Thursday, January 17, 2013

கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 7



கவிதையின் மொழி, மொழியினை நிகழ்த்திக் காட்டுதல், எதிர்ப்பின் கவிதை மொழியினை அனுமானித்தல், கவிதைகளின் தொனிகளை கவனித்தல், ஒரு கவிதை ஒரு கவிஞர் என்றில்லாமல் கவிதைகளினூடே சஞ்சாரித்தல் என்றெல்லாம் நான் எழுதும்போது  நான் கவிதையின் இயங்குதளத்தினை சொல்லாடலாக (discourse) கணிக்கிறேன். சொல்லாடல் சமூகம் முழுக்க இயங்கக்கூடியது. பேசப்படக்கூடிய பொருள், பேச முடியாத பொருள் என்ற இரு சமூக எல்கைகளுக்குள் மொழி ஒழுங்காக வெளிப்படுவது; வாசிக்கப்படுவது. வாசக அகத்திற்கான சாளரங்களையும் எனவே பார்வைக்கோணங்களையும் திறந்துவிடுகின்ற அதே நேரத்தில் சமூக தளத்தினையும் கவிதை மற்றெந்த ஊடகங்களையும் விட நுட்பமாகக் கட்டமைக்கிறது. மற்ற ஊடகங்களின் அறிவும், தர்க்கமும் கவிதை தன் மொழி நிகழ்த்துதல்களின் மூலம் கட்டமைக்கின்ற அறிவும், தர்க்கமும் ஒன்றானதல்ல

விக்கிரமாத்தியன் நம்பியின் ‘‘டாஸ்மாக்கை கடந்து செல்லும் கவிஞன்என்ற கவிதையை வாசியுங்கள்.

டாஸ்மாக்கைக் கடந்து செல்லும் கவிஞன்

டாஸ்மாக்கை கடந்து
செல்கிறான் கவிஞன்

உலகத்திலேயே வேறெதுவும் கவிஞனை
இந்த அளவுக்கு சலனப்படுத்துவதில்லை

(பெண் சபலம்
தனி)


கோயிலை
கடந்து செல்கிறான்


உணவுவிடுதியை 
கடந்து செல்கிறான்

ஜவுளிக்கடையை
லாலாக் கடையைக் கடந்து செல்கிறான்

புக்ஸ்டாலை வங்கியை
எவ்வளவோ இடங்களை கடந்து செல்கிறான்

எதுவுமே
தொந்தரவு தந்ததில்லை

கடக்க முடியாத இடம்
இது ஒன்றுதான்

கட்டிப்போடும் டாஸ்மாக்கை
கடக்க முடியாமல் தவிக்கிறான் கவிஞன்

ஒரு டாஸ்மாக்கிலிருந்து
இன்னொரு டாஸ்மாக்குக்கு

உள்ளூர் டாஸ்மாக்கிலிருந்து
வெளியூர் டாஸ்மாக்குக்கு

கடந்துக்கொண்டெ
இருக்கிறான் கவிஞன்

கடக்க கடக்க
வந்துக்கொண்டேயிருக்கிறது டாஸ்மாக்

(கவிஞனை
அன்பாக நடத்துகிறார்கள் டாஸ்மாக் விற்பனையாளர்கள்

கனிவாக
பழகுகிறார்கள்பார்நடத்துபவர்கள்

இன்முகத்துடன்
இருக்கிறார்கள் வேலையாள்கள்
வளவுக்காரர்களைவிட
தெருக்காரர்களை விட

ஊரில் உள்ளவர்களை காட்டிலும்
நாட்டில் உள்ளவர்களை காட்டிலும்

நிரம்ப நிரம்ப
நல்லவர்களாகத் தெரிகிறார்கள் டாஸ்மாக்கில்
இருப்பவர்கள்

இவ்வளவுக்கு கவிஞன்
அவர்களிடம் தன்னை காட்டிக் கொள்வதேயில்லை)


கவிஞனுக்கும் டாஸ்மாக்குக்குமான உறவு
பூர்வஜென்மத்து தொடர்பு போல

கவிஞனும்
டாஸ்மாக்கை விடுவதில்லை

டாஸ்மாக்கும்
கவிஞனை ஒதுக்குவதாயில்லை

டாஸ்மாக்கின் வசீகரம்
அரசனின் கம்பீரம் போல

டாஸ்மாக்கின் கவர்ச்சி
கணிகையின் ஒய்யாரம் போல

கவிஞனை
மண்டியிட செய்கிறது

கவிஞனை
விழ வைக்கிறது

டாஸ்மாக்கை
கடந்துவிடப் பார்க்கிறான் கவிஞன்

கடந்து கடந்து
தீரவில்லை தொலையவில்லை டாஸ்மாக்குகள்

ஒவ்வொரு ஊரிலும் எப்படியோ
பேருந்து நிலையத்துக்குப் பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக்

சிரம பரிகாரம் செய்துக்கொண்டு
செல்லும்படி கேட்டுக் கோள்கிறது ஒரு அருமையான 
டாஸ்மாக்

பணவிடை அனுப்பப் போகையில் வழிமறித்து
பந்தி உபசரிப்பது போல அழைக்கிறது இன்னொரு நல்ல
டாஸ் மாக்

கல்யாண வீட்டுக்குக் கிளம்புவதை எவ்வாறோ 
கண்டறிந்து கொள்கிறது வேறொரு புத்திசாலி டாஸ்மாக்

கருத்தரங்குக்குப் புறப்படுவதை எவ்விதமோ
கண்டுபிடித்து விடுகிறது ஒரு கெட்டிக்கார டாஸ்மாக்

கையில் பணம் வைத்திருப்பதை
கவனித்துவிடுகிறது டாஸ்மாக்

சன்மானம் வருவதை
சரியாகத் தெரிந்துகொள்கிறது டாஸ்மாக்

நண்பர்களை
நேரம் காலம் பார்த்து அனுப்பிவைக்கிறது டாஸ்மாக்

கவிதை வருமென்று வேறு ஆசை
காட்டுகிறது டாஸ்மாக்

டாஸ்மாக்கை கடந்தும் கடக்க முடியாமல்
உழன்று கொண்டிருக்கிறான் கவிஞன்


பல வசீகரங்களையும், உறுதியளித்தல்களையும், ஆசுவாசங்களையும் மட்டுமல்ல தூண்டுதல்களையும் கண்காணிப்புகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு இடமாக கவிதையின் தர்க்கத்துள் இருக்கிறதுடாஸ்மாக்’. விக்கிரமாதித்யன்டாஸ்மாக்கைசாராயக்கடை என்று குறித்திருந்தால் இத்தனை பேசு மொழி நுட்பங்களையும் சமூக விமர்சனங்களையும் இந்தக் கவிதை ஏந்தியிருக்குமா என்பது சந்தேகமே. ‘டாஸ்மாக்வெறும் சப்தமாகவும், இடமாகவும், நபராகவும், வாக்களிக்கப்பட்ட நிலமாகவும், எங்குமிருப்பதாகவும், தந்திரங்களையும், வசீகரங்களையும், கண்காணிப்புகளையும் உள்ளடக்கியதாகவும் கவிதையின் சொல்லாடலை மாற்றிவிடுகிறது. ‘டாஸ்மாக்அதே சமயத்தில் குறியீடாக மாறுவதில்லை. ‘டாஸ்மாக்என்ற பெயர் சமகாலத்திய வரலாற்றுத்தன்மையினை தொடர்ந்து சுட்டுவதால் ஒரு குறிப்பிட்ட இடம் காலத்திற்கு அடங்கிய சொல்லாடலாக கவிதை இருக்கிறது.

விக்கிரமாதித்யனின் கவிதைகள் பலவும் இவ்வாறான குறிப்பிட்ட -இடம் காலத்திற்குள் அடங்கிய சொல்லாடல்களாக இருப்பதினால் அவற்றினை சமூக யதார்த்தத்தைபிரதிபலிக்கக்கூடிய’  நவீன கவிதைகளாகவே வாசிக்கத் தலைப்படுகின்றனர். அப்படி வாசிக்கையில் -உதாரணமாகநண்பர்களை நேரம், காலம் பார்த்து அனுப்பி வைக்கிறது டாஸ்மாக்என்ற வரி அர்த்தமிழந்து போகிறது ஏனெனில் இந்த வரியில்டாஸ்மாக்சம கால வரலாற்றுத்தன்மையுடைய சாராயக்கடையினை குறிப்பதாக இல்லை. விக்கிரமாதித்யன் கவிதைகளின் மிகப் பெரிய பலம் இதுதான்; இக்கவிதைகள் இடம் காலம் ஆகியவற்றிற்கு அடங்கிய சொல்லாடல்களாக இருக்கும்போதே அவற்றை மீறுகின்ற பொது அருவ தளத்தினை எட்டத் தயங்குவதில்லை. இதர பல நவீன கவிஞர்கள் பொது அருவ தளத்திலேயே  தங்கள் முழு கவிதைச் சொல்லாடலையும் அமைக்கிறார்கள். நகுலன் அருவ தளத்திலிருந்து தரையில் கால் பாவி மழை; மரம்; காற்று (8) கவிதையில்காலை மணி 10:10’ என்று எழுதுமிடத்திற்கு வந்து சேர்கிறார் என்றால்  விக்கிரமாதித்யன்டாஸ்மாக்கைதரையில் கால் பாவி கடந்து சென்ற கவிஞனில் ஆரம்பித்துடாஸ்மாக்கைகடந்தும் கடக்க முடியாமல் உழன்று கொண்டிருக்கும் கவிஞனிடத்தே வந்து சேர்கிறார். கடந்தும் கடக்க முடியாத பாவனைகளை  மொழி நிகழ்வுகளாக விக்கிரமாதித்யன் தொடர்ந்து தன் கவிதைகளில் நிகழ்த்திக் காட்டுகிறார். இந்த அம்சத்தினால் விக்கிரமாதிதயன் கவிதைகள் இதர கவிஞர்களிடத்தே காணக் கிடைக்காத அபூர்வமான வரலாற்றுப் பதிவுகளின் சேகரக்கிடங்குகளாகவும் அதே சமயம் அவற்றைக் கடந்த அருவ தளங்களை காண்பித்துத் தருவனவாகவும் இருக்கின்றன

விக்கிரமாதித்யன் கவிதைகள் அவற்றின் வரலாற்றுப் பதிவுகளுக்காவே அதிகமும் பாராட்டப்படுகின்றன. கிராம தெய்வங்கள் சமஸ்கிருதமயமாதலுக்கு உட்படுத்தப்படுவது, கிராம தெய்வங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள ஒவ்வாமை, திராவிட மரபுகள் என விக்கிரமாதித்யன் நம்பும் மரபுகள் உதிரிமயமாக்கப்படுவது (marginalization) ஆகிய பண்பாட்டு அரசியல் செயல்பாடுகள் விக்கிரமாதித்யன் கவிதைகளிலேயே அதிகமும் வரலாற்று மொழி நிகழ்வுகளாய் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் வெகு ஜன தளமே வெகுவாக உதிரிமயமாக்கப்பட்ட அல்லது பொறுக்கிமயமாக்கப்பட்ட தளம் (lumpen public sphere)  என்பதினை ஞானக்கூத்தனின் கவிதைகளைப் போலவே விக்கிரமாதித்யன் கவிதைகளும் பதிவு செய்யத் தவறுவதில்லை. மூர்க்கமும் மூடமும் இணைந்த தமிழ் வெகு ஜன தளத்திலிருந்து அந்நியப்பட்டவர்கள் பெரும்பான்மையான தமிழ்க் கவிஞர்கள் என்றால் அந்த அந்நியத்தன்மையின் இரு பெரும் குறியீடுகள் பிரமிளும், நகுலனும்.   இந்த அந்நியத்தன்மை பாரம்பரியமாகவே தமிழிலக்கியவாதிகளின் மனப்பான்மையினை தீர்மானிப்பதாக இருந்து வருகிறது. வெகு ஜன தளத்தினை அந்நியமாகப் பார்க்காமல் அதனுள் நுழைய முயன்ற கவி விக்கிரமாதித்யனே ஆவார்; அதில் அநியாயத்திற்கு தோல்வி கண்டவரும் அவரே.

தன்னை சராசரி தமிழனின் பிரதிநிதியாக சதா அறிவித்துக்கொள்ளும் விக்கிரமாதித்யன்சேகர் சைக்கிள் ஷாப்முன்னுரையில் எழுதுகிறார்:

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தை, பாடல் பெற்ற ஸ்தலங்கள், சிற்றிதழ்கள், நவீன கவிஞர்களின் தொகுப்புகள், நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பொன்னி அரிசிச் சோறு, வத்தக் குழம்பு, ரசம், அவியல், புளிமிளகாய், ஊறுகாய், இட்லி, மிளகாய்ப் பொடி, கத்தரிக்காய் கொத்ஸு, மோர்க்குழம்பு, பாகற்காய்ப் பொரியல், பிரண்டைத் துவையல், சொதி, அடை, இருட்டு கடை அல்வா, கதர் வேஷ்டி-சட்டை, மூட்டைபூச்சி, கொசு, பெருச்சாளி வராத வீடு, குற்றாலம் தண்ணீர், வில்ஸ் ஃபில்டர், தேநீர், மார்கோ சோப், மைசூர் சாண்டல் பவுடர், டாபர் சிவப்புப் பல்பொடி, அம்லா ஹேர் ஆயில், சூர்யன், எஃப்.எம், பட்டுக்கோட்டை முதல் கண்ணதாசன் வரையிலான செவ்வியல் திரைப்படப் பாடல்கள் இவற்றாலானது என் வாழ்வியல்.”

ஆனால் இந்த வெகு ஜன வாழ்வியலின் பிரதிநிதியே இலக்கிய லும்பன் என்று அழைக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டவரும் ஆவார். ‘சேகர் சைக்கிள் ஷாப்முன்னுரையிலே விக்கிரமாதித்யன் எழுதுகிறார்:

ஒரே நேரத்தில் ஐந்தாறு பத்திரிகாசிரியர்களை பகைத்துக்கொள்ளும்லும்பன்தான் நான். எனில், இலக்கியலும்பன்’. (’லும்பன்என்பதற்குத் தமிழில் உதிரி, பொறுக்கி என்று பொருள். உதிரி என்ற அர்த்ததிலேயே இங்கு வழங்கியிருக்கிறேன்.) தமிழிலக்கியச் சூழலில் லும்பனாக இருப்பது கஷ்டம். கேரளாவில் சாத்தியம். உலக இலக்கியலும்பன்களை விதந்து எழுதும் நவீன இலக்கியர்கள், கொண்டாடும் கவிஞர்கள், போற்றிப் பாடும் பின் நவீனத்துவ அறிவுஜீவிகள் உள்ளூர் இலக்கியலும்பன்களை மட்டும் ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள், ஒதுக்கி வைகிறார்கள், ஓரம் கட்டுகிறார்கள், தமிழ்ப் பெருங்குடி மக்கள் தங்கள் சமூகத்தில் எத்தனையோலும்பன்களை (எப்படியோ) ஏற்றுக்கொண்டு விட்டார்கள், ஒருவேளை, அயர்வூட்டும் யாந்திக வாழ்க்கைக்குலும்பன்கள்தாம் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறார்கள் என்ற சூட்சுமம் தெரிந்து வைத்திருப்பார்களோ. நவீன இலக்கிய உலகம் ஏன்லும்பன்களை பார்த்துப் பதைபதைத்துப் போகவேண்டும்?.
இலக்கிய வியாபாரிகள், இலக்கிய சந்தர்பவாதிகள், இலக்கிய சகுனிகள், இலக்கிய தந்திரிகள், இலக்கிய சூதாடிகள், இலக்கிய தரகர்கள், இலக்கிய பொது உறவுத் தொடர்பாளிகள், இலக்கியலயஸன் ஆபிஸர்கள், இலக்கிய சுரண்டல்வாதிகள் இவ்வளவு பேர் நிறைந்திருக்கும் நவீன தமிழிலக்கியச் சூழலில் இலக்கியலும்பன்கள் இருந்தால் என்ன கெட்டுவிடப் போகிறது.”
விக்கிரமாதித்யன் நம் காலத்தின் அதி முக்கியமான கவிக்குரல். அவருடைய கவிதைப் பிரதிகள் அளித்த உலகப்பார்வையினை எனக்கு வேறெந்த உலகக் கவிஞனும் அளிக்கவில்லை. விக்கிரமாதித்யன் கடந்தும் கடக்கமுடியாமலும் உழன்றுகொண்டிருக்கும் 'டாஸ்மாக்' உண்மையில் தமிழின் வெகுஜன தளமே ஆகும்.


--------------------------------------------------------------------

தொடரும் 




----------------------------------------------------------------
1 விக்ரமாதித்யன், சேகர் சைக்கிள் ஷாப், ஶ்ரீவிஜயம் வெளியீடு, சென்னை, 2007, பக்கம் – 120-123

1 comment:

leena manimekalai said...

இருக்கலாம். காரைக்கால் அம்மையாருக்குப்பின் பெண்கவிஞர் என்று யாருமில்லை என்று சொன்ன விக்ரமாதித்யனின் சாதி புத்திக்கும் ஆண் திமிருக்கும் நான் சொன்ன பதிலாக இருக்கட்டும். - பாரதிக்குப்பின் ஆண்கவிஞர் என்று யாருமில்லை.