Wednesday, January 23, 2013

கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 9




தமிழ் அகத்தின் வரலாறே தமிழகத்தின் வரலாறாகும்; அந்த வரலாற்றினை கவிதைகளின் மூலமாக மட்டுமேதான் அறியமுடியும். உணர்ச்சிகரமான காரண காரியத் தொடர்ச்சியினை கதை சொல்லலிலும் கவிதை சொல்லலிலும் ஏற்படுத்தும்போது கதைக்களன் (plot)  உருவாகிறது என்று போன பகுதியிலேயே குறித்தேன். சங்க அகக் கவிதை கதைக்களனுக்கு நிகரான பேச்சுக் களனை அடிப்படையாகக் கொள்கிறது. கவிதையை யார் பேசுகிறார்கள் (கூற்று), யாரை  நோக்கிப் பேசுகிறார்கள் (முன்னம்) என்ற அந்தரங்கக் களனுக்குள் கவிதை கேட்பவனை அல்லது வாசிப்பவனை  நிறுத்துகிறது. பக்தி கவிதையிலோ முன்னிலை எப்பொழுதுமே பரம்பொருள்தான் என்பதினால் வாசகனும் கவிக்குரலைப் போலவே பிறன்மையில் சரணடைய விழைபவன். பாரதியிடம் தோற்றம் பெறுகிற தன் அகம் நோக்கி பேசுகின்ற குரல் புதியது, நவீனமானது. சங்கக் கவிதையைப் போல, பாரதியின் கவிதையில் வாசகனின் இடம், வேறு இருவரின் அந்தரங்கத்தினுள் பங்கேற்கும் பார்வையாளனுடையது அல்ல; பக்திக் கவிதையைப் போல தன் உணர்ச்சியின் தீவிரத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கக்கூடிய இடமுமல்ல. பாரதியில் தன் அகத்தோடும் கடவுளோடும் பேசுகிற கவிக்குரலை கேட்கிறோம்

பாரதிக்குப் பிந்திய நான்- நீ என்ற நவீன கவிதையின் உரையாடல் பேச்சுக்களனில் நகுலன் ஒருவரைத் தவிர்த்துநான்கொஞ்சம் கொஞ்சமாக உயர்வானதாகவும் இறுக்கமுடையதாகவும் மாறியது. நகுலனில் நான்-நீ உரையாடல் களன் பெரும்பாலும் சமத்துவமுடையதாகவே இருக்கிறது. ஆனால் நகுலனின் கவிதைகளில்நான்உடைந்து போவதையும் பல குரல்களில் பேசுவதையும் கேட்கிறோம். பேசப்படும் நபருக்கு பெயர் இருந்தாலும் கூட நகுலன் கவிதைகளில்நீபேசுவதற்கான நிமித்தம் மட்டுமே என்று ஆகிவிடுகிறது. நகுலனின் கவிதைகளில்நீஒரு உப்புக்கு சப்பாணி இருப்பு என்றால் ஆத்மாநாமிடமோநானின்இருப்பும் கேள்விக்குரியதாய் மாறி விடுகிறது.

ஆத்மாநாமின் பின்வரும் கவிதைநான் இல்லைஎன்றே முடிகிறது:


நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் என்பது
தெரியாமலே இருக்கிறேன்.

நான் இருப்பதைத்
தெரிந்துகொண்டபோது
நானும்நானும் இருந்தோம்.

உண்மையான நானும்
உண்மை போன்ற நானும்
பேசிப்பேசி
உண்மை போன்ற நானாய்
நானாகிவிட்டேன்.

உண்மையான நான்
அவ்வப்போது ஆவேன்
உண்மை போன்ற நான்
மறைந்திருக்கையில்

உண்மை போன்ற நான்
இல்லவேயில்லை என்று
உண்மையான நான் சொல்லும்
சரி என்று
உண்மை போன்ற நான்
ஆமோதிக்கும்.

இதனைக் கவனித்த நான்
உண்மையான நானும் இல்லை
உண்மை போன்ற நானும் இல்லை.

நான் மட்டும் இருக்கிறேன்
என்றுணர்ந்தேன்.
நான் மட்டும் இருக்கையில்
அமைதியாய் இருந்தது.

அமைதியாய் இருப்பதை
உணர்ந்ததும்
நான் வேறு ஆகி விட்டேன்.
நானும் வேறான நானும் பொய்.

நான் இல்லை.


ஆத்மாநாமின் கவிதை தன்னிருப்பினை முழுமையாக நிராகரிக்கிறதென்றால் சி.மணியிடம் வெளியில் தப்பிச்செல்ல வழியில்லாமல் மாட்டிகொள்ளும் தன்னிலையை அவதானிக்கிறோம்.



சி.மணியின்அறைவெளி

தப்பிவிட்டேன் என்று விழித்தேன்.
சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே
வானம்; நான்கு பக்கமும் பூவிருள்
கூரை, சுவர்கள் எதுவும் இல்லை.
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.
வெட்டவெளிதான் இது, அறை அல்ல
என்று சிலகணம் துள்ளியது என்மனம்.
மேற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.

சுந்தரராமசாமியின் (பசுவய்யா) கவிதையிலோநீஎன்ற பிறன்மை முழுமையான கொடூரமாகி, நரகமாகிவிடுவதால் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலை நிறுத்தி வென்று காட்டுவேன் பார் என்று  சவால் விடுவது  கவிதை என முன்வைக்கப்படுகிறது.
பசுவய்யாவின் 'சவால்'

நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்.
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.

பக்திக் கவிதையில்நீயாக இருந்த கடவுள் பாரதியின் பக்தி கவிதைகள் அல்லாத நவீன கவிதைகளில்  புகார்களையும் கோரிக்கைகளையும் ஏன் அதட்டல்களையும் (சொல்லடி சிவசக்தீ எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்) தன் அகம் நோக்கிய உரையாடல்களையும் பேசிப்பார்க்கக்கூடியவராகவே இருந்தார்.
 சுகுமாரன்தான்  தமிழ் நவீன கவிதையில்  ‘மகாமசானத்தில் தெரியாதே என்று இறந்தார் என் கடவுள்என்று கடவுளின் இறப்பை முதலில் பிரகடனப்படுத்தினார் என்று என் நினைவு. அதன் பிறகு பசுவய்யாவின் கொடூர எதிரிக்கு நிகராக சாத்தானையும் பிசாசையும் தமிழின் நவீன கவிதையை தொடர்ந்து எழுதியவர்கள்நீயாக மாற்றிவிட்டார்கள் எனலாம். உதாரணமாக மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில்நீயாக இருக்கக்கூடிய சாத்தான்களையும் பிசாசுகளையும் நாம் அடிக்கடி சந்திக்கிறோம் . மனுஷ்யபுத்திரன்சாத்தான்களோடு வாழ்வதற்கான எளிய பயிற்சிகள்கூட சொல்லித் தருகிறார். அவருடைய பிசாசுக்கவிதைகள் மூன்றில் ஒன்றினை வாசிக்கலாம்:


பிசாசுக்கவிதை- 3
இந்தப் பிரியத்தின்
நிமித்தம்
நான் உனக்காக எப்போதும் 
மிக விநோதமான
மிக விலையுயர்ந்த
பதிலீடு செய்யமுடியாத
பரிசுகளையே தேர்ந்தெடுக்கிறேன்.

பிரியும்போது
திருப்பிக்கொடுக்கப்படும் 
எந்தப் பரிசுகள்
வேட்டைக் கருவிகளாகுமோ
எவை பிசாசின் நிழல்களை உருவாக்குமோ
எவற்றிற்கு கனத்த பிணவாடை இருக்குமோ
அவற்றை மட்டுமே
இந்தப் பிரியத்தின் நிமித்தம் 
உனக்காகக் கொண்டு வருகிறேன்

தமிழ் அகத்தின் வரலாற்றினை மேற்சொன்ன தமிழ் நவீன கவிதைகளின் வழி பல்வேறு நிலைகளாகத் தொகுத்துக்கொள்வது நவீன கவிதைகளுக்குப் பிந்திய கவிதைகளையும் தற்கால கவிதைகளையும் அணுக வாசிக்க உதவியாக இருக்கும். இந்த இடத்தில் பவித்ரன் தீக்குன்னியின்பின் நவீனத்துவம் என்ற கவிதையில் தன்-விசாரணை தோன்றியவுடனேயே தன்னைத் தாழ்த்திநீயை, பிறன்மையை முதன்மைப்படுத்துவதால் அது எப்படி  பின் நவீனத்துவ கவிதையாகவும் இருக்கிறது என்பதை நாம் வாசித்ததை நினைவில் கொள்வது மேலும் உதவியாக இருக்கும்


-----------------------------------------------------------------
தொடரும்



1 மனுஷ்ய புத்திரன், “அதீதத்தின் ருசிஉயிர்மை வெளியீடு 2009

Monday, January 21, 2013

கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 8




மறைந்த மலையாள விமர்சகர் கிருஷ்ணன் நாயர் அவருடைய புகழ் பெற்ற கலாகோமுதி வாராந்திர பத்தியில் பல வருடங்களுக்கு முன் எக்சிஸ்டென்ஷியலிசம் அதிகம் புழங்கப்பட்ட மலையாள இலக்கிய சூழல் குறித்து எழுதியிருந்தார்

கிருஷ்ணன் நாயர் பள்ளிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆய்வாளராக பணியாற்றியவர். அவர் தன் பணி நிமித்தமாக ஒரு பள்ளிக்குப் போக நேர்ந்தது. அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அதிகமான வேலைப் பொறுப்பில் இருப்பதான தோரணையைக் காட்டிகொண்டு கோப்புகளை பார்த்துக்கொண்டே கிருஷ்ணன் நாயரை தனக்கு எதிரில் உட்கார வைத்திருந்தார். தேநீரும் தவிட்டு பிஸ்கட்டும் வந்தன. தலைமை ஆசிரியர் கோப்புகளின் தாள்களை எச்சில் தொட்டு தொட்டு திருப்பிக்கொண்டிருந்தார். கைப்பழக்கத்தில் அந்தத் தவிட்டு பிஸ்கட்டையும் அவர் எச்சில் தொட்டு எடுத்தாராம். இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து எழுதும் கிருஷ்ணன் நாயர் இப்போதெல்லாம் எல்லோரும் எந்த புத்தகத்தையும் எக்சிஸ்டென்ஷியலிச துப்பல் தொட்டே பக்கம் புரட்டுகிறார்கள் என்று எழுதியிருந்தார்

தமிழிலோ இப்போது பின்நவீனத்துவ எச்சில் துப்பியும் தொட்டுமே எல்லோரும் எல்லா பக்கங்களையும் புரட்டுவார்கள் போல. திட்டினாலும் பின்நவீனத்துவம், பாராட்டினாலும் பின்நவீனத்துவம், புதியதாக எதைச் சொன்னாலும் பின்நவீனத்துவம், பழைமையைப் போற்றுவதற்கும் பின்நவீனத்துவம் என்று சகட்டுமேனிக்கு வகைதொகையில்லாமல்பின்நவீனத்துவம்என்ற பதமும் அது சார்ந்த சிந்தனைச் சரடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. பாலியல் வசைச்சொற்களை தயக்கமில்லாமல் எழுதுவது பின்நவீனத்துவம் என்றும் பரவலான புரிதல் உருவாகியிருக்கிறது. பல நிற குமிழ் ஆடிகளில் சிதைந்து தெரியும் பிம்பங்களெனபின்நவீனத்துவம்தமிழின் பல தளங்களிலும்  அறியப்படுகிறது. போதாக்குறைக்கு  இணைய கூலிப்படைகள், கண்காணிப்பாளர்கள், ஒற்றர்கள், முகவர்கள்கருத்துத் திருடர்கள், போலிகள் என்று பலர்பின் நவீனத்துவபரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். தமிழின் நவீனத்துவம் என்ன என்பதே சரிவர வரையறுக்கப்படாததாகவும், புரிந்துகொள்ளப்படாதாகவும், விமர்சனரீதியாக எதிர்கொள்ளப்படாததாகவும் இருக்கும்போது பின்நவீனத்துவம் பற்றிய குளறுபடிகள் இணையம் என்ற வெகுஜன ஊடகத்தின் குடிமைப் பண்பற்றத்தன்மையினால் வெகுவாக ஊதிப் பெருக்கப்படுகின்றன

இந்தப் பின்னணியிலேயே என்.டி.ராஜ்குமார் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த பவித்திரன் தீக்குன்னியின் இந்தக் கவிதையை வாசித்தேன்.



பின் நவீனத்துவம்
சரியான விளம்பரதாரர் கிடைக்காமலும்
கேபிள்காரனின் நேரத்தை
கணக்கிலெடுத்துக்கொண்டும்
அவன்
தனது தற்கொலையை
இன்னொரு நாளைக்கு மாற்றி வைத்தான்
மனது – 
எனது மனமே
எனக்கு முன்னால்
நீ யாருடைய மனதாயிருந்தாய்
முள்
உனது யாத்திரை
சுகமாயிருக்க வெண்டுமென்று
வழியிலிருந்தெடுத் தென்னை
ஒதுக்கி வைக்கிறேன் நான்
கவிதை
கவிதையினால்
தடுக்கமுடியுமா
நமக்கிடையிலான
மண் அரிப்பை 



பவித்ரன் தீக்குன்னியின் கவிதை நான்கு விஷயங்களை அடுக்குகிறது: அவன், மனம், நான் செய்த செயல், கவிதை. ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல தோற்றமளிக்கும் இந்த நான்கு விஷயங்களும்  அடுத்தடுத்து அடுக்கப்படுவதாலேயே தொடர்புறுத்தப்படுவதால் - தொடர்புறுத்துதல்கள் எவ்வாறு கவிதையாக்கப்படுகின்றன அல்லது புனைவாக்கம் பெறுகின்றன என்பதினை சுட்டுகின்றன. அதே நேரத்தில் இந்த நான்கு கவிதைக் கூறுகளிடையே மனித உணர்ச்சியினால் ஆன காரண காரியத் தொடர்ச்சி இல்லை. உதாரணமாகராஜா இறந்தபின் ராணி இறந்தாள்என்பது வெறும் செய்தியைச் சொல்லக்கூடிய வாக்கியம். ‘ராஜா இறந்தபின் துக்கம் தாளாமல் ராணி இறந்தாள்என்ற வாக்கியமோ இரண்டு அடுத்தடுத்து நடந்த சம்பவங்களிடையே உணர்ச்சிபூர்வமான காரண காரியத் தொடர்ச்சியை ஏற்படுத்தி செய்திக்கு கதைக் களனை (plot) தருகிறது அதன் மூலம் சொல்லல்கள் அல்லது மொழிபுகளில் ஒரு வகையான கதை சொல்லலையும் நிகழ்த்துகிறது. பவித்ரன் தீக்குன்னியின் கவிதையிலோ காரண காரிய தொடர்ச்சி இல்லை, சொல்லுதல் வெறும் இணைத்தலாக உள்ளது. சொல்லுதலில் உணர்ச்சியின் காரண காரியத் தொடர்ச்சியினை அகற்றிவிட்டதால்மனிதம்என்று எந்தக் கருத்தும் உருவாவதில்லை

 ‘மனிதம்என்ற கருத்து எதுவுமே தொழிற்படாத காலத்தில்தான்  தற்கொலைக்கான நேரத்தைக்கூட விளம்பரதாரர் கிடைக்காததாலும் கேபிள் காரனின் நேரத்தை கணக்கிலெடுத்துகொண்டும் நிர்ணயிக்கவேண்டியிருக்கிறது. பிரபல்யம் மட்டுமே மதிப்பு மற்றவையெல்லாம் அதற்குக் கீழேதான் என்ற வெகுஜன மூடத்தனம் பரவலாக்கம் பெற்றிருக்கும் நம் இலக்கிய சூழலில், மனிதமற்ற வெகு ஜன ஊடகங்களின் வெறி கொண்ட ஆக்கிரமிப்பு இவ்வாறாக சித்தரிக்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடையலாகாது. ‘மனிதம்என்பது எப்படியெல்லாம் ஜோடிக்கப்படுகிறது, கற்பிதம் செய்யப்படுகிறது, இருப்பதாக பாவனை செய்யப்படுகிறது என்பது பின் நவீனத்துவம் சிந்தனையாகவும், கட்டவிழ்ப்பாகவும், கலையாகவும், ஆய்வாகவும் முன் வைக்கின்ற முக்கியமான பொருளாகும். பவித்ரன் தீக்குன்னியின் கவிதையிலோமனிதம்என்பது பிரபல்யத்திற்கான ஊடக வழிகளால் நிர்ணயிக்கப்பட்டதன்னிலை’ ( subjectivity) அல்லதுசுயம் அழிப்பாகஇருக்கிறது.

வேறொன்றால் நிர்ணயிக்கப்படுகிறதன்னிலைகவிதையினைச் சொல்கின்றநானாகஎப்படி இருக்க முடியும்? அதனால்தான்எனது மனமே நீ, எனக்கு முன்னால் யாருடைய மனமாயிருந்தாய்என்ற கேள்வி எழுகிறதோ? வேறொன்றின் மனமாயிருந்தபடியால் தற்கொலைக்கான நேரத்தை தள்ளி வைத்தஅவன்’, தற்கொலையைத் தள்ளி வைக்கும் முடிவினை எடுத்த கணத்திலேயே இயங்குவதற்கான உந்துதல் பெற்று (அல்லது செயலுக்கான agency பெற்று) தன்-விசாரணையில் ஈடுபடுகிறான் என்றும் வாசிக்கலாம்.

தன்-விசாரணை தோன்றியவுடனேயே தன்னை விட மற்றவன் முக்கியமாகி விடுகிறான். தன் யாத்திரை அவன்/அவள் யாத்திரையாகிவிடுகிறது, தானாகிய முள்ளை எடுத்து ஓரத்தில் வைத்து நீ என்று சுட்டப்படும் அவன்/அவள் யாத்திரை சுகமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறான்.

தன்னை தாழ்த்தி மற்றவளின்/மற்றவனின் சுகம் நிமித்தம் மேற்கொண்ட செயல் கவிதையாகிவிடுகிறதுஆனாலுமே கவிதைப் பனுவலுக்குள்ளே மட்டுமே இந்த செயலாகிய கவிதை நடப்பதால் வெளியுலகில் நடக்கக்கூடியநமக்கிடையிலான மண் அரிப்பினைதடுக்குமா என்ற கேள்வியுடன் கவிதை முடிந்து விடுகிறது. ‘‘மனிதம்என்பதற்கான வாய்ப்பே இல்லாத சூழலில் ஆரம்பித்து கவிதையாகும் செயலில், மனிதத்திற்கான சாத்தியப்பாடையும் அதன் எல்லையும் சுட்டிக் காட்டிய உடனேயே கவிதையும் முடிந்து விடுகிறது. தான் சுட்டிக்காட்டிய மனிதத்திற்காக எந்த அறப் பிரச்சாரத்தையும்  மேற்கொண்டு கவிதையை எனவே இலக்கியத்தை நிறுவனமாக மாற்ற இந்தக் கவிதைப் பிரதி விழைவதில்லை.

பவித்ரன் தீக்குன்னி இந்தக் கவிதையில்பின் நவீனத்துவம்என்றால் என்ன என்பதினையும் நிகழ்த்திக்காட்டிவிடுகிறார்

இந்த இடத்தில் தமிழவன் தன்னுடையஅமைப்பியலும் அதன் பிறகும் என்ற நூலில்படைப்பின் அகமும் புறமும்என்ற துணைத்தலைப்பின் கீழ் எழுதுவது வாசிக்கத்தக்கது


இலக்கிய விமர்சனம் எனபது கடினமான காரியம் என்கிறார் மாஷெரி. படைப்பை அறிய நாம் அதன் வெளியே போக வேண்டும். அதே நேரத்தில் படைப்பின் உள்ளேயும் போக வேண்டும். அதாவது படைப்பின் பலவேறு அர்த்த தளங்களை அறிய வேண்டும். ஆக், படைப்பிற்கு வெளியே உள்ள பிற அறிவுத்துறை , பிற இலக்கிய மரபு போன்றவற்றையும் படைப்பிற்குள்ளே இருக்கும் அர்த்த வடிவ குணங்களையும் அறிய வேண்டும். படைபிற்கு வெளியே போவதும் படைப்பிற்கு உள்ளே போவதும் ஆகிய இருவகைச் செயல்களையும் விமர்சகன் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். ஒன்றிற்கு அதிக முக்கியத்துவமும், மற்றதற்கு குறைந்த முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. இவ்விரு வகை அணுகல் முறைகளும் ஒரு சேரச் செய்யப்படும்போது  ரசனை முறைப் பார்வை என்கிற பேய் ஓடிவிடும் என்கிறார் மாஷெரிஅதாவது இவ்விரு வகைப் பார்வைகளும் ஒருமித்த பார்வைகளாய் முன்வைக்கப்படுகையில் ரசனையின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுத்தாளனிடம் உருவாவதில்லை. இங்கு எழுத்து வடிவங்களைப் பற்றிய பிரச்சினை உருவாகிறது. எழுத்துக்கான வடிவங்களுடன் கருத்துருவ நிலை இணைந்தே இருக்கும்ஆக, வடிவத்தின் வரலாறு என்பது கருத்துருவ நிலைகளின் வரலாறாகிறது. உண்மையில் கருத்துருவ வரலாறும் வடிவ வரலாறும் இணைகோடுகள் என்றே சொல்ல வேண்டும். வடிவங்கள் கருத்துருவங்களால் மாறுவது போலவே நம் சுயமாகவும் மாறமுடியும் என்பதினையும் நினைவில் கொள்ள வேண்டும்.”




------------------------------------------------------------------

தொடரும் 
1 என்.டி. ராஜ்குமார் மொழிபெயர்ப்பாளர், ‘பவித்ரன் தீக்குன்னி கவிதைகள்’, புது எழுத்து வெளியீடு, காவேரிப்பட்டிணம், 2010, பக்கம் -47
2 தமிழவன், ‘அமைப்பியலும் அதன் பிறகும்அடையாளம் வெளியீடு 2008 பக்கம் 281