போதிவனம் வெளியீடு ரூபாய்:120/-
அகமது வணிக வளாகம் தரைதளம்
12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை - 60014 கைபேசி 98414050437
மின்னஞ்சல் kskarunaprasad@ gmail.com
ஈர்ப்பின் பெருமலரிலிருந்து சில இதழ்கள்
தொடர்ந்து பலவருடங்களாக உரையாடலில்
இருக்கும் நெருங்கிய நண்பரான சண்முகத்தின் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதுவதை
பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இருந்தாலும்,
கவிதைகளைப் பற்றி எனக்கு இருக்கும் கருத்துகளுக்கும் சண்முகத்தின் கவிதைகள் குறித்த அண்மைக்கால கட்டுரைகளில்
வெளிப்படும் ஆய்வு கருத்துக்களும் பாரதூரமானவை
என்பதை நான் முதலில் குறிப்பிடவேண்டும். என்னுடைய கவிதைகள் குறித்த அணுகுமுறை கவிதை
வாசிப்பின் பாதிப்பு (affective dimension of poetry) என்ன விதமான உலகப்பார்வையை நம்மிடத்தில்
ஏற்படுத்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கவிதாமொழியின் இயங்கு தளங்கள் வாசிப்பின்,எனவே
நனவு நிலையின் உடனடி பாதிப்பின் எல்லைகளுக்கு
உட்பட்டவை என நான் கருதும்போது சண்முகம் அதன் ஆழ்பிரதி அர்த்தங்களை அகழ்ந்தெடுத்து
அவற்றைக் கனவின் எனவே நனவிலியின் செயல்பாடுகளாக
முன்வைக்கிறார். நான் மேற்புறங்களே, நனவே பல ரகசியங்களைக் கொண்டிருக்கக்கூடியது அதன்
மேல் நனவிலி என்றொரு மேலும் ஒரு பூடகத்தை, மர்மத்தைத் திணிக்க வேண்டியதில்லை, கவிதையை
மொழியின் ஊடாட்டமாக (semiosis) கூர்ந்து வாசித்து சொன்னாலே மொழியின் இயங்குதளங்கள்
கவிதையின் ஆசிரியைகளுக்கும் வாசகிகளுக்கும் வசப்பட்டுவிடும் என்றே நான் எண்ணத்தலைப்படுகிறேன்.
சண்முகத்தின் திறனாய்வு பாணிக்கும் என்னுடைய அணுகுமுறைக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை
கவனப்படுத்துவது கவிதை வாசிப்பு குறித்த உரையாடல்களை வளப்படுத்தக்கூடும் என்பது மட்டுமல்ல;
சண்முகத்தின் கவிதைகளை நமக்கு மேலும் அணுக்கமாக மாற்றவும் கூடும்.
ஏனெனில் சண்முகத்தின் கவிதைகள்
சுலப வாசிப்பிற்கு உரியவை அல்ல; ஃபேஸ்புக்கில் சண்முகம் தொடர்ந்து தினசரி இந்த தொகுப்பிலுள்ள
கவிதைகளை பதிவிட்டு வந்தபோது பலரும் அந்த கவிதைகளின் சொற்சேர்க்கைகளுக்காகவும், அழகிய
வரிகளுக்காகவும் பெரிதும் சிலாகிப்பதையும் கவனித்து வந்தேன். ஆனால் முழுக்கவிதைகளும்
உருவாக்கும் பாதிப்பை யாரும் கவனப்படுத்தவில்லை என்பதையும் நான் கவனித்தேன். அது ஃபேஸ்புக்
என்ற தளத்தின் எல்லையெனக் கொண்டால் கூட முன்னுரையாளனின் பணி அந்தப் பார்வையை விசாலப்படுத்த
வேண்டியதாகிறது.
சண்முகத்தின் சொற்களஞ்சியம்
சங்க இலக்கியம் முதற்கொண்டு பக்தி இலக்கியம், தமிழ் உரைகள் என பரந்துபட்ட செழுமையான
மரபுகளுக்கு கடன்பட்டது என்பதை அவருடைய மொழியாக்கக் கவிதைகள் ‘துயிலின் இரு நிலங்கள்’ என்ற கனத்த தொகுப்பாக 2016 இல் வெளிவந்தபோதே நானும் பிற விமர்சகர்களும் கணித்தோம்.
‘ஈர்ப்பின் பெருமலர்’ தொகுதியை வாசிக்கும்போதும் நம் கவனத்தை முதலில் வசீகரிப்பது சண்முகத்தின்
செழுமையான சொற்களஞ்சியம்; பேச்சு தமிழில் அதிகமும் இல்லாத சொற்கள், ‘மெய்குவியும் பகிர்வின்
ஆழம்’, ‘இவ்வறிதலின் கணமே என் உயிர்ப்புலமாய் மலர்கிறது’, ‘விழியின் மறு விழி ஆழி’
போன்ற மின்னல் வரிகளுக்கிடையே பொதிந்து வைக்கப்பட்டு ஜாலம் காட்டுகின்றன. தன் சொற்களஞ்சியத்தின்
விரிவாக்கத்திற்கும் தனது உணர் கொம்புகளின் கூர்மைப்படுத்துதலுக்கும் சண்முகம் தன் மொழியாக்கப் பணியினை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்
என்பதில் சந்தேகமில்லை. ‘ஈர்ப்பின் பெருமலரில்’ இருக்கும் கவிதைகளின் உணர்வு
(sensibility) ‘துயிலின் இரு நிலங்கள்’ மொழியாக்கத்
தொகுதியில் இருக்கும் பெரும்பான்மையான கவிதைகளின் உணர்வினைப் போன்றே நவீனத்துவ கவிதைகளின்
உணர்வு நிலை சார்ந்தது அல்ல; இந்தக் கவிதைகளின் உணர்வு பிரிவு, கூடல், ஆற்றாமை, தவிப்பு,
ஏங்குதல், கூடுதலில் முழுமையின்மை, முழுமையில் அடையப்பெறும் விகாசம் என காதலின் பல
உணர்ச்சி நிலைகளை கவிதையின் பாடுபொருளாகக் கொண்டு அவற்றை மறைபொருள் கொண்ட அருள் கவிதைகளாக
மாற்றும் மாயம் கொண்டவை. எனவே இந்தக் கவிதைகளை மெய்யியல் கவிதைகள் (metaphysical poetry) என வகைப்படுத்தலாம்.
மெய்யியல் கவிதைகள் இருப்பு, நேரம், இடம் ஆகியவற்றை அருவமாக புலன், காலம், வெளி என உருமாற்றி அவற்றில்
நான் நீ என்ற இரு கதாபாத்திரங்களை நாடகீயமாக உலவவிட்டு அவற்றின் இணைவினைப் பற்றிப் பேசும். மெய்யியல் கவிதைகள் இறையுணர்வு
அல்லது பக்தி கவிதைகளாக இருக்கும்போது நீ என்ற மற்றமை இறைவனாக அடையாளப்படுத்தப்படும்.
சண்முகத்தின் கவிதைகளிலோ நீ என்பது இறைவன் என அடையாளப்படுத்தப்படுவதில்லை; இது நாம்
ஏற்கனவே வாசித்தறிந்த மெய்யியல் கவிதைகளுக்கும் சண்முகத்தின் கவிதைகளுக்கும் உள்ள பெரிய
முக்கியமான வித்தியாசம். சண்முகத்தின் கவிதைகளில் நான் -நீ என்ற கதாபாத்திரங்களும்
அவர்களின் உணர்வு நிலைகளும் இயற்கையின் சிறு துளிகளாகவும் அவற்றின் பிரும்மாண்ட விகசிப்பாகவும்
தொடர்ந்து சுட்டப்படுகின்றன. இந்த நீ- நான் சண்முகத்தின் கவிதைகளில் இயங்கும் செயல்முறைகளை
கவனிப்பது அவருடைய கவிதைகளின் அணுக்க வாசிப்பிற்கு துணை செய்யக்கூடும். உதாரணமாக பின்
வரும் கவிதையினை வாசிக்கலாம்;
“என்முகத்தினுள் சுழன்றாடிக் கொண்டிருக்கிறது ஒரு உருவம்
சுவாச கதியினில் சுருங்கியும் விரிந்தும் வெருட்டுகிறது முன்னும் பின்னும் நகர்ந்து மனதின் மீது படிய மறுக்கிறது
நெருக்கமாய் செதில்கள் அமைந்திருக்கின்றன நொடியினில் நீர்பெருகி நிறைக்கிறது முகவெளியை.
சுவாச கதியினில் சுருங்கியும் விரிந்தும் வெருட்டுகிறது முன்னும் பின்னும் நகர்ந்து மனதின் மீது படிய மறுக்கிறது
நெருக்கமாய் செதில்கள் அமைந்திருக்கின்றன நொடியினில் நீர்பெருகி நிறைக்கிறது முகவெளியை.
நகர்தலுக்கும்
அசைதலுக்கும் இடையில் ஏதோவொன்றை நிகழ்த்துகின்றது
விழுங்கி வெளியேற்றும் சிறுவாயினில் சுவாசக்குமிழ்கள் உடைகின்றன - விடுபட்டு மிதந்தபடி மேலேறும் முடிவிலியான நீர்-உருக்கள் தம்வசம்
ஏந்திச்செல்லும் ஞாபகங்களில் நீரும்-சுவாசமும் வியாபித்திருக்கின்றன,
விழுங்கி வெளியேற்றும் சிறுவாயினில் சுவாசக்குமிழ்கள் உடைகின்றன - விடுபட்டு மிதந்தபடி மேலேறும் முடிவிலியான நீர்-உருக்கள் தம்வசம்
ஏந்திச்செல்லும் ஞாபகங்களில் நீரும்-சுவாசமும் வியாபித்திருக்கின்றன,
முகப்புறத்தே
யார் நிற்பதென அறியா புகைந்த தோற்றம்
முகத்து-உட்புறத்தே அசையாதிருக்கின்றது அவ்வுருவம் மெல்ல காற்றினில் புகையென அடர்கிறது
என் உணர்வுகளின் - பிரதிபிம்பங்கள் அதன்மீது ஊர்ந்து படிகின்றன.
முகத்து-உட்புறத்தே அசையாதிருக்கின்றது அவ்வுருவம் மெல்ல காற்றினில் புகையென அடர்கிறது
என் உணர்வுகளின் - பிரதிபிம்பங்கள் அதன்மீது ஊர்ந்து படிகின்றன.
எத்தனை
விதமாய் சேர்த்து -பிரிக்கும் போக்கில்
என் முகத்தை பெருக்கியபடி அழிக்கிறது
முந்தைய முகத்தை
ஆயினும் அழிந்ததில் எஞ்சியவைகளில் யாவிலும் அச்சாக பொருந்தியிருக்கிறது இந்நாளின் - என்பின்னாளின் முகமும்.
என் முகத்தை பெருக்கியபடி அழிக்கிறது
முந்தைய முகத்தை
ஆயினும் அழிந்ததில் எஞ்சியவைகளில் யாவிலும் அச்சாக பொருந்தியிருக்கிறது இந்நாளின் - என்பின்னாளின் முகமும்.
ஒருநிறமாலையின்
பின்னலென இறுகி மேலெழுகிறது
என் ஞாபகங்களின் திரிகள்
அவற்றில் தொடுக்கப்பட்டுள்ளன நான் நினைவழித்த வாழ்வடிங்கள் என்னைக் குறிவைத்து வேகமடைகின்றன.
என் ஞாபகங்களின் திரிகள்
அவற்றில் தொடுக்கப்பட்டுள்ளன நான் நினைவழித்த வாழ்வடிங்கள் என்னைக் குறிவைத்து வேகமடைகின்றன.
ஆரத்தழுவிட
விழையும் அதன் அகவுணர்வினை
அரூப-சமிக்ஞைகளாக பரிமாறுகின்றன
வான்விழுங்கும் விழிகளும் விரிகடலை மார்பினுள்
அடக்கும் அவாவினது பரந்த -கரங்களும் சங்கமிக்க
அழைக்கின்றன.
அரூப-சமிக்ஞைகளாக பரிமாறுகின்றன
வான்விழுங்கும் விழிகளும் விரிகடலை மார்பினுள்
அடக்கும் அவாவினது பரந்த -கரங்களும் சங்கமிக்க
அழைக்கின்றன.
என்னிலும்
உன்னிலும் தொலையப்போகும் சங்கமத்தின்
நெருக்கத்தினை நீ முன்னுணர்ந்துள்ளாய் என
என் மனம் அறிந்துள்ளது இவ்வறிதலின் கணமே
என் உயிர்புலமாய் மலர்கிறது அதன் இதழ்களாய் நாம்.”
நெருக்கத்தினை நீ முன்னுணர்ந்துள்ளாய் என
என் மனம் அறிந்துள்ளது இவ்வறிதலின் கணமே
என் உயிர்புலமாய் மலர்கிறது அதன் இதழ்களாய் நாம்.”
‘என் முகத்தினுள் சுழன்றாடிக்கொண்டிருக்கிறது
ஒர் உருவம் ‘ என ஒரு காட்சி சித்திரத்தை விவரிக்க
ஆரம்பிக்கும் இந்தக் கவிதை அதை சீக்கிரமே மனதில் படிய மறுக்கிற முடிவிலிகளான நீர் உருக்களாகவும்
முகவெளியில் அசைதலுக்கும் நகர்தலுக்கும் இடையிலான ஏதோவொன்றை நிகழ்த்தும் புகைந்த தோற்றமாகவும்
பூடகப்படுத்துகிறது. அதை ஒரு அழிவு வெளியாகக் கொள்ளலாம். அந்த அழிவில் எஞ்சியவைகள்
அனைத்திலும் அச்சாகப் பொருந்தியிருக்கிறது கவிதை சொல்லியின் முகம். அதிலிருந்து விடுபடுவதற்கான
வேட்கை மற்றவையில் சங்கமிக்கும் முன்னுணர்விலிருந்து தோன்றுவதாக கவிதை கூறுகிறது. இந்த மற்றமை (நீ) எப்படிப்பட்டது?
‘வான் விழுங்கும் விழிகளும் விரிகடலை மார்பினுள் அடக்கும் அவாவினது பரந்த கரங்களும்
கொண்டது. இந்த சங்கமிப்பு உண்மையில் நிகழவில்லை; ஆனால் அந்த சங்கமத்திற்கான முன் அறிதலே,
அந்த அறிதலின் கணமே உயிர்ப்புலமாக கவிதை சொல்லியின் நானுக்கு மட்டும் பரிணமிக்கவில்லை;
அந்த மற்றமைக்கும் சேர்ந்து மலர்வதால் ‘ அதன்
இதழ்களாய் நாம் ‘ என்று கவிதை முடிகிறது. அதாவது இந்தக் கவிதையின் மெய்யியல் நாம் அனைவரும்
ஒரு அகண்ட பிரம்மாண்டத்தினால் அரவணைக்கப்படுவோம் என்பதை உணர்ந்த கணத்திலேயே நம் உயிர்த்தலம்
மலரும் கூடவே அதன் இதழாய் பிரம்மாண்டமும் மலரும் என்பதாக இருக்கிறது.
இந்த மெய்யியல்
- தான் பிரம்மாண்டத்தில் கலப்போம் என்ற முன்ணுணர்வுக்கே (intuition),
தன்னையும் பிரம்மாண்டத்தையும் சேர்த்து விடுதலை பெறச் செய்யும் சக்தி இருக்கிறது என்பதான- ஒரு அபாரமான ஆழமான அபூர்வமான நம்பிக்கையிலிருந்து உருவாவதாகும். கடவுளின் இறப்புக்குக்கு பிறகான அவநம்பிக்கையின்
நவீனத்துவத்துள் ஊறிய என்னுடைய மனதிற்கு சண்முகம் கவிதைகளில் மேற்சொன்னவாறு வெளிப்படும்
நம்பிக்கை மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கக்கூடியதாக
இருக்கிறது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் அத்தனை லட்சியத்திற்கான கனவுகள் அனைத்தும்
தோற்றுவிட்ட பின்பும் கூட சண்முகத்திற்கு எப்படி
நம்பிக்கை (faith) சாத்தியப்படுகிறது? எனக்கு அப்படி ஒரு நம்பிக்கையும் அதனால்
உண்டாகிற உறுதிப்பாடும் சித்திப்பதில்லையே என்ற ஏக்கமும் கூடவே உருவாகிறது.
சண்முகத்தின்
கவிதைகளில் வெளிப்படும் மெய்யியல் நம்பிக்கை புலன் வெளியையும் அது சார் உணர்வுகளையும் பிரம்மாண்டமாக விஸ்தரிக்கின்ற புனைவிலிருந்து தர்க்கம் பெறுவதாக கணிக்கிறேன். உதாரணமாக , ஆழியியிலிருந்து குமிழ்ந்துதெழுகின்றன
விழிகள்’ என்று ஆரம்பிக்கும் கவிதையை வாசியுங்கள். அந்தக் கவிதை, ‘நமக்கு நுரைவடிவம்
கரையும், அடிவானின் வர்ணக்கோடும் எதிரெதிர் மெய்ம்மைகள். முது நினைவும் இப்பிரக்ஞையும்
ஒரு நொடிப்பொழுதினில் பேராற்றல் விளைவிக்கும், என் விழியின் மறு விழி -ஆழி’ என்று முடிகிறது.
இவ்வாறாக புலனையும் (விழி) அதன் உணர்வையும் ஆழியாக விஸ்தரிப்பதன் மூலம் சண்முகம்
தன்னிலையையே விரிவுகொள்ளச் செய்துவிடுகிறார்.
சண்முகத்தின் கவிதைகளில் தொடர்ந்து காணக்கிடைக்கும் நான்- நீ ஊடாட்டமும் அதன்
நாடகப் பாங்கும் இன்னொரு புனைவுதான், உண்மையில், தன்னிலையே தன்னளவிலேயே முழுமையானது,
‘பேய்மையும் அகோர வனப்பும் இழையும் முகம், ஒரு கணம் இன்றைய சாயலையும், மறுகணம் நம்
வரைதோல் தோற்றங்களையும் வகை மாற்றி ஏமாற்றுகின்றன’. நேற்று இன்று என்ற நேரப்பகுப்புகள்,
அசிங்கம் அழகு ஆகிய புறத்தோற்றங்கள் ஆகியவை அனைத்தையும் மறுத்து ஒரு வகையான காலாதீதத்தில்
(eternity) அதை அடைவதற்கான முதுநினைவில்
அதற்கான பிரக்ஞையில் கவிதை ஆசுவாசமடைகிறது. சண்முகத்தின் கவிதைகளில் காணப்படும் பிரக்ஞையின்
விழிப்பின் மூலம் அடிப்படையான மூலகங்களுக்கு
திரும்புதலை (return to the primary elements) சாவிற்கான விருப்பு (death wish) என வகைப்படுத்த இயலாது.
ஏனெனில்
சண்முகத்தின் கவிதைகளிலுள்ள புலனுணர்வு எதிரிணைகள் - ஒளி- இருள், அசைவு- அசைவின்மை,
மௌனம்-பேச்சு முதலியன - ஒரு ஒருங்கிணைந்த பிரபஞ்சத்தையும் (unified universe) லட்சிய வடிவ தன்னிலையையும் (idealized self) முன்வைக்கின்றன. இதன் தீவிரம் எப்படிப்பட்டதென்றால் தன்னிலையின் எந்த விழைவும் (desire) தேவைப்படாமலேயே எதிரிணைகளின் சமரச ஒருங்கிணைவும்
மற்றமை தன்னிலையை நோக்கி நகர்வதன் மூலமாக கைகூடிவிடுகிறது. ‘விழிகள் கனத்து மூழ்குகின்றன’
என ஆரம்பிக்கும் கவிதையில் ‘எனது துயிலை நீயும் உனது துயிலை நானுமாய் தேடியடைவோம் வா
என்று நீ அழைக்கிறாய், எங்கென்று உரைக்கவும் மறுக்கிறாய், இருவருமாய் ஒருமுகமாய் கரம்பற்றுகிறோம்’ என்று தொடர்ந்து ‘தன்னிழப்பின் நொடியில் நிகழ்கிறது
யாவும்’ என்று முடிகிறது.
சைவ பக்தி
கவிதைகளில் அடியாரைத் தேடி தடுத்தாட்கொள்ளும் சிவனின் பெருங்கருணையினை - குறிப்பாக
மாணிக்கவாசகரிடத்தே- நாம் வாசித்திருக்கிறோம் அல்லவா அந்த வாசிப்பின் நினைவுகளை தன்னிலையை
நோக்கி வரும் இறை- மற்றமையின் (the godly Other) இயக்கத்தை
சண்முகத்தின் கவிதையில் வாசிக்கும்போது என்னால் தவிர்க்கமுடியவில்லை. இதற்காக தடுத்தாட்கொள்ளலும்
‘யாவும் தன்னிழப்பின் நொடியில் நிகழும்’ சண்முகத்தின் கவிதா நிகழ்வுகளும் ஒன்று என
நான் சொல்வதாக அர்த்தப்படுத்திகொள்ளக்கூடாது. சண்முகம் மொழியின் தானியங்கி நகர்தலுக்கு
தன்னை ஒப்புகொடுத்ததன் மூலமும் இவை நிகழ்ந்திருக்கக்கூடும். அல்லது திருஅருட் பிரகாச வள்ளலாரின் ஆறாம் திருமுறையின்
பாதிப்பு சண்முகத்தின் மெய்யியல் கவிதைகளில் சந்தேகத்திற்கிடமின்றி இருக்கவேண்டும்.
வள்ளலாரின் பாதிப்பு தனக்கு மிகுதியும் இருப்பதாக சண்முகம் ஒரு தொலைபேசி உரையாடலில்
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது உறுதிப்படுத்தினார். இதற்காக வள்ளலார் ஆறாம் திருமுறையில் ‘தற்போத இழப்பு’
என்றொரு பகுதி எழுதியிருப்பதும் சண்முகத்தின்
‘யாவும் தன்னிழப்பின் நொடியில் நிகழும்’ என்ற வரியும் ஒரேபடித்தானவை எனவும் நான் சொல்வதாக
பொருள் கொள்ளக்கூடாது. சண்முகத்தின் கவிதைகள் வள்ளலாரின் மெய்யியல் உலகின் (the metaphysical universe ) சில அம்சங்களை பகிர்ந்துகொள்கின்றன
என்றே அர்த்தப்படுத்திகொள்ளவேண்டும். சண்முகத்தின் கவிதை வரிகளை பயன்படுத்தியே இதை
விளக்க வேண்டுமென்றால், “தொலைதூரத்து மரகத
ஒளியின் துல்லியம், இப்பிறவியை துளைத்துக்கொண்டிருக்க, வான் பிளந்து நீயே வேற்றுருவில்
அழைக்கிறாய். கால்கள் பூமியைத் துறக்கினறன” என்ற வரிகளையே குறிப்பிட வேண்டும்.
சண்முகத்தின்
விழைவுதான் என்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. “அபூர்வமாய் நிகழ்ந்ததெல்லாம், நேற்றின்
ஞாபகம். இன்றும் அதன் சந்திர சுழற்சியில் பித்தனாய் என்னை நானே அறியேன்!” என்றொரு கவிதை
அங்கலாய்க்கிறது. “சிறு சிறு வர்ணத்துளிகளாய் சிதறிக் கிடக்கும் அனந்தத்தை ஒன்றாக்க
பூர்ணம் தரித்து வருவாயா?” என்று இன்னொரு கவிதை வரி வினவுகிறது. “இடைவிடாது இரைந்து
கொண்டே இருக்கும் இப்பிறவியைத் துறந்து எவ்வண்ணம் மீள்வேன்? “ என்றொரு வரி பரிதவிக்கிறது.
“சிறகுகளின் பபடத்த நிழலுரு பதியுமிடம் என்னை விழுங்க, தவிப்பின் ரேகைகள் ஓடும் உள்ளங்கைகளுடன்
ஒளியூட்டத்தான் அழைக்கிறேன். நீயோ மாய்வின் நெடிய வீதியின் மறுபுறத்தில் நின்றிருக்கிறாய்”
எனப் புலம்புதலும் நடக்கிறது. இவை அனைத்துமே “உனது பேரார்வத்தின் திரைகள் யாவும் நானே என நவின்று சங்கமிக்கிறாய்” என்ர வரியில் இன்னொரு
கவிதையின் வரியில் பூரணமடைவதாகத் தோன்றுகின்றன. இதில் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவேண்டிய
அம்சம் என்னவென்றால் எந்தொரு விழைவுமே பாலியல் இச்சையால் உந்துதல் பெற்றதாக இல்லை.
பார்த்தல், கேட்டல் ஆகிய புலனுணர்வுகளின் சித்தரிப்புகளைத் தாண்டியும் சண்முகத்தின்
கவிதைகள் செல்வதில்லை.
மேற்கத்திய நவீனத்துவம் முழுமையாக உருவாகி வந்தவேளையில், ரொமாண்டிசிசத்திலிருந்து
நவீன கவிதையை விடுவித்து ஆங்கில மெய்யியல் கவிஞர்களுக்கும் அவர்களது கவிதைகளுக்கும்
புத்துயிர்ப்பு அளித்த டி.எஸ்.எலியட் எழுதினார், “I take as metaphysical poetry that in which what is
ordinarily apprehensible only by thought is brought within the grasp of
feeling, or that in which what is ordinarily only felt is transformed into
thought without ceasing to be feeling.” எலியட்
தன்னுடைய கவிதைகளிலும் நாடகங்களிலும் பெரும்பாலும் அவநம்பிக்கையை எழுதினாலும் தன்னுடைய
விமர்சனக் கட்டுரைகளில் தொடர்ந்து ஆங்கில மெய்யியல் கவிஞர்களின் படைப்புகளை புதிதாகப்
படிக்க வேண்டிய அவசியத்தையும் படிக்கும் முறைகளையும் தொடர்ந்து சுட்டி வந்தார். தமிழ்
நவீன கவிதையில் இன்றைக்கு மெய்யியல் கவிதைகளுக்கு இடமே இல்லை என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் சண்முகத்தின் கவிதைகள் உணர்ச்சி சிந்தனையாகவும், சிந்தனை உணர்ச்சியாகவும்
மாறும் மெய்யியல் கவிதைகளை சூழலின் போக்குகள் பற்றிய கவலையின்றி தைரியமாக தன்னுடைய
பாணியில் எழுதியிருப்பது வரவேற்புக்குரியது. மேலும் தமிழ்க் கவிதையின் நவீனத்துவம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு முன்பாகவே தாயுமானவர், திருஅருட்பிரகாசவள்ளலார் ஆகியோரிடத்தே
தொடங்கிவிட்டது என்பதையும் சண்முகத்தின் கவிதைகள் நம்மை கவனிக்குமாறு கோருகின்றன. சண்முகத்தின் கவிதைத் தொகுப்பு காட்டும் வழியில்
நாம் தமிழின் மெய்யியல் கவிதைகளை அடையாளப்படுத்தி மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும்
நிகழலாம்.
அப்படியே எதுவும் நடக்காமல் போனாலும் சண்முகத்தின்
கவிதைகளின் வசீகரத்திற்கும் அவற்றின் மொழி வளத்திற்காகவும் வாசிக்க விரும்புவோர் இருந்துகொண்டே
இருப்பார்கள்.
No comments:
Post a Comment