Wednesday, March 7, 2012

திகட்டத் திகட்ட கொஞ்சுதல் 9









கடந்த ஒரு வாரமாய் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தது. உதிரி உதிரியாய் படித்துக்கொண்டும் செய்ய வேண்டிய வேலைகளை ஒத்திப்போட்டுக்கொண்டும் பகற்கனவுகளில் ஆழ்ந்தும் நேரத்தை வீணடித்தேன். எழுத முடியாமல் வேறு ஏதேனும் செய்துகொண்டேயிருப்பதாகவும் இருந்தது. இந்த சமயத்தில் பார்த்தா 'பொறுப்புணர்வு' என்ற தலைப்பில் தத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் வரவேண்டும்?

"On responsibility" என்ற தலைப்பில் ஜெர்மனியில் நடந்த தத்துவ கருத்தரங்கில் சில வருடங்களுக்கு முன் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில் கலந்துகொண்ட இன்னொரு பேராசிரியர் அவருடைய மாணவர்களுடன் சென்னைக்கு வருவதாகவும் அவர்களுக்கு பிரத்யேகமாக நான் கட்டுரை வாசித்த பொருளிலேயே உரையாற்ற முடியுமா என்று சில மாதங்களுக்கு முன் கேட்டிருந்தார். ஏதோ ஒரு பலகீனமான தருணத்தில் ஒத்துக்கொண்டேன். ஏற்கனவே மூன்று கருத்தரங்க உரைகளை இந்த வாரம் பேசிமுடித்திருந்ததால் இன்னொரு உரையா என்று சலிப்பாக இருந்தது. ஆனால் நேற்று அந்த உரையும் அதைத் தொடர்ந்த விவாதமும் நிறைவாக நடந்து முடிந்தது.

உரை துவங்குமுன் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தலையாய பொறுப்பு என்று எதை நினைக்கிறீர்கள் என்று மாணவர்கள் ஒவ்வொருவரையும் சொல்லும்படிக் கேட்டேன். அவர்கள் தங்களின் தலையாய பொறுப்பு என்று எதைஎதைச் சொல்கிறார்கள் அவற்றில் எவை எவை சட்டம், தேசம், இனம், அறம் ஆகியவற்றின்பாற்பட்டவை என்று என் உரையையும் விவாதத்தையும் முன்வைப்பதாக எனக்கொரு திட்டமிருந்தது. வேளச்சேரி சம்பவம் பதிவில் நான் இறுதியாக எழுப்பியிருந்த கேள்விகளையும் பொறுப்புணர்வு என்பது பற்றிய விவாதத்தோடு சேர்த்துக்கொள்ளலாம் என்றும் நினைத்திருந்தேன்.

மாணவர்களின் சுற்று முடிந்து நான் உரையைத் துவக்க இருக்கையில் ஒரு மாணவர் தற்போது உங்களுக்குள்ள தலையாய பொறுப்பாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள் என்று வினவினார். நான் இந்த எதிர் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. யோசிக்காமல் என் குழந்தைகளோடு விளையாடுவது என்றேன். விதிகளை மதித்து விளையாடுதல், விதிகள் மீறி விளையாடுதல் என இரண்டின் அறமும் அழகும் வெகு சிறிய குழந்தைகளுக்குக் கூட சீக்கிரத்தில் மனசிலாகிவிடுகின்றன. ஒவ்வொரு விளையாட்டுக்கும் என இருக்கும் கட்டுக்கோப்பினை குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்கின்றன. பல்வேறு விளையாட்டுக்களின் கட்டுக்கோப்புகளுக்கும் நான் நானாகுதலின் பல் திசைப் படர்தலுக்கும் உள்ள உறவினையே பொறுப்புணர்வு என்கிறோம். குழந்தைகளின் பொறுப்புணர்வு உருவாகும் சந்தர்ப்பங்களில் பங்கேற்பது ஒரு தகப்பனின் தலையாய பொறுப்பாகும் என்பதாக என் உரை அமைந்தது. நான் ஏற்கனவே தயாரித்திருந்த உரையிலிருந்து வேறு திசை நோக்கி நகர்வதாகவும் இருந்தது.

-----------------------------

என் மகன்களின் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டதுதான் என் உரையின் தர்க்கத்தை வடிவமைத்திருக்க வேண்டும் என்று இப்போது யூகிக்கிறேன். கடந்த வாரமேதான் அவர்களுடைய பள்ளி ஆண்டு விழாவிலும் கலந்து கொண்டேன். விழா நடந்த காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது. நான் இந்தத் தொடருக்காக ஐபேடில் தெரிதா- காண்ட் புத்தகங்களைப் படிப்பதும் இடையிடையே என் மனைவியோடு உரையாடுவதுமாய் நிகழ்ச்சி துவங்குவதற்காகவும் மேடையில் பொக்குவும் பொம்முவும் வரவும் காத்திருந்தேன்.

பெரியவன் ஶ்ரீருத்ரனின் செல்லப்பெயர் பொக்கு. சின்னவன் யோகருத்ரனின் செல்லப்பெயர் பொம்மு. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போலவே அவர்களை இயற்பெயர் சொல்லி அழைக்கப்படுவதை விட செல்லப்பெயர்களால் அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

பொக்கு முந்தைய ஆண்டு விழாக்களில் தக்காளியாகவும், கிருஷ்ணனாகவும் நடித்திருக்கிறான், நடனமாடியிருக்கிறான். பொம்முவுக்கோ எப்போதும் வெஸ்டர்ன் டான்ஸ்தான் லபிக்கிறது. பொக்கு தக்காளியாக நடித்தபோது ஒரு பெரிய காய்கறிச் சந்தையில் தெர்மாகோல் தக்காளிக்குள் நின்றுகொண்டு தலை மட்டும் வெளியே தெரிய  தக்காளியின் அருமை பெருமைகளை உலகுக்கு சுய தம்பட்டமாய் எடுத்துச் சொல்லியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொக்குக்குத் தான் தக்காளி என்று பெருமை பிடிபடவில்லை.

விழா முடிந்தபின் அவனை நான் பொக்குத் தக்காளி பொக்குத் தக்காளி என்று திகட்டத் திகட்டக் கொஞ்சியது வேறு அவன் தக்காளிதான் என்று அவனுக்கு உறுதியாக்கியிருக்க வேண்டும். பொம்முவுக்கு தான் தக்காளியில்லை என்று கொஞ்சம் வருத்தம்தான். வீட்டில் தெர்மாகோல் தக்காளிக்குள் நின்றுகொண்டு தக்காளி வசனம் பேசுவது யார் இருவருக்கும் அடி நடக்கும். யாரிடம் தக்காளித்தனம் ஜாஸ்தி என்று நான் பார்த்து சொல்ல வேண்டும். பொம்முத் தக்காளியும் சரி, பொக்குத் தக்காளியும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவராயில்லை. இப்படியாக தக்காளி பற்றி எனக்கு போன வருடங்களில் போதுமான அறிவு வந்துவிட்டது; எந்த அளவுக்கு என்றால் நீங்கள் தக்காளி பற்றி திடீரென பிளஸ் டூ பரிட்சை வைத்து என்னை எழுதச் சொன்னீர்களென்றால் நான் நிச்சயம் அதில் தேறிவிடுவேன்.

பொக்குவுக்கும் பொம்முவுக்கும் கிருஷ்ணனாகும் ஆசையும் வராமலில்லை. ஆனால் கிருஷ்ணனாய் அவர்கள் அதிகம் செய்வதற்கில்லை. புல்லாங்குழலை ஊதிக்கொண்டு கால் மடக்கி நடுவில் பேசாமல் நிற்க வேண்டும். கோபியர் சுற்றி சுற்றி ஆடுவார்கள். சும்மா நிற்பதில் அவர்களுக்கு அவ்வளவு வசீகரமில்லை. புல்லாங்குழலைத் தூக்கிக்கொண்டு கோபியரை அடிக்கத் துரத்துவது இரண்டு பயல்களுக்குமே பிடித்திருக்கிறது. பொக்குவும் பொம்முவும் அவர்களுக்குள் கோபியர் பெண் குழந்தைகள் சிதறி ஓடுவதைப் பேசி குஷாலடிப்பதை நான் கவனித்திருக்கிறேன். அவர்களின் உலக சமிக்ஞைகளில் சிலவற்றுக்கு அப்பனுக்கு இடமில்லைதானே.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்காக காத்திருக்கையில் ஏதேதோ நினைவுகளும் வந்த வண்ணமிருந்தன.

-----------------------

சுந்தர ராமசாமிக்கு குழந்தைகளின் உலகை எழுத்தில் பிடிக்கவேண்டும் என்று பெரிய ஆசை இருந்தது. எண்பதுகளில் நாகர்கோவிலுக்குப் போகும்போதெல்லாம் சுந்தர ராமசாமியை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவருடைய கடையிலிருந்து கோட்டாறு ஜங்ஷன் வரை பேசிக்கொண்டே நடந்து போவது எனக்கு அவரைப் பற்றி நினைவில் நிற்கும் தருணங்களில் இனிமை கூடியது. சுந்தர ராமசாமி குழந்தைகளின் உலகை வளர்ந்தவனாகப் பார்ப்பதிலுள்ள சம்பத்துகளை பல முறை முகம் பிரகாசிக்கச் சொல்லியிருக்கிறார். கிருஷ்ணன் நம்பியினிடத்து அவருக்கு இருந்த ஆழமான நட்பின் ஒரு இழை கிருஷ்ணன் நம்பியினால் குழந்தைகள் உலகத்தை இலக்கியத்தினுள் கலைநுட்பத்துடன் சித்தரிக்க முடிந்தது என்பதினால் ஏற்பட்டதாயிருந்தது. சுந்தர ராமசாமியோடு உரையாடிய அந்த நாட்களில் கிருஷ்ணண் நம்பியின் 'நீலக் கடல்' சிறுகதைத் தொகுதியை நான் வாசித்திருக்கவில்லை. நட்பிற்கும் நட்பின் நினைவுகளுக்கும் எப்பொழுதுமே பவித்திரம் காத்த சுந்தர ராமசாமி காலச்சுவடு பதிப்பகம் ஆரம்பித்தபின் கிருஷ்ணன் நம்பியின் 'நீலக் கடல்' சிறுகதைத் தொகுதியை முதல் பதிப்புகளுள் ஒன்றாக மீள்பதிப்பு வெளியிட்டபோதுதான் எனக்கு அந்தத் தொகுதியை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சுந்தர ராமசாமியும் குழந்தைகள் உலகை எழுதுவதை தன்னுடைய தளராத லட்சியங்களில் ஒன்றாகவேக் கொண்டிருந்தார். அவருடைய 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' நாவலில் குழந்தைகளின் உலகைப் பற்றிய பிரமாதமான சித்தரிப்புகள் இருக்கின்றன.

சுந்தர ராமசாமியின் பாதிப்பினால் குழந்தைகளின் உலகை இலக்கிய ரகசியங்கள் நிறைந்த உலகாக கற்பனை செய்வதே என்னை குழந்தைகளுக்கான தேவதைக் கதைகளையும் நாட்டுப்புறக் கதைகளையும் தேடித் தேடி சேகரிக்கவும் வாசிக்கவும் வைத்ததுலீவிஸ் கரோலும், டோல்கியனும், ஆர்.எல்.ஸ்டீவன்சனும், ஹார்ப்பர் லீயும் கற்பனையின் சாளரங்களை மேலும் மேலும் திறந்து விட கதைகளை கதைகளாக மட்டுமே, எந்த கருத்தியல் கட்டுமானங்களுக்கும் உட்படுத்தாமல் படிக்கத் தெரிந்தது. வாழ்வு என்ன கருத்தியலின் கட்டுமானங்களுக்கு உட்பட்டா இயங்குகிறது? வாழ்வின் புதிர்த்தன்மையினை எந்தக் கருத்தியலாவது விளக்கிவிடுமா? நாட்டுப்புறக் கதைகள் மற்றும் குழந்தைகள் கதைகளில் கருத்தியலுக்குக்காகக் கதை சொல்ல வேண்டிய நிர்பந்தங்களில்லை; புதிரை உடைத்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. கதைகள் கதைகளாகவே அவற்றின் அழகுடன் இருக்கின்றன. விளையாட்டுகளுக்கு என்று ஒரு கட்டுக்கோப்பு (integrity) இருப்பது போல, அறக் கருத்தாக்கங்களுக்கு என்று தன்னளவிலான கட்டுக்கோப்பு இருப்பது போல, கதைகளுக்கும் என்று தன்னளவில் முழுமையான கட்டுக்கோப்புகள் இருக்கின்றன என்பதை குழந்தைகளுக்கான எல்லாவகைக் கதைகளும் மீண்டும் மீண்டும் சொல்கின்றன.

