Monday, July 14, 2025

காகங்கள் கரையும் முது மதியம் |சிறுகதை | எம்.டி.முத்துக்குமாரசாமி

 காகங்கள் கரையும் முது மதியம் 

சிறுகதை | எம்.டி.முத்துக்குமாரசாமி







தாத்தா தான் கோமணம் அணியாமல், தன் கரிய விதைப்பைகள் பெரிதாய் வெளியில் தொங்க, நடுக்கூடத்தில், வேட்டி விலகியது அறியாமல், வாயில்  எச்சில் ஒழுக சிமெண்ட் தரையில் தூங்கிக் கிடந்தது தவறுதான் என்று நினைத்தார். அவருடைய கனவில் அப்போது அண்டா அண்டாவாய் யாரோ  கதம்பச்சோறு சமைத்துக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒரு ஒற்றை வேப்பமரம், கால் நீட்டி, கூந்தல் பறக்க, தரையில் அமர்ந்திருக்கும் கிழவியைப் போல நின்றிருந்தது. அண்டாவில் சோறும் காய்கறியும் சேர்ந்து குழையும் மணம் அவர் நாசியை நிறைத்திருந்தது. அவர் உள்ளங்கை நிறைய ஒரு பெரிய பந்து போல கதம்பச்சோற்றை உருட்டி ஒரு பெரிய கவளத்தை வாயில் போடப் போகும்போது அவரது சூத்தாம்பட்டையில் சுளீரென்று விளக்குமாறால் அடி விழுந்தது. 


தாத்தா பதறி எழுந்தார். அவசரமாகத் தன் வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டார். மாம்பழங்கள் அளவு பெரிதாக இருந்த தன் விதைப்பைகளை தன் வேட்டிக்குள் பொதிந்து தன் இரு உள்ளங்கைகளுக்குள்ளும் அடக்கிக்கொண்டார். அங்கே அவரது மகனும் மருமகளும் நின்றிருந்தனர். தன் மருமகள் தன் நோயுற்ற விதைப்பைகளையும் அதன் மேல் ரயில் பூச்சி போலக் கிடந்த தனது ஆண்குறியையும் பார்த்திருப்பாள் என்ற எண்ணத்தினால் அவருக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.  வழுக்கைத் தலை மகன் கத்திக்கொண்டிருந்தார், “வெக்கமாயில்லை?! இப்டி நடு வீட்ல அம்மணமா கெடக்கதுக்கு”. மேலும் விளக்குமாற்று அடி விழுந்தது. தாத்தா வலி பொறுக்க முடியாமல் வீட்டுக்கு வெளியே ஓடினார். அந்த சமயத்திலும் கூட அறுபது அறுபத்தைந்து வயதுடைய மகன் அவருக்கு சிறு பிள்ளையாகவே தோன்றினார். 


தாத்தா வீட்டுக்கு வெளியே வந்து மொட்டைமாடிக்குச் செல்லும் மாடிப்படிகளின் வழியே பதறி ஓடினார். முதல் தளத்தில் அவருடைய மகளின் வீடு இருந்தது. பின்னாலிருந்து அவருடைய மகன் அடித்துக்கொண்டே பின் தொடர்ந்தார். அவருக்குப் பின்னே மருமகள் வந்துகொண்டிருந்தாள். கண நேரம் தன் அப்பா மாடிப்படி வழியே தன் அண்ணனும் அண்ணியும் அடிக்க, கைகள் இரண்டையும் கவட்டைக்குள் சொருகியபடி பதற்றத்துடன் ஓடி வருவதைப் பார்த்த மகள் தலையில் அடித்துக்கொண்டு தன் வீட்டிற்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். தாத்தா தொடர்ந்து மாடிப்படியில் ஓடி  ஏறி மொட்டைமாடியில் சென்று மூச்சு வாங்கினார். 


இப்படித்தான் கடுங்கோடைச் சித்திரை நன்னாள் ஒன்றில் தாத்தா மொட்டைமாடிவாசியாக குடியேறினார். மாடியின் ஒரு ஓரத்தில் சிண்டெக்ஸ் தண்ணீர் தொட்டி இருந்தது. தாத்தாவுக்காக மகன் கொண்டு வந்து போட்ட கோத்ரெஜ் இரும்புக் கட்டிலின் நடுவில் பாளம் பாளமாய் துரு ஏறியிருந்தது. சிவப்பு குற்றாலம் துவர்த்தும் கிழிந்த போர்வை ஒன்றும் கொடுத்திருந்தார்கள். பக்கத்து வீட்டின் டிவி ஆண்டென்னாவும் சில பூந்தொட்டிச் செடிகளின் கிளைகளும் தாத்தாவின் மாடிக்குள் துருத்தி நீண்டிருந்தன. தினசரி பக்கத்து வீட்டில் மதியம் காகங்களுக்கு சுடுசோறு வைத்தார்கள். அதனால்  மதியம் முதல் அந்திவரை காகங்களும் சாம்பல் புறாக்களும் மாடிக்கு வந்தபடி இருந்தன.  துணி காயப்போடுவதற்காக கட்டி வைத்திருந்த கொடியில் அவை அமர்ந்து அவ்வப்போது கத்தின. 


தாத்தாவுக்கு கடுங்கோடையின் சுட்டெரிக்கும் வெயில் மொட்டைமாடியில் சீக்கிரமே பழகிவிட்டது. அங்கிருந்து அவரால் சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த தன் வீட்டின் இருமருங்கிலும் செல்லும் வீதியை அவரால் அடையாளம் காண  முடிந்தது. வீதியின் வலது பக்கம் சென்றால் முருகன் கோவிலுக்கும் அதைத் தாண்டிச் சென்றால் மெயின் ரோடுக்கும் போகலாம். இடது பக்கம் போனால் வீதிகள் குறுக்கு மறுக்காக ஓடுவதில் தொலைந்து போகலாம்.


அப்படித்தான் தாத்தா பலமுறை தொலைந்து போயிருக்கிறார். தாத்தாவின் வீட்டிற்கு எதிர் வீட்டு மதிற் சுவரில் வைத்திருக்கும் வினாயகர் சிலைக்கு பூஜை செய்ய வரும் வசந்தாவைத் தாத்தா தன் வீட்டிற்கு இடப்புறமாய் செல்லும் வீதியில் பின் தொடர்ந்து போனபோதுதான் தொலைந்து போனார். வசந்தா குள்ளமாய் தீர்க்கமாய் நல்ல சதைப் பிடிப்புடன் சற்றே கூன் விழுந்தவளாய் இருப்பாள். வயது ஐம்பதிற்கு மேல் என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தாத்தா கீழ்த்தளத்தில் குடியிருந்தபோது தன் ஜன்னல் வழியே வசந்தா வினாயகரைக் கழுவி, குளிப்பாட்டி, அலங்காரம் செய்து பூஜை செய்வதை ஆர்வமாக கவனிப்பார். 


தாத்தாவுக்கு மனைவி இறந்து போய் முப்பது வருடங்களுக்கு மேல் ஆகின்றன. வீட்டின் கீழ்த்தளத்தில் தாத்தாவின் படுக்கைக்கு நேராக சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் மனைவியின் புகைப்படத்தை அவர் அவ்வப்போது பார்த்தாலும் அவருக்குத் தன் மனைவியின் முகம் மறந்து போய்விட்டது. தன் ஜன்னலின் வழி பார்த்த வசந்தாவின் முகம் தன் மனைவிக்கு இருந்திருக்கவேண்டும் என்றே அவர் நினைத்தார். அதற்கு வேறொரு காரணமும் உண்டு.


தாத்தாவின் பேரனின் திருமணம் பல ஆண்டுகளுக்கு முன்பு அருகேயிருந்த திருமண மண்டபத்தில் நடந்தபோது வீட்டில் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர் அனைவரும் வேன் வைத்து மண்டபத்துக்கு போனபோது தாத்தாவுக்கு அருகில் பக்கத்து சீட்டில் வசந்தா உட்கார்ந்து வந்தாள். தாத்தா அன்று வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து கழுத்தைச் சுற்றி துண்டு போட்டுக்கொண்டு அமர்க்களமாய் இருந்தார்.  தனக்குப் பக்கத்து சீட்டில் வசந்தா இயல்பாய் அமர்ந்து வந்ததது அவருக்குப் பிடித்திருந்தது. எப்போதோ கண்டு அனுபவித்த அறுபட்ட  கனவொன்று மீண்டும் உயிர்ப்படைந்தது போல அவருக்குத் தோன்றியது. வேனிலிருந்து இறங்கும்போதும் வசந்தா அவரை இயல்பாகக் கைப்பிடித்து இறக்கிவிட்டாள். 


தாத்தா வீதியின் இடப்பக்கமாய் வசந்தாவைப் பின் தொடர்ந்து போய் தொலைந்து போன அன்று அவருடைய மனதில் சொற்கள் ஏதுமில்லை. தனது பெயர், விலாசம் எதையுமே அவருக்கு தன்னைச் சுற்றி நின்று கேட்டவர்களிடம் சொல்லத் தெரியவில்லை. கரணை கரணையாக வலுத்து இருந்த அவருடைய கால்கள் குழலாடி விட்டன. தன் அடி வயிற்றிலும் கால் முட்டிகளிலும் அவர் உணர்ந்த பலவீனம் அவர் ஏதோ போதைக்கு ஆட்பட்டவரைப் போலத் தோன்றச் செய்தது.

தனக்கென்று வீடோ இடமோ இல்லை என்பது தாத்தாவுக்கு ஆறுதலாகவும், விடுதலையாகவும் அதே சமயத்தில் அதீத அச்ச உணர்வைத் தருவதாகவும் இருந்தது. அவருக்கு தொலைந்து போன கணங்கள் சொற்களற்றும் இருந்ததால் அவர் அவற்றை புரிபடாத கணங்கள் என்றே தனக்குத் தானே வகுத்திருக்க வேண்டும்.


தொலைந்து போதல் ஒரு வகையான போதையை தாத்தாவுக்கு தந்ததாலோ என்னவோ அதன் பிறகு அவர் அடிக்கடி தொலைந்து போனார். ஆனால் அவர் தொலைந்து போனத் தெருக்கள் அனைத்தும் அவருடைய வீட்டுக்கு அருகாமையிலேயே இருந்தபடியால் யாராவது அவரை அடையாளம் கண்டு அவரை அவருடைய வீட்டில் கொண்டு போய் விட்டனர். தாத்தாவின் மகனுக்கும் மருமகளுக்கும் தாத்தா இப்படி அடிக்கடி தொலைந்து போவது கடுமையான பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அவர்கள் முதலில் தாத்தாவை கீழ்த்தளத்தில் இருந்த கூடத்து கட்டிலோடு சேர்த்து சங்கிலியால் பிணைத்து வைத்தார்கள். அப்படி தாத்தா கட்டிலோடு பிணைந்து கிடந்த நாட்களில் இரவுகளில் பூனைகள் கர்ணகடூரமாய் அலறின. பெற்ற அப்பனையே சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று தெருவே பேச ஆரம்பித்தது. 


தாத்தாவின் பேரன் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவன் நாய்களுக்கும் பூனைகளுக்கும் அணிவிக்கும் ஜிபிஎஸ் கழுத்துப் பட்டி ஒன்றை தத்தாவின் கையில் கட்டி  விடலாம் என்று யோசனை சொன்னான். அப்படியே ஜிபிஎஸ் பட்டி ஒன்றை வாங்கி தாத்தாவின் கையில் கட்டி விட்டார்கள். அடிகளைக் கூடப் பொறுத்துக்கொள்ளும் தாத்தாவோ அந்தப் பட்டி தன் கையில் கட்டப்படுவதை விரும்பவில்லை; அதைக் கடுமையாக எதிர்த்தார். அது கட்டப்படும்போதெல்லாம் அடிபட்ட விலங்கு போல உறுமினார். பட்டியை அவிழ்த்து எறிந்தார். இல்லையென்றால் அவருடைய வாயில் இருந்து சரமாரியாய் காது கூசும் கெட்ட வார்த்தைகள் கொட்டின. அவருடைய மகன் அவர் கத்தினால் கத்தட்டும் என்று ஜிபிஎஸ் டிராக்கரை அவர் கையில் வலுக்கட்டாயமாக, அவரால் கழற்ற முடியாதபடிக்கு கட்டி விட்டபோது தாத்தா வீதியில் இறங்கி தெரு நாய்களையெல்லாம் கல்லால் அடித்துத் தாக்கினார்.

அவர்கள் வீதியில் ஏற்கனவே தெருநாய்கள் அதிகமாய் சுற்றிக்கொண்டிருந்தன. தாத்தா நாய்களைக் கல்லாம் அடித்தபோது மிரண்டு போய் ஓடிய நாய்கள் தெருவில் வருவோர் போவோரைத் தாக்கின, சிறுவர்களையும் சிறுமிகளையும் கடித்து வைத்தன. 


பக்கத்துக் கடை அருள், தாத்தா நாய்கள் மேல் கல்லெறிந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக, போலீஸில் புகார் செய்தான்.  போலீஸ் வீட்டுக்கு வந்தபோது தாத்தாவின் மகனும் மருமகளும் அரண்டு போயினர். போலீசுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்து சரிக்கட்டிய  கையோடு தாத்தாவின் கையிலிருந்த ஜிபிஎஸ் டிராக்கரை அவர்கள் அவிழ்த்துவிட்டனர். புரட்டாசி சனிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்த ஒரு நாளில் அங்காளபரமேஸ்வரி கோவில் பூசாரி வந்து தாத்தாவுக்கு விபூதி அடித்து மந்திரித்த பிறகு தாத்தா அமைதியாகிவிட்டார்.


தாத்தா வசந்தா பின்னால் போய்தான் தொலைந்து போகிறார் என்பதை அருள்தான் கண்டுபிடித்து மகனிடமும் மருமகளிடமும் சொன்னான். மகன், மருமகள், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் அனைவரும் அந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கூடிவிட்டனர். ஜாடைமாடையாக தாத்தா வசந்தா பின்னால் செல்வதைப் பேச ஆரம்பித்த அவர்கள் சீக்கிரமாகவே நேரடியாக விவகாரத்தைப் பேச ஆரம்பித்தார்கள். மகன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆவேசமாய் தாத்தாவைக் கன்னத்தில் அறைந்தார். பேரன் தாத்தாவை வயிற்றில் ஓங்கி மிதித்தான். தாத்தா அதற்கெல்லாம் அசருவதாகத் தெரியவில்லை. கல்லுளிமங்கனாய் உட்கார்ந்திருந்தார். இப்போதெல்லாம் காகங்களுக்கு வைக்கும் சுடுசோறை புறாக்கள்தான் சாப்பிடுகின்றன என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதோ சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் குடும்பம் அவருக்கு சோறு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்தது. தாத்தா வீதி இறங்கி தெருவில் போவோர் யாரையாவது வழி மறித்து பசிக்கிறது என்று சொன்னால் போதும் உடனடியாக அவருக்கு யாரேனும் இலைச்சாப்பாடு வாங்கித் தந்தார்கள். ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.


வசந்தாவோ தன்னால் தாத்தாவின் குடும்பத்திற்குள் களேபரம் நடக்கிறது என்பதைப்  பற்றி எந்த   ஓர்மையும் இல்லாமல் தெருவுக்குள் வந்து போய்க்கொண்டிருந்தாள். தாத்தாவும் அவள் பின்னால் சென்று தொலைந்துபோவதும் நாளடைவில் குறைய ஆரம்பித்திருந்தது. வானவில் தோன்றிய மப்பும் மந்தாரமுமான ஒரு நாளில் தாத்தா தன் மகனையும் மகளையும் கூப்பிட்டு அவர்கள் அனைவரும் குடியிருக்கும் வீடு அவருடைய சுய சம்பாத்தியம் என்றும் அவர் தன் வீட்டை வசந்தா பெயருக்கு எழுதி வைக்கப்போவதாகவும் தெரிவித்தார். தன்னை அடித்தாலோ, மிரட்டினாலோ தான் போலீஸில் புகார் கொடுப்பேன் என்றும் தாத்தா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


தாத்தாவுக்கு பூர்விகம் செஞ்சி. அங்கே சிறு விவசாயியாக இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுக்கொண்டிருந்த அவர் பருவம் பொய்த்து  பெரு நஷ்டம் ஏற்பட்டபோது, நிலத்தை விற்றுவிட்டு, சென்னை புறநகர்ப் பகுதிக்கு கட்டிடத் தொழிலாளியாகக் குடி பெயர்ந்தார். பெரும் உழைப்பாளியான தாத்தா சீக்கிரமே கட்டிடத்தொழிலை ஏற்று நடத்தும் சிறு காண்டிராக்டராக உயர்ந்தார். அப்படி அவர் சம்பாதித்து வாங்கிய நிலத்தில் கட்டிய வீடுதான் இப்போது அவர்கள் குடியிருக்கும் வீடு.


தாத்தா வசந்தாவுக்கு வீட்டை எழுதிக்கொடுக்கப்போவதாக அறிவித்த நாளிலிருந்து அந்தியில் வீட்டின் முன்னால் நாய்கள் கூட ஆரம்பித்தன. ஒரு பெண் நாயைத் துரத்தி வரும் பல ஆண் நாய்கள் வீட்டின் முன் பெண் நாயைப் புணர முயன்றன. தாத்தா புணர்ச்சியில் மாட்டி வாலோடு வால் ஒட்டி நிற்கும் நாய்களை தினசரி கண்கொட்டாமல் பார்ப்பவரானார். தாத்தாவின் மருமகன் ஒரு நாள் புணர்ச்சியில் இணைந்திருந்த நாய்களை விரட்டிவிட்ட பிறகு வீட்டிற்கு முன்பு நாய்களின் கூடுகை நின்றுவிட்டது.  தாத்தா நாய்களின் வருகை நின்றுவிட்டதை துர்ச்சகுனமாகக் கருதினார். ஒரு சுள்ளியை ஒடிப்பது போல அவர் அந்த நிமிடத்தை உடைத்து தன் கணுக்காலருகே தீநாக்கு ஒன்றைக் காட்டுவதாக கற்பனை செய்தார்.  அங்கேயிருந்து என் பின்னாலே ஒரு நாய் வர ஆரம்பித்திருக்கிறது என அவர் காட்டிய இடத்தில் ஒரு பறவையின் 

அலகு திறக்க தொண்டைக்குழி உள் இறங்கியது.  அங்கே ஆகாயம் 

வெட்டுண்ட காயம் போல் சிவந்திருந்தது. அது கர்ப்பபாத்திரமா

வெளிவாசலா என அவர்  திகைத்த கணத்தில் இரண்டும்தான் என முணுமுணுக்க

எல்லாம் மறைந்து விட்டன. 


தாத்தாவை வசந்தாதான் ஏதோ வசியம் செய்து மயக்கிவிட்டாள் என்று மகனும் மகளும் மருமகளும் நினைக்கத் தலைப்பட்டனர். ஆனால் அதற்கு அவர்களுக்கு எந்த சான்றும் கிடைக்கவில்லை. வசந்தா தானுண்டு தன் வினாயகர் பூஜை உண்டு என்று தெரு வழியே வந்து போய்க்கொண்டிருந்தாள். தாத்தாவின் மேல் அவளுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. தாத்தா ஏதோ பிரேமைக்கு ஆட்பட்டிருக்கிறார் என்று மட்டும் குடும்பத்தாருக்குத் தெரிந்திருந்தது. முதலில் அங்காளபரமேஸ்வரி கோவில் பூசாரியை அழைத்து தாத்தாவுக்கு விபூதி அடிக்க சொன்னார்கள். பூசாரியும் வந்து  பார்த்துவிட்டு தாத்தா கர்ப்பப்பாத்திரம்தான் எல்லாமே எல்லாமே என்று சொல்வதைக் கேட்டு அசந்து போனார்.  எதற்கும் நாட்டு வைத்தியனிடம் காட்டுவது என்று முடிவானது.


நாட்டுவைத்தியரை தாத்தாவின் சொந்த ஊரான செஞ்சியிலிருந்து அழைப்பது என்று முடிவாயிற்று. நாட்டு வைத்தியர் அரசுக்குக் கிட்டத்தட்ட தாத்தாவின் வயது இருக்கும். அரசுக்கு தாத்தாவை நன்றாகத் தெரிந்திருந்தது. தாத்தாவை ரங்கராசு என்று அரசு பெயர் சொல்லி அழைத்தார். தாத்தா ஏதோ போன ஜென்மத்திலிருந்து ஒரு குரல் எழுந்து வந்ததைக் கேட்ட அதிர்ச்சிக்குள்ளானார். ஆனாலும் தாத்தா அரசுவைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவர் பிரேமை பிடித்து இருப்பதால் தன்னை அடையாளம் தெரியவில்லை என அரசு சமாதானம் சொன்னார். அரசு தாத்தாவை நாடி பிடித்துப் பார்த்தபோது அவரது பித்த நாடி அசுர வேகத்தில் துடிப்பதாகச் சொன்னார். தாத்தாவுக்கோ சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, கொழுப்பு போன்ற எந்த வியாதிகளும் இல்லை. அரசு செஞ்சியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பசுக்களுக்கும், காளைகளுக்கும் கூட வைத்தியம் பார்ப்பவர். அவருக்கு ஒரு விசித்திரமான யோசனை தோன்றியது. அதைக் கேட்ட மகன் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்.


தாத்தா நாட்டு வைத்தியரின் வருகையையும் சிகிக்சையையும் பொருட்படுத்தாமல், வீட்டுப் பத்திரத்தை தேடி எடுப்பது, அதை வசந்தா பெயருக்கு மாற்றி எழுத என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மகனிடமே யோசனை கேட்பது, அந்தி சாய்கின்ற நேரம் தெருவில்  நாய்கள் வருகின்றனவா என்று வேடிக்கை பார்ப்பது என்று தன் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார். 


அரசு  அவர்கள் வீடு கட்டி முடிந்தவுடன் அதில் கிரகப்பிரவேசம் செய்யவில்லை    அல்லது முழுமையும் கட்டிமுடிக்கப்படாத கிரகத்தில் ,  அவர்கள் கிரகப்பிரவேசம் செய்திருக்கிறார்கள். அதனால்  தேவதைகள் , பூதகணங்கள் , சஞ்சாரம் செய்கின்றன. அவை தாத்தாவை பீடித்திருப்பதால்தான் அவர் பிரம்மைக்கு ஆட்பட்டவராக இருக்கிறார்  என்றெல்லாம் விளக்கங்கள் தந்தார்.  ஏதோ ஒரு பலகீனமான தருணத்தில் மகன் தாத்தாவுக்கு காளைகளுக்கு செய்வது போல காயடித்துவிடலாம் என்ற யோசனைக்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டார்.


அந்த அமாவாசை இரகசிய சிகிக்சைக்குப் பிறகுதான் தாத்தாவின் விதைப்பைகள் வீங்க ஆரம்பித்தன. அடுத்த ஒரு வாரம் அவர் அடிக்கடி மயக்கம் போட்டு விழுபவராக இருந்தார்.  அவரை நேரம் கிடைத்தபோதெல்லாம் அடிப்பதற்கு அவருடைய மகன் தயங்கவில்லை. தாத்தா அவமானத்தில் கூசிக் குறுகிப் போய் உட்கார்ந்திருந்தார். அடுத்த ஒரு மாதத்தில் எப்போது என்ன என்ற நினைவில்லாத நேரத்தில் தாத்தா தன் வீட்டை மகனுக்கு எழுதிக்கொடுத்தார்.  மகளுக்கு வீட்டில் பாத்தியதை ஏதும்  இல்லை என்பதினால் அவளுக்குக் கடுங் கோபம் உண்டானது. அவள் தன் தந்தையைப் பார்த்துக் காறித் துப்பினாள்.


மொட்டைமாடி வாசத்தில் தாத்தாவுக்கு ஒரு வேளை உணவும் அரைக்குவளை நீரும் கிடைத்தது. உச்சி வெயிலில் தொண்டையும் நாக்கும் உதடுகளும் அவருக்கு வறண்டு காய்ந்துவிட்டன. உதடுகள் பாளம் பாளமாய் வெடித்துவிட்டன. அவர் அதிகம் நீர் அருந்தினால் அடிக்கடி சிறு நீர் கழிக்க அவதிப்படுவார் என்று மகனும் மகளும் கேட்போரிடத்தில் காரணம் கூறினர். 


தாத்தா காகங்கள் சிண்டெக்ஸ் நீர்த்தொட்டியில் சிறு ஓட்டையிலிருந்து கசியும் நீரைக் குடிப்பதைப் பார்த்தார். துணிக்கொடியில் இருந்த ஒரு இரும்பு கிளிப்பை எடுத்துப்போய் சிண்டெக்ஸ் நீர்த்தொட்டியின் கீழ்ப்பகுதியில் சுரண்டி சுரண்டி ஊசியளவு நீர் அதிலிருந்து பீச்சியடிக்கும்படி செய்தார். தாகம் எடுக்கும்போதெல்லாம் காட்டுச்சுனையில் மிருகங்கள் நீரருந்துவதைப் போல நீர்த்தொட்டியின் அருகே ஊர்ந்து சென்று வாய் வைத்து நீரைப் பருகினார். அவர் நீர் பருகாத நேரங்களில் காகங்களும் புறாக்களும் அந்த ஊசி நீரூற்றில் தாகம் தணித்துக்கொண்டன. 


ஒருமுறை தாத்தா மொட்டைமாடியில் கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் கழித்துவிட்டார் எனறு அவருடைய மகன் அவரை அடிக்க வேகமாக வந்தார். தன்னுடைய துருப்பிடித்த கட்டிலில் அமர்ந்திருந்த தாத்தா மகனைத் தடுக்க கையை எடுத்தார். கையைப் பிடித்த மகன் அவருடைய நடுவிரலைப் பின்னோக்கி கிட்டத்தட்ட ஒடித்துவிடும் அளவு வளைத்தார். தாத்தா அமைதியாகத் தன் மகனை கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தார். மகனுக்கு உடலில் நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.


மொட்டைமாடிக்கு துணி உலர்த்த வந்த தன் மகளிடம் எனக்கு வருகிற முதியோர் பென்ஷனை அந்த சாம்பல் புறாவுக்குக் கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன் என்பது போல அவள் காதுபடச் சொன்னார்.  மகள் தயங்கித் தயங்கி வந்து தாத்தா அருகே நின்றாள்.  அவளிடம் தாத்தா கீழ் வீட்டிலிருந்த பீரோவில் இருந்து தன் சிறு  பெட்டியை எடுத்து வரச்சொன்னார். அதன் இரகசிய அறையைத் திறந்து இதில் உன் அம்மாவின் நகைகள் இருக்கின்றன என்று சொன்னார். மகளுக்குத் தன்னிடம் அவற்றைத் தருகிறரா அல்லது அங்கே நடைபயின்றுகொண்டிருந்த தவிட்டுப் புறாவிடம் சொன்னாரா என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது.


மொட்டைமாடி வாசம் தாத்தாவுக்கு ஏதுவானதாக மாறிவிட்டது. எந்தக் கவலையும்  இன்றி தன் மாம்பழ அளவு விதைப்பைகளை ஆகாயத்திற்கும், நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும் காட்டியபடி சுதந்திரமாக உறங்குகிறார். பின் மதிய நேரங்களில் வந்து வினோதமாகக் கரையும் காகங்களோடு சேர்ந்து ‘கா’ என்று தானும் கரைகிறார்.

—-----

“சுகன்யா, இந்தக் கதை இவ்வளவு அப்பட்டமாக இருக்கிறதே, இதைப் பிரசுரத்திற்கு அனுப்பி விடவா?”

“அனுப்பி விடுங்கள் சார். கதையில் தாத்தாவை நெஞ்சில் எட்டி உதைக்கும் பேரன் வருகிறானில்லையா?

“ஆமாம்”

“ அந்தப் பேரனின் மனைவிதான் சார் நான். இது உண்மைக் கதை”