குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-108
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழியிடம் கூறியது
—-
இயற்றியவர்: வாயிலான் தேவன்
குறுந்தொகையில் பாடல் எண்; 108
திணை; முல்லை
——
மழைவிளை யாடுங்குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை யாசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்
றுய்யேன் போல்வ றோழி யானே
—-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தோழி, மழைவிளையாடுதற்கிடமாகிய, மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு அகன்றிருந்த பசுக்கள், தம் கன்றுகளிடத்தே நினைந்து செல்ல முல்லை நிலத்தில், பசிய இலைகளையுடைய முல்லையினது குற்றமில்லாத சிறந்த மலர்ப்பரப்பு செக்கர் வானத்தின் அழகைக்கொண்டது இக்கார் பருவத்து மாலையில் தலைவர் வாராமையில் நான் உயிர் வாழேன்
——
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை யாசில் வான்பூச்
——
கார்பருவத்தின் வருகையைக் கண்ட தலைவி தலைவன் வாரமையினால் துயருற்றாள். நிலப்பகுதியால் தலைவன் குறிப்பிடப்படுதல் மரபு. இப்பாடலில் அவன் ‘மழைவிளை யாடுங்குன்றுசேர் சிறுகுடியைச் ‘ சேர்ந்தவனாகக் குறிக்கப்படுகிறான். குறுந்தொகை 263 ஆவது பாடலில் “மால் வரை மழை விளையாடும் நாடன்” என்று சொல்லப்படுவது இதோடு இணைத்து வாசிக்கத்தக்கது. மேகங்கள் வானில் தவழ்தல் கார்பருவத்தில் நிகழ்வது, கறவைப் பசுக்கள் தங்கள் கன்றுகளை நாடி அடைவதும் முல்லை பூத்தலும் மாலையில் நிகழ்வன. தானும் பிள்ளைகளைப் பெற்று இவ்வாறு அன்பு செய்வதற்கு காதலன் வாராமையால் வழியில்லாமல் இருப்பதை தலைவி நினைத்தாள். குறிஞ்சிப்பாட்டு இதை, “ஆண்கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகு தர” எனக் குறிப்பிடுகிறது
திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் கன்றை மறவாது மாலைக் காலத்து கறவை அக்கன்றிடத்துப் படரும் புறவு என்றதனானே நம்மை மறவாது குறித்த காலத்து நம்மிடம் வரவேண்டியவர் வந்திலர்; அவர் அன்பிருந்தவாறு என்னை? என்பதாம் என்றும் மலருங் காலத்தைப் பெற்று முல்லை செவ்வி கொண்டது என்றதனானே, அழகு மிகுதற்கேற்ற குறித்த காலத்தில் செவ்வி அழிவோமாயினோம்; எவ்வாறு உய்குவோம் என்பதாம் என்று பொருளுரைத்து இவ்விரண்டையும் இறைச்சிகள் என வரையறுக்கிறார்.
முல்லை, பெண்கள் தங்கள் கற்பின் அடையாளமாகச் சூடும் மலராகும். குறுந்தொகை 162 ஆவது பாடல் “முல்லை வாழியோ முல்லை நீ, நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை” என முல்லைப் பூவை வாழ்த்துகிறது. இப்பாடலில் தலைவி முல்லை சூடப்படாமல் கழிகிறது என நினைக்கிறாள். முல்லையின் வெண்ணிற மலர்கள் விண்மீன்களாகவும் செம்புலம், செக்கார் வானாகவும் தோன்ற அங்கும் கார் பருவக் காட்சியே தலைவிக்குத் தெரிகிறது. தோழி, முல்லை வான் பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று, நான் உய்யேன் என்று தலைவி கூறுகிறாள்; இது இப்பாடலில் மிக அழகான வரி.
வான் பூ என்றால் வென்ணிற மலர்; பாசிலை முல்லை ஆசு இல் - என்பது அப்பழுக்கற்ற முல்லை எனப் பொருள்தரும். போல்வல் என்பது உரையசை -ஒப்பில் போலி, யானே என்பதில் ஏகாரம் அசைநிலை.
—-
No comments:
Post a Comment