கதைகள், விளையாட்டுக்கள் வழி குழந்தைகளின் உலகம் மேல் எனக்குக் கவிந்திருந்த ரொமாண்டிஸிச கற்பிதங்களை முழுமையாக உடைத்தது வில்லியம் கோல்டிங்கின் "Lord of the Flies" நாவல். பாடமாக வைக்கப்பட்டிருந்த இந்த நாவலை கல்லூரி நாட்களில் நான் முழுமையாக வெறுத்தேன். விமான விபத்தில் தப்பி தனியே தீவில் விடப்படும் சிறார்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்க முயலும்போது வளர்ந்தவர்களின் உலகைப் போன்ற வன்முறை மிக்க, சடங்குகள் நிரம்பிய, அதிகாரப் படிநிலைகள் உள்ளார்ந்த சிறு சமூகத்தை உருவாக்குவது கதை. நாவல் மறைமுகமாக முன்வைக்கும் மனிதனின் 'இயற்கையான இயல்பு' வன்முறையானது என்பதைப் பற்றி எனக்கு ஐயங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.

குழந்தைகளின் விளையாட்டுகளிலும், கதை கேட்டல்களிலும் பங்கேற்கும்போது 'இயல்பான இயற்கையான வன்முறை' தாண்டிய அல்லது அதை மறுத்த கட்டுக்கோப்பொன்றின் தற்காலிக நியதியே மேலாதிக்கம் பெறுவதை கவனித்திருக்கிறேன். நாட்டுப்புற கதைகளையும் விளையாட்டுகளையும் ஆதிவாசி இனக் குழுக்களிடமிருந்து சேகரிப்பதற்காக நாடு முழுவதும் அலைந்திருக்கும் எனக்கு அவற்றை சேகரிப்பது என்பது குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிப் பார்ப்பதாகவும், கதை கேட்பதாகவுமே பெரும்பாலும் அமைந்திருக்கிறது.

-தொடரும்


2 comments:

DJ said...

ஹார்ப்பர் லீயின் 'To kill a Mockingbird', மற்றும் வில்லியம் கோல்டிங்கின் 'Lord of the Flies' போன்றவற்றை இங்கு 10ம்/11ம் வகுப்புக்களில் பாடத்திட்டத்தில் வைத்திருந்தார்கள். நாவல்கள் வாசிக்கப் பிடித்திருந்தாலும் பரீட்சையில் என்ன மாதிரிக் கேள்வி கேட்டு பயமுறுத்துவார்கள் என்ற பதற்றத்தோடோ இவற்றை வாசிக்க வேண்டியிருந்ததென்பது என்னவோ உண்மைதான் :)

நீங்கள் குறிப்பிடுகின்ற மாதிரி Lord of the Flies வாசித்தபோது, சிறுவர்கள் என்பவர்கள் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற சிறுவர்களில்லை என்கிற ரொமாண்டிஸ கற்பிதங்களை அன்றையகாலத்தில் உடைத்தபோது எனக்கும் அதிர்ச்சியாய்த்தானிருந்தது. ஏன் இந்நாவலின் சிறுவர்கள் இப்படித் தனித்த தீவில் விடப்படும்போது வன்முறையாளர்களாக மாறுகின்றார்கள். பிறகு காப்பாற்றப்படும்போது மீண்டும் பழையபடி 'சிறுவர்களாக' மாறிவிடுகின்றார்கள்? என்கின்ற கேள்விகள் எழுந்தபடியே இருந்தன. ஆக சிறுவர்களாயிருந்தாலென்ன, வளர்ந்தவர்களாயிருந்தாலென்ன எல்லோருக்கும் ஒரு கண்காணிப்புச் சமூகம் தேவையாய் இருக்கின்றதா எனப் பின்னர் யோசிக்க வேண்டியிருந்தது. இதை இன்னொருவிதமாய் வளர்ந்தவர்கள் 'ஒழுங்காய்' இருக்க அரசு/இராணுவம்/பொலிஸ் என்கிற கண்காணிப்பு நிறுவனங்கள் தேவையாக இருக்கிறதா என நீட்சித்தும் ஒருவர் பார்க்க முடியும்.

ஆனால் இந்தக் கண்காணிப்பு நிறுவனங்கள் எப்படி மனிதர்கள் நிம்மதியாய் வாழத் தங்களின் இருப்பு அவசியம் என்பதை நுண்ணியதளங்களிலிருந்து கட்டியமைக்கின்றது என்பதை ஜோஸே சரமகோவின் 'Blindness' and 'Seeing' வாசித்தபோது பிற்காலத்தில் விளங்கியது.

ஆக நீங்கள் குறிப்பிடுவது போன்று எனக்கும் /நாவல் மறைமுகமாக முன்வைக்கும் மனிதனின் 'இயற்கையான இயல்பு' வன்முறையானது என்பதைப் பற்றி எனக்கு ஐயங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன./

mdmuthukumaraswamy said...

'இயற்கையானது', 'இயல்பானது' என்று சாதாரணமாக விவரிக்கப்படுபவை அனைத்திற்கும் வரலாறுகள் இருக்கின்றன. அந்த வரலாறுகளை அகழ்ந்தெடுப்பதன் மூலம், விவரித்து சொல்வதன் மூலம் அவை இயற்கையானவையோ, இயல்பானவையோ இல்லை எனக் கட்டவிழ்க்கலாம். இருப்பினும் 'மனித இயல்பு' வன்முறையானது, அது 'இயற்கையான' அதிகாரத்திற்கான உந்துசக்தியின் விழைவு என்பது நீட்ஷேயிடம் உருவான கருத்து. இதைக் கட்டவிழ்ப்பது என்பது தத்துவத்தின் சவாலான, சிக்கலான பிரச்சினைகளுள் ஒன்று. குழந்தைகளின்/குழந்தைகளுக்கான கதைகள், விளையாட்டுகள் ஆகியனவற்றையும் அவை சார்ந்த இலக்கியங்களையும் விவாதித்தால் ஒரு வேளை வழி புலப்படலாம். இன்னொரு வழி காண்ட்டினை தெரிதா விமர்சித்ததை துவக்கப்புள்ளியாகக்கொண்டு அறக்கருத்தாக்கங்களை நுட்பப்படுத்துவது. இந்த இரண்டுமே வழிகளுமே ஒரு கண்காணிப்பு சமூகத்தின் செயல்பாடுகளில் சில இடையீடுகளை நிகழ்த்தமுடியும். நேர்கோடற்ற முறையில் எழுதப்படும் இந்தக் கட்டுரைத்தொடரில் இந்த இடையீடுகளை நோக்கி நகரும் இழையை நீங்கள் சுட்டிக் காண்பித்திருப்பதற்கு நன்றி.

சமூகக் கண்காணிப்பு மனிதர்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை என்பதே என் தரப்பு. சரமகோவின் நாவலை வைத்து நீங்கள் எப்படி
நேரெதிரான முடிவுக்கு வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யோஸ் சரமகோவின் 'Blindness' நாவல் மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். 'Seeing' இன்னும் வாசிக்கவில்லை. சரமகோவின் literary geneology and kinship வேறு என்பது என் எண்ணம். கோசின்ஸ்கியின் 'Steps', சோல்சனிட்சனின் 'Cancer Ward', குந்த்தர் கிராசின் 'Tin Drum', எல்ஃப்ரெட் ஜெலினெக்கின் 'Lust' போன்ற நாவல்களோடு சேர்ந்து வாசிக்கப்படும்போது 'மனித இயல்பு' பற்றியும் சமுக கண்காணிப்பு நிறுவனங்கள் பற்றியும் வேறொரு கண்ணோட்டத்தினை பெறமுடியும்.