Friday, January 7, 2022

கலாப்ரியாவின் வெள்ளித்திரை

 கலாப்ரியாவின் வெள்ளித்திரை

—-
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் சுபகுணராஜனோடு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது
ஃப்ரெஞ்சு தத்துவவாதியான அலென் பட்ஜ்யு(Alain Badiou) ஃபிரான்சில் நடந்த மே 1968 மாணவர் போராட்டத்தை ஃபிரெஞ்சு நாட்டினரின் சமகால சமூகத் தன்னிலையைக் கட்டமைத்த (construction of social subjectivity) பெருநிகழ்வு என கோட்பாட்டாக்கம் செய்கிறார்; அந்த ஃப்ரெஞ்சு பெருநிகழ்வுக்கு (Event) நிகராக தமிழ்ச் சமூக வரலாற்றில் நடந்த பெரு நிகழ்வாக, எண்ணற்றோர் பங்கேற்ற, தமிழனின் சமகால சமூகத் தன்னிலையை தொடர்ந்து கட்டமைக்கின்ற பெருநிகழ்வாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்லலாம் என்று சொன்னேன். இந்தப் பெருநிகழ்வில் அடிமட்டத் தொண்டனாகப் பங்கேற்ற கலாப்ரியாவின் சுயசரிதை நினைவுக்குறிப்பு நூல்கள், ‘நினைவின் தாழ்வாரங்கள்’, ‘உருள் பெருந்தேர்’ - ஒன்று மற்றதன் தொடர்ச்சி- தமிழ் சமூகத் தன்னிலை உருவாக்கத்தின் சித்திரத்தை நமக்கு கையளிக்கின்றன. இந்தி எதிர்ப்புப்போரட்டத்துக்குப் பின் உருவாகிய பெருநிகழ்வுகள் என இந்தியாவில் ஏற்பட்ட கடும் உணவுப்பஞ்சம் வேலை இல்லா திண்டாட்டம் எமெர்ஜென்சி அறிவிப்பு ஆகியவற்றின் தொகுப்பினைச் சொல்லலாம். கலாப்ரியாவின் நூல்களில் உணவுப் பஞ்சம், வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கும் நிறைய குறிப்புகள் இருக்கின்றன. 1980 களின் கொதி நிலை 1990 களில் பொருளாதார தாராளயமாக்கல் எனும் இன்னொரு பெருநிகழ்வுக்கு இட்டுச் சென்றது. கலாப்ரியாவின் இரு நூல்களும் நமக்கு நம் வரலாற்றையும், சமூகத் தன்னிலை உருவாக்கத்தையும், நவீன கவிதையையும் புரிந்துகொள்ளக் கிடைத்த பெருங் கொடைகள் . நான் இன்னும் கலாப்ரியாவின், ‘ஓடும் நதி’ ‘சுவரொட்டி’ ‘காற்றின் பாடல்’,
‘மறைந்து திரியும் நீரோடை’, ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்’ ‘போகின்ற பாதையெல்லாம்’,
‘சில செய்திகள் சில படிமங்கள்’, ’அன்பெனும் தனிஊசல்’, ’பாடலென்றும் புதியது’ ஆகிய கட்டுரைத் தொகுப்பு நூல்களையும் வாசிக்க வேண்டும். கலாப்ரியாவின் நாவல் ‘வேனல்’ இப்போது வாசிப்பில் இருக்கிறது.

No comments: