அனாதையின் காலம் | பகுதி1 | கண்ணிமையின் ஒன்பது அசைவுகள் | நீள் கவிதை எம்.டி.முத்துக்குமாரசாமி |
C.Douglas "Untitled"; 4 feet X 3 feet; mixed media on paper 1995 |
ஒளி நெறி: மாயாத்
தீச்சுடர்
---
தித்திப்பின் திருவுளம்
நீ நீ என
பிரகாசிக்கிறது
திருவிளக்கின் தீபச்சுடர்
தீ தீ என
சடசடக்கிறது
நீயே தீயே
தீயே நீயே
எனத்
தன்னகம் அழித்துத்
தீத் தின்று எரிந்த திரி
மாயாத் தீச்சுடரை
தியானிக்கிறது
1
யார் உன்னைத் தோள் தொட்டுத் திருப்பியது?
யார் உன்னைத் தோள் தொட்டுத் திருப்பியதென
திரும்பிப் பார்க்காதே
கண நேரமும் கசிந்துவிடாதே
காலத்தின் கண்ணிமை அசைவுகள்
காட்டிக்கொடுத்தது என்ன
அன்பின் தொடுகையென்பது பிரேமை
பூவிளக்கின் சுடர் நேசமென்பது கனவு
கைகளைத் தொங்க விடு
நேராக நில்
விரைந்து செல்
மந்திரமாய் முணுமுணுத்துக்கொள்
இப்போதைய காலம் வேறு
எல்லோருடைய முகங்களும்
ஒரே வார்ப்புகள் கொண்டவை
அவற்றில் உலர்ந்த வாழை இலைகளின்
சாம்பல் பூத்திருக்கிறது
தொடுகையின் அபூர்வ வெம்மையை
மட்டும்
நினைவு கொள்
பூமியின் அழைப்பென
2
காற்றே கொஞ்சம் நில்லு நில்லு
ரகுநந்தன் நடந்து செல்கிறான் காலை நடைப்
பயிற்சிக்கு. அவன் பேட்டா ஷூ தொடுவதில்லை
எந்த அகலிகை கற்களையும். தெருக்குப்பைகளைச் சூதனமாய்
தாண்டிவிடுகிறான். காட்டின் நினைவுகளில். ஒருக்களித்து
படுத்திருக்கும் பிச்சைக்காரனையும் சோம்பல் முறிக்கும்
பூனையையும் பார்ப்பதில்லை அவன். சிவ தனுசு ஏந்திய
தோள்களில் எலும்புகள் தேய்ந்துவிட்டன. லேப்டாப் பை தூக்கி.
தப்படி மானி இன்னும் 324 எட்டுகளில்
தெருமுனையைத் தொடுவான்
என்கிறது. இன்னும் அவன் 826 காலெட்டுகள்
போடவேண்டும். ரத்த சர்க்கரையை கரைப்பதற்கு.
வியர்க்க வேண்டும் அவனுக்கு. கொழுப்பு கரைவதற்கு.
மேகமே கொஞ்சம் நில்லு நில்லு
ரகுநந்தன் தெருமுனை வீட்டை நெருங்கி
விட்டான். அதிகாலையின் வெள்ளி
தெரியவேண்டும் கோலம் போடுபவளுக்கு.
அவளுடைய கருநீல வண்ண நைட்டியில் தெரியும்
சிவப்பு பிரா போல மேகத்துள் மறைந்திருக்கிறான்
கதிரவன். பால் குக்கர் விசிலெண்ணிக் கொண்டே
மயில் கோலத்திற்கு புள்ளி
வைக்கிறாள் அவள். நேற்று பஸ்ஸில் தொட்டவன்
தொடாதவன் என புள்ளிகளை இணைக்கிறாள்.
ஃபேஸ்புக்கில் கோலம்
போடும் படமில்லை என நினைத்தவாறே
இமை உயர்த்துகிறாள்.
மழையே கொஞ்சம் நில்லு நில்லு
ரகுநந்தன் நுழைவாயில் கோலத்தினை
அடைந்து விட்டான். கைபேசி ஒலிக்க
ஒற்றைக் காகம் கரைகிறது. தெருவின்
மரண குழி திறந்திருக்கிறது. யாரோ
முண்டா பனியனும் கட்டம்போட்ட கைலியும்
அணிந்தவர் மதிலுக்கு மேல் எட்டிப்
பார்க்கிறார். புல் டோசர் ஒன்று கடகடத்து
திரும்புகிறது. மயில்க் கழுத்து நீலமா
பச்சையா எனக் கால் தடுமாற
கண்ணோடு கண் நோக்குகிறான் அவன்.
3
ஏதாவதொன்று முடிந்துவிட்டால் நான்
விக்கித்து நின்று விடுகிறேன்
எதுவுமே முடியாமலிருக்காதாவென
ஏங்குகிறேன்
எல்லாவற்றையும் துல்லியமாய்
செய்ய விழைந்து எதையுமே
செய்யாமலிருக்கிறேன்
அன்பே
எதையும் ஆரம்பிக்கவுமென்னால்
முடியவில்லை
நின்னைச் சரணடைதல்
என் விருப்பமல்ல
என் மனோசக்தியுமல்ல
வேறு வழியற்ற பிணைப்பு
என் ஆஸ்பத்திரி கட்டிலில் நீண்டிருக்கும்
கம்பி கோவில் கொடி மரமல்ல
சாதாரண குளுக்கோஸ் பாட்டிலுக்கு
உறுதுணை
காலை நடை பயிற்சியில்
தடுக்கி மரணக்குழியில் விழுந்தவனென
இமை தாழ்த்தி
ஓரக்கண்ணால் புன்னகைக்காதே
கீழே படுக்கையில் கிடப்பவன்
ரகுநந்தன்
4
அந்தி
ரகசிய கேவலை மறைக்கும் முகம் போல
சிவந்து கறுத்திருக்கிறது
காலமும் காதலும் கற்பனைக் கோடுகள்
அவற்றை மனதிலும் நிலத்திலும்
எங்குதான் வரைந்தாலென்ன
வரையாவிட்டாலும்தானென இருள் கவிகிறது
நகரத்துக் கட்டிடங்கள் தாண்டி
உதய சந்திரனின் கிரணங்கள்
ரகுநந்தனை அடைவதில்லை
எல்லோரும் தேடுகிறார்கள்
எவரும் பார்ப்பதில்லை
தூக்கத்திலும் கனவிலும் திரையிலும்
அவர்கள் ஷேர் ஆட்டோவில்
அந்தர பாகம் தொட்ட பெண்ணை
தொடர்ந்து தேடுகிறார்கள்
நான் போக வேண்டும்
நான் திரும்பிப் போக வேண்டுமென
பரிதவிக்கிறாய்
ஒரு எட்டில் ஒரு நாளோ ஒரு யுகமோ
கடந்துவிடாதோவென்ற மாயமான் வேட்டையில்
கலங்கித் திரிகிறாய்
நல்லூழின் நற்கணத்தில்
அகமுணர்ந்த அம்முகமோ
இமை மூடித் திறக்கும்
விநாடியில்
காணாமலாகிறது
5
ரகுநந்த
உன் இணையைத் தொலைத்தபின்னும்
மஞ்சள் சரக்கொன்றை மலர்கள் வெட்கமின்றி
மலர்கின்றன மகிழ்ச்சியுடன்
தனிமையின் மணல் கடிகையை
கடலலைகள் தீண்டுவதில்லை
கதிரவனும் ஒளியூட்டுவதில்லை
நாற்பத்தி ஏழு ஏ
பஸ் பிடித்து, முகம் இறுக, நிறுத்தம் தப்பி
எங்கோ இறங்கி பேதலிக்கிறாய்
யாரோ ஒரு அந்நியனின் அன்பு
கரம் பற்றி வழிகாட்டுமென ஏதோ
ஒரு விசாரணைக்கு உட்படுகிறாய்
தொலைப்போமென அறியாயோ நீ
என்ற கேள்வியில் உள்ளுணர்வு மரித்தது அறிந்து
அகம் கூச இறுகிச் சுருங்குகின்றன மூடிய உன் இமைகள்
அகமுணர்ந்த முகங்களைத் தொலைத்தவர்களின்
நகரம் காயம்பட்ட காட்டு மிருகம் போல
தன் புண்ணை தான் நக்கி தன்போக்கில் நகர்கிறது
6
உத்தமர் காந்தி சாலை தார் உருகி
கழற்றி வீசிய சௌரி போல
நீண்டு கிடக்க நிறம் மாறும் நாய்கள்
குறுக்கும் மறுக்குமாய் ஒடுகின்றன
எப்படிக் கடப்பாய், இழந்த உன் பாதியை
எங்கே சென்று தேடுவாயென மருக மருக
மனப்பித்து பாலிதீன் பையாய் உப்பி வெடிக்கிறது
இமையின் மெல்லிய ரோமங்கள் அசைவற்று
நிலைகுத்த, கனவின் மிச்சம் நனவாகிறது
உன் பாதி உனை விட்டு ஒற்றைக் கண் வெளி நோக்க
மறு பாதி உனை விட்டு மறு கண் உள் நோக்க
ஆடித் துண்டுகளாய் ஆயிரமாயிரம் கண்களாய்
சிதறி வெடிக்கிறாய் சாலையைக் கடக்க
7
சவ்வு மிட்டாய் நிற கோபுரப்
பொம்மைகள் திகைத்து உறைந்திருக்க
பச்சை வேட்டி பக்தர்களின் பால் குடக் கூட்டம்
வீதி நிறைந்திருக்கிறது
மனநலக்காப்பக ஜன்னல் வழி
பச்சைப் பெயிண்ட் உதிர்த்த
துருக் காட்டும் கட்டிலின் மேல்
நின்று பார்க்கிறாய்
அலகு குத்திய நாக்கு
சொருகிய விழிகள்
கனத்த இமைகள்
பதறி ஏறும் ஆவேசம்
பாச்சைகள் பாதங்களில் ஊர்கின்றன
இதழரோங்களில் நுரை பூக்கிறது
நெற்றியில் வியர்வை துளிர்க்கிறது
உடல் கோணி இழுக்கிறது
சிற்றவை சொல் கொண்ட சீராமா
தாலேலோ தாலேலோ
என கோசலை பாடுகிறாள்
நினைவின் அடியாழத்தில்
8
இரவின் கருணை தூக்கம்
இமைகளையும் கன்னக்கதுப்புகளையும்
பற்றி இழுத்த கணம்தான் என
முனகுகிறாய்
நேற்றிரவின் சாகசங்களை
மட்கும் குப்பை
மட்காத குப்பையென
பிரிக்க யத்தனிக்கிறாய்
சிகரெட் சாம்பல்
நிறப் பூனை
தீர்ந்த மதுப்புட்டிகளூடே
சோம்பல் முறிக்கிறது
அதை மன்னிக்கும் அருகாமையில்
தரையில் கிடக்கும்
உள்ளாடைகள் உருவாக்கும் சித்திரம்
மலை முகட்டில் ஆடும் ஓற்றைச் சிறகு
இரவின் உச்சத்தில்
உடலாழ்ந்த முகடு
காலடி மறைக்கும் காரிருள்
மரணம் தப்பும் கரணம்
விளையாட்டுப் பூனை
சித்திரம் கலைக்க
என்னதிது என்னதிது
எனத் திகைக்கிறாய்
ஓளிவெள்ளம் தோன்றி மறைகிறது
கூடிய பெண்ணின் பெயரெனவே
9
கடலின் பிரும்மாண்டத்தை சந்திக்க
நான் என் முகத்தைத் தயார்செய்ய வேண்டும்
கூடவே என் இமைகளையும்
புகைப்படங்களிலும் திரைப்படங்களிலும்
பார்த்த பிம்பங்களல்ல கடலென
நான் உறுதி செய்ய வேண்டும்
கால்களைத் தழுவிச் செல்லும் கடலலைகள்
என் காதலிகளின் கரங்களல்ல எனவே
மோனலிசப் புன்னகை பூக்கலாகாது
கப்பல்களின் தூரம் என் நினைவுகளின்
விலகலல்லவே ஆதலால் கண்களில்
நீர் சேகரம் அவசியமில்லை
கடற் காகங்கள் அலறிப் பறப்பது
தீக்கனவின் காட்சியல்ல கலவரமடைய
விரலிடுக்கில் நழுவும் மணற் துகள்கள்
சேர்த்து வைத்த செல்வமுமல்ல
கடற்கரை தந்திர பூனைகள்
நடமாடும் இடமுமல்ல
கவலையின் ரேகைகள் முகத்தை உழுவதற்கு
அடிவானத்தில் கட்டிடங்களுமில்லை
கருத்த பிரக்ஞையின் தெருக்களுமில்லை
போர்க்குணம் மறைத்த முகமூடி அணிய
காலடியில் முட்டும் யாரோ கரைத்த
அஸ்தி கலசங்கள் தாயின் கருவறையின்
மீள்அழைப்பெனவே
சிறு சிறு கிளிஞ்சல்கள் நண்டுகள்
ஞாபகத்தில் முகிழ்க்கும் குழந்தைமையின்
சிறு விழிப்புடன்
கழுத்தளவு நீரில் காலடிமண்ணை
கடலலை வாற
அமைதி காண் வானே முகமாக
என் ஈச
10
ரகு
ஆற்றங்கரையில்
நின்றிருக்கிறாய்
ஆலம்
விழுதுகள் தலை மேல்
படகோட்டி
பாடுகிறான்
பறவைகளும்
கூடவே
ரகு
ராம
காலை
மணி பத்து
பெட்டிக்
கடையில்
சொக்கலால்
பீடி
தமன்னா
போஸ்டர்
ரகு
அனந்த ராம
ஆற்றங்கரை
சாலையில்
பேருந்துகள்
விரைகின்றன
சாலையோரத்தில்
சிலர்
உறங்குகின்றனர்
தூரத்தில்
சில யுவதிகள்
சில
குழந்தைகள்
ரகு
அனந்த கோடி ராம
மறு
கரையில் ஏதுமில்லை
----------