Sunday, March 11, 2012

ஆரத் தழுவுதல் 11

Barthelme
டொனால்ட் பார்த்தல்மே


ஸ்னோ வைட் கதையில் வருவது போலவே ஹே ஹோ என்று கத்திக்கொண்டே எழு குள்ளர்கள் முன் வர அவர்களிடையே பொக்கு இளவரசனாய் மேடையில் வருவான் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். பள்ளி ஆண்டு விழாக்களுக்கே உரித்தான கடவுள் வாழ்த்து, ஆண்டறிக்கை வாசித்தல் என்று நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. முந்தைய வருடங்களைப் போல இல்லாமல் இந்த வருடம் பொக்குவும் பொம்முவும் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பது நல்லது என்று நினைத்தேன். மேடையில் என்றில்லாமல் வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவ்வபோது ஏற்க வேண்டிய, ஏற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஏற்ப ஹே ஹோ என்று கத்திவிட்டுப் போகவேண்டியதுதான் ஏதேனும் ஒரே ஒரு கதாபாத்திரத்தையோ அதன் ஹே ஹோவையோ பிடித்துத் தொங்கி, இறுகிப் போய்விடமல் இருக்க பல கதாபாத்திர நடிப்புகளில் குழந்தைப் பருவத்தில் பெறப்படும் பயிற்சி உதவியாக இருக்கக்கூடும் என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

கொட்டாவி மேல் கொட்டாவி விட்டபடி இலக்கில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் வரிசை பஞ்சாபி மாமி தன் நண்பர்களிடம் சளசளவென்று ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தாள். திரைப்பட சங்கங்களில் படம் பார்க்க வருபவர்கள் இப்படி பேசும்போதெல்லாம் சிறு இலக்கியப் பத்திரிக்கை சார்ந்த நண்பர்கள் உடனடியாக எழுந்து போய், சண்டை போட்டு அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டுதான் ஓய்வார்கள். என்ன இப்படி சத்தம்போட்டு பேசிக்கொண்டிருக்கிறாள் உன் ஃபிரெண்ட் என்றேன் என் மனைவியிடம். பஞ்சாபி மாமி குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரார் அவள் குடும்பத்தினரின் தகவல்கள், அடையாள அட்டை நகல்கள் எல்லாவற்றையும் வந்து திரட்டிக்கொண்டு போனாராம். வேளச்சேரி சம்பவத்தைத் தொடர்ந்து வட இந்தியர் வாடகைக்குக் குடியிருப்போராயின் அவர்களுடைய தகவல்கள் அனைத்தையும் போலீசில் பதிவு செய்ய வேண்டுமாம்; சென்னை நகரத்தின் புது விதியாம்; அதைப் பற்றி பஞ்சாபி மாமி கோபமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள் என்றாள் என் மனைவி.

ஹே ஹோ!

---------------------------------------------------------------------------

Nabakov

மனித இருப்பின் புதிர்த்தன்மையினை நீக்கி மனோதத்துவ சொல்லாடல்கள் அளிக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு சில மாதிரிகளுக்குள் எல்லா மனிதர்களையும் அடைப்பதை பார்த்தல்மேயை விட அதிகமாக எதிர்த்தவர் விளாடிமிர் நபகோவ் ஆவார். நபகோவின் லோலிதா நாவல் அளப்பரிய வெற்றியைக் கண்டு, மிக அதிகமாக விற்பனையான நாவல்களுள் ஒன்றாக மாறியபோது அமெரிக்க விமர்சகர்கள் லோலிதாவை ஃபிராய்டிய விமர்சனத்தின்வழி விளக்கமளித்தனர். இந்த விமர்சனங்களைத் தன்னுடைய பேட்டிகளில் கடுமையாகத் திட்டிய நபகோவ் ஃபிராய்டினை Sickmind Fraud என்று எள்ளி நகையாடினார்; மனிதனுடைய அத்தனை உளத் துயர்களும் சில கிரேக்க புராணங்களை அந்தரங்க உறுப்புகளில் தேய்ப்பதன் மூலம் தீர்ந்துவிடும் என்று நம்புபவர்கள் ஃபிராய்டின் கோட்பாடுகளை நம்பட்டும் என்றும் நக்கலடித்தார். நபகோவின் பேட்டிகள் அடங்கிய தொகுப்பு Strong Opinions. இதில் நபகோவ் ஃபிராய்ட்னை மட்டுமல்லாது தஸ்தாவ்ஸ்கியையும் கடுமையாகச் சாடுகிறார். உலகளாவிய அளவில் உன்னத இலக்கிய ஆசிரியராகக் கருதப்படும் தஸ்தாவ்ஸ்கியை எதற்காக நீங்கள் மலிவான பரபரப்பினை ஏற்படுத்துகிறவர், விகாரமானவர், மோசமான எழுத்தாளர் என்றெல்லாம் தூற்றுகிறீர்கள் என்ற கேள்விக்கு எல்லா ரஷ்யர்களும் இங்கே அமெரிக்க வாசகர்கள் கொண்டாடுவது போல தஸ்தாவ்ஸ்கியை விரும்புவதில்லை; அவ்வாறாக விரும்புகின்ற ரஷ்யர்கள் தஸ்தாவ்ஸ்கியை ஒரு தீர்க்கதரிசியாகவும், கிறித்தவ மறைபொருள் வல்லுநராகவும்தான் கருதுகின்றனரே தவிர அவரை ஒரு கலைஞராகக் கருதுவதில்லை என்று பதிலளித்தார். மேலும் தொடர்ந்து தாஸ்தாவ்ஸ்கி ஒரு தீர்க்கதரிசி, ஆராவாரக் கைதட்டல் பெற விரும்பும் ஒரு பத்திரிக்கையாளர், தடாலடி நகைச்சுவையாளர் ஆகியோரின் கலவை என்றும் தூற்றுகிறார். தாஸ்தாவ்ஸ்கியின் கோமாளிக் காட்சிகள், நுண்ணுணர்வுள்ள கொலைகாரர்கள், ஆத்மார்த்தம் மிக்க வேசிகள் என்பவையெல்லாம் வேடிக்கை நிரம்பியவை என்றும் தன்னால் வாசகனாக இவற்றையெல்லாம் ஒரு கணம் கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் எழுதும் நபகோவ் தஸ்தாவ்ஸ்கியை ஒரு நீதிபோதகராகவே (moral preacher) கருதுகிறார்.⁠1 இலக்கியமும் கலையும் நீதி போதனையையும் நடத்தை ஒழுக்க விதிகளையும் (morals) வலியுறுத்துவதில்லை மாறாக அவை அறத்தையே (ethics) நுட்பப்படுத்துகின்றன என்று நபகோவ் கருதுகிறார்.

சமூக நடத்தை ஒழுக்க விதிகளையும் (morals) அறத்தினையும் (ethics) நுட்பப்படுத்தி வேறுபடுத்துவதில் பின் நவீனத்துவ இலக்கியவாதிகளும் தத்துவ அறிஞர்களும் ஒத்துப்போகக்கூடியவர்களாக இருக்கிறார்கள். காண்ட்டின் சிந்தனையை நடத்தை ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டது என்று தெரிதா விமர்சிப்பதும் தத்துவத்தை கலையும் இலக்கியமும் பேசுகின்ற அறம் நோக்கி நகர்த்திச் செல்வதற்குத்தான். இந்த தத்துவ சரடு பின் நவீன தத்துவத்திலும் இலக்கியத்திலும் பல தளங்களில் நிகழ்த்திக்காட்டப்படுகிறது. இவற்றைச் சுருக்கிச் சொல்வது அவற்றின் நுட்பத்தினையும் சிக்கலையும் எளிமைப்படுத்துவதாகும் என்றாலும் தெளிவிற்காக இவற்றைச் சொல்லி வைக்கலாம். இதன் ஒரு தளம் உலகளாவிய (நவீனத்துவ) லட்சியங்களைப் பேணுவதற்கு எதிராக சிறு பண்பாடுகளின் மானிடவியல் தரவுகளையும், வாழ்வியலையும், தருணங்களையும் முன் வைப்பது. இரண்டாவது தளம் சட்டம், அரசு, அரசின் இறையாண்மை ஆகியவற்றை சமூக ஒப்பந்தத்தின் அடிப்படை பின்னல்களாக முதன்மைப்படுத்தாமல், தனி மனிதன், குழும விழுமியங்கள், cosmopolitanism, கருத்தாக்கங்களின் கட்டுக்கோப்பு (integrity) ஆகியவற்றினை சமூக ஒப்பந்தந்தத்தின் (social contract) தூலமான அலகுகளாகக் காணுதல். மூன்றாவது தளம் இலக்கியத்திலும் தத்துவத்திலும் எதனையும் இயல்பானது இயற்கையானது என்று ஏற்றுக்கொள்ளாமல் அவற்றின் வரலாற்றினை வெளிப்படுத்துகின்ற அதே நேரத்தில் மனித வாழ்வின் புதிர்த்தன்மையினை புதிராகவே வைத்திருத்தல். எளிய தீர்வுகள், எளிமைப்படுத்துதல்களின் சௌகரியம் ஆகியவற்றை இலக்கியத்தில் நிராகரிப்பது ஒரு வகையில் சுலபம். ஆனால் தத்துவத்தில் இதை சாதிப்பது மிகவும் கடினமான காரியமாகும். தெரிதாவின் எழுத்து முறை ஒருவகையான இரட்டைப்பேச்சாக ( double speak) இருப்பதும் இலக்கியத்தின்தன்மையினை அடைவதும் இதனால்தான்.

நபகோவ் இலக்கியம் வாழ்வின் புதிர்த்தன்மையினை முன்வைக்கக்கூடியது எந்த வகையான விளக்கங்களுக்கும் ஆட்படாதது என்பதை விளக்கும்போதெல்லாம் இலக்கியத்தை நாட்டுப்புற/தேவதைக் கதைகளோடுதான் ஒப்பிடுகிறார். நபகோவின் புகழ்பெற்ற கூற்றுகளுள் ஒன்று: "Great novels are above all great fairy tales . . . literature does not tell the truth but makes it up." என்பதாகும்.

பார்த்தல்மேயைப் போலவோ இதர அமெரிக்க பின் நவீனத்துவ எழுத்தாளர்களான, ஜான் பார்த், தாமஸ் பிஞ்ச்சன் ஆகியோரைப்போலவோ நபகோவ் ஏற்கனவே இருக்கக்கூடிய நாட்டுப்புற/தேவதைக் கதைகளின் மறு உருவாக்கத்திலோ அல்லது அவற்றை நாவலின் ஊடுபாவாக்குவதிலோ ஈடுபடுவதில்லை மாறாக தன்னுடைய படைப்பே தேவதைக் கதைத்தன்மை கொண்டது என்கிறார். நபகோவின் நாவல்களில் 'அடா' இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

-------------------------------------------------

நபகோவ் 'அடா' நாவலை 1959இல் எழுத ஆரம்பித்து 1968இல் எழுதி முடித்தார். நபகோவின் நாவல்களிலேயே மிகவும் நீளமானதும் கடினமானதுமான இந்த நாவல் நாவல் கலையியே உச்சத்தைத் தொட்ட படைப்பு என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆல்ஃப்ரெட் அப்பெல் என்ற அமெரிக்க விமர்சகர் 'அடா'வுக்கு விமர்சனம் எழுதியபோது காஃப்காவுக்கும், ஜாய்சுக்குமே நபகோவ் முன்னோடி என்பதினையே 'அடா' அறிவிக்கிறது என்று எழுதினார். 'அடா' உலக இலக்கியத்திலேயே சிறப்பான erotic masterpiece என்றும், காலத்தின் மாற்று வரலாறு என்றும் விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாவலுக்கு வரிக்கு வரி அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஆஸ்திரேலிய விமர்சகர் பிரியன் பாய்டினால் எழுதப்பட்ட விளக்கக் குறிப்புகள் http://www.ada.auckland.ac.nz/ தளத்தில் காணக் கிடைக்கின்றன.

'அடா: ஒரு குடும்ப வரலாறு' என்ற நாவல் வாவ் வீன் என்ற மனிதன் தன் சகோதரி அடாவுடன் கொண்ட வாழ் நாள் முழுவதுமான காதலைச் சொல்வதாகும். பட்டாம்பூச்சி சேகரிப்பாளரான நபகோவ் நாவலின் நாயகிக்கும் நாவலுக்கும் தனக்குப் பிரியமான மஞ்சள் சிறகுகளும் கறுப்பு உடலும் கொண்ட பட்டாம்பூச்சியின் பெயரை வைத்தாரென்றும் ஒரு விமர்சகர் சொல்லியிருக்கிறார். நாவலில் பதினோரு வயதாக இருக்கும்போது அடா பதினான்கு வயதாயிருக்கும் வான் வீனை சந்திக்கிறாள்; அவர்கள் சந்திக்கும்போது அவர்கள் தாங்கள் cousins என்று நினக்கிறார்கள் அவர்களிடையே பாலுறவு உருவாகிறது. பின்னர்தான் அவர்கள் ஒரே தாய் தந்தையரின் குழந்தைகள் என்று தெரியவருகிறது. கதை அவர்களுக்கிடையே உள்ள உறவில் ஏற்படும் தடைகளையும், மீட்சிகளையும் சுற்றி சுற்றி நகர்கிறது. வான் வீன் வளர்ந்து முக்கியமான மனோதத்துவ நிபுணனாகிறான்; அவனுடைய தொண்ணூறாவது வயதுகளில் அவன் எழுதும் நினைவுக் குறிப்புகளாகவே நாவல் வடிவம் பெறுகிறது. நினைவுக்குறிப்புகளின் ஓரங்களில் வான் வீனின் குறிப்புகளும், அடாவின் குறிப்புகளும் இருக்கின்றன. இது தவிர பெயர் தெரியாத எடிட்டர் ஒருவரின் குறிப்புகளும் உள்ளன. ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலின் முதல் பாகம் மிக நீளமானதாகவும் அடுத்து வரக்கூடிய பாகங்கள் முந்தைய பாகத்திற்கு பாதி அளவிலும் இருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் நடக்கும் கதை பூமியின் மாற்று வரலாறு போல இருக்கிறது. பூமி டெமோனியா என்றழைக்கப்படுகிறது. அதன் புவியியல் நிலப்பரப்புகள் ஒன்று ஒன்றாய் கண்டு பிடிக்கப்படுகின்றன. அவை கண்டுபிடிக்கப்படும் விதத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த ஒரு நிலப்பகுதி போல தோற்றமளிக்கிறது. மின்சாரம் இருக்கிறது, கார்களும் விமானங்களும் இருக்கின்றன ஆனால் தொலைக்காட்சியும் தொலைபேசியும் இல்லை; அந்த மாதிரியான கருவிகள் தண்ணீரால் இயக்கப்படுகின்றன. டெமோனியாவின் மக்கள் இரு உலகங்கள் இருப்பதாக நம்புகிறார்கள். டெர்ரா என்ற இன்னொரு உலகத்தினை அவர்கள் அறிந்திருக்கவில்லையென்றாலும் அந்த உலகத்தோடு தொடர்பிலிருப்பதாக பலர் நம்புகிறார்கள். அவர்களுடைய மதத்தின்பாற்பட்டு அல்லது மக்கள் திரட்சியின் பிரேமையென டெர்ரா இருக்கிறது. டெர்ரா நம்முடைய யதார்த்த உலகினைப் போலவே இருக்கிறது. அதாவது நாவலில் கதாநாயகன் வான் வீன் ஆராய்ச்சி செய்யும் மக்களின் கனவுலவாக நம் யதார்த்த உலகு இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய நாவல்களைப் போலவே போலி செய்து எழுதப்பட்ட 'அடா'வின் முதல் பகுதி பல நடைகளில் எழுதப்பட்டுள்ளது. தால்ஸ்தோயின் 'அன்னா கரீனா' நாவலின் முதல் வரியை பகடி செய்து எழுதப்பட்டிருக்கும் முதல் வரியிலிருந்து முதல் பாகம் முழுக்க பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்ய மஞ்சள் இலக்கியம், பரோக் பகடி, கவித்துவமான பத்திகள் என பல நடைகள் அதில் இணைந்திருப்பதாக விமர்சகர்கள் எழுதுகிறார்கள்.

பழங்குடிகளின் உலகத் தோற்றம் பற்றிய தொன்மங்களின் வடிவமாகிய உலகில் தோன்றிய முதல் ஆணும் பெண்ணும் உறவு கொண்டு மனித இனம் பல்கிப் பெருகுவதான கதையமைப்பையும் நபகோவின் 'அடா' பெற்றிருக்கிறது. நாவலின் நான்காவது பாகத்தில் வான் வீன் ஆற்றுகின்ற உரை 'காலத்தின் நெசவு' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. நாவலின் மிகவும் கடினமான பகுதி என்று கருதப்படும் இந்தப்பகுதி தனி நபர் வரலாற்றிற்கும் தொன்மத்தின் காலத்திற்குமுள்ள உறவைப் பேசுவதாக அமைகிறது. நான்காவது பாகத்தின் இறுதியில் அடாவும் வான் வீனும் தங்களுடைய முதுமை அரும்பும் காலத்தில் கணவன் மனைவியாக வாழ முடிவு செய்கிறார்கள். நாவலின் கடைசி பகுதி அடாவுக்கும் வான் வீனுக்கும் இடையில் தங்களுடைய எண்பது வருட கால சிதறல் குறிப்புகளை முன் வைத்து மரணம் பற்றிய உரையாடலாக அமைந்திருக்கிறது. அவர்கள் ஒரு விதமான தற்கொலையை நோக்கி நகர்வதான பாவனையில் அவர்கள் இறந்துவிட்டார்களா இல்லையா என்று நிச்சயமாகச் சொல்லாமல் முடிகிறது நாவல்.

-------------------------------------------------------------------




ஆதிவாசி சமூகங்களில் பன்னிரெண்டிலிருந்து பதினாலு வயதிற்குள்ளாகாவே திருமணங்கள் நடந்துவிடுகின்றன. மத்திய இந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய பகுதிகளில் வாழும் ஆதிவாசி சமூகங்களிடையே பூப்பெய்திய பெண்களுக்கும் விடலைப்பருவ ஆண்களுக்கும் என்று கிராமங்களில் சமூகப் பண்பாட்டுக் கூடங்கள் தூங்குமிடங்களை தனித் தனியே அமைக்கும் பழக்கம் இருந்தது. பதின் பருவ ஆண்கள் பெண்களின் சமூகக்கூடங்களுக்கு பரிசுப்பொருட்களோடு செல்வதும் இளம் பெண்கள் அவர்களுக்கு உணவு வழங்கி பாட்டுப்பாடி மகிழ்விப்பதும் வழமை. விருப்பமுள்ள பதின் பருவ ஆண்களும் பெண்களும் தங்களுக்குப் பிரியமானவர்களோடு உடலுறவு கொள்வதும் பிரியம் நீடிக்கும் ஜோடிகள் மணம்புரிந்து கொள்வதும் மரபாயிருந்தது. இப்போது இந்தப் பழக்கம் திருமணத்திற்கு முன் உடலுறவு பாவமானது என்ற கிறித்தவத மத போதனையால் அருகிவிட்டதுவெர்ரியர் எல்வின் பதின் பருவத்தினருக்கான கிராமக் கூடங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆதிவாசி சமூகங்களின் தோற்றம் பற்றிய தொன்ம புராணங்கள் பதின்பருவத்தினருக்கான கிராமக் கூடங்களிலேயே ஆரம்பிக்கின்றன. ஆதிவாசி சமூகங்களில் உள் சமூகக் கண்காணிப்பு இருப்பதில்லை.

------------------------------------------------------

தலைப்பு ஆரத் தழுவுதலுக்கு நான் இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை.

------------------------------------------------------------

தொடரும்



அடிக்குறிப்புகள்
1 நபகோவின் தாஸ்தாவ்ஸ்கி பற்றிய கருத்துக்களோடு எனக்கு சம்மதம் கிடையாது. தாஸ்தாவ்ஸ்கியை கிறித்தவ மெய்யியலின் துணையில்லாமலும் வாசிக்கலாம்.



No comments: