Sunday, June 17, 2018

சிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்

Candaules, King of Lydia



ஸெல்மா லாகர்லாவ்வின் ‘மதகுரு'

நேற்று என் நூலகத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தபோது க.நா.சு. மொழிபெயர்த்த ஸெல்மா லாகர்லாவ்வின் 'மதகுரு' நாவல் கையில் கிடைத்தது. கோஸ்டா பெர்லிங் என்ற தலைப்புடைய அந்த நாவலை நான் ஆங்கிலத்திலும் படித்திருக்கிறேன். ஆனால் தமிழில் க.நா.சுவின் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது கிடைக்கும் மன எழுச்சியும் பீறிடும் வாஞ்சையும் ஆங்கிலத்தில் வாசிக்கும்போது கிடைப்பதில்லை. மதகுரு நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போல தன்னளவிலேயே முழுமையானதாக அமைந்திருக்கும். 1980 களில் எனது நண்பர்களும் நானும் மதகுரு நாவலை ஒரு cult classic ஆகவே பொத்தி பொதிந்து வாசித்தோம். நான் குறைந்தது ஐம்பது முறைகளாவது இந்த நாவலை வாசித்திருப்பேன். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் சமுத்திரத்தை முதன் முதலாகப் பார்க்கும்போது உண்டாகிற மனவிரிவையும் பிரமிப்பையும் உண்டாக்கக்கூடிய நாவல். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த நாவலின் பாதிப்பு, உணர்வெழுச்சி க.நா.சு.வின் நாவல்களில் இல்லவே இல்லை. 1985-87 ஆண்டுகளில் க.நா.சு மைலாப்பூரில் தெற்குமாட வீதியில் குடியிருந்தபோது அவரை மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்துவிடுவேன். வேறேதோ உலகத்தில் தன்னுடைய எண்ணங்களில் தொலைந்து போனவராய் துப்பறியும் நாவல்கள் முதற்கொண்டு அனைத்தையும் வாசிக்கக்கூடியவராய் அவர் இருந்தார்; 'பொய்த்தேவு' எழுதியவரை நேரடி பழக்கத்தின் மூலம் பார்த்துவிடலாம் ஆனால் கோஸ்டாபெர்லிங்கை மொழிபெயர்த்தவரை கிஞ்சித்தும் காண இயலாது.

ஒட்டகம் போல நடத்தல்
--
இன்று காலை நடக்கப்போகவில்லை என்பதால் நடை பற்றியே எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தோரோ நடை பற்றி எழுதிய நீண்ட கட்டுரை ஞாபகம் வந்தது. தோரோ நாம் ஒட்டகம் போல எண்ணங்களை அசை போட்டபடியே நடக்க வேண்டும் என பரிந்துரைப்பார். பாலைவன வெயில் போல இங்கேயும் கோடை வெயில் நம்மை பஸ்மமாக்குவதால் ஒட்டகம் போல கானலுக்கு ஆத்மாவை பறிகொடுத்த அரைவாசி மூடிய கண்களின் இமைகள் கனக்க, டாலியின் ஒட்டகங்கள் போல கால்கள் நீண்டு நான் நடப்பதாக மனச்சித்திரம் பிரேமை தட்டுகிறது. தோரோ மனிதனை சமூகத்தின் அங்கத்தினராகப் பார்க்காமல் இயற்கையின் பகுதியாக பார்க்கவேண்டுமென்றும் சொல்வார். Give me a wildness whose glance no civilisation can endure, Life consists with wildness, The most alive is the wildest ஆகியவையும் தோரோவின் வாக்கியங்கள் அல்லவா? பாவம் தோரோ தமிழ்நாட்டின் கோடையை அனுபவித்தாரில்லை. இந்த Wild கோடையில் என்னோடு சேர்ந்து அவரும் ஆவியாகியிருப்பார்.

விண்வெளிப் பூனை
--
என்னுடைய பூனைப் புகைப்பட ஆவணக்காப்பகத்தில் ஃபெலிசிட்டாவுக்கு மகத்துவமான தனியிடம் உண்டு. ஃபெலிசிட்டாதான் விண்வெளியில் பயணம் செய்த முதல் பூனை. விண்வெளியில் பயணம் செய்தவர்கள், நிலவில் நடந்து மீண்டவர்கள் அனைவருமே பூமிக்குத் திரும்பியபின் பற்றற்ற ஒருவித ஆன்மிகவாதிகளாகிவிடுகிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். ஃபெலிசிட்டா என்னுடைய கதையொன்றில் இவ்வாறாகவே ஆன்மிகவாதியாகிவிடுகிறாள். அந்தக் கதையின் கைப்பிரதி தொலைந்துவிட்டது. ஒவ்வொருமுறை அந்தக் கதையை திரும்ப எழுத முயற்சித்தபோதும் புதிதாக ஒரு கதை உண்டானதே அன்றி பழையகதை கிடைக்கவேயில்லை. கதையின் ஒரு வடிவத்தில் ஃபெலிசிட்டா கம்பனைப் போல அலகிலா விளையாட்டுடையவன் யாரவன் என வியக்கிறாள். இன்னொரு கதை வடிவத்தில் மாணிக்கவாசகர் போல ஆதியும் அந்தமும் இல்லா பெருவெளியை சிதம்பரம் கோவிலில் அநாதியாய் சந்திக்கிறாள். தமிழ் எழுத்தாளனின் கற்பனை வெளியின் எல்லைகளைப் பாருங்கள்! ஃபெலிசிட்டா என்னுடைய அத்தனை கதை வடிவங்களிலும் மீண்டும் மியாவ் என கத்தினாளா, பாயைப் பிராண்டினாளா என நினைவில்லை.

தீட்டு
--
போர்ஹெஸின் புகழ்பெற்ற 'மணல் புத்தகம்' (The Book of Sand) சிறுகதையில் விவிலிய விற்பனையாளன் ஓவ்வொரு முறை திறந்தாலும் புதிய, திரும்ப செல்லவே இயலாத பக்கத்தைக் காட்டும் முடிவிலியான மணல் புத்தகத்தை இந்தியாவில் தீண்டத்தகாதவராக ஒதுக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வாங்கியதாகச் சொல்வான். அவருடைய நிழல் பட்டால்கூட தீட்டு என்று நினைப்பார்கள் என கதையில் சொல்லப்படும். போர்ஹெஸின் கதையில் ஏன் இந்தியாவின் தீண்டத்தகாதவராக ஒதுக்கப்பட்டவர் வரவேண்டும் என்பதற்கு பெரும்பாலும் விளக்கங்கள் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் போர்ஹெஸின் cosmopolitanism, exotic details in his writings என அவை சப்பைக்கட்டுகளாக இருக்கும். சமீபத்தில் மோஷின் ஹமீது (Moshin Hamid) 'மணல் புத்தகத்தில்' தீண்டத்தகாதவர் வருவது எதற்கென்றால் வாசிப்பு என்பதே தீட்டை உண்டாக்கக்கூடியது ( Reading contaminates) முடிவிலி (Infinite) ஒதுக்கப்பட்டவர்களிடமும் கவனிக்காமல் ஒதுக்கிவிட்ட விஷயங்களிலுமே ஜீவிதம் கொள்கிறது என்பதை சுட்டுவதற்குதான் என விளக்கினார். 'மணல் புத்தகத்தை' மீண்டும் வாசிக்க வேண்டும்.

Sredni Vashtar by Saki
-
ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போல சிறுகதைகளின் மாஸ்டராகக் கருதப்படுபவர் சகி என்ற புனைபெயரில் எழுதிய ஹெக்டர் ஹுயுக் மன்ரோ (H.H.Munro 1870-1916). தமிழில் சகிக்கு அறிமுகமில்லை என்றே நினைக்கிறேன் (இன்றைக்கு தமிழில் இயங்கும் அதிவேக மொழிபெயர்ப்பு குடிசைத் தொழிலில் யார் கண்டது? - சகிக்கு அறிமுகமும் மொழிபெயர்ப்பு கதைகளும் இருக்கலாம்) சகியின் கதைகள் இருண்மையும் குறும்புத்தனமும் எதிர்ப்புணர்வும் சமூக விமர்சனமும் கலந்தவை. நேற்று என்னுடைய பிரிட்டிஷ் தோழி ஒருவரோடு ஸ்கைப்பில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் சகியின் ஸ்ரெட்னி வஷ்டார் கதை போல ஒரு சிறுகதையை தமிழில் காண இயலாது என்றார். அவர் தமிழ் சிறுகதைகளை ஆராய்ச்சி செய்து வருகிறார். ஸ்ரெட்னி வஷ்டார் நோய்வாய்பட்ட சிறுவனொருவனைப் பற்றியது. அவன் தன்னுடைய மூத்த உறவினர் ஒருத்தியின் பராமரிப்பில் இருக்கிறான். பெற்றோர்கள் இல்லை. அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் காட்டு மரநாய் ஒன்றை ரகசியமாக வளர்க்கிறான் அதன் பெயரே ஸ்ரெட்னி வஷ்டார். அவன் தனிமையும் நோயும் அவனை ஸ்ரெட்னி வஷ்டாரை கும்பிடுபவனாகவும் தனக்கென்று ஒரு மதத்தை பின்பற்றுபவனாகவும் மாற்றியிருக்கின்றன. மதங்கள் எப்படி தோன்றுகின்றன, எப்படி தங்களுடைய வழிபாட்டாளர்களை உண்டாக்குகின்றன என்ற கதையாகவும் இதை வாசிக்கலாம். கதையில் மரநாய் சிறுவனின் அத்தையைக் கொன்றுவிடுகிறது. அதை அந்த சிறுவனின் 'பிரார்த்தனை' சாதித்திருக்கக்கூடும். பெரியவர்களின் ஒடுக்குதலுக்கு எதிரான சிறுவர்களின் மௌன, உள் ஒடுங்கிய போராட்டமாகவும் கதையை வாசிக்கலாம். (கதையை படிக்க/கேட்க: https://en.wikisource.org/…/The_Chronicles_o…/Sredni_Vashtar) இந்தக் கதையாடல் (narrative) வடிவம் தமிழில் ஏன் இல்லையென்றால் தமிழின் கதை வடிவம் லட்சியவாதத்தின் பிடிக்கு உட்பட்டது அதை மீறி தமிழில் கதை சொல்பவர்கள் இல்லை என்பது என் தோழி கூற்று. அது உண்மைதானா என்று பார்க்கவேண்டும்.

அலெக்சாண்டர் ஹீமோனின் (Aleksandar Hemon) சிறுகதை தேனீக்கள் பாகம் 1 (Bees part 1)
--
அலெக்சாண்டர் ஹீமோன் போஸ்னியாவில் பிறந்து அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர். கோசிஸ்ன்கி போல அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பிறகு ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்கும் ஐம்பத்தி நான்கு வயது எழுத்தாளர். Nowhere Man (2002), The Lazarus Project (2008) ஆகிய நாவல்களின் ஆசிரியர். ஏ.கே.ராமானுஜன் போல அமெரிக்காவின் ஜீனியஸ் அவார்ட் எனப்படும் மேக்ஆர்தர் ஃபவுண்டேஷன் அவார்டை வாங்கியவர். அமெரிக்காவின் சமகாலத்திய சிறந்த சிறுகதைகள் தொகுப்பிலும் சரி ஐரோப்பாவின் சிறந்த சிறுகதைகள் தொகுதிகள் 2016, 2017 ஆகியனவற்றிலும் சரி அவருடைய சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏகப்பட்ட பிற பரிசுகளும் அவருக்கு கிடைத்திருக்கின்றன. எதற்கு இவ்வளவு பீடிகை என்றால் எனக்கு அவருடைய Love and Obstacles சிறுகதைத் தொகுப்பு மிகவும் பிடித்தது; ஒரு மின் பதிப்பு வாங்கி வைத்திருக்கிறேன். இன்று என் நண்பர் ஒருவர் எனக்கு அதே சிறுகதைத் தொகுதியை காகிதப் பதிப்பினை வாங்கி அனுப்பியிருந்தார். என்னடா இது ஏற்கனவே இருக்கிற நூலை வாங்கி அனுப்பிவிட்டாரே என்று எனக்குப் பிடித்த கதையான 'தேனீக்கள் பாகம் 1' ஐ வாசித்தால் பல வாக்கியங்கள் வேறு மாதிரியாக இருப்பது போல ஒரு உணர்வு. மின் நூலையும் காகித நூலையும் ஒப்பிட்டால் ஒவ்வொரு கதையிலும் ஏகப்பட்ட வேறுபாடுகள்! ஏகதேசம் அதே கதைகள்தான் என்று கடைசியில் சமாதானம் செய்துகொண்டாலும் மனம் தன்பாட்டுக்கு பொருமுகிறது.

ரொபொர்டோ பொலொனொவின் கிளாரா
--
என் நினைவுகளையும் தோலையும் கிழித்து ஒரு காதல் கதையை எழுதிக்கொண்டிருந்தபோது நியுயார்க்கரில் பிரசுரமாகியிருந்த ரொபொர்டோ பொலொனொவின் கிளாரா சிறுகதையை வாசித்தேன். கதைசொல்லி கிளாராவை தன் பதினேழு வயதில் சந்திக்க அவர்களிடம் உறவு ஏற்படுகிறது. அது காதலா வெறும் உடல் இச்சையாலான உறவா என நமக்குத் தெரிவதில்லை. அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள். கிளாராவுக்கு பல உறவுகளை கடந்து செல்கிறாள். திருமணங்கள், விவாகரத்துகள் கடந்து ஒரு மண உறவில் நிலை பெறுகிறாள். கதைசொல்லியும் பல உறவுகளைத் தாண்டி போய்கொண்டிருக்கிறான். பல வருடங்களுக்குப் பிறகான இடைவெளிகளில் அவர்கள் சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். சில சமயம் அவர்களுக்கிடையே உடலுறவும் நடக்கிறது, கிளாராவின் உடலும் தோற்றமும் வெகுவாக மாறியிருக்கிறது. அவளுக்கு மன அழுத்தங்கள் காரண்மாக எலிகள் நடமாடும் கனவுகள் வருகின்றன. அவன் கிளாராவை கடைசியாக சந்திக்கும்போது அவர்களிடையே பேச்சற்ற மௌனமே நிலவுகிறது. கிளாராவுக்கு புற்று நோய் என்று அவன் அறிகிறான். அவளுடைய கணவனோடும் அவர்களின் குழந்தையோடும் கூட அவன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறான். கிளாரா அதன் பிறகு காணாமல் போகிறாள். கதைசொல்லியின் கனவில் வரும் கிளாராவுக்கு வேறொரு உடலும் முகமும் இருக்கின்றன. கிளாரா இறந்திருப்பாள் என பூடகமாகச் சொல்லப்படுகிறது. கிலாராவின் கணவனோடு தொலைபேசியில் பேசும்போது கதைசொல்லிக்கு அவன் தன்னுடைய நட்பை வேண்டுகிறான் எனத் தோன்றுகிறது. இளமையெனும் தெய்வீக செல்வம் வற்றிவிட்டதையும் அதைத்தாண்டி உறவுகள் நிலைப்பதையும் சொல்லும் கதை கிளாரா. கதையில் அதீத வர்ணனைகள் இல்லை வாக்கியங்களில் உபமான உபமேயங்கள் இல்லை. செக்ஸ் காட்சிகள் இல்லை. குறிப்பாக பாலகுமாரன்தனமான நெகிழ்ச்சிகள் இல்லை. ஆனால் கதை அபூர்வ கவித்துவத்தை வெளிப்படுத்துகிறது. நான் என் கதையின் ஏழாவது வடிவத்தை நேற்று எழுதினேன். அதில் அந்த தெய்வீக செல்வம் இன்னும் வற்றவில்லை. அதனால் ஏழு வடிவங்களையும் ஒரே கதைக்குள் வைத்துக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.

டொனால்ட் பார்த்தல்மேயின் (Donald Barthelme) இந்திய எழுச்சி (Indian Uprising) சிறுகதை
--
நேற்று இந்து நாளேட்டில் ஷிவ் விஸ்வநாதனின் Thoothukudi Fables கட்டுரையை படித்தபோது பார்த்தல்மேயின், 'இந்திய எழுச்சி' சிறுகதை ஞாபகம் வந்தது. நான் எழுத வந்த புதிதில் எனக்கு ஆதர்சமாக வரித்துக்கொண்டது பார்த்தல்மேயின் சிறுகதைகளையே. பார்த்தமல்மேயின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம் கொண்டவை; புனைவின் சாத்தியங்களை விசாலப்படுத்தியவை. அவற்றுள் இந்திய எழுச்சி சிறுகதை அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் போராட்ட எழுச்சியைப் பற்றியது. கதை துண்டு துண்டாக பல்வேறு காட்சிகளையும் பல்வேறு பார்வைகளையும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய அதிகாரியின் மனஓட்டங்களின் வழி சொல்லப்படுகிறது. அவனுக்கும் முன்னாள் காதலிகள் இருக்கின்றனர். ஒருத்தி பெயர் சில்வியா. அவளிடமும் அடையாளமற்ற 'நீ' என்று இன்னொருவரிடமும் அவன் ஏதோ ஒரு அங்கீகாரம் தேடி விக்கி விக்கி கதை சொல்கிறான். கதை வெளியான போது அமெரிக்கர்களின் வியட்நாம் யுத்த அட்டூழியங்களைப் பற்றிய குற்ற உணர்வு கதையாக வாசிக்கப்பட்டது. ஒருவகையில் யுத்தகொடுமைகளுக்கு அத்தனை அமெரிக்கர்களையும் அந்தக் கதை பொறுப்பாக்கியது. யாரோ முகம் தெரியாத நீயிடம் மன்றாடுவதாக மன்னிப்பு கிடைக்காமல் கிடந்து தெவங்குவதாக சிதறுண்ட மனத்தின் வெளிப்பாடாக கதை அறியப்பட்டது. தூத்துக்குடி படுகொலைகளும் பார்த்தல்மேயின் கதையொன்றை வேண்டி நிற்கின்றன.

நபகோவின் பினின் (Pnin)
--
விளாடிமிர் நபகோவின் பினின் நாவலை வாசித்தவர்களை நான் இன்னும் சந்தித்திருக்கவில்லை. லோலிதாவின் ஹும்பர்ஸ் ஹும்பர்ஸிடமிருந்து எவ்வளவு வித்தயாசமானவர் பினின்! தன்னுடைய கதாநாயக பாத்திரங்களுக்கு வி, விக்டர், விளாடிமிர் என்றெல்லாம் பெயர் வைத்து கதாநாயகன்கள் நபகோவின் நீட்சிதானோ என எண்ணவைக்கும் நபகோவ் உண்மையில் பினின் கதாபாத்திரத்தோடுதான் அடையாளம் காணப்பட்டார் என பல விம்ர்சகர்கள் எழுதுகிறார்கள். லோலிதாவின் ஹும்பர்ஸிடம் காணப்படுகிற சுயமோகமும் diabolical intelligence-ம் பினினிடத்தில் சுத்தமாக இல்லை. ஹும்பர்ஸின் கதைசொல்லலை ஒரு வகையான seduction எனலாம்; அது அவனுடைய குற்றச்செயலுக்கு வாசககர்களை சாதக சாட்சிகளாக recruit செய்வது. ஆனால் பினினிடத்தில் அப்பாவித்தன்மையும் வேடிக்கையும் மிளிர்கின்றன. ஒரு புலம்பெயர்ந்த ரஷ்யனாக அமெரிக்காவில் ஆங்கிலத்தோடும் அமெரிக்க வாழ்வோடும் தன்னுடைய புஷ்கினின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் பாரம்பரியத்தோடும் தடுமாறும் கதாபாத்திரம் பினின். பினினுக்கு அமெரிக்கா கைவசமாவதில்லை. ஹும்பர்ஸோ அமெரிக்காவின் உள்ளார்ந்த இதயத்தை உற்று நோக்கி அதன் துடிப்புகளுக்கு ஏற்ப கதை சொன்னவன். பினின் அமெரிக்காவில் கால் தடுக்கி கீழே விழுபவன். இப்படி வேறுபட்ட கதாபாத்திரங்களை உருவாக்க முடிந்ததும் நபகோவின் சாதனை.

நாடின் கோர்டிமெரின்  (Nadine Gordimer) சிறுகதை நகரத்து காதலர்கள் (City Lovers)
--
மொழிக்குள் அடங்காத உடல்களின் இச்சைகளையும் அவற்றின் கூடல்களையும் தன் கதையாடல்களின் வழி சொன்னவர் நாடின் கோர்டிமெர் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. அதற்கு ஒரு நல்ல உதாரணம் கோர்டிமெரின் நகரத்து காதலர்கள் கதை. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்தபோது, வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையேயான உறவுகள் சட்டவிரோதமாக இருந்த காலத்தில் கறுப்பின பெண்ணுக்கும் வெள்ளையன் ஒருவனுக்கும் இடையேயுள்ள உறவை இந்தக் கதை சித்தரிக்கிறது. அவர்களுக்கு இடையிலான உரையாடல்களில் அவர்களுடைய உலகம் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பது தெரிகிறது. ஆனால் உடலிச்சையோடு வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஒரு நாள் அவனுடைய வீட்டில் போலீஸ் நுழைந்து இருவரையும் பிடித்து (அவள் அவனுடைய பீரோவில் ஒளிந்துகொண்டிருக்கிறாள்) விசாரணைக்கு அழைத்து செல்கிறது. போலீஸ் அதிகாரிகள் அவளை பரிசோதிக்கும் டாக்டர் எல்லோரும் அவர்களை கௌரவமாகவே நடத்துகிறார்கள். கோர்ட்டில் அவர்களுக்கிடையே உடலுறவு நடந்தது என்பதை நிரூபிக்க முடியாததால் வழக்கு தள்ளுபடியாகிவிடுகிறது. அவளுடைய தாய் மறுநாள் செய்தித்தாள்களில் வெள்ளையர் வீடுகளுக்கு கறுப்பின பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடது என பேட்டி அளிப்பதோடு கதை முடிகிறது. கோர்டிமெரின் சித்தரிப்புகளின் உடலுறவு இருக்கிறது ஆனால் காமத்தின் தெறிப்பு இல்லை. வெவ்வேறு உலகங்களுக்குள் சிக்குண்டிருக்கும் உடல்கள் இச்சைகளினால் இணைகின்றன என்ற  கோர்டிமரின் கதைசொல்லல் அபூர்வமானது.

காவபட்டாவின் Beauty and Sadness
--
போன வருடம் ஜப்பான், ஓசாகாவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புவதற்காக ஒசாகா விமானநிலையத்திற்கு ரயிலைப் பிடிக்க வேண்டும். தவறுதலாக நானும் இன்னொரு பேராசிரியரும் நேர் எதிர் திசையில் கியோட்டோ நகரத்திற்கு செல்லும் ரயிலில் ஏறிவிட்டோம். ஓடியாடி விசாரித்து அதே ரயிலில் கியோட்டோவிலிருந்து ஒசாகா விமானநிலையத்திற்கு திரும்பி போய்விடலாம் என அறிந்து ஆசுவாசமடைந்தோம். அந்த களேபரத்திலும் எனக்கு காவபாட்டாவின் Beauty and Sadness நாவலில் முதல் அத்தியாயம் நினைவுக்கு வந்தது. நாவலில் கதாநாயகன் ஓகி டிசம்பர் 29 தேதி கியோட்டோ நகருக்கு முதல் அத்தியாயத்தில் சென்று கொண்டிருப்பான். அங்கே புது வருட நாளின் போது கியோட்டோவில் ஒலிக்கும் மணியோசையைக் கேட்பதற்காகப் போய்க்கொண்டிருப்பான். கியோட்டோவில் அவனுடைய பழைய காதலி ஓவியர் இருக்கிறாள் அவளோடு சேர்ந்து அந்த மணியோசையைக் கேட்கவேண்டுமென்பது அவனுடைய அவா. சிறு சிறு வாக்கியங்கள்; அடங்கிய தொனி; அதில் உணர்ச்சி பிழம்பாய் பொங்கும் கதை. காவபட்டாவின் House of Sleeping Beauties, One Thousand Cranes, Snow Country ஆகியவற்றைவிட  Beauty and Sadness எனக்கு மிகவும் பிடித்த நாவல். உண்மையில் லாசராவை பற்றிய பிரேமையிலிருந்து என்னை விடுவித்து வேறுவகையான அமைதியாக கதை சொல்லும் முறையை எனக்கு கற்றுக்கொடுத்த நாவல். ஓசாகாவில் நான் கலந்துகொண்ட கருத்தரங்கு நடைபெற்ற மியூசியத்திற்கு வெகு அருகாமையில்தான் யாசுனேரி காவபட்டா மியூசியம் இருந்தது. 2002 இல் ஜப்பான் சென்றபோது காவபட்டா மியூசியத்திற்கு புனித யாத்திரை செல்வது போல சென்று பார்த்தேன். போன வருடம் காவபாட்டா மியூசியத்திற்கு செல்ல இயலவில்லை. அந்த வருத்தமே Beauty and Sadness நாவலை மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கிறது. காவபட்டாவின் நாவலைப் பற்றியும் அவருடைய நோபல் பரிசு ஏற்புரை -Moon and Snow in Japanese Literature பற்றியும் முன்பே எழுதியிருக்கிறேன். அழகும் துக்கமும்.

மிலன் குந்தேராவின் (Milan Kundera) சிறுகதை The Hitchhiking Game
--
ஆண்- பெண் காதலுறவுகளை அதிகார மேலாண்மைக்கான போராட்டமாகவும் நாட்டு வரலாறு, அரசியல் சித்தாத்தங்கள் ஆகியன இடையீடு செய்யும் வெளியாகவும் சித்தரித்து எழுதியதில் மிலன் குந்தேராவுக்கு நிகர் மிலன் குந்தேராதான். அவருடைய நாவல்களில் குறிப்பாக The Joke, Unbearable Lightness of Being ஆகிய நாவல்களில் உள்ளார்ந்து இருக்கும் ஆண்-பெண் அதிகாரமேலாண்மைக்கான போராட்டம் வெளிப்படையாக சொல்லப்படுவது The Hitchhiking Game சிறுகதையில்தான். பாலின்ப வெளியில்தான் நாம் மற்றமையை ( the Other) வேறு எந்த செயலையும் விட முற்றிலுமாக புதிதாகக் கண்டுபிடிக்கிறோம் என்பதையும் சொல்கிற கதை. Laughable Loves என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள இந்தக் கதையைப் பற்றி குந்தேரா கூறுகையில் தன்னுடைய அத்தனை படைப்புகளுக்குமே Hitchhiking Game என பெயர் வைத்திருக்கலாம் என்றார். கதையில் ஒரு இளைஞனும் அவனுடைய கேர்ல் ஃப்ரெண்டும் காரில் விடுமுறைக்காக செல்கிறார்கள். அவர்கள் பொழுதுபோவதற்காக role playing விளையாட்டு ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். அவன் நெடுஞ்சாலையில் காரோட்டி செல்லும் இளைஞன் அவள் சாலையில் வழிமறித்து அவன் காரில் பயணம் செய்யும் விபச்சாரி. விளையாட்டு தீவிரமடையும்போதெல்லாம் இளைஞனுக்கு அவள் எப்படி இப்படி தத்ரூபமாக நடிக்கிறாள் என்ற அச்சம் ஏற்படுகிறது. அவள் விளையாட்டிலிருந்து விலக நினைக்கும்போது அவன் விடுவதில்லை அவன் விரும்பும்போது அவள் விளையாட்டிலிருந்து வெளிவருவதாயில்லை. கடைசியில் விளையாட்டு அவர்களுக்கிடையே வன்முறையிலும் அழுகையிலும் முடிகிறது. குந்தேரா இந்தக் கதைக்கருவைப் பற்றி ஒரு முறை, "They reflect the small number of themes that obsess me, define me, and, unfortunately restrict me. Beyond these themes, I have nothing else to say or write" என்று கூறினார். ஒருவேளை நமக்கான பாத்திரங்களை நடிப்பதுதான் உறவோ?

ஹருகி முராகமியின் The Wind-Up Bird Chronicle
--
முராகமியின் படைப்புகள் பல தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன; அவற்றில் Nowegeian Woodஐ தமிழில் இன்னும் படிக்கவில்லை. Kafka on the Shore ஐயும் IQ84ஐயும் யாரேனும் மொழிபெயர்த்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.  முராகமியின் சிறுகதைத்தொகுப்புகளுள் எனக்கு மிகவும் பிடித்த Men Without Women ஐ யாரும் ஏற்கனவே மொழிபெயர்த்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. முராகமியின் The Wind-Up Bird Chronicle அவருடைய படைப்புகளிலேயே ஆகச் சிறந்தது என்பது என் எண்ணம். லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் (மார்க்வெஸ் variety) அதீத கற்பனை இல்லாமலேயே கனவு, பிரேமை, யதார்த்தம் ஆகியவற்றிகான இடைவெளிகளை முராகமியால் அழித்துவிட முடிகிறது. The Wind-Up Bird Chronicle நாவலின் கதாநாயகன் டோரு ஒகாடா என்னென்ன உலகுகளை horror of daily life வழியாகவே கடந்து செல்கிறான் என்று வியந்து வியந்தே அவனோடு எனக்கு அடையாள ஒன்றுதல் ஏற்பட்டுவிட்டது. நாவலில் வரும் போர் நினைவுகளின் சித்தரிப்புகளில் ஒருவனை முழுமையாக தோலுரிப்பது விவரிக்கப்படும். அதைப்படித்து எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமையில் பல முறை இந்த நாவலைக் கைவிட்டேன். பிறகு அந்த அத்தியாய்த்தை ஒதுக்கிவிட்டு பிறவற்றைப் படித்து முடிதேன். The Wind-Up Bird Chronicle ஐ பல விமர்சகர்களும் அதிகாரத்துக்கும் ஆசைக்கும் எதிரான நாவலாக வாசித்திருக்கிறார்கள். நாடகமாக நடிக்கப்பட்ட இந்நாவலின் சிடி போன வருடம் கிடைத்தது; அவ்வளவாக சோபிக்கவில்லை. கனவும் பிரேமையும் யதார்த்தமும் வித்தியாசங்களின்றி அழிந்த உலகு என்னுடையது எனக்கானது. டோரு ஒகாடா தன் பக்கத்து சந்தில் தொலைந்து போன பூனைக்குட்டியைத் தேடுவது போல நானும் அவ்வபோது இணையத்தில் பூனைக்குட்டிகளின் புகைப்படங்களைத் தேடுவேன்.


மரியோ வர்காஸ் லோசாவின் (Mario Vargas Llosa) In Praise of Stepmother இல் வரும் கதை  Candaules, King of Lydia 
-
மரியோ வர்காஸ் லோசாவின் தன் முதல் கதை வெளியானபோதிலிருந்து தான் எதிர்கொள்ளும் கேள்வி தன் கதைகள் பேசும் 'உண்மை' என்ன என்பது என ஒரு பேட்டியில் கூறினார். லோசாவின் நாவல் In Praise of Stepmotherஇல் பாலியல், உண்மை, புனைவு ஆகியனவற்றுக்கிடையான உறவு வேறுவிதமாக அணுகப்படுகிறது. நாவலில் சிற்றன்னையான டோனா லூக்ரிஷியாவும் அவள் கணவன் டான் ரிகோபெர்டோவும் பாலியல் ஓவியங்களைப் பற்றி பேசுவதை தங்கள் படுக்கையறைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காண்டௌலெஸ், லிடியாவின் அரசன் என்ற ஓவியத்தை பற்றி பேசும் அத்தியாயத்தை தனி சிறுகதையாகவும் வாசிக்கலாம். காண்டௌலெசுக்கு தன் அரசியின் அழகை பற்றி அதீத பெருமை. அவள் அழகை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை அவனுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அவன் தன் பிரதம மந்திரியான கைகஸை தன் படுக்கையறைக்குள் ஒளிய வைத்து தன் அரசியை நிர்வாணமாகப் பார்க்க வைக்கிறான். இதை அறிந்து பெருங்கோபம் கொள்ளும் அரசி ஒன்று தன்னை நிர்வாணமாகப் பார்த்த கைகஸ் தன் நாட்டின் சட்டப்படி கொல்லப்படவேண்டும் அல்லது அவன் அரசனைக் கொல்லவேண்டும் என்று சொல்கிறாள். கைகஸ் அரசைக்கொன்றுவிட்டு தான் அரசனாகிறான். யாக்கப் யோர்டன்ஸ் வரைந்த ஓவியத்தில் கைகஸ் ஒளிந்திருந்து பார்ப்பது மட்டும் சித்தரிக்கப்படுகிறது. லோசாவின் நாவலில் வரும் கதையில் கைகஸ் அரசனைக் கொல்வதெல்லாம் இல்லை. லோசா ஓவியத்தை கணவனுக்கும் மனைவிக்குமான பாலியல் discourseஐ தூண்டும், அதிகப்படுத்தும் உபகரணமாக பயன்படுத்திக்கொள்கிறார். கதை வழக்காறாக புழங்கி வந்த லிடியாவின் (இன்றைய துருக்கி) அரசனைப்பற்றிய கதையிலிருந்து வழுவி வெறொரு புனைவின் உண்மையைத் தொட்டு தொட்டுச் செல்கிறது. புனைவிலும் பாலியலிலும் உண்மை என்னவாக இருப்பினும் அது எப்படியாகவேனும் பேசப்பட்டுவிடும். 

No comments: