Monday, June 13, 2022

தாகம்- கவிதை/ தனி நபர் நாடகம்

 தாகம்- கவிதை/ தனி நபர் நாடகம்

------

இப்போதெல்லாம்
எவ்வளவு தாகமாய் இருக்கிறது
தெய்வீகக்காதல் கதையொன்றைக் கேட்பதற்கு
ஆனாலும்
இரவின் நிறம் அடரும் சுவர்களுக்குக்கூட
உன்னையும் என்னையும் பற்றி
நான் ஏன் சொல்லக் கூசுகிறேன்
ஒரு இரகசியம் நழுவி
நோக்கமற்ற குமிழியாய்
உடைந்து வர்ணஜாலமிழக்கும்
நீர்த்திவலைகளாவதை
நான் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது
உன் கூந்தலின் வருடலில்
என் மார்க்காம்புகள் சிலிர்த்ததை
யாருக்கு நான் சொல்ல வேண்டும்
யாருக்கு நான் சொல்லமுடியும்
நள்ளிரவில் வரும் உன்
தொலைபேசி அழைப்புகள் கூட
நம்முடைய உன்மத்த கூடலையே ஒத்திருக்கின்றன
சொற்களால் அதிகம் பேசாத நம்மிடம்
தீராத தாபத்தைத் தவிர என்ன இருக்கிறது
வேறு என்ன வேண்டும் மூர்க்க உதடு கவ்வல்களையும்
அவசர ஆடை அவிழ்ப்புகளையும்
தாளவொண்ணா உடல் ஈர்ப்பையும் தவிர, என வினவுகிறாய்
நாம் சந்தித்த கணத்தின் மாயாஜாலத்தில்
நாகலிங்க மரம் தன் மலர்களை
உதிர்த்துக்கொண்டிருந்தது
அப்படித்தானே எல்லாக்காதல் கதைகளிலும்
ஒரு மலர்க்காட்சி வருகிறது
நான் உதிர்ந்த நாகலிங்கப் பூக்களின் மேல்
படுத்திருந்த பூனையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
நீ நினைப்பது உண்மைதான்
காதல்கதைகளில் பூனை அசந்தர்ப்பமாய் வரக்கூடாதுதான்
நீ கடல் நீல உடையணிந்து
மருத்துவமனையின் இதயமானியின் அலைகள் போல
உன் கூந்தல் அலைவுற வந்துகொண்டிருந்தாய்
இந்த சொற்ப வரிகளிலேயே உன் கூந்தல்
இரண்டாவது முறை வந்துவிட்டது பார்
உனக்குத் தெரியுமா அப்போது நான்
உற்றுப்பார்த்தலைப் பற்றி
யோசித்துக்கொண்டிருந்தேன்
கனலும் நெருப்பை,
உதிரும் பூவை,
அலையடிக்கும் கடலை
யாருடைய தோளிலோ சாய்ந்து
உற்றுப்பார்க்கும்போது அது ஏன் வேறு ஏதோ சொல்கிறது
இங்கே நான் புதுமைப்பித்தன் ஏன் ஜேக் லாண்டனை
மொழிபெயர்த்தான் என்றுதான் சொல்ல விரும்பினேன்
பூனையை உற்றுப்பார்த்தது பின்னால்தான் வந்திருக்க வேண்டும்
ஆனால் பாதகமில்லை
மொழிபெயர்ந்த கதை என்னவென்று மறந்துவிட்டது
லாண்டன் ஒரு குடிகாரன் போதையில் அடிக்கடி கடலில் மூழ்கியவன்
பூனையின் ஒவ்வொரு அசைவும்
அது தூக்கத்திலிருந்து இறப்பிற்குள் சுதந்திரமாய்
சறுக்கிச் செல்ல விரும்பியது போல இருந்தது
நீ ஏன் அப்போது என்னை விழுங்கிவிடுவது
போல பார்த்தாய்?
நான் உதிர்ந்த நாகலிங்கப்பூவை எடுத்து
உன்னிடம் தன்னிச்சையாய் நீட்டினேன்
உற்றுப்பார்த்தலில் அறிதலின் பளிச்சிடல் கூடிவரும்
நீயும் நானும் ஸ்தம்பித்து ஒருவரை ஒருவர் பார்த்து நின்றோம்
இன்று எனக்கு என்ன புதிதாய் தெரிந்தது
என நீ வியக்கக்கூடும்
நகரத்தின் குப்பைவண்டிக்கு புதிய
பாடலைச் சேர்த்திருக்கிறார்கள்
சொத்துவரியை கட்டவேண்டும் என்ற அதிகாரக் கூக்குரல்
நீ வழக்கம் போல் என் உதடுகளில்
உன் ஒற்றை விரல் வைத்து என்னைப் பேசவிடாமல்
தடுக்கக்கூடும் நமக்கிடையேதான் சொற்களில்லேயே
உன் தழுவலை, உன் இச்சையை
நான் இரட்டிப்பாக்க விரும்புகிறேன்
அதன் சேதாரங்களுக்கான
சொல்வெளியைக் கூட்டுகிறேன்
எனக்கும் என் கண்ணாடி பிம்பத்திற்கும் இடையே உள்ள
இடைவெளி எனக்கு உறுத்தலாக இருக்கிறது
நான் வெறும் உடலல்ல
எனவும் சொல்ல நினைக்கிறேன்
வேறு யார் நான் உனக்கு
வேறு யார் நீ எனக்கு என்றும்
எனக்குத் தெரியவில்லை
ஆனாலும் இதுதான் எவ்வளவு
இனிமையான ஆத்மார்த்தம்
பூனை எழுந்து சென்றபோது
அது அந்த நாகலிங்க மரத்தையே தன்னுடன் எடுத்துசென்றது
வாலினை மேல் நோக்கி நிமிர்த்தியபடி
சுவர்களைப் பற்றி ஆரம்பித்தேன் ஆனால் தொடரவில்லை
அவை பழமையானவை
அவை வெடிப்புகளும்
மறைப்புகளும் நிறைந்தவை
அவற்றால் சூழும் மாயை
நம்மிடையே இல்லை
ஒவ்வொரு முறையும் நாம்
பூமி அதிர படுக்கைக்கு விரைகிறோமில்லையா
அதை இயக்கும் உயிர்விசை ஒரு புதிர்
அதை அப்படியே வைத்திருப்போம்
நீ ஒரு முறை ஒரே ஒரு முறை
என்னை ‘கடலைமிட்டாய்” என்றழைத்தாய்
அது போதும் எனக்கு

No comments: