குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-109
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவியிடம் கூறியது
—-
இயற்றியவர்: நம்பி குட்டுவனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 109
திணை; நெய்தல்
——
முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி யிகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய விருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே
——
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
முள்ளைப் போன்ற கால்களையுடைய இறாமீனின் வளைந்த முதுகினையுடைய பெரிய இனத்தை கடலில் தாழும் அலை கொண்டு வந்து தருதற்குரிய இடமாகிய துறையை உடைய தலைவன் உடன் இருந்த நாளிலும் நின் நல்ல நெற்றியின் அழகு இவ்வாறு பிறர் அலர் கூறும்படி வருந்துவதற்கு உரியதாயிற்று.
——
தரூஉந் துறைவன்
—-
இப்பாடல், சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்வதாக அமைந்துள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் தாழும் திரையே இறாமீனை உந்திக் கொணர்தலின் ‘இகு திரை தருஉம்’ என்றாள், வளமுடைய துறைவன் என்றவாறு, என உரை எழுதுகிறார் . கடலலைகள் தரும் இறாலைத் தன் முயற்சியின்றிப் பெற்றமைகின்ற தலைவன் என்றது, ஊழால் தரப்பட்ட களவின்பமே நுகர்ந்து வரைதல் முயற்சியின்றி அமைபவன் என்றவாறு பொருள் பெறும்.
திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன்னை அடைந்த இறா மீனின் கிளையைக் கடல் கொடிய அலைகளால் கரைக்கண் யாரும் அறியத் தந்தாற்போல, அவனைப் பற்றுக்கோடாகக் கொண்ட நம்மையும், நமது கிளையொடு கூட்டித் தனது கொடிய களவொழுக்கத்தால் எல்லாரும் அறிந்து தூற்றுமாறு அவன் வைத்திட்டான் என்பதாம் என்று உரை எழுதி இதை இறைச்சி எனக் குறிக்கிறார்.
இறாமீனை கடல் அலை வெளியே தள்ளி ப் பலரும் அறியச் செய்தாற்போல தலைவனின் வரைவு நீட்டித்தல் (திருமணத்தைத் தள்ளிப் போடுதல்) தலைவியைப் புறந்தள்ளிப் பலரும் அறியும்படி செய்தது என்ற குறிப்பு பொருள் இதனால் உணர்த்தப்பட்டது.
——
இன்னது மன்னோ நன்னுதற் கவினே
——
தலைவன் வரைந்து கொள்ளாமல் காலந்தாழ்த்தியபடியால் தலைவி வருந்தினாள். அவ்வருத்தத்தை அவளது பசலை படர்ந்த நெற்றி வெளிப்படுத்த அதை ஊராரறிந்து தூற்றலாயினர். தலைவியின் இந்த நிலையை தலைவன் கேட்குமாறு தோழி கூறுகிறாள். தலைவனோடு நாள் தோறும் பயின்று வந்தாலும் அந்தக் களவின்பம் தலைவிக்கு அச்சத்தையும் துன்பத்தையும் தந்தது; அலரை உண்டாக்குவது அதனால் தலைவன் அவளை சீக்கிரம் வரைந்து கொள்ள வேண்டும் என தோழி குறிப்பால் உணர்த்துகிறாள். நன்னுதல்- நல்ல நெற்றி- அன்மொழித்தொகை. கவின் - அழகு , ஏ – அசைநிலை.
தலைவன் வரைந்தாலன்றி நின் வேறுபாடு நீங்காது.
No comments:
Post a Comment