ஊட்டி இலக்கிய விழா -2025

ஊட்டி இலக்கிய விழா பேராசிரியர் கணேஷ் டேவியின் ‘யார் இந்தியன்’ என்ற உரையுடன் தொடங்கியது. கணேஷ் டேவியின் ‘After Amnesia’ இந்திய ஆங்கில இலக்கிய விமர்சனத்தில் மிக முக்கியமான நூலாகும். கணேஷ் டேவி Linguistic Survey of India அமைப்பைத் தொடங்கி இந்தியாவின் ஆதிவாசி மொழிகள் அனைத்தையும் சுமார் 3000 தன்னார்வலர்களுடைய உதவியுடன் ஆவணப்படுத்தியவர். மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதும் கணேஷ டேவி நான் ஆசிரியராக இருக்கும் Indian Folklore Research Journal இன் ஆசிரியர் குழுவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். நான் அவரைப் பல முறை முன்பு சந்தித்திருக்கிறேன். டெல்லியில், சென்னையில், பல கருத்தரங்குகளில் என கணேஷ் டேவியை நான் சந்தித்த தருணங்கள் அனைத்துமே இனிமையானவை. அவர் 2016 இல் தென்னிந்தியாவை நோக்கி என் செயல்கள் இருக்கும் என அறிவித்துவிட்டு கர்நாடகாவில் இருக்கும் தார்வாட் நகருக்கு குடிபெயர்ந்துவிட்டார். அதன் பிறகு நான் அவரை ஊட்டியில்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறேன். என் பெயரை இலக்கிய விழா நிகழ்ச்சி நிரலில் பார்த்து மிகவும் மகிழ்ந்ததாகக் கூறிய கணேஷ் டேவி பரோடாவில் இயங்கும் தன்னுடைய பாஷா நிறுவனத்தை அடுத்த தலைமுறை இளைஞ்ர்களிடம் கையளித்துவிட்டதாகக் கூறினார்.
கணேஷ் டேவியின் உரையில் நான் என்னை அடையாளம் கண்டுகொண்ட பல பகுதிகள் இருந்தன. குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலத்தில் சாலைகளில் தங்களுக்கென்று இல்லாமல் ஆகிவிட்ட சொந்த நிலங்களை நோக்கி திரும்பிப் போய்க்கொண்டிருந்த கூலித்தொழிலாளர்கள் அனைவருமே ஆதிவாசிகள், இந்தியப் பெருநிலத்தின் பழங்குடிகள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. கணேஷ் டேவி அதைத் தன்னுடைய உரையில் உறுதி செய்தார். நிலம், காடு, மொழி ஆகியனவற்றை இழந்துவிட்ட பழங்குடிகள் இந்திய ஜனத்தொகையில் 15 சதவீதம் இருக்கக்கூடும் அவர்களே இந்தியன் என்பது யார் என்ற வரையறைக்குப் பொருத்தமானவர்கள் என டேவி பேசியது எனக்கு உவப்பானதாக இருந்தது. மேலும் இந்தியத் துணைக்கண்டத்தை ஆதிவாசி மொழிகள் அடித்தளமாகக் கொண்டிருக்கின்றன; இங்கே நிலைபெற்றிருக்கும் மொழிக்குடும்பங்களின் மூலப்படிவ மொழிகள் தங்களுக்குள் உரையாடுவதன் காரணமாக நம் civilisational ethos உருவாகிறது என்று கணேஷ் டேவி பேசியதும் எனக்கு முக்கியமாகப்பட்டது.
தேநீர் இடைவேளையின் போது ‘ஏழாவது மனிதன்’ பட இயக்குனர் கே.ஹரிஹரன், நவயானா பதிப்பாளர் ஆனந்த், அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றின் ஆசிரியர் அசோக் கோபால் ஆகியோரை சந்தித்தேன். நவயானா ஆனந்தையும், அசோக் கோபாலையும் தியடோர் பாஸ்கரன் முந்தைய நாள் இரவு உணவின் போது அறிமுகம் செய்து வைத்திருந்தார். ஹரிஹரனை எனக்கு அவர் எல்.வி.பிரசாத் ஃபில்ம் அகாடமியின் இயக்குனராக இருந்தபோதே தெரியும். ஹரிஹரன் பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர்களாக வேலை பார்ப்போருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று திட்டிக்கொண்டிருந்தார். ஹரிஹரன் தான் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் கமலஹாசன் பற்றிய புத்தகத்தைக் காட்ட எங்கள் அனைவரையும் ஹிக்கின்பாதம்ஸ் கடைக்குக் கூட்டிச் சென்றார். இலக்கிய விழா ஒருங்கிணைப்பாளர்கள் விழாவில் பங்கேற்கும் எழுத்தாளர்களின் புத்த்கங்களை ஹிக்கின்பாதம்ஸில் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னுடைய ஐந்து ஆங்கிலக்கவிதை நூல்களும் எங்கள் கண்ணில் படும்படி இருந்தன. நான் தான் நூலாசிரியர் என்ற விபரம் தெரியாமலேயே விற்பனையாளர் இந்த எழுத்தாளரின் பெயரில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மொத்தம் அறுபத்திச் சொச்சம் நூல்கள் இருக்கின்றன அதில் 22 நூல்கள் இங்கே விற்பனைக்கு இருக்கின்றன என்று கூறினார். ஹரிஹரன் “Unblinking Final Report on the Moon” கவிதை நூலைப் புரட்டிப் பார்த்துவிட்டு அதைப் பிறகு வந்து வாங்கிக்கொள்வதற்காகத் தனியே எடுத்து வைக்குமாறு கூறினார். ஆனந்த் “Final Stroke’ நூலில் நடேஷின் சித்திரத்தைப் பார்த்துவிட்டு நடேஷ்தானே என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். அசோக் கோபால் ஜேபி மொழிபெயர்த்த “An imagery wins An imagery kills” நூலை இங்கிலாந்தைச் சேர்ந்த பதிப்பகம் வெளியிட்டிருப்பதைப் பார்த்து வியந்தார். இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒன்றிரண்டு நிமிடம் வரை கூட நீடிக்கவில்லை. ஆனந்த் தமிழ் எழுத்தாளர்கள் ஏராளமாக எழுதகூடியவர்கள் என்று சொல்ல யத்தனித்தார். நான் குறுக்கிட்டு யமுனா ராஜேந்திரன், ஜெயமோகன், எஸ்.ரா, சாரு, மனுஷ்யபுத்திரன் எனப் பலரும் ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டில் நான் மிகமிகக் குறைவாக எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். ஆனந்த் இந்த ஆளைப் பார்த்தால் இத்தனை நூல்கள் ஆங்கிலத்தில் தமிழிலும் எழுதியிருப்பவன் என்று யாராவது நம்புவார்களா என்றார். என் மனதில் சட்டென்று கசப்புணர்வு சேகரமாகிவிட்டது. நான் என் உடை, தோற்றம் ஆகியவற்றில் அக்கறைகொள்ளாதவன், தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து ‘ஊர்க்காரன்’ தோற்றத்தை உண்டாக்கிக்கொள்பவன், என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் ஒரு எழுத்தாளன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏதாவது நியதி இருக்கிறதா, என்ன?. அவருக்கு பொறாமை என்று அலட்சியமாக சொன்னேன். ஆனந்த் ஆமாம் எனக்குப் பொறாமைதான், முக்கி முக்கி ஒரு நூலை எழுதப் பல ஆண்டுகள் ஆகின்றன என்றார். எனக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
அடுத்து நடந்த இரண்டு அமர்வுகளுமே எனக்கு ஆர்வமில்லாதவை ஒன்று இந்தியாவின் போர்கள் பற்றியது, இன்னொன்று பிகேஎஸ் ஐயங்காரின் யோகா பற்றியது. நான் மரங்களையும் செடிகொடிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வெளியே சுற்றிக்கொண்டிருந்தேன். அமர்வுகள் ஒரே நேரத்தில் வெளியரங்கு ஒன்றிலும் உள்ளரங்கு ஒன்றிலும் நடைபெற்றன. ஊட்டி நூலகம் அழகான பாரம்பரியக் கட்டிடமாகவும் சுற்றிலும் பெரிய விருட்சங்கள் நிறைந்த வளாகமாகவும் இருந்தது. கட்டிடத்தின் முன்னால் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடை, தேநீர் அருந்தகங்கள் என அமைத்திருந்தார்கள். நூலகர் நம்பியார் விசித்திரமான நேபாளி தொப்பி அணிந்திருந்தார். அரசாங்கம் நிர்வகிக்காத, தனிப்பட்ட நூலகம் ஒன்று 1800களின் மத்தியிலிருந்து நடத்தப்பட்டு வருவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுமார் அறுபதினாயிரம் நூல்கள் இருக்கும் அந்த நூலகத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்டேன். அங்கே தன்னார்வலராக இருந்த கல்லூரி மாணவி ஒருவர் எனக்கு நூலகத்தை சுற்றிக்காட்டினார். என்ன ரம்மியமான நூலகம் என்று தோன்றியது. விட்டால் நான் அந்த நூலகத்திலியே பழியாய்க் கிடந்திருப்பேன்; படிக்கவும் மேஜை மேலேயே இடையிடையே கவிழ்ந்து தூங்கவும் அழகான இடம். நான் தியடோர் பாஸ்கரனுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றிருந்த என்னுடைய ஐந்து ஆங்கிலக் கவிதை நூல்களை அந்த மாணவிக்குப் பரிசளித்தேன்.
ஜெர்ரி பிண்ட்டோவின் Em and the Big Hoom நாவலை நான் படித்திருக்கிறேன். அதில் தாயைப் பற்றிய மனதை நெகிழ வைக்கும் பதிவுகள் இருப்பதாக நான் மனதில் குறித்து வைத்திருந்தேன். சால்மான் ருஷ்டியும் அமிதாவ் கோஷும் ஜெர்ரி பிண்ட்டோவின் நாவலை வெகுவாக பாராட்டியிருந்தார்கள். ஜெர்ரி பிண்ட்டோ ஏ.ஆர்.வெங்கடாசலபதி சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதை கடுமையாக விமர்சித்து ஆங்கில இந்து நாளிதழில் எழுதியிருந்ததும் எனக்கு நினைவு இருந்தது. ஜெர்ரி பிண்ட்டோ, அடுத்த அமர்வில், தன் முதல் நாவல்களை எழுதிய இரண்டு பேருடன் உரையாடும்படி நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. சஹரு நுசைபா கண்ணனரியின் முதல் நாவல் Chronicle of one and half hour ஜேசிபி பரிசு, கிராஸ்வேர்ட் பரிசு ஆகியவற்றின் குறும்பட்டியலில் இடம் பெற்று மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. The wire இணையப் பத்திரிக்கையில் கண்ணனரியின் நேர்காணல் கூட வெளிவந்திருந்தது. ஜெர்ரி பிண்ட்டோவின் கேள்விகளுக்கெல்லாம் கண்ணனரி ஏடாகூடமாய் பதிலளித்தார். நாவலிலிருந்து ஏதாவது ஒரு பகுதியை வாசித்துக் காட்டுங்கள் என்றதற்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை என மறுத்துவிட்டார். தாய் பற்றிய நல்ல சித்திரம் உங்கள் நாவலில் இடம் பெற்றிருக்கிறதே அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்று ஜெர்ரி பிண்ட்டோ கேட்டதற்கு அதெல்லாம் விமரசகர்கள் Economic and Political Weekly இல் எழுத வேண்டிய கட்டுரை என்று கிண்டலடித்தார். நீங்கள் அரசியல் அறிவியல் கற்பிக்கிறீர்கள் அல்லவா என்று கேட்டதற்கு என்ன பெரிதாக கற்பிக்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தின்படி அடிப்படை உரிமைகள் என்ன என்று மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டிருக்கிறேன் என சலித்துக்கொண்டார். நாவல் எழுதுவதைப் பற்றிய கேள்விக்குத் தன் பெண் நண்பர்களெல்லாம் தன்னை விட்டு சீக்கிரம் விலகிவிடுகிறார்கள் என ஜம்பம் பேசினார். இதற்கு நேர் மாறாக ஸ்மிருதி ரவீந்திரா நல்லதொரு கத்தோலிக்க கான்வெண்ட் மாணவி போல நல்ல பிள்ளையாய் எல்லா கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்தார். கண்ணனரி மனதில் தங்கிய அளவுக்கு ஸ்மிருதி ரவீந்திரா மனதில் தங்கவில்லை. இலக்கியத்தின் லட்சணம் அப்படி.
ஜெர்ரி பிண்ட்டோ அந்த அமர்வை சிறப்பாக நடந்தினார் என்று நினைத்தேன். கண்ணனரியின் நாவலில் கதை பலரால் சொல்லப்படுகிறது; ஒன்றரை மணி நேரத்தில் பரப்பப்படும் செய்திகளால் ஒரு கும்பல் தான்தோன்றித்தனமாய் ஒருவரை அடித்துக்கொல்வதைப் பற்றிப் பேசுகிறது. நாவலின் மருள்நோக்கு ஆசிரியரிடமும் இருப்பதாக நினைத்தேன்.
அரங்கிற்கு வெளியே வந்தபோது ஹரிஹரன் தான் தன்னுடைய மாணவர் ஒருவரின் வீட்டிற்கு மதிய உணவுக்குப் போவதாகவும் பக்கத்தில் உள்ள Periodic Table என்ற ஹோட்டலுக்கு வாலண்டியர் துணையுடன் செல்லுங்கள் என வழிகாட்டினார். நூலகத்திலிருந்து பீரியாடிக் டேபிள் ஹோட்டல் கொஞ்சம் நேரம்தான், கொஞ்சம் தூரம்தான். ஆனால் ஊட்டியின் சுள்ளென்ற மதிய வெயிலில் ஹோட்டலை அடைவதற்குள் என் கன்னக் கதுப்புகள் கருகிவிட்டதாக நினைத்தேன். ஹோட்டலில் ஆனந்த், பாஸ்கரன், அசோக் கோபால் இருந்த மேஜையில் நானும் சேர்ந்துகொண்டேன். சுகிர்தராணி என்னை நோக்கி வந்து நலம் விசாரித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு குருநானக் கல்லூரியில் பிரவீன் பஃருளி நடத்திய கவிதை அரங்கில் நாங்கள் சந்தித்திருப்பதை அவர் நினைவு கூர்ந்தார். உணவுப்பொருள்கள் மேஜையை அணுகிய சுகிர்தராணி இங்கே சோறில்லையே என அதிர்ந்து திரும்ப என்னை நோக்கி வந்தார். மதியம் சோறு சாப்பிடாமல் தன் அமர்வில் எப்படிப் பேச முடியும் என அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காய்கறிகள், wraps, ஐஸ்க்ரீம், காஃபி என்றிருந்ததில் நீங்கள் wraps ஐ சாப்பிடலாமே என யோசனை கூறித் தோற்றேன். எங்கே சோறு கிடைக்கும் ஹோட்டல் அருகில் இருக்கிறது என மற்றவர்கள் வழிகாட்ட அவர் அதைத் தேடிச் சென்றுவிட்டார். சுகிர்தராணி இப்படிச் சிறுமி போல கள்ளமற்று இருக்கிறாரே என்ற வியப்பு எனக்கு அவர் மேல் ஏற்பட்டது.
கதாலயாவின் கீதா ராமானுஜத்தை கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு அங்கே அந்த ஹோட்டலில் சந்தித்தேன். அவரை ஜய்சல்மேரில் கடைசியாக சந்தித்ததாக நினைவு. கீதா கதை சொல்லலை அரங்க நிகழ்த்து கலையாக வளர்த்தெடுப்பவர்; அதற்கென்றே கதாலயா நிறுவனத்தை பல பத்தாண்டுகளாக நடத்தி வருபவர். கீதா இன்னதுக்குதான் இதற்குத்தான் என இல்லாமல் இடம், பொருள், ஏவல் (?) பார்க்காமல் ஊரே அதிரும்படி சத்தமாக சிரிக்கக்கூடியவர். என்னைப் பார்த்தவுடன் அவர் தன்னுடைய இயல்பான சிரிப்புடன் கைகுலுக்கினாரா ஹோட்டலே திரும்பிப் பார்ப்பதாக இருந்தது. கீதா, இயல்பாக ‘ராமகிருஷ்ணன், நீங்கள் நலம்தானே’, என்று கேட்டரா எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஊர் உலகத்தில் கோடிக்கணக்கான் பெயர்கள் இருக்க, ராமகிருஷ்ணன் என்ற பெயரா கிடைத்தது என்னை அழைக்க? என்று கேட்டேன். ஹிந்து பத்திரிக்கை ராமகிருஷ்ணன் தானே என்றவரிடம் அட மக்கு மாமி, நான் முத்துக்குமாரசாமி என்றேன் கோபமாக. அதற்கும் சத்தமாக சிரித்து ஊரைக் கூட்டினார். அசோக் கோபாலை நான் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்த இரண்டாவது நிமிடமே, கீதா அவரை, ‘அசோக்கே, ஹேய் அசோக்கூ’ என்றழைக்க இடம் கலகலப்பாகிவிட்டது.
சுகிர்தராணியின் கவிதை அமர்வு அமர்க்களமாக இருந்தது. கல்யாணராமன் சுகிர்தராணியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சுகிர்தராணி தன்னுடைய கவிதைகளைத் தமிழில் வாசிக்க, அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளை அகில் கத்யால் வாசித்தார்; சுகிர்தராணி தமிழில் பேசியவற்றை அபிலாஷ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆக அந்த அமர்வு இருமொழி அமர்வாக வெகுவாக வெற்றிபெற்றது. சுகிர்தராணி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வழங்கிய விருது அதானி நிறுவனங்களின் நிதிபெற்றது என்பதினால் நிராகரித்துவிட்டதாகக் கூறியதும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இரு மொழிச் சூழல்கள், அகில இந்திய இலக்கிய விழாக்கள், சர்வதேச விழாக்கள் ஆகியவற்றுக்கு சுகிர்தராணி அமர்வு ஒரு நல்ல மாதிரியாகக் கருதப்பட்டுப் பின்பற்றப்படலாம் என்று நான் நினைத்தேன். அதற்கு அடிப்படையில் கலயாணராமன் போல நல்லதொரு மொழிபெயர்ப்பாளர் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்க வேண்டும்.
—
ஊட்டி இலக்கிய விழாவை ஒருங்கிணைக்கும் அறங்காவலர் குழு உறுப்பினரான அரூண் ராமன் எனக்கு அனுப்பிய அழைப்பிதழ் கடிதத்தில் ‘Folklore: Fire of the Collective Imagination” என்ற தலைப்பில் தமிழில் உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இது சிக்கலான தலைப்பு. ஏனென்றால் நாட்டுப்புற வழக்காறுகளை/ கலைகளைச் சமூகத்தின் கூட்டுக் கற்பனை என்று வரையறுப்பது உடனடியாக அவை சமூகத்தின் கூட்டு நனவிலி (Collective unconscious) எனப் பொருள் பெறுவதாக நீட்சி பெறும். கூட்டு நனவிலி என்று ஒன்று இருப்பதாக நிரூபிப்பது இயலாத காரியம் என்பது மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கம் இனவாதத்திற்கு (racism) இட்டுச் செல்லக்கூடியது என்பதால் நவீன, சமகால சமூக அறிவியல் கல்விப்புலங்களில் நிராகரிக்கப்படக்கூடியதுமாகும். மேலும், கூட்டுக்கற்பனை என்ற கருத்து நாட்டுப்புறக் கலைகளில் தனித்த படைப்பாளிக்கும் அவரது படைப்பூக்கத்திற்கும் இடமில்லை என்பதும் தன்னியல்பாக நீட்சி பெறுவதாக அமைகிறது. இது உண்மையில்லை என நிரூபிக்கும் விதத்தில் பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஜோதிந்திர ஜெயினின் Ganga Devi: Tradition and Expression in Mithila Painting நூலைக் குறிப்பிடலாம். இந்த நூலில் ஜோதிந்திர ஜெயின் கங்காதேவி மரபின் ‘கூட்டுக் கற்பனையைப்’ பயன்படுத்தி எப்படித் தன் தனித்துவ படைப்பாற்றலை வெளிப்படுத்தினார் என நிறுவியிருப்பார்.
நாட்டுப்புறக் கலைகளைச் சமூகத்தின் கூட்டுக் கற்பனை எனக் கல்விப்புலத்திற்கு அப்பால் உள்ளவர்கள் உண்மையில் புரிந்துகொள்வது மொழிக் கட்டுமானங்களை, அவற்றின் பயன்பாட்டு முறைகளை என்றும் அப்படி ஒரு சமூகத்தில் மொழிக் கட்டுமானங்கள் நிலைபெறுவதற்கு வரலாற்றுரீதியாகப் பல காலம் பிடிக்கும் எனவும் நான் சொல்ல விரும்பினேன். பழமொழிகள், விடுகதைகள், ஓவியங்கள் போன்ற அளவில் சிறிய வழக்காறுகளை வைத்து விளக்குவது எளிது, ஆனால் அவற்றுக்கு வரலாறு சொல்ல முடியாது.
எனவே நான் எனது உரையில் மூன்று உதாரணங்களைச் சொல்லி நாட்டுப்புற வழக்காறுகள்/ கலைகள் எப்படிச் சமூகத்தின் கூட்டுக் கற்பனையாக விளங்குகின்றன எனச் சொல்லலாம் என்று முடிவு செய்தேன். முதலாவது வில்லிபாரதம். இதர தமிழ் பாரதங்களிலிருந்து வேறுபட்டு இசை நயமும், சொற்கட்டும் உடையதாக இருப்பதால் பாரதம் நிகழ்த்தப்படும் சூழல்களில் புனிதப் பிரதியாகப் பாரதப் பிரசங்கிகளால் கருதப்படுவதையும் அதில் ஏதேனும் பிழைபட உச்சரிக்கப்பட்டாலோ பாடப்பட்டாலோ பார்வையாளர்களே திருத்திவிடுவதையும் எடுத்துச் சொன்னேன்.
இரண்டாவதாக கைலாசபதி தன்னுடைய Tamil Heroic Poetry நூலில் சங்கப் பாடல்கள் வாய்மொழி மரபுகளால், நாட்டுப்புறப் பாடல்களைப் போல இயற்றப்பட்டவை என்று நிறுவுவதை எடுத்துச் சொன்னேன். இது போலவே மொழியியலாளர் எமனோவ் (Murray Barnson Emeneau) தன்னுடைய Toda Songs என்ற 1971 இல் வெளிவந்த ஆயிரம் பக்கங்களுக்கு மேலான நூலில் வாய்மொழி மரபினால் தோடர்கள் தங்கள் பாடல்களை இயற்றுவதை நிறுவுவதையும் கூறினேன். செம்மொழியாகிய தமிழ் இழந்துவிட்ட பல ஆதி கூறுகளைத் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தோடர்களின் மொழி வைத்திருப்பதை எமனோவ் கூறுவதையும் சொன்னேன்.
இந்த மூன்று உதாரணங்களிலும் பொதுவாக இருப்பது வாய்மொழி மரபும், அதன் வழி உண்டாக்கப்படும் மொழிக் கட்டுமானங்களும். இவற்றைச் சமூகமாக நாம் ஒரு பழமொழியைப் பயன்படுத்துவது போலப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பழமொழியை அட்டை நன்றாக இருக்கிற உள்ளீடு மோசமாக இருக்கிற புத்தகத்தை நோக்கியும் சொல்ல முடியும். நிலைத்த வடிவம் ஒன்றை பல சூழல்களில் பயன்படுத்த முடிவதை சமூகக் கூட்டுக்கற்பனை என்கிறோம், அவையே நாட்டுப்புற வடிவங்களாகவும் இருக்கின்றன.
மேற்கண்ட உரை சரியானபடி பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்குமா என்ற எண்ணத்தோடே மேடையைவிட்டு இறங்கினேன்.
தியடோர் பாஸ்கரன் உரை நன்றாக இருந்ததாகப் பாராட்டினார். திருமதி சங்கீதா சிவக்குமார் - டி.எம்.கிருஷ்ணாவின் துணைவியார் - வில்லிபாரதம் பற்றி நான் பேசியதை சிலாகித்தார். அவர் டி.எம்.கிருஷ்ணா கட்டைக்கூத்து ராஜகோபால் குழுவினரோடும், ஹன்னா டி ப்ரூய்னோடும் இப்போது வேலை செய்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஆங்கில இந்து நாளிதழ் நிருபர் கிருத்திகா - நான் சென்னை இந்து லிட் ஃபெஸ்ட்டில் நான் உரையாற்றியதைக் கேட்டிருப்பதாகச் சொன்னார். பலரும் உரையின் நுட்பமான பகுதிகளை என்னோடு விவாதித்தார்கள். குறிப்பாக, ரவீந்திரநாத் என்பவர், என்னுடைய உரை மொழியின் பொருளாயப் பண்பினை (material quality) அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இது ஒரு நல்ல அவதானம். பல்கலைக்கழக உயர் கல்விக் கூடங்களில் உரையாற்றுகையில்தான் நான் இத்தகைய கூரிய அவதானங்களைக் கேட்டிருக்கிறேன். ரவீந்திரநாத் என் உரைக்கு கோட்பாட்டு அடிப்படைகளை வழங்கும் நூல்கள் எவை என்றும் கேட்டார். நான் ரஷ்ய இலக்கிய விமர்சகர் மிகைல் பக்தினின் “Speech Genres and Other late essays” நூலையும் வேலண்டைன் வோலோஷினோவ் எழுதிய “Marxism and the philosophy of language” நூலையும் குறிப்பிட்டேன். வோலோஷினோவ் என்றொருவர் உண்மையில் இருந்ததாகக் குறிப்புகள் இருந்தாலும், புத்தகத்தை அவர் பெயரில் எழுதி வெளியிட்டவர் மிகைல் பக்தின் தான் என்று நான் சொன்னேன். அதைத் தொடர்ந்து பக்தின் வாழ்ந்த காலம், அவர் வாழ்ந்த கம்யூன் வாழ்க்கை, இவர்களோடு தொடர்புடையவராக வாழ்ந்த கவிதாயினி மரீனா ஸ்வெடீவா என உரையாடல் சுவாரஸ்யமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் ரவீந்திரநாத் இதையெல்லாம் சிறு குறிப்புகளாகவேனும் அவசியம் எழுதுங்கள், யாருக்கேனும் உபயோகமாக இருக்கும் என வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால்தான் நான் இலக்கிய விழாக் குறிப்புகளையே எழுதலானேன். இப்படிப்பட்ட உரையாடல்கள் ஒரு இலக்கிய விழாவில் நடைபெறுவது அபூர்வமானது.
அடுத்த அமர்வில் அகில் கத்யானும், டோனி டி சூசாவும் தங்கள் ஆங்கிலக் கவிதைகளை வாசிக்க அவர்களோடு ஜெர்ரி பிண்ட்டோ உரையாடினார். அகில் கத்யான் ஓரினச் சேர்க்கையாளர்கள், பால் புதுமையினர் ஆகியோரின் சமூக உரிமைகளுக்காகப் போராடி வருபவர். அவருடைய கவிதைகள் Jeet Thayil எடிட் செய்த The Penguin Book of Indian Poets என்ற 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த நூலை நான் வாங்கினேனே தவிர இன்னும் வாசிக்கவில்லை. டோனி டி சூசா என்ற பெயரை Helter Shelter பத்திரிகையில் பார்த்திருப்பதாக ஞாபகம். ஜெர்ரி பிண்ட்டோ கவிதை வாசிப்பை ஒரு கொண்டாட்ட வெளியாக மாற்றியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அகில் கத்யாலின் கவிதைகளில் டெல்லி நகரமும் அதன் பல்வேறு இடங்களும் கதாபாத்திரங்களாகவே வருவதை நான் இணையத்தில் வாசித்த அவருடைய கவிதைகளில் கவனித்திருக்கிறேன். ஆனால் அவர் வேறு பல கவிதைகளை வாசித்தார். அவற்றில் மின்னல்களைப் போல வாக்கியப் புதுமைகள் இருந்ததாக நினைத்தேன். டோனி டி சூசாவின் கவிதைகள் மௌன வாசிப்புக்குத்தான் உகந்தவை போல. எனக்கு அவருடைய வாசிப்பு எந்த வகையிலும் ஒரு அலைவரிசை ஒத்திசைவைத் தரவில்லை.
அடுத்து நவயானா ஆனந்த் தன்னுடைய கபீர் நூலை பாடல்கள் பாடுவதன் மூலம் அறிமுகப்படுத்தினார். நல்ல குரல் வளமும் சங்கீத ஞானமும் கூட அவருக்கு இருந்தது. ஆனந்த் ஒரு முழு நேரக் கச்சேரியை நிகழ்த்த முற்படவில்லை. பாடல்களின் வழி புத்தக அறிமுகம் என்பது புதுமையாக இருந்தாலும் அதற்குரிய விபரீதங்களும் இருந்தன. ஆனந்த் ஏனோ துண்டு துண்டாக பாடுவதைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனந்த் ஏதோ ஒரு வரியையோ அல்லது ஆலாபனையையோ பாடுவார், பாதியில் அதைக் கைவிட்டு உரைநடையாகப் பேசுவார். அவர் கபீரின் வரிகளை மட்டும் பாடவில்லை. மராத்தி பக்தி பாடல்களான அபாங், திருக்குறள் என ஒன்று மாற்றி ஒன்று ஹிந்தி, மராத்தி, தமிழ் என மாறி மாறிப் பாடியது எதிலும் ஒன்ற முடியாமல் ஆக்கியது. ஒன்றைப் பாட ஆரம்பித்து அதில் மனம் லயிப்பதற்கு முன்பே வேறொன்றுக்கு மாறுபவராக இருந்தார். எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரவீந்திரநாத்துக்குத் தாங்க முடியவில்லை. ‘சார் இவர் தானும் செய்ய மாட்டார், தள்ளியும் படுக்க மாட்டார்’ என்று என்னிடம் சொல்லிவிட்டு அரங்கை விட்டு வெளியே போய்விட்டார். எனக்கு என்னவோ ஆனந்த் பாடியது பரிசோதனை என்ற அளவில் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.
நூலகத்திலிருந்து ஹோட்டலுக்குத் திரும்பிவிட்டு இரவு தாஜில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவுக்காக அனைவரும் செல்வதாகத் திட்டம். நானும் அசோக் கோபாலும் அவசரமாக ஹோட்டலுக்குத் திரும்பியதில் ஜாஹிர் ஹுசைன் பற்றிய ஆவணப்படத்தைத் தவறவிட்டுவிட்டோம். எனக்கு அது ஒரு பெரிய இழப்பு. போதாததற்கு அசோக் கோபால் தன் கைபேசியை வேறு எங்கோ கைமறதியாய் வைத்துவிட்டார். ஹோட்டலுக்குச் சென்ற வேகத்தில் அவர் நூலகத்துக்கோ வேறு எங்கேயோ கைபேசியைத் தேடிப் போய்விட்டார். கடைசியில் அவருடைய கைபேசி அவருடைய ஹோட்டல் அறையில்தான் இருந்தது என்பது வேறு கதை.
தாஜுக்குப் போனபோது வரவேற்ற பெரியவர்தான் டின்னரை ஸ்பான்சர் செய்த சாஸ்திரி என்பவர் என்று நினைத்திருந்தேன். அப்புறம்தான் அந்தப் பெரியவர் ராமச்சந்திர குஹா என்று தியடோர் பாஸ்கரன் சொல்லித் தெரிந்துகொண்டேன். ராமச்சந்திர குஹா எங்கள் மேஜையில் அமர்ந்து உற்சாகமாக தியடோர் பாஸ்கரனுடன் பேசிக்கொண்டிருக்க நான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சமயம் குஹா நகுலன் தன் உறவினர் என்று தெரிவித்தார். எனக்கு உற்சாகமாகிவிட்டது. நகுலன் தமிழ் நவீனத்துவத்தின் பிதாமகர் என்று ஆரம்பித்து எனக்கும் இன்னும் பலருக்கும், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் உட்பட பலருக்கும் நகுலன் முக்கியமான எழுத்தாளர் என்று சொன்னேன். ஷங்கரராமசுப்பிரமணியன் தொகுத்து போன வருடம் வெளிவந்த ‘அருவம் உருவம் நகுலன் 100’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றியும் சொன்னேன். குஹா ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார்.
அடுத்த நகர்வில் நான் சுற்றிச்சூழ மக்கள் இருக்க நடுவே நவயானா ஆனந்துடன் மாட்டிக்கொண்டேன். மனிதர் என்னிடமும் பாஸ்கரனுடனும் ‘செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்’ குறளை வியந்து பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு இருக்கக்கூடிய சக்தி வியக்கக்கூடியதாக இருந்தது. நான் அவருக்கு பரிமேலழகர், இளம்பூரணர் ஆகியோரின் உரைகளைச் சொல்ல முயன்றேன். அவரோ ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ குறளைப் பாட ஆரம்பித்துவிட்டார். அவ்வளவு நெருக்கத்தில் முகத்துக்கு நேராக என்னிடம் யாரும் பாடியதில்லையா எனக்கு கிலியடித்துவிட்டது. என்றைக்காவது ஒரு நாள் ஆனந்துக்குப் பல் பிடுங்க டாக்டரிடம் போகும்போது நானும் கூட இருக்க வேண்டும், கொறடாவை டாக்டர் வாயில் வைத்துப் பல்லைப் பிடுங்க எத்தனிக்கையில், ‘பாடுவியா, இனிமே பார்ட்டில வந்து அதுவும் திருக்குறளை பாடுவியா’ என்று கேட்க வேண்டும் என்று வஞ்சம் கருவிக்கொண்டே கூட்டம் தாண்டி வெளியே வந்தேன்.
வந்த இடத்தில் மணிரத்னம் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு கீதா ராமானுஜத்தை அரூண் ராமன் அறிமுகம் செய்து வைத்தார். கீதா மணிரத்னத்திடம் பேசியபோது ஒரு முறை கூட சத்தம் போட்டு அவருடைய வழக்கப்படி சிரிக்கவில்லை என்பதைக் கவனித்தேன். கீதா என்னை மணிரத்னத்திடம் அறிமுகம் செய்தாரா நானா அறிமுகப்படுத்திக்கொண்டேனா என்று நினைவில்லை. அறிமுகக் கைகுலுக்கலுக்குப் பின் அவரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை, எனக்கும் அவரிடம் சொல்ல ஏதுமில்லை. அவர் அழகாகப் புன்னகை புரிகிறார் என்பது மட்டும் தெரிந்தது.
இரவு ஹோட்டலுக்குத் திரும்பி படுக்கையில் விழுந்தபோது நகுலனின் ‘ராமச்சந்திரனா என்று கேட்டேன், ராமச்சந்திரன் தான் என்றார், எந்த ராமசந்திரன் என்று நானும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை’ கவிதையில் வருவது ராமச்சந்திர குஹாவா என்ற கேள்வியுடன் நன்றாகத் தூங்கிப் போனேன்.
எனக்கு ஜெம் பார்க் ஹோட்டல் மிகவும் பிடித்திருந்தது. முதல் காரணம் ஷவர் ஒரு பெரிய தாம்பாளத் தட்டு போல இருந்தது. இப்போது பெரும்பாலான விடுதிகளில் நீரை சேமிப்பதற்காக ஷவரின் பூவாளியை சிறு கிண்ணியாக மாற்றிவிடுகிறார்கள். பெரிய தாம்பாளத் தட்டு வெந்நீர்ப் பூவாளிக் குளியல் ஊட்டிக் குளிருக்கு நல்ல சுகம். இரண்டாவது எனது ஜன்னல் வழியே பார்க்கும்போது இரண்டு மலைகள் கண்களை நிறைத்தன. ஜன்னலைத் திறந்தால் கையால் தொடும் தூரத்தில் ஒரு பைன் மரம், நீண்ட பால்கனி என ரம்மியமாக இருந்தது. அதிகாலை சூரியோதயத்தின் போது மெல்லிய பொன்னிற கிரணங்கள் மெதுவாக மலையில் படருவதைக் காணப் பேரதிசயத்தை மனம் கொள்ளும் பரவசம் ஏற்பட்டது. நீட்ஷேதானே சொன்னது: "He who climbs upon the highest mountains laughs at all tragedies, real or imaginary.” நீட்ஷே ஆல்ப்ஸ் மலைகளில் அலைந்தான், மலையுச்சிக்குப் போகச் சொன்னான். மலையுச்சி அறிவின் சிகரமாக நீட்ஷேயின் எழுத்துகளில் உருவகமாகிறது. எழுத்தாளனுக்கு மலையுச்சி என அசோக் கோபாலும், கடற்கரை என நானும் அவ்வப்போது உரையாடிக்கொண்டிருந்தோம். கடற்கரைக்கு ஆதரவாக என்னுடைய வாதங்களில் ஒன்று கடலின் அழைப்பில் நாம் அனைவரும் ஆடைகளைத் துறந்தாக வேண்டும் என்பது.
மணிரத்னம் அமர்வுக்கு அரங்கு நிரம்பி வழிந்தது. போதாக்குறைக்கு சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் வேறு சாரை சாரையாக வந்து அரங்கின் ஓரங்களில் நின்றுகொண்டார்கள். மணிரத்னத்தோடு உரையாடிய ஹரிஹரன், “நீங்கள் வியாபார நிர்வாகத்துறையில் பட்டம் பெற்றவர், வியாபாரத்தில் known known, known unknown, unknown known, unknown unknown என்று நான்கு வகைமைகள் உண்டு. சினிமாவில் அவற்றை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்று கேட்க விரும்புகிறேன்” என ஆரம்பித்தபோதே எனக்குத் தலை கிறுகிறுத்துவிட்டது. ஹரிஹரன் மணிரத்னத்தை வியாபாரி எனப் பொடி வைத்துப் பேசுகிறாரோ என்ற ஐயம் ஏற்பட்டது. சினிமாக் கவர்ச்சி என்பதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அந்த உரையாடலில் இருந்து அறிந்து கொள்ள ஏதுமில்லை; அது கடுமையாகச் சலிப்பூட்டக்கூடிய உரையாடலாக இருந்தது. இதுபோலவேத்தான் ராஜ்தீப் சர்தேசி, ஶ்ரீனிவாசன் ஜெயின், நீரஜா சௌத்ரி, அருண் ஷோரி ஆகியோர் பங்கேற்ற அமர்வுகளும் இருந்தன. டெலிவிஷன் பத்திரிக்கையாளர்களும், எடிட்டர்களும்தான் நம் வரவேற்பறையில் வந்து தினசரிக் கத்திக்கொண்டிருக்கிறார்களே அவர்களை நாம் ஏன் இலக்கியத் திருவிழாவிலும் கேட்க வேண்டும் என்று எனக்கு அலுப்பாக இருந்தது.
திரையில் அடிக்கடி பார்க்கக்கூடியவர்களை நமக்குத் தெரியும், அவர்களை நாம் அறிவோம் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இதனால் ஒரு தலைக் காதல் போல அவர்களைப் பற்றிய மனப்பிரதிமைகளை நாம் உருவாக்கிக்கொள்கிறோம். இந்த parasocial interaction, அதனால் உருவாகும் parasocial relationship உண்மையானது அல்ல. அது Celebrity Worship Syndrome எனும் சமூக நோயினை உண்டாக்கக்கூடியது. இலக்கிய விழாக்கள் இந்த நோய்மைக்குப் பலியாகக் கூடாது என்பது என் எண்ணம்.
தன் முனைப்பற்ற பேச்சுக்கு நல் உதாரணமாய்த் திகழ்ந்தது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அசோக் கோபாலின் அடுத்த அமர்வு. அசோக் கோபால் எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, A Part Apart: The Life and Thought of B.R. Ambedkar கமலாதேவி சட்டோபாத்யா விருது பெற்றபோது வ.கீதா ஆங்கில இந்து நாளிதழில் சிறப்பான விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். அசோக் கோபால் பத்து வருடங்கள் அம்பேத்கர் எழுதியது, பேசியது தவிர எதுவுமே படிக்கவில்லை என்றொரு நேர்காணலில் கூறியிருந்தார். நான்கு வருடங்கள் தொடர்ந்து தினசரி அந்த நூலை எழுதினேன் என்று சொன்னார். மராத்தி, ஆங்கிலம் என அம்பேத்கர் எழுதிய, பேசிய அனைத்தையும் படித்து வாழ்க்கை விவரங்களை சேகரித்து அம்பேத்கர் நூலை அவர் எழுதியிருப்பது மகத்தான சாதனையாகும். அம்பேத்கர் நால் வருணத்தை ஒழிக்க எழுதிய நூல்கள் அவருக்கு ஜனநாயகத்தின் மேல் இருந்த அசைக்க இயலாத பற்று என்று குறிப்பிட்ட அசோக் கோபால், தீராத அறிவுத்தாகம் கொண்டிருந்த அம்பேத்கர் இவ்வளவுதான் படிக்க வேண்டும் என்ற அவருடைய ஸ்காலர்ஷிப் விதிமுறைகளை மீறி பல கல்விப்பயிற்சிகளையும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எடுத்துக்கொண்டார் என்று குறிப்பிட்டார். அதில் அம்பேத்கர் அமெரிக்க தத்துவ அறிஞராகிய ஜான் ட்யூவேயிடம் (John Dewey) பயின்றார் என்ற செய்தி எனக்குக் கவனத்துக்கு உரியதாக இருந்தது. "Democracy and the one, ultimate, ethical ideal of humanity are to my mind synonymous.” என்பது ஜான் டியூவேயின் புகழ்பெற்ற வாசகங்களுள் ஒன்றாகும்.
நான் தவறவிட்டுவிட்ட மிக முக்கியமான பேச்சுக்களுள் ஒன்று பேராசிரியர் சித்திக் வாஹித் அவர்களுடையது. சித்திக் வாஹித் லடாக்கின் வாய்மொழிக் காப்பியம் பற்றி விரிவாக சந்தன் கௌடாவுடன் பேசியதைப் பற்றி சித்திக் வாஹித்தோடு நேரடியாகப் பேசி அறிந்தேன். காஷ்மீரில் வசிக்கும் சித்திக் வாஹித் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வாய்மொழி மரபுகளை அறிமுகப்படுத்திய ஆல்பர்ட் லார்டின் நேரடி மாணவராக இருந்திருக்கிறார். நான் பத்மசம்பவர் பற்றிய என்னுடைய ஆய்வுகள் கிழக்கு இமாலயப் பகுதியை நோக்கிச் சென்றதையும் நேபாளம், பூட்டான், திபெத் என விரியும் அந்தப் பாதையின் பௌத்தமும் அதன் தாந்தரீக மரபுகளும், காஷ்மீரிலிருந்து லடாக் வரை விரியும் மேற்கு இமாலயப் பகுதியின் பௌத்த மரபுகளுக்கும் கதைக்கூறுகளுக்கும் இருக்கும் ஒற்றுமைகளைப் பற்றியும் பேசுவதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் எனக்கும் சித்திக் வாஹிதுக்கும் நிறைய விஷயங்கள் இருந்தன.
நானும் அசோக் கோபாலும் பீரியாடிக் டேபிள் ஹோட்டலில் மதிய உணவுக்காக அமர்ந்திருந்தபோது எங்களோடு கீதா ராமானுஜம் சேர்ந்துகொண்டார். இப்போதுதானே நூலக வாசலில் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து உடுமலைப்பேட்டைக்கு அனுப்பி வைத்தேன் அதற்குள் திரும்ப வந்து விட்டீர்களே என்று கேட்டேன். மதிய உணவுக்குப் பிறகுதான் அவரது கார் கிளம்புகிறது என்றார் அவரது வழக்கமான சிரிப்போடு. நான் சித்திக்கோடு கிழக்கு இமாலயக் கதைகளைப் பகிர்ந்துகொண்டதை கீதாவுக்குச் சொல்லப்போக, கீதா “நீ உனது மனைவி ஆங்கியோவை அப்போதுதான் சந்தித்தாயா? நீயா நானாவில் பார்த்தேனே” என்று சொன்னாரா, அசோக் கோபாலுக்கு நான் அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றது, அங்கே என் ஆங்கியோவைச் சந்ததித்து ஒரே வாரத்தில் மணமுடித்து ஊர் திரும்பியது, இருபது வருடங்களுக்குப் பிறகு நீயா நானா நிகழ்ச்சி மூலமாக என் திருமணம் மிகவும் பரவலாகி ஆறு மில்லியன் நபர்கள் பார்க்கும் யூடியூப் வீடியோக்கள் வரை வைரலாகிப் போனது என எல்லாவற்றையும் சொல்ல நேர்ந்தது. ஒரே வாரத்தில் பார்த்த பெண்ணை மணம் முடித்து திரும்பியவன் என்ற கதையைக் கேட்டவுடன் அசோக் கோபால் “படுவா ராஸ்கல்” என்று வாய்விட்டுத் தன்னையறியாமல் கத்திவிட்டார்.
மதியம் நான் அபிலாஷின் நாவல் ‘நிழல் பொம்மை’ பற்றி அவரோடு உரையாட வேண்டியிருந்தது. நாவலின் பிரதி எனக்கு வெகு தாமதமாகக் கிடைத்தபடியால் அதை நான் கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து ஊட்டிக்கு காரில் வந்தபோதும், அன்று அதிகாலையிலுமாகத்தான் வாசித்து முடித்திருந்தேன். அமர்வுக்கு முன்பாக சிறிது நேரம் ஓய்வெடுத்தால் தேவலாம் என்றிருந்தது. கூடுதலாக ஊட்டிக்கு வந்ததிலிருந்து தொண்டைகட்டுவதும் நா வறள்வதுமாய் வேறு இருந்தது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய கலந்துரையாடலைக் கேட்க நான் மிகவும் ஆர்வமாய் இருந்தேன். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது பற்றி எந்த அறிவும் இல்லாமல் நான் சுற்றிக்கொண்டிருப்பது என்னை ஒரு அருங்காட்சியகப் பொருளாக மாற்றியிருப்பதாக நான் அவ்வப்போது உணர்வதுண்டு. அதற்கு ஒரு காரணம் நண்பர் ஜேபி அவ்வப்போது செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என வாட்ஸப்பில் குறுஞ்செய்திகள் அனுப்புவது என்றால், கல்லூரியில் கணினி அறிவியல் படிக்கும் எனது மகன்கள் செயற்கை நுண்ணறிவையே தங்கள் சிறப்புப் பாடங்களாக எடுத்துப் பயின்று வருவது இன்னொரு காரணம். கலந்துரையாடலில் கோபாலகிருஷ்ணன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தன்னளவில் ஆகக்கூடியது ஒன்றுமில்லை, மனித வளமே முக்கியம் என்று வாதிட்டார். ஜஸ்ப்ரீத் பிந்திரா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தான் புத்தகங்கள் எழுதுவதாகக் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதிலுள்ள அறம்சார் கேள்விகள் என்ன என்பது எனக்கு முக்கியமாகப்பட்டது.
அபிலாஷின் ‘நிழல் பொம்மை’ நாவலின் நாயகன் ரகுவின் மேல் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன, அவற்றுக்கு அவன் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பதிலளிப்பதாக நாவலில் வருகிறது. நான் அப்படி குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதன் அறம்சார் கேள்விகள் என்னென்ன எழுகின்றன என்று அபிலாஷிடம் கேட்டேன். அபிலாஷ் குற்றம் சுமத்திக் கேள்வி கேட்பவர்களின் எந்திரத்தன்மையைக் குறிப்பிட்டு தான் சாட்ஜிபிடியிடம் அந்தக் கேள்விகளைக் கேட்டு அவற்றையே நாவலில் சேர்த்ததாகக் குறிப்பிட்டார். காஃப்காவுக்கும், ஜே.எம். கூட்சிக்கும் நாவலை அபிலாஷ் சமர்ப்பித்திருப்பதையும், அவர்களின் பாதிப்பையும் முன்னுரையில் எழுதியிருப்பதையும் குறிப்பிட்டு, காஃப்காவின் பாதிப்பு என்பது universal and abstract ஆனால் ஜே.எம்.கூட்சியின் நாவலோ வரலாறு சார்ந்தது; கூட்சியின் புக்கர் பரிசு பெற்ற நாவலான “Disgrace” நாவலின் நாயகனைப் போலவே ‘நிழல் பொம்மையின்’ நாவல் நாயகன் ரகுவும் பல்கலைக்கழகப் பேராசிரியர், இருவருமே பாலியல் மீறல்களில் ஈடுபடுகிறார்கள், கூட்சியின் நாயகன் தன் மாணவியை மயக்கி உடலுறவு கொள்வதுவரை போகிறான், நிழல் பொம்மை நாயகன் தன் மாணவிகளைப் பற்றிய பாலியல் கற்பனைகளில் ஈடுபடுகிறான். கூட்சியின் நாவல் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கொள்கை நீங்கிவிட்ட பின் அங்கே வாழும் வெள்ளை இன ஆண் தான் இழந்துவிட்ட அதிகாரத்தினால் என்ன மாதிரியான சீரழிவுகளுக்கு உள்ளாகிறான் என்ற சித்திரத்தைத் தருகிறது. எனவே அது வரலாற்றுரீதியான சூழலையுடையதாகிறது. அதே மாதிரியான கதைக்களத்தையும் நாயகனையும் தமிழுக்குக் கொண்டுவருவதன் மூலம் அபிலாஷ் என்ன சொல்ல வருகிறார் என்று நான் கேட்டேன். அபிலாஷ் குடும்பம் என்ற வன்முறையான அமைப்பின் நீட்சியாக பல்கலைக்கழகங்கள் பெங்களூரு போன்ற நகரங்களில் இருப்பதாகவும் அதையே தன் நாவல் சித்தரிப்பதாகவும் அவர் பதிலளித்தார். அபிலாஷ் தன்னுடைய நடையின் தனித்துவமான பத்தி ஒன்றை நாவலில் இருந்து வாசித்துக்காட்ட முடியுமா என்று கேட்டேன். அவர் வாசித்த பின் நாவலில் வடிவத்தை சுட்டிக்காட்டி அதன் பின்னிணைப்புகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பகுதியில் மிதக்கும் புத்தர் என்ற காட்சிப்படிமம் எனக்குப் பிடித்திருந்ததையும், அது கிம் கி டுக்கின் நான்கு பருவங்கள் படத்தில் வரும் நீரில் மிதக்கும் புத்த துறவியின் காட்சியை நினைவுபடுத்துவதாகவும் சொன்னேன். அபிலாஷ் பௌத்தம் காட்டும் வழியில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார்.
மகாதேவன் (தெரிசனங்கோப்பு) ஒரு தமிழ் நாவல் பற்றிய கலந்துரையாடல் உலக இலக்கியத் தரத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டார். மதுசூதனன் என் ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதை நூலில் என்னிடம் கையெழுத்து பெற்றார். என்னை ஃபேஸ்புக்கில் தொடர்வதாகச் சொன்ன செந்தில் என்ற நண்பரையும் சந்தித்தேன். மகாதேவன், அவருடைய நண்பர் இன்னும் சிலர் என நாங்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டம் என்று அறிந்து மீனாட்சிபுரம் ரகுவிலாஸில் ரசவடை சாப்பிட்டு ஃபில்டர் காப்பி குடிப்பது வரை உரையாடினோம்.
அடுத்து தியடோர் பாஸ்கரனின் பேச்சு தமிழ் நாவல்கள், சிறுகதைகள் எவையெல்லாம் திரைப்படங்களாகி இருக்கின்றன என்பதைப் பற்றியதாக இருந்தது. எழுத்தும், திரைப்படமும் முற்றிலும் வேறு வேறு ஊடக வடிவங்கள் என வாதிட்ட பாஸ்கரன் அவற்றில் எந்தப் படங்கள் இலக்கியத்தைத் திரைப்படமாக்குவதில் வெற்றி பெற்றன, எவை வெற்றி பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். அந்த இரு பட்டியல்களுமே நீளமாக இருந்தது மட்டுமல்லாமல் அவற்றில் பல விவரங்கள் எனக்குப் புதியதாக இருந்தன. அவற்றை விரித்து பாஸ்கரன் புத்தகமாக எழுதுவாரென்றால் அது தமிழ் சினிமா ஆராய்ச்சிக்கு அவரது முந்தைய நூல்கள் போலவே முக்கியமான பங்களிப்பாக அமையும்.
டி.எம்.கிருஷ்ணா இருளர் பழங்குடியினரின் கலைக்குழுவை அழைத்து வந்து அவர்களை மேடையில் அமர வைத்துத் தானும் உரையாடிய நிகழ்வு ஊட்டி இலக்கிய விழாவின் இறுதியாக அமைந்தது.
நாட்டுப்புறக் கலைஞர்களை, மக்களை, பழங்குடியினரை எழுத்திலும், மேடைகளிலும், திரைப்படங்களிலும், பிற அரங்குகளிலும் அவர்களைச் சாராத பிறர் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது? அதன் அறம்சார் கேள்விகள் என்ன என்பவை பற்றிய விவாதங்கள் கல்விப்புலத்தில் மானிடவியலிலும் நாட்டுப்புறவியலிலும் இதர சமூக விஞ்ஞானத்துறைகளிலும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பல நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் 1970களில் காயத்ரி ஸ்பிவக் சக்கரவர்த்தி எழுதிய “Can Subalterns Speak?” என்ற கட்டுரை மைய நீரோட்ட சொல்லாடலில் சமூகத்தின் அடித்தட்டுகளில் வைக்கப்பட்டிருப்பவர்கள் பேச இயலாது, பங்கேற்க இயலாது என்ற முடிவுக்கு வந்தது. காயத்ரி ஸ்பிவக்கின் கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை சமூக விஞ்ஞானங்களில் ஏற்படுத்தியது. ரணஜித் குஹா வரலாற்றுத் துறையிலும், வரலாறு எழுதும் துறையிலும் subaltern studies என்ற துறையைத் தோற்றுவித்து பன்னிரெண்டு பெரிய பெரிய கட்டுரைத் தொகுப்புக்களைக் கொண்டு வந்திருக்கிறார். அவை சமகால வரலாறு, இதர சமூக விஞ்ஞானங்களின் துறைகளை அவற்றின் practices - ஐ தலைகீழாகப் புரட்டிப் போட்டன.
இது ஒரு புறம் என்றால் 1960களில் அமெரிக்க மானிடவியலில், Crisis in representation என்று அழைக்கப்படுகிற மானிடவியல் களப்பணி மேற்கொள்ளுதல் (Doing ethnography), இனவரைவியல் எழுதுமுறை (writing ethnography) ஆகியன பற்றிய மறுபரிசீலனைகள் எந்தவொரு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உரிமை அந்த இனக்குழுக்களைப் படிப்பவர்களுக்கு இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்தன. எனவே களப்பணி மேற்கொள்ளுதலும், இனவரைவியல் எழுதுதலும் முற்றிலும் புதியதாக மாறின. ஏற்கனவே மாலினோவ்ஸ்கி வரையறுத்தபடி ஒரு நாட்டுப்புற கலைவடிவத்தைப் பற்றியோ மக்களைப் பற்றியோ எழுதுவதற்கு ஒரு வருட காலமேனும் குறைந்தபட்சம் அவர்களோடு வாழ வேண்டும் என்ற நடைமுறை புழக்கத்தில் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. இது பிரதிநிதித்துவப்படுத்துதலில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக எழுந்த விவாதங்களினால் மேலும் நுட்பமாகியிருக்கிறது.
டி.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த 75 ஆண்டுகளாக மானிடவியலிலும், நாட்டுப்புறவியலிலும், வரலாற்று எழுத்திலும் நடந்த விவாதங்களும் அவற்றின் பயனாக ஏற்பட்ட மாற்றங்களும் தெரிந்திருக்கவில்லை என்பது அவருடைய பேச்சில் வெளிப்படையாகத் தெரிந்தது. சமத்துவ இசை என்பதை போதிக்க முயன்ற கிருஷ்ணா தன்னையே முன்னிறுத்துபவராக இருந்தார். பாலின சமத்துவம் அடுத்த தலைமுறையிலாவது இருளர் சமூகத்தில் நிலைபெறட்டும் என்பது போல இருளர் கலைக்குழுவினரிடம் கேள்வி கேட்ட கிருஷ்ணா, ethnomusicology என்ற துறை ethnicity ஐ படிக்கக்கூடியது என்று சொன்னார், இசைக்கும் சூழலுக்கும் இடையிலுள்ள உறவைப் படிக்கக்கூடியது அந்தத் துறை. Folk/ classical என்ற அதிகார சமூகப்படிநிலையை என்றோ நாட்டார் வழக்காற்றியல் துறை கைவிட்டுவிட்டது. செவ்வியல் இசை உட்பட எந்த இசையையும் ஒரு குழுவினரின் இசையாகப் படிக்கலாம். ஏன் விஞ்ஞானிகளின் குழுவையே ஒரு சமூகக் குழுவாகக் கருதி ஆய்வு மேற்கொள்ளப்படலாம். ப்ரூனோ லத்தூர் (Bruno Latour) ஃப்ரெஞ்சு விஞ்ஞானிகளின் குழுவை மானிடவியல் நோக்கில் ஆராய்ந்து We have never been modern என்ற தலைப்பில் எழுதிய நூல் முக்கியமானது.
சென்னையின் பத்தாம்பசலி கர்நாடக இசை சபாக்களின் வருடந்திர, சலிப்பூட்டும் folk/classical செமினார்களில் டி.எம்.கிருஷ்ணாவின் சமத்துவ இசை பற்றிய போதனையும் பிரச்சாரமும் சுயச்சவுக்கடியும் புரட்சிகரமானதாகக் கருதப்படலாம். ஆனால் ஊட்டி இலக்கிய விழா போன்ற சூழலில் இருளர் இசைக்குழுவினரை முன்வைத்து கிருஷ்ணா பேசியதும் நடந்துகொண்டதும் அவரை இருளருக்குரிய இடத்தை அபகரித்துத் தன்னை முன்னிறுத்துபவராகவும், தன்னை ஒரு messiah ஆக முன்னிறுத்த இருளர் கலைக்குழுவினரைப் பகடைகளாகப் பயன்படுத்தியவராகவும் அடையாளப்படுத்தியது. அவருடைய நோக்கங்களை மீறிய அது துரதிருஷ்டவசமானது.
மறுநாள் அதிகாலை என் ஜன்னலுக்கு வெளியே சூரியோதயத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு சூரியோதயமும் தனித்துவம் கொண்டதாகத் தோன்றியது. பட்சிகளின் ஜாலத்தை மலைகளோடு சேர்ந்து அனுபவிப்பது இனிமையானது. ஷில்லாங் போன்ற மலைவாசஸ்தலங்களில் பறவைகளையே பார்க்க முடியாது, கேட்க முடியாது. அங்குள்ளவர்கள் பறவைகளை வேட்டையாடிக் கொன்றதில் அங்குள்ள பறவைகளெல்லாம் அழிந்துவிட்டன அல்லது வேறு இடத்துக்குப் புலம் பெயர்ந்து ஓடிவிட்டன. உதகமண்டலம் பறவைகளின் சப்தங்கள் நிறைந்து ஜீவன் ததும்பியிருக்கிறது.
நான் என் மனைவிக்குப் ஃபோன் செய்து நமது திருமணம் நீயா நானா மூலம் பரவியது இங்கு ஊட்டியிலும் பரவிவிட்டது என்று சொன்னேன். நான் என்னதான் உதிரி என்றாலும் கவிஞன், எழுத்தாளன், ஆராய்ச்சியாளன், ஆசிரியன் என்ற அடையாளங்களெல்லாம் தொலைந்து போய் ஆங்கியோவை ஒரே வாரத்தில் கைப்பிடித்தவன் என்ற அடையாளம் மட்டுமே தங்கிவிடுவதைப் பற்றி அங்கலாய்த்தேன். ஆங்கியோ “நீ எப்போதுமே impulsive ஆகவும் spontaneous ஆகவும் செயல்படுபவனாகத்தானே இருக்கிறாய்” என்று கூறியது என்னை யோசிக்க வைத்தது. என் கவிதைகளை, கதைகளை எழுதுவதிலும் நான் முதல் தன்னியல்புகளைத் தொடர்பவனாகத்தானே இருக்கிறேன், ஆங்கியோவோடு எனது திருமணத்தை வாழ்த்துபவர்கள் முதல் தன்னியல்புச் செயல்களின் பவித்திரத்தை வாழ்த்துபவர்கள்தானே என எனக்கு மனம் சமாதானம் அடைந்தது.
காலை உணவு மேஜையில் அசோக் கோபால், சித்திக் வாஹித், நான் மூவரும் கூடினோம். மூவருக்கும் வெவ்வேறு சமயத்தில் ஆனால் அன்று இரவு கோவையிலிருந்து விமானங்கள் இருந்தன. ஊட்டியிலிருந்து மதியம் ஒன்றாக ஒரே காரில் கிளம்பிச் சென்றால் பேசிக்கொண்டே செல்லலாம் என்று முடிவு செய்தோம். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு அழகான பெண்மணி எங்களைக் கடந்து சென்றார். ஒரு படி கீழே இருந்த அந்தத் தளத்திலிருந்து அந்தப் பெண்மணி என்னை நோக்கி, “நீதான் இந்தப் பிரபஞ்சத்திலேயே அழகான வாழ்க்கை வாழ்பவன், உன் திருமணத்தைப் பற்றி, உன் மனைவி பற்றி, உன் வளர்ந்த பையன்கள் பற்றி எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம், we all love you, we are all smitten by you” என்று சத்தம் போட்டுச் சொன்னார். எனக்கு முகம் சிவந்துவிட்டது. திகைப்பு அடங்காமலேயே அவர் பெயர் ஸ்மிருதி என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். “I have also fallen in love with you” என்று பதிலுக்கு சத்தம் போட்டுச் சொன்னேன்.
சிரிப்புகளும் கதைகளுமாய் சித்திக், கோபால், நான் மூவரும் ஊட்டிலிருந்து மலைப்பாதையில் கீழே இறங்கிக்கொண்டிருந்த பாதி வழியில் சித்திக்குக்கு விழா ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஜெய்ராமிடமிருந்து அழைப்பு வந்தது. சித்திக் அவருடைய பெட்டிகளில் ஒன்றை ஹோட்டலில் மறந்து விட்டு வந்திருக்கிறார். உடனடியாக சங்கீதா ஜெய்ராம் டெல்லிக்குச் செல்லும் இன்னொருவர் மூலம் அவருக்குக் கொடுத்து அனுப்பிவிடுவதாகச் சொன்னார். அது ஊட்டி இலக்கிய விழா எத்தனை நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் என்று நான் நினைத்தேன்.
சித்திக் காஷ்மீரில் தன் வீட்டில் தன் எழுது மேஜை அருகே ஜன்னலின் வழி ஆப்பிள் மரங்களைப் பார்க்கலாம் என்றவுடன் கோபாலுக்கும் எனக்கும் மலைவாசஸ்தலம்தான் எழுதுவதற்குக் ஏற்ற இடம் என்ற எண்ணம் உண்டானது. கோபால் தியடோர் பாஸ்கரனின் மகள் இங்கே குன்னூரில் அழகான வீட்டில் இருக்கிறார், அவரைப் போகிற வழியில் பார்த்துவிட்டுப் போகலாம் என்றார்.
நிதிலா பாஸ்கரனின் வீடு குன்னூரில் உண்மையில் சுற்றிலும் பூந்தோட்டங்களுடன் பேரெழிலுடன் இருந்தது. நிதிலா பாஸ்கரன், அவரது கணவர், திருமதி திலகா பாஸ்கரன், தியடோர் பாஸ்கரன் ஆகியோரை சந்திக்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது நவயானா ஆனந்த் நேற்று இங்கே வந்திருந்தார், இதோ என் உறவினர் அறையில்தான் நேற்றுத் தங்கியிருந்தார் என்று நிதிலா கூறினார். அந்த உறவினர் “ஆமாம் இரவு ஒன்றரை மணி வரை ஆனந்த் பாடிக்காண்பித்துக்கொண்டிருந்தார்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னார். நான் அவரது முகத்தில் சுனாமிக்குத் தப்பிப் பிழைத்த ஒருவரின் முகக்குறிப்புகள் தெரிகின்றனவா என்று உற்றுப் பார்த்தேன்.
கோவை விமான நிலையத்தில் அடுத்து காஷ்மீரில் அல்லது லடாக்கில் சித்திக்கின் அழைப்பின் பேரில் கூடுவதாகக் கூறி நாங்கள் பிரிந்தோம்.
வீட்டிற்கு வந்த பின்புதான் கவனித்தேன் நான் இரண்டே இரண்டு புகைப்படங்கள்தான் எடுத்திருந்தேன். ஒன்று ஹோட்டல் ஜன்னல் வழி தெரியும் மலைகளை, இன்னொன்று தியடோர் பாஸ்கரனும் நானும் எங்கள் போஸ்டரோடு நிற்கும் புகைப்படம். நான் மேடையில் பேசுவதை படம் எடுத்து அனுப்பியது சுகிர்தராணி.
ஸ்மிருதியின் ஃபோன் நம்பரை வாங்காமல் வந்திருக்கிறேன்.