṛupanna maansaḥ stitinibandhinī விளக்கமளித்த தேசிகாச்சார்  பார்த்தலும் கேட்டலுமாகிய உணர்வுகள் மனத்தினை கட்டுப்படுத்துகின்றன, உணர்வுகளை தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதன் மூலமே மனதை நாம் அறியமுடியும் என்றார். சாதனா பாதம்  அத்தியாயம் 2, 33 வது சூத்திரம் vitarkabādhane pratipakṣabhāvanam என்பதற்கு நாம் பிறரைப் பற்றிய பார்வைகளை எப்படி தொடர்ந்து பரிசோதனைக்கு  உட்படுத்த வேண்டும் என்று விளக்கினார்.  தேசிகாச்சாருக்கு  யோகப் பயிற்சி என்பது கவனத்தைக்குவித்தல், தியானம் செய்தல் என்பது மட்டுமன்று. அது சுயபரிசோதனைக்கான கருவி; ஆசனங்களும் மூச்சுப்பயிற்சிகளும் சுயபரிசோதனைக்கான வலுவை உடலுக்கும் மனதுக்கும் வழங்குவதற்கான சாதனங்கள். விபூதி பாதம் அத்தியாயம் 3, 43 ஆவது சூத்திரம் bahirakalpitā vṛttimahāvidehā tataḥ prakāśāvaraṇakṣayaḥ என்பதற்கு மனதினை கற்பனையும் நினைவுகளும் ஆள்கின்றன அவற்றிலிருந்து மனம் விடுபட்டு ஒரு பொருளை பொருளாகவே அறிவதற்கு மனம் வேறொரு பிரக்ஞையின் தளத்தினை அடையவேண்டும் என்று தேசிகாச்சார் உரை எழுதினார். மனதிற்குள்ளாகவே மனதின் அத்தனை செயல்பாடுகளையும் கவனிக்கிற உணர்கிறவர் இருப்பதாக கைவல்ய பாதம் அத்தியாயம் 4, 18 ஆம் சூத்திரத்திற்கு (sadā jñātāścittavṛttayastatprabhoḥ puruṣasyāpariṇāmitvāt ) உரை எழுதிய அவர் மனதின் உள்ளார்ந்த கவனிப்பாளரையே நாரயணன் என்று நம்பினார் என்று கருத இடமிருக்கிறது.


தேசிகாச்சார் அவர்களை என்னுடைய கட்டுரைகளுக்கான சந்திப்புகளின் போது ஒரு முதிர்ந்த தத்துவ அறிஞரை சந்திப்பதான அனுபத்தையே அடைந்தேன். 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரம் யோகாசான பயிற்சிகளோடு, வேத பாராயணம் ஆயுர்வேத உணவு மற்றும் மருந்துகள் ஆகியவை பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபடும் நிறுவனம் என்று அறிந்திருக்கிறேன். யோகம் ஒரு கலை, அறிவியல், அறிவுச்செயல்பாடு, ஆன்ம சாதனம், தினசரி ஒழுக்கம் என்பதை தேசிக்காச்சார் அவரை நாடிச் சென்றோருக்கெல்லாம் கசடறக் கற்பித்தார். தேசிகாச்சாரின் மறைவு மரபான ஞானத்தின்படி வளமான வாழ்வினை வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொன்ன ஆசானின் மறைவு; அன்னாருக்கு என் அஞ்சலிகள்.  

புத்தகங்களுக்ககான சுட்டி:

http://www.kym.org/catalogue.html 


No comments: