ஓவியம் : அல்ஃபோன்ஸோ அருள் தாஸ் |
அனாதையின் காலம் | பகுதி 6 | பித்து பிறை பிதா
--
சுவரிலிருந்து உதிரும் காறை போல
நான் சிதிலமடைந்துகொண்டிருக்கிறேன்
அதன் முனகல்களை வாஞ்சையோடு கேட்பீரா
ஒரு சில மிருக ஒலிகளை மட்டுமே
நான் எழுப்ப இயலும்
ஆம் அவ்வளவுதான் தெய்வத்தின் குமாரரே
விழி நரம்பை நாராய் உரித்து
நான் செய்த படிமங்கள் என்னிடத்தில் வற்றிவிட்டன
என் சொல் முந்திய கேவல்
உம் இதயத்தின் செவிகளை தீண்டும்தானே
நீவிர் வியாபித்திருக்கும் பெரு வெளியில்
நான் கூட்டும் ஓசைகளின் பிரார்த்தனை
பித்தன்றி வேறென்ன
தந்தையீர் நீர் அறிவீர்
என் சிதிலம் என்றுமே பிறர் பொருட்டு
என் பிறை என்றுமே முழு மதி
1
தந்தையைக் கண்டடைதல்
எனக்கு எளிதாக இருக்கவில்லை
அவர் என்னெதிரில் இருந்த போதிலும்
கவிதையில் மெய்யுணர்வு
ஓவியத்தில் பார்வை மறையும் தொலைவு
இசையில் மௌனம்
பொருளின் மேற்புற ரகசியம்
மரபின் இறுக்கம்
பிம்பத்தின் மெய்மை
படிகளின் நிசப்தம்
விதைகளில் உயிர்
போலவே
அவர் வாசிப்புக்கு எட்டாது இருந்தார்
அவரை அறிவில் அடங்கா
அனுபூதியாய்
கைக்கொள்ள எண்ணினேன்
அவரோ
என் தாயின்
நினைவின் பவித்திரத்தில்
அவள் புடவையை அணைத்து உறங்கும்
குழந்தையாய்
அனுபவமானார்
--
2
நீரோவியத்தின் அணுக்கமெனவே
நினைவு மினுங்க
பித்து விகசிக்க
தந்தையின் சட்டையை அணிய முயற்சிக்கிறேன்
யோகியின் மெலிந்த
தேகத்திற்காகவே அளவெடுத்த கருஞ்சட்டையில்
வேறொரு காலத்தின் வேறொரு துடிப்பின் நூற்பாய்
இன்னும் நிக்கோட்டின் நாற்றம் மட்டுமே எஞ்சியிருக்கிறது
அவரின் இளமையை கொண்டுசெலுத்திய லட்சியத்தின்
தையல்கள் இற்றுப்போயிருக்கின்றன
அதன் ஒடுக்கமும் எனக்கு போதுவதாயில்லை
ஏதேனும் ஒரு மெய்யணைப்பில்
புனிதங்களற்ற நடப்பில்
நான் என்றுமே தழுவாத
அவருடல் தூலம் என்னுடலாய் ஆகாதவென
சட்டைக்குள் என்னைத் திணிக்கிறேன்
அக்கு அக்காய் கந்தலாகிவிட்ட கருஞ்சட்டை
நூல்களோடு என் இருப்பின் அலங்கோலம்
நிச்சயமாய் அவர் விட்டுச் சென்றதல்ல
--
3
ஆகாயத்துக்கும் எல்லையற்ற வெளிக்கும் என்னை
ஒப்புக்கொடுத்துவிட்டு
தந்தைக்கும் காலத்துக்கும் முன்
தனியனாய் நிற்கிறேன்
ஆசுவாசமளிக்கும் மர நிழல்கள் இல்லை எனினும்
இரவுகள் வராமலில்லை
நிலவொளியில் நான் நிற்கும் சிறு வெளி
நித்தியம் பெறாமலுமில்லை
எனக்கான பாடலை
திக்கித் திணறியேனும் இயற்றிவிடுவேன்
அதன் கீதத்தின் வசீகரம்
உமது நெஞ்சங்களை மெய்மறக்க செய்கையில்
மனமிளகி நீங்கள் சில சொற்கள்
கூட்டக்கூடும்
அவ்வமயம்
விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவி
எம் தந்தை
--
4
தந்தையின் தகனத்துக்கு
பிறகான மாலையில்
இசைத்துணுக்குகளாய் மெலிதான மழை பொழிகிறது
பெயரற்ற ஆதி நட்சத்திரங்களின்
இடையறாத மினுங்கல்களுக்காக
இரவு தயாராகிறது
கூடடையும் பறவைகள்
வழக்கொழிந்த
பழம்பாடல்கள் போல் ஒலியெழுப்புகின்றன
எல்லாம் மங்கிய வீட்டில்
ஒற்றை மோட்ச தீபம்
தன் ஒளியின் சிதறல்களை நல்குகிறது
நாம் அறியா மென்மையின் படலமொன்று
வாடிய பயிரைக் கண்டதும் வாடியதாய்
வெறிச்சோடிய தெருவில் படர்கிறது
கவிதையின் உள்ளார்ந்த சோகங்களோ
இவையென எண்ணி மயங்குகிறேன்
சாயுங்காலத்தின் நிரந்தர கருணை
உனக்கும் எனக்கும் மட்டுமானதல்ல
அனைவருக்குமானதென
பெருகும் கண்ணீர்
தெளிவாக்குகிறது
--
5
மாயையின் சலனத்தில்
ஓர்மைகளின் சாந்து கூட்டிய
உயிர்த்தலத்தில்
பெருமூச்சுகளை சேகரித்திருக்கிறேன்
என் செல்வங்களாக
அவை கடலின் உப்புக் காற்றோடு
சேர்ந்து தினசரி வீசுகின்றன
சோதரர்கள் சோதரரைக்
கொன்றழித்து
கைவிட்ட கதைகளை
அவை தொடர்ந்து காவியமாய் பாடுகின்றன
உலகின் சோபையை அவை அரிப்பதை
நொடியுக மோனத்தில்
நாம் அறிவோம்
கடல் அறியும்
மந்திர யாழ் மீட்டலாய்
பிதாவே என்றொரு சொல்லின்
முலாம்
உன் கூட்டலில் பொருளாகுமென
நானும்
என் பொருளில் உன் கூடுதல் ஆகுமென
நீயும்
நிரந்தரமாய் காத்திருக்கிறோம்
--
6
யுகத்தின் முகத்தில்
அப்பிய ஓசையாய்
ஆழ் நிலை தியானத்தில் அகச்செவி
கேட்க
சகோதரக் கொலையில்
கடல் விசும்புகிறது
அது சொல்லாய் இமை திறக்க
தூக்கி அலைகிறேன்
ரகசிய நதி போலவே
தந்தையீர்
இருமுறை இறங்க இயலா அந்நதியில்
விசும்பல்
ஊளையாய் ஒரு சமயம்
ஊமை வலியாய் மறு சமயம்
வீரியமாக
திசைமானியற்று உடைகிறது ஒரு கரை
-
No comments:
Post a Comment