Sunday, March 18, 2012

ஆரத் தழுவுதல் 13

அன்புள்ள எம்.டி.எம்:

இந்தக் கட்டுரைத் தொடரில் நீங்கள் இதுவரை எழுதி வந்ததை பின்வருமாறு நான் தொகுத்துப் புரிந்து கொள்கிறேன்;

1) பேரழிவில் சாகாமல் தப்பிப் பிழைத்த உங்களுக்கு (அல்லது நாமனைவரும் அல்லது நாமனைவருக்குமான ஒரு பிரதிநிதிக்கு) நானாகுதல் என்பதினை ஒரு பயணமாகவோ, அனுபவ சேகரமாகவோ உருவகிக்க இயலாது ஆகையால் நானாகுதலை பல்திசைப் படர்தலாகக் கருதலாம்.
2) பல்திசைப் படர்தல் காதலின் மூலமாகவே சாத்தியமாகிறது.
3) காதலின் அறம் நடத்தை ஒழுக்க விதிகளுக்கு மீறிய நுட்பமுடையது.
4) நடத்தை ஒழுக்க விதிகளை (morals) மீறிய அறம் (ethics) எப்படிப்பட்டது என்பதினை இமானுவல் காண்ட்டினை ழாக் தெரிதா விமர்சித்ததை வைத்து புரிந்து கொள்ளலாம். தெரிதாவின் அறக் கோட்பாடு soveriegnity of the individual மற்றும் integrity of ethical concepts முதன்மைப் படுத்தி சட்டம், அரசு, நடத்தை ஒழுக்கவிதிகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட அறத்தினை பேசுகிறது.
5) தெரிதாவின் அறக்கோட்பாட்டினை உள்வாங்கிக் கொள்ள மானிடவியல் தரவுகள், மனித வாழ்க்கையின் புதிர்த்தன்மையினை புதிராகவே எந்த விளக்கமுறுத்துதல்களுக்கும் (discursive practices) உட்படுத்தாமல் வைத்திருக்கும் கதைகள், நாவல்கள், ஆகியவற்றை வாசித்தல் அவசியம்.
6) காதலின் சைகைகளை (gestures) சட்டகமாகக்கொண்டு ( ஆரத் தழுவுதல், முதல் முத்தம் ஆகிய தலைப்புகளில்) மனித நடத்தை ஒழுக்க விதிகளின் வரலாற்றினையும், 'மனித இயல்பு' என்பதன் கட்டமைப்பின் எல்லைகளையும் காணலாம்.
7) மேற்சொன்னதனைத்தும் தமிழர்களின் cultutral loss என்ன என்பதினையும் புதிய இலக்கிய தத்துவ சாத்தியப்பாடுகளை சுட்டிக்காட்டுவதாகவும் அமையும். அவ்வாறு சுட்டிக்காட்டவே நீங்கள் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியொன்றில் மேற்கண்ட வாதங்களை ground செய்வதாக எனக்குத் தோன்றுகிறது.

என்னுடைய சுருக்கம் உங்களுடைய தொடருக்கு நியாயமான சுருக்கம்தானா என்பதினை சரிபார்த்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி சரியென்று நீங்கள் கருதினால் நீங்கள் ஏன் அப்படி தெளிவான நேர்கோட்டில் எழுதக்கூடாது? மேலும் உங்களுடைய கட்டுரைத் தொடரின் வடிவம் ஒரு நான்லீனியர் நாவலின் வடிவத்தில் உள்ளது. இதை ஏன் நீங்கள் ஒரு நாவலாக எழுதக்கூடாது?

உண்மையுடன்,
சதீஷ் பாபு

அன்பிற்குரிய சதீஷ் பாபு:

நீங்கள் என்னுடைய தளத்தினை இலவசமாக நிர்வகித்து வருவதோடு நின்று விடாமல் கட்டுரைத் தொடரை தீர்க்கமாக வாசித்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னுடைய கட்டுரைத் தொடரின் அடியோட்டமாக இதுவரை எழுதியுள்ளதை நீங்கள் சிறப்பாகவே சுருக்கி எழுதியிருப்பதாக நினைக்கிறேன். உங்களுடைய சுருக்கத்தில் முக்கியமான விடுபடல், ஹைடெக்கரின் Being and Time என்ற படைப்பின் கருத்தாக்கங்களையும் நான் உள் பொதிந்து வைத்திருப்பது. மனித இருப்பிற்கு காலம் ஒரு சிறை என்றும் காலத்திலிருந்து விடுபடல் கதை சொல்லல் மூலமாக நடக்கலாம் என்பதும் ஹைடெக்கரை விமர்சிப்பதன் மூலம் நான் முன்வைக்கும் கருத்தாகும். பல தள யதார்த்தத்தினை முன் வைக்கும் கதை சொல்லல், ஆவேசம் அல்லது சன்னதம் கொண்டாடுவதை முதன்மைப்படுத்தும் Shamanistic narratives, அவை சார்ந்த நிகழ்த்துதல்கள் ஆகியனவற்றையும் நான் இந்த விவாதத்தினுள் கொண்டு வர விரும்புகிறேன். உங்களுடைய எழு பாயிண்ட் சுருக்கம் இதைத் தவறவிடுகிறது; அதையும் நீங்கள் உங்கள் சுருக்கத்தினுள் சேர்த்துக்கொண்டீர்களென்றால் உங்கள் சுருக்கம் என்ன வடிவத்தைப் பெறும் என்றும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

நடைமுறை சார்ந்த ஒரு தீர்வினையோ அல்லது ஒரு சித்தாந்தத்தையோ, நடைமுறை பயனையோ ( தொன்மங்களை பிசினஸ் மேனஜ்மெண்ட் பள்ளிகளில் சொல்லிக்கொடுப்பது போன்ற) நோக்கமாகக்கொண்டு நான் இந்தத் தொடரை நான் எழுதவில்லை. அந்த மாதிரியான முயற்சிகளைப் பற்றியும் புதிய 'அறிவியல் முறை' விளக்கங்களை தொன்மங்களுக்கு அளிப்பது பற்றியும் எனக்குக் கடும் கண்டனமேயிருக்கிறது. அரசியல் சித்தாந்தங்கள் சார்ந்து தொன்மங்களை மீட்டெடுத்து புதிய புனிதங்களை உருவாக்குவதைவிட இந்த மாதிரியான புதிய பயன்படுத்துதல்கள் கேவலமானவை, கற்பனைத் திறனை குறைப்பவை, புனைவின் வாழும் சாத்தியங்களை மறுப்பவை என்றுமே நான் நினைக்கிறேன்.

நான் ஏன் நேர்கோடற்ற வடிவத்தில் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு என்னிடம் முழுமையான விடையில்லை. ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல முழுமையின் கற்பிதத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதினால் இருக்கலாம். ஆனால் நான் ஏன் இதை நாவலாக எழுதக்கூடாது என்றால் நீங்கள் ஏன் இதை நாவலாக வாசிக்கக்கூடாது என்றுதான் பதில் சொல்ல முடியும்.

உங்களைப் போன்ற கூர்மையான வாசகர்கள் அனைவரும் நான் ஏற்கனவே எழுதிய ஒவ்வொரு பகுதியினையும் பல்வேறு புதிய வகைகளிலும் தொடர்பு படுத்தியே புதிய பகுதிகளை சேர்க்கிறேன் என்பதையும் கவனித்திருப்பார்கள். பல்கலைக் கழக அசைன்மெண்ட் கட்டுரைகள் போல சுருக்கம், விளக்கம், முடிவு என்று எழுதுவது நான் எழுதத் தேர்ந்தெடுத்த பொருளுக்கு ஒப்புதல் இல்லாத வடிவமாகும். ஆங்காங்கே சுருக்கங்களை aphorisms ஆக எழுதுவது எனக்கு உவப்பானது ஆனால் அதற்கு மின்னலென ஒளிரும் சிந்தனா தருணங்கள் வாய்க்கவேண்டுமே?

பிரக்ஞையின் கரைகள் எவை? அவை உடையும் தருணங்களை கதைகள் எவ்வாறு உருவாக்குகின்றன? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் பல்திசை படர்தல் என்பதினை வரைபடமாக்க உதவும் என்பதினாலேயே தொன்மங்களைத் தேடுவதான ஒரு நகர்வு இருக்கிறது. இன்னொரு நகர்வு பிரக்ஞையின் கரைகள் உடையும் தருணங்கள் பல தள யதார்த்தத்தில் மனித வாழ்வு இயங்குவதை அடையாளப்படுத்துவதாக இருக்கிறது. மனித வாழ்வின் பல தள யதார்த்தத்தை விளக்குவதற்கும் கோட்பாடாக்குவதற்கும் தொன்மங்களைத் தவிர வேறு கதியில்லை என்றுதானே இன்றைக்கு வரைக்குமான கோட்பாடுகள் அனைத்தும் சொல்கின்றன? சிசிஃபஸ் மலையுச்சிக்கு பாறையை உருட்டிச் சென்றே தீரவேண்டும்; மலையுச்சிக்குச் செல்லும் பாதைகள் பலவாய் இருந்தாலும் கூட.

----------------------------------------------------------------------------------------

IMG 8993பிரக்ஞைக்கு பல அடுக்குகள் என்பதை உலக தியான மரபுகளும், மனோ தத்துவமும் பலவாறாக எடுத்துச் சொல்கின்றன என்றாலும் பிரக்ஞையின் கரைகள் ( borders of consciousness) என்ற பதச்சேர்க்கையினையும், அந்த கரைகள் ஊடாடும் பல தள யதார்த்தம் (multiple levels of reality) என்பதினையும் ஆதிவாசி மாந்திரீகர்களின் கதை சொல்லல் மூலம்தான் நான் அறிந்துகொண்டேன். அங்கமி நாகா ஆதிவாசிகளின் மாந்தரீகர் (Shaman) மொனோ ரீபாங் அங்கமி நாகர்களின் தொன்மத்தை சொல்லும்போது ஏழு தள யதார்த்தத்தை எனக்கு விளக்கினார். ஒன்று மூதாதையர் உலகு, இரண்டு ஆவியுலகு, மூன்று மிருகங்களின் உலகு, நான்கு பறவைகளின் மற்றும் தாவரங்களின் உலகு, ஐந்து நீரோடைகளும், காடுகளும், மலையுச்சிகளும், ஆறு கனவுகள் ஏழு திருவிழாக்கள்.

வடகிழக்கு மாநில ஆதிவாசிகள் கொண்டாடும் பல திருவிழாக்களில் ஹார்ன்பில் பறவைக்காகக் கொண்டாடப்படும் திருவிழாக்களும் மிதுன் என்றழைக்கப்படும் காட்டெருமை பலியிடும் சடங்குகளுடைய திருவிழாக்களும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மொனொ ரீபாங் ஹார்ன்பில் பறவையின் அலகுகளும் சிறகுகளும் மிதுனின் கொம்புகளும் அங்கமி நாகர்கள் உட்பட பல ஆதிவாசி சமூகங்களுக்கு முக்கியமான குலக்குறி சின்னங்கள் என்று எனக்குச் சொன்னார். அங்கமி நாகர்களின் டெர்ஹுயுமி திருவிழாவிலும், அனைத்து நாகா ஆதிவாசிகளின் ஹார்ன்பில் திருவிழாவிலும் 2010இல் நான் கலந்துகொண்டேன். அங்கமி நாகர்களின் தோற்றத் தொன்மம் டெர்ஹுயுமி திருவிழாவில் நிகழ்த்திக்காட்டப்பட்டது. வெட்டப்பட்ட காட்டெருமையின் குருதியைத் தொடுதலும், கறியைத் தூக்கி சுமப்பதும், தலையின் மேல் உட்கார்ந்து பயணம் செய்வதான நிகழ்த்துதல்களும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. கதை சொல்லல் ஒரு பக்கம் நிகழ்ந்து முடிந்தபின், பெரிய மைதானத்தில் கதை நிகழ்ச்சி நிகழ்த்திக்காட்டப்படுவதாக இருந்தது. காட்டெருமை பலியினைப் பார்க்க எனக்கு மன திடம் இல்லாததால் நான் போகவில்லை. மொனோ ரீபாங்குக்கு என்னுடைய மன திடமின்மை மிகுந்த நகைப்புக்குரியதாய் இருந்தது. நீ எப்படி கதைசொல்லும் மாந்தரீகனாவாய் என்று பரிகாசம் பண்ணிக்கொண்டிருந்தார். அவருடைய மகள்களும் அவர்களுடைய தோழிகளும் அவரோடு சேர்ந்து என்னைப் பார்த்து நகைத்துக்கொண்டிருந்தனர்.

மைதானத்தில் வெட்டப்பட்ட காட்டெருமைத் தலை பொம்மையொன்றை கீழே வைத்து, அதை ஒரு படகு போல செய்து, அதன் மேல் பலி கொடுத்தவர்களில் ஒருவன் உட்கார்ந்து கொள்ள மற்றவர்கள் அவனை கயிற்றினால் கட்டி இழுத்து வந்து கொண்டிருந்தனர். அவர்களின் பிரயாணம் மேடை மேல் நின்றுகொண்டிருந்த மொனொ ரீபாங்கை நோக்கியதாய் இருந்தது. ரீபாங் சன்னதம் கொண்டு ஆட ஆரம்பித்திருந்தார். நான் மெதுவாக மேடையின் ஓரத்தை நோக்கி நகர ஆரம்பித்தேன். காட்டெருமைத் தலையை இழுத்து வர வர ரீபாங்குக்கு ஆவேசம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

கட்டெருமைத் தலை மேடைக்கு வந்ததுதான் தாமதம் ரீபாங் என்னைச் சுட்டிக்காட்டி அவர்கள் மொழியில் கூச்சலிட்டார். என்னருகே இருந்த என் மொழிபெயர்ப்பாளர் காட்டெருமைத் தலையினைக் காட்டி " Embrace tightly" என்றார். என்ன நடக்கிறது என்பதை நான் முழுமையாக  அவதானிப்பதற்கு முன்பே காட்டெருமைத் தலையை இளைஞர்கள் என்னிடத்தில் நீட்டினர்; காலத்தின் சிறை தப்பிய கணமொன்றில் நான் அந்தக் காட்டெருமைத் தலையை ஆரத் தழுவிக்கொண்டேன்.

----------------------------------------------------

தொடரும்

No comments: