Friday, January 7, 2022

திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றிக் கொள்ள என சில

 திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றிக் கொள்ள என சில

“இனித் திரும்பி வரவே முடியாத ஒரு வழிப் பயணத்திற்கு, வேறொரு அறியாத, கடல் கடந்த தேசத்திற்கு நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பத்தோடோ அப்புறப்படுத்தப்படப் போகிறீர்கள் என்றால் நீங்கள் என்னென்ன எடுத்துப் போவீர்கள்?” என்று ஃப்ரெஞ்ச் உச்சரிப்பில் தமிழில் கேட்டார் கேமலோன்; அவர் ரீயூனியனிலிருந்து வந்திருந்தார். எனக்கு அவரை முன்னே பின்னே அறிமுகமில்லை. சென்னை விமான நிலையத்திலிருந்து ஃபோன் பண்ணிவிட்டு நேராக வீட்டுக்கு வந்துவிட்டார். கேமலோனின் முன்னோர்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கில/ஃப்ரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் போது வலுக்கட்டாயாமாகவோ விரும்பியோ பாண்டிச்சேரி காரைக்கால் பகுதிகளிலிருந்து பெரும்பாலும் கூலித்தொழிலாளிகளாக 1848-1850 களில் ரீயூனியனுக்கு கூட்டிச்செல்லப்பட்டவர்கள். இந்து மகாசமுத்திரத்திலுள்ள ரீயூனியன் ஃபிரான்ஸின் காலனியாக இருந்து இப்போது ஃப்ரான்ஸ் நாட்டின் பகுதியாகியிருக்கிறது, சுதந்திர நாட்டிற்குரியச் சில சலுகைகளுடன். இன்றைய ரியூனியனின் மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம் அதில் மூன்று லட்சம் பேர் தமிழகத்தைப் பூர்விகமாகவும் தமிழைத் தாய்மொழியாகவும் கொண்டவர்கள்.
கேமலோன் என்ற பெயர் ஆதியில் கமலன் என்றிருந்திருக்க வேண்டும். ரீயூனியனின் ஃப்ரெஞ்சு மொழி கலந்து கேமலோன் என்றாகிவிட்டது. கேமலோன் பேசிய தமிழும் அப்படித்தான் இருந்தது. மூன்று நூற்றாண்டுகளாக ஃப்ரெஞ்சு மொழியோடு கலந்து உருமாறிய தமிழ்; அந்தத் தமிழ் கூட அதற்கே உரிய வார்த்தை அர்த்தங்களோடுதான் புழங்குகிறது. கேமலோன் ரீயூனியன் பல்கலையில் மானிடவியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்; தன்னுடைய முனைவர் பட்டத்துக்காக ரீயூனியனில் பொங்கல் பண்டிகையின் போது நிகழ்த்தப்படும் வள்ளிதிருமணம், திரௌபதி நாடகம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் / கூத்துகள் தமிழகத்தில் எங்கே எப்படி நடத்தப்படுகின்றன அவற்றின் பொருள் என்ன என்பதையெல்லாம் அறிவது அவர் நோக்கமாக இருந்தது; அதற்காக என் உதவி நாடி வந்திருந்தார்.
கேமலோன் என்னிடம் காட்டிய வீடியோக்களில் ரீயூனியனின் வள்ளிதிருமணம் மற்றும் திரௌபதி நாடகம் விசித்திரமாக இருந்தன. அந்த நாடகங்களின் நடிகர்கள் பாப் பாடகர்கள் போல ஜிகினா உடைகளணிந்து மாலை மாலையாய் தங்கச்சங்கிலிகள் அணிந்துகொண்டு மந்திர உச்சாடனம் செய்வது போல நாடக வசனங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிய ஃப்ரெஞ்சு கலந்த தமிழில் ( creole) வார்த்தைகள் தெரிந்த மாதிரி இருந்ததே தவிர சுத்தமாகப் புரியவில்லை. கேமலோன் அந்த நாடக நடிகர்களுக்கும் அந்த வசனங்களின் பாட்டுக்களின் அர்த்தங்கள் தெரியாது என்று கூறினார். பார்வையாளர்களுக்கும் அவற்றின் அர்த்தங்கள் தெரியாதாம்.
கூலித்தொழிலாளிகளாக ரியூனியனுக்குக் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்கள், பொங்கல் கொண்டாடுவது, தைப்பூசம் கொண்டாடுவது, வள்ளி திருமணம், திரௌபதி நாடகம் நடத்துவது ஆகியனவற்றைத் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களாக காலனி ஆதிக்கத்தின் போது மாற்றியிருக்கிறார்கள். பொங்கலுக்காக நான்கு நாட்கள், தைப்பூசத்திற்காக மூன்று நாட்கள் எனக் கொண்டாடி அவற்றை தங்களுக்கான விடுமுறை தினங்களாகப் பெற்றிருக்கிறார்கள். போராட்டங்களாகவும் கொண்டாட்டங்களாகவும் கடந்த இரண்டரை நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்ட இந்நாடக நிகழ்வுகளுக்கு மூலங்களாக வள்ளி திருமணம், திரௌபதி நாடகம் ஆகியவற்றின் அச்சுப்பிரதிகளும் வாய்மொழிக்கதைகளும் இருந்திருக்கின்றன. கேமலோன் என்னிடத்தில் நைந்து போயிருந்த அந்த அச்சுப்பிரதிகளின் புகைப்படங்களைக் காட்டினார். மனனம் செய்த பகுதிகளை அர்த்தம் புரியாமல் இன்றும் அவற்றை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்ற கேமலோன் திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்துக்கு நீங்கள் எதையெல்லாம் எடுத்துச் செல்வீர்கள் என்று கேட்டார். அவரே தொடர்ந்து, “என் மூதாதையர் எடுத்துச் சென்றது ; கொத்துமல்லி விதைகள், கறிவேப்பிலைச் செடிகள், பதியன்கள், விதை மாங்கொட்டைகள், மாங்கன்றுகள், சீரகம், மஞ்சள், மல்லிகை, வள்ளிதிருமணம், திரௌபதி நாடகம், கந்த சஷ்டி கவசம், காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை ஆகியனவற்றின் அச்சுப்பிரதிகள்” என்று சொல்லி முடித்த போது நான் அசந்து போய் உட்கார்ந்திருந்தேன். இந்தக் கையளவு பொருட்களும் புத்தகங்களும் போதுமா பற்றிக்கொள்ள, தமிழ்ப் பண்பாட்டையே எடுத்துச் செல்ல?!
கேமலோன் சொன்னார்: இன்று ரீயூனியன் தமிழர் வீடுகளனைத்திலும் கொத்துமல்லி, கறிவேப்பிலைச் செடிகளைப் பார்க்கலாம்; தமிழர் பகுதிகளில் மாங்காடுகள் அடர்ந்திருக்கின்றன. முருகன் கோவில் இருக்கிறது. தெருவில் நவீன உடை அணிந்து செல்லும் தமிழ்ப் பெண்களின் கூந்தலிலும் மல்லிகைப் பூவைக் காணலாம்.
கேமலோன் புறப்பட்டுச் சென்றபின் நான் இந்த இரு கவிதைகளையும் எழுதினேன்:
புறப்படுதல்
---
நூலகத்தை ஜாதிக்காய் பெட்டிகளில்
அடைத்து இறுக்கி ஆணியடித்து
தொழுவத்து குடிசையில் வைத்தாயிற்று
பெற்றோரை நடுக்கூடத்தில்
மார்போடு அணைத்த குழந்தை
கையடக்க மலிவுப் பதிப்பு
கந்த சஷ்டிக் கவசம்
அம்மியையும் குழவியையும்
எடுத்துச் செல்லவியலா துக்கத்தில்
ஒரு கையில் மாங்கன்று
மறு கையில் கறிவேப்பிலைச் செடி
ஏந்தி நிற்கும் துணைவி
கூடுதல் பாதுகாப்பிற்கு
வள்ளி திருமணம் நாடகம்
ரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பு
கன்றுகள் பயணம் பிழைக்காவிடில்
மறு ஏற்பாடென
சிறு சாக்கு நிறைய மாங்கொட்டைகள்
சீரகம் கொத்துமல்லி
வேறு என்ன என்ற திகைப்பில்
ஒரு பிடி பச்சை விரலி மஞ்சள்
எந்த ஊரிலும்
விரிந்த வானும்
ஆழ் கடலும்
சேரும் கோடு
கரு நீலம்தான்
என்று ஒரு ஆறுதல்.
—————
பேறு
---
வீடு திரும்புவற்கான பாதையில்
இருள் சூழ்ந்துவிட்டது
பசியடங்கிய வயிறு போல
எங்கும் மௌனம் கவிந்துவிட்டது
இனியெங்கும் செல்வதிற்கில்லை
ஆதலால்
சொற்களின் நினைவுகளில்
மகரந்தங்களை யாசிக்கிறாய்
ஏதோ ஒரு கூடுதலில்
லயம் கூடுமென நினைக்கிறாய்
ஏதோ ஒரு ஒடுங்குதலில்
உத் கீதம் எழுமென நம்புகிறாய்
ஏதோ ஒரு அபத்தம் பற்றுகையில்
அழகு விகசிக்குமென ஏங்குகிறாய்
உன் ஆழ் மனக் குகையில்
விடாது சொட்டும்
நீர்த்துளிகளுக்கு
கண் என்றும்
மீன் என்றும்
சிறகென்றும்
பெயரிடுகிறாய்
கண் ஒளியாக
மீன் கடலாக
சிறகு வானாக
உன் ஈடு
வீடு பேறாகிறது.

No comments